சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்

This entry is part 7 of 26 in the series 22 பெப்ருவரி 2015

 

சீ’அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த சமயத்திலிருந்தே, அதைச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். ஹாங்காங்கின் அருங்காட்சியகத்தில் டெரகோட்டா வீரர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பலரும் சென்று கண்டு வந்த போதும், அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியாத போது, எப்போதாவது நிச்சயம் அதைச் சென்று பார்ப்போம் என்ற விருப்பம் மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதைக் காண சீ’அன் விமான நிலையத்தில் இறங்கிய போது, கனவு நனவானது என்ற மகிழ்ச்சி இருக்கவே செய்தது. அதை விட பெரு மகிழ்ச்சி அவ்விடத்தைச் சென்று சேர கிளம்பிய நேரம். சீ’அன் நகரத்திலிருந்து, இரண்டு மணி நேரப் பயணம். யுவான் சுவாங் தங்கி, வாழ்க்கையின் முக்கிய அரிய செயலைச் செய்து காட்டிய பெரிய காட்டு வாத்துப் பகோடாவைப் பார்த்த பின்னர், லின் டொங் நோக்கிப் பயணப்பட்டோம்.

வழி நெடுகிலும் சாலை மிகவும் அழகாக அமைக்கப்பட்டு இருந்தது. லின் டொங் ஊருக்குள் நுழையும் போதே நம்மால் வேண்டிய இடத்தை அடைந்து விட்டோம் என்ற அறிகுறிகள் தெரியும் வகையில் ஊர் அமைந்திருந்தது. ஒரே மாதிரியான மொட்டை மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் நின்று பயணிகளை வரவேற்றுக் கொண்டு இருந்தன. அவ்வூர் மாதுளம்பழத்திற்கு மிகவும் பெயர் போனது என்று தெரிந்தது. வழி நெடுகிலும் மாதுளம்பழக் கடைகள். அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள்.

நாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டோம் என்று வண்டி ஓட்டுநர் சொன்ன இடம் மிகச் சிறிய சந்து. வாகனங்கள் நிறைந்த சந்து. இது என்ன, இப்படி சந்திலா இவ்விடம் இருக்கிறது என்ற ஐயம் எழுந்தது. அகழ்ந்து ஆராயும் இடத்தைச் சுற்றி இப்படித் தான் இருக்குமோ என்று உடன் எண்ணம் வந்தது. சந்தின் அருகே ஒருவர் அறிமுகமானார். அவர் தான் எங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப் போகும் வழிகாட்டி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கிருந்து அவர் எங்களை இன்னும் சிறு சந்துகளின் வழியே அழைத்துச் சென்றார். ஒரு அகண்ட பரப்பளவு கொண்ட நுழைவாயிலை கடைசியில் அடைந்தோம்.

பிரம்மாண்டமான பகுதியை ஒரு சந்தின் வழியே கொண்டு வந்து காட்டி விட்டார்களே என்ற வருத்தம் இருக்கவே செய்தது. நுழைவுச் சீட்டினை என் மகள் வாங்கி வர, நாங்கள் அனைவரும் எங்கள் கனவுப் பயணத்தின் முக்கியப் பகுதியைக் காணத் தயாரானோம்.

உள்ளே மூன்று குழிகள் இருப்பதாகவும், முதற் குழியே முதலும் பெரியதும் என்றும், 6000 மேற்பட்ட உருவங்கள் அங்கே இருப்பதாகச் சொல்லப்படுவதாகவும், இரண்டாம் குழியில் 900 வரையிலும், மூன்றாவது குழியில் 55 வரையிலும் உள்ளன என்று பெரிய பெரிய எண்களைச் சொன்ன படியே வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்றார். இங்கிருந்த கல்வெட்டில் இவையெல்லாம் எழுதப்பட்டு இருந்தன. வீரர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் 10000க்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். வருடத்திற்கு இப்போதெல்லாம் 70 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்ற இடமாக அது மாறியுள்ளதாம்.

வாயிலிலிருந்து 10 நிமிட நேரத்தில் நடந்து செல்லலாம். நடக்க இயலாதவர்களுக்கு சிறு வண்டிகள் அங்கே இருந்தன. நாங்கள் பேசிய படியே நடக்க ஆரம்பித்தோம்.

தன்னுடைய சமாதியை தெற்கில் லி ஷான் மலைப் பகுதிக்கும், வடக்;கில் வைய் நதிக்கு இடையிலும் இருந்த பெரிய பரந்த வெளியில் செய்ய திட்டமிட்டு கட்ட ஆரம்பித்தாராம்.

2200 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட களிமண் சிலைகளை அந்த கிராமத்தில் இருந்த உழவர்கள் 1974இல் நீர் தேடி தோண்டிய போது கண்டுபிடித்தார்களாம். எட்டு அடி ஆழத்திற்குச் சென்ற போது, மண் பாண்டத்தால் ஆன தலையைக் கண்ட போது, இது ஏதோ பில்லி சூன்யம் என்று எண்ணியவர்கள், முழு உருவம் கிடைத்த போது அரசாங்கத்திற்குத் தெரிவித்தார்களாம். பின்னர் அதன் அருகே இருக்கும் பகுதியை மெல்ல அகழ்ந்த போது, மேலும் உருவங்கள் கிடைக்க கிடைக்க, அது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று அறிந்து, அந்த இடத்தைச் சுற்றி இருந்த இடத்தை அரசாங்கம் பாதுகாக்க ஆரம்பித்து ஆகழ்வாராய்ச்சியைத் துவங்கியதாம். இந்த 40 ஆண்டுகளில் மேலும் மேலும் உருவங்களை எடுத்து மூன்று புதை குழிகளைக் கண்டுபிடித்து அதை அருங்காட்சியகங்களாக 1979இல் மாற்றிவிட்டார்கள். தற்போது இது உலக பராம்பரியம் மிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சரி இவற்றைச் செய்தவர் யார்? உலகின் அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னரான சின் ஷி ஹ_வாங் தான், தான் இறந்த பிறகு, மறுபிறவியில் பாதுகாப்பிற்காக இப்படிப்பட்ட களிமண் படைவீரர்களைச் செய்து தன் கல்லறையுடன் வைக்க விரும்பி, அதைச் செய்தும் இருக்கிறார். 49ஆம் வயதிலேயே இறந்த போதும், இன்று வரையிலும் பெயர் கூறும் வகையில் இரண்டு பெரும் படைப்புகளை உருவாக்கிய பெருமை அவரைச் சேரும். அத்துடன் பல சிறு சிறு பேரரசுகளாக விளங்கிய சீனாவை ஒன்றிணைத்து ஒரு பெரும் சீனப் பேரரசை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும்.

முக்கிய நுழைவாயிலுக்குள் நுழைந்ததும், எதிரே மூன்று பக்கங்களில் பெரிய பெரிய கட்டிடங்கள். நேர் எதிரே இருந்த இடத்திற்கு முதலில் சென்றோம். அதுவே முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட குழி. மிகப் பெரிய கூடாரத்தின் கீழ், இணையத்தில் படங்களில் கண்டது போல் 8 அடி குழிக்குள் உருவங்கள் வரிசையாக நின்றிருந்தன.

வீரர்கள் வெகு நேர்த்தியான வரிசையில் நின்றிருந்தார்கள். நான்கு வரிசைகள். நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள். இது போன்ற பல குழுக்குள் அடுத்தடுத்த பகுதிகளில். முதல் வரிசை வீரர்கள் தலைகள் முடியிடப்பட்டு மட்டுமே காணப்பட்டது. அவர்கள் காலாட்படை வீரர்களாம். சில வரிசைகளுக்குப் பிறகு, இறகு வைத்த தலையுடன் சில உருவங்கள். அவர்கள் மேல் அதிகார வீரர்களாம். அதற்குப் பின் இருந்த சில உருவங்கள் சாய்வான தொப்பி போன்ற அமைப்பு கொண்ட தலையணியை அணிந்திருந்தார்கள். அவர்கள் சேனாபதியாக இருக்கலாமாம். ஒவ்வொரு உருவமும் வேறுபட்ட முக, உடல் அமைப்புடன் இருந்தன. எப்படித்தான் இத்தனை உருவங்களைச் செய்தார்களோ? ஒரு பாண்டம் செய்பவர் 40 உருவங்களைச் செவ்வனேச் செய்து காட்ட வேண்டும். தவறு கண்டுபிடிக்கப்பட்டால் உடனே சிரச்சேதம் செய்யபட்டனர் என்று ஒரு கதையையும் சொன்னார் வழிகாட்டி.

சில புகைப்படங்களை எடுத்து கொண்ட பின் மெல்ல நகர்ந்தோம். அப்போது இடது கோடியைக் காட்டி, அந்த இடத்தில் தான் 1974இல் ஒரு விவசாயி நீர் தேடி கிணறு வெட்டத் தோண்டிய போது உருவம் கிடைக்க, அதை அரசாங்கத்திடம் தெரிவித்ததாகக் காட்டினார். அங்கே பலரும் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கு 10 யுவான் தந்தால் படம் எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு நாங்கள் வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தோம். வீரர்கள் வரிசையாக நின்றிருந்தது, ஊர்வலங்களில் வீரர்கள் நிற்பது போன்று இருந்தது. மிகப் பிரம்மாண்டமான கூடாரத்தில் பற்பல இடங்களில், மண் மேடுகளும், உடைந்த உருவங்களும் காணப்பட்டன. கடைசியாக ஓரத்தில் நின்ற வீரர்கள் திரும்பி நிற்பது, அந்தப் படைப் பகுதியின் முடிவாகக் கருதப்பட்டது. இந்த 40 வருட காலத்தில், சிறிது சிறிதாக இடத்தை அகழ்ந்து, உருவங்களைத் தேடி எடுத்து, உடைந்த அங்கங்களை ஒட்ட முயன்று, வெற்றி பெற்ற உருவங்கள் நிற்க வைக்கப்பட்டிருப்பதையும் மற்ற இடங்கள் இன்னும் சரி செய்யப்பட்டு வருவது பற்றியும் கூறினார். இத்தனை வீரர்களும் களிமண்ணால் செய்யப்பட்டாலும் 2000 வருடங்களுக்கு மேலாக அழியாமல் நிற்பது பேரதிசயம் தானே. வீரர்கள் அனைவரும் ஒரு மரப்பலகையால் மூடப்பட்டிருந்திருக்கலாம். அதனுள்ளே யாரும் செல்லக் கூடாது என்பதற்காக விஷமாக இருக்கக்கூடிய பாதரசத்தை அந்த அறைக்குள் விட்டிருந்தனர் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலே மண் படிந்து இவ்விடம் காணாமல் போனது. சில சமயங்களில் விவசாயத்திற்காக வெட்டும் போது, அந்த மரப்பலகை சரிந்து, வீரர்களை உடைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அங்கு 6000க்கும் மேற்பட்ட உருவங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் கண்களில் தென்படுவதென்னவோ ஆயிரம் உருவங்கள் மட்டுமே. அவை முழு உருவங்கள். மற்றவை இன்னும் முழுமை ஆக்கப்படவில்லை என்று அறிந்து கொண்டோம்.

பற்பல திசைகளில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, இரண்டாம் குழிக்குப் போனோம். அங்கு 900க்கும் மேற்பட்ட உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம். இது முதற் குழி போல் இல்லாமல், சில குதிரைகளும் உடைந்த சில உருவங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இடது புறம், பல வீரர்களின் முழு உருவங்கள் கண்ணாடிப் பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில் சாதாரண வீரன் எப்படி இருப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம். முழுமையாக உருவத்தைப் பக்கத்தில் பார்த்த போது, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடல் கவசம், அதன் மேல் ஓடிய நூல், நுணுக்கமாகச் செய்யப்பட்ட வீரரின் தலைமுடியும் சிகை அலங்காரமும் நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அடுத்து உட்கார்ந்த நிலையில் ஒரு உருவம். அடுத்து குதிரையைப் பிடித்துக் கொண்டு நிற்கக் கூடிய உருவம். அதற்கு அடுத்து நின்ற சேனாபதி உருவம் அத்தனைத் தத்ரூபமாகச் செய்யப்பட்டதைக் காணும் போது, பாண்டம் செய்வதும் மிக நுண்ணுய கலை என்பதையும் அந்தக் காலத்திலேயே அது எவ்வளவு சிறப்புடன் இருந்திருக்கிறது என்பதையும் உணர முடிந்தது. இந்தப் பேழைகளுக்குப் பின்னால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் சில காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் கூடாரத்தின் ஒரு ஓரத்தில், வீரர்களின் ஆளுயரச் சிற்பங்கள் (நகல்கள்) வைக்கப்பட்டு இருந்தன. அதன் அருகே சென்று அவர்கள் மத்தியில் நின்று படம் எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்து வைத்திருந்தனர். 10 யுவான் கொடுத்து நாம் அங்கு சென்றதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் படம் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது குழிக்கு அடுத்துச் சென்றோம். அப்போது, வரும் மாதங்களில் இன்னும் மூன்று குழிகள் திறக்கப்பட உள்ளதாகச் சொன்னார் வழிகாட்டி. அங்கு அத்தனை சிறப்பாக ஒன்றும் பார்ப்பதற்கு இல்லை. இந்தக் குழி தான் படையின் தலைமை இடமாக இருந்தது என்பதை இங்கு கிடைத்த உருவங்களைக் கொண்டு அனுமானித்திருக்கிறார்கள். குதிரைகளும் தேர்களும் இங்கு கிடைத்திருக்கின்றன.

பிறகு, இந்த இடத்தை முதன்முதலில் கண்டுபிடித்து அரசுக்குத் தெரிவித்த விவசாயி அன்று அங்கு இருப்பதால், நாம் சந்திக்கலாம் என்று பல முறை கூறி வந்த வழிகாட்டி, இறுதியில் அவரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அவர் அங்கு எப்போதுமே இருப்பார் என்பதை நமக்குச் சொல்லாமல் நம்முடைய ஆர்வத்தை அதிகமாக்க வௌ;வேறு கதைகளைக் கூறியது, அங்கு சென்ற பின் தெரிந்து கொண்டோம். அங்கு 200 யுவானுக்கு விற்கும் புத்தகத்தை நாம் வாங்கினால், அதில் அவர் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார். இல்லையென்றால், நாம் அவரை மட்டுமே பார்த்துவிட்டு வரலாம். அங்கு நினைவுப் பொருட்கள் விற்கும் கடையும் இருந்தது. ஒவ்வொரு உருவமும் வௌ;வேறு மண்ணாலும் உலோகத்தாலும் செய்யப்பட்டு காட்சியில் இருந்தன. விலை கேட்டால் வாங்கக் கூடிய விலையாக இருக்கவில்லை. நான் சுற்றிச் சுற்றி வந்தததைப் பார்த்த வழிகாட்டி, “உனக்கு வேண்டிய உருவத்தை எடு.. நான் பாதி விலையில் பேசிக் கொடுக்கிறேன்” என்றதும் தான் புரிந்தது, அங்கு விற்கும் உருவங்களில் போடப்பட்டு இருக்கும் மதிப்பு மிகவும் அதிகம் என்று. நாங்கள் புத்தகத்தையும் வாங்கவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவில்லை. வழிகாட்டிக்கு இது ஏமாற்றமாக இருந்தது அவரது முகத்திலே தெரிந்தது.

அங்கிருந்து கிளம்பி ஆரம்பித்த இடத்திற்கே திரும்பினோம். அங்கே எதிரே இருந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். அங்கே வெங்கலத்தால் ஆன இரு அழகிய தேர்கள் இருந்தன. இது நிஜத்தில் இருப்பதில் பாதி அளவானதாம். கண்ணாடிப் பேழைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நான்கு குதிரைகள் பூட்டிய அழகிய தேர் ஒரு பக்கம். இது போருக்குப் பயன்படுத்தக் கூடியது. மற்றொரு பக்கம் மூடியிட்ட தேர். அது மன்னரும் மனைவியரும் பயணிக்கக் கூடிய தேர் என்று தெரிந்து கொண்டோம்.

எல்லாவற்றையும் பார்த்து முடித்ததும் நுழைவாயில் வழியே வெளியே வந்தோம்.

அங்கு இருந்தப் பணியாளர் 5 உருவங்கள் கொண்ட பெட்டி 50 யுவான். வாங்கச் சொல்லிக் கேட்டார். வேண்டாம் என்ற போதும் வாங்குங்கள் வாங்குங்கள் என்று நச்சரித்ததால், 10 யுவான் என்றால் வாங்குகிறோம் என்று சும்மா சொன்னோம். சரி.. கொடுக்கிறேன் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு மூன்று பெட்டிகளை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். இதற்குள் பசி எடுக்க ஆரம்பித்ததால் எங்கு உண்ணலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்தோம். வெளிநாட்டுப் பயணிகளின் வசதி கருதி, அங்கு கே.எப்.சி மற்றும் சப்வே இருந்தததால், எங்களுக்கு உணவு கிட்டியது மகிழ்ச்சி கொடுத்தது. உணவினை வாங்கி உண்டு விட்டு கிளம்பிய போது, அருகே இருந்த இடத்தில் ஒரு பெரிய வெள்ளை நிற உருவச் சிலை இருந்ததைக் கண்டோம்;. அது தான் சின் ஷி ஹ_வாங் இன் உருவம். இங்கு தான் பேருந்துகள் மக்களை இறக்கிச் செல்கின்றன. நாங்கள் சந்து வழியாக வந்ததால் இந்த இடத்தை நாங்கள் பார்க்கவில்லை. அந்தச் சிலையைப் பார்த்து விட்டு சின் ஷி ஹ_வாங் இன் சமாதியைப் பார்க்கக் கிளம்பினோம். அங்கு ஏதும் சுவாரசியமாக இல்லை என்று சொன்ன போதும், சென்று பார்க்கலாமே என்று புறப்பட்டோம்.

பெரிய பரந்த வெளியில் இருந்த சமாதியைக் காண நாங்கள் தயாராக இருந்த போதும், அங்கு சென்று பார்த்ததும் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய இடத்தை வளைத்துப் போட்டு சமாதியை கட்ட ஏற்பாடு செய்திருந்தார் பேரரசர் என்பது புரிந்தது. மிதிவண்டி வாடகைக்கு எடுத்துச் சென்றாலே இதில் ஒரு பகுதியைக் காண முடியும் என்று புரிந்ததும், அப்படியே திரும்புவது நல்லது என்று வாசலோடு பார்ப்பதைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டோம்.

சீ’அன் பயணத்தில் லொங் டொங் பகுதிக்குச் சென்று வந்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது அளவிற்கு பிரம்மாண்டமாக தன் சமாதியை அமைத்த பேரரசரின் சாதனைக்கு எத்தனை பேர் பாடுபட்டிருப்பார்கள் என்பதை யோசிக்கவும் வைக்கிறது. இந்தப் பயணம் எங்கள் மனதில் என்றென்றும் இருக்கும்.

 

5 Attachments

Preview attachment 4 – Terracota Warriors.JPG

Preview attachment 5 – Shoes.JPG

Preview attachment CIMG9566.JPG

Preview attachment CIMG9578.JPG

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறதுசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *