புனலாட்டுப் பத்து

This entry is part 8 of 13 in the series 2 ஏப்ரல் 2017

 

இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், அதைக் கேட்டுத் தலைவி ஊடற் கொண்டு கூறுவதும், தலைவிக்காகத் தோழி கூறுவதுமாக அமைந்துள்ள செய்யுள்கள் நிரம்பி உள்ள பகுதி இதுவாகும்.

புனலாட்டுப் பத்து—1

சூதார் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து

நின்வெங் காதலி தழீஇ, நெருநை

ஆடினை என்ப, புனலே; அலரே

மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே!

[சூதார் குறுந்தொடி=உள்ளே துளை உள்ளதாகச் செய்யப் பெற்ற குறுந்தொடி; தொடி என்பத்கு ஓர் அணி; சூர்=அச்சம்; நுடக்கம்=துவண்டு நடக்கும் நடை]

அவகிட்ட வந்து ஒன் ஊட்டுக்காரன் நேத்திக்கு வேற பொண்ணுங்களோட எல்லாம் தண்ணித்துறையில வந்து குளிச்சான் தெரியுமான்னு எல்லாரும் வந்து சொன்னாங்க. அதைக் கேட்டு அவ ரொம்பவும் துக்கப்பட்டா; மறுநாள் அவன் வந்தான்; அவன்கிட்ட அவ கேட்டா; அவனோ இல்லவே இல்லன்னு சாதிச்சுப் பேசினான். அப்ப அவன்கிட்ட அவ சொல்ற பாட்டு இது.

”மகிழ்நனே! உள்ள தொளை இருக்கற சின்னதான தொடியையும், [இது இக்காலத் தண்டை போல இருக்கலாம்] பயம் கொடுக்கற நடையும் இருக்கற ஒன் காதலியோட நீ அங்க தண்ணித் துறையில நல்லா குளிச்சதை எல்லாரும் வந்து சொன்னாங்களே? சூரியன் ஒளியைக் கூட எதாலயாவது மறக்க முடியுமா? அதேபோல நீ அங்க அவங்களோட நீராடியதால வந்த பழியையும், நீ இப்ப வந்து சொல்லற பொய்ப் பேச்சால மறைக்கத்தான் முடியுமோ?”

சூரியன் ஒளி எல்லாருக்கும் தெரிவது போல அவன் நீராட்டமும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குன்றது கருத்தாம்.

புனலாட்டுப் பத்து—2

வயன்மலர் ஆம்பல் கயிலமை நுடங்குதழைத்

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்

குவளை உண்கண் ஏஎர் மெல்லியல்

மலரார் மலர்நிறை வந்தெனப்

புனலாடு புணர்துணை யாயினள் எமக்கே

 

[வயன்மலர்=வயலில் மலர்ந்த மலர்; கயில்=தழை ஆடையை இடுப்பில் கட்ட உதவும் பகுதி; நுடங்கல்=அசைதல்; ஏஎர்=அழகு; மெல்லியல்=மென்மையானவள்; மலரார்=மலர்கள் மிகுதியான; மலர்நிறை=புது வெள்ளம்; புணர்துணை=உடன்துணை]

 

கட்டின தலைவியை உட்டுட்டு அவன் வேற நெறைய பொண்ணுங்களோடு நீராடினான்; அதை அவளும் கேள்விப்பட்டுட்டா; இப்ப அவன் வந்து தன்னோட நீராடக் கூப்படறான்; அப்ப அவ வரமாட்டேன்னு மறுத்துடறா; அவன் தோழிக்குச் சொல்றது போல அவளும் கேக்கச் சொல்றான்.

”வயல்ல பூத்த ஆம்பல் பூவால கட்டப்பட்டதும், மூட்டுவாய் இருக்கறதுமான, தழையாடையை கட்டி இருக்கறாவ; தேமல் படர்ந்த அல்குல் இவளுக்கு இருக்கு; கூந்தல் எப்பவும் அசைந்துகிட்டே இருக்கும்; கண்ணு குவளைப் பூப் போல அழகா இருக்கு; அழகான மெல்லிசா இருக்கற இவ அன்னிக்குப் புது வெள்ளம் ஆத்துல வந்த போதுஎன்கூட அதுல நல்லா நீராடிக் குளிச்சவதான இவ”

அதாவது கட்டிக்கிறதுக்கு முன்னாடியே இவ என்னோட ஆத்துல நீராடி இருக்கா; இப்ப மட்டும் வராம இருப்பாளோன்னு பொருளாம். அத்தோட அவளோட அழகெல்லாம் இப்ப ஏன் சொல்றான் தெரியுமா: நான் இன்னும் அவகிட்ட அதே அழகுதான் பாக்கறேன்னு காட்டறதுக்காகத்தான்.

இந்தப்பாட்டுல வர்ற மூட்டு வாயின்றது தழையாடையை இஉட்ப்பில இறுக்க் கட்டிக்க ஒதவும் ஒரு பகுதியாம்.

புனலாட்டுப் பத்து—3

வண்ண ஒண்தழை நுடங்க, வாலிழை

ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்,

கண்ணறும் குவளை நாறித்

தண்ணெண் றிசினே—பெருந்துறைப் புனலே!

 

[ஒண்தழை=ஒளி பொருந்திய தழையாடை; வாலிமை=தூய்மை

 

இந்தப் பாட்டும் போன பாட்டு போலத்தான்; அவ என்னோட நீராட மறுப்பு சொல்ல மாட்டான்னு அவன் சொல்றான்.

 

”அழகா நல்லா ஒளி இருக்கற தழையாடையைக் கட்டி இருக்கா; அது அசைஞ்சு ஆடுது; சுத்தமான நகையெல்லாம் போட்டிருக்கா; நெத்தியே நல்லா அழகா இருக்கு; அன்னிக்கு இவ தண்ணியில குளிக்கறதுக்குப் பாய்ஞ்சா பாரு; இவ கண்ணுதான் குவளைப் பூப்போல இருக்கா; அதால அந்தத் தண்ணிக்கும் இவ வந்து சேந்ததால குவளைப் பூ வாசனை வந்திடுச்சு; தண்ணியும் இவ ஒடம்பு பட்டதால குளிர்ச்சியாயிடுச்சு”

அவ முன்னாடி ஒரு நாளு தாவிக் குளிச்சதை அவன் இப்ப சொல்லறான். அதால அவ மனம் மாறித் தன்னோட நீராட வருவான்னு அவன் நெனக்கறான்.

புனலாட்டுப் பத்து—4

விசும்பிழித் தோகைச் சீர்போன் றிசினே

பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்

கரைசேர் மருதம் ஏறிப்

பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே

 

[விசும்பு=வானம்; இழிதல்=மேலிருந்து  இறங்குதல்; அவிரிழை=ஒளி சிதறும் அணிகலன்கள்; மருதம்=மருதமரம்; பண்ணை=நீர் விளையாட்டு நிகழும் இடம்]

 

இதுவும் போன பாட்டு மாதிரியேதான். கிராமத்துல பொண்ணுங்களுக்கு நல்லாவே நீச்சல் இன்னிக்கும் தெரியும். அதே மாதிரி சங்க காலத்துலயும் இருந்திருக்காங்க; அத்தோட மருத மருத மரத்து மேல ஏறி அங்கிருந்து தண்ணியில குதிச்சிருக்காங்கன்னு இந்தப் பாட்டு காட்டுது. அவ கூந்தலை மயிலின் தோகைன்னு சொல்றான். மயிலின் தோகையை பொண்ணுங்க கூந்தலுக்குச் சொல்லறது அந்தகாலப் பாட்டுல நெறய வரும். குறுந்தொகையில கூட “கலிமயிற் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்”னு [225] வரும். ஏன் கூந்தலைச் சொல்றன் தெரியுமா? அதையே படுக்கையாப் போட்டு ரெண்டு பேரும் படுத்தது,தான் அதைத் தடவிக் கொடுத்தது, எல்லாம் அவளுக்கு நெனவுக்கு வரும்னு நெனச்சு சொல்றான். அவ அதெல்லாம் நெனச்சுப் பாத்தா இன்னிக்கு தன்கூட நீராட வருவான்னு அவன் நெனக்கறான்.

”அவ போட்டுக்கிட்டு இருக்கற நகையெல்லாம் நல்ல பசும்பொன்னால செஞ்சது; அதெல்லாம் மின்னுற மாதிரி அவ மருத மரத்துல் ஏறி தண்ணியில குதிக்கறச்ச அவளோட கூந்தல் ஆகாயத்திலேந்து இறங்கற மயிலோட தோகை பறக்கற மாதிரி இருந்தது”.

புனலாட்டுப் பத்து—5

 

பலரிவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,

அலர்தொடங் கின்றால் ஊரே; மலர

தொன்னிலை மருதத்துப் பெருந்துறை

நின்னோ டாடினாள், தண்புன லதுவே.

 

[ஒவ்வாய்=ஒப்பாக மாட்டாய்]

 

வேற ஒருத்தியோடு அவன் தண்ணியில ஆடினான்னு அவ கேள்விப்படறா; அதால மனசு வருந்தி செல்லக் கோபமா ஊடி இருக்கச்சே அவன் வந்து அதெல்லாம் பொய்யின்னு சொல்றான்; அப்ப அவளோட தோழி சொல்றா.

”மகிழ்நனே! பூவெல்லாம் இருக்கற ரொம்பப் பழசான மருத மரமெல்லம் நெறய இருக்கற தண்ணித் துறையில வேற ஒருத்தி கூட நீ ஆடினேன்னு எல்லாரும் சொல்றாங்க; அதால அவளையும் ஒன்னையும் சேத்து வச்சு ஊரெல்லாம் பேசறாங்க; அதால் நீ மத்த ஆம்பளங்க மாதிரி நல்லவன் இல்ல”

ஒன்கூட நீராட இவ வரமாட்டான்னுத் தோழி சொல்றா

புனலாட்டுப் பத்து–6

பைஞ்சாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின்

தண்புன லாடித்தன் னலமேம் பட்டனள்

ஒந்தொடி மடவரல் நின்னொடு

அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே

 

[பைஞ்சாய்க் கோரை=மென்மையான ஒருவகைக் கோரை; பசுமலர்ச் சுணங்கு=புதுமலர் போல தேமல் புள்ளிகள்; அந்தர மகளிர்=வானுலக மகளிர்]

 

போன பாட்டு மாதிரிதான் இதுவும்; அவன் வேற ஒருத்தியோட நீராடினான். அது தலைவிக்குத் தெரிஞ்சது. அப்பறமா அவன் ஒரு நாள் தலைவியோட நீராட வர்றான். அப்ப தோழி அவனுக்குச் சொல்றா.

“பஞ்சாய்க் கோரை போல இருக்கற கூந்தலும், பசும்பொன் நெறத்துல தேமல் புள்ளிகளும், நல்லா ஒளி வீசற நகையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கற வேற ஒருத்தி கூட நீ அன்னிக்கு நீராடி முடிச்சே; அதால அவளுக்கு நல்லாப் பேரும் புகழும் வந்துடிச்சி; அவள் வானத்தில இருக்கற தேவப் பொண்ணுங்களுக்குத் தெய்வமா கூட மதிக்கப்படறா.”

அவனோட நீராடியதாலதான் வேற ஒருத்திக்கு அந்த அழகு வந்ததாம்; அதாலதான் வானத்துப் பொண்ணுங்க தெய்வம் போல அழகா மாறிட்டாளாம். இது அந்த ஒருத்தியைப் புகழறது மாதிரி இகழ்ந்து பேசறதுதுதான்.

புனலாட்டுப் பத்து—7

அம்ம வாழியோ, மகிழ்ந!நின் மொழிவல்;

பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி,

தண்புனல் ஆடுதும்;

எம்மொடு சென்மோ, செல்லல்நின் மனமே

 

[மொழிவல்= சொல்வேன்; சென்மோ=செல்வாயாக]

 

இது கொஞ்சம் விசித்திரமான பாட்டுங்க; கட்டின பொண்டாட்டியோட அவன் நீராடினான்னு கேள்விப்பட்ட வேற ஒருத்தி, “இனிமே நான் ஒன்னோடு நீராட வரமாட்டேன்”னு சொல்றா. ஆனா அவன் கூப்பிடறான். அப்ப அவ சொல்ற பாட்டு இது.

”மகிழ்நனே! நீ வாழ்க; ஒனக்கு நான் சொல்றதைக் கேளு; இந்தப் பெரிய ஊர் முழுதும் பேசற மாதிரி, குளிக்கறதால தண்ணிக் கலங்கினாலும், நானும் நீயும் ஆடுவோம்; ஆனா நீ ஒன் ஊட்டுக்கு மட்டும் போகாதே; என்னோட என் ஊட்டுக்குதான் வரணும்”

அவனைப் பாத்து நீ ஒன் ஊட்டுக்குப் போகாதேன்னு சொல்ற அளவுக்கு அவன் மேல அவளுக்கு எவ்வளோ பிடிப்பு இருக்கு பாருங்க;

புனலாட்டுப் பத்து—8

கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி

மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த,

சிறையழி புதுப்புனல் ஆடுகம்

எம்மொடு கொண்மோ, எம்தோள்புரை புணையே

 

[கதிரிலை=ஒளிவீசும் இலை போன்ற வடிவுடைய வேல் முனை; கடுமான்=விரைவாய்ச் செல்லும் குதிரை; கிள்ளி=சோழ மன்னன்; கதழ்பு=விரைவு; இறை=தடை; புணை=தெப்பம்]

 

இதுவும் போன பாட்டு மாதிரியேதான்; தலைவியோட நீராடினான்ற சேதி கேட்ட வேற ஒருத்தி அவன் கூட ஊடல் கொண்டு சொன்ன பாட்டு இது. கிள்ளி வளவன்ற சோழ மன்னனைச் சொல்ற பாட்டு இதுவாகும். அவனோட யானைப்படை முக்கியமானது. ரொம்ப வலிமையானது அது;

”கிள்ளி கையில கதிர் போல ஒளிவீசும் இலை போன்ற நுனி கொண்ட வேலிருக்கும்; ரொம்ப வேகமாகப் போற குதிரை உண்டு அவனிடத்தில்; அவனோட யானை சண்டைக்குப் போகச்சே குறுக்கே எது வந்தாலும் அந்த்தடையை மோதி அழிச்சிடும்; அதே மாதிரி வேகமா புது வெள்ளம் வருது; நீ அந்த வெள்ளத்துல என் தோளத் தெப்பமாப் புடிச்சுக்கினு நீராட வா”

ஒன்னை விட மாட்டேன்னு வேற ஒருத்தி கூடப் போய்ச் சேரறான் தலைவன்; அந்த வார்த்தையை உட்டுட்டு கட்டினவ கூடப் பொய் நீராடினான். யானை தடையை எல்லாம் அழிக்கற மாதிரி நீ சொன்ன வார்த்தையை அழிச்சுட்டயேன்னு சொல்லிக் காட்டறா; தன்னை உட்டுட்டு அவன் கட்டினவகிட்ட போறதைத்தான் மறைமுகமா எதுக்கும் கட்டுப்படாம வெள்ளம் மாதிரிப் போறவன்னு சொல்லிக் காட்டறா.

புனாலாட்டுப் பத்து—9

புதுப்புனல் ஆடி அமந்த கண்ணள்

யார்மகள் இவள்?எனப் பற்றிய மகிழ்ந!

யார்மகள் ஆயினும் அறியாய்;

நீயார் மகனை எம் பற்றி யோயே

அவன் தனியா நீராடினான்; இத்தனை நாளா ,”நம்மள வச்சிக்கிட்டிருந்தவன், இன்னிக்குப் போயி தனியா குளிக்கறானா?” ன்னு கோச்சுக்கிட்டு அவ போயித் தானும் தனியா குளிக்கறா; அத அவன் பாக்கறான்; அவ கோபத்தைத் தீர்ப்பதற்காக அவகிட்ட ஒண்ணும் தெரியாதவன் போலப் போயி அவ கையப் புடிச்சு,  ”வா, நானும் நீயும் சேந்து நீராடலாம்” னு கூப்பிடறான். அப்ப அவ தோழி சொல்ற பாட்டு இது;

”புதுத்தண்ணியில ரொம்ப நேரமா குளிச்சதால கண்ணெல்லாம் செவப்பா போயிருக்கற இவ யாரோட பொண்ணுன்னுக் கையைப் புடிச்சுக் கூப்படற தலைவனே! இவ யாரோட பொண்ணா இருந்தாலும் ஒனக்குத் தெரியாது; ஆனா சொல்லு நீ யாரோட மவன்னு”

மொதல்லயே தொடர்பு வச்சிக்கிட்டிருந்தவன் இப்ப வந்து யாரோட பொண்ணுன்னுக் கேக்கறது அவகிட்ட தன் பழைய ஒறவை நெனவூட்டத்தான்; அவன் அவனை மறைச்சுப் பேசறதால தோழியும் அவன நீ யாரோட மவன்னு கேக்கறா; அதாவது பண்புள்ளவ பெத்த மகனில்லன்னு சொல்ற மாதிரி. செவந்த கண்ணுன்னு சொல்றது முன்னாடி ஒண்ணா இருந்தபோது ஒறவு கொண்டு அதால செவப்பாப் போன கண்ணுன்னு சொல்லிப் பழைய ஒறவை ஞாபகப்படுத்தறாளாம்.

புனலாட்டுப் பத்து—10

புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ;

நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித்

தலைப்பெயற் செழும்புனல் ஆடித்

தவநனி சிவந்தன மகிழ்ந! நின் கண்ணே.

 

[புலக்குவேம்=ஊடல் கொள்ள மாட்டோம்; நலத்தகை=அழகு; தலைப்பெயல்=முதல்மழை; தவநனி=மிக மிக]

 

அவன் இப்ப என்ன செய்யறான்? கட்டின தலைவியை உட்டுட்டு வேற பொண்ணுங்களோடு போய் ரொம்ப நேரம் நீராடி மகிழ்ச்சியா இருந்துட்டுத் தன் ஊட்டுக்கு  வரான். ரொம்ப நேரம் குளிச்சதால அவன் கண்ணெல்லாம் செவந்து போயிருக்கு; அப்ப தலைவி சொல்ற பாட்டு இது;

”நான் ஒண்ணும் ஒன் மேல கோச்சுக்க மாட்டேன்; ஊடிப்போக மாட்டேன்; பொய் சொல்லாம உண்மையைச் சொல்லு; நல்ல அழகா இருக்கற பொண்ணுங்களோட, அவங்களைத் தாங்கி இருக்கற தெப்பம் போல ஒன் தோளாலத் தாங்கி மொத மொதல்ல வந்த மழையிலை இவ்வளவு நேரம் நீராடிக் குளிச்சதால ஒன் கண்ணெல்லாம் அதிகமாச் செவந்திருக்கே”

 

அவளால அவனை உடவும் முடியல; ஆனா அவன் செஞ்சது தனக்குத் தெரியும்னு சொல்லிக் குத்திக்காட்டறா

 

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்பாக்கத்தான போறேன்…….
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *