கோதையும் குறிசொல்லிகளும்

Spread the love

 

ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம்

கேள்விக்குறியாக்குவதே

பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம்.

பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய

பெண்விடுதலை முழக்கமல்லோ.

ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி  நினைத்ததாக

முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து

சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய்

புட்டுப்புட்டு வைத்தவர்கள்

இன்று ‘கால இயந்திர’த்தில் பின்னேகி

கோதையின் படுக்கையறைக்குள்

எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண் –

இதிலும்தான்.

அவரவர் வாழ்க்கையில் ஊரை அனுசரிப்பதாய்

ஆயிரம் வேலிகளுக்குள் வாகாய் வாழ்ந்திருப்பவர்கள்

அடுத்தவீட்டு ஆணிடம் சொக்கி பக்கம்பக்கமாய் ஆண்டாள்

கவிதையெழுதியதாகப் பேசியும்

‘ஜாலி’க்கு ஆண்டாளை தாசியாக்கியும்

கைபோன போக்கில் தூசுதட்டிக்கொண்டிருக்கும்

அரிப்புகளும் வக்கரிப்புகளும் யாருடையவையோ….

அருஞ்சொல்லா யிங்கே அறிவிக்கப்படும் அப்பதத்தின்

சமகாலப் பொருளை (சர்வகால உட்பொருளை)

புறமொதுக்கிப் பேசுவோர்

அவரவர் திருநாமங்களின் முன் அதை

அடைமொழியாக்கிக்கொள்வாரோ வெனக் கேட்டால்

அடிக்கவந்துவிடுவாரோ….?

 

Series Navigationகண்காட்சிதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்