பொங்கல்

 

மூன்று பாகத்தில்

மொத்த வாழ்க்கை

 

விதைத்தல்

வளர்த்தல்

அறுத்தல்

 

கருவை விதைத்து

கற்பனை வளர்த்தால்

கலைகள் அறுவடை

 

அறத்தை விதைத்து

பொருளை வளர்த்தால்

இன்பம் அறுவடை

 

நல்லறம் விதைத்து

இல்லறம் வளர்த்தால்

மழலை அறுவடை

 

உண்மை விதைத்து

உழைப்பை வளர்த்தால்

ஊதியம் அறுவடை

 

அன்பை விதைத்து

பாசம் வளர்த்தால்

சொந்தங்கள் அறுவடை

 

நன்னெறி விதைத்து

நடுநிலை வளர்த்தால்

நல்லாட்சி அறுவடை

 

நீர்த்துளி விதைத்து

முகில்கள் வளர்த்தால்

மழை அறுவடை

 

ஏழிசை விதைத்து

இன்னிசை வளர்த்தால்

இனிமை அறுவடை

 

பொறுமை விதைத்து

புன்னகை வளர்த்தால்

தலைவன் அறுவடை

 

தனிமை விதைத்து

தவங்கள் வளர்த்தால்

ஞானம் அறுவடை

 

நன்றி விதைத்து

நட்பை வளர்த்தால்

நண்பர்கள் அறுவடை

 

நெல்லை விதைத்து

பயிர்கள் வளர்த்தால்

மகசூல் அறுவடை

 

மூன்றே பாகத்தில்

மொத்த வாழ்க்கை

சொல்ல வந்ததே

பொங்கல்  பண்டிகை

 

அமீதாம்மாள்

 

Series Navigationதொடுவானம் 205. உரிமைக் குரல்.