யாப்பிலக்கணச் செல்வி சாப்போ

author
0 minutes, 9 seconds Read
This entry is part 16 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021

 

 அழகர்சாமி சக்திவேல்

 

நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா

நிரை நிரை கருவிளம் நேர் நிரை கூவிளம்

 

தமிழ் படித்த அனைவரும், தத்தம் சிறுவயதில், தமிழ் வகுப்புக்களில் சொல்லித் திரிந்த, மேலே சொன்ன சீர் இலக்கணப் வாய்ப்பாட்டை, நாம் இன்றும் மறந்து இருக்க மாட்டோம். ஒரு செய்யுள் எழுதுவதற்கான சொற்கட்டு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற வரையறைகள் குறித்து, விரிவாகப் பேசுவதே, யாப்பிலக்கணம் ஆகும். ஒரு செய்யுளின் உறுப்புக்களாய், தொல்காப்பியர் சொல்லுகிற முப்பத்தி நான்கு உறுப்புகளில், மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தொடை போன்ற சிலவற்றை, நாம், நம் தமிழ்ப்பள்ளிகளில் படித்தும் இருக்கிறோம். இந்தச் செய்யுள் உறுப்புக்களைக் கோர்த்து எழுதப்படும் பாக்களான, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்ற பாக்களின் இலக்கணமும், நாம் சிறுவயதில் படித்து இருக்கிறோம். தொல்காப்பியர் சொன்ன யாப்பிலக்கணம் தாண்டி, சமணமுனிவரான அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை படித்த பண்டிதர்களும், நம்மில் நிறையப்பேர் இருக்கிறார்கள். தொல்காப்பியர் மற்றும் சமண முனிவர் அமுதசாகரர் போலவே, காக்கைப்பாடினியார், நத்ததத்தனார், பல்காயனார், பல்காப்பினார், மயேச்சுரனார் போன்ற புலவர்களும் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. நான் எழுதும் இந்தக் கட்டுரை, மேலே சொன்னவர்கள் எழுதிய யாப்பிலக்கணம் குறித்துப் பேசும் கட்டுரை அல்ல. மாறாய், தமிழ் யாப்பிலக்கணம் போலவே, கிரேக்க மொழியில் இருக்கும் யாப்பிலக்கணம் குறித்தும், அந்த கிரேக்க யாப்பிலக்கணம் படைத்த புலவர்களில் ஒருவராகக் கருதப்படும், பெண்-பெண் ஓரினச்சேர்க்கை விரும்பியான, பெண் புலவர் சாப்போ குறித்தும் பேசுவதே, எனது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். 

 

உயிர், மெய், உயிர்மெய் போன்ற எழுத்துக் கலப்புக்களால், தமிழில் அசைகள் உருவான போதும், குறிலோசையும், நெடிலோசையும், அதன் கலப்பும்தான் தமிழ் யாப்பிலக்கணத்தில் வரும், அசைகளின் அடிப்படையாக இருக்கிறது. தமிழ் அசைகளைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் வகுத்த நெறியில், நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்ற நான்கு அசைகளுக்குள், குறிலோசையும், நெடிலோசையும், அதன் ஒற்றுக்களும், பல்வேறு வடிவங்களில் இணைகின்றன. தொல்காப்பியருக்குப் பின் வந்த அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகையில், நேர்பசையும், நிரைபசையும் நீக்கப்பட்டு, நேரசை, நிரையசையில் மட்டுமே குறிலோசையும், நெடிலோசையும், அதன் ஒற்றுக்களும், இணைகின்றன. கிரேக்க யாப்பிலக்கணத்திலும், கிட்டத்தட்ட தமிழ்மொழி போன்றே, குறிலோசையும், நெடிலோசையும், இணைக்கப்பட்டு, கிரேக்க அசைகள், உருவாக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் மொழியில், அசைகளை இணைத்து, வெண்பா, கலிப்பா எனப் பாக்கள் படைக்கப்பட்டு இருப்பது போலவே, கிரேக்கத்தின் அசைகள் இணைக்கப்பட்டு, படைக்கப்பட்ட பாக்கள், மீட்டர்கள் என்று அழைக்கப்ட்டன. அப்படி உருவாக்கப்பட்ட கிரேக்க இசைப்பண் மீட்டர்களில், ஒரு சிறப்புப் பெற்ற இசைப்பண் மீட்டர் தான், நம் கட்டுரையில் பேசப்படும், கிரேக்கத்தின் யாப்பிலக்கணச் செல்வியும், லெஸ்பியன் என்ற, பெண்-பெண் ஓரினச்சேர்க்கை விரும்பியும் ஆன, சாப்போ உருவாக்கிய, சாப்பிக் மீட்டர் ஆகும். 

 

பெண்ணோடு உடலுறவு கொள்ளும் பெண்களை, லெஸ்பியன் என்று நாம் அழைக்கிறோம். அந்த லெஸ்பியன் என்ற வார்த்தையே, சாப்போ என்ற அந்த கிரேக்கப்புலவியால்தான் உருவானது என்பது, நம்மில் பலருக்கும் தெரியாது. ஆம். சாப்போ என்ற அந்தப் பெண் பிறந்த ஊர், கிரேக்க நாட்டிற்குச் சொந்தமான, லெஸ்போஸ் என்ற அழகிய தீவு ஆகும். அந்த, லெஸ்போஸ் என்ற ஊரின் பெயராலும், பெண்-பெண் உடலுறவு விரும்பிகளில், முதன் முதலில், வரலாற்றால் அறியப்படுகிற பெண்ணாக சாப்போ இருப்பதாலும், பெண்ணோடு உடலுறவு கொள்ள விரும்பும் பெண்கள், இன்று லெஸ்பியன்கள் என்று விளிக்கப்படுகிறார்கள். 

 

கிரேக்க மொழியின் வரலாற்றில், தமிழைப் போலவே, கவிதை எழுத்து, நாடக எழுத்து, காப்பிய எழுத்து, கூடவே உரையாடல் எழுத்து என்று, கிரேக்க மொழி, பல வடிவங்கள் பெற்று இருக்கின்றன. ஹோமர் எழுதிய இலியட் என்ற காவியம், பிளாட்டோ எழுதிய சிம்போசியம் உரையாடல், இப்படி கிரேக்க எழுத்துக்களின் பல வகைகளை, நாம் இங்கே, உதாரணமாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட கிரேக்க எழுத்து வகைகளில் ஒன்றான, இசை சார்ந்த பண் கவிதைகள், லிரிக்(lyric) என்று அழைக்கப்படுகிறது. லியர்(lyre) என்ற யாழிசைக் கருவியோடு, பாடப்படும் பாடல்கள் ஆக, இந்தப் பண்கவிதைகள் இருப்பதால், அவை, லிரிக்(lyric) என்று அழைக்கப்பட்டது. இன்று நாம் கண்ணதாசனையும், வாலியையும், வைரமுத்துவையும், பட்டுக்கோட்டையாரையும், தமிழ்ப் பண் புலவர்களாகப் போற்றுகிறோம். கிமு ஏழாம், ஆறாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில், அப்படிப் பண் பாடிய கிரேக்கப் புலவர்களாய், ஒன்பது பேர் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில், ஒருவர்தான், நாம் இந்தக் கட்டுரையில் காணும் லெஸ்பியன் புலவரான சாப்போ ஆவார். குழுப்பண், ஒற்றைப்பண் என்ற இரு கிரேக்கப் பண் வகைகளில், ஒற்றைப்பண் பாடுவதில், சாப்போ, ஓர் தலைசிறந்த கிரேக்கப் புலவராக, வரலாறுகளில் அறியப்படுகிறார். சாப்போ என்ற அந்தப் பெண் படைத்த, சாப்பிக் மீட்டரின் இலக்கணத்துக்குள் போகும் முன்னர், சாப்போ என்ற அந்தப் பெண்ணின் வாழ்க்கை வரலாறு குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 

துருக்கியை ஒட்டி இருக்கும், கிரேக்கத்திற்குச் சொந்தமான அழகிய தீவுதான், லெஸ்போ தீவு. உயர்ந்த மலைகளைக் கொண்டிருக்கும் அந்த லெஸ்போ தீவின், தலைநகரான மைதிலீன் என்ற இடத்தில், கிமு ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார், கிரேக்கப் பெண் புலவர் சாப்போ. சாப்போவின் குடும்பம், ஒரு வசதியான வீட்டுக் குடும்பம்தான். இயற்கையையும், கவிதையையும் நேசித்த பெண் புலவர்  சாப்போ, அதே நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்த பெண்களின் பெண்மையையும், அளவு கடந்து நேசித்தார் என்றுதான், பெரும்பான்மையான வரலாற்று அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். பெண்ணின் யவன அழகு, எப்போதும் தனது பக்கத்தில் இருக்க வேண்டும், அந்தப் பெண்ணின் யவன அழகை, ஒரு பெண்ணை விரும்பும் தான், எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, பெண் புலவர் சாப்போ, இளம்பெண்கள் தன்னை நாடி வரும் வகையில், மணமாகாத கன்னிப் பெண்களுக்கென, ஒரு பாடசாலை ஒன்றை, கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே நடத்தி வந்தார்.  பெண் அலங்காரம், பெண்ணின் கவிதை ஈடுபாடு, பெண்ணின் தன்னம்பிக்கை, இப்படிப் பல விசயங்களைக் கற்றுத் தரும், ஒரு தேர்ந்த ஆசிரியையாக, பெண்  புலவர் சாப்போ இருந்திருக்கலாம் என்பது, அவர் எழுதிய கவிதைகள் வாயிலாக, பல வரலாற்று அறிஞர்கள், நமக்கு உறுதிப்படுத்த முயன்று இருக்கிறார்கள். 

 

லெஸ்பியன் புலவர் சாப்போ குறித்து, பல வகை வரலாற்றுக் கூற்றுக்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை, பெண் புலவர் சாப்போ, திருமண வாழ்க்கை வாழ்ந்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயாய் இருந்து இருக்கலாம் என்று சொல்கின்றன. இருப்பினும், பெண்ணின் காதலுக்கு ஏங்கும் ஒரு இன்னொரு பெண்ணாய், சாப்போ, தனது பண் கவிதைகளில் பாடி இருப்பதால், சமூகம் நிர்பந்திக்கும் ஆணின் காதலுக்கும், சாப்போ உண்மையில் விரும்பிய லெஸ்பியன் காதலுக்கும் இடையில், பெண் புலவர் சாப்போ தவித்து இருக்கலாம் என்பதே, எனது கூற்று. பல லெஸ்பியன் காதல் கவிதைகள் பாடிய பெண் சாப்போ, அவர் வாழ்வின் இறுதியில், மலையில் இருந்து கடலில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார் என்ற ஒரு வரலாற்றுச் செய்தியின் மூலம், மேல் சொன்ன எனது கூற்று, சற்றே நிரூபணம் ஆகிறது.

 

பெண் புலவர் சாப்போவின் தந்தை, தாய் குறித்து அவ்வளவு தெரியவில்லை என்றாலும், அவர் கூடப்பிறந்தவர்களாக மூன்று சகோதர்கள் அறியப்படுகிறார்கள். ஒரு பணக்கார வணிகருக்கு வாழ்க்கைப்பட்ட, சாப்போவிற்கு, கிளிஸ் என்று ஒரு மகள் உண்டு. எனினும், அதன் பிறகு, பான் என்ற ஓர் கடலோடியைக் காதலித்தார் சாப்போ. பான் என்ற அந்த ஆணுடன், துருக்கி போன்ற பல இடங்களுக்கு இன்பமாய்ப் பயணித்தார் சாப்போ. ஆரம்பத்தில் நன்றாகப் போன அவர்கள் இருவரது காதல் நாளடைவில் கடலோடி பானுக்குக் கசந்து போக ஆரம்பித்தது. அந்தக் கசப்பு, பெண் புலவர் சாப்போவின் ஆண்மைத்தன்மை குறித்த வெறுப்புப் பேச்சில் முடிந்து போக, விசனப்பட்ட பெண் புலவர் சாப்போ, தனது இளம் வயதிலேயே, மலையில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இப்படியும் ஒரு வரலாற்றுச் செய்தி, கிரேக்கத்தில் உலவி வருகிறது. எது எப்படி இருந்தாலும், சாப்போவின் லெஸ்பியன் காதல் கவிதைகள், மேற்கத்திய உலகில், இன்றளவும் ஒரு பெரிய சமூகத் தாக்கத்தை, ஏற்படுத்திக்கொண்டு இருப்பதால், சாப்போவின் அந்த லெஸ்பியன் கவிதைகளை, நாம் கொஞ்சம், இங்கே ஆராய்வோம்.

 

லெஸ்பியன் புலவர் சாப்போ, மொத்தம் ஒன்பது அதிகாரங்களில், கவிதைகள் படைத்தார் என வரலாறு கூறினாலும், இப்போது நம்மிடம் எஞ்சி இருக்கும் சாப்போவின் படைப்புக்கள், வெறும் 650 வரிகளே. ஓரினச்சேர்க்கை சார்ந்த எத்தனையோ வரலாற்று இலக்கியங்கள், மதவெறி கொண்டவர்களாலும், பண்பாட்டின் பெயராலும், அவ்வபோது அழிந்து, சிதைந்து, காணாமல் போய் இருக்கின்றன என்ற வரலாற்று உண்மைக்கு, லெஸ்பியன் புலவர் சாப்போவின் ஓரினக்காதல் படைப்புக்கள் ஒரு முன்னுதாரணம் ஆகும். அப்படி நம்மிடம் இருக்கும் சாப்போவின் லெஸ்பியன் கவிதைகளில், முக்கியமாய்ச் சொல்லப்படுபவை, “அப்ரோடைட் தெய்வத்திற்கு வாழ்த்துப்பா (Ode to Aphrodite)”  என்ற கவிதை ஆகும். அப்ரோடைட் என்பது, கிரேக்கத்தின் ஒரு பெண் தெய்வம் ஆகும். காதல், அழகு, இன்பம் போன்ற, அழகியல் விசயங்களுக்கு, சொந்தக்காரியாக, அப்ரோடைட் பெண் தெய்வம் மதிக்கப்படுகிறாள். இப்பொது நாம், மேற்சொன்ன கவிதையில் இருந்து சாப்போவின் லெஸ்பியன் காதலை, கீழே ஆராய்வோம்.

 

சிரஞ்சீவி அப்ரோடைட்.. நுட்பங்கள் நிறைந்த சித்திரச் சிம்மாசனி

ஜீயஸ் தெய்வமகளே.. மாயவலைப்பின்னி மனம்கவர்வாய்.. வேண்டுகிறேன்’

என் உள்ளம்கவர் தேவி நீ என் இதயத்தை நொறுக்காதே

வலிகளையும் துயரங்களையும் கொண்டு.

 

ஆயினும் நீ இங்கே வா.. முன் எப்போதும் போலவே..

தொலை தூரத்தில் என் கதறலை நீ கேட்டபோது

நீ அதைச் செவிமடுத்தாய் பின்னர்நீ இங்கு வந்தாய்..

உன் தந்தையின் இடம் விட்டு.

 

உனதழகிய தங்கரதத்தின் நுகத்தடியை நீ பூட்டினாய்

அழகிய குருவிகள்பின் விரைந்துன்னை பூமிக்குள் கொணர்ந்தது

மேல்வானத்தில் இருந்து நடுக்காற்றின் வழியாக

தெளிவில்லா மேகத்தில் இறக்கைகளை அடித்தடித்து

 

விரைந்தவை வந்தன ஒ நீ ஆசிக்கப்பட்ட தேவிதான்

உன் சிரஞ்சீவி முகத்திலோர் சிறப்பான புன்னகை

‘இப்போது நடந்தது என்?’ என நீ எனைக் கேட்டாய்

எதற்குநான் கூப்பிட்டேன் இன்னொரு தடவையாய்

 

என் வெறிபிடித்த இதயத்தில்

என்ன என் ஆசைகள்

“இந்தமுறை யாரைநான் இணங்கச் செய்ய வேண்டும்

உந்தன் காதலுக்காய்? சாப்போ.. யார் தவறு செய்கிறார்?”

 

“அவள் பறந்து போனாலும் உன்னைப் பின் தொடர்வாள்

பரிசுதர மறுத்தாலும் விரைவில் அவள் பரிசு தருவாள்

காதலிக்க மறுத்தாலும் விரைவில் அவள் காதலிப்பாள்

அவளுக்கதில் விருப்பம் இல்லாதபோதும்”

 

மறுபடியும் வா தேவி வந்து எனை விடுதலை செய்

கடினமான கவலைகளில் இருந்தெனை விடுவிப்பாய்

ஏங்கும் என்இதயத்தின் விருப்பமெல்லாம் நிறைவேற்று

என் காதல்போரில் எனக்குநீ துணையாவாய்

 

மேற்சொன்ன கவிதை, சாப்போ கண்டுபிடித்த சாப்போ மீட்டரில் எழுதப்பட்டவை ஆகும். சாப்போ என்ற அந்தப் பெண் புலவி, பெண்களை விரும்பும் ஒரு லெஸ்பியன் புலவி என்று நமக்குச் சொல்லுவது, மேற்சொன்ன கவிதையின், கடைசி மூன்று பத்திகள்தான். ஒற்றைப்பண் என்பது, ஒரு கவிதை முழுவதும், தானே பிறரிடம் பேசுவதாக எழுதும் கவிதையாகும். சாப்போ என்ற அந்தப் பெண் புலவி, தான் காதலிக்கும் பெண்ணை, தன்னோடு சேர்த்து வைக்கும்படி, அப்ரோடைட் என்ற காதல் பெண் தெய்வத்தை வேண்டுவதாக, மேற்சொன்ன கவிதை அமைந்து இருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு, ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஒரு பெண், தைரியமாக, தனது லெஸ்பியன் காதலைக் கவிதை ஆகியிருக்கிறாள் என்பது, ஒரு ஆச்சரியமான விசயம்தான் அல்லவா?

 

சாப்போவின் லெஸ்பியன் கவிதைகள், இத்தோடு நின்று விடவில்லை. ஒரு பெண்ணை நினைத்து எங்கும் இன்னொரு பெண்ணின் காதல் கவிதைகள், எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியை, நாம் இன்னும் கொஞ்சம் தொடர்வோமே.

 

அவன் கடவுளுக்கு இணையாக எனக்குத் தெரிகிறான்

அந்த மனிதன் உனக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு

தனது கண்களை மூடிச் செவிமடுக்கிறான்

உனது தேமதுரக் குரலை

 

உன் மயக்கும் அந்தச் சிரிப்பு

மார்பகத்துக்குள் இருக்கும்என் இதயத்தைக் கிண்டுவது உண்மை

சிலநொடிகளே நானுன்னை எப்போதாவது பார்த்தாலும்

பின்னொரு வாரத்தையும் என்னால் பேச இயலவில்லை

 

என் நாக்கு அமைதியில் உறைகிறது

என் தோலின்கீழ் உடனே ஓடுகிறது ஒரு அனல்கொழுந்து

பார்வை இழந்த என் கண்களுடன்

என் காதுகளைச் செவிடாக்கும் ரீங்காரம்

 

குளிர் வியர்வை எனை மூடும்

நடுக்கம் என்னுடலை ஆட்கொள்ளும்

புல்லை விடப் பசுமைநிறம் கொண்டேன்

கொஞ்சம்நான் இறந்துபோனேன்

 

காதலில் கசிந்த காதலர் ஒருவர் உடலில், பசுமை நிறம் படர்ந்து போகும் காதல் நிகழ்வை, நம் சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள், பசலைப் பருவரல் என்று சொல்லியிருப்பதை நாம் ஏற்கனவே அறிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது நாம், கிமு ஆறாம் நூற்றாண்டில், கிரேக்கத்தில் வாழந்த, ஒரு பெண்-பெண் உடலுறவு விரும்பியும், பசலைப் பருவரல் குறித்து, கவிதை பாடி இருக்கிறார் என்ற விசயத்தை, ஆச்சரியத்துடன் உற்று நோக்குகிறோம் அல்லவா?, கூடவே, நாம் லெஸ்பியன் புலவர் சாப்போவின் கவித்திறமையையும், உணர்ந்து கொள்கிறோம் அல்லவா?. அது மட்டும் இல்லை, ஆண்களுக்கு இணையாக, தனது ஆண் நண்பனின் காதலியையே, போட்டி போட்டு காதலிக்கும், சாப்போவின் லெஸ்பியன் காதல் உணர்வை,  நாம் மேற்சொன்ன கவிதையில் பார்த்து, வியப்பில் மூழ்கிப் போகிறோம்.

 

புணர்ச்சி விதும்பலை, அங்கங்கே அள்ளித் தெளித்து இருக்கும் சாப்போவின் பிற காதல் கவிதைகள் மூலம், சாப்போ என்ற அந்தப் பெண்ணின், பிற பெண் காதலிகளின் பெயர்களை, நாம் அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, கீழே, சாப்போ எழுதிய, இன்னொரு காதல் கவிதை.

 

மறுபடியும் என் அவயங்களை இளக்கும் காதல்… அது என்னைக் குழப்புகிறது

அது கசப்பு 

அது தடுக்க முடியாதது

அது ஓர் ஊர்ந்து செல்லும் மிருகம்

 

மலைகளின் காற்று

ஓக் மரங்களைத் தாக்குவது போல்

காதல் என் மார்பகங்களை உலுக்குகிறது

 

நான் உன்னைக் காதலித்தேன் ஆதிஸ் பெண்ணே நீண்ட நாளைக்கு முன்

நீ வசீகரம் இல்லாக்

குழந்தையாய் எனக்குத் தெரிந்த நாளிலும்

 

ஆனால் நீ என் நினைவுகளை வெறுத்தாய் ஆதிஸ் பெண்ணே

என் மனம் கலங்கவும் செய்தாய் 

 

உண்மையைச் சொன்னால் நான் இறந்து போக ஆசைப்பட்டேன்

கண்ணீர் பல நீ உதிர்த்தாய் எனைப் பிரிந்தபோது சொன்னாய்

“ஐயகோ.. எவ்வளவு சிரமப்பட்டோம் சாப்போ பெண்ணே

என் விருப்பத்திற்கு எதிராய்த்தான் நான் உண்மையில் பிரிகிறேன்”

 

நான் பதிலிறுத்தேன் “பிரியாவிடை உனக்கு.. போ.. என்னை நினைத்துக்கொள்

நான் உன்னை எவ்வளவு பார்த்துக்கொண்டேன் என்பது உனக்குத் தெரியும்”

 

மேற்சொன்ன கவிதை மூலம், ஆதிஸ் என்ற பெண் மீது, நமது சாப்போ பெண் புலவி, எவ்வளவு தீவிர மையல் கொண்டு இருந்தார் என்பதை, நம்மால் உணர முடிகிறது. இப்படி சாப்போவின் லெஸ்பியன் கவிதைகள் பலவற்றை, நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

சரி இனி அந்த சாப்போ உருவாக்கிய சாப்பிக் மீட்டர் பற்றி, கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 

– u – x – u u – u – –

– u – x – u u – u – –

– u – x – u u – u – x

– u u – –

 

மேலே சொல்லப்பட்டு இருக்கும் அசைகளின் கோர்ப்பே, சாப்பிக் மீட்டர் என்று சொல்லப்படுகிறது. இதில் 

– என்பது நெடிலோசையைக் குறிக்கும். 

U என்பது குறிலோசையைக் குறிக்கும். 

X என்பது குறிலோசை, நெடிலோசை இதில் ஏதாகிலும் ஒன்றைக் குறிக்கும். மேலே சொன்ன இலக்கணத்தை, நாம் தமிழில் எழுதினால், கீழே கண்டது போல் வரிகள் வரும்.

 

டாடிடா(டி/டா) டாடிடிடா டிடாடா

டாடிடா(டி/டா) டாடிடிடா டிடாடா

டாடிடா(டி/டா) டாடிடிடா டிடா(டி/டா) 

டாடிடி டாடா

சாப்பிக் மீட்டர் கவிதையின், முதல் மூன்று வரிகள், கிட்டத்தட்ட ஒரே மாதிரி வந்தாலும், நான்காவது இறுதி வரியை, குறுகிய வரியாகப் படைத்து இருப்பது, சாப்போ மீட்டரின் ஒரு சிறப்பு ஆகும். மேற்கத்திய இசை உலகிலும், பண்கவிதை உலகிலும், சாப்பிக் மீட்டர், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்று ஒரு செய்தி, நமக்குச் சொல்கிறது.

 

லெஸ்பியன் புலவர் சாப்போவின் படைப்புகள், பல, நம்மிடம் இப்போது இல்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர் கவிதைகளில் எழுதி இருக்கும், அந்தப் பெண்-பெண் காதல்தான். கிபி பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர் ஏழாம் கிரிகரி, ஒழுக்கமற்ற கவிதைகள் என, சாப்போவின் கவிதைகளை நிந்தித்து, அவைகளை எரிக்கப் பணித்தார் என, ஒரு வரலாற்றுக் குறிப்பு நமக்குச் சொல்கிறது. சாப்போவின் படைப்புகள் அழிந்ததற்கு இன்னொரு காரணம், அவரது கடினமான, கிரேக்க வட்டார மொழி வழக்கு ஆகும். சாப்போவின் கவிதைகள், மிக எளிதில் புரிந்துகொள்ள முடியாத மொழிவழக்கில் இருந்தததால், அதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்ட, அவருக்குப் பின் வந்த கிரேக்கப் புலவர்கள், அவரது கவிதைகளை ஒதுக்கித் தள்ளி இருக்கலாம் என்றும், சில ஆராய்ச்சியாளர்கள் எழுதுகிறார்கள்.

 

இருப்பினும், கிரேக்கத்தின் பல வரலாற்றுக் கலைப்படைப்புகளில், சாப்போவின் உருவம் பதிக்கப்பட்டு, அவரது புகழை, இன்றளவும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. கிரேக்கத்தின் தலைசிறந்த சிந்தனையாளன் ஆன சாக்ரட்டிசின் சீடரும், புகழ் பெற்ற தத்துவ ஞானியும் ஆன பிளாட்டோ, அவரது சிம்போசியம் என்ற புகழ்பெற்ற உரைநடை நூலில், பெண் புலவர் சாப்போவை, பத்தாவது ம்யூஸ் என்று அழைக்கிறார். கிரேக்கத்தின் கலைத்தெய்வங்களாக புகழப்படுபவர்கள், ஒன்பது பேர் ஆவார்கள். தத்துவ ஞானி ஆன பிளாட்டோ, பெண் புலவர் சாப்போவை, மேற்சொன்ன ஒன்பது கலைத் தெய்வங்களோடு சேர்த்து, பத்தாவது ம்யூஸ், அதாவது பத்தாவது கலைத்தெய்வம் என்று போற்றுவதில் இருந்து, நாம், சாப்போவின் அருமை பெருமைகளை, எளிதில் உணர்ந்து கொள்ளலாம். சாப்போவின் உருவத்தில், கிரேக்க நாணயங்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. அவருக்கு, கிரேக்கத்தின் பல இடங்களில், சிலைகளும் நிறுவப்பட்டு இருக்கின்றன. சாப்போவிற்குப் பின் வந்த, பல கிரேக்கப் புலவர்கள், சாப்போவின் புகழ் குறித்து, தங்கள் படைப்புக்களில் எழுதி இருக்கிறார்கள்.

 

“பெண்ணாகிய நான், ஒரு பெண்ணை விரும்புகிறேன்” என்று வெளிப்படையாகப் பேச, ஒரு பெண்ணுக்கு, அந்தக் காலங்களில், நிறையவே தைரியம் தேவை. அப்பேர்பட்ட மன தைரியம் நிறைந்த, கிரேக்கப் பெண் புலவர் சாப்போவை நாம், என்றும் போற்றுவோம். லெஸ்போ நாட்டில் பிறந்த பெண் புலவர் சாப்போவின் நினைவால், பெண்ணோடு உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களை, லெஸ்பியன்கள் என்று இன்று அழைப்பது, மூன்றாம் பாலினத்துக்கே ஒரு பெருமைதான்.

 

அழகர்சாமி சக்திவேல்



Series Navigationதொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *