தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

அம்மா

அமீதாம்மாள்

Spread the love

நீ ஊட்டிய அமுதில்
என் நகங்களும் பசியாறின

உன் தாலாட்டில்
இமைகள் சுமையிறக்கின

உன் விரல் பிடித்து நடந்தேன்
விரல்கள் விழிகளாயின

உன் கோழிக் குஞ்சிகளை
சாயம் ஏற்றாமல்
மேயவிட்டதில்லை
மிரண்டன பருந்துகள்

பசலையும் அவரையும்
சொகுசாய்ப் படர்ந்தன
முளைவிடும்போதே
நீ விரித்த பந்தலில்

கத்தரிப் பூச்சிகள்
காணாமல் போயின
நீ தூவிய சாம்பலில்

வாடிக்கைக் காகங்கள்
கன்றோடு பசு
குஞ்சுகளோடு கோழிகள்
இவைகளோடு நானும்
பசியாறாமல் நீ
பசி உணர்ந்த தில்லை

அன்று  அடைமழை
நம் கட்டைச் சுவரில்
ஒரு தண்ணிப் பாம்பு
நான் கம்பு தேடினேன்
நீ கைதட்டி விரட்டினாய்
பின் சொன்னாய்

என் வாழ்க்கைச் சக்கரத்தின்
கடையாணியாக அந்த
உன் கடைசி வார்த்தைகள்
இதோ

‘விரட்டிவிடு அல்லது
விலகிவிடு
எதையும் காயப்படுத்தாதே’
—————————————–

Series Navigationபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “விபத்தில் வாழ்க்கை

3 Comments for “அம்மா”

 • சோமா says:

  வாடிக்கைக் காகங்கள்
  கன்றோடு பசு
  குஞ்சுகளோடு கோழிகள்
  இவைகளோடு நானும்
  பசியாறாமல் நீ
  பசி உணர்ந்த தில்லை……அவள்தான் அம்மா…..நன்றி அமீதாம்மாள்..

 • arunasalam says:

  virathividu allathu vilagi vidu
  ethaiyum kaayappaduthaathe. nanru.

 • jayashree shankar says:

  கவிஞர் அமீதாம்மாள்….

  மிகவும் அருமையான கவிதை….
  ////விரட்டிவிடு அல்லது
  விலகிவிடு
  எதையும் காயப்படுத்தாதே’////
  தாய்மை மிளிர்கிறது……

  நன்று…
  ஜெயஸ்ரீ ஷங்கர்.


Leave a Comment

Archives