மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், அவர்தம் குணங்களை இந்த ஒரு சில நிமிடங்களில் கணிக்க முடியும் அளவிற்கு அவர்தம் போக்கு. இவ்வளவு அவசரமாக வந்தும் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதே என்று சர்ர்ர்ர்ர்ரென்று வந்து வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் மத்தியில் சற்றே ஓரமாக நின்றிருந்த ஒரு இரு சக்கரவாகனப் பெண்மணி முன்னால் தெரிந்த ஏதோ மனித தலையை அடையாளம் கண்டு மெல்ல தம் வண்டியை ஓரமாகவே உருட்டிக் கொண்டு நாலெட்டில் அந்த மனிதரை நெருங்கி, சற்றும் தாமதிக்காமல் தன்னால் இயன்ற மட்டும் கையை ஓங்கி அந்த மனதனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டவுடன் அத்தனை பேரும் ஸ்ஸ்ஸ்ஸ் என தன் கன்னம் நோக்கி தன்னிச்சையாக கையைக் கொண்டுபோகும்படி ஆனது.. “தொலைச்சுப்புடுவேன்.. எங்கே போயிடுவே. மரியாதையா வந்து சேரு. ………” என்று மேலும் சொன்ன சில வார்த்தைகள் சரியாகக் காதில் விழவில்லை. அதற்குள் சிகனலில் மஞ்சள் விளக்கு வரவும் வாகனங்கள் கிளம்பத் தயாராகின.. அடுத்த பச்சை விளக்கில் அனைத்து வாகனங்களும் முந்திச்செல்ல முற்பட்டு, அதில் அடி கொடுத்தவரும், அடி வாங்கியவரும் ஆளுக்கொரு திசையில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என்னால்தான் இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அப்படி என்ன கோபம் வந்துவிடும் ஒரு பெண் பிள்ளைக்கு. எப்படியும் 30 வயது இருக்கும்.. இந்த வயதில் நடுத்தெருவில் ஒரு ஆடவனை அடிக்கும் அளவிற்கு எத்துனை துணிச்சல் இருக்க வேண்டும்.. சே.. கொஞ்சமும் சபை நாகரீகம் தெரியாத கேவலமான குணம் என்று திட்டிக்கொண்டே சென்றேன்.. அன்று முழுவதும் அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த ஆக்ரோஷமும், அந்த ஆடவன் நடுங்கி பின் வாங்கியதும் அடிக்கடி மனக்கண் முன்னால் வந்து போய்க் கொண்டிருந்தது……
பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் நாலைந்து நாட்களாக அதே நினைவாக இருந்தபடியால் மெல்ல, இந்தப் பெண் அடி கொடுத்த விசயம் சுத்தமாக மறந்துவிட்டது. ஒரு வாரம் சென்றிருக்கும். ஒரு நாள் மாலை பள்ளிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.. கடைவீதியில் வந்து கொண்டிருக்கும் போது என் இரு சக்கர வாகனம் கூட நுழைய முடியாத அளவிற்கு ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து இடைஞ்சல் ஆக நேர்ந்த போது போக்குவரத்து காவல் துறை அதிகாரி வந்து அங்கு கூட்டத்தை விலக்க வேண்டியதாக இருந்தது. யாரோ ஒருவன் நன்கு அடி வாங்கியிருந்தான். குடித்திருப்பவன் போன்று உளறிக் கொண்டும் இருந்தான். போலீஸாரும் உள்ளே சென்று கூட்டத்தை விலக்கி அவனை மிரட்டி விட்டுச் சென்றார். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எட்டிப்பார்க்க நினைத்த போது, அதே முகம்… கோபமான அதே முகம், கூட்டத்தை விலக்கிக் கொண்டு யாரையோ வசைமாரி பொழிந்து கொண்டு கையோடு ஒரு பெண்ணை தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாக வந்து தன் வ்ண்டியில் ஏறியதோடு பின் இருக்கையில் கையோடு கூட்டிவந்த அந்தப் பெண்ணையும் அமர்த்திக் கொண்டு யாரையும் திரும்பிக்கூட பாராமல் விர்ரென்று வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க….. அந்த அம்மாவைப் பார்த்தவுடன் எனக்கு திரும்பவும் அன்று அடி வாங்கியவனின் நினைவு வந்தது. ஒரு வேளை திரும்ப அவனாகவே இருக்குமோ என்று எண்ணி திரும்பிப் பார்த்தால் இது வேறு ஒரு ஆள்.
“அட….ச்சை.. என்ன பொம்பிளை இது.. கொஞ்சமும் அடக்கமில்லாமல் இதே பொழைப்பாகத் திரிகிறதே.. யார்தான் இதைத்தட்டிக் கேட்பது. பெண் குலத்திற்கே அவமானச் சின்னம் போல”
என்று எண்ணிக் கொண்டே, முனுமுனுத்தவாறே கிளம்பினேன்.. அடுத்து ஒரு வாரம்தான் இருக்கும் இன்னொரு இடத்தில் ஏதோ தகராறு நடந்து கொண்டிருந்தபோது கட்டாயம் இந்தம்மாதான் அதற்கு காரணமாக இருப்பாள் என்று மனம் நம்ப ஆரம்பித்துவிட்டது. அந்தம்மாவின் தலை போல் தெரிந்தது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாமோ என்னவோ அதுவும் புரியவில்லை. ஆனாலும் அந்தம்மாவின் மீது ஒரு வெறுப்பே வளர ஆரம்பித்துவிட்டது.
பரிட்சையெல்லாம் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. அன்று ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரியும் என் சகோதரரைக் கண்டு ஒரு குடும்ப விசயம் பேச வேண்டும் என்று சென்றேன். அண்ணன் வேலையில் மும்முரமாக இருந்ததாலும், அவருடைய அறையில் யாரோ வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருப்பதும் தெரிய, வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்தவுடன் போகலாம் என்று காத்திருந்தேன். சற்று நேரத்தில் அறைக்கதவு திறந்து யாரோ இருவர் வெளியில் வருவது தெரிந்தது.. தினசரியில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியின் இறுதிப்பகுதி.. அதை மட்டும் படித்துவிடலாமே என்று வேகமாக பார்வையை ஓட்ட, ஏதோ தெரிந்த குரல் போல கேட்கவும் குரல் வந்த திசை நோக்கி பார்வையைத் திருப்ப, அங்கு என் வெறுப்பிற்கு முழுவதுமாக பாத்திரமாகியிருந்த அதே பெண்மணி. இங்கு என்ன செய்கிறது இந்த அம்மணி என்று யோசிக்கும் போதே, மேலாளர் அறையைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தது உதவி மேலாளரிடம்.. ஒரு புழுவைப்போல அந்த அம்மாவைப் பார்த்த என் பார்வை அவரை அத்துனை சங்கடப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை.. அப்படி நெளிந்து கொண்டிருந்தார் பாவம்..
அறையினுள் சென்று சகோதரரிடம் கேட்ட முதல் கேள்வி, இப்போது ஒரு அம்மணி வந்து செல்கிறதே அது யார் என்பதுதான்…. சகோதரரும், தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒரு பெண், கணவனால் கைவிடப்பட்டவர் என்றும், அவளுக்கு ஒரு சிறுதொழில் கடன் வேண்டியும் அழைத்து வந்திருந்ததாகச் சொன்னார். உடனே நான், “அண்ணா அந்த அம்மா சம்பந்தமாக எது செய்தாலும் பல முறை யோசித்து செய்யுங்கள். மிக மோசமான பொம்பிளை போலத் தெரிகிறது, சரியான சண்டைக்காரி. நாளைக்கு உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடப் போகிறது” என்றேன். அண்ணனும், அதுசரி, விசாரிக்காமல் கொள்ளாமல் அவ்வளவு எளிதாகவெல்லாம் தூக்கிக் கொடுத்து விடமாட்டோம் அரசாங்கப் பணத்தை” என்று சொன்னதும்தான் மனம் ஆறியது..
அடுத்த நாள் காலை வழக்கம்போல ரயில்வே காலனி மைதானத்தில் நடைப்பயணம் சென்றுவிட்டு திரும்பலாம் என்று எண்ணியபோது சற்று அதிகமாக நடந்த களைப்பு அங்கிருந்த பெஞ்சில் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டியது. அப்போது அங்கு டீ விற்றுக் கொண்டிருந்தவர் வைத்திருந்த எப்.எம். ரேடியோவில் ஒரு குட்டிக்கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்… அதாவது, வியாச முனிவர் ஒருநாள் நகரத்தினுள் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு புழு ஒன்று வெகு வேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த வியாசர் “அப்படி அவசரமாக எந்த கோட்டையைப் பிடிக்கப் போகிறாய்”? என்று கேட்க,
அதற்கு அந்தப்புழு,”சுவாமி, தொலைவில் ஒரு வாகனம் வரும் அதிர்வு தெரிகிறது.அதனால் என்னை காப்பாற்றிக் கொள்ளவே இத்துனை வேகமாகச் செல்கிறேன் “ என்றது.
அதற்கு வியாசரும், “அப்படி உன்னைக் காப்பாற்றிக் கொண்டு நீ என்னசாதிக்கப் போகிறாய். ஒரு அற்பப் புழுவான நீ உயிரோடு இருந்துதான் என்ன சாதிக்கப் போகிறாய், உன்னால் யாருக்கு என்ன இலாபம்”? என்றார்.
அந்த புழு அவரைப் பார்த்து ”உங்கள் அளவிற்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுபோல என் அளவிற்கு நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதனால் இதில் யார் பெரியவன் என்ற சர்ச்சையெல்லாம் வேண்டாம் “ என்றது.
வியாசரோ மிகவும் கோபப்பட்டு ”என்னுடன் உன்னை இணைத்துப் பேச என்ன தகுதி இருக்கிறது உனக்கு. நீயும் நானும் ஒன்றா.. தவத்தில் சிறந்து விளங்கும் நான் எங்கே, அற்பமாகச் சுற்றித் திரியும் நீ எங்கே” என்று சத்தம் போட ஆரம்பித்தார்.
அந்தப்புழு சற்றும் தயங்காமல், “ஐயனே, நான் என்னை என்றுமே பெரியவனாக நினைத்துக் கொண்டதே இல்லை. ஆனால் தலைப்பரட்டை புழுவிற்கும், மற்ற சிறு புழு வகைகளுக்கும் நான் உயர்ந்தவன்தான். அதேபோல தேவர்களுக்கு ஒருபடி தாழ்ந்தவர்தான் நீங்கள். என் அளவிற்கு என்னுடைய இன்பமோ அல்லது துன்பமோ பற்றி ஏதும் உங்களுக்குத் தெரியுமா? அப்படியிருக்க நீங்கள் எப்படி உயர்ந்தவர்கள் ஆவீர்கள்’? என்று வினவ அப்போதுதான் வியாசருக்கு உரைத்தது தன்னுடைய தவறு என்ன என்று
இந்தக் கதையை சொல்லி முடித்தவர், உலகத்தில் யாருமே அற்பமானவர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணத்திற்காக இயற்கையால் படைக்கப்பட்டவர்கள். காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. அதனால் எவரையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிடக்கூடாது என்று பேசிமுடித்தார்.
நேரம் ஆகிவிட்டபடியால் எழுந்து வீடு நோக்கிச் செல்லும் போது வ்ழியெல்லாம் ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கதை என் மனதை மிகவும் பாதித்திருந்தது. ஏனோ அந்த சண்டைக்கார அம்மணியின் முகம் நினைவில் வந்தது.. தான் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கக் கூடாதோ.. அவருடைய சூழ்நிலை என்ன ஏது என்று கூட யோசிக்காமல் சகோதரனிடமும் அவரைப்பற்றி ஒரு மோசமான அபிப்ராயத்தை திணித்து விட்டோமே என்று வருத்தம் ஏற்பட்டது.
அதே உறுத்தலுடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வழியில் முதன்முதலில் அந்த அம்மையாரிடம் அறை வாங்கிய அந்த ஆடவனைக் காண முடிந்தது.. இன்னொருவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிய, மெதுவாக நெருங்கிச் செல்லும் போது , இன்னொருவன் , என்னப்பா ஆச்சு அந்த பிரச்சனை .. அதான் அந்த குருட்டுப் பிள்ளையை கெடுத்துப்போட்டு ஒதுக்கிவிட்டு வந்தாயே. இப்ப என்ன ஆச்சு அந்த ஆசிரமத்துக்காரம்மா உன்னை இழுத்துக்கிட்டுப் போச்சே.”? என்று கேட்க,
அவனும், “அதை ஏம்ப்பா கேக்கற, அந்த குருடி அனாதைச் சிறுக்கிதானேன்னு சாதாரணமா நினைச்சி உட்டுப்போட்டு வந்துட்டேன். ஆனா அந்த ஆசிரமத்துக்காரம்மா என்னை துரத்தி துரத்தி அடிச்சி அந்தப் புள்ளைய கட்டி வச்சிப்புடிச்சி… அதோட நிக்காம, கண் வங்கில போராடி அந்த புள்ளைக்கு பார்வை கிடைக்கவும் வழி செய்துடிச்சி.. இப்ப அந்தம்மாதாம்ப்பா எங்களுக்கு தெய்வம்.. எங்களுக்கு மட்டுமா, அந்த ஆசிரமத்துல வந்து பாரு எத்தனை பொம்பிளைகள், பெரிசுகள்னு அனாதைகளா அவங்களோட பாதுகாப்புல இருக்காங்கன்னு.. ஒரு கல்யாணம் இல்லை, சொந்தபந்தமும் இல்லை, தன்கிட்ட இருந்த சொத்தெல்லாம் இந்த ஆசிரமத்துக்கு எழுதி வச்சதோட, உடம்பாலயும் உழைச்சு ஓடாத்தேயற அந்தம்மா இன்னொரு மதர் தெரசாப்பா.. என்ன அந்த தெரசாம்மா அமைதியே உருவாக, அன்பே தெய்வமாக வாழ்ந்தாங்க. இந்தம்மா கொஞ்சம் பாரதியின் ரௌத்திரம் பழகுறாங்க.. என்னைப்போல ஆளுங்களை சமாளிக்க அதுவும் தேவையால்ல இருக்கு. அன்னைக்கு உட்ட ஒரு அறையில பாரு இன்னைக்கு ஒழுங்கா அந்த ஆசிரமத்துக்கு பாதுகாவலனாவும், அந்த குருட்டுப் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாவும் இருக்கிறேனே..” என்று சொன்ன போது,
என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் கூட எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோமே என்று மனம் நொந்து போனாலும், வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு, முதல் வேலையாக வங்கிக்குச் சென்று சகோதரனிடம் நடந்ததெல்லாம் கூறி ,அந்தம்மா கூட்டி வந்த அபலைப் பெண்ணிற்கு தொழிற்கடன் பெற உதவ வேண்டும் என்று எண்ணிய போதுதான் மனபாரத்தை இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்தது….
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
அன்பின் பவள சங்கரி அவர்களுக்கு,
வணக்கம்…
ரௌத்திரம் பழகு…கதை…கருத்தோடு..
யதார்த்தமாக நல்லதொரு தகவலைக் கொண்டு வந்து
கொடுத்த உங்கள் நளினமான சிந்தனைக்கு சபாஷ்…!
உங்கள் கதைகள் ஒவ்வொன்றும்…சிந்தையைத் தூண்டி
கதைக்குள் சிக்க வைக்கும் என்று மகிழ்வோடு சொல்கிறேன்.
நன்றி
ஜெயஸ்ரீ ஷங்கர்…
அன்பின் ஜெயஸ்ரீ,
மிக்க நன்றி. தங்கள் ஊக்க்மான வார்த்தைகளுக்கு கடமைப்பட்டுள்ள்ளேன் தோழி.
அன்புடன்
பவள சங்கரி
ROWTHIRAM PAZHAGU by PAVALA SHANKARI is yet another story with a message for the readers. We often form opinion on others at first sight without knowing about their background or any other details. How far this can be wrong is told in this story of a supposed to be ferocious woman. From the three incidents where the woman appears ,she seems to be uncultured and ill-mannered. She shouts and slaps a man in public. Later on when the narrator sees the same lady in the bank asking for loan for a separated woman she is suspicious about her motives and warns her brother. And finally when she overhears the conversation between the friends, she feels ashamed and regrets for her thoughta and actions. The inclusion of the story of VIYASA MUNIVAR and the WORM too is very appropriate. After knowing that the same woman is a philanthropist running a home for destitute women the narrator is even more ashamed. Similarly the watchman’s narration and his reference to Mother Theresa and Poet Bharathi when talking about her who has given him a wife and job is a nice ending. Not only the narrator, we too would have on many occasions experienced similar situations in life. Enjoyed reading this story…NALVAAZHTHUKKAL PAVALA SHANKARI…Dr.G.Johnson.
அன்பின் டாக்டர் ஜான்சன்,
மிக்க மகிழ்ச்சி. நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பல நேரங்களில் நம்மை படைப்பாளியாக்கி விடுகிறது. நமக்குள் அப்படி ஒரு திறமை இருப்பது கூட அதுபோன்ற தருண்ங்களில்தான் வெளிப்படுகிறது. காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை.. தங்களுடைய ஆழ்ந்த ஊடுருவல், மிகுந்த ஊக்கமளிப்பது. மீண்டும் நன்றி ஐயா.
அன்புடன்
பவள் சங்கரி
அன்புள்ள வாசகர்களுக்கு
தயவு செய்து தமிழில் பின்னூட்டங்களை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நண்பர் பத்ரியின் ஆக்கத்தில் கீழ்க்கண்ட வலைதளத்தில் தமிழ் எழுதும் மின்பொருள் உள்ளது.
http://software.nhm.in/products/writer
கீழ்க்கண்ட வலைதளத்தில் தமிழ் உருமாற்றியும் கிடைக்கிறது.
http://www.suratha.com/unicode.htm
ஜிமெயில் அஞ்சல் இப்போது தமிழில் எழுதும் வசதியும் கொண்டுள்ளது.
நன்றி.
அருமையான, அதேநேரம் வித்தியாசமான கதை. நல்வாழ்த்துக்கள் தோழி!
அன்பின் லறீனா அப்துல் ஹக்,
மிக்க நன்றி தோழி.
அன்புடன்
பவள சங்கரி
அன்புள்ள பவளசங்கரி அவர்களே
ரௌத்திரம் பழகு
என்று
பாரதி சொன்னதை
பெண்ணியத்துக்கு
கண்ணியம் சேர்க்கும்
கதை ஆக்கியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
நான் ஆணையிட்டால் என்று
சவுக்கை தூக்கும் பணி
பெண்களுக்கும் உண்டு.
இவர்கள் கோபத்தில்
குழம்பு கொதித்தால் போதும்
சோறு வெந்தால் போதும்
என்ற பழமை வாதத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க
எழுத்துக்களைக் கொன்டு
ஒரு புயல் வீசியிருக்கிறீர்கள்.
அருமை.அருமை.
அன்புடன்
ருத்ரா
அன்பின் திரு ருத்ரா,
தங்களின் ஆழ்ந்த புரிதலுக்கு நனிநன்றி. பெண்ணியம் என்ற சொல் ஏனோ பல இடங்களில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.. முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை ஊக்குவிக்ககூடிய ஒரு அழகான சொல்லாகவே காணவேண்டியது, எத்தனையோ வள்ளியம்மைகளையும், சரோஜினி நாயுடுகளையும் உருவாக்கிய சொல்..
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
என்று குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்தே ஊட்டி வளர்த்தால் ரேகிங் கொடுமை ஏது, வரதட்சணை கொடுமை ஏது.. தற்காத்துக் கொள்ளும் எண்ணம் ஊட்டிவளர்க்கப்பட வேண்டும்.. தங்களைப் போன்றோரின் எழுச்சிமிகு அழகு கவிதைகள் எளிதாக சாதிக்கக்கூடியவைகள் ..
மீண்டும் நன்றி ஐயா.
அன்புடன்
பவள சங்கரி
KANNAL KANBADUM POI..KADAL KEPPADUM POI…THEERA VISARIPPATA MAI..This applies to the well narrated above story…The society need not only annai therasa but also bharathien pudhumai penn..அச்சமில்லை, அச்சமில்லை – அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்
அச்சமில்லை, அச்சமில்லை – அச்சமென்பதில்லையே
This quote is applicable to one and all in our society when we face sinful deeds.The author beautifully reveals the above quote through her story…
அன்பின் திரு கணேசன்,
தங்களுடைய வாழ்த்திற்கு மனமார்ந்த மிக்க நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
சகோதரி பவள சங்கரி,
உன் ரெளத்திரத்தில்
பாரசக்தியின் சக்தியை கண்டோம்
நவீன கண்ணம்மா
உன் எழுத்துக்களிள் என் பாரதமாதாவை
தரிசித்தேன்
கண்களில் ஆனந்ததுடன்.
பாரதி
அன்பின் திரு கோமல் கிருஷ்ணா,
நனிநன்றி சகோதரரே. தங்கள் வாழ்த்திற்கு எம் பணிவான வணக்கங்கள்.
அன்புடன்
பவள சங்கரி
பவள சங்கரி அவர்களுக்கு தங்களுடைய ரொத்திரம் பழகு சிறு கதை அருமை. நிற்க
ரொத்திரம் பழகு என்பதின் பொருளினை நான் சற்று வித்தியாசமாக புரிந்து கொண்டு உள்ளேன். கோபத்தை நம் கையில் இருக்கும் ஒரு கருவியாக நாம் செய்ய வேண்டிய காரியத்திற்கு உதவும் ஒரு உத்தியாக நாம் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும்.
கோபத்தில் நம்மை நாம் இழந்துவிடும் அளவுக்கு கோபம் கொண்டால் நாம் கோபத்தை ஆளுவது போய் அது நம்மை ஆளும் அதன் விளைவு நமக்கோ அல்லது கோபம் யார் மீது கொள்ளப்பட்டதோ அவருக்கோ உதவாது.
சுருங்கக்கூறின் நாம் கோபம் கொள்பவராகவும் நம்முடைய கோபத்தைக் கண்காணித்து ஒரு எல்லையை மீறாதவாறு பார்த்துக் கொள்பவராகவும் ஒரே சமயத்தில் இருக்கவேண்டும். இது க்ற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திறமைதான். இதைத்தான் ரொத்திரம் பழகு என பாரதி கூறினார் என்பது என்னுடைய கருத்து. கதை பொதுவாக கோபத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது. ஒருவேளை இளைஞரகள் தவறாகக் கோபம் கொள்வதற்கு பாரதியே ரொத்திரம் பழகு எனக்கூறி உள்ளான் என்று சமாதனம் கூறும் நிலை ஏற்படுமோ என அஞ்சுகிறேன்.
அன்பின் திரு வெங்கடாசலம்,
வணக்கம். தங்களுடைய கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்.கட்டுக்கடங்கா கோபங்கள் நியாயப்படுத்தப்பட்டால் அது தவறு… கொட்டிக் கொண்டே இருந்தால் புழுவும் குளவி ஆகுமாப்போலே, கண் முன்னால் அக்கிரமங்கள் நடந்து கொண்டே இருக்கும் போது துன்பம் கொள்பவர்களைக் கண்டால் அவர்களைக்காக்க வேண்டும் என்ற நல்லிதயமும் சேவை மனப்பான்மையும் கொண்ட ஒரு ஜீவன், அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், வெகுண்டு எழுவது இயற்கையே.. அத்தகைய கோபம் பழகுவதில் தவறில்லையல்லவா. ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடிக்கறக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் சில ஜீவன்களை ரௌத்ரம் பழகித்தான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை காக்க முடியும் என்றால் அதில் பாரதிக்கும் உடன்பாடு இருந்திருக்கும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
அன்புடன்
பவள சங்கரி.
பி.கு. என்னுடைய குளவி கொட்டிய புழு என்ற சிறுகதையை பாருங்கள் ஐயா.. நாட்டில் இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது….
http://coralsri.blogspot.com/2012/03/blog-post_26.html
அன்பு பவள சங்கரிதங்களுடைய பதிலிலிருந்து நான் கூறவந்ததைத் தெளிவாகக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. பாரதி ரொத்திரம் பழகு என்று கூறாமல் ரொத்திரம் கொள் என்று கூறி தாங்கள் அக்கூற்றை உங்களுடைய சிறுகதைக்கு வைத்திருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும். நிற்க.
சினம் என்ற உணர்ச்சி மிக அவசியமான ஒன்று. ஒரு வண்டிக்கு அதன் இயந்திரம் எவ்வாறு அவசியமோ அவ்வாறு.ஆனால் தடையான், வேக ஊக்கி மற்றும் ஸ்டேரிங் ஆகியன கொண்டு இயந்திரத்தின் ஆற்றலை நெறிபடுத்தும்போதே வண்டியின் பயன்பாடு நமக்குக் கிட்டுகிறது அல்லவா? அதைப்போல கோபம் என்னும் ஆற்றலை நாம் வலியுறுத்தவும் வேண்டும் வழியுறுத்தவும் வேண்டும். அது பயிற்சியின்மூலம் வருவது. அதைத்தான் பாரதி பழகு என்றான்.
தங்களுடைய கதாநாயகி சாலையில் பலபேர் முன்னிலையில் ஒருவனை அடிப்பது நெறிப்படுத்தப்பட்ட கோபம் அல்ல அல்லவா? அவன் திருப்பி அடித்திருந்தால் அவளுடைய நிலை என்ன? அதைத்தான் சொல்ல வந்தேன். மற்றபடி உங்கள் நடை எதிர்பாராத ஆச்சரியமான முடிவு எல்லாம் அற்புதம்.
அன்பின் திரு வெங்கடாசலம்,
தங்களுடைய வாதத்தில் உள்ள நியாயத்தை தெளிவாகப் புரிந்து கொண்டேன். மிக்க நன்றி, வணக்கம்.
அன்புடன்
பவள சங்கரி