முள்வெளி அத்தியாயம் -8

This entry is part 9 of 41 in the series 13 மே 2012

“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?”

“………..”
“இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?”

“……….”
“இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?”

டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை.

பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?”

“…………..”

“அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?”

ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் டாக்டர். முதன் முறையாக சிறு சலனம்.

“இல்லே. உயிரோட இருக்காங்க…” குழறி வார்த்தைகள் வெளி வந்தன.

டாக்டர் ஒரு பொத்தானை அழுத்த மணி ஒலித்தது. உதவியாளர் எட்டிப் பார்த்தார். “நெக்ஸ்ட் பேஷன்ட். உதவியாளர் வெளியேற இருவர் உள்ளே வந்தனர்.

அவர்கள் வந்து அமர்ந்தவுடன் டாக்டர் அகன்ற அந்த அறையில் சாளர அருகாமையில் இருந்த ஒரு மேஜை நாற்காலியைக் காட்டி “ராஜேந்திரன் ஸார்.. இங்கே உட்காரலாமா?” என்றார். பதில் வராததும் ராஜேந்திரனின் தோளில் தோழமையுடன் கையை வைத்து “அங்கே கொஞ்ச நேரம் உட்காருங்களேன்” என்றார் அவன் கண்களை ஊருருவி. ராஜேந்திரன் எழுந்தான். அவன் அமரும் வரை அவனுடன் நடந்தார். அந்த மேஜையில் நிறைய வெள்ளைக் காகிதங்களும் இரண்டு மூன்று பேனாக்களும் இருந்தன.

“எதாவது எழுதலாமா ஸார்…” என்றார் டாக்டர். ராஜேந்திரன் சாளரம் வழியே வெளியுலகை வெறித்தபடி இருந்தான். டாக்டர் தமது இருக்கைக்குத் திரும்பும் முன் மன்னிப்புக் கோரிய படி மஞ்சுளா உள்ளே நுழைந்தாள். “டாக்டர்.. ஷல் ஐ ஹெல்ப் ஹிம் எக்ஸிட்?”

“ஐ டின்ட் கெட் யூ…” டாக்டர் குரலில் சிறிய எரிச்சல் தெரிந்தது.

“நெக்ஸ்ட் பேஷன்ட் ஈஸ் இன்.. ஸோ ஐ ஃபெல்ட்..”

“உங்களுக்கு நேரமாயிடுச்சா?”

“ஸம் வாட் … கன்ஸல்டேஷன் முடியல்லையா டாக்டர்?”

“நீங்க கெளம்புங்க.. நான் போன் பண்ணும் போது வண்டியை அனுப்புங்க..”

“ஓகே.. தேங்க்ஸ்.. ” அவரை வித்தியாசமாகப் பார்த்தபடி மஞ்சுளா வெளியேறினாள்.

**__
**__**
** “பிள்ளைங்களா.. இது ரொம்ப ஸிம்பில் மூவ்மெண்ட்ஸ்.. நல்லா கவனிங்க.. ” ஆசிரியை அபிநயம் பிடிக்க மாணவிகள் சூழ்ந்திருந்தனர்.

‘முருகா முருகா என்றால்
உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால்
மயிலேறி வாரோயோ”

இரு கைகளையும் விரித்து முக வடிவம் போல இடைவெளி விட்டு அசைத்துப் பிறகு கைகளைக் கூப்பியபடி தரையில் மண்டியிட்டுப் பின் சற்று முன்னே நடந்து இரு கரங்களையும் இடது பக்கம் ஒன்றாக அசைத்து வருக என்பது போல பாவித்து இரண்டு கைகளையும் மேலே தூக்கி மெதுவாக அசைத்து மயில் போல பாவனை காட்டினார் ஆசிரியை. “சித்ரா முன்னாடி நாட்டியத்தை ஆடுவா. பின்னாடி காவடி, கரகம், பால்குடமின்னு நீங்க ஒவ்வொரு அனுபல்லவிக்கும் மாத்தணும்.” சித்ரா தான் முக்கிய நடனம் செய்யப் போகிறாள் என்பது எந்தக் குழந்தைக்கும் வியப்பாக இல்லை. நடனம் சரியாக வரா விட்டாலும் அவர்களுள் சிவப்பானவளும் வசதியானவளும் அவளே. என்ன உடை என்ன செலவானாலும் அவளுடைய அம்மா வாங்கித் தந்து விடுவாள்.

“நீங்க எல்லாரும் டிவியிலே வரப் போறீங்க. நினைவிருக்கில்லே. நல்லா ரிஹர்ஸல் பண்ணி நல்ல பேரை வாங்கணும்.” “எந்தக் கதை ஸீரியல்ல வரப் போவுதோ அதைப் படிப்போமா?” “நீ படி சித்ரா” என்று அவளிடம் கொடுத்தாள். “கதையோட டைடில் “விபத்து” தொடர்ந்து படித்தாள் சித்ரா.
**__
**__**
** விடியற்காலை மணி ஐந்து. தினத்தந்தி, தினமலர், தினமணி எனத் தமிழ் பேப்பர்களை மூன்று நான்கு வரிசையாகவும் அதே போல ஹிண்டு, டைம்ஸ், க்ரோனிகில் ஆகியவற்றைத் தனி வரிசையாகவும் பிரித்து அடுக்கினான். மொத்த பத்திரிக்கைக் கட்டுகளையும் இடம் வலமாக மாற்றி மாற்றி அடுக்கி இருந்ததால் லாகவமாக அவனால் பிரித்து எடுக்க முடிந்தது என்பதை ரமேஷ் கவனித்தான்.

“இப்போ இந்தக் கட்டைப் பிரி” என்று பாபு எழுந்த பின் தான் அவன் ஒரு பேப்பர் கட்டின் மீது உட்கார்ந்திருந்தது தெரிந்தது.
“இதுலேயிருந்து அந்த அந்தப் பேப்பருக்கு உண்டான சப்ளிமென்டை கட்டா எடுத்து மெயின் பேப்பர் கட்டோட வையி”
“சப்ளிமென்ட்டுன்னா?”
“சினிமா ஜோஸியமெல்லாம் போட்டுத் தனியா வருண்டா. அதான்”

முதலில் ரமேஷின் கையில் கிடைத்த கட்டில் அவனது அபிமான நடிகர் ஒருத்தியின் தொப்புளருகே முகத்தை வைத்திருந்த படம் தெரிந்தது. ஒரு நிமிடம் அதை எடுத்துப் பார்த்தான். பாபு அவன் முதுகில் தட்டினான். “தோ பாரு. நம்ப பேப்பர் படிக்க ஆரம்பிச்சா பொளப்புல மண்ணுதான்”. தந்தி மெயினு, சப்பிளிமென்ட்டு ரெண்டையும் இந்தப் பையில போடு.” நீண்ட கித்தான் பையைக் காட்டினான். ரமேஷ் ஏஜென்டின் கடைக்குண்டான சைக்கிளின் ஹாண்டில் பாரின் இரு பக்கமும் மூன்று நான்கு பைகளை மாட்டும் போதே ஏஜென்ட் “இன்னும் ரெண்டு நாளுக்குள்ளே சைக்கிளுக்கு வழி பாரு. உங்க நைனா எங்க வேல பாக்குறாரு?” என்றான்.

“ஒடம்புக்கு சொகமில்ல. வேலைக்கிப் போவுல”

“அம்மா?”
“வூட்டு வேலைக்கிப் போவாங்க’
“அந்த அய்யிருங்க வூட்டுல பளைய சைக்கிளு எதனாச்சும் இருந்தாக் கேட்டு வாங்கிக் கன்டிஷனா வெச்சுக்க. இன்னா?”
தலையை அசைத்த ரமேஷ் கிளம்பும் முன் பாபுவிடம் ” டேய்.சில பசங்க இங்கேயே மெயின் பேப்பருக்குள்ளார ஸப்ளிமென்ட்டை அடுக்குறாங்களே” என்றான்.
” அது டைம் வேஸ்ட்டுடா. அந்த அந்தப் பையிலேயிருந்து ரெண்டையும் உருவிக்கிட்டே போனா வுட்டுக்குள்ளே நுழையும் போதே வேலை சுளுவா முடிஞ்சிரும்”.

பாபுவின் அறிவுரைப்படி அவன் நுழையும் வளாகத்தின் பெயர் எண் இவற்றைக் குறித்துக் கொண்டு ஹிண்டு என்றால் H, டைம்ஸ் என்றால் T, தினமலர் என்றால் மலர், தினத்தந்தி என்றால் தந்தி என்று குறிப்பெடுத்தபடியே வந்தான்.

” ஒரு வாரம் இந்த சீட்டை வெச்சிக்கினு பேப்பர் போடு. அப்புறம் உனக்கே மனப்பாடம் ஆயிரும்”

மாடிகளில் பாபு வேகத்துக்கு ரமேஷால் ஏற முடியவில்லை. குளிரையும் மீறி வியர்த்தது. மூச்சு வாங்கியது. “அடுத்த வாரத்திலிருந்து விகடன் என்றார் ஒருவர். ‘குமுதம்’ என்றார் இன்னொருவர். “உடனே குறிச்சிக்க’ என்று ஒடியபடியே சொன்னான் பாபு. எங்கேயும் ஓட்டந்தான்.

“ஏண்டா அறிவில்லே தினமும் லேட்டா வர்றியே” என்று அதட்டினார் ஒரு பெரியவர். இவர்கள் லைனில் அது கடைசித் தெரு. கையில் பாக்கியே நாலைந்து பேப்பர்கள் தான்.

அடுத்து வந்த டீக்கடையில் பாபு சைக்கிளை நிறுத்தி ‘ஸ்டிராங்கா’ ரெண்டு டீ போடுங்க ” என்றான்.

“என்னடா அந்தக் கெளவன் இப்புடிக் கத்துறாரு?” என்றான் ரமேஷ். “இத்தையெல்லாம் இந்தக் காதுலே வாங்கி அந்தக் காதுலே உட்ரு”

ஒரு பையன் ‘இன்னா மச்சி’ என்று பாபுவைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்திக் காலை ஊன்றினான். அவனைப் பார்த்து பாபு “மச்சி. செல்வத்தைப் பாத்தா அவன் அண்ணன் கிட்டே பழைய மேத்ஸ் கைடு கேட்டேன். ஞாபகமா எடுத்தாறச் சொல்லு” என்றான்.
“அவன் இன்னும் ரெண்டு வாரம் வரமாட்டான்”
“ஏண்டா?”
“வால்மீகி நகர் ஃபர்ஸ்ட் ஸீ வார்டு ரோட்ல நாய் கடிச்சிடிச்சிடிச்சு”
“தோ பாருடா. நிறைய பேரு வாயில வந்த படியெல்லாம் பேசுவாங்க ரொம்ப யோக்கியம் மாதிரி. நாம காலையில பாத்துக்கினு தானே போவுறோம். எத்தினி வூட்டு வாசல்லே கோலம் இருக்குது? அதுக்கு ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடராங்கடா வசதியான வீட்டுப் பொம்பளைங்க. சாமி பாட்டு எத்தினி வூட்டுலே கேக்குது. சினிமாப் பாட்டுத்தான். நம்ப வேலயைப் பாத்துக்கினு மாசம் ஆயிரம் ரூபா துட்டு வந்துச்சான்னு போயிக்கினே இருக்க வேண்டியது தான். ஸ்கூலுக்குப் போறதுங்காட்டியும் வேலை முடிஞ்சிடும். ஈவினிங் ஷோ பாக்கவோ ஊரு சுத்தவோ துட்டும் கெடக்கிது. அவ்ளொதாண்டா.”

சைக்கிளைத் திருப்பிக் கொடுக்கும் போது “ஸ்டீபனுக்கு கஸ்டமர்ஸ் கிட்டே நல்ல பேரு. நீயும் நல்லா பிக் அப் பண்ணிக்க” என்றார் ஏஜென்ட். திரும்பி வீட்டுக்கு டபுள்ஸ் வரும்போது பாபுவிடம் ” யார்ரா அந்த ஸ்டீபன்? ஏன் வேலைய விட்டிட்டிடான்?” என்றான். “போகி அன்னிக்கிப் புகையும் பனிமூட்டமுமா இருந்திச்சி. எவனோ லாரிக்காரன் அடிச்சி அவன் செத்துட்டான்” என்றான் பாபு.

**__
**__**
** “ராஜேந்திரன் வீட்டிலேருந்து வண்டி வந்திடிச்சா?”
“அரை அவர் முன்னாடி வந்திச்சி டாக்டர்”
“அவரை அழைச்சிக் கிட்டுப் போயி வண்டியிலே ஏத்தி அனுப்பி விடுங்க”. உதவியாளர் ராஜேந்திரனை சற்று இங்கிதக் குறைவாகவே எழுப்பி அழைத்துப் போனார்.

மவுனம்
______
காலத்தின் இழைகளால் தான்
சரித்திரத்தை நெய்கிறார்களாம்
அது உனக்கும் எனக்கும்
அவர்களுக்கும் பொதுவாம்

நான் மட்டுமே அறிவேன்
உன் இறந்த காலமும்
நிகழும்
என்னினின்று அன்னியமானவை

நாசூக்குகளுக்காகவோ
நல்லிணக்கமாகவோ
நீ என்னையும் நான் உன்னையும்
மையமென்று மொழிவோம்

இவ்விரவில் சாளரத்துக்கு அப்பக்கம்
அசைவினால் அது மரம் என்று தென்படுகிறது
மெளனமாய் இருக்க இயலும்
அதனுள் பறவைகளால் ராத்திரி முழுக்க

ராஜேந்திரன் எழுதிய கவிதையை டாக்டர் அவனுடைய ஃபைலில் இணைத்தார்.

Series Navigationதுருக்கி பயணம்-16 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *