மதியழகன் சுப்பையா
காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம்.
ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் பாராட்டுகள் அவரை பெரிதாய் மாற்றி விடாது என்றார். விமர்சிக்கவும் பாராட்டவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதே நேரம் படம் எடுப்பது என்வேலை அதனை யார் என்ன சொன்னாலும் தொய்வில்லாமல் செய்து கொண்டே இருப்பேன் என்று அழுத்தமாக சொல்லி விட்டு அமர்ந்தார்.
காஞ்சிபுரத்தின் அந்திரசன் பள்ளி அரங்கத்தில் விழா நடந்தது. நான் வாசித்த விமர்சனத்தில் நினைவிலிருந்தவைகளை கீழே வாசிக்கலாம்.
பாலாஜி சக்திவேலின் – மீண்டும் ஒரு காதல் கதை
மதியழகன் சுப்பையா
======================================================================
திரை உலகத்தைப் பற்றி எப்பொழுதுமே எதையுமே தீர்மானமாக சொல்ல முடிவதில்லை. ஒரு வெற்றிப் படம் எதனால் வெற்றிப் பெற்றது என்றும் தோல்விப் படம் எதனால் தோல்வியானது என்றும் புரிந்து கொள்ள முடிவதில்லை. நல்லப் படங்கள் படுதோல்வி அடைந்து விடுகிறன, அதே சமையம் நல்லப் படத்திற்கான அம்சங்களை கொஞ்சமும் பெற்றிறாத படங்கள் வெற்றியின் உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கின்றன.
நல்லப் படத்திற்கான வரையறை இதுதான் என்று யார் சொல்வது? ஒரு திரைப் படத்தை நல்லப் படம் என்று சொல்ல ஒருவருக்கு சில காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒருவருக்கு நல்லதெனப் பட்டக் காரணங்கள் மற்றொருவருக்கு நல்லதாக இல்லாமலும் போகலாம். ஒருவர் நல்லத் திரைப்படம் என்று கொண்டாடிய ஒரு திரைப்படத்தை எதிரே இருப்பவர் சராமாரியாக விமர்சித்துப் பேசலாம். திட்டித் தீர்க்கலாம். இப்படி அவரவருக்கு தனித்தனி அளவுகோலை தூக்கிக் கொண்டு திரிபவர்களை தவிர்த்து விடலாம்.
காரணம் திரைப்படத்தைப் பற்றியும் திரைமொழியைப் பற்றியும் தெரிந்தவர்களே அதைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் கருத்து சொல்ல முடியும். இல்லையேல் வெளுத்ததெல்லாம் பாலான கதையாக எடுத்ததெல்லாம் படமாகி விடும்.
இன்று உலகையே தனது பிடிக்குள் வைத்திருப்பது திரைகள் தான். திரையின் அளவுகள் மாறுபடுகின்றன ஆனால் அவை அனைத்தையும் ஆக்ரமித்திருப்பது சலனப் படங்கள் தான். குறிப்பாக ஆற்றல் மிகுந்த வெகுஜன ஊடகமாக இருப்பது வெள்ளித் திரை. இந்த வெள்ளித் திரைக்கு வரும் திரைப்படங்கள் பலவாறாக கத்தரிக்கப் பட்டு வகை வகையாக மற்றத் திரைகளான கணிணித்திரை, கைப்பேசித் திரை, சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சித் திரை என்று விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி அகன்ற திரைக்காக தயாரிக்கப் படும் அல்லது உருவாக்கப் படும் ஒரு படைப்பு பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்குள்ளாகி அவர்கள் பயன்படுத்தும் பிற திரைகளிலும் அதனை கண்டு களித்து மகிழ நினைக்கின்றனர், அவ்வாறே செய்கின்றனர். இப்படி வெகுவான மக்கள் ஒரு படைப்பை திரும்பத் திரும்ப பல ஊடகங்களின் வழியாகக் கண்டு களிக்க விரும்பும் நிலையை அந்தப் படைப்பிற்கான வெற்றி என்று வைத்துக் கொள்ளலாமா?
இவ்வாறான வெகுஜன விருப்பத்தை வெற்றி என்று சொல்லி விடலாம், ஆனால் வெற்றியை மட்டுமே வைத்துக் கொண்டு அது நல்லத் திரைப்படம் என்று சொல்லி விடமுடியுமா?
சென்னையில் சுமார் ஏழு திரைகளைக் கொண்ட பிரபலத் திரையறங்கு ஒன்றில் எந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்ய சில மணித்துளிகளை எடுத்துக் கொண்ட என் நண்பரிடம், ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டுமென எப்படி முடிவெடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ’’பிரண்டு சொன்னான், பத்திரிக்கையில போட்டிருந்தாங்க, நல்லாயிருக்குன்னு எழுந்திருந்தாங்க’ என்று திரைப்படத்தை பார்க்கத் தேர்ந்ததற்கான காரணங்களில் ஒரு சிலதைச் சொன்னான். ’அப்படியானால் எல்லாப் படங்களையும் இப்படித்தான் வந்து பார்ப்பீர்களா’ என்று கேட்டதற்கு.. இல்லை இப்படி கொஞ்சம் கோளாறான இயக்குனர்களின் படங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியதிருக்கிறது, என்றார்.
இன்னும் சில படங்களை தன்னிடம் இருக்கும் பொழுதை போக்கவே போய் பார்ப்பதாகவும் சொன்னார். இப்படி ஒரு நபர் ஒரு திரைப் படத்தை திரையறங்கில் போய் பார்ப்பதற்கு தக்கபடி எடுக்கப் பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
திரையில் ஒரு பிம்பம் அசைவதைக் கான திரையரங்குகளுக்கு ஓடோடி போய்க் கொண்டிருந்த காலம். அசையும் பிம்பங்களையும் அவைகள் செய்யும் சேட்டைகளையும், அசைவதன் மூலமாக கதைச் சொல்லப் படுதலை பார்த்துப் புரிந்து கொண்டதொரு காலம், பின் திரைப்பிம்பங்கள் பேசத் துவங்கியிருக்கின்றன. அப்பொழுதும் முன்னர் காட்டிய அதே ஆர்வத்துடனே மக்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்துள்ளனர், இதுவொரு காலம்.
இன்று திரும்பிய திசையெங்கும் விதவிதமானத் திரைகள். கையடக்கத்தில் திரை. இந்நிலையில் ஒரு திரைப் படத்தை திரையங்கில் போய்த்தான் பார்க்க வேண்டும் என்று தூண்டும் காரணிகள் எது? இல்லை ஒருவருக்கு சவுகரியமாக அவர் விரும்பிய நேரத்தில் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்படியான திரைகளில் கண்டு களித்தால் போதுமென்று விட்டுவிடலாம் இல்லையா?
திரையறங்குகளில் நிரம்பும் கூட்டத்தின் அளவை வைத்து மட்டுமே வைத்து வெற்றியா தோல்வியா என்று பார்த்தால் சரியாகுமா? வெள்ளித்திரையில் வசூலாகாத திரைப்படங்களை சின்னத்திரைக்கு கொடுத்து காசு பார்த்து விடுகின்றனர். எப்படியோ போட்ட காசை எடுக்க தயாரிப்பாளருக்கு நிறைய வழிகள் இருக்கின்றன.
ஆனால் இயக்குனரின் பெயரும் திறமையும் பேசப் பட வேண்டுமானால் திரையறங்குகளில் திரைப்படம் கணிசமான அளவு பணத்தை ஈட்டியிருக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்கு திரையறங்கில் நிலைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
பாலாஜி சக்திவேலின் திரைப்படமான வழக்கு எண் 18/9 திரையறங்குகளுக்கு மட்டுமே போய்ப் பார்க்கும் படியான திரைப்படமா? இல்லை எந்தத் திரையில் போட்டுப் பார்த்தாலும் போதும் என்ற படிதான் இருக்கிறாதா இல்லை பெரியத் திரையில் மட்டுமல்ல இதரப் பலத் திரைகளிலும் மாறி மாறி கண்டுகளிக்கும் படியான ஒரு படமா? விரைவில் இதற்கு விடை தெரியலாம். ஆனால் இப்படி வெகுஜனத்தால் அங்கிகரிக்கப் பட்டு கொண்டாடப் பட்டு விட்டால் அதனை நல்லப் படம் என்ற முத்திரை குத்தி விடலாமா?
புனைவுப் படைப்புகளுக்கான கதைகள் மொத்தமாக நான்கு பெரும் சுனைகளிலிருந்து வருகிறது. இந்த நான்கு சுனைகளின் கிளைகள் மற்றும் இன்னும் பிரிந்தோடும் சிறு கிளைகள் என்று விரிகிறது. எவ்வளவுதான் கிளைகள் பிரிந்தாலும் அவை யாவும் இந்த நான்கு பெரும் பிரிவுகளுக்குள் அடங்கி விடுகிறது.
இந்த நான்குப் பிரிவுகளிலிருந்து உருவப் படும் கதைகளையும் பலப்பல ஜேனர்களின் கீழ் அடக்கலாம். ஆனால் பெரும்பான்மையான இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட ஜேனர்களில் மட்டுமே பணியாற்ற விரும்புவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். திகில், மர்மம் என்ற பிரிவில் மட்டுமே தனதுப் படங்களை அடக்கிக் கொண்ட உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரை நாம் அறிவோம். ஒவ்வொரு அசைவிலும் நன்மை சிரிக்க வைத்த ஒரு அற்புதக் கலைஞன் காதலையும், சமூக விமர்சனங்களையும் சொல்ல நகைச்சுவையை தேர்ந்து கொண்டதை அறிவோம். இப்படி பலர் தங்களுக்கு சவுகரியமான ஜேனர்களைத் தேர்வு செய்து கொண்டி அதன் வாயிலான கதை சொல்லி வந்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழ் சினிமா உலகில் இந்த ஜேனர் பற்றி யாருக்கும் அக்கரையில்லைதான். எதைச் சொல்ல வேண்டுமானாலும் காதலின் வழியாகச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் அல்லது அப்படியான நிர்பந்தத்திற்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய தலைமுறை இயக்குனர்களும் இப்படியான கதைச் சூழலில் சிக்கிக் கொள்வது ஏன் என்றுத் தெரியவில்லை. அல்லது ஏற்கனவே சொன்னபடி வெற்றிப் படங்களின் சூத்திரங்களை பயன் படுத்துகிறார்கள் போழும்.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படத்திலும் காதலின் தோள்பட்டையில் துப்பாக்கியை வைத்து வலிக்காமல் சுட்டுத் தள்ள முயற்சித்திருக்கிறார். கலை எதுவாயினும் காண்பவர் அதில் ஈடுபடும்படியாக இருந்தால், அதில் ஒன்றிப் போகும் படியாக இருந்தால் நலமாக இருக்கும். ஆனால் சமீபமாக காட்டப் படும் காதல் கதைகளில் இவ்வாறாக ஒன்றிப் போகும் நிலை வாய்ப்பதே இல்லை.
ஒவ்வொரு கலைஞனுக்கும் ஊக்கமாக இன்னொரு கலைஞனோ அல்லது கலையோ இருந்து வந்திருக்கிறது. கலைஞனை விடவும் கலைதான் ஒருவனை ஊக்கப் படுத்தும் சாதனமாக இருந்து வந்திருக்கிறது, வருகிறது.
எண்பதுகளில் இந்தியாவில் புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் உருவாகி இந்தியத் திரையுலகம் மட்டுமன்றி உலக அளவில் இந்தியத் திரைப்படங்களின் மதிப்பை நிலை நாட்டினார்கள். ஆனால் இந்த புதிய அலை திரைப்பட இயக்குனர்கள் வரிசையில் தமிழகத்திலிருந்து விரல் விட்டு எண்ணும் அளவை விட குறைந்தவர்களே ஈடு பட்டிருந்தார்கள் ஆனால் அவர்களின் படைப்புகள் அவ்வளவாக ஆதரவு கிடைக்காத காரணத்தாலும் வட நாட்டுத் திரைப்படங்களை ஊக்குவித்து உலக அரங்குகளுக்கு அனுப்பியவர்கள் தமிழக திரைப்படங்களை மாற்றாந்தாய் பார்வையில் வைத்த காரணத்தாலும் இங்கிருந்த ஒரு சில நல்ல இயக்குனர்களின் பெயர்களைக் கூட தெரிந்து வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். இதே காலகட்டத்தில் பழிக்கு பழி வாங்கும் கதையொன்றை வைத்துக் கொண்டு, ஒரே இரவில் இரண்டு நாயகர்களை கடலை மாவில் முக்கி பஜ்ஜி போண்டா போடுவது போல் போட்டு திரைப்படங்களை ஒரு ஜனரஞ்சக நிலைக்கு தூக்கி நிறுத்தியது சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனம். அந்த நாயகர்களுக்காக அரைக்கப் பட்ட மசாலா சூத்திரங்களை புதியதாக வரும் தலைமுறை அறைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்தியா முழுவதும் தேடினாலும் நல்ல திரைப்படக் கல்லூரியைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் கடினம் தான் போலும் . அதே போல் ஏட்டறிவை முடித்து களத்துக்கு வரும் இளைய சமூகத்திற்கு உதாரணமாக இருந்து இயங்கும் திரைப்பட படைப்பாளிகளும் வெகு சிலரே. ஒரு திரைப்படம் இப்படி பின்னால் நின்று கொண்டிருக்கும் இளையவர்களுக்கு உதவ வேண்டுமென்ற அவசியமில்லை என்றாலும் ஏதோவொரு வகையில் அவர்கள் மூளையின் முடிச்சுகளில் அதிர்வுகளை உண்டாக்கலாம் இல்லையா.?
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படம் பழுதானப் படமில்லை. அதே சமையம் உலகத் தரம் என்று சொல்லும்படியானதும் இல்லை என்றேப் படுகிறது. நல்லப் படம்தான் . ஆனால் வியக்கும்படியாக பெரிதாய் விஷயங்கள் ஏதுமில்லைதான்.
ஏழையின் காதலை புனிதமாகவும், பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் காதலை காமமாககும் சித்தரித்திருக்கும் ஒரு கிளிஷேவான கதையைக் கொண்டது தான் இந்தப் படம். நாயகன் வேலு வட நாட்டில் ஒரு முறுக்கு ஆலையில் பணியாற்றுவதாகவும் அந்த முறுக்கு கம்பெனி முதலாளியை ஒரு கொடூரமானவனாகவும், பெற்ற பிள்ளையிடம் தாய் தந்தையின் மரணச் செய்தியை மறைப்பது போலவும் காட்டி முதலாளிகளின் முகமூடிகளை கிழித்து உள்முகத்தைக் காட்டியுள்ளார் என்பதற்காக சபாஷ் போடலாமா? உண்மையை மட்டும் பேசத் துடிக்கும் நாயகன் தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டு தியாக முகம் காட்டுகிறார், ஆனால் ஒரு முழுமையான கம்யூனிஸ்டாக இருந்து பொதுக்காரியங்களுக்காகவே வாழ்ந்து குடும்பத்திற்காக எதையும் செய்யாமல் போராடி செத்துப் போனவனின் மகள் அதான் நாயகி ஜோதி, தனது முகத்தில் அமிலம் வீசியவனைப் பற்றி எந்த அக்கரையும் கொள்ளாமல் அவன் யார் என்றுக் கூடத் தெரியாமல் அவளுக்கு எந்த வகையிலும் அறிமுகமாகத ஒரு சிறுவன் வந்து சொன்னதும் அமிலப் புட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள், இதற்காக பாலாஜிக்கு சபாஷ் போடலாமா? அவள் சம்பந்தப் பட்ட வழக்குக்கு ஒருநாள் கூட வரவில்லையே ஏன்? இதுதான் அவளுடைய அப்பா அவளுக்கு கற்றுத்தந்த கம்யூனிஷ பாடமா? பழிவாங்க ஓடிவரும் அவள் தன் சார்ந்த வழக்குக்கு ஒரு நாள் கூட வராதது ஏனோ?
இந்தத் திரைப்படத்தில் காட்டப் படும் இரண்டு வெவ்வேறு வித காதல்கள் மற்றும் இதில் ஈடுபடும் நான்கு கதாபாத்திரங்கள். இந்த நான்கு பாத்திரங்களும் பதின் வயதுக்காரர்களே, வேலுவுக்கு இயக்குனர் சொல்லிக் கொடுத்தபடி அந்தக் குறிப்பிட்ட வேலைக்கார பெண் மீது மட்டும் தெய்வீகமான ரீதியில் காதலை வளர்த்துக் கொள்ளுதல் அவ்வளவாக நம்பும் படியாக இல்லை. காதலை வேண்டுமானால் வளர்த்துக் கொள்ளட்டும் ஆனால் அந்த சாலை வழியாக பறந்து போகும் பாவாடை சிட்டுகளின் மீது பார்வை படாததற்கு காரணம் இயக்குனராக மட்டுமே இருக்க முடியும் ஆனால் இந்தக் கதாபாத்திரத்தை விட்டிருந்தால் பார்ப்பதையும் மீறி இயங்கியிருக்கும், காரணம் அந்தப் பாத்திரத்தின் வயதும் ஏக்கமும் அப்படி!
படம் முழுவதும் சொற்ப வசனங்களைப் பேசும் ஜோதி பாத்திரம் இறுதிக் காட்சியில் கடிதம் வாயிலாக கன்னகியின் சீற்றத்துடன் பேசித் தீர்க்கிறது. இதுவும் இயக்குனரின் ஆளுமையே. இது ஒரு எதார்த்தப் படம் என்பவர்கள் இந்தக் காட்சிகளை கண்டும் காணாமல் விட்டிருப்பார்கள் போலும். இதில் கிஞ்சித்தும் எதார்த்தம் இல்லை என்பது பச்சை உண்மை.
சமீபமாக நெகட்டீவ் கருத்துகளைத் தாங்கி வரும் திரைப்படங்கள் அதிகரித்து வருவதன் காரணம் என்னவென்றுத் தெரியவில்லை. வெற்றிப் படங்கள் அனைத்தும் ஏதோவொரு வகையில் நெகட்டீவான கருத்துகளையே கொண்டிருக்கின்றன. அவ்வாறான படங்களின் பட்டியலை வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
வழக்கு எண் 18/9 திரைப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டல் ஸ்டில் கேமராவில் பதிவு செய்யப் பட்டதை பாராட்டலாம் ஆனால் இதில் புதுமையில்லை. இது புதுமையென்று படத் தரப்பில் யாரும் சொல்லவில்லைதான் ஆனால் பெரும்பாலானவர்கள் இதைக் குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டிருப்பது வியப்பாகவே உள்ளது. கையடக்கமான கேமரா கிடைத்து விட்ட காரணத்தால் அதை எங்கு வேண்டுமானாலும் பொறுத்தி படம் பிடிக்கலாம் ஆனால் கதையோட்டத்திற்கு அவசியமா என்று பார்த்திருக்க வேண்டும்.
Point of view என்றொரு விஷயம். இது இந்தப் படத்தில் பயன் படுத்தப் பட்டிருக்கும் விதம் சினிமா இலக்கணத்தை மீறியதாகவே இருக்கிறது. இலக்கணத்தை மீறுவது குற்றமல்ல. செய்யட்டும் ஆனால் ’நான் நாளைக்கு சாப்பிட்டேன் மாமா’ என்று என் தங்கையின் மூன்று வயது மகள் மீறுகையில் ரசிக்கலாம். ஒரு பர்சின் POV எல்லாம் காட்சிப் படுத்தப் பட்டிருப்பது கொஞ்சம் ஓவர். ஒருவேளை அவர்கள் நான் சொல்லும் எண்ணத்தில் அதை எடுத்திருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்..
இப்படதின் திரைக்கதை அவ்வளவு ஆறுதலாய் இல்லைதான். அழகாய் இருக்கும் பெண்கள் அலங்காரம் செய்து கொள்கிறேன் என்று தங்களை அலங்கோலப் படுத்திக் கொள்வது போல் படத்திற்காக தேர்வு செய்து கொண்ட திரைக்கதைப் பாணி அலுப்புப் தட்டுவதாகவே உள்ளது. இந்த திரைக்கதை யுக்தி ஒரு சஸ்பென்ஸ் அல்லது ஹரொர் படத்திற்கு பொருந்தியிருக்கலாம்.
இந்தக் கதை நூல் பிடித்தார் போல் நேரடியாக சொல்லப் பட்டிருக்கலாம் என்றேப் படுகிறது. மற்றபடி தொழில்நுட்பம் பற்றி பெரிதாய் சொல்வதற்கு இல்லை.
குத்துப் பாட்டுகளை போட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இரண்டு பாடல்களை மட்டுமே அதுவும் பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பது வரவேற்கத் தக்கது. இதற்கு முந்தைய திரைப்படங்களிலும் பாடல்களை இவ்வாறே பொறுப்புடன் கையாண்டிருப்பது நல்ல விஷயம். பாராட்டலாம். தொடருங்கள் பாலாஜி.
இன்னும் கூட பல மாற்றங்களை பல்லைக் கடித்துக் கொண்டு தொடர்ந்து வருவாரேயானால் ஒரு தரத்தை எட்டி விட முடியும். அது உலகத்தரமா என்பது பற்றியெல்லாம் அக்கரை இல்லை. அப்படியான மாயையில் சிக்கவும் வேண்டாம்.
இப்படத்தில் அறிமுக நடிகர்களாக இருந்த போதிலும் நடிப்பில் ஒரு பக்குவத்தைக் காட்டியுள்ளார்கள், அல்லது இயக்குனர் தனது ஆளுமையால் அவர்களை அப்படி நடிக்க வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
ரோஸி அக்கா கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்தாலும் அது தனித்தே நிற்கிறது. திருநங்கைகள் எப்பொழுதும் எல்லோருக்கும் உதவும்படியானவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று காட்டி அவர்கள் மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் உண்டாக்க முயற்சிக்க்கும் இயக்குனர்களைப் பாராட்டலாம். ஆனால் அதுவும் கூட கிளிஷேவாகி விட்டதாகவே தோன்கிறது. எதார்த்தப் படங்களில் இவ்வாறான சறுக்கல்கள் தவிர்க்க முடியாதபடியாகி விடுவது வாடிக்கையாகி விட்டது.
திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் காட்சிகள் மூலமாக கதை நகர்த்தும் இயக்குனர் இன்னும் பல இடங்களில் வசனம் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக ஜோதி கதாபாத்திரத்தின் தந்தை ஒரு கம்யூனிஸ்ட் என்பதை காட்சியால் காட்டுகிறார். அதே சமயம் அவளுடைய அம்மா சதா சிடுசிடுவென்று கத்திக் கொண்டிருப்பதற்கான காரணத்தை ஒரு கடைக்காரரின் வசனம் மூலம் சொல்கிறார்.
இன்னொரு நாயகி ஆர்த்தியின் வீட்டில் கதவைத் திறக்கும் முன் லென்ஸ் துவாரம் வழியாக வெளியே பார்த்து விட்டு திறக்கும் ஒரு பழக்கத்தை உண்டாக்கச் செய்யும் போதே கண்டிப்பாய் அந்த கதவு நிலையில் ஒரு திருப்பம் உண்டாகும் என்று உணரச் செய்து விடுகிறார்.
திரைமொழியில் ஒரு பொருளை குளோஸ்அப்பாக காட்டி விட்டால் அந்தப் பொருளை கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும் என்று ஒரு நிர்பந்தத்தை திரையிலக்கணம் எழுதியவர்கள் குறித்து வைத்துள்ளார்கள். அவ்வாறு காட்டாத நிலையில் அது குழப்பத்தை உண்டாக்கலாம் என்பது அவர்களின் அபிப்ராயம்.
இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் தரையில் பாட்டில்கள் கிடக்க அதைத் தாண்டி காட்சி நகர்கிறது. அப்போதே பாட்டிலுக்கும் படத்துக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை உணர முடிந்தது. மூன்றாவதாக நீதி மன்ற வளாகத்தில் நாயகி ஜோதி காவல்துறை அதிகாரி மீது அமிலம் வீசி விட்டு நழுவவிடும் பாட்டில் காட்டப் படும் போது அந்த பாட்டில் விஷயம் முழுமையடைகிறது.
இரவு ஏழறை மணிக்கு மேல் பிறந்த நாள் விழாவுக்கு வீட்டுத் தொலைபேசியில் ஒரு பையன் தன் மகளை அழைக்கிறான் என்று கோபித்துக் கொள்ளும் அப்பா பாத்திரம் அதற்கு முந்தையக் காட்சிகளில் குறிப்பிட்ட பையனின் அம்மாவைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாதவராகவே இருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று சண்டை போட்டிருக்க வேண்டும். ஏனே அது நடக்கவில்லை என்றுத் தெரியவில்லை.
அரசியல்வாதியாக நடித்திருக்கும் நபரின் முகத்தை அழித்து அவரை அத்தனை அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவ பிம்பமாக காட்டியிருப்பது புதிய சிந்தனை. ஆனால் விளிம்பு நிலை பாத்திரங்களாக இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாகவும் மேல்தட்டு மக்களை கீழ்த்தரமானவர்களாகவும், கெட்டவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் சித்தரித்திருப்பது ஏனோ எதார்த்தத்தை மீறியதாகவே இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் மீறி ஒரு வார்த்தையில் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லப் போனால். இது மிகவும் நல்லப் படம். இப்படத்தின் இயக்குனர் நியாயமானவர். பொறுப்பானவர், சமூக அக்கரைமிக்கவர் என்பதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளலாம். அவருக்குப் பாராட்டுகள்.
ஒரு படைப்பு யாருக்காக உருவாக்கப் பட வேண்டும் , யாரைப் போய்ச் சேர வேண்டும், யாரிடமெல்லாம் எவ்வாறான அதிர்வுகளை உண்டாக்க வேண்டும் என்ற அக்கரையும் தெளிவும் ஒரு கலைஞனுக்கு அவசியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுக்குப் படுகிறது. அந்த வகையில் பாலாஜி சக்திவேல் பலமடங்கு அக்கரைக் கொண்டவர், வழக்கு எண் 18/9 படத்தின் அத்தனை சட்டங்களிலும் அவருடைய சமூக அக்கரை தெளிவாகத் தெரிகிறது.
இன்றைய சூழலில் வெளியாகிக் கொண்டிருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில், பாலாஜியின் படங்கள் தனித்து இருக்கின்றன, நிலைத்தும் இருக்கும்.
***
மதியழகன் சுப்பையா
madhiyalagan@gmail.com
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை