கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)

This entry is part 12 of 43 in the series 24 ஜூன் 2012

 

 

—————————-
+2க்குப் பிறகு
—————————-

+2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு.

சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். அதாவது பதினோராம் வகுப்புப் பாடத் திட்டம் மாணவருக்குப் போய்ச் சேருவதே இல்லை. இதன் பின் விளைவு ‘என்ஜினீயரிங்’ படிப்பில் முதலாண்டில் பல பாடங்களை மாணவர்களால் சரிவரப் புரிந்து கற்றுக் கொள்ள இயலுவதில்லை. இதற்குக் காரணம் பல அடிப்படை விஞ்ஞான, கணிதப் பாடங்கள் +1 பாடத்திட்டத்தின் அடுத்த கட்டமாய் ‘என்ஜினீயரிங்” முதலாமாண்டில் வருகின்றன.

‘என்ஜினீயரிங்’ படிப்புப் பாடத் திட்டம் அண்ணா யுனிவர்சிடி , நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஒப்பிடுமளவுக்கு இருக்கும். ஐ ஐ டியின் தரம் சற்றே அதிகமாயிருக்கும். எந்த ‘என்ஜினீயரிங்’ ஆக இருந்தாலும் 11ம் வகுப்புப் பாடத் திட்டம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு மட்டிம் படித்து விட்டு வரும் மாணவருக்குப் பெரும் சவாலாக அமைகிறது. தவிரவும் ஆங்கிலத்தில் பேசும் நகர்ப்புற மாணவருக்கு முன் கிராமப்புற மாணவர் தன்னம்பிக்கை இழக்கின்றனர்.

இவ்வாறாகத் தொடக்கத்திலிருந்தே ‘பாஸ் மார்க்’ வாங்கவே போராடும் மாணவர்கள், நல்ல ‘கிரேட்’ (மதிப்பெண்) வாங்க இயலாமற் போவதற்குப் பழகி விடுகின்றனர்.

‘என்ஜினீயரிங்’ இறுதி வருடத்தில் ‘கேம்பஸ் இன்டர்வியூவு’க்கு நிறுவனங்கள் வரும் போது, ‘கிரேட்’, நல்ல ஆங்கிலம், சரளமாக உரையாடும் திறன் இவையே நேர்முகத் தேர்வில் முக்கியமாக இருக்கின்றன. ‘கேம்பஸுக்’கு வரும் நிறுவனங்கள் முதல் தர (க்ரீம்) மாணவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்னும் போது நான்கு வருடப் போராட்டத்துக்கும் – பின் வரும் வேலை வாய்ப்புக்கும் பன்னிரண்டு வருடப் படிப்பு எந்த அளவு உதவியது என்னும் கேள்வி பிரம்மாண்டமாக மாணவர் முன் எழுகிறது.

‘என்ஜினீயரிங்’ படிப்புக்கும் ‘ட்யூஷன்’ வந்து விட்டது. ‘ப்ராஜக்ட்’டுகளில் ‘கம்ப்யூட்டர் ஸயின்ஸ்’ மற்றும் ‘ஐடி’ படிப்புக்களில் அசலான ‘ப்ராஜக்ட்’ செய்வோர் மிகக் குறைவு. மாணவர்கள் பிற கல்லூரி நண்பரின் ‘ப்ராஜக்ட்’டை நகலெடுப்பதோ இல்லை வெளியே ஜெராக்ஸ் கடை அல்லது ‘பிரௌஸிங் சென்ட’ரில் விலைக்கு வாங்கிக் கல்லூரியில் சமர்ப்பிப்பது சர்வ சகஜம்.

இவை அத்தனைக்குமான பின் விளைவு ஒரு “ஐடி” நிறுவனப் பணியில் சேரும் போது தான் மாணவருக்குக் கண்கூடாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா என்னும் கேள்வி ஒரு புறமிருக்க, ஏட்டுப் படிப்பையே அரைகுறையாய்ப் படித்து விட்டு வரும் மாணவர்களுக்குப் பணியில் தொடருவதும் ,வெற்றி பெறுவதும் எளிதாயிருப்பத்ல்லை.

12+4=16 வருடம் படித்த படிப்பு இப்படியாக, அனேகமாக மூன்றில் ஒரு பங்கு மாணவரையே வேலையில் அமர்த்துகிறது. எஞ்சியவர் காத்திருக்கவும், திறனை மேம்படுத்திப் போராடி, வெல்லவும் உண்டான ஆளுமைக் கூறுகளுக்கு அந்தப் படிப்பு வழி செய்ததா என்பதே பெரிய கேள்வி.

அண்ணா பல்கலைக் கழகத்தின் குறைந்த பட்ச கட்டணத்துக்கு இடம் தரவும், “கேபிடேஷன் ஃபீஸ்” கேட்காமலேயே இடம் தர முன் வந்தும் பல தனியார் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. பணம் மட்டும் வில்லன் என்னும் கருத்து தவறானது. ‘என்ஜினீயரிங்’ படிப்பில் வேறு சில பெரிய சவால்கள் உள்ளன.

லட்சக் கணக்கான என்ஜினீயர்கள் வருடா வருடம் வெளி வரும் போது நூற்றுக் கணக்கான தொழில் முனைவர் கூட ஏன் அவர்களுள் இல்லை?

16 வருடப் படிப்பு, பல லட்ச ரூபாய் செலவு பெற்றோருக்கு என்னுமளவு எடுத்துக் கொண்ட சிரமம், உழைப்பு எல்லாமே வீணா?

‘அறிவே அதிகாரம்’ என்பார்கள். கல்வி கற்றவர் மற்றவரிடமிருந்து உயர்ந்து வலுப்பெற்று நிற்பதற்கு அடிப்படை கல்வி தரும் தன்னம்பிக்கையே. ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவதுடன், பெரும்பாலன துறைகளின் அடிப்படையைக் கற்க வழி செய்வதாகவே ‘என்ஜினீயரிங்’ பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. எந்தப் பிரிவில் படித்தாலும் அந்தத் துறையில் சுய தொழில் அல்லது வேலை வாய்ப்பை அந்தப் படிப்பு உறுதி செய்ய வேண்டும்.

அப்படி இல்லையே என்னும் போது சில கேள்விகள் எழுகின்றன:

1.மாணவனுக்கு, தான் எடுத்துக் கொண்ட துறையின் நடப்பு விஷயங்கள் தெரியுமா? அதாவது அந்தத் துறையில் தான் எந்த மாதிரி பங்களிப்பு செய்து, எங்கே பொருந்தி வருவாய் ஈட்ட முடியும் என்று தெரியுமா?

2.ஒரு படிப்பைத் தேர்வு செய்யும் முன் மாணவனோ அல்லது பெற்றோரோ அவனது திறமைகள் என்ன – அவனது விருப்பங்கள் என்ன என்று நிதானித்து சிந்திக்கிறார்களா?

3.’என்ஜினீயரிங்’ பட்டப் படிப்பை முடித்த பிறகு ஐந்து ஆண்டுகளில் இந்த மேற் படிப்பு / இந்தத் தொழில் / இந்த வேலை வாய்ப்பு என்று ஒரு திட்டம். அதே சமயம் பத்து ஆண்டுகளில் இது என் இலக்கு , பதினைந்து ஆண்டுகளில் இது என் லட்சியம் என்னும் திட்டங்கள் ஒரு மாணவன் மனதில் உண்டா?

4.தன்னம்பிக்கை, படித்த படிப்பு பற்றிய தெள்ளிய அறிவு, தன் படிப்பு சார்ந்த தொழில் துறை நிலவரங்கள் பற்றிய விழிப்பு ஏன் படிப்பின் முடிவில் மாணவனிடம் காணப்படுவதில்லை?
(தொடரும்)

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -14கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
author

சத்யானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    punai peyaril says:

    உருப்படியான ஒரு தொடர்.. இந்த லட்சணத்தில் அண்ணா ப.கவில் கவர்னர் கோட்டா என்று ஒன்று இருந்தது… 15இடம். மேலும், அ.ப வில் , ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தால் 85% பேர் தேறுவார்களா என்பது கேள்விக்குறி… எல்லாரும் வாந்தி எடுக்க வாஷ்பேசின் தேடுவார்கள்… வாத்தியார்கள் வகுப்ப்புக்கு போவார்கள் என்று தான் பலர். இன்னும் ஒரு ஐந்து வருடம் போனால் செக்க்யூரிட்டி வேலைக்கு கூட இஞினியர்கள் வருவார்கள்…

  2. Avatar
    sathyanandhan says:

    நன்றி, தங்கள் பின்னூட்டத்தில் உள்ள கருத்து கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒன்று. ஆசிரியரகள் எந்த அளவு தமது தொழிலில் (குறைந்த பட்சம் தாம் எடுக்கும் பாடத்திகல்) வல்லவராகவும் தற்போதைய தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சி பற்றி அறிவுள்ளவராகவும் இருக்கிறார் என்பதற்கு ஒரு தேர்வு மூன்று நான்கு வருடத்திற்கு ஒரு முறையாவது நடத்தப்பட்டு 50% க்கும் குறைவாக வாங்கும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பப் பட வேண்டும். பகுதி நேரத்தில் மேற்படிப்புப் படித்த யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அண்ணா பல்கலைக் கழத்தையும் சேர்த்து பல நிறுவனங்களின் ஆசிரியர் நல்ல விஷயஞானமும் ஈடுபாடும் அற்றோரே. அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *