தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

முனைவர் மு. பழனியப்பன்

Spread the love

நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை நாங்கள் வந்திருந்தபொழுது ‘‘என்னையும் என் தங்கையையும் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள்’’என்றார். அந்தச் சில நாள் இடைவெளியில் நானும் என் தங்கையும் எங்களுக்குத் தெரிந்த சில மழலைப்பாடல்களை அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னிலையில் பாடுவதற்குத் தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக

தென்னைமரத்தில் ஏறலாம்

தேங்காயைப் பறிக்கலாம்

புளியமரத்தில் ஏறலாம்

புளியங்காயைப் பறிக்கலாம்

மாமரத்தில் ஏறலாம்

மாங்காயைப் பறிக்கலாம்

வாழைமரத்தில் ஏறலாம்

வழுக்கி வழுக்கி விழலாம்

என்ற அழ. வள்ளிப்பா அவர்களின் பாடலை நானும் என் தங்கையும் ஓருசேரப் பாடிப் பழகினோம். அதில் இருந்த நகைச்சுவை  இளமைப் பருவத்தில் அப்பாடலை அதிகமாக எங்களை நேசிக்கவைத்தது. அதிலும் மாம்பழமாம் மாம்பழம் என்ற பாடல் எங்களுக்கு அப்பொழுது ஒன்றாம் வகுப்புப் பாடத்தில் வந்த்து. புத்தகத்தில் உள்ள ஒருவரை நேராகப் பார்க்கப்போகிறோம் என்ற புதிர் என்னுள்ளத்தில் எழுந்து ஒரு மகிழ்ச்சியை அளித்தது..

 

ஒரு இளங்காலையில் நாங்கள் அழகாக ஆடை அணிந்து கொண்டு அழ. வள்ளியப்பா அவர்கள் இருந்த காரைக்குடி வீட்டிற்குச் சென்றோம். அது சிறிய வீடு. முன்பகுதியில் சிறு சிறு கட்டம் கட்டமாக கம்பிச்சன்னலை உடைய வீடு அது. அந்தவீட்டில் இருந்து எங்களைப் போல அழகான சட்டையெல்லாம் போடாமல் இயல்பாக இருந்த வள்ளியப்பா  அவர்கள் என்னையும் என் தங்கையையும் அப்பாவையும் வரவேற்றார். அப்பாவை அவருக்கு முன்னமே தெரிந்து இருந்ததால் அவர் பற்றிய அறிமுகம் தேவைப்படவில்லை என்று எண்ணுகிறேன். எங்களை அப்பா அவருக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு நாங்கள் வள்ளியப்பா முன்னால்  ஒருசேர சில பாடல்களைப் பாடினோம். அதைக் கேட்டு மகிழ்ந்த வள்ளியப்பா அவர்கள் எனக்கொரு நூலையும் என் தங்கைக்கொரு நூலையும் அவர்கள் எழுதின சிறுசிறு குழந்தைப்பாடல்கள் அடங்கியதை அளித்தார். எனக்களித்த புத்தகத்தில் தேர் ஓட்டும் ஒரு சிறுவன் படமும் பாடலும் இடம் பெற்றிருந்த்து. அந்தக் காட்சி என் மனதில் ஆழப் பதிந்து பின்னாளில் நானும் தேர் ஓட்டி விளையாடியிருக்கிறேன் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கையில் என் குழந்தை மனத்தில் ஒரு கவிஞரின் சந்திப்பு ஏற்படுத்திய தடங்களை உணர முடிகின்றது.

நீண்ட நாளைக்கு அந்தப் புத்தகங்களை நாங்கள் படித்து மகிழ்ந்தோம். ஆனால் இப்பொழுது என் குழந்தைகளுக்கு கொடுக்க அந்தப் பிரதிகள் இல்லை என்பது கவலையாகத்தான் இருக்கிறது,

 

இருப்பினும் ஆண்டுதோறும் அவள் மகளார் நடத்தும் குழந்தைக் கவிஞர் விழாவில் கலந்து கொள்ளும் பேறு தற்பொழுது கிடைத்து வருகிறது. எளிய இனிய பண்பாளர் குழந்தைக் கவிஞர் என்பதில் என்ன சந்தேகம்.

——–

 

Series Navigationதிருடுப் போன கோடாலிதப்பித்து வந்தவனின் மரணம்.

One Comment for “குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்”

 • Ravi says:

  மிக நல்ல பதிவு நன்றி
  மிக நல்ல மனிதர் அவர் .
  நான் +2 நாட்களில் விளையாட்டாக ஹஹ்ஹஹா என்று ஒரு
  கையெழுத்து பத்ரிகை துவங்கி நண்பர்களுடன் எழுதலானேன்

  அக்கம்பக்கத்தில் அதற்கு இனிய வரவேற்பிருக்க , மூன்று நான்கு பிரதிகள் எழுதி circulate செய்யும் அளவு
  ஆர்வமாய் உழைத்தோம்

  ஒரு நாள் அதை circulate செய்யும் நண்பன் வெங்கட், ‘டே உன்னை அழ வள்ளியப்பா பாக்கணும் வரச் சொன்னார் டா ‘ என்றான் ! எனக்கு அப்போதுதான் அவர் காரைக்குடி -இல் வசிக்கிறார் என்று தெரிய வந்தது .

  நியூ-டவுன் (தற்போது திருவள்ளுவர் திருநகர ) வீட்டுக்கு நாலைந்து சாலை தள்ளி இருந்த அவர் வீட்டுக்கு போனோம் .

  மிகவும் அன்புடன் வரவேற்று பாராட்டி பேசிக்கொண்டிருந்தார் அந்த பெருந்தகை.

  உயர்ந்த மனிதர் .


Leave a Comment

Archives