நினைவு

This entry is part 30 of 43 in the series 24 ஜூன் 2012

மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர்

ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி

 

திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் கிடைக்கின்றன.  மேடையின் ஒருபுறம் உயர்ந்த சாய்மானம் கொண்ட சிம்மாசனம் போன்ற இரு நாற்காலிகள் இருக்கின்றன.  இந்த நாற்காலிகளிலும் ஒரு ஆணும் ஒரு பெண்மணியும்  ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.  பெண்மணிக்கு   35 வயது இருக்கும். ஆணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம்.

இரு நாற்காலிகளுக்கு எதிரில் சற்றுத் தள்ளி இடப்புறமாக ஒரு ஃபோகஸ் லைட் ஒளிர்கிறது.  நாற்காலியில் அமர்ந்து இருக்கும் பெண் எழுந்து   அந்த  ஃபோகஸ் லைட்டின் கீழ் நிற்கிறாள்.  நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஆண் சிலையைப் போல உறைந்து  இருக்கிறான்.  அவன் இருக்கும் பகுதியில் வெளிச்சம் முன்னைப் போலவே மிகவும் மங்கலாக இருக்கிறது.

பெண்மணி பேசத் துவங்குகிறாள்.  மேடையில் அமர்ந்து இருக்கும் ஆண் மற்றும் பார்வையாளர்களை நோக்கி அவளுடைய பேச்சு அமைந்து இருக்கிறது.

பெண்மணி: அதோ… அந்த நாற்காலியிலே ஒரு கல்லு உட்கார்ந்துக்கிட்டு இருக்கு.  சாதாரண கல் இல்லே.  ரொம்பப் புராதனமான கல்.  இல்லே… இல்லே… இன்னும் அந்த ஆளு இன்னும் முழுசா கல்லா மாறலே.  (பேச்சை மாற்றி) நான் ஒரு சமஸ்தானத்துலே இருந்து வந்திருக்கேன்.  இல்லே.  இல்லே… நான்  ஜமீன் பரம்பரையில் வந்த  கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பொண்ணு.  அப்புறம்… அங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கிற அந்த ஆளோட காதலி.  ஜமீன் பரம்பரைன்னு சொன்னா ரொம்பவுமே கௌரவமா இருக்கு இல்லையா?  ஆனா… நான் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவள்.   அப்புறம்… சரி. விடுங்க,   எல்லா கதையும் சொல்லி உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.  (திடீரென்று) ஆமாம்… எங்களோட இந்த மாளிகை பிரம்மாண்டமா இருக்கு இல்லை?  ஆகாசத்தைப்  போல ஒரு பிரம்மாண்டம்.  இல்லையா?  இந்த அதி பிரம்மாண்ட   மாளிகையிலே நாங்க வெறும் நாலைந்து பேர் மட்டும்தான் இருக்கோம்.

அதோ… அங்கே இருக்கிறது எங்களோட அரண்மனைத் தோட்டம்.  ஆனா எப்போதுமே இங்கே குல்மொஹர் பூத்தது கிடையாது.  (தொனி சற்று தீவிரமடைகிறது)  இந்த மரமல்லிப் பூவிலேயும் செண்டுமல்லிலும்  வாசமே இல்லை.  பொதுவா, செண்டுமல்லி எப்போவுமே ரொம்ப அதிகமாக இருக்கும்.  மூக்கைத் துளைக்கிற ஒரு வாசம்.  சில நேரங்களிலே அந்த வாசம் உங்களை அப்படியே தூக்கி எறிஞ்சிடும்.  டெர்ரா பூ மட்டும்தான் இங்கே கிடைக்குது.  ஆனா அந்தப் பூவோட வண்ணம் இருக்கு பாருங்க… அது ஒரு அஞ்சு, நாலு, இல்லை மூணு… வெறும் மூணு நாளைக்குத்தான் அந்தப் பூவோட வண்ணம் தங்கி இருக்கும்.  அது ஏதோ என்னோட காதலுக்கு எதிரி மாதிரி என்னை ரொம்பக் கசப்பா பார்த்துக்கிட்டே இருக்கும்… ம்ம்ம்…

இந்த வாடிப்போகிற செண்டுமல்லி  இருக்கே… (உரக்க சிரிக்கிறாள்) என்ன சொன்னேன்?  காதலுக்கு எதிரியா?  இல்லே… என்ன இது என்னமோ ரொம்ப சீரியஸா போயிக்கிட்டு இருக்கு?  சரி. அங்கே எங்க கோயில் இருக்கு.  எங்களுக்கு சொந்தமான கோயில் அது.  ஏன்னா எங்களோடது ஜமீன் பரம்பரை.  அப்புறம் வழக்கமா எல்லா மாளிகைலேயும் இருக்கும் பூந்தோட்டம் அங்கே இருக்கு.  துளசி மாடம் இருக்கு.  இது என்னோட மாளிகை.  ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு இல்லையா?  இந்த சுவத்துலே மினுக்குகிற ஒவ்வொரு கல்லும் அதுக்கு உள்ளே புதைஞ்சு இருக்கிற சிமெண்டை வெளிக்காட்டிக்கிட்டு இருக்கு.  (மீண்டும்  சாதாரண தொனியில்) இந்த டெர்டா பூவோட மணம் எத்தனை நாளைக்கு இருக்கும் தெரியுமா?  மூணு… இல்லை… இல்லை… மூணு இல்லை.  வெறும் ரெண்டே நாள்தான்.  என்னோட வாழ்க்கையின் வர்ணங்கள்… சரி. விடுங்க.  என்னோட வாழ்க்கை என்னமோ வெளிறிப்போச்சு.  என்னோட வாழ்க்கை எந்தவிதமான வர்ணமும் இல்லாமல்… வெளிறிப் போய் இளிச்சிக்கிட்டு நிக்குது.  (மேடையில் அந்தப் புறம் அமர்ந்திருக்கும் ஆணை சுட்டிக் காட்டிப் பேசுகிறாள்)  அங்கே இருக்கிற அந்த ஆளு… ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கே வந்து இருக்காரு.  ஏங்க… கேக்கறீங்களா?  நான் ஒண்ணும் இங்கே வசனம் பேசிக்கிட்டு நிக்கலே…

(அந்த ஆள் அவளுடைய பேச்சுக்கு எதிர்வினை எதையும் காட்டுவது இல்லை.  சிலையைப் போல உறைந்து  இருக்கிறான்.)

சரி.  எனக்கு அவரு யாரு?  அவருக்கு நான் யாரு?  அவரோட தம்பி எனக்கு… சரி… விடுங்க.  ஒண்ணும் இல்லை.  நான் இன்னும் எதையாவது சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் வாய்விட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிடுவேன்… அதை என்ன சொல்றது?  ஒப்பாரியோ என்னமோ..  அப்புறம் நான்…

 

விளக்குகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன.  பெண்மணி மீண்டும் ஆணுக்குப் பக்கத்தில் இருக்கும் தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொள்கிறான்.

ஆண்: நான் அவளைக் காதலிச்சேன். அதைத்தானே அவளும் சொல்றா?  ஆனா எனக்கு எதுவுமே நினைவுக்கு வரமாட்டேங்குதுன்னு அவ புரிஞ்சிக்க மாட்டேங்கறா.  இது அவளோட பாழடைஞ்ச மாளிகை. எனக்கு இங்கே மூச்சுத் திணறுது.  ஒவ்வொரு ராத்திரியும் நரிகளோட ஊளை அதி பயங்கரமா இருக்கு.  இந்தப் பாழும் நிலம் பாலைவனத்தைப் போல தரிசா போச்சு.  எதுவும் இங்கே விளையாது.  ராத்திரி மழை பெய்யறப்போ அந்த நரிகள் எல்லாம் தங்களோட தொண்டை கிழிஞ்சு போற மாதிரி ஊளையிடுது.  இங்கே   வெறும் கோரைப்புல்லுதான் விளையுது.  கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே இங்கே ரொம்ப புழுக்கமா இருந்தது.  இப்போ என்னடான்னா முதுகுத்தண்டுலே சில்லுன்னு நடுக்கம் ஏறுது.  (குளிரில் நடுங்குகிறான்).  எனக்கு என்னமோ காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு,  படுத்துக்கிட்டு என்னோட நெத்தியிலே நானே பத்துப் போட்டுக்கணும்.  இந்த வீட்டுலே எல்லா எழவையும் நானே எடுத்துக்கணும்.  (பெண்மணியிடம்) ஹலோ… மேடம்.  கேக்குதா?  நான் ஒண்ணும் இங்கே என்னோட வசனத்தைப் பேசிக்கிட்டு இருக்கலை.    இந்த வல்லூறு கிட்டே எனக்கு பயம் அதிகம்.  அவளோட கண்கள் இருக்கே.  அதுலே அந்த வல்லூறு இருக்கு.  பூச்சாண்டி கிட்டே பயப்படுகிற குழந்தை மாதிரி நான் அவளுக்குப் பயப்படுறேன்.  ஏன்னா… ஏன்னா… (உரக்கச் சிரிக்கிறான்) எனக்குப் பழசு எதுவுமே ஞாபகத்துலே இல்லை,  என்னுடைய நினைவுகள் எல்லாம் சுத்தமா அழிஞ்சு போச்சு.

இருட்டு.

மெல்ல வெளிச்சம் திரும்புகிறது.  வெற்று மேடை.  வழக்கமான விளக்கு அமைப்பு.  சற்று தூரத்தில் அந்தப் பெண் சிரிக்கும் ஒலி மெல்லத் துவங்கிப் பிறகு பெரிதாகிறது.  அரங்கின் உட்பகுதியில் இருந்து அவள் மேடையில் பிரவேசிக்கிறாள்.  மேடையைச் சுற்றி சாவதானமாக நடக்கிறாள்.  அவள் பேசத்துவங்கிய பிறகு ஆண் மேடையில் பிரவேசிக்கிறான்.  அவனுடைய அசைவுகள் செயற்கையாக இருக்கின்றன.

பெண்மணி:  எங்களோட இந்த மாளிகை இருக்கே… ரொம்பப் பிரமாதமா இருக்கு.  அதாவது நான் சொல்ல வர்றது என்னன்னா ஒண்ணுமே இல்லாததுக்கு ஏதோ ஒண்ணு பிரமாதம்தான் இல்லையா?  இது உன்னோட அறை.  அதாவது உன்னோட ராஜமாளிகை.  இங்கேருந்து நீ போனதுக்கு அப்புறம் இங்கே யாரும் எதையும் தொடல்லை.  நீ வர்றேன்னு நான் கேள்விப்பட்டபோது….

ஆண்:  என்னை இங்கே அழைச்சிக்கிட்டு வந்தாங்க…

அமைதி.

பெண்மணி:  ஏய்…

ஆண்:  ம்…

 

பெண்மணி: ஏய்… ஏதாவது சொல்லேன்…

ஆண்:  ஏதாவது சொல்லணும்னு தான் நானும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பெண்மணி:  (சிரித்துக் கொண்டே) பிரமாதம்.  ஒரு முழு வார்த்தை பேசிட்டியே…

ஆண்:  (எதையோ சொல்ல முயற்சிக்கும் பாவனையில்) ஓஹோ… இதுதான் உன்னோட மாளிகையோ?  பிரமாதம்.  ரொம்பப் பிரமாதம்.  (திடீரென்று) வேணாம்… வேணாம்.   நான் எதையும் சொல்ல வேணாம்னு பார்க்கிறேன்.

பெண்மணி:  இப்போ  ஒரு நொடிக்கு முன்னேன் நீ என்ன சொன்னே?

ஆண்: ஒண்ணுமில்லை,  எதைப்பத்தியும் எதுவும் சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்.

அமைதி

பெண்மணி: ஏய்… எதையாவது சொல்லேன்.  எனக்கு போரடிக்குது.

அமைதி.  அவன் எதுவும் சொல்லுவதில்லை.

பெண்மணி: ஏய்… ஒரு தமாஷான விஷயத்தை உனக்குக் காண்பிக்கட்டுமா?    பீரோ… பீரோவைப்  பார்க்கணுமா உனக்கு?  அகலமா… சதுரமா… பழுப்பு நிறத்துலே..கோத்ரேஜ்…   ரெண்டு பூட்டு இருக்கு அதுக்கு.  அகலமா… சதுரமா… பழுப்பு நிறத்துலே கதவு.  ஆனா, எந்த அலமாரி வாங்கிட்டு வந்தாலும் என்னோட ரகசியமான லாக்கர் மட்டும் எப்பவும் திறக்கவே இல்லை.  எப்போ எல்லாம் அதைத் திறக்கணும்னு நினைச்சாலும நான் யோசிச்சுப் பார்ப்பேன்.  ஆனா ரொம்ப லேட்… அந்த அலமாரியோட ரகசியக் கதவுக்கான சாவி தொலைஞ்சு போச்சு.  ஆனா ரகசியமான லாக்கர் இல்லைன்னா வெறும் அலமாரிக்கும் பீரோவுக்கும் என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது?  எல்லாம் ஒண்ணுதானே?

அமைதி

பெண்மணி:  உனக்கு பீரோவை பார்க்கணுமா?  வேணாம்னா வேணாம்னு தெளிவா சொல்லு.  சீக்கிரம்…

அவன் எதுவும் சொல்வதில்லை.

பெண்மணி: காதல்… (சிரிக்கிறாள்) யாரையாவது நீ காதலிச்சிருக்கியா?

அவன் தலையாட்டுகிறான்.

ஆண்:இல்லை.   இன்னிக்குக் கண்டிப்பா மழை பெய்யாதுன்னு எனக்குத் தெரியும்.

பெண்மணி: இல்லைன்னு தெளிவாச் சொல்லு…

ஆண்:  (வேண்டா வெறுப்பாக) இல்லை…

பெண்மணி: இல்லை… (உரக்கச் சிரிக்கிறாள்)  இல்லை… திரும்ப நல்லா யோசிச்சு சொல்லு.  உனக்கு எப்படித் தெரியும்?  ம்?  உனக்குத்தான் எதுவுமே ஞாபகத்துலே இல்லையே… உன்னோட ஞாபகசக்தி எல்லாம் தொலைச்சிக்கிட்டு நிக்கிறே.  அப்புறம் யாரையாவது காதலிச்சி இருக்கியான்னு உனக்கு எப்படித் தெரியும்?

ஆண்: (அமைதியாக) போ… போய்த்தொலை…

பெண்மணி: (எரிச்சலுடன்) என்ன?

ஆண்:  ஒண்ணுமில்லை.  போய்த்தொலையேன்.  வேணாம்.  நீ போகாதே.  நான் போறேன்… நான் போகணும்.  நான்தான் போகணும்.  நான்… நான்… என்னைத் தனியா விட்டுத் தொலையேன்.  (சத்தம் போட்டுக் கத்த விரும்புகிறான்.  “போய்த் தொலை…  ஆனால் மிருதுவான குரலில்தான் பேசமுடிகிறது)  போ… போய்த் தொலை.

அமைதி

பெண்மணி: (சிறுமியைப் போன்ற குரலில்… குழந்தைத்தனம் பொங்கும்  குரலில்) ஏய்… அப்படி எல்லாம் சொல்லக் கூடாது.  (தீவிரமான குரலில்)  ஏய்… ஏன் என்னை அப்படிப் பார்க்கிறே?

ஆண்:  போயிடு.  நீ நினைக்கிற ஆளு நான் இல்லை.

அமைதி

பெண்மணி: (நக்கலாக) பயந்துட்டியா?

ஆண்:  (தவிர்க்க இயலாத பாவனையில்) என்ன?

பெண்மணி:  இல்லை… ஒண்ணுமில்லை.  நீ எதையோ பார்த்து பயந்துக்கிட்டு இருக்கே.  பேயோ அல்லது உன்னோட நிழலோ… ஏதாவது முயல் குட்டி அல்லது பெரிய ராட்சசியாகவும் இருக்கலாம்.  அதுதான் இந்த விளக்கு இருக்கே.  பிரகாசமா… இருட்டைக் கிழிச்சிக்கிட்டு, ரொம்ப தூரம் வரைக்கும் பாயற ஒளி.  நிழல் பிரம்மாண்டமா வளர்ந்துக்கிட்டு இருக்கு.  அந்த நிழலோட கை பிரம்மாண்டமா வளர்ந்துக்கிட்டு வருது.  நம்ம கைகள் அந்த நிழலோட கைகோர்த்து அணைச்சிக்க முயற்சி பண்ணுது.  அப்புறம் அந்த வெளிச்சம் ரொம்ப உயரமா… மேலே… மேலே… அந்த அம்புலி மாமா வரைக்கும் வளர்ந்துகிட்டுப் போகுது.

அமைதி

பெண்மணி: இன்னிக்கி ராத்திரி நிலா வெளிச்சம் ரொம்ப அழகா இருக்கு இல்லையா?

அமைதி

பெண்மணி: என் மேலே எதுக்கு இத்தனை வெறுப்போட இருக்கே?

ஆண்:  நான்… (சிரிக்கிறான்) எனக்கு,,, எனக்கு,,, யாரையும் வெறுக்கத் தெரியாது.

பெண்மணி: (புகைச்சலுடன்) அப்போ வேறே என்ன தெரியும் உனக்கு?

அமைதி

பெண்மணி: (புகைச்சலுடன்) அப்போ வேறே என்ன தெரியும் உனக்கு?

ஆண்: (சிறிது யோசனைக்குப் பிறகு) சிரிக்கத் தெரியும்.

பெண்மணி:  (வேண்டா வெறுப்போடு) ஹ்ம்…

ஆண்:  சிரிப்பு… என்னைப் பார்த்து நீ சிரிச்ச விதம் எனக்குப் பிடிக்கலை.  நிஜமா எனக்குப் பிடிக்கவே இல்லை.

பெண்மணி:  இப்போ நான் அழட்டுமா?  இதோ பாரு.  ரொம்ப நாளைக்கு அப்புறமா, பெரிய இடைவெளி விட்டு நாம சந்திச்சு இருக்கோம்.  என்ன செய்யட்டும் சொல்லு.  நான் சிரிக்கட்டுமா?  இல்லை.  அழணுமா?  (சிரிக்க முயற்சி செய்கிறாள்)  இல்லை… நீ மாறவே இல்லை… தலையிலே கொஞ்சம் நரை விழுந்திருக்கு.  எனக்கும் ஒருநாள் நரைக்கலாம்.  (தனக்குத்தானே) அப்புறம் என்னையே கொஞ்சம் நல்லா பாரேன்.  நான் மாறி இருக்கேனா?  (கைப்பையில் இருந்து ஒரு சிறிய கண்ணாடியை எடுக்கிறாள்)  என்னோட கண்கள்… கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் விழ ஆரம்பிச்சு இருக்கு.  சிலந்தி வலையா சுருக்கங்கள்.  அங்கே சிலந்தி கிடைக்காது.  சிலந்தியைப் பிடிக்க முடியாது.

அமைதி

ஆமாம்.  நான் மாறிட்டேன்.  நீ அந்தக் கோணத்துலே பார்த்தா நான் மாறிப் போயிட்டேன்.  பெரிய மாற்றம்.  தாலி அளவுக்குப் பெரிசா… (தாலியைப் பிடித்துக் கொள்கிறாள்)

ஆண்:  (திடீரென்று)  நீ அவனோட காதலியா இருந்தியா?

பெண்மணி:  உனக்கு யார் சொன்னது?

ஆண்:  உன்னோட ஆளு… அதாவது உன்னோட புருஷன்.

அமைதி

பெண்மணி: (யோசனையுடன்) ரொம்ப விசித்திரமா இருக்கு.  ஒரே சிக்கலா இருக்கு.  அந்த சிக்கலை விடுவிக்க முடியலை.  ரொம்ப இறுகிக்கிட்டே இருக்கு,  என்னோட புருஷன் உன்னோட அண்ணனா இருந்தாலும்… எனக்கு நீ வேணும்… அப்போ வேண்டியிருந்த அதே மாதிரி இப்போவும் எனக்கு வேண்டியிருக்கு. என்னாலே எதையும் புரிஞ்சிக்க முடியலை.  இதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியலை.  நடந்தது அப்படியே இருக்கட்டும்னு என்னாலே விட முடியாது.  அப்படி விட்டா பெரிய அடியா விழும் எனக்கு.  பெரிசா காயப்படுவேன்.  பீஸ் பீஸா கிழிஞ்சி போவேன்.  ஆனா இப்படிப் புதுசா…  அதைத்தான் ஏத்துக்க முடியலை.  (விரக்தியில் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்)

ஆண்:  ரெட்டை வேஷம்.

பெண்மணி: (அக்கறையின்றி) என்ன?

ஆண்:  இதை நான் ரெட்டை வேஷம்னுதான்  சொல்வேன்.

பெண்மணி: (திடீரென்று) என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ.  நீ… நீ.. பேசிக்கிட்டே போ. வேறு எதையும் செய்ய வேணாம்.  ஆனா… ஆனா… அதை நான் எப்படிச் சொல்றது?  திரிசங்கு?  அப்படி சொல்லலாமா?  அப்படி ஆயிட்டேன் நான்.  என்னோட புருஷன்… என்னோட புருஷன் இதை கள்ளக்காதல்னு சொன்னான்னா?  அப்புறம் நான் என்ன செய்யறது?

ஆண்:  தப்பு

பெண்மணி: என்ன?

ஆண்:  இதை ஏத்துக்கறதை சொல்றேன்.  புதுமை அப்படி இப்படின்னு நீ பேசிக்கிட்டு போறப்போ சின்னதா ஒரு தப்பு பண்றே.  நான்தான் அந்த ஆளுன்னு தீர்மானம் ஆனாத்தான் எல்லாம் சரியா இருக்கும்.   அது வரைக்கும் எதையும் சரின்னு உன்னோட இஷ்டத்துக்கு எதையும் நீ எடுத்துக்க முடியாது.

பெண்மணி: நாம காலேஜ்லே படிச்சிக்கிட்டு இருந்தப்போ… நாம சீட்டாட்டம் விளையாடினோம்  பிரிட்ஜ், ரம்மி, ஏன் மூணு சீட்டு கூட விளையாடி இருக்கோம்.  வெறும் வேடிக்கைக்காக வழவழன்னு சீட்டு… ஏதோ பவுடர்லே முக்கி எடுத்து வழவழன்னு கையிலேருந்து வழுக்கி… வழுக்கி… வேறே வேறே டிசைன்கள் இருந்தாலும் ஒரே மாதிரி இருந்த சீட்டு…. படம் என்னவாக இருந்தாலும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும்.  நாலு மூலையும் கத்தரிச்சி இருக்கும்.  மூலைகள்லே அரைவட்டமா இருக்கும்.  அது கையைக் கிழிக்காது.  நாம விளையாடிக்கிட்டே இருப்போம்,  பவுடர் கரையக் கரைய அந்த சீட்டெல்லாம் முரட்டுத்தனமா மாறிடும்.  ஆனா இப்போ ராணி ராணியாகத்தான் இருக்கும்.  ராஜா, ராஜாவாகவே இருக்கும்.

அப்புறம்… சீட்டுக் கட்டை நல்லாக் குலுக்கணும்.  திரும்பத் திரும்பக் குலுக்கணும்.  அது இறுக்கமா ஒருமாதிரி முரட்டுத்தனமாயிடும்.  கிட்டத்தட்ட ஜோடி சேர்ந்து போன ரம்மியைக் கலைச்சிட்டு சீட்டுக் கட்டாலே வீட்டைக் கட்டணும்.  ரெண்டு சீட்டை சரியான கோணத்துலே அடுக்கணும்.  ரெண்டு சீட்டுங்க.  அதுக்கு மேலே இன்னொண்ணைப் படுக்க வச்சு… சீட்டுக்கட்டு வீடு பெரிசா வளரும்.  அப்புறம்… ஒவ்வொரு சீட்டா எடுக்கணும்.  நிக்கிற சீட்டையும் கிடத்தி இருக்கிற சீட்டையும் தனித்தனியா உருவணும்.  வீடு சரியக் கூடாது.  நான் கட்டுலே இருந்து ஒரு சீட்டை உருவிப்பார்த்தா அது ராஜாவாக இருக்கும்.  நான் எப்போ எல்லாம் சீட்டை உருவறேனோ அது ராஜாவாகவே இருக்கும்.  நான் எப்போ எல்லாம் சீட்டை உருவறேனோ அது ராஜாவாகவே இருக்கு.  அப்புறம் யார் கிட்டேயோ இருந்து பெருசா ஒரு பெருமூச்சுக் காத்து.  எல்லா ராணியும் உருவியாச்சு.  வீடு முழுக்க குலுங்கி சரிஞ்சு போச்சு.  திரும்ப விளையாட்டு ஆரம்பிக்குது.  ஆனா இந்தத் தடவை – ராஜா-பிச்சைக்காரன் விளையாட்டு.

அமைதி

(அவளுடைய வழக்கமான தொனியில்) நாம் திரும்ப சீட்டு விளையாடுவோமா?

ஆண்:  எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை.

பெண்மணி:  உன்னோட அண்ணன் நினைச்சிக்கிட்டு இருந்தான் – நான் ஏதோ அவனைக் காதலிக்கிறதா.  ஆனா…

ஆண்: ஆனா  நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டே.

பெண்மணி: (கோபத்துடன்)   அப்படி எல்லம் இல்லை.  நான் என்னமோ அவனைக் கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை.  கட்டிக்க வேண்டியதாப் போச்சு,  உங்க ஜமீன் பரம்பரையோட கவுரவத்தைக் காப்பாத்த அவனை  நான் கட்டிக்க வேண்டியதாப் போச்சு.

ஆண்:  (அவளை அலட்சியம் செய்த படி) பெண்களோட பிரச்னைகளுக்கு இப்போ எல்லாம் உனக்கு நியூஸ் பேப்பர்லே ஆலோசனைகள் தர்றாங்க.

பெண்மணி: மனதைத் தொடும் வகையில் அறியாமை நிறைந்த தொனியில்) நிஜமாகவே உனக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரலியா?

ஆண்: (முதலில் பலமாகத் தலையாட்டுகிறான்.  பிறகு பேசுகிறான்): இல்லை..

பெண்மணி: (கோபத்துடன்) நான் மனசாரக் காதலிச்ச ஆள் நீ இல்லைன்னா – நான் அந்த ஆளோட ஆவியையாவது பார்க்கணும்.  (அவனைப் பார்த்து சிரிக்கிறாள்)  ஏன் வாயை இறுக மூடிக்கிட்டே.  ஒரு மாதிரி தொந்தரவா இருக்கா?  ம்… இந்த வார்த்தையை எப்போவாவது கேட்ட மாதிரி இருக்கா?  புல்வெளியிலே… என்னோட வார்த்தைகள் உன்னைக் கொட்டற மாதிரி இருக்கா?  முக்கியமா என்னோட தொனி உனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு இல்லையா?

ஆண்: இல்லை.  அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை.

பெண்மணி:  அப்போ நீ அவன் இல்லைன்னா என்னோட எதிரிலே உட்கார்ந்துகிட்டு இருக்கிற அவனோட ஆவி, அவனை மாதிரியே இப்படி வாயை இறுக்க மூடிக்கிட்டு இருக்கிறது உனக்கு எப்படி சாத்தியமாகுது?

ஆண்:  அது சாத்தியம்தான்.  நான் அவனோட ஜாடையிலே இருக்கலாம்.  சில சமயத்துலே ஒருசில ஜாடைகள் ஒரே மாதிரி இருக்கலாம்.  நான் அதை மறுக்க முடியாமு.  ஆனா அது நான் இல்லை.

பெண்மணி::  (மறுக்கும் தொனியில்) ஏய்…

ஆண்:  என்ன?

பெண்மணி:இங்கே பாரு.

ஆண்:  இருக்கேன்.

பெண்மணி: இல்லை.  அங்கே இல்லை.  இங்கே பாரு.  என் கண்ணுக்குள்ளே பாரு.

ஆண்:  (பணிவுடன்)  ஆமாம்.  சொல்லு.  பார்த்துக்கிட்டு இருக்கேன்.

பெண்மணி: உனக்கு ஞாபகம் இருக்கா?

ஆண்:  (தலையை ஆட்டியபடி) இல்லை.

பெண்மணி: அப்புறம் எல்லாத்தையும் திரும்ப ஞாபகத்துக்குக் கொண்டு வர்றது சாத்தியமே இல்லை.

ஆண்:  சிறிது கோபத்துடன்) எப்படி?

பெண்மணி: முட்டாளே.  ஒரு மாசத்துக்கு முன்னாலே என்ன நடந்தது கூட உனக்கு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது.

அவளை உற்றுப் பார்க்கிறான்

பெண்மணி: கொஞ்சம் ஞாபகத்துக்குக் கொண்டு வர முயற்சி பண்ணு.  வெள்ளை… ஆஸ்பத்திரி…  என்ன,  ஞாபகம் இருக்கா?

அவன் ஒன்றும் சொல்வதில்லை.  முகத்தில் உண்ர்ச்சிகள் ஏதுமற்று இருக்கிறான்.

பெண்மணி:  ஒரு பொண்ணு… உன்னை ஆஸ்பத்திரியிலே வந்து பார்த்துக்கிட்டு இருந்த பொண்ணு.  உன் மேலே அக்கறை காட்டிய ஒரு பொண்ணு.  ரொம்ப அமைதியா இருந்தாளே அந்தப் பொண்ணு.  அங்கே இருந்த டாக்டர்களோட அறிவுரை எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு வாயைத் திறக்காமல் சும்மா உட்கார்ந்துக்கிட்டு இருந்த ஒரு பொண்ணு.  ஏன் அப்படி இருந்தா?   அவளுக்கு எதிரிலே இருந்த பாறாங்கல்லுக்கு எந்த அதிர்ச்சியையும் தரக்கூடாதேன்னு அப்படி அந்தப் பொண்ணு சும்மா உட்கார்ந்துகிட்டு இருந்தது.

ஆண்: (தனக்குத்தானே) ஒரு பொண்ணு… என்னோட ரூமுக்கு வந்துக்கிட்டு இருந்த ஒரு பொண்ணு. ராத் கி ராணி பூவை தினமும் என்னோட   ரூமுக்குக் கொண்டு வந்த ஒரு பொண்ணு…

பெண்மணி:  உனக்கு ஞாபகம் வருதா?

ஆண்:  ம்… இல்லை.  எனக்கு எதுவும்… எதுவுமே ஞாபகத்துக்கு வரல்லை.  நான் எதுவும் சொல்ல வேணாம். சொல்ல இஷ்டம் இல்லை.  நீ அந்தப் பொண்ணா இருந்தா இதைப் பத்தி அப்போ நாம் ஏன் பேசிக்கலை?

பெண்மணி:  திரும்பச் சொல்றேன்.  டாக்டர்களோட அட்வைஸ்னாலே தான் அப்போ அப்படி ஒண்ணும் பேசாமல் இருந்தேன்.

பெண்மணி: (திடீரென்று) ஆஸ்பத்திரி பத்தி எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருது.  திரும்பத் திரும்ப நீ எனக்கு ஞாபகப்படுத்த வேண்டாம்.

அமைதி

பெண்மணி: (சீற்றத்துடன்) என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே?  உன்னாலே எல்லாத்தையும் மறந்துட முடியுமா?  நம்மோட இறந்த காலத்தை நம்மாலே மறக்க முடியாது,  ஒவ்வொருத்தரோட இறந்த காலமும் தீர்மானிக்கப்பட்ட விஷயம்.  இறந்த காலம் உன்னோட முதுகு மேலே ஏறி சவாரி பண்ணிக்கிட்டு இருக்கிற ஆவி மாதிரி.  விடிகாலைலே வர்ற கனவு மாதிரி.  என்னோட கனவுலே நான் குருவிக் கூடுகளை பார்க்கிறது உண்டு. பெரிய மாளிகைகளைப் பத்திக் கனவு கண்டேன்.  பெரிய சிறகுகளைப் பத்திக் கனவு கண்டேன்.  ஆனால் காலையிலே, பிரகாசமான கதிர்களோட ஜொலிக்கிற சூரிய வெளிச்சம் என்னோட மெழுகு மாளிகை மேலே விழுந்து எல்லாத்தையும் உருக்கி ஆவியா மாத்திடுச்சி.  விடிகாலையிலே புல் மேலே இருக்கிற பனித்துளி மாதிரி… என்கிட்டே மிஞ்சிப் போனது எல்லாம்… காலையிலே தூங்கி எழறப்போ மிச்சமாகி என்னோட தங்கிப் போன நினைவுகள் மட்டும்தான்…

அமைதி

ஆண்:  உணர்ச்சிகள் என்னை பாதிக்கிறது இல்லை.  என்னோட இறந்த காலத்தை நான் இழந்துட்டேன்.  கனவு எதுவும் நான் காண்றது இல்லை.  விடிகாலைக் கனவுகள் எப்பவுமே கிடையாது.  நான் எல்லாத்தையும் மறந்தாச்சு.  என்னுடைய வீடு, என்னோட ஜனங்கள், என்னோட தோட்டம், என்னோட  கார்டுகள்… ஒண்ணு கூட எனக்கு ஞாபகம் இல்லை.  காலைக்கு அப்புறம் தவறாமல் வர்ற ராத்திரியை மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கு.

பெண்மணி:  (இறுதி முயற்சியாக) உன்னைக் கட்டி அணைக்கணும் போல இருக்கு. ரொம்ப இறுக்கமான அணைப்பு.  மூச்சுத் திணறுகிற மாதிரி ஒரு அணைப்பு

ஆண்:  (சாந்தமாக) நான் அவன்தான்னு உறுதியாகிற வரைக்கும் நாம் காத்துக்கிட்டு இருக்கணும்னு நினைக்கிறேன்.

பெண்மணி:  சரி.  நீ அவன்தான்னு ஆகிப்போச்சுன்னா என்ன ஆகும்?

ஆண்:  அப்போ கூட  நான் உன்னைக் கட்டி அணைச்சுக்க   மாட்டேன்.  என்னோட அண்ணனோட மனைவியோட நான் சல்லாபம் செய்ய விரும்பலை.  அதாவது, நான் அவன்தான்னு தீர்மானம் ஆயிடிச்சின்னா…

பெண்மணி:  முட்டாள்.  நீ ஒரு அடிமுட்டாள்.  நான் திரும்பச் சொல்றேன்.  என்னை நம்பு.  யாரும் தன்னோட இறந்த காலத்தை மறக்க முடியாது.  நீதான் என்னோட….

ஆண் (சாந்தமாக) என்னோட நினைவுகள் போயாச்சு.   எனக்கு எதுவும் ஞாபகத்துலே இல்லை.

இருட்டு.  சில நொடிகளுக்கு மேடை இருட்டாக இருக்கிறது.  அவனுடைய கடைசி வார்த்தை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.  வெளிச்சம் திரும்புகிறது.  அவர்கள் இருவரும் நாடகத்தின் துவக்கத்தின் போது இருந்ததைப் போலவே தங்கள் இருக்கைகளில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.  பிறகு அந்த நாற்காலிகளின் மீதான வெளிச்சம் மெல்ல மங்குகிறது.  பின்னர் இரு நாற்காலிகளுக்கும் முன்பு, சற்று இடைவெளி விட்டு, நாற்காலிகளுக்கு நேர் எதிரே இரண்டு ஸ்பாட் லைட் ஒளிர்கிறது.  முதலில் பெண் நாற்காலியை விட்டு எழுந்து அந்த ஒளிவட்டத்தில் நிற்கிறாள்.  ஆணும் அதோ போல தன்னுடைய இருக்கையை விட்டு அவனுடைய நாற்காலிக்கு எதிரே இருக்கும் ஒளிவட்டத்துக்கு வருகிறான்.  அவர்கள் உறைந்து நிற்கிறார்கள்.  பின்னணியில் “என்னோட நினைவுகள் போயாச்சு.   எனக்கு எதுவும் ஞாபகத்துலே இல்லை” என்கிற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆண்:  அதுதான் சரி.  என்னுடைய நினைவுகள் மறைஞ்சிடுச்சு,  என்னோட சின்ன வயசுலே நடந்ததை எல்லாம் மறந்துட்டேன்.  இப்போ ஏறத்தாழ நாற்பது வயசாச்சு.  நானே சுயமா, எந்த உதவியும் இல்லாமல் நடக்கலாம்.  என்னோட பயணம் எத்தனை தூரத்துக்குப் போகும்னு எனக்குத் தெரியாது,  பாலைவனங்கள் வழியா கால்நடையாகவே நான் அலைந்து திரியணும்.  அந்தப் பாலைவனத்துலே எந்த சோலையும் வேணும்னு நான் ஆசைப்படல்லே.  அங்கே தண்ணி எல்லாம் காய்ந்து போகட்டும்.  ஒரு கானல் நீரா அது மாறிப்போகும்.  அப்புறம்… நான்.. நான்… தாகத்துலே தவிச்சி செத்துப்போவேன்.   நான் தனியா போகணும்.  நானே தனியா போகணும்…

அதிருஷ்டவசமா, என்னோட இறந்த காலத்தை மறக்கற ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.  எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு ரொம்ப ரொம்ப அபூர்வமாகத்தான் கிடைக்கும்.  என்னோட நினைவுகள் என்னை விட்டு நழுவாமல் இருந்தப்போ  எனக்கு அவசியம் இல்லாததை எல்லாம் நான் பார்த்தேன்.  இந்த ஜமீன் குடும்பத்தோட எல்லா கபடவேஷங்களையும் பார்த்து இருக்கேன்.  இந்த ஜமீன் குடும்பத்தோட எல்லா சூன்யக்காரிகளையும் பார்த்தேன்.  இந்த மாளிகையோட சுவர்கள்லே ஒட்டிக்கிட்டு ரத்தம் உறிஞ்சுகிற அட்டைகளைப் பார்த்து இருக்கேன்.  அந்த அட்டைகளை இழுத்து வீசி எறிய முயற்சி பண்ணேன்.  ஆனால் என்னோட ரத்தம்தான் உறிஞ்சப்பட்டது.  ரத்தத்தை உறிஞ்சி முடிச்சி அந்த அட்டைகள் கீழே விழுந்தப்புறம்தான் என்னோட நினைவுகள் நழுவிப்போச்சு.  இது மாதிரியான கௌரவம் எல்லாம் எனக்கு அருவெறுப்பா இருந்தது.  இந்த அரண்மனை இருந்த இடம் பாழடைஞ்சது.  அடுக்கப்பட்ட சீட்டுக்கள் எல்லாம் கலைஞ்சு சரிஞ்சு கீழே பொலபொலன்னு விழுந்துச்சு.  ஜமீன் குடும்பத்தோட பிச்சைக்கார வாரிசுகள்.  காற்றில் கரைந்துபோன என்னுடைய நினைவுகளை நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்.  என் வழியிலே இப்போ தயவு செய்து யாரும் வரவேண்டாம்.

அமைதி

நான் எல்லாத்தையும் இப்போ மறந்துடலை.  மறக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் இன்னும் நிறைய இருக்கு.  நான் உன்னோட….

அவள் அவனைத் தீவிரத்துடன் பார்க்கிறாள்.

இல்லை.  இல்லை… இறந்த காலத்தின் எதையும் என்னாலே ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியலை.  நினைவு தவறிப்போன காதலன்… என்னுடைய எல்லா நினைவுகளும் மறைஞ்சு போச்சு…

ஆணின் மேல் இருக்கும் ஸ்பாட் லைட் திடீரென்று அணைகிறது.  அவன் வெளியேறுகிறான்.  பெண் மட்டும் மேடையில் நிற்கிறாள்.  அவள் நிறைய அழவேண்டும் என்றும் விரும்புகிறாள்.  ஆனால் ஒரு கேவல் கூட அவளிடமிருந்து வெளிப்படுவது இல்லை.

பெண்மணி: என்னுடைய விளையாட்டு துவங்கியாச்சு.  இளவரசி-பரதேசி விளையாட்டு இல்லை.  பொறுமை விளையாட்டு… என்னாலேதான் மாளிகைகளைக் கட்ட முடியும்.  நான் தான் அந்த மாளிகைகளை தரைமட்டமா சரிச்சு விடுவேன்.    நான் மட்டுமே என்னோட   சீட்டுக்கட்டுக்களைக் குலுக்குவேன்.

தேம்பித் தேம்பி அழத்துவங்குகிறாள்.  ஸ்பாட்லைட் அணைகிறது.  மேடையைக் கடந்து அவள் வெளியேறுகிறாள்.  நாற்காலிகள் மட்டும் மேடையில் இருக்கின்றன.  திரைக்குப் பின்பு இசை துவங்குகிறது.  மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து ஜமீன் குடும்பத்தின் வயதான சேவகன் ஒருவன் மேடையில் பிரவேசிக்கிறான்.  நாற்காலிகளை தூசு படிந்த ஒரு பெரிய படுக்கை விரிப்பினால் மூடுகிறான்.  பிறகு வெளியேறுகிறான்.  நாற்காலிகளின் மீது ஸ்பாட்லைட் மெல்ல ஒளி படர்ந்து பெருகுகிறது.

திரை.

Translated from the Marathi play ‘Memory’
by Jatin Wagle and TLM

Kind acknowledgemts to The Little Magazine
தமிழில்-ராகவன் தம்பி
kpenneswaran@gmail.com

 

 

குறிப்பு: இந்தக் குறுநாடகத்தை (குறுநாடகம் என்று அழைப்பது சரியாக இருக்குமா தெரியவில்லை.  ஆனால் ஒரு வசதிக்காக அப்படி வைத்துக் கொள்கிறேன்)  இயக்குநர்கள் பயிற்சிப் பட்டறைகளில்  எடுத்தாளலாம்.    இந்தக் குறு நாடகத்தின் வசனங்களில் ஊடாடும் பாவனைகள் மேடை உரையாடல்களுக்கு தீவிரமான பயிற்சி தரும் வகையில் அமைந்துள்ளன.  சிறிய அளவில் நவீன நாடகத்தை முன்னெடுத்துச் செல்ல விழையும் இயக்குநர்கள் இந்த நாடகத்தை முயற்சிக்கலாம்.   இது முழுக்க முழுக்க வார்த்தைகளையே நம்பிய மேடைச் சலனங்களைக் கொண்டிருப்பதால் உரையாடல்கள் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வண்ணம் சுவாரசியம் கலந்த உரையாடலாக மாற்ற நடிகர்கள் முயற்சிக்க வேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பை பயன்படுத்த நினைப்பவர்கள் என்னிடம் அனுமதி வாங்கத் தேவை இல்லை.  மேடையேற்றம் குறித்த தகவல் மட்டும் கொடுத்தால் போதும்.

ராகவன் தம்பி

Series Navigationகுரோதம்“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”
author

ராகவன் தம்பி

Similar Posts

3 Comments

  1. Avatar
    Geetha Sambasivam says:

    இந்த மரமல்லிப் பூவிலேயும் செண்டுமல்லிலும் வாசமே இல்லை. பொதுவா, செண்டுமல்லி எப்போவுமே ரொம்ப அதிகமாக இருக்கும். மூக்கைத் துளைக்கிற ஒரு வாசம். சில நேரங்களிலே அந்த வாசம் உங்களை அப்படியே தூக்கி எறிஞ்சிடும். //

    பெண்ணின் மனநிலையை அப்பட்டமாய்க் காட்டும் வசனங்கள். அருமையானதொரு உணர்வுக் களஞ்சியம். நல்ல நடிகர்கள் நடிப்பில் நன்கு எடுபடும்.

    //சதீஷ் அலேக்கர்//

    புத்தகங்களில் படித்த பெயர்; அவ்வளவுதானே தவிர இவருடைய நாடகங்கள் குறித்து அதிகம் அறியவில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி.

  2. Avatar
    தங்கமணி says:

    சிறப்பான மொழிபெயர்ப்பு.
    பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *