உய்குர் இனக்கதைகள் (3)

This entry is part 19 of 37 in the series 22 ஜூலை 2012
5. செல்வமும் நீதியும்
ஒரு நாள் அரசரும் மதியாளர் நசிர்தினும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
மதியாளரிடம், “நசிர்தின்.. உன்னிடம் செல்வம், நீதி இதில் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால், எதைத் தேர்வு செய்யவாய்?” என்று கேட்டார் அரசர்.
சற்றும் யோசியாமல், “ பணம்..” என்ற பதில் சொன்னார் மதியாளர்.
“என்ன?” என்று ஆச்சரியப்பட்ட அரசர், “நான் நீதியைத் தான் தேர்வு செய்வேன்.  பணம் எல்லா இடத்திலும் இருக்கிறது.  நீதியைக் காண்பது தான் மிகவும் அரிதானது” என்றார் மிகுந்த கவனத்துடன்.
“மனிதன் எப்போதும் தன்னிடம் இல்லாததைத் தானே பெற விரும்புவான்” என்று கூறிய மதியாளர், “உங்களிடம் எப்போதும் இல்லாததைத் தானே நீங்கள் இப்போது பெற விரும்புகிறீர்கள்.  அதைப் போன்றே நான் பணத்தைப் பெற விரும்புகிறேன்” என்றார் மிகப் பணிவுடன்.
6. சிறந்த இசை
ஒரு முறை ஒரு நண்பர், மதியாளரை மதிய உணவு உண்ண அழைத்திருந்தார்.  அந்த நண்பருக்கு இசையென்றால் உயிர்.  அதனால் மதியாளரிடம் தான் சேர்த்து வைத்திருந்த அனைத்து இசைக் கருவிகளையும் ஒவ்வொன்றாகக் காட்டி அதன் சிறப்புகளை கூறி, அவை எங்கிருந்து வந்தது என்ற விவரத்துடன், ஒவ்வொன்றிலும் பொறுமையாக ஒரு பாடலை வாசித்துக் காட்டினார்.
நேரம் செல்லச் செல்ல, மதியாளருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.  ஆனால் நண்பரோ, கருவிகளை வாசித்துக் காட்டிக் கொண்டே இருந்தார்.  அப்போது திடீரென இடையில் நண்பர், “நசிர்தின்.. உங்கள் கண்ணோட்டத்தில் எந்த இசை சிறந்தது.. யாழா.. வீணையா?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.
“நண்பரே.. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்போது நல்ல சுவையான ரசம் நிரம்பிய கிண்ணத்தின் அடியில் சிறு கரண்டி படும்போது ஏற்படும் சத்தத்தை விட உலகத்தில் வேறெந்த இசையும் சிறந்ததாக இருக்கவே முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் மிகுந்த பசி மயக்கத்துடன்.
7. சகோதரர்களின் சந்திப்பு
ஒரு நாள் மதியாளர் தன்னுடைய கழுதையுடன் தன்னுடைய ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஊரின் ஒரு செல்வந்தர் அவர்களைக் காண நேர்ந்தது.
“அடடா.. மதியாளரே… இரண்டு நண்பர்கள் மிகவும் அன்னியோனியமாக பேசிக் கொண்டு வருகிறீர்கள் போலிருக்கிறதே.. உங்கள் நண்பருடன் நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார் கேலியும் கிண்டலுமாக.
மதியாளர் கழுதையைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓ தனவானே..  நீங்கள் சரியான நேரத்திற்குத் தான் வந்து சேர்ந்தீர்கள்.  என்னுடைய கழுதை தன்னுடைய சகோதரனைக் காணாமல் மிகவும் வருந்துவதாகச் சொல்லி என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.  அதனால் அதை உங்கள் வீட்டிற்குத் தான் அழைத்து வந்து கொண்டிருந்தேன். இப்போது சந்தர்ப்ப வசமாக இரு சகோதரர்களும் இங்கேயே சந்தித்து விட்டதால், நான் உங்கள் வீட்டிற்கு வரும் நேரம் மிச்சமாகி விட்டது.  ரொம்ப நன்றி.  உங்கள் சகோதரனிடம் பேசி ஆறுதல் சொல்லுங்கள்” என்றார் வெகு அமைதியுடன்.
————–
Series Navigationசிற்றிதழ் வானில் புதுப்புனல்வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *