முள்வெளி அத்தியாயம் -20

This entry is part 8 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் அனுமதிப்பதே இல்லை.

மதியத்துக்குப் பின் எல்லா வேலைகளையும் ரத்து செய்யச் சொன்ன போது உதவியாளர் “உடம்பு சரியில்லையா?” என்ற போது மட்டும் இயல்பாக அவளை முறைக்க இயன்றது.

“போன எபிஸோடுக்கு புக் செஞ்ச மாதிரி ஒரு விடலைப் பையன் தான் இந்த எபிஸோடுக்கும் வேணும். ‘ஆறுமோ ஆவல் ஆறுமுகனை நேரில் காணாமல்’ இதைப் பாடறத்துக்கு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணு”

“யெஸ் மேடம்”

“ஸ்டோரி டிஸ்கஷன் ஓவரா? ஸ்கிரிப்ட் ரெடியா?”

“ஸாரி மேடம்”

“டோன்ட் இர்ரிடேட். கதை பேரு என்ன?”

“தூண்டு கோல்”

“அதாவது ஞாபகம் இருக்கே. ஒன் வீக்ல ஸ்கிர்ப்ட் ரெடின்னு எனக்கு ஃபீட் பேக் வேணும்”

‘ஷ்யூர் மேடம்’

**__
**__**
**
மாலை மணி ஐந்து. மஞ்சள் வெயில் கரட்டு மலையின் நிழலை நீளச் செய்ய , பள்ளியின் வாசலில் அதன் மூன்று மாடிகளுடன் போட்டியிடும் உயரமான அசோக மரங்கள் அடக்கமாய் அசைந்து கொண்டிருந்தன. நீண்ட நிழலில் சுதந்திர தின வெள்ளிவிழாவுக்காகப் பதிக்கப் பட்ட ஒரு கிரானைட் கல் வெட்டும், மூன்று சிங்கங்களையும் அசோக சக்கரத்தையும் கொண்ட கம்பமும் அதன் பின்னுமாய் ஒரு வரலாற்று நினைவிடத்தைப் போன்ற சாயலைக் காட்டின.

சூரியனோடு சேர்ந்து இறங்க மறுத்து வெப்பம் இன்னும் உச்சத்திலேயே இருந்தது. மாணவிகள் அனைவரும் போய் விட்டிருந்தனர். சில பையன்கள் உற்சாகமும் கூச்சலுமாய் கால் பந்து ஆடிக் கொண்டிருந்தனர். நடந்து வரும் தன் நண்பனின் முதுகுச் சுமையை சைக்கிளின் பின் இருக்கையில் வைத்து, அவன் தோளில் கை போட்டு, இடது கையால் சைக்கிளைக் கட்டுப் படுத்திய படி புன்னகை முகமாய் அரும்பு மீசையுடன் ஒருவன் பேச்சில் தன்னை மறந்த படி உற்சாகமாய் நகர்ந்து கொண்டிருந்தான்.

விளையாட்டுத் திடலில் வெள்ளை பெயின்ட் பூசப் பட்டு இரும்புக் கொடி மரம் வருடம் இரண்டு முறை ஏறும் கொடிக்காகக் காத்திருந்தது. கீழே அதன் பீடம் வட்ட வடிவமான நான்கு படிகளாயிருந்தது. மூன்றாவது படி மீது கருப்பைய்யாவின் புத்தகப் பை இருந்தது. கருப்பைய்யா நான்காவது படியில் அமர்ந்து பஷீர் ஸாருக்காகக் காத்திருந்தான்.

சில ஆடுகள் கால் பந்தின் சுறுசுறுப்பால் பாதிக்கப் படாமல் மைதான விளிம்பில் காய்ந்த நிலத்தில் ஏதேனும் பசுமையான பதார்த்தம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தன. விஞ்ஞான, பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஒரு விமானம் விட்டு விட்டு கர்ஜித்து அந்த கிராமத்துக்குச் சொல்லியது.

கருப்பைய்யா XI A என்று மேலும் கீழே Rough Note என்றும் எழுதிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய மர வண்ண அட்டையிட்ட நோட்டுப் புத்தகம் கருப்பைய்யாவின் மடியில் இருந்தது.

கருப்பைய்யா நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான். மத்தியில் கூராய் முக்கோணமாய் மடிக்கப் பட்ட பக்கத்திலிருந்து ஆரம்பித்துப் பக்கங்களைப் புரட்டியபடி வந்தான். அவன் தேடிய பக்கம் கிடைத்து விட்டது.

உளி படாத சிற்பம்
————————

திருச்சி ரோடில் போகிறவர்
திருஷ்டி படாமல் காக்கிறாய்
என் அழகுப் பள்ளிக் கூடத்தை

உணவு இடைவேளையில் உன் மீது
ஒளிந்து விளையாடிய போது
அம்மா மடியின் அதே உஷ்ணம்

பள்ளிக் கூடத்துக்கு வரும் போது
படுத்திருக்கும் யானையாய்
உன்னைத் தாண்ட
உன் மீது ஏறி இறங்கும் போது
ஆமையின் ஓடாய்

பங்குனி உத்திரம் அன்று காவடியோடு
பக்தர் உன்னை மொய்க்க
ஆமை ஓடு அசையவும் செய்யும்

இரவு விளக்குகள் அணையும் போது
இருட்டின் கறுப்பு நிறத்தில்
உன் அருகாமை மீண்டும் கிடைக்கும்

நீ உளிபடாமலேயே ஒவ்வொரு
வடிவம் காட்டுகிறாயே

“நல்லா வந்திருக்குத் தம்பீ” பஷீர் ஸாரின் குரல் கேட்டது. பதறி அடித்து எழுந்தான்.

“எதுக்குத் தம்பி பதறி அடிச்சு எந்திரிக்கிறே? மாதா, பிதா, குரு, தெய்வம்னு யுக யுகமா மனசுல பதிய வெச்சுட்டானுங்க. இந்தக் கட்டிடத்தில ஜாதி வெறி பிடிச்ச ஓநாயிங்க உலாவுது. அன்னிக்கி உன்னோட ‘ஆன்ஸர் பேப்பர்’ல எங்கே எங்கே வேணுமின்னே குறைச்சிருக்கானுங்கன்னு காமிச்சேன்ல? இதே ஆன்ஸர் எளுதின அவுனுக சாதிப் பசங்களுக்கு அள்ளி அள்ளிப் போட்டிருக்கானுங்க”

“கவிதை நெசமாவே நல்லா வந்திருக்கா ஸார்?

“நெசமாத்தான் சொல்றேன். இதே கருத்தை இன்னும் கொஞ்சம் வார்த்தை சிக்கனத்தோட சொல்லலாம்.

“உன் மீது நகர்ந்து உன்னைக் கடக்கையில் நீ
ஆமை ஓடு-அது
பங்குனி உத்திரம் அன்று மொய்க்கும்
பக்தர் நகர்வில் அசைப்பு காட்டும்”

“இரவு கறுமையை வெளிச்சம் விட்டுக்
கொடுக்க நீ மீண்டும் என் அருகில்” அப்பிடின்னு முடிச்சிடு. கடைசி ரெண்டு வரிக்கான வேலையை தலைப்பே செய்துடும்.

அன்னாட்களில் ஒரு பக்கம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார். மறுபக்கம் சிறுவர் பத்திரிக்கைக்கு அவனது கவிதையை அனுப்ப அது பிரசுரமானது. “நீங்க எனக்குக் கண் கண்ட தெய்வம் ஸார்…” என்றான் கண்கலங்கி.

“மறுபடியும் என்னைக் கடவுளாக்கற பாரு. இஸ்லாத்தில மனிதனுக்கும், உருவங்களுக்கும் வழிபாடு கிடையாது. இறைவன் ஒருவன் மட்டுமே வணங்கப் படணும். ‘அல்லாஹு அக்பர்ங்கறத்துக்கு அது தான் அர்த்தம். உன் குடும்பத்தில எந்த முறையில கும்பிடறாங்களோ அந்தக் கடவுளுகிட்டே வலிமைய வேண்டு. அம்பேத்கர் வழியிலே போவணுமின்னா வலிமையும் போராடற குணமும் வேணும். இரண்டையுமே நீ வளத்துக்கணும்.”

“மற்றும் மேடையை அலங்கரிக்கும் கவிஞர் கருப்பைய்யா அவர்களே” ஒரு ஆடம்பரமான குரல் அவன் நினைவலையை நிறுத்தியது. தன்னையும் அழைத்தன் மூலம் இந்த விழாவுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என நம்பியிருக்கிறார்கள். கருப்பைய்யா எழுந்து தன் உரையைத் தொடங்கினான்.

**__
**__**
**
அபகரிக்கப் பட்டவை
அர்ப்பணிக்கப் பட்டவை
என்னும் பேதமில்லை
உன்
அருங்காட்சியகத்தில்

வியர்வை மூலம்
கண்ணீர் வழி
தேடாது
வரலாற்றின் மீள்வாசிப்பு
இல்லை

அன்னியம் சொந்தம்
இரு புள்ளிகள்
இடைப்பட்ட
பயணங்கள்
தடயங்களை
விட்டுச் செல்லவில்லை

கடந்து சென்ற மேகம்
மழையாய் வீழும் போது
ஒளியவும்
எதிர்காலம் நீர்வீழ்ச்சியாய்
இறங்கும் போது
ஏற்கவும்
நீ அறிவாய்

——————————-

Series Navigationகான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *