தார் சாலை மனசு

author
0 minutes, 8 seconds Read
This entry is part 16 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன்

காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட முடியாததை இங்க வந்து காட்டறான்!…வெத்து வேட்டு!”

‘ம்…ஸ்டூடண்ட்ஸ்…இன்னிக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு…ஸோ…புதுப்பாடம் எதுவும் எடுக்க முடியாது!….நீங்கெல்லாம் நேத்திக்கு நான் சொல்லிக் குடுத்த பாடத்தையே மறுபடி ஒரு தரம் நல்லாப் படிச்சு…மனப்பாடம் பண்ணி வைங்க!…டோண்ட் மேக் நாய்ஸ்” சொல்லிவிட்டு தலையை கைகளால் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள்.

‘ஹ_ம்…இந்தப் பிசாத்து சம்பளத்துக்காக என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கு!…கர்மம்…கர்மம்!” மறக்க நினைத்தாலும் மனம் மீண்டும் மீண்டும் அதையே நினைத்து அவளை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்கியது.

எப்படா மதிய உணவு இடைவேளை வரும்? ஏன்று காத்திருந்த பத்மாவதி டீச்சர், மணியடித்ததும் ஸ்டூடண்ஸை விட வேகமாய் வகுப்பறையை விட்டு வெளியேறினாள். ‘லன்ச் ரூமில் போய்…ஒரு பத்து நிமிடமாவது படுத்தால்தான் மனசு லேசாகும்!”

ஆறாம் வகுப்பு அறையைத் தாண்டிப் போகும் போது வகுப்பறைக்கு வெளியே மொட்டை வெயிலில், மண் தரையில், மண்டியிட்டு நின்றிருந்த அந்த வகுப்பு மாணவி சுகன்யாவைப் பார்க்க பாவமாயிருந்தது அவளுக்கு.

‘என்ன சுகன்யா…காலைல பத்து மணியிலிருந்து இப்படியே நின்னுட்டிருக்கே போலிருக்கு!” பத்மாவதி டீச்சர் கேட்க,

‘ஆமாம் டீச்சர்…நான் ஹோம் வொர்க் எழுதலைன்னு எங்க கிளாஸ் டீச்சர் ஹெச்.எம்.கிட்ட கம்ப்ளைண்ட பண்ணிட்டாங்க!…அவரு வந்து என்னைப் பிரம்பால நல்லா வெளுத்து…அத்தனை பேரு முன்னாடியும் வண்டி வண்டியாத் திட்டி…கடைசில இப்படி வெயில்ல முட்டி போட்டு நிக்கச் சொல்லிட்டாரு!”

‘அடடே…ப்ச்!” என்று பரிதாபப்பட்ட பத்மாவதி டீச்சர், ‘சரி…இப்பத்தான் லன்ச் டைம் ஆயிடுச்சே!…நீ எழுந்து வகுப்புக்குள்ளார போயிடலாமே!”

‘இல்லை டீச்சர்…ஈவினிங் நான் வந்து சொல்லுற வரைக்கும் இப்படியேதான் இருக்கணும்னு சொல்லிட்டுப் போயிருக்கார் ஹெச்.எம்.

‘அடப்பாவமே!…சரியான வக்ரம் பிடிச்சவனா இருப்பான் போலிருக்கு!’ முணுமுணுத்தவாயே நகர்ந்தாள் பத்மாவதி டீச்சர்.

மதியம் மூன்றரை மணி வாக்கில் அந்த சுகன்யா தலைமை ஆசிரியரின் மறு ஆணைக்குப் பின் மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப் பட்டாள். அதை தன் வகுப்பறையில் இருந்தவாறே கவனித்த பத்மாவதி டீச்சர், ‘ஹ_ம்…சர்வாதிகாரி மாதிரி இந்த ஸ்கூலையே ஆட்டிப் படைச்சிட்டிருக்கான்!….சின்னஞ் சிறுசுகளைக் கூட விட்டு வைக்கலை!” உள்ளுக்குள் குமைந்தாள்.

மாலை நான்கு மணிக்கு பள்ளி விட்டதும், சில வழக்கமான அலுவல்களை முடித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறிய பத்மாவதி டீச்சர் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மனம் இன்னும் சோக நிலையிலிருந்து விடுபடாமலே இருந்தது. ‘ப்ச்…என்னிக்குத்தான் இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பொறக்கப் போகுதோ?”

போகிற வழியில் பள்ளிக்கு சற்றுத் தள்ளியிருந்த அந்தச் சிறிய மைதானத்தில் மாணவிகளெல்லாம் ‘காச்…மூச்”சென்று கத்தியபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அம்மாணவிகள் கூட்டத்தில் அந்த ஆறாம் வகுப்பு மாணவி சுகன்யா வெகு ஈடுபாட்டுடன்…வெகு சந்தோஷத்துடன்…விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஆச்சரியமானாள் பத்மாவதி டீச்சர்.

‘அடிப்பாவி….காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் கொளுத்தர வெயில்ல முட்டி போட்டு நின்னுட்டு இருந்திட்டு …துளிக்கூட அந்தப் பாதிப்பு இல்லாம இங்க வந்து சந்தோஷமா விளையாடிட்டிருக்காளே!…ஹெச்.எம்.மானங் கெடத் திட்டித் தீர்த்தாரு…கொஞ்சங்கூட அந்தக் கவலையே தெரியலையே இவள் முகத்தில்..!”

அதே நேரம், தலைமை ஆசிரியரிடம் தான் பெற்ற திட்டுக்கள் தன்னை சரியாக நடக்கக் கூட முடியாதபடி செய்து விட்டதை எண்ணி நொநது; போனாள்.

‘ஏய்….ஏய்…சுகன்யா!..” நின்று அந்த சுகன்யாவை அழைத்தாள்.

‘டீச்சர்…சொல்லுங்க டீச்சர!” மறு விநாடி சிட்டுப் போல் வந்து நின்ற அந்தச் சிறுமியிடம்,

‘ஏண்டி…திட்டுக்குத் திட்டு1…அடிக்கு அடி!…முழூ நாள் வெய்யில்ல முட்டி…அப்புறம் எப்படிடி உன்னால இப்படி சந்தோஷமா வெளையாட முடியுது?” கேட்டே விட்டாள்.

‘கல..கல”வெனச் சிரித்த சுகன்யா, ‘ஆமாம்…டீச்சர்…நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது…இன்னிக்கு ஹெச்.எம்.கிட்ட செம டோஸ் வாங்கினது…வெயில்ல முட்டி போட்டது எல்லாம்!” என்றவாறே கீழே குனிந்து இரண்டு முட்டிக் கால்களையும் காட்டினாள்.

சூட்டுக் கொப்பளங்கள் ப+த்திருந்தன.

‘ஏண்டி…வலிக்கலையாடி?”

‘ப்ச்!” உதட்டைப் பிதுக்கினாள் சுகன்யா.

‘சரி…அத்தனை பேர் முன்னாடி அப்படித் திட்டு வாங்கினியே…கேவலமாவே இல்லையா?…மனசுக்குள்ளார ஒரு வேதனையே இல்லையா?”

‘ம்…இருந்திச்சு” என்று சொன்னவளை டீச்சர் ஊடுருவிப் பார்க்க,

‘காலைல அவர் திட்டினப்ப கஷ்டமாத்தான் இருந்திச்சு!…நாள் பூரா முட்டி போட்டு நின்னுட்டிருந்தப்ப…பொக வர எல்லோருமே பார்த்தாங்க…அப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாத்தான் இருந்திச்சு1…அதுக்காக..ஆயுசு பூராவும் அதையே நெனைச்சுக்கிட்டு மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டு….என்னமோ கப்பலே கவுந்த மாதிரி இருக்க முடியுமா?…சொல்லுங்க டீச்சர்” பெரிய மனுஷி போல் அவள் பேச,

வியப்பால் விரிந்தன டீச்சரின் கண்கள்.

‘டீச்சர்…நம்மளோட மனசு தார் ரோடு மாதிரி இருக்கணும் டீச்சர்”

‘எப்படி?”

‘தார் ரோடு பாத்தீங்கன்னா…நாலு சொட்டு மழைத்துளி விழுந்தாப் போதும்…என்னமோ மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுன மாதிரி ஏகமாய் நனைஞ்சிடும்!….அந்தத் தூறல் நின்னதும்..பத்தே செகண்ட்டுல காஞ்சு போய் பழைய மாதிரி ஆயிடும்! அதே மாதிரித்தான் நம்ம மனசையும் நாம வெச்சுக்கணும்!…தூறல் மாதிரி கஷ்டம் வரும் போது நனையனும்!…தூறல் நின்னதும் சட்டுன்னு காஞ்சிடற மாதிரி மனசை தேத்திக்கணும்!..இங்க பாருங்க டீச்சர்…வாழ்க்கைல…ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்கணும்!…இருக்கப் பழகிக்கணும்!…சரி டீச்சர் நான் போறேன் வெளையாடறதுக்கு…” சொல்லிவிட்டு ஓட்டமாய் ஓடினாள் சுகன்யா.

தலைமை ஆசிரியரின் திட்டுக்களினால் மூட் அவுட்டாகி நாள் முழுதும் சோக முலாம் பூசியபடி இருந்த பத்மாவதி டீச்சரின் முகம் சட்டென்று பிரகாசமானது.

நடக்க ஆரம்பித்தாள்.

நடையில் கூட துள்ளல் துளிர்த்திருந்தது.

(முற்றும்)

Series Navigationகுந்துமணியும் கறுப்புப் புள்ளியும்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *