பஞ்சதந்திரம் தொடர் 55

This entry is part 37 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

புதையலைத் தேடிய நான்கு பிராம்மணர்கள்
இப்பூவுலகில் ஒரு ஊரில் நான்கு பிராம்மணர்கள் பரஸ்பரம் திடமான நட்புடன் வசித்து வந்தனர். அவர்களும் மிகுந்த தரித்திரத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களுக்குள் யோசித்தனர். ‘’என்ன வறுமை இது?’’

நியாயமும் பராக்கிரமும் உள்ளவனானாலும் எந்த மனிதனிடம் தனம் என்பதில்லையோ அவனை, நன்கு பணிவிடை செய்தாலும் எஜமானர் வெறுக்கிறார். நல்ல உறவினர்கள் அவனை உடனே விட்டுவிடுகின்றனர், அவனுடைய குணங்கள் கோபிப்பதில்லை. குழந்தைகளும் அவனை திரஸ்கரிக்கின்றனர், ஆபத்துகள் அதிகமாகின்றன. உயர்குலத்தவளானாலும் மனைவி அவனைக் கவனிப்பதில்லை. நண்பர்களும் அணுகுவதில்லை.

வீரமும், அழகும், வசீகரமும், வாக்குவன்மையும், எல்லா சாஸ்திர ஞானமும், பணமில்லாவிடில் இந்த மானிட உலகில் வீணாகின்றன.

என்று சொல்லப்படுகிறது.

வறுமையைவிட மரணமே சிரேஷ்டம். பணமற்ற ஏழை சுடுகாட்டிற்குச் சென்று இறந்த சவத்திடம் இவ்விதம் சொன்னான்: ‘’தோழா, ஒரு கணப்பொழுது எழுந்து என்னுடைய இந்த தரித்திர பாவத்தைச் சுமந்துகொள். வெகுகாலமாக நான் களைப்படைந்துள்ளேன். அதனால் உன்னுடைய சுகமான மரண நிலையை அடைகிறேன்’’ என்று, ‘’தரித்திரத்தைவிட மரணமே சுகம்’’ என்று அறிந்து சவம் பேசாமலிருந்தது.

என்று சொல்லப்படுகிறது. அதனால் எவ்விதமாகிலும் பணத்தைச் சம்பாதிக்க முயலவேண்டும்.

பணத்தினால் நடக்காத காரியம் ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை. அதனால் அறிவாளி முயற்சித்துப் பணத்தை நன்கு சேர்க்க வேண்டும்.

என்று சொல்லப்படுகிறது.

அந்தப் பணம் மனிதனுக்கு ஆறு உபாயங்களால் ஏற்படுகின்றது. அது எவ்விதமெனில், 1. பிச்சை எடுப்பது, 2. அரசனை சேவிப்பது, 3. வயலில் வேலை செய்வது, 4. கல்வி போதிப்பது, 5. லேவாதேவி, 6. வியாபாரம். மேலும் அவைகள் யாவற்றிலும் வியாபாரத்திலேயே தடங்கலற்ற பணலாபம் ஏற்படும்.

அறிவாளிகள் பிச்சையெடுப்பதை வெறுக்கின்றனர். அரசனுடைய மனதோ சஞ்சலமானது. வயலில் வேலை செய்வதோ அதிகக் கடினம். கல்வி போதிப்பதோ குருவிடம் படியச் செய்வதால் கஷ்டமானது. தன்னுடைய தனம் பிறரிடம் செல்வதால் லேவாதேவி தரித்திரமே, ஆஹா, வியாபாரத்தைப்போல  இன்பத்துடன் பணம் சேர்ப்பது வேறில்லை.

என்று சொல்லப்படுகிறது.

இந்த வாணிபத்திலும் ஏழுவிதமாகப் பணம் சேர்க்க வழியுண்டு. அவை என்னவெனில், 1. தவறான தராசும், எடைக்கல்லும்,  2. பொய்விலை சொல்லுதல், 3. அடமானம் வாங்குவது, 4. வாடிக்கை பிடிப்பது, 5. கூட்டு வியாபாரம், 6. வாசனைத் திரவிய வியாபாரம் 7. வெளிநாட்டுடன் வியாபாரம்.

தவறான தராசு எடைக்கல்லாலும், பொய்யா விலை சொல்லுதலாலும் பரிச்சயமானவர்களை வஞ்சிப்பது இயற்கையாகவே நீசனுக்குத் தக்கது.

அடமானங்கள் வீட்டிற்கு வந்தால் வியாபாரி தினம் கடவுளிடம் வேண்டுகிறான். அடகு வைத்தவன் இறந்துபோனால் நீ கேட்டதை நான் அளிப்பேன் சுவாமி என்று. கூட்டு வியாபாரத்திலீடுபட்ட வணிகள் சந்தோஷமான மனதுடன், ‘’பூமிதேவியின் பூரணமான சொத்துயாவும் என்னைச் சேர்ந்ததல்லாமல் வேறு யாருடையது?’’ என்று எண்ணுகிறான்.

வியாபாரத்தில் சிறந்தது வாசனைத் திரவிய வியாபாரம். பின் தங்கம் முதலியவற்றால் என்ன பயன்? வாங்கும் விலைக்கு மேலாக இதை ஆயிரம் மடங்கில் விற்கலாம்.

வெளிநாட்டு வியாபாரம் அதிக முதல் போடுபவர்களுக்கே தகுதியுள்ளது. எவனிடம் அதிகமாகப் பணமுள்ளதோ, வெளிநாட்டிலும் எவன் பெயர் கேட்கப்படுகிறதோ அவன், யானைகளால் காட்டானை களைப் பிடிப்பதுபோல், பணத்தால் பணத்தைக் கட்டுப் படுத்துகிறான்.

கொடுக்கல் வாங்கலில் நிபுணர்கள் தூர தேசத்திற்குச் சென்று, முயற்சியால் இரண்டு மடங்கும் மூன்று மடங்குமாகப் பணத்தை உலகில் அடைகின்றனர்.

பரதேசத்தைக் கண்டு பயப்படும் சோம்பேறிகளும், கோழைகளும் காக்கைகளும் மான்களும்கூட சொந்த நாட்டில் தனத்தை அடைகின்றன.

இவ்விதம் தர்க்கிந்து தேசாந்திரம் செல்வதற்குத்  தீர்மானம் செய்து, வீட்டையும் நண்பர்களையும் விட்டு நால்வரும் புறப்பட்டனர்.

இவ்விதம் சொல்வதில் நல்ல நியாயமிருக்கிறது:

பணத்தாசை பிடித்த புருஷர்கள் சத்தியத்தை விடுகின்றனர். உறவினர்களைக் கைவிடுகின்றனர். தாயாரையும் விட்டுப் பிரிந்து தாய் நாட்டையும் திரஸ்கரித்து விருப்பமில்லாத விதேசம் செல்லுகின்றனர். வேறு என்னதான் செய்ய மாட்டார்கள் அவர்கள்!

அவர்கள் கிரமப்படி அவந்தி தேசத்தை அடைந்தனர். அங்கு ஸிப்ரா நதி ஜலத்தில் ஸ்னானம் செய்து ஸ்ரீமஹாகால தேவரை நமஸ்கரித்தனர். மேலும் அங்கிருந்து மேலே செல்லும்பொழுது பைரவானந்தர் என்ற யோகீந்தரரை சந்தித்தனர். அவர்களும் அவனைப் பிராம்மணர்களுக்கு உகந்த விதிப்படி பேசி அவர்கள் யாவரும் அவன்கூடவே அவனுடைய மடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்களை யோகி, ‘’எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு போகிறீர்கள்? உங்கள் குறிக்கோள் என்ன?’’ என்று கேட்டான்.

அதற்கு அவர்கள், ‘’நாங்கள் சித்தியை விரும்பிச் செல்லும் யாத்ரிகர்கள். எந்த இடத்தில் விரும்பிய தனமோ அல்லது மரணமோ ஏற்படுமோ அங்கு செல்கிறோம்.

ஆகாயத்திலிருந்து எப்பொழுதாவது ஜலம் விழுகிறது. தோண்டினால் பாதாளத்திலிருந்தும் ஜலம் கிடைக்கிறது. விதி நிச்சயமாகப் பலமுள்ளதே. ஆனால் மனிதனும் பலவானன்றோ?

மனிதனுடய புருஷத்தன்மையால் விரும்பிய காரியத்தின முழு சித்தியும் ஏற்படுகிறது. விதியென்று முட்டாள் எதைச் சொல்கிறானோ அது புருஷனின் குணமே.

தேகத்தைச் சிரமப்படுத்தாமல் சுகமாகச் சுகம் கிடைப்பதில்லை. மஹாவிஷ்ணுகூட பாற்கடலைக் கடைந்த கையினால்தான் அதில் கிடைத்த லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்துகொள்கிறார்.

என்று சொல்லப்படுகிறது.

அதனால் எங்களுக்கு தனம் கிடைக்கும் உபாயம் ஏதாவது சொல்லுங்கள். துவாரத்தில் நுழைவதோ, சூனியக்காரியை வசப்படுத்துவதோ, சுடுகாட்டில் சேவை செய்வதோ, மனித மாமிசத்தை விற்பதோ, எதுவானாலும் பாதகமில்லை. உன்னிடமோ அற்புதமான சித்திகள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. நாங்களோ மிகுந்த தைரியசாலிகள். எவ்விதமெனில்,

பெரியவர்களே பெரியோரின் விருப்பத்தை ஈடேற்ற சக்தியுள்ளவர்கள். சமுத்திரத்தைத் தவிர வேறு யார் வாடவாக்கினியைத் தாக்குகிறது?

என்று சொன்னார்கள்.

அவனும் அந்தச் சீடர்களின் யோக்யதையை அறிந்து நான்கு மாந்தரீக மாத்திரைகள் செய்து தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கொடுத்து, ‘’ஹிமயமலையின் வடக்குப் பாகத்தில் யாருடைய மாத்திரை எந்த எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு அவனுக்கு நிறைய நிதி கிடைக்கும்.’’ என்று சொன்னார்.

பிறகு அவ்விதமே அவர்கள் செல்லும்பொழுது அவர்களில் தலைவனாக இருப்பவனுடைய குளிகை பூமியில் விழுந்தது. அப்பொழுது அவன் இந்த இடத்தைத் தோண்டியபொழுது பூமி முழுவதும் செம்பாக இருந்தது. அதைக் கண்டு அவன் ‘’ஆஹா, உங்களுக்கு வேண்டிய அளவு இந்த தாமிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றான். அதற்கு மற்றவர்கள், ‘’ஏ மூடனே, இதனால் என்ன பயன்? எவ்வளவு அதிகமானாலும் தரித்திரம் இதனால் போகாது. அதனால் எழுந்திரு மேலே செல்வோம்’’ என்றனர்.  அவன் ‘’நீங்கள் செல்லுங்கள். நான் மேலே வரமாட்டேன் என்று சொன்னான். இவ்விதம் சொல்லிச் செம்பை எடுத்துக் கொண்டு முதலில் திரும்பினான்.

மற்ற மூவரும் மேலே புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் முன்னே செல்பவனின் குளிகை விழுந்தது. அவனும் பூமியைத் தோண்டியபொழுது வெள்ளிமயமான பூமியைக் கண்டான். அப்பொழுது அவன் சந்தோஷத்துடன், ‘’உங்களுக்கு விருப்பமான அளவு வெள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள். மேலே செல்ல வேண்டாம்’’ என்றான். அவர்களிருவரும், ‘’ஏ மூடனே, முன்பு தாமரமயமான பூமி, அதற்குச் சிறிது மேலே வெள்ளிமயமான பூமி. அதனால் நிச்சயம் இதற்கு மேலே தங்கமயமாக இருக்கும். மேலும் இது அதிகமிருந்தாலும் அதனால் தரித்திர நாசம் ஏற்படாது’’ என்றனர்.

அதற்கு அவன், ‘’நீங்களிருவரும் செல்லுங்கள். நான் வரப் போவதில்லை’’ என்றான். இவ்விதம் சொல்லி வெள்ளியை எடுத்துக்கொண்டு திரும்பினான்.

பிறகு அவர்கள் இருவரும் செல்லும்பொழுது ஒருவனுடைய மாத்திரை விழுந்தது. அவனும் தோண்டியபொழுது அங்கு தங்கமயமான பூமியாக இருந்தது. அதைப்பார்த்துச் சந்தோஷமடைந்து அவன் மற்றவனிடம் உனக்கு விருப்பமான அளவு சுவர்ணத்தை எடுத்துக்கொள். இதற்கு மேல் உயர்வானது வேறு எதுவுமில்லை’’ என்றான் அவன்.

‘’மூடனே, நீ அறியவில்லையா? முதலில் செம்பு, அடுத்து வெள்ளி, அதற்கடுத்து தங்கம் கிடைத்தது.  அதனால் நிச்சயம் இதற்குமேல் ரத்தினங்கள் இருக்கும். அதனால் எழுந்திரு. மேலே செல்வோம். இதைப் பாரமாக சுமப்பதால் என்ன பலன்?’’ என்று அவன் பதிலளித்தான்,

‘’நீ செல், நான் இங்கேயே இருந்து உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றான்.

பிறகு அவனும் தனியாகச் சென்று, கோடைகால சூரிய கிரகணங்களால் எரிக்கும் உடம்பும் தாகத்தினால் குழம்பிய புத்தியுமுடையவனாகி, சித்தபூமியின் வழியில் இங்கும் அங்கும் அலைந்தான். அப்பொழுது சுழலும் ஒரு இடத்தில் தலையின்மேல் ஒரு சக்கரம் சுற்றிக்கொண்டிருக்க, ரத்தம் சொட்டும் தேகத்துடன் இருக்கும் ஒரு புருஷனைப் பார்த்தான். உடனே வேகமாகச் சென்று அவனைப்பார்த்து ‘’பெரியவரே, தாங்கள் ஏன் இப்படித் தலையில் சுற்றும் சக்கரத்துடன் நிற்கிறீர்கள்? சொல்லுங்கள். இங்கு எங்காவது குடிப்பதற்கு ஜலம் கிடைக்குமா? எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது’’ என்று கேட்டான்.

இவ்விதம் அவன் சொல்லிய அந்தக் கணத்திலேயே அவன் தலையிலிருந்து சக்கரம் பிராமணனின் தலையில் ஏறிக்கொண்டது. அவன் கேட்டான்: நண்பனே, இது என்ன?’’ என்று. ‘’என் தலையில் கூட இதேமாதிரித்தான் ஏறிக்கொண்டது’’ என்றான் அவன். அவன் கேட்டான்: ‘’அப்பொழுது சொல், எப்பொழுது இது இறங்கும்? எனக்கு வேதனை அதிகமாக இருக்கிறது’’ என்று. ‘’எப்பொழுது உன்னைப்போல எவனாவது சித்தகுளிகையைக் கையில் வைத்துக்கொண்டு வந்து இவ்விதம் பேசுகிறானோ அப்பொழுது அவன் தலையில் இது ஏறிக்கொள்ளும்’’ என்று அவன் பதிலளித்தான். பிராமணன் கேட்டான்: ‘’எவ்வளவு காலமாக நீ இப்படி நின்றாய்?’’ என்று. அவன் அதற்கு ‘’இப்பொழுது பூமியில் யார் அரசன்?’’ என்று கேட்டான். சக்கரத்தைத் தலையில் வைத்துக்கொண்டிருப்பவன் சொன்னான்:  ‘’வீணாவத்ஸ ராஜன்’’ என்று. அதற்கு அந்தப் புருஷன் ‘’எப்பொழுது ராமர் அரசனாக இருந்தாரோ அப்பொழுது நான் தரித்திரத்தால் பீடிக்கப்பட்டு சித்தகுளிகையை எடுத்துக்கொண்டு உன்னைப்போல் வந்தேன். அப்பொழுது நான் ஒருவன் தலையில் சக்கரம் இருப்பதைப் பார்த்துக் கேட்கவும் செய்தேன். அப்பொழுது அவனைக் கேட்ட மாத்திரத்திலேயே அவன் தலையிலிருந்து சக்கரம் என் தலையில் ஏறிக்கொண்டது. ஆனால் வருஷக் கணக்கை நான் அறியேன்’ என்று சொன்னான்.

சக்கரதாரி கேட்டான்: ‘’நண்பனே, இப்படி நின்ற உனக்கு ஆகாரம் பின் எப்படி கிடைத்தது?’’ என்று. ‘’நண்பனே, புதையலை எடுத்துச் சென்று விடுவோம் என்ற பயத்தால்  குபேரன் சித்தர்களுக்கு இப்படிப் பயம் காட்டுகிறான். அதனால் ஒருவரும் வரமாட்டார்கள் என நினைக்கிறான். அப்படியும் யாராவது வந்தால் அவன் பசியும் தாகமுமற்று, முதுமையும் மரணமுமற்று கேவலம் இந்த வேதனையை மட்டும் அனுபவிக்கிறான். இப்பொழுது எனக்கு உத்தரவு கொடு. நீ தான் என்னை இந்தப் பெரிய துக்கத்திலிருந்து விடுவித்தாய். இப்பொழுது நான் என் இடத்திற்குச் செல்கிறேன்’’ என்று அவன் சொல்லிச் சென்றான்.

அவன் சென்றதும் ‘’ஏன் என் கூட வந்தவன் நேரமாக்குகிறான்?’’ என்று அவனைத் தேடுவதற்காக அவன் காலடியைப் பின்பற்றிக் கொண்டு தங்கத்தை அடைந்தவன் (சுவர்ணசித்தன்) புறப்பட்டுக்கொண்டுக் கொஞ்சதூரம் செல்வதற்குள் அங்கு ரத்தத்தால் தோய்ந்த சரீரத்துடன் கூர்மையான சக்கரம் தலையின்மேல் சுற்றுவதால் வேதனைப்படும் தன் நண்பனைப் பார்த்தான். உடனே அருகில் சென்று கண்ணீர் விட்டுக்கொண்டே ‘’நண்பனே, இது என்ன?’’ என்று கேட்டான். ‘’விதியின் விளையாட்டு’’ என்றான் அவன். ‘’சரி, அது எப்படி என்று சொல்’’ என்று அவன் கேட்க, நான் கேட்ட சக்கர விருத்தாந்தம் முழுவதையும் அவன் சொன்னான்.

அதைக்கேட்டு அவன் சக்கரதாரியை நிந்தித்துக்கொண்டே, ‘’ஹா, நான் திரும்பத் திரும்பத் தடுத்தேன். ஆனால் புத்திஹீனத்தால் நீ என் வார்த்தையைக் கேட்கவில்லை. இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது.

கல்வியைவிட புத்தி உத்தமம். அதனால் கல்வியைவிட புத்தியைத் தேடு! புத்தியற்றவர்கள், சிங்கத்தைத் செய்தவர்கள்போல், நசிக்கின்றனர்.

சக்ரதரன், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, சுவர்ணசித்தன் சொன்னான்:

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    punai peyaril says:

    ஒரு வரி விடாமல் படித்து சிந்திக்க வைக்கிறது. நன்றி…

  2. Avatar
    ரவிசந்‌திரன் says:

    நல்ல கதை ,நம் பாரத தேசத்து அரசியல்வாதிகள் படிக்கவேண்டியது..

    சுகத்தை தேடி தேடி சூழலில் மாட்டிய நிலை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *