12 பியும் எகிறும் பி பி யும்

This entry is part 23 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கூட்ட நெரிசலில், பனகல் பார்க் சமீபம் வரும்போது, அதிர்ஷ்டவசமாக, நின்றுகொண்டிருந்த என்னருகில் உட்காந்திருந்தவர், சட்டென்று எழுந்ததில், எனக்கு இடம் கிடைத்தது. அதற்கு முன்னால், முக்கால் மணிநேரம் லிபர்டி நிறுத்தத்தில், 12பிக்காக காத்திருந்த கால் வலிக்கு, இதமாக இருந்தது. பனகல் பார்க் நிறுத்ததில் இறங்கியவர்களோடு ஏறியவர்கள் அதிகம். மிசினில் மாட்டிய கரும்பு போல் கூட்டம் மொத்தமாக நசுக்கப்பட்டது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. “ அய்யோ! அய்யோ !

குரலுக்குச் சொந்தக்காரருக்கு ஒரு 70 வயதிருக்கும். கையில் உடைமைகள் கொண்ட ஒரு பை.. அவரப்போலவே பஞ்சடைந்த பை! கூட்ட நெரிசலில் அவரைப் பந்தாடி விட்டார்கள். வலி பொறுக்க முடியாமல் கத்தியிருக்கிறார். கசங்கிய வேட்டி, கசங்கிய வெள்ளைச் சட்டை, கலைந்த தலை, ஒரு சராசரியான சீனியர் சிட்டிசன். பையை வைத்துக் கொள்ள ஒரு கை, மேலே பிடிக்க ஒரு கை என்று டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

பையை வைத்துக் கொள்கிறேன் என்கிற என் விண்ணப்பத்தையும் அவர் மறுதலித்தார். “ ஐ டோண்ட் வாண்ட் டு பி எ பர்டன் டு எனி ஒன் “ அதற்கப்புறம் தான் ஆரம்பித்தது அவரது வெர்பல் அட்டாக். செண்டரிலிருந்து, ஸ்டேட் வரை எல்லோரையும் சாட ஆரம்பித்தார். அவரது வசவு கேட்க முடியாமல், இரண்டு இளைஞர்கள் எழுந்து இடம் கொடுத்தார்கள். உட்கார மறுத்து விட்டார். “ ஐ டோண்ட் வாண்ட் சேரிட்டி ப்ரம் எனி ஒன் “ கடைசியில் முன்னிருக்கை காலியானதும், யாரும் உட்காரததால், பெரிய மனசு வைத்து உட்கார்ந்தார். அதற்கப்புறமும் சில நிமிடங்கள் அவர் வசவு தொடர்ந்து அடங்கியது.

இன்னொரு காட்சி. இருக்கைகள் நிறைந்த ஒரு பேருந்து. வழியில் ஒரு முதியவர் ஏறுகிறார். பேண்ட், சட்டை. கையில் சிறிய ரெக்சின் பை. உட்கார்ந்திருந்த ஒரு இளைஞனைப் பார்த்து ‘ எழுந்திரு ‘ என்கிறார். அவர் கையில் சீனியர் சிட்டிசன் அடையாள அட்டை இருக்கிறது. இளைஞன் மறுபேச்சில்லாமல் எழுந்து, இடம் கொடுக்கிறான். ஒரே வித்தியாசம்.. லொக்கேஷன் தருமமிகு தமிழகம் இல்லை. கர்னாடக பெங்களூரு. அங்கு சீனியர் சிட்டிசனுக்கு பாதி கட்டணம் வேறு.

தமிழக அரசும் முதியோருக்கு இலவச பாஸ், கட்டணக் குறைப்பு என்று தேர்தல் சமயத்தில் சொன்னதாக ஞாபகம். வருமா என்று தெரியவில்லை. வரும்போது இப்போதுள்ள நடுத்தரர்கள் முதியோர் ஆகியிருப்பார்கள்.

இன்னொரு அபத்தம், ஊனமுற்றோருக்கும், முதியோருக்கும் இரண்டு இருக்கை. யாருக்கு முன்னுரிமை? அதோடு இருக்கைகளும், ஓட்டுனர் பின்னால் இருக்கும். பின் வழியில் ஏறி, சீட்டு வாங்கி, முன்னிருக்கைக்கு வந்தால், அதை இளம் ஜோடி ஆக்கிரமித்திருக்கும்.

பெங்களூர் பேருந்துகளில் ஏறும், இறங்கும் வழி, வண்டியின் மையத்தில் இருக்கிறது அகலமாக. ஏறியவுடன் முதியோருக்கான இருக்கைகள் நான்கு ஒதுக்கப்பட்டிருக்கும். முதியவர் உட்கார்ந்தவுடன் நடத்துனர், அவர் இருக்கைக்கே வந்து பயணச் சீட்டு தருவார். அங்கே முதியோர்க்கு மரியாதை இருக்கிறது.

சென்னையில் பேருந்து பயணம் பிராண அவஸ்தை. அதிலும் சாதாரணக் கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்றால், பாதி நாள் போய்விடும். பேருந்து கட்டணத்தையும் ஏற்றி விட்டு, சொகுசு பேருந்துகளாக விடும் அரசின் போக்கை சாமர்த்தியம் என்பதா, மக்கள் நலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத கல் நெஞ்சம் என்பதா?

பயணக் கட்டணங்களை உயர்த்தும்போது சொன்னார்கள், 50 விழுக்காடு உயர்வு என்று. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன? போரூரிலிருந்து தி.நகருக்கு சாதா கட்டணம் 6 ரூபாய். சொகுசு 13 ரூபாய். இது 50 விழுக்காடா? கணிதமும் ஒழுங்கில்லை, இங்கே மனிதமும் ஒழுங்கில்லை.

12 பி 10 நிமிடத்திற்கு ஒரு வண்டி வரவேண்டும். 40 நிமிடமாகியும் வரவில்லையென்றால், கூட்டம் சேராதா? நேரத்திற்கு போக முடியாமல் காத்திருப்போர் ரத்த அழுத்தம் உயராதா? பி பி யை ஏற்றி விட்டு காப்பீடு திட்டம் கொண்டு வருவது, பிள்ளைக் கிள்ளல், தொட்டில் ஆட்டல் கதைதான்.

—————————

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-13)மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 38
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *