தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

முதுகெலும்பா விவசாயம் ?

ஷம்மி முத்துவேல்

Spread the love
நல்லா செழித்து வளர்ந்துடுச்சு
இந்தத் தலவாசல் வேப்ப மரம் ..

போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு
இது தான் போக்கிடம்

எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் …

மோட்டுவளைய பாத்துகிட்டு
எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ?

ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம்
வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு ..
இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ?

அந்த தாழ்வாரத்துல

கொறஞ்சது எழுவது பேர்
உக்காந்து சாப்பிட்டது
கண்ணுக்குள்ள நெனப்பா வருது

இருவத்தஞ்சு படி அரிசி போட்டு மாவிடிச்சு
திருமங்கலத்து அத்தை வீடு
புத்தூர் சித்தி வீடு
இப்டி சொந்தக்காரவுக  வூட்டுக்கெல்லாம்  கொண்டு போயி
பத்துப் பன்னெண்டு நாள் இருந்து வாரது

எல்லாம் இப்போ இல்ல
வீடு நெறஞ்சு மனசு நெறஞ்சதெல்லாம்
இனி வரப்போறதில்ல
பட்டணம் போயிப் புள்ளைங்க படிக்க ஆரம்பிச்சு
வேலைக்கும் போய்ட்டாங்க ….

அவிங்களுக்கும் பாவம் பொழுது சரியாத்தான் போகுது
வார போற நாளும் வேகமா ஓடுது
இதுல சொந்தம், பந்தம்  என்ன தெரியப் போகுது ?

இப்போதைக்கு இந்த ஊர்ல மிஞ்சியிருக்கிறது
கெழக்குவளவு சபாபதியும்,
மேக்காலவளவு  குப்புசாமியும் நானும் தான்
எங்களுக்கப்றம்
இந்த ஊர்ல விவசாயம்  என்ன ஆகும் ?
மண்ணாப் போன நடுவளவு தான்
நெனப்புல வருது ஆமா

இந்தியாவோட  முதுகெலும்பு , கிராமம்
விவசாயம்னு சொல்ற ராசாங்க,

இது என்ன கணக்கு அப்பு ?
ஷம்மி முத்துவேல்
Series Navigationவிஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?கட்டங்கள் சொற்கள் கோடுகள்

Leave a Comment

Archives