அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 37 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

விஸ்வத்தை கிராமப் பள்ளிக்கூடத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டதால் குடும்பம் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது.
சிறிய ஓட்டுவீடுதான் என்றாலும் துப்புரவாய் இருந்தது. சுற்றிலும் நாலாபக்கமும் காலி இடம் இருந்தது. முன் பக்கம் முழுவதும் பூச்செடிகள். அருந்ததி கடந்த ஒரு வருடமாய் ரொம்ப பலவீனமாய் போய்க் கொண்டிருந்ததால் டாக்டரிடம் காட்டினார்கள். கேன்சர் என்று சந்தேகப்பட்டு உடனே கருப்பையை நீக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பதினைந்து நாட்களுக்கு முன்பு அருந்ததிக்கு பட்டணத்தில் ஆபரேஷன் நடந்தது.
தம்பி தங்கைகள் கைகால் அலம்பிக் கொண்டு வந்த பிறகு ஆளுக்கு இரண்டு பிஸ்கெட்டுகளை கொடுத்தாள் பாவனா. பிறகு அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே தானும் படித்து முடித்தாள்.
“பாட்டீ! அப்பா இன்னும் வரவில்லையே ஏன்?” கவலையுடன் கேட்டாள் தங்கை.
“வந்து விடுவான். ஆபரேஷன் முடிந்த பிறகு அம்மாவை அழைத்துக்கொண்டு வருவதாக சொன்னான் இல்லையா? இன்றைக்கோ நாளைக்கோ வர வேண்டியதுதான்.” பாட்டி சொன்னாள்.
“பாட்டீ! அம்மாவுக்கு குணமாகி விடும் இல்லையா? ஆபரேஷன் என்றால் ரொம்ப தளர்ந்து போய் இருப்பாள் இல்லையா?”
“கொஞ்சம் தளர்ந்துதான் போயிருப்பாள். இரண்டு மூன்று மாதங்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளணும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறாராம்.”
“அக்கா! அப்பா வந்தாச்சு” பாலு கத்தியதைக் கேட்டு எழுந்து வாசலுக்கு ஓடினாள் பாவனா. வாசலில் தென்பட்ட காட்சியைப் பார்க்கும் போது அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து எலும்புக்கூடு போல் இருந்த அருந்ததியை இறக்கி கைத்தாங்கலாய் நடத்தி அழைத்து வந்துக் கொண்டிருந்தான் விஸ்வம். ஒரு மாதம் முடிவதற்குள் பதினைந்து வயது கூடி விட்டது போல் காட்சி தந்தான். கூடத்தில் இருந்த கட்டிலில் அருந்ததியைப் படுக்க வைத்தான்.
“பாலூ, பாபி, டிக்கி.. இதென்னது? ஏன் தொலைவிலேயே இருக்கீங்க? இப்படி வாங்க” என்று அழைத்தாள் அவள். எல்லோரும் நிசப்தமாய்ப் போய் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.
“அம்மா! உனக்கு வலி குறைந்து விட்டதா?” கேட்டான் பாலு.
“குறைந்துவிட்டது கண்ணா. நீ எப்படி இருக்கிறாய்? நன்றாக படிக்கிறாயா? நம் தோட்டம் எப்படி இருக்கு?”
“ரொம்ப நன்றாக இருக்கும்மா. தினமும் வீட்டில் காய்க்கும் காய்களைதான் பாட்டி சமைக்கிறாள்.”
“ஆமாம் அம்மா. நீ ரொம்ப நல்லவள். அதான் அவ்வளவு நல்லா காய்க்கிறது.” சொன்னாள் தங்கை.
தன் வலியைக் காட்டிக் கொள்ளாமல் குழந்தைகளுடன் பேச்சில் ஈடுபட்டுவிட்ட அருந்ததியைப் பார்த்தான் விஸ்வம். பாவனா தொலைவிலிருந்து தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அம்மா தனக்கு சிறுவயதில் சாதம் ஊட்டியதிலிருந்து எல்லாமே நினைவில் இருந்தது பாவானாவுக்கு. அம்மாவும், அப்பாவும் எல்லாவற்றுக்கும் போட்டிப் போடுவார்கள். அம்மாக்கள் மட்டுமே செய்வார்கள், செய்யவேண்டும் என்ற வேலைகளை கூட விஸ்வம் செய்து வந்தான்.
எல்லா வீடுகளிலும் தந்தை வெளிவேலைகள் பண்ணுவதும், குழந்தைகள் தாயிடம்தான் நெருக்கமாக இருப்பதையும் பார்த்திருக்கிறாள். ஆனால் தன் வீட்டில் அவ்வாறு இருந்ததே இல்லை. பள்ளிக்கூடத்து வேலைகள் முடிவடைந்து வீட்டுக்கு வந்த பிறகு விஸ்வம் வீட்டை விட்டு நகரமாட்டான். மனைவி கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தால், தாய் தம்மை விட்டு தொலைவில் போய்விட்டதாய், முன்னணி குழந்தைகள் ஏக்கம் கொண்டு விடாமல் அவர்களுடனே இருப்பான்.
அந்த வீடு எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய் ஆனந்த உலகம் போல் காட்சி தரும். மாமியார் மருமகள் சண்டை இல்லை. கணவன் மனைவி சச்சரவுகள் இல்லை. குழந்தைகளுக்கு இடையோ போட்டியோ பொறாமையோ இருந்தது இல்லை. இப்பொழுது என்னவோ அம்மா இப்படி ஆகிவிட்டாள். பாவனா தந்தையைப் பார்த்தாள்.
கதவு மறைவில் நின்றுகொண்டு யாரும் பார்க்காதவாறு கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான் விஸ்வம். அம்மாவைப் பார்க்கும் போது ஏற்பட்ட வேதனையை விட தந்தையின் கண்ணீர்தான் அவளை மிகவும் நெகிழ்ந்து போகச் செய்தது.
“அப்பா!” என்று அழைத்தபடி அருகில் சென்றாள்.
“என்னம்மா பாவானா? பரவாயில்லை. அம்மாவுக்கு சீக்கிரமாகவே குணமாகி விடும். கொஞ்சநாள் நாம் ஜாக்கிரதையாய் பார்த்துக் கொண்டால் போதும்” என்றான் அவளுக்கு ஆறுதல் சொல்வது போல்.
“பின்னே நீ ஏம்பா அழுகிறாய்? உன்னை இந்த மாதிரி பார்த்தால் எனக்கு கவலையாய் இருக்கு.”
‘ச்சே..ச்சே. நான் எதுக்கு அழப் போகிறேன்? சரியாய் தூங்கவில்லை இல்லையா? அதான் இப்படி.” முகத்தில் முறுவலை பூசி மெழுகிக் கொண்டான்.
“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அழக்கூடாது. தைரியமாய் இருக்கணும் என்று நீ தானேப்பா சொல்லுவாய்?”
அப்பொழுதான் புரியத் தொடங்கியது அவனுக்கு, தன் மகள் மனதளவில் வயதுக்கு மீறி வளர்ந்துவிட்டாள் என்று.
********
பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவருடம் ஓடிவிட்டது. அருந்ததியின் நிலைமை கொஞ்சம் சீரடைந்தது. ஆனால் எந்த நிமிடம் என்ன நடக்குமோ தெரியாத நிலை அவளுடையது. திடீரென்று வயிற்றுவலியால் துடிதுடித்துப் போய் விடுவாள். மருந்து சாப்பிட்டு தானாக குறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர யாராலும் எதுவும் செய்ய முடியாது.
பால்ய பருவம் அப்பாவித்தனத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கலாம். ஆனால் சில நிகழ்ச்சிகள், அபிப்ராயங்கள் அந்த சமயத்தில்தான் வாழ்நாள் முழுவதும் தங்கி விடுவதுபோல் இதயத்தில் பதிந்து போய்விடும். தந்தையின் உயர்குணம் எடுத்துக் காட்டக் கூடிய சம்பவம் ஒன்று பாவனாவின் சிறுபிராயத்தில் நடந்தது.
விஸ்வம் ஊரிலிருந்து வந்த மறுநாளே அருந்ததிக்கு கடுமையான வயிற்றுவலி வந்து, உடனுக்குடன் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாயிற்று. குறைந்தது இரண்டு மாதங்களாவது அங்கே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அந்த இரண்டு மாதங்களும் விஸ்வம் தவித்த தவிப்பு எல்லோரின் மனதையும் கரைத்து விட்டது. அருந்ததிக்குக் கொஞ்சம் குறைந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
அவ்வளவு பதற்றமான நிலைமையிலும் பாட்டியும், தாத்தாவும் அம்மாவுடன் வேகுநேரமாய் அறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அவர்கள் இருவரும் தந்தையை உள்ளே அழைத்ததைப் பார்த்துவிட்டு, பாவானா ஆச்சரியமடந்தவளாய் ஆர்வத்துடன் கதவிற்கருகில் வந்து நின்றாள்.
“பாவனாவின் படிப்பு கேட்டுப் போகிறது. வயதுக்கு மீறிய பாரத்தை அவள் தலையில் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் இவளுடைய உடல்நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. நாங்களும் போய்விட்டால் பார்த்துக் கொள்பவர்கள் யாருமே இல்லை” என்றார் தாத்தா முன்னுரை வழங்குவது போல்.
“எங்களுடையது தீர்வு இல்லாத பிரச்சனை மாமா. யார்தான் என்ன செய்ய முடியும்?”
“இவ்வளவு சின்ன வயதிலேயே உனக்கு எந்தச் சுகமும் இல்லாமல் போய் விட்டது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள் தம்பீ. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். நீ ஊம் என்று சொன்னால் என் தம்பியின் மகள்.. சுந்தரியைத்தான் உனக்குத் தெரியுமே, சந்தோஷமாய் ஒப்புக்கொள்வார்கள்.”
“மாமா! இப்படிச் சொல்வது உங்களுக்கே நியாயமாய் இருக்கா?” விஸ்வம் கோபமாய்க் கேட்டான்.
“கோபம் வேண்டாம். நான் சொல்வதை முழுவதுமாகக் கேட்டுவிட்டுப் பிறகு நிதானமாய் யோசித்துப் பார். அருந்ததியைப் பார்த்துக்கொண்டு, குழந்தைகளுக்கும் உனக்கும் உறுதுணையாய் இருந்துகொண்டு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதற்கு ஒரு பெண் தேவை. போகட்டும் நம் உறவினரில் அப்படி யாராவது இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. சுந்தரிக்கு முப்பது வயதாகி விட்டது. கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் எண்ணம் அவள் அண்ணனுக்கு இல்லை. தந்தை உயிரோடு இல்லை. தாயும் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறாள். எல்லோருக்கும் பாரமாகிவிட்டாள். அப்படிப்பட்ட பெண்ணாய் இருந்தால் நன்றியோடு குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்வாள். அவளுக்கு அருந்ததி மீதும் குழந்தைகள் மீதும் ரொம்பப் பிரியமும்கூட. இது எங்கள் தீர்மானம் மட்டுமே இல்லை. அருந்ததியின் விருப்பமும் கூட.”
“நீங்க சொல்லி முடித்துவிட்டால் இனி என் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுகிறேன். சுந்தரி அருந்ததியின் தங்கை. எனக்கும் தங்கை போல்தான்.. சுந்தரிக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அவளை எங்களுடன் அழைத்துப் போகிறேன். தங்கையாய் பார்த்துக் கொள்கிறேன். இருப்பதில் அவளுக்கும் போடுகிறேன். அவள் எங்களுக்குப் பாரம் என்ற உணர்வு ஒருநாளும் ஏற்படாது. கல்யாணம் பண்ணி வைக்கும் உத்தேசம் இருந்தால் நல்லதுதான். வரன் ஏதாவது குதிர்ந்தால் அனுப்பிவைத்து விடுகிறேன். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.” அவன் அருந்ததியின் பக்கம் திரும்பினான். “உனக்கு இப்படிப்பட்ட யோசனை எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை. நான் எப்பொழுதாவது சந்தோஷமாய் இல்லாதது போல் நடந்து கொண்டேனா?”
“அது இல்லைங்க. காலையில் எழுந்தது முதல் நீங்க சமையல் செய்வது, குழந்தைகளை குளிப்பாட்டி விடுவது எல்லாம் பண்ணுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் அம்மாவிடம் சொன்னேன். நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது.”
“கணவன் மறுமணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதை அதிர்ஷ்டமாய் பாவிக்கும் நிலையிலிருந்து பெண்கள் இன்னும் கொஞ்சம் வளரணும் அருந்ததி. அவர்கள் என்னுடைய குழந்தைகள். அவர்களின் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. நான் சமையல் செய்தாலும், குளிப்பாட்டி விட்டாலும் அதைத் தவறாக நினைக்காதே. நீங்களும் அப்படி நினைக்காதீங்க. குழந்தைகளை இங்கே விட்டுப் போவதில் கூட எனக்கு விருப்பம் இல்லை. அவர்கள் என்றுமே யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது. இனிமேல் இப்படிப்பட்ட பேச்சை எடுக்காதீங்க.”
விஸ்வம் வெளியே வரும் சந்தடி கேட்டு பாவனா சட்டென்று நகர்ந்து கொண்டாள். ‘தந்தை கடவுளுக்கு ஒப்பானவர். அவர் எங்களுக்கு தந்தையாய் இருப்பது எங்கள் அதிர்ஷ்டம். அவர் என்றுமே மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய பொறுப்பில் தானும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
தந்தையிடம் மதிப்பு ஏற்பட்டதோடு, தனக்கு கணவனாக வரவேண்டியவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற யோசனைக்கு வித்திடபட்டதை அவள் அறிந்திருக்கவில்லை.
அவள் வாழ்க்கையில் அவளுக்கு முதல் நண்பன் தந்தைதான். ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியவன். பெரும் மதிப்புக்கு உரியவன். அவள் வாழ்க்கையில் இரண்டாவது ஆண் கணவன். அவன் எப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிப்பானோ காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
*******
விஸ்வத்தில் இரண்டாவது மனைவியாக இல்லாமல் மனைவியின் தங்கையாகவே அவ்வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் சுந்தரி.
சில நாட்களிலேயே அவ்வீட்டாருடன் கலந்துவிட்டாள். அக்காவுக்கு நர்சாக பணிவிடை, வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் தான் ஒருத்தியாகவே பார்த்துக் கொண்டாள்.
ஆரம்ப காலத்தில் விஸ்வம் அதிகாலையிலேயே எழுந்து பெண்கள் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்வதைப் பார்த்து வெட்கப்பட்டாள் சுந்தரி. மெதுவாய் ஒவ்வொரு காரியத்திலேயும் பங்கெடுத்துக் கொண்டு வீட்டு வேலைகளிலிருந்து முற்றிலும் அவனுக்கு விடுதலை கொடுப்பதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது. அவனைப் பார்த்தால் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
பிறந்த வீட்டில் வேற்று மனுஷி போல் நடத்தப்பட்டு, வேண்டாதவளாய் சுட்டிகாட்டப்பட்டு இத்தனை நாளும் நரகத்தை அனுபவித்து வந்தாள். இந்த வீட்டில் கிடைத்த கௌரவம் அவள் கனவிலும் எதிர்பார்க்க முடியாத உயர்ந்த அனுபவம்.
பாவனாவிடம் அவளுக்குத் தனிப்பட்ட பிரியம்.
“பாவனா! பரீக்ஷை நெருங்கிக் கொண்டு வருகிறது. இப்படி கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்தால் எப்படி?” அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள் சுந்தரி. அதற்குள் பாவனா ஒன்பதாவது வகுப்புக்கு வந்து விட்டிருந்தாள்.
“ஏன் சித்தி? அப்பா இன்னும் வரவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுவதாய் சொன்னார். மணி பதினொன்று ஆகிறதே”
“ஏதோ வேலையாய் போவதாகச் சொன்னாரே? தாமதம் ஆனாலும் ஆகலாம் என்று கூட சொன்னார் இல்லையா?”
“உனக்குப் புரியாது சித்தி. அப்பா வருவதற்குக் கொஞ்சம் தாமதம் ஆனாலும் எனக்குக் கவலையாய், இருக்கும்” என்றாள் பாவனா. ‘இந்த அன்பை, பாசத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?’ என்ற தொனி வெளிப்பட்டது அவள் குரலில்.
சுந்தரி பாவனாவை ஒரு வினாடி கண்ணிமைக்காமல் பார்த்தாள். அவளும் வயதில் ரொம்ப மூத்தவள் ஒன்றும் இல்லை. ஆனால் உலக ஞானம் அதிகமாய் இருந்தது. நிறைய புத்தகங்களைப் படிப்பாள்.
தந்தையின் மீது அன்பு இருப்பதில் தவறு இல்லை. ஆனால் பாவனா, அளவுக்கு அதிகமாய் தந்தையை நேசித்துக் கொண்டிருக்கிறாள். ‘இப்படி ‘அளவுக்கதிகமாய் நேசிப்பதை’ நிறைய பேரிடம் கண்டிருக்கிறாள் அவள். முக்கியமாய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்களிடம் குறிப்பிட்ட ஒருவரைத் தம் “ஐடியல் ஷி” யாய் தேர்ந்தெடுத்துக்கொண்டு, தொடர்ந்து அந்த மூன்று ஆண்டுகளும் அவளுடைய பாராட்டைப் பெறவேண்டும் என்று நினைப்பார்கள். அது ரூம்மேட் ஆக இருக்கலாம். லெக்சரர் ஆகவும் இருக்கலாம். ‘அவள் இன்றி தன்னால் வாழ முடியாது’ போன்ற வார்த்தைகளை டைரியில் எழுதிக் கொள்வதும், தன் வாழ்க்கை அவள் மீதுதான் ஆதாரப்பட்டிருக்கிறது என்பது போல் நடந்து கொள்வதையும் அவள் கண்டிருக்கிறாள். தாழ்வுமனப்பான்மை, ஆதாரப்படும் குணம்.. இவைதான் இது போன்ற மனிதர்களை உருவாக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.
கொஞ்சம் வயது வந்த பிறகு எதிராளியிடமிருந்து உந்துதல் பெறலாமே ஒழிய, அதற்குப் பிறகாவது தமக்குத் தாமே பண்பைச் சீர்த்திருத்திக் கொள்ள முடியாத நபர்கள் வாழ்க்கையில் மிக மதிப்பு வாய்ந்த, பதினாறு முதல் இருபத்திநான்கிற்கு உட்பட்ட வயதை இதுபோன்ற வழிபாட்டு உணர்வுடன் கழித்து விடுவார்கள்.
பாவனா விஷயத்தில் சுந்தரிக்கு பயமாக இருந்தது. அந்தப் பெண்ணிற்கு தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்று எதுவும் இல்லை. ரொம்ப சாதாரணமான பெண். காலத்துடன் அவளால் மாற முடியாது. ஏதோ நாட்கள் சாதாரணமாய்க் கழிந்து போய்க் கொண்டு இருக்கிறதே என்ற எண்ணம்தான் அவளுக்குத் திருப்தியைக் கொடுத்து வந்தது. அது சுந்தரிக்குப் பிடிக்கவில்லை.
காலம் முன்னைப் போல் இல்லை. முன்பில்லாத எத்தனையோ பிரச்சனைகளை தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது அவள் உத்தேசம். ஆனால் இதொன்றையும் சொல்லாமல் தன் எண்ணங்களை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, “பைத்தியக்கார யோசனைகளை விட்டுவிட்டு படிப்பின் மீது கவனத்தைச் செலுத்தினால் நல்லது” என்றாள் சுருக்கமாய்.
“பாஸாகி விடுவேன் சித்தி” என்றாள் பாவனா அது ரொம்ப சாதாரண விஷயம் என்பது போல்.
“ஏதோ பாஸாவது இல்லை பாவனா. நன்றாகப் படிக்கணும். உறுதியோடு படிக்கணும். நல்ல மார்க் வாங்கணும். படிப்பு பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்குப் புரியவில்லை. அந்தப் படிப்பு முடிக்காததால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்றும் உனக்குத் தெரியாது. பொருளாதார பக்கபலம் இல்லாமல் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை பாவனா.”
“அப்படி என்றாள் நீ எங்க வீட்டில் கூட சந்தோஷமாய் இல்லையா? இங்கே சுதந்திரம் கிடையாதா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை. இந்த அதிர்ஷ்டம் எல்லா இடத்திலும் கிடைத்து விடாது. நம் வீடுதான் உலகமே என்று எண்ணிவிடாதே. எப்போதும் நீ இந்த நான்கு சுவர்களுக்கு இடையில் இருந்து விட முடியாது. வேலை இல்லாவிட்டாலும் படிப்பாவது இருந்தால் என்றாவது பயன்படும். என் அனுபவத்தால் சொல்கிறேன்.”
பாவனா சிரித்துவிட்டு “உன் அனுபவம் உன்னை ரொம்பவும் பயமுறுத்தி விட்டது சித்தி. எவ்வளவோ பேர் இந்த உலகத்தில் சந்தோஷமாக இல்லையா?” என்றாள். சுந்தரி மேற்கொண்டு வாதாடவில்லை. மௌனமாய் இருந்துவிட்டாள்.
எந்த எதிர்கால அனுபவம், பாவனாவுக்கு அந்த சந்தோஷத்தின் பொருளை உணர்த்தப் போகிறதோ காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்.
பாவனா பத்தாம் வகுப்புக்கு வந்துவிட்டாள். இதழ் விரியும் ரோஜாவைப் போல் அவள் அழகு மலர்த் தொடங்கியது. தொட்டால் கன்றிப் போய்விடும் போன்ற மாந்தளிர் மேனி.
அவளைப் பார்க்கும் போது அருந்ததிக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும். இவள் உண்மையிலேயே தன் மகள்தானா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அந்த மூக்கைப் பார்த்தால் எங்கேயோ பார்த்தாற் போன்ற நினைவு வரும். உடனே தன் யோசனைக்குத் தானே சிரித்துக் கொள்வாள். அவளுக்கு மட்டும் அபாரமான நினைவாற்றல் இருந்திருக்குமானால், தன்னோடு கூட ஒரே அறையில் பிரசவித்தப் பெண்ணின் மூக்கல்லவா இது என்று நினைவுக்கு வந்திருக்கும்.
பாவனா பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிவிட்டாள். அதுகூட சுந்தரி வலுக்கட்டாயமாய் உட்கார வைத்துப் படிக்கச் செய்ததால்தான்.
“இந்த வருஷம் பாவனாவுக்குக் கல்யாணம் முடித்து விடுவதுதான் நல்லது என்று தோன்றுகிறது.” மனைவியும், சுந்தரியும் ஒன்றாக இருக்கும்போது சொன்னான் விஸ்வம்.
“உங்க விருப்பம் எப்படியோ அப்படியே செய்யுங்கள். நான் போவதற்குள் அவளுடைய கல்யாணத்தைப் பார்க்கிற அதிர்ஷ்டமாவது கிடைக்கட்டும்” என்றாள் அருந்ததி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தபடி.
“வேண்டாம் அத்தான். பாவனாவுக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது? பதினாறு வயது கூட நிரம்பவில்லை. இப்போதிலிருந்தே கல்யாணம், குழந்தை என்று பாரத்தை அவள் தலையில் போடாதீங்க” என்றாள் சுந்தரி.
“எனக்குக் கூட அவளைப் படிக்க வைக்கணும் என்றுதான் இருக்கு. ஆனால் நம் ஊரில் ஒரே ஒரு ஜூனியர் காலேஜ்தான் இருக்கு. அதுவும் கோ எஜுகேஷன். ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து படிக்க வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை” என்றான் விஸ்வம்.
சுந்தரி திகைத்துப் போனாள். விஸ்வம் இப்படி யோசிப்பான் என்று அவள் நினைக்கவில்லை.
“நாலுபேருடன் சேர்ந்து பழகினால்தானே அவளுக்கு உலக அனுபவம் வரும்” என்றாள்.
“உனக்குத் தெரியாது சுந்தரி. இது அந்த காலம் இல்லை. இளம்வயது பெண், அதுவும் கொஞ்சம் அழகாய் இருந்துவிட்டால் இந்த ஆண்பிள்ளைகள் எப்படியெல்லாம் தொந்தரவு செய்வார்களோ நான் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே அவள் வெறும் கோழை.”
“நான் படிக்கிறேன் அப்பா. என் சிநேகிதிகள் எல்லோரும் கல்லூரியில் சேருகிறார்கள்” என்றாள் பாவானா செல்லம் கொஞ்சுவது போல். கல்லூரி மாணவி ஆகி விட வேண்டும் என்ற துடிப்பு அவளுக்கு. அதானே தவிர படிப்பில் அவ்வளவு நாட்டம் கிடையாது.
“போகட்டும். சேர்த்து விடுங்கள். நல்ல வரன் ஏதாவது வந்தால் அப்போது நிறுத்தி விடலாம்” என்றாள் அருந்ததி.
“ஆகட்டும். பார்ப்போம்” என்றான் விஸ்வம் அரை மனதுடன்.
அதிர்ஷ்டவசமாய் அந்த வருடமே அவ்வூரில் பெண்கள் கல்லூரியைத் திறந்து விட்டதால் பிரச்சினை தீர்ந்துவிட்டது. பாவனா இன்டரில் சேர்ந்தாள். கல்லூரி ஊருக்குக் கொஞ்சம் தொலைவில் இருந்தது.
பத்து ஆண்டுகளாய் வீட்டையும், வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கூடத்தையும் தவிர வேறு எதுவுமே தெரியாத பாவனாவுக்கு சிறகு முளைத்து விட்டாற்போல் இருந்தது.
உலகதத்தைப் போலவே நூல் நிலையங்களிலும் நல்ல புத்தகங்கள், சாதாரண புத்தகங்கள் என்று இரண்டு வகை உண்டு. மனிதனை சாதாரண வாழ்க்கை ஈர்ப்பது போலவே சாதாரண புத்தகங்கள் கவர்ந்துவிடும்.
இவ்வளவு நாளாய் புத்தகங்களைப் படிப்பதற்கு விஸ்வம் அவளை அனுமதித்தது இல்லை. சுந்தரிதான் படித்துவிட்டு அவ்வப்பொழுது கதைகளைச் சொல்லுவாள்.
பாவனா முதல் முதலில் படித்த புத்தகம் கோபிசந்த் எழுதியது. அதைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் அந்த எழுத்தாளரைத் திட்டித் தீர்த்தாள். இப்படிப் பட்ட கதைகளை ஏன் எழுத வேண்டும் என்று நோந்துகொண்டாள். காதல் கதைகள், சஸ்பென்ஸ், த்ரில்லர் கதைகள்தான் அவளுக்கு மிகவும் பிடித்தன.
பாவானாவுக்கு நாட்கள் வேகமாகக் கழிந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. வாழ்க்கை நிம்மதியைக், சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது.
தானும், தன் வீடும், தோட்டமும், கடலும் அழகான கலை உருவங்கள் போல் தோற்றமளித்தன.
அந்த கலை எல்லைக்குள் அவளை விரும்பி வருபவன் காதல் என்ற அஸ்திவார்த்துடனும், அன்பு என்ற சுவர்களுடனும், நேசம் என்ற மேற்கூரையுடனும் வீட்டைக் கட்டுவான். அந்த வீட்டின் எல்லைக்குள் வளரும் புல் கூட கலையழகுடன் நாட்டியமாடும். கலப்படமற்ற காற்று சுருதி சேர்க்கும்.
“நீ இப்பொழுதெல்லாம் கனவுலகில் ஆழ்ந்துப் போய் விடுகிறாய். அது அவ்வளவு நல்லது இல்லை” என்றாள் சிநேகிதி சைலஜா.
வகுப்புகள் இல்லாததால் இருவரும் ஏரிக்கரையில் உட்கார்ந்திருந்தார்கள்.
“என்னுடையது கனவு உலகம் இல்லை சைலூ! வீட்டை அழகாக சீர் திருத்தி அமைத்துக் கொள்வது, சுற்றுச் சூழ்நிலையை அனுகூலமாய் மாற்றிக் கொள்வது எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. நான் ஒன்றும் ராஜபோகத்தைப் பற்றி கனவு காணவில்லை. எனக்கு வரப் போகும் கணவன் என்னை எனக்காகவே காதலிப்பான். எங்களுக்குள் பரஸ்பரம் புரிந்துக்கொள்ளும் தன்மை இருக்கும். கனவுகளை நினைவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி இருக்கும். மிகச் சிறிய விருப்பம் இது.”
“எல்லாமே நாம் நினைத்தாற்போல் நடக்காது பாவனா. பெண்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கை பெரிய சஸ்பென்ஸ். கடலைப் போல ஆழமானது. எல்லைகள் இல்லாதது. உள்ளே என்ன இருக்கிறது என்று நம் கண்களுக்குத் தெரியாது.”
“கடலிலிருந்துதானே எல்லையற்ற செல்வத்தை எடுக்கிறோம். நம்முடைய முயற்சியைப் பொறுத்து பலன் இருக்கும்.”
“வாயால் சொல்வதும், கனவு காண்பதும் எளிது. அநுபவித்துப் பார்த்தால் தவிர கஷ்டம் புரியாது.”
“ஏன் புரியாது? எல்லாமே புரியும். இப்போ எங்களுக்கு அனுபவமே கிடையாது என்கிறாயா? எங்க வீட்டுச் சூழ்நிலையைப் பார். அம்மா பன்னிரண்டு வருடங்களாய் கேன்சர் நோயால் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறாள். அப்பாவின் வருமானமும் சொற்பம்தான். ஆனாலும் எங்க வீட்டில் சுகத்திற்கும், சந்தோஷத்திற்கும் என்ன குறைவு? எவ்வளவு அன்னியோன்னியமாய் இருக்கிறோம் என்று நீதான் பார்த்து வருகிறாயே?”
“உங்க வீட்டு எல்லை மிகவும் சிறியது பாவனா. அதுதான் உலகம் என்று நீ எண்ணிவிடக் கூடாது. எல்லோரும் உங்க அப்பாவைப் போல் இருந்துவிட மாட்டார்கள்.”
“எல்லோரும் இருந்து விட மாட்டார்கள்தான். ஆனால் சிலராவது இருப்பார்கள். அப்படிப்பட்டவரைத் தான் அப்பா தேடிக் கொண்டு இருக்கிறார். அவருடைய தேர்வில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”
“அப்படிப்பட்ட தந்தை இருப்பது உன் அதிர்ஷ்டம். நீ விரும்பியது போலவே வரன் அமைய வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்.”
‘எல்லோருக்கும் தன் குடும்பத்தின் மீது பொறாமை, அவர்கள் வீட்டில் அப்படி இல்லை என்பதால். அதனால் அவள் கஷ்டப்பட்டால் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்’ என்று எண்ணிய பாவனா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
விஸ்வம் வரன் வேட்டையில் ஆழ்ந்துவிட்டிருந்தான். அவள் இன்டர் படிப்பு முடிவடைய இன்னும் சில மாதங்களே இருந்தன. அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி வைத்துவிட்டால், விடுமுறையில் கல்யாணத்தை முடித்து விடலாம் என்று நினைத்திருந்தான் அவன்.

Series Navigationஜென்ம சாபல்யம்….!!!பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *