கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”

author
0 minutes, 3 seconds Read
This entry is part 33 of 46 in the series 19 ஜூன் 2011

அன்னை தெரேசா நூற்றாண்டு விழா
கடந்த  28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் கம்பன்    கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா” பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கோனேஸ் நகரில்  வெகு சிறப்பாக நடந்தேறியது.

இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன் , திருமதி உஷா இராஜன் இணையர் மங்கல  விளக்கேற்றி இனிதே விழாவைத் தொடங்கி வைத்தனர்.
மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கம் பாட, செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய்  வாழ்த்தைத்  தன்இனிய குரலில்  பாடிச்  சுவை ஊட்டினார் .

தொடர்ந்து   செல்விகள் ஜெயராஜா ஜெநோலியா , குலேந்திர ராஜா தேஜஸ்வினி , கவீந்திரன் சுஜிதா, ஹரிஹரன் அஜீனா, தமிழ்வேந்தன் அனுஷ்யா ஆகியோர் நல்ல தமிழ் ஒலிப்புடன்  ஒருமித்த குரலில் சிறிதும் பிசிறின்றித் தமிழிசையினை மிகவும் அற்புதமாக  அளித்துத்  தங்கள் குரல் வளத்தால் அனைவர் பாராட்டையும் பெற்றனர்.

பின்னர் “இளமயில்” செல்வி சாரநாயகி கோபாலகிருஷ்ணன் ,  நளினமான   பரத நாட்டியத்தால் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தார் .

பன்மொழி அறிஞரும்  சிறந்த கல்வியாளருமான திருமதி சுசீலன் இராதிகா தேவி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்க,  மகளிரணி செயலர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் அனைவரையும் அன்புடன் வரவேற்றார் .  திருமதி இராதிகா தேவி தம்  தலைமை உரையில், “பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோரை அன்பு செலுத்திப் பாதுகாக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

“தியாகச்சுடர்” அன்னை தெரேசா” என்னும் தலைப்பில் கவிஞர்கள் லினோதினி சண்முகநாதன், சரோஜா தேவராஜ், அருணா செல்வம் ஆகியோர்  தமிழ் மணக்க “கவி மலர்” சூட்டியபின் “அமைதியின் ஆலயம் அன்னை தெரேசா” என்ற தலைப்பில்  மகளிரணி பொருளாளர் திருமதி லெபோ லூசியா அவர்கள் அன்னை தெரேசாவின் அன்பு, தொண்டு, கருணை , இறைபக்தி பற்றிய செறிவான சிறப்புரையை வழங்கினார்கள்.  மகளிரணி திங்கள் தோறும் நடத்தும் கருத்தரங்குகளில் இடம்பெற்ற சிறப்புச் சொற்பொழிவுகள், கவிதைகள், சென்ற “மகளிர் விழா” நிகழ்வுகளில் சில பகுதிகள்   தாங்கிய  “மலர்” ஒன்று திருமதி உஷா இராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து திருமதி சுசீலா இராதிகா தேவி, நம் பாரம்பரியக் கலைகள் தொடர்ந்து பரிமளிக்கும் என்ற நம்பிக்கையை   ஊட்டிய  செல்விகள் பிருந்தா நடராஜா , பானுஜா நடராஜா, அனுஷ்யா தமிழ் வேந்தன் ஆகியோரின் “வீணை இசை” எல்லோரையும் கிறங்கச் செய்தது.     .
முத்தாய்ப்பாகச்  “சொற்போர் அரங்கம்”, குடும்பத்தில் விரிசல் உண்டாகக் காரணம்  பலவாக இருப்பினும் ,  ‘தான் எனும் ஆணவம் ‘,’பொருளாதாரம் ‘,  கடமைகள்’, ‘சுற்றம்’ இவையே பெரும்பாலும் அடித்தளமாக அமைகின்றன  என்னும் கனமான தலைப்பில் விரிவுரைக்கப்பட்டது . முறையே கவிஞர் லினோதினி சண்முகநாதன், கம்பன் இதழ் ஆசிரியர் கவிஞர்  அருணா செல்வம்,  கம்பன் மகளிரணித் துணைச் செயலர் திருமதி சுகுணா சமரசம், கம்பன் மகளிரணி செயற்குழு உறுப்பினர் திருமதி பிரபாவதி அசோகன் முதலியோர்  ஆழமான கருத்துக்களைத் தேவையான எடுத்துகாட்டுகள்,கதைகள் ,பாடல்கள் மூலம் வலியுறுத்த ,  செயலர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் தலைமை ஏற்று , ஒரு குடும்பம்  எத்தனை  பிரச்சினைகள் வந்தாலும் விட்டுகொடுத்தல்    மூலம்  அவற்றைச்  சமாளிக்கலாம் என்ற நடைமுறை அறிவுரையும் அளித்தார். அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்து சிறப்படைந்தது  .

அடுத்து ‘கி போர்டு ‘ வாசித்த செல்வன் சரண் கோபாலகிருஷ்ணன் தன் பிஞ்சு விரல்களின் விளையாட்டால் இசை மழை பொழிந்து அனைவரையும் கவர்ந்தான். நிறைவாக இடம்பெற்ற “தமிழாக்கப் போட்டி” மகளிரணித் துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் அவர்கள் தயாரிப்பில் நடத்தப்பட்டது .  திருமதி சுகுணா சமரசம் உடன் நடுவராக செயல்பட, விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பத்து மகளிர் கலந்து கொண்டு பிறமொழி  நீக்கித்  தமிழ் பேசும் ஆர்வம் இருந்ததால் , தமிழில் சொற்களுக்குப்  பஞ்சமில்லை என்று நிரூபித்தனர்.  போட்டிக்குத்  தேந்தெடுக்கப்பட்ட கருத்துக்கள் அரிய,பயனுள்ள கருத்துக்களாக இருந்தன. கம்பன் கழகத் தலைவரின் துணைவியார் , மகளிரணியின் செயற்குழு உறுப்பினர் என்பதற்கு மேலாய் ஆர்வத்துடன்  உழைக்கும் திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்கள் தன் நன்றி  உரையைக்  கவிதையாக நவின்று, தன் பேச்சுத் திறமையை நிலை நாட்டினார். விழா நிகழ்வுகள் அனைத்தையும் தன் இனிய குரலாலும், அழகுத் தமிழாலும் தொகுத்து வழங்கிய துணைப்பொருளாளர் திருமதி கோமதி சிவஹரியால் விழா மேலும்  மெருகேறியது. கம்பன் கழகம் பொங்கல் விழாவில் நடத்திய “கோலப்போட்டி”, “ஓவியப்போட்டி” களில் வெற்றி பெற்ற  பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் மகளிரணி பரிசுகள் வழங்கி நிறைவு கொண்டது.

குளிர்பானம், காபி , சிற்றுண்டி என சுவையான உணவும் பரிமாறப்பட்டது
மொத்தத்தில் கம்பன் கழக மகளிரணியின் “இரண்டாம் ஆண்டு மகளிர்விழா ” வெற்றியைக் கண்டது என்பதில் சந்தேகமில்லை!

-தாமரை- பிரான்சு.
09.jpg
08.jpg
01.jpg
02.jpg
03.jpg
04.jpg
05.jpg
06.jpg

Series Navigationராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *