தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

அறிவா உள்ளுணர்வா?

பி கே சிவகுமார்

Spread the love

கனிமொழி கைது பற்றி எழுதிய ஜெயமோகன் இப்படி முடித்திருந்தார்.
“இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை. கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.”
ஜெயமோகன் இதை இந்த விதமாகப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இதைப் படித்தவுடன் 2000 ஆண்டு தீபாவளி தினமணி மலரில் சுகதேவ் ஜெயகாந்தனிடம் எடுத்த பேட்டியில், பின் தொடரும் நிழலின் குரல் பற்றிக் கேள்வி கேட்டது நினைவுக்கு வந்தது. அதற்கு ஜெயகாந்தன் வீழ்ச்சியைக் கொண்டாடுவதில் என்ன இருக்கிறது என்று பதிலளித்த ஞாபகம். அதனோடே ஜெயமோகனிடம் இருந்து இன்னும் நல்லதாக எதிர்பார்க்கிறேன் என்றும் சொல்லியிருந்தார். (அந்தப் பேட்டி நான் நடத்திய ஜெயகாந்தன் இணையதளத்தில் இருந்தது. ஜெயகாந்தனின் சரியான வார்த்தைகளை எடுத்து இங்கே பயன்படுத்தலாம் எனத் தேடினால், இணையதளம் சிலநாட்களாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது.) ஜெயகாந்தன் 2000ல் எதிர்பார்த்ததை ஜெயமோகன் 2011ல் நிறைவேற்றியிருக்கிறார்.
ஒருவர் வீழ்ந்திருக்கும்போது, அதை ஊர் கொண்டாடும்போது, கூட சென்று நாலு அடி போடுவதில் தனக்கு ஆர்வமில்லை என்று ஜெயமோகன் சொல்லியிருப்பது, இந்தப் பத்தாண்டுகளில் ஜெயமோகன் கடந்து வந்திருக்கும் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது என்றேன் நான். ஜெயமோகன் மீது விமர்சனம் வைத்திருக்கும் என் நண்பர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ”ஒருவர் இறந்துபோன பிறகு நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை. அவர்களைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று வரட்டும். அப்போது சொல்கிறேன்” என்று ஜெயமோகன் எழுதட்டும். அப்போது நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார் நண்பர்.
நண்பர் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவே எனக்கும் படுகிறது. சின்னக் குத்தூசி மரணத்துக்குப் பிறகு அவர் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை எனக்கு உவப்பானதாக இல்லை. இத்தனைக்கும் நான் திராவிட இயக்க ஆதரவாளனோ, சின்னக் குத்தூசியை நன்கறிந்தவனோ இல்லை. பாவண்ணன் சின்னக் குத்தூசி பற்றி எழுதிய கட்டுரையில் அவருக்கு சுந்தர ராமசாமி, பாவண்ணன் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்களை வாசிக்கும் பழக்கம் இருந்தது என்று அவருடன் பழகி அறிந்ததைப் பதிவு செய்திருக்கிறார். பாவண்ணனின் அந்தக் கட்டுரை நல்ல அஞ்சலிக் கட்டுரை. ஜெயமோகனோ சின்னக் குத்தூசி பற்றி எழுதுகையில் அவருக்கு இலக்கியப் பரிச்சயம் என்பதே ஐந்து நிமிடம் நண்பர்களைக் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொள்வதுதான் என்று எழுதியிருந்தார். கலைஞர் குறித்து ஜெயமோகன் செய்த விமர்சனத்துக்கு சின்னக் குத்தூசிதான் முதலில் கண்டனம் எழுப்பி அதைப் பிரச்னையாக்கினார் என்பதால் அதனடிப்படையில் அவரை ஜெயமோகனுக்குப் பிடிக்காமல் போனதோ என்ற கேள்வியே ஜெயமோகனின் கட்டுரையைப் படித்ததும் உண்டானது.
சின்னக் குத்தூசி மரணம் பற்றிய ஜெயமோகன் கட்டுரைக்கு எதிர்வினையாக அவர் தளத்திலேயே பதில்கள் பிரசுரமாகியுள்ளன. அறிவுதளத்தில் செயற்படுகிற ஒருவர் பாவம், பச்சாதாபம் பார்க்காமல் சரியான விமர்சனம் செய்ய வேண்டும் என்பது ஜெயமோகன் நிலை. ஆனால், கனிமொழி கைதை ஜெயமோகனால் அறிவுதளத்தில் பார்த்து ஆதரிக்க முடியவில்லை. தர்க்கபூர்வமாக நியாயப்படுத்த இயலவில்லை. இந்த இடத்தில் வெளிப்படுகிற ஜெயமோகனையே எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். முக்கியமாக, ஜெயமோகனைத் தொடர்ந்து வாசித்து வருகிற வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். தர்க்கத்துக்கு அப்பாலும் முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் இருக்கின்றன என்று ஜெயமோகன் எழுத்தில் அடிநாதமாகச் சொல்லி வருகிறார். மனித மாண்பு குறித்த விஷயங்கள் (ஒருவர் இறந்தபின் குறைந்தபட்சம் உடனடியாக அவரைப் பற்றி மோசமாக எழுதாமல் இருத்தல்) தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட – அறிவுதளத்தில் அடங்காத –  நல்ல முடிவு என்று எனக்குத் தோன்றுகிறது. அறிவுதளம் சார்ந்து செயற்படுகிற் ஒருவர் பிறர் மனம் நோகுமே என்று கருத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது என்னும் ஜெயமோகன் ஒருபக்கம். பல விஷயங்களை அறிவுதளத்துக்கு அப்பாற்பட்டு, உள்ளுணர்வு சார்ந்து, அணுக வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தும் ஜெயமோகன் ஒருபக்கம். ஜெயமோகனைக் கடந்த பத்தாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வாசிக்கிற என்னைப் போன்ற வாசகர்களுக்கும் கூட குழப்பம் உண்டாக்குகிற இடம்.
ஜெயமோகனிடம் இருந்து எந்த இடத்தில் அறிவுத்தளம் சார்ந்து இயங்க வேண்டும், எந்த இடத்தில் உள்ளுணர்வு சார்ந்து, தர்க்கத்துக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்று ஒரு விளக்கமாக ஒரு கட்டுரை விரைவில் வரும் என்றே நினைக்கிறேன். ஆனாலும், அறிவுதளத்தையும் உள்ளுணர்வையும் (தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிலை) ஜெயமோகன் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார் என்ற விமர்சனங்களும் அவரைப் பிடிக்காதவர்களால் அந்தக் கட்டுரைக்குப் பின்னரும் வைக்கப்படும்.
ஜெயமோகன் இணையதளத்தில் படைப்புகள் வெளியாகும் அசுர வேகம் ஆச்சரியம் அளிக்கிறது. தமிழில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு மேல் எழுதியும் இன்னமும் எழுத்தின் மீதான ஆசை அலுக்காமல் இந்த வேகத்தில் ஜெயமோகன் இயங்கி வருவது – அசாதாரணமான சாதனை. அடுத்த பத்தாண்டுகளில் ஜெயமோகன் எழுத்துகளில் தெரியப் போகும் வளர்சிதை மாற்றங்களுக்கு அவர் இணையதள அனுபவங்கள் காரணமாக அமையும்.

Series Navigationகாங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமைஇப்போதைக்கு இது – 2

4 Comments for “அறிவா உள்ளுணர்வா?”


Leave a Comment

Archives