மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3

This entry is part 10 of 29 in the series 18 நவம்பர் 2012


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கன
டா

 

பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)

 

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.

அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறார்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

 

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

 

**********************


நாடக உறுப்பினர்
1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)
2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)
3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 50)
4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)
5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனிகாவின் கூட்டாளி
6. ஜார்ஜ் வாலஸ் (Sir George Crofts) (50 வயது) : மேடம் மோனிகாவின் தோழன்.

 

************************

மேடம் மோனிகாவின் வேடம்
(Mrs. Warren’s Profession)
நான்கு அங்கங்கள்


(நான்காம் அங்கம்)
அங்கம் -4 பாகம் –3

 

 

இடம்: ஹொனோரியா ஃபிரேஸர் மாளிகை , ஸூர்ரி, இங்கிலாந்து
நடந்த ஆண்டு : 1893
பொழுது : சனிக்கிழமை பகல் நேரம்.

 

அரங்க அமைப்பு: [பிரேஸர் & வார்ரன் வாணிபப் பெயர்ப் பலகை தொங்கும் ஆபீஸ் தளம். அந்த தளம் நியூ ஸ்டோன் மாளிகை மேல் அமைந்துள்ளது. அறை நடுவே மத்தியில் ஒரு பெரிய மேஜை . எதிர் எதிரே இரு நாற்காலிகள், மேஜை மேல் மின்சாரப் படிப்பு விளக்கு. ஃபிராங்க் அறையுள்ளே உலவிக் கொண்டிருக்கிறன், அப்போது அறையைத் திறந்து மிஸ். விவியன் நுழைகிறாள். சிறிது நேரத்தில் இத்தாலி செல்லும் வில்லியம் பவல் விடை பெற வருகிறார். தன்னோடு இதாலிக்கு வர விவியனை, வில்லியம் அழைக்க அவள் மறுக்கிறாள். ]

 

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஃபிராங்க்: வாருங்கள் வில்லியம். நலமா ? உங்களைக் காண மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே வாருங்கள். [கை குலுக்கிக் கொள்கிறார்கள்]
வில்லியம்: [வந்து கொண்டே] எப்படி இருக்கிறாய் மிஸ். விவியன் ? இன்னும் ஒரு மணி நேரத்தில் இத்தாலிக்குக் கப்பலில் புறப்படுவேன். அதற்குள் உன்னை உடன்படச் செய்து இத்தாலிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

விவியன்: [வியப்பாக] நான் ஏன் இத்தாலிக்கு வர வேண்டும் ?

வில்லியம்: [சிரித்துக் கொண்டு] ஏன் என்றா கேட்கிறாய் ? உன்னை இயற்கை வனப்பிலும், காதல் களியாட்டத்திலும் மூழ்க்கி விடத்தான் ! நீ என் விருந்தாளியாக என் மாளிகையில் தங்கலாம், கடலில் நீந்தலாம். மலைச் சிகரத்தில் ஏறலாம் ! நீயும் நானும் ஒன்றாய் உல்லாசப் பயணம் செய்யலாம் !

ஃபிராங்க் : [கவலையுடன் நோக்கி] பயனில்லை வில்லியம்; அவள் ஒரு காதல் விரோதியாய் ஆகிவிட்டாள்.. நான் அவள் மீது கொண்ட காதலை உதாசீனம் செய்து விட்டாள். காதல் களியாட்டங்களில் அவள் வெறுப்படைந்து விட்டாள்.

விவியன்: மிஸ்டர் வில்லியம் ! எனக்குக் காதல் வாழ்வு அத்தமித்து விட்டது. காதல் களியாட்டங்களில் விருப்பம் இல்லை எனக்கு. நான் ஏகாந்த வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளப் போகிறேன்.

வில்லியம்: [பூரிப்புடன்] மிஸ். விவியன் ! அப்படிச் சொல்லாதே ! என்னோடு நீ வெரோனாவுக்கு வந்தால் உல்லாச வாழ்வு உனக்குக் காத்திருக்கிறது. அடுத்து வெனிஸ் ஒப்பனை நகருக்கு உன்னை அழைத்துச் செல்வேன். இந்த இள வயதில், இனிய உலகில் நீ சுகித்து வாழ நான் வழி செய்வேன் உன் தோழனாய்.

ஃபிராங்க்: இது ஒதுக்க முடியாத உல்லாசப் பயணம் விவியன். உடனே உடன்படு ! இது ஓர் அரிய வாய்ப்பு ! என்னருமை வில்லியம் ! நானும் விவியனோடு வரலாமா? எனக்கும் உமது வரவேற்பு இருக்குமா?

வில்லியம்: இந்த உல்லாசப் பயணம் என்னருமைத் தோழி விவியனுக்கு மட்டுமே ! உனக்கு நிச்சயம் இல்லை !

விவியன்: நன்றி வில்லியம் ! வேண்டாம் எனக்கு இப்போது இந்த உல்லாசப் பயணம் ! நான் யாருடனும் இத்தாலி வெனிஸுக்கோ, வெரோனாவுக்கு வேடிக்கை பார்க்கப் போவதில்லை ! இங்கே எனக்கு வேலை இருக்கிறது.

 

ஃபிராங்க்: மிஸ் விவியன் நரம்புக் கோளாறு நோயில் பாடுபடுகிறார் என்பது என் யூகம். அவள் வேண்டாம் என்றால் வற்புறுத்த வேண்டாம் வில்லியம்.

வில்லியம்: சரி வெனிஸ் வேண்டாம் என்றால் பாரிஸ் போகலாம் ! ஜெனிவாவுக்குப் போகலாம் ! அல்லது பிரசெல்ஸ் போகலாம்.

விவியன்: உல்லாசக் களியாட்டத்துக்கு பிரசெல்ஸ் நகரம்தான் உனக்குக் கிடைத்ததா வில்லியம் ?

வில்லியம்: சரி பிரசெல்ஸ் போக வேண்டாம் ! வெனிஸுக்குப் போவோம் உல்லாசக் களியாட்டத்துக்கு !

விவியன்: பார்க்கப் போனால் இரண்டு நகரத்திலும் எனக்கு ஒரே மாதிரி மந்த வாழ்வுதான் ! உமக்கு உல்லாச புரியாய் இருப்பவை எனக்குத் தொல்லை தருவதாய் நான் கருதுகிறேன். மிஸ்டர் வில்லியம் ! அங்கே நீங்களும் ஃபிராங்கும் போய் உலாவி வாருங்கள்.

வில்லியம்: நான் தனியாகப் போகிறேன்; எனக்குக் கூட்டாளியாய் நீ வர வேண்டும். வேறு யாரும் உடன்வர வேண்டாம். மிஸ். விவியன் ! ஏதாவது புதுப் பிரச்சனை தோன்றி இப்போது இடையூறு தருகிறதா ? [வருத்தமுடன்] நான் இங்கு வந்தது உன் வேலைக்கு இடையூறு தந்தது என்றால் போய்விடுகிறேன் !

விவியன்: [கோபத்துடன்] வேண்டாம் ! இங்கு அமருங்கள், நான் ஒன்று சொல்கிறேன். [வில்லியம் வந்து அமர்கிறார்] என் வேலை இன்னும் இங்கே ஆரம்பிக்க வில்லை. எனக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டிருப்ப தாக நீங்கள் இருவரும் நினைக்கிறீர் ! அப்படி ஒன்றும் எனக்கில்லை ! நானின்று இரண்டு சிரமம் பற்றிப் பேச விரும்ப வில்லை. எனது முதல் வேண்டுகோள் ஃபிராங்க் சகோதரனுக்கு : காதல் களியாட்டம் பற்றி இளமைக் கனவுக் காட்சிகள் எதுவும் என்னிடம் காட்ட வேண்டாம் ! இரண்டாவது கோரிக்கை வில்லியம் தோழருக்கு : உல்லாசப் பயணம், இயற்கை ரசிப்பு எதிலும் எனக்கு இச்சை இல்லை. உமக்கு அவற்றில் விருப்பம் இருப்பின் எனக்குக் கவலை இல்லை. நாம் மூவரும் என்றும் நண்பராக நிலைத்திருக்க என் ஆலோசனை இது ! என்னை ஓர் ஏகாந்தப் பெண்ணாய் நடத்தி வாருங்கள். நான் தனிப் பெண்ணாய் வாழப் போகிறேன், நிரந்தரமாய் ! உல்லாசக் களியாட்டத்தை எல்லாம் நிரந்தரமாய் ஒதுக்கி ஒரு கடமைப் பெண்ணாய் வாழப் போகிறேன் !

 

 

[தொடரும்]


***************
தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession
(f) http://www.enotes.com/mrs-warrens-profession
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 14 , 2012)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationநினைப்புபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *