தமிழ் நம்முடைய தாய்மொழி. நாம் நமது தாய்மொழியை மதிக்க வேண்டும். தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் பழக வேண்டும்.
ஆங்கிலம் உலக மக்களை இணைக்கும் மொழி. நம் நாட்டின் பல்வேறு பாகங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், பல்வேறு தரமான இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் உதவும் மொழியாக இருந்துவருகிறது.
ஒருவருக்கு ஆங்கிலம் தெரிவதால் மட்டும் அவர் சிறந்த, உயர்ந்த மனிதராகிவிடமாட்டார். நல்லமனிதராக வாழ்ந்தால் மட்டுமே ஒருவர் மதிப்பிற்குரியவர்; உயர்ந்த மனிதர். இதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது”.
_ஆங்கிலம் பேசுவதை தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் விதமாக ஒரு புத்தகம் தயாரித்துத் தருமாறு கோரப்பட்ட போது அந்தப் புத்தகத்தில் மேற்கண்ட வரிகள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்று தோன்றியது. தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் புலமை கிடைக்க வழிவகைகளைச் செய்துகொண்டே அடித்தட்டுக் குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி மட்டுமே தகும் என்று போதிப்பவர்களைக் கண்டு கோபம் வருகிறது. அதே சமயம் ஆங்கிலம் என்பது தொடர்புமொழி மட்டுமே, அது ஒரு மனிதரின் தரத்தை நிர்ணயிப்பதல்ல; ஒருவர் தன் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டுள்ள வாழ்வுமதிப்புகளே, அவர் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே நிலவும் முரண்பாடின்மையே என்ற புரிதலை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது கல்விக்கூடங்களின், ஆசிரியர்களின் கடமையல்லவா! ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதேபோல், ஆசிரியர்தொழில் என்பது மற்ற வாழ்க்கைத்தொழில்களைப்போல் வருவாய் ஈட்டித்தரும் தொழில் மட்டுமே என்ற மனோபாவத்தோடு ஆசிரியர்களாகிறவர்கள், கல்விக்கூடங்களை ஆரம்பித்து நடத்திவருபவர்கள் பலவழிகளிலும் மாணாக்கர்களின் மதிப்பழிப்பவர்களாகவே பெரும்பாலும் செயல்பட்டுவருவதையும் காணமுடிகிறது.
குழந்தைகளுக்கு சுய மதிப்பையும், தன்னம்பிக்கையையும் ஊட்டிவளர்க்க வேண்டிய கல்விக்கூடங்களே, ஆசிரியப் பெருமக்களே அவர்களை மதிப்பழிப்பதை என்ன சொல்ல? இன்று கேள்விப்பட்ட விஷயம் மனதை மிகவும் நோகச் செய்கிறது. சென்னை அடையாறில் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் பயிலும் குழந்தை பேசும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஐந்து ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது என்று மனம் வருந்திக் கூறினார் குழந்தைகளின் நிலை குறித்த உண்மையான கரிசனம் கொண்ட நண்பரொருவர். அதாவது, ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியில் படிப்பவர் மறந்தும் தமிழ் பேசக் கூடாது. மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர இதுவா வழி? அக்கிரமமாக இல்லை? பகல்கொள்ளையை விட படுகேவலமான இந்தப் போக்கை சம்பந்தப்பட்ட பள்ளி இனியேனும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
தன் பிள்ளைகள் ஆங்கிலவழிக் கல்வி பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பணம் செலவழித்து இத்தகைய பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களாலும், நிர்வாகத்தாலும் பலவகையிலும் மதிப்பழிக்கப்படுகிறார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணாக்கர்களின், ஆங்கிலம் சரியாக பேச வராத மாணாக்கர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை, அவர்கள் தேறமாட்டார்கள் என்பதாகவெல்லாம் எடுத்துரைக்கப்பட்டு – இல்லையில்லை இடித்துரைக்கப்பட்டு பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உண்டு என்பதாக அறவுரைக்கப்பட்டு, அவ்வகையில் மதிப்பழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். இந்தக் கோபத்திலும், ஏமாற்றத்திலும், தன் பிள்ளை உருப்படப்போவதில்லை என்ற ஆதங்கத்திலும், தன் பிள்ளை ஆசிரியரின், பள்ளி நிர்வாகத்தின் செல்லப்பிள்ளையாகவில்லையே என்ற அவமானத்திலுமாய் வீட்டிற்கு வந்ததும் பிள்ளையை முட்டிபோட்டபடியே படிக்கச் சொல்லும் பெற்றோர்களும் அதிகம்பேர் உண்டு என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. பல பள்ளிகளில் மாணாக்கர்களை அடித்தலும், உதைத்தலும் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்களையெல்லாம் பள்ளிகளில் அடித்து உதைத்துத் தான் அருமையான பிறவிகளாக உருவாக்கினார்கள் என்று நுண்ணுணர்வுக்குப் பெயர்போன எழுத்தாளர்கள் கூட ‘கார்ப்பரல் பனிஷ்மெண்ட்’டையும், அதன்விளைவாய் பிள்ளைகள் மதிப்பழிக்கப்படுதலையும் நியாயப்படுத்தி எழுதுவது கூடுதல் அதிர்ச்சி.
குழந்தைகள் வருங்காலச் சிற்பிகள் என்கிறோம். ஒரு குடும்பத்தின், சமூகத்தின் சொத்து என்கிறோம். ஆனால், முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் அவர்களை எப்படியெல்லாம் மதிப்பழித்துக்கொண்டிருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டியது அவசியமில்லையா?
குழந்தைகள், பள்ளிக்குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க நுண்ணுணர்வுக் கருத்தரங்குகளும், கூட்டமைப்புகளும் இன்றைய இன்றியமையாத் தேவை.
====***”
நான் இப்படிச் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்றேன். என் அப்பாவை மட்டும் நான் பார்த்தேன்னா செருப்பாலேயே அடிப்பேன்” –
தன்னுடைய காதல்-கணவனை ஆள்வைத்துக் கொலைசெய்த தந்தையைப் பற்றி ஆற்றாமையும், ஆவேசமுமாய் கூறினார் சரண்யா என்ற இளம்பெண். தொலைக்காட்சியில் இந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய நிகழ்ச்சியைக் கண்டபோது மனம் மிகவும் அவலமாக உணர்ந்தது மனம். இது என்னவகையான தந்தைப்பாசம்? குடும்ப மானம் போய்விடும் என்று இப்படிப்பட்ட காரியத்தைச் செய்த தந்தையால் குடும்ப மானம் மட்டுமா கப்பலேறியதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகள், அன்பு, பாசம் இன்னும் எத்தனையெத்தனை காற்றோடு போய்விட்டது? நம் குழந்தை என்பது நம்முடைய கைப்பாவைகளா? திரைப்படங்களிலெல்லாம் காதல்மயம். வயதுக்கே உரிய உணர்வுகள், மகள் ஒருவரை விரும்புகிறாள்( மகள் விரும்பியவரும் நல்லவேலையில் இருந்தவர்தான்) என்று தெரிந்தும் அவளை இன்னொரு வசதிபடைத்த வரனுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதில் குறியாய் இருந்த தந்தை-தாய், வெகு இயல்பாய் கூலிப்படையிடம் பணம் கொடுத்து ‘வேலையை முடிக்கச் சொல்வதாய்’ திரும்பத்திரும்பத் தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள், திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டுவரும் காட்சிகளின் தாக்கத்தினாலோ என்னவோ – யோகா வகுப்பில் ஒரு பெண்ணிடம் தன் வருத்தத்தைக் கூற அவருடைய ஆலோசனையின்பேரில் கூலிப்படையினரை ‘வேலை’க்கமர்த்திய தந்தை………. அவருடைய குடும்ப மானம், சாதி அபிமானம் இப்பொழுது எதில் வந்து முடிந்திருக்கிறது? அன்பு என்பதன் மறுமுனையில் இத்தனை வன்மமும், குரோதமுமா?
இளந்தலைமுறையினருக்கு சிறந்த, பாரபட்சமற்ற ஆலோசனை மையமும், பாதுகாப்பான தாற்காலிகத் தங்குமிடங்களும், இலவச சட்ட உதவி மையமும், பெற்றோர்களுக்கும் ஆலோசனைக்கூடங்களும், ஆலோசனைக்கூட்டங்களும் மிகவும் அவசியம் என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்