தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்

Spread the love

(செய்தி: ரெ.கா.)

மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர், விமர்சகர் மு.பொன்னம்பலம் வென்றார். அவருடைய “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற நூலுக்கு அமெரிக்க டாலர் 10,000 பரிசாக வழங்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மு.பொ.நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
இதே நிகழ்வில் மலேசிய நூல்களுக்கான சிறப்புப் பரிசை நாவலாசிரியர் அ. ரெங்கசாமி வென்றார். அவருடைய “விடியல்” என்ற நாவலுக்கு மலேசிய ரிங்கிட் 10,000 வழங்கப்பட்டது. அவரும் நேரில் வந்து பரிசினைப் பெற்றுக்கொண்டார்.
தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தின் தலைவர் சோமசுந்தரம் இருவருக்கும் பரிசுகளை எடுத்து வழங்கினார். இவ்வாண்டு இலக்கியப் பரிசுக்காக அனைத்துலகிலும் இருந்து 150 தமிழ் நூல்கள் வந்ததாகவும் அவற்றை வடிகட்டி இந்த இரு நூல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசுகள் இவ்வாண்டு முதன் முறையாக வழங்கப்படுகின்றன. ஆனால் இனி தொடர்ந்து ஈராண்டுகளுக்கு ஒருமுறை இதே வகையில் பரிசுகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.
தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் என்பது மலேசியாவில் இயங்கும் இந்தியர்களுக்குச் சொந்தமான  தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தால் (National Land Finance Cooperative Society) அமைக்கப்பட்டது. அது தனது லாபத்தின் ஒரு பகுதியான 20 மில்லியன் மலேசிய ரிங்கிட்டை வைப்புத் தொகையாக வைத்து, அதிலிருந்து வரும் ஈவில் இந்தப் பரிசுகளை வழங்குகிறது. இதே போன்று உள்ளூர் கலை கலாசார நிகழ்வுகளுக்கும் உதவி நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

——-

Series Navigationசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்மூன்று பேர் மூன்று காதல்

One Comment for “மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்”

  • ஏ.தேவராஜன் says:

    உலகளாவிய தமிழ் சார்ந்த இலக்கிய நகர்ச்சிக்கு ஆக்ககரமான உந்து சக்தியாகச் செயல்பட்டு வருகிறது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அமைப்பின் இச்செயல்பாடு உலகத் தமிழர்களுக்கு முன்னோடியாக அமையட்டும். பரிசை வென்ற பெருமகனார்க்கும் அதை வழங்கிய சங்கத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!


Leave a Comment

Archives