உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த எத்தனை எத்தனைப்பதார்த்தங்கள். கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்தான். சாப்பிடுவோர் முகம் பார்த்து இலை பார்த்து ப்பரிமாறும் சமையல் சிப்பந்திகள். திருமண விருந்து முடிந்து இனம் புரியாத ஒரு நிறைவு எங்கிருந்தோ வந்து கள்ளமாய் மனதிற்குள்ளே ஆக்கிரமித்துக்கொண்டது. . இது மாதிரி எல்லாம் எப்போதேனும் மட்டுமே நிகழ்கிறது.
மண்டபத்தின் வாயிலில் மணமக்களை வாழ்த்த வந்தோர்க்கு பொறுப்பாய் வழங்கிய அந்த திருமணத் தாம்பூலப்பை சகிதமாய் அத்திப்பட்டு ரயில் நிலையம் நோக்கி நானும் என் மனைவியும் அந்த மண்சாலையில் மெதுவாகவே நடக்கத்தொடங்கினோம்.. நடக்கும் தூரம் மட்டுமே உள்ள சிறிய ரயில் நிறுத்தம்.
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் தாண்டி வடக்கே போனால் நேர்படும் வட இந்திய உணர்வு.. பெரும்பாலும் ரயில் பயணங்களால் மட்டுமே இணைந்துகொண்டு வாழ்க்கையில் உறவு பேணும் கிராம மக்கள். அவர்களின் தோள் அமர்ந்த பொருத்தமில்லா சாமான் மூட்டைகள். வயிற்றுப்பிழைப்புக்கு அலையாய் அலைந்துதிரியும் அவர்களின் முகச்சாயல்கள். அவை பார்ப்போர்க்குத்தெரிவிக்கும் மன வலிகள். காய்ந்துவிட்டுப்போன அவர்களின் பரட்டைத் தலை. அந்தத் தலை வதியும் செம்பட்டை முடி.க்கற்றை. தாம் தின்னக் கொண்டுவந்ததை மட்டுமே கிடைக்கும் மர நிழல் கீழாகக் கூட்டமாய் அமர்ந்து பங்கிட்டுக்கொள்ளும் இலகு மனோபாவங்கள். அவர்களோடு சிக்கித்தவிக்கும் வாரிசுகளாய் அவர்கள் பெற்றுப்போட்ட சின்னஞ்சிறுசுகள்.
அத்திப்பட்டு ரயில் நிறுத்தத்தில் நிற்காமல் அகம்பாவம் கனக்கச் செல்லும் எத்தனையோ அசுர வேக ரயில் வண்டிகள். இடை இடையே ஏழைக்கு இறங்கி சிறு சிறு ஊர்களிலும் நின்றுசெல்லும் பெரு மனம் கொண்ட வண்டிகள். . அவை நிற்கும் சமயம் தாம் ஏறிக்கொள்ளத்தகுதியுடைய பெட்டிகள் தேடித்தேடி ரயில் வண்டியின் முன்னும் பின்னும் அலையும் அம்மக்களின் பரிதவிப்புக்கள். ஏறிய வண்டியில் இருக்கையில் அமரும் இடமிருந்தும் அமரக்கூசும் அவர்களின் மன அவரோகணங்கள். பெட்டியில் ஏறி விட்ட அவர்களை மனம் ஒட்டாமல் பார்க்கும் முன்னமே ஏறி அமர்ந்த ரயில் பயணிகள். எல்லோருமாய் இங்கு இன்னும் நாமிருக்கும் நாடு நமதென்பது உணரா ஒரு பெரும்பகுதியின் சிறுகூறுகள்..
.
‘ அவன மறந்துடு அவன் தொலஞ்சிபோவட்டும். பெத்தவ நானு இருக்கேன் உனக்கு க்கஞ்சி ஊத்துறேன். வாயும் வவுறுமா இருக்கிற உன்னெ எட்டி வவுத்துல உதப்பானா படுபாவி. அந்தக்கருமத்த குடிச்சி குண்டி வெடிச்சி அவன் சாவட்டும். அவன உட்டுத்தொல. என்னோட கெளம்பு. நீ சொன்னா கேளு. அழுவாத.’
புலம்பிய வண்ணமாக இருந்தாள் ஒரு தாய். அந்தப்பெண் வயிரைச்சாய்த்துக்கொண்டு தன் தாயின் மடி கிடந்து தேம்பி த்தேம்பி அழுதாள். அவளின் கண்கள் அருவியாய் மாறிக் கண்ணீர்ச் சொரிந்துகொண்டிருந்தன. பார்ப்பதற்கே எனக்கு அத்தனைச் சங்கடமாக இருந்தது. சகிக்க முடியாமல் என் மனம் கிடந்து தவிக்கத்தொடங்கியது. காரணம் இல்லாமலா காரியம் எதுவும்.
இப்படியாக எங்கேனும் எப்போதேனும் யாரையேனும் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் தங்கையின் நினைவு வந்து உறுத்தத்தொடங்கிவிடுகிறது.. நன்றாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து அவள் சீக்கிரம் போயிருந்தால் கூட என் மனம் சற்று ஆறியிருக்குமோ என்னவோ ஆதரவாய் அவளுக்கு ஒரு வார்த்தைப்பேசக்கூட யாருமில்லா ஒரு கூட்டத்தில் அவளை நானே மணம் செய்து கொடுத்துவிட்டது எப்படியெல்லாமோ என்னை உறுத்துகிறது.
செத்துப்போய்விட்ட எனது அம்மாதான் ஒரு தரம் என்னைக்கேட்டாள். ‘ இதுவே நீ பெத்த மகளாயிருந்தால் அவளையும் இப்படித்தான் கொடுக்கும் இடம் பற்றி ஏதும் விசாரிக்காமலேயே கொடுத்திருப்பாயோ’. அம்மாவின் இந்தக்கேள்விதான் இப்போதும் என்னை எப்படி உலுக்கி எடுக்கிறது. பாசமாய் வளர்த்த ஒரு தங்கையின் வாழ்க்கை திருமணம் என்னும் சூறாவளியில் சிக்கிச் சின்னா பின்னமாய்ப்போனது விடவும் இன்னும் அதிகமாய்த்தான் தவித்துப்போனேன்.
அழுது அரற்றும் எந்தப்பெண்ணைப்பார்த்தாலும் எனக்கு என் தங்கையின் நினைவு பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.. பெண்ணே உன் மனத்தை புரிந்துகொள்ளா ஒருவனோடு மட்டுமே வாழ்ந்து உன் வாழ்க்கையை முடித்துக்கொள். இது சொர்க்கத்தில் எடுக்கப்பட்ட ஆகப்பெரிய முடிவாமே. தெரியுமா உனக்கு. கண்ணைக்கட்டிக்கண்டு படைப்புக்கடவுள் அந்தப் ப்பிரம்மன் தன் பக்கத்திற்கொன்றாய் தயாராய் வைத்து இருக்கும் ஆண் பெண் எனும் இரண்டு கூடையினின்று ஒரு ஒரு கயறு எடுத்து இரண்டையும் முடித்து முடித்து வீசிப்போடுவதாமே இந்த மண வாழ்க்கை என்பது. இல்லா ஒன்றான இந்துமதம் இப்படியாய்க் கயவர்கள் பிடியில் அகப்பட்டுக்கொண்டு வரலாற்றில் பெண்களுக்கு இழைத்துவிட்டக்கொடுமைகள்தான் சொல்லில் அடங்கிவிடுமா என்ன?.
நான் அந்தப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘ சாமி நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க. இவ எப்படி அவன் கூட வாழ்வா. உதப்பட்டு சாவரதா. புள்ளதாச்சின்னு பாக்காம எப்பிடி அடிச்சிருக்கான் பாவி. அவன் ஒரு குடிகார பேமானின்னு தெரியாம போயிடிச்சி. கிளிய வளத்து கொரங்குகிட்ட போயி குடுப்பனா. என்னைக் கட்டிகிட்டவன் அவ அப்பன் போயி சேந்துட்டான். நான் பொம்பள எதுக்கும் ஆவாத ஒரு கம்முனாட்டி கெடந்து சிருப்பா சிரிக்குறன்’
நான் மட்டும் என்று இல்லை என்னோடு நின்றிருந்த இன்னொரு அரைக்கை சட்டை போட்டிக்கொண்டிருந்த ஆசாமி கண்கள் கலங்கி அந்தப்பெண்னுக்காகப்பரிந்து பேச ஆரம்பித்தார்.
‘ நானு சொல்லுறதக்கேளு. நீ உன் பெத்த பொண்ண இட்டுகினு போ. குடிகாரன்னு தெரிஞ்கிகாம உம் பொண்ண குடுத்துட்டு இப்பிடி நிக்குற. இப்ப முழுவாம இருக்குற பொண்ணு வேற இத வச்சி அவன் குடும்பம் என்னாத்த பண்னப்போறான்’ இப்படி ஆரம்பித்தார் அந்த ஆசாமி.
தாயும் மகளும் மீண்டும் அழுகையை விட்ட இடத்திலிருந்து தொடங்கினர்.
‘ பொண்ணு தேகத்த பாருங்கோ தாம்பு கயிரெடுத்து உடம்பெல்லாம் என்னுமா அடிச்சிருக்கான் அவன் கயில கட்ட மொளக்காதா.நானு பெத்த தங்கமே இந்த கதிக்கு ஆளாகி நீ கெடக்கையிலே பெத்த வவுறு பத்தியல்வோ எரியுது’ தாய் ஒரு பாட்டம் சொல்லி நிறுத்தினாள்.
என்னோடு நின்றிருந்த அந்த அரைக்கை சட்டை ஆசாமி மீண்டும் ஆரம்பித்தான்.
‘ இப்பிடித்தான் கண்ட நாயுவுளுக்கு பெத்த பொண்ண குடுத்துட்டு ஆயி அப்பன் நாம சின்னப்படுறம். அதுவ பேமானிப்பயகிட்டக்கெடந்து சீ படுது. உம்மவள இட்டுகினு போயி ரவ கஞ்சின்னாலும் உன் கையால குடு. அப்புறம் பாக்குலாம் அந்தக்கழுததான் என்னா செய்யுதுன்னு’
‘ நல்ல ரோசன. இந்த க்கழுத வருணுமே. நானு கெஞ்சிப்பாகுறன் என் சாமி. அந்த நாயி இவள கட்டிகுவேன்னு ஒத்த காலுல நின்னான். என்னா வேசம் போட்டன்.
பொம்பள நானு ஏமாந்து போனேனே. இப்ப கெடந்து கேவுனா கூவுனாதான் ஆவுற கதயா. மோசம் போயிட்டு நிக்குறன். கடவுளே உனக்கு கண்ணுதான் உண்டான்னு தெரியிலயே என்னா செய்யுவேன்’
தாய் சொல்லி சொல்லி அழ மடி கிடந்த அவளின் பெண்ணும் தேம்பி த்தேம்பி அழுதாள். மூக்கைத்துடைத்துக்கொண்டாள். தலைமுடி கன்னா பின்னா என்று கலைந்து அலைந்து கிடந்தது. நான் அந்த ஆசாமியோடு அருகில் நின்று கொண்டேன். எனக்கு அவனின் பேச்சுக்கள் பிடித்திருந்தன. அவன் பேசுவதை எல்லாம் நானே பேசுவதாக என் மனம் சொல்லி என்னை த்தேற்றியது.
‘ நம்ப பொழப்ப நாம பாக்குணும். ஊரு பஞ்சாயத்து நமக்கு எதுக்கு. தெருவுல ஆயிரம் நடக்கும். நீரு என்னா ஒலகத்துக்கு எல்லாம் வாத்தியாரா. எல்லா ஆம்புளயும் இப்பிடித்தான். குடிச்சிட்டு அடீக்குறவன் எவ்வளவோ தேவுலாம். படிச்சுட்டு அடிக்குறவன் இங்க இல்லயா’ என் மனவி எப்போதும் போல் தன் வசனம் தொடங்கினாள்.
‘ என்னா சொல்லுற நீ. யாரைச்சொல்லுற’ பட்டென்று கேள்வி கேட்டேன்.
‘ அடிக்குற ஆம்புளயத்தான் சொல்லுறேன். நாம கட்டிகிட்டு வந்த பொம்புள நம்பள எப்பிடி அடிச்சிடுவான்னுதான் எல்லா ஆம்புளயும் அந்த பொம்புளயை போட்டு போட்டு அடிக்குறான்’
இவள் சந்தடி சாக்கில் நம்மைத்தான் சாக்குப்போக்காய்ப்பேசி வைக்கிறாளோ என்று எனக்கு உரைக்க ஆரம்பித்தது.
நான் ஒருமுறை என் மனைவியை அழுத்தம் கூடி ஒரு நோட்டம் விட்டேன்.
‘ தேவுலாம் நல்லாதான் இருக்கு. ரயிலு எப்ப வருன்னு கேளுங்க. நமக்கு கெடக்கு கென வேல தெரியுதா’ என்றாள்.
மானிட சமூகத்திற்கு ஏதோ மாபெரும் சேவை செய்ய நான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதுவாக என் மனம் மலை உச்சி மீது ஏறிக்கொண்டிருக்க இந்த என் மனைவி என்னும் ஜந்து வந்து அதற்கு இடையூறு செய்வதாகப் பாவித்து அல்ப கர்வம் ஒன்று எனக்குள் சிறிய மின்னலாய்த்தோன்றி மறைந்தது.
ரயில் வரும் நேரம். அத்திப்பட்டு நிலையத்தில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகத்தொடங்கியது. கையில் மூட்டையோ முடிச்சோ இல்லாத மனிதர்களே இல்லை. யாருக்கும் எதாவது எப்போதும் தேவையாகவே இருக்கிறது. ரயில் நிலைய சீருடைச் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஏதோ வேலை அவர்கட்கு இருந்துகொண்டே இருந்தது. அவர்களின் அந்த நடையே அவர்களையும் பயணத்திற்கென வந்த நம்மையும் எப்படி வகைப்படுத்தி க்காட்டிவிடுகிறது. ஏதோ இப்படி இப்படி யோசித்துப்பார்த்தேன். இன்னும் தாயும் மகளும் சிமெண்ட் நாற்காலி அமர்ந்து ஔயாமல் புலம்பியபடியே இருந்தனர்.
.இப்போது என் அருகிருந்து நியாயம் பேசிய அந்த அரைக்கை சட்டைக்காரன் சிமெண்ட் பெஞ்சில் அவர்களோடு அமர்ந்து ஆறுதலாய் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு மனம் கொஞ்சம் இறுக்கம் தொலைத்தது. மனிதர்கள் அங்கங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி ஒன்றும் இருண்டு விடவில்லை நான் என்னுள்ளே சொல்லிக்கொண்டேன்.
பிளாட்பாரத்தில் கேட்கிறது ஒரு இரைச்சல். ஒருவன் கையில் உருட்டை க்கட்டை ஒன்றொடு தாண்டுத்தப்படியில் நடந்து வருகிறான்.
‘ எங்க அவ வந்த ஆத்தா செறுக்கி. தொலச்சிப்புடுவேன் நா இல்லாத நேரம் பாத்து மவள இட்டுகிணு ரயிலுக்கு வந்துப்புட்டாளோ மாதச்செரு என்னா செய்யுறன் பாரு இப்ப. நா கட்டிகிட்டு வந்த அந்த நாயிதான் பீய திங்க அங்க ஏம் போவுது. பாக்குறன் இப்ப.’
கூவியபடி வந்த உருட்டைக்கட்டைக்காரன் கம்பீரமாய் நடந்து வந்தான்.
எனக்கு ஏதும் புரியாமல் இருந்தது. நான் திகைத்துப்போனேன்.
கையிலிருந்த கட்டையை சுழற்றிய படியே அவன் பேசத்தொடங்கினான்.
‘ நாயிவுளே உங்களுக்கு இந்த திருட்டுப்புத்தி எதுக்கு. நா இல்லாத நேரம் பாத்து ரயிலுல ஏறிம் போயிட்டா வுட்டுடுவனா நா. தொலச்சிபுடுவேன் சாக்குரத. யாரு எவருன்னு தெரிஞ்சித்தான் கத நடக்குதா. இன்னா இதுன்றென்’
என கொக்கரிக்க ஆரம்பித்தான்.
அவர்களோடு ஆறுதலாக ப்பேசிக்கொண்டிருந்த அந்த அரைக்கை சட்டை சிமெண்ட் பெஞ்சிலிருந்து பைய எழுந்து நின்றது.
‘ இவன் யாரு அரைக்கை சட்டைக்காரன்னு கேக்குறன். ரவ நேரத்துக்குள்ள எங்கனா ஒரு செட் பண்ணிட்டு கெளம்பிடலாம்னு ரோசனையா. யார்ரா நீ பீய திங்க வந்துட்ட.. என்னத்தெரியுமா உனக்கு கேக்குறன்ல’
‘ இல்ல பொம்பளங்க கேவி கேவி அழுதுதுங்க. தாயும் மொவளும் வேற. அந்த பொண்னு வாயும் வவுறுமா இருக்குது. அதான் எனக்கு மனசு கேக்குல’
‘ எலே ஔடுறா ஔடு கை கட்டையாலே ஒரு இழுப்பு இழுப்பு இழுத்தன்னா மவனே இங்கயே தூளாயி பூடுவ தெரிதா நக்குற நாயி நீ என்னா பேசுற இவுரு கடவுளு வந்துருக்காரு. ம்ம்ம். எடத்த காலி பண்ணு. ஒரு வார்த்த பேசுன இப்ப உன் உசுறு இருக்காது’
அந்த ஆசாமீ லேசாக நகரத்தொடங்கினான்.
‘ங்க இன்னா ப்பார்வ பாக்குற ஔடுறா ஔடு. நிக்காத திரும்பிப்பாக்காத’ என்றான் கையில் உருட்டுக்கட்டை வைத்தவன்.
எனக்கு சொர சொர என்று இருந்தது.
தாயும் மகளும் அழுகை நிறுத்தி சுதாரித்துவிட்டு எழுந்து நின்று கொண்டனர். அரக்கை சட்டைக்கரனை சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தேன். அவன் எங்கே சென்று மாயமாய் மறைந்தானோ. யாருக்குத்தெரியும்.
‘ கெளம்பு வூட்டுக்கு’ என்றான் உருட்டைக்கட்டைக்காரன் தன் மனைவியிடம்.
‘ உன் சேதி என்னா வர்ரியா இல்லை இப்பிடியே கெளம்புறயா’ என்றான் அந்தப் பெண்ணின் தாயிடம். அந்தத்தாய் அவனிடம் எதுவும் பதில் பேசவில்லை. தன் மகளை மட்டும் ஒருமுறை ஆழமாய்ப் பார்த்துக்கொண்டாள்
அவனும் அவளும் இப்போது நடக்க ஆரம்பித்தனர்.
‘ போய் உன் வேல எதனா இருந்தா பாரு . அலையாதெ தெரிதா.’ என்றான் உருட்டுக்கட்டைக்காரன் என்னிடம்.
அவர்கள் இருவரும் முன்னே செல்ல அந்தத்தாய் அவர்களின் பின்னால் நடக்கத்தொடங்கினாள். என்னை ஒருமுறை அந்தத்தாய் பார்த்துக்கொண்டாள். எனக்குள் அந்தப்பார்வை மனத்தின் வலியை இன்னும் கூட்டியது.
‘ வேடிக்கை என்னா வேடிக்கை வழிய பாத்து நட ‘ என்றவன் அவள் கையைப்பிடித்து க்கொண்டு முன்பாக நடந்துசென்றான்.
சென்னை திரும்பும் ரயில் அத்திப்பட்டு நிலையத்துக்குள் பரபரப்பாய் நுழைந்து கொண்டிருந்தது.
நானும் என் மனைவியும் அதனுள் இடம் பிடிக்கவேண்டுமே என்ற புதுக்கவலையோடு தயாராக விரைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றோம்.
‘நமக்குன்னு பொழப்பு இருக்கு’ என்றாள் அவள். வலி எனக்குள் இன்னும் சற்றுக் கூடுதலே ஆகியது.
———————————————————————————————————————–
- கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]
- என் பார்வையில் தமிழ் சினிமா
- STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
- வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
- மனத்தில் அடையாத ஒரு காகம்
- இரவு விழித்திருக்கும் வீடு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2
- நதி வெள்ளத்தின் துளி!
- வலி
- இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்
- அக்னிப்பிரவேசம்-17
- ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
- தவம்
- “தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
- அம்முவின் தூக்கம்
- மகாலட்சுமி சுவாமிநாதன்
- தமிழ் ஆவண மாநாடு 2013
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா
- எரிதழல் கொண்டு வா!
- பெண்ணே !
- இரு கவரிமான்கள் –
- திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
- மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
- பத்து நாட்கள்
- காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
- அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?