இரு கவரிமான்கள் – 6

This entry is part 21 of 30 in the series 20 ஜனவரி 2013
  


என்ன சொல்றே நீ ரத்தினம்..? நாம இன்னிக்கு கண்டிப்பா போறோம். அந்த ஜோசியர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். இப்பப் போய் நீ இப்படிக் கேட்கறியே….வேண்டாம்…வேண்டா

ம் நீ பாட்டுக்கு வண்டியை ஒட்டு…நான் பைரவி கிட்ட பேசிக்கறேன். அவளுக்கு ஒண்ணும்  ஆகாது. வேணும்னா ஆதித்தனை போய் பார்த்துக்க சொல்றேன். அதுவும் தேவையிருக்காது. பைரவியே பார்த்துக்குவா. அதான் மாதவி கூட இருக்காளே…பிறகு என்ன…? நாம போயிட்டு வந்துடலாம்.பைரவியின் அப்பா தனது கைபேசியை எடுத்து பைரவியை அழைக்கிறார்.பைரவியின் வீட்டு வாசற்படியை மிதித்தவுடன், முதல் முறை தான் வீணையோடு ஏறி வந்த காட்சி ஆழ்மனத்தின் உள்ளிருந்து மேலெழுந்து மிதந்து வந்தது ரமேஷுக்கு.  “பைரவி….மாதவி..நீங்க ரெண்டு பேருமே  என்னை ஒரு விதத்தில் ஏமாற்றி ஏளனப்படுத்தி  ஒதுக்கிட்டீங்க , அதுக்கு ஏத்த பரிசை நானும் தரேன்….வாங்கிக்கோங்க….வாழ்நாள் பூரா நினைவில் நெஞ்சோடு கனக்கும் பரிசு ..”.என்று  ஆங்காரமோடு காலிங் பெல்லை நாலுமுறை அழுத்துகிறான் ரமேஷ். ஒரு வஞ்சத்தைத் தீர்த்து முடிக்க வேண்டிய அவசரம் அவனது கண்ணில் குடி கொண்டிருந்தது.

நாம் யார் மீது அளவுக்கு அதிகமாக அன்போ பாசமோ வைக்கிறோமோ அவர்கள் மீது தான் பின்னாளில் கோபமோ ,வெறுப்போ  கூடி வரும் என்று
யாரோ சொன்னதாகப் படித்தது நினைவில் மின்னல் வெட்டியது. “அது தான் இது”…இப்பத் தான் புரிஞ்சது.. மீண்டும் ஒரு முறை காலிங் பெல்லை வேகமாக அழுத்துகிறான்.

அது யாருமே இல்லாத வீட்டில் நீ எத்தனை தடவை தட்டினாலும்  யார் வந்து கதவைத் திறப்பாங்க என்பது  போல கதவு மௌனம் காத்தது.

சரி…அவங்க வீட்டுக்கு உள்ள இல்ல போல…பைரவியின் காரைக் காணமே…கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் வரேன்..அது வரைக்கு காரில் உட்கார்ந்திருப்போம்..என்று திரும்பி காரினுள் ஏறி ஏசி யை  ஆன் செய்து விட்ட படி….”எங்க போய்டுவீங்க….எங்கே போனாலும் இங்க தானே  வந்தாகணும்…எங்க போகணும்னாலும் கதவைத் தானே திறக்கணும் ” மரத்தடி புலி மாதிரி உட்கார்ந்தாப் போச்சு. அது வரை…மீண்டும்…
மதியம்  ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர்  தனது ஆபீசுக்கு வந்து அமர்ந்து பேசியது நினைவுக்கு வந்து மனது அசை போட்டது. அது எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல..எகிறியது..

என்ன ரமேஷ்….ஏதோ…உங்க அப்பாவோட பழகின  பழக்கத்துக்கு உனக்கு என் கம்பெனி கான்டிராக்ட் எல்லாம் கொடுத்தேன். நீயும் ஆரம்பத்தில் ரொம்ப நல்லாத் தான் பண்ணிட்டு வந்தே…உன் ‘வானவில் ‘ இப்போ நிமிர ஆரம்பிச்சு இருக்கு. சந்தோஷம் . ஆனால்,…அந்தப்  பாடகிக்கு கொடுக்க வேண்டிய பரிசுப் பணம் தான் மாதவிக்கு நீ கொடுத்து அந்தப் போட்டி நிகழ்ச்சியில் என்னை ஏமாத்தி ,இப்போ என்னையே இங்க வர வெச்சிருக்கே. உனக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். என்று சொல்லி முடித்து விட்டு தொண்டையைச் செருமிக் கொண்டார் அவர்.

அது வந்து அங்கிள்….நீங்க நினைக்கறா  மாதிரில்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க மட்டும் எப்படி போட்டின்னு வெச்சுட்டு அந்தப் பரிசு பாடகி பைரவிக்கு மட்டும் பரிசு போகணும்னு சொல்ல முடியும்?. இது என்னோட சானல் நிகழ்ச்சி. ஒரு நல்ல டி ..ஆர்..பி. ரேட்டிங் கிடைக்க இது போலத் தான் செய்யணும். அடுத்து நான் “ஏர்டெல் ” கம்பெனி கூட ஒரு ப்ரோகிராமுக்கு நேரடி ஒளி பரப்புக்காக பேசிக் கொண்டிருக்கிறேன்…இதெல்லாம் தான் எங்க சானலோட  சிறப்பு அம்சம் . ரமேஷின் குரலில் தொனித்த கர்வம் அவரையும் பேச வைத்தது.

நான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேனே…நீ என்னமோ அந்தப் பாடகியோட…! அப்டிப் பார்த்தால் அவளுக்குத் தானே நீ பரிசைத்  தந்திருக்கணும்.?

அது இப்போ உங்களுக்குத் தேவையில்லாத விஷயம்.  மாதவி அவனை உதாசீனப் படுத்திவிட்டுப் போன ஆங்காரத்திலும், ஏமாற்றத்திலும் தனக்கு முன்பு யார் இருக்கிறார் என்பதைக் கூட உணராமல் புத்தி மட்டு வார்த்தைகள் அம்பென வெளியேறியது.

அதான் கெண்டையைப் போட்டு விராலை இழுக்கறியாக்கும்…அவர் குரலில் ஏளனம் தொனித்தது .

உங்களுக்கு இப்ப என்ன வேணும், அங்கிள்..?

உன்னோட ‘விட்டேத்தியான போக்கு ‘ உன்னோட ஆக்கத்தை அழிச்சுடாமப் பார்த்துக்கோ…எதையும் பணத்தைப் போட்டு ஆரம்பிச்சுடலாம். ஆனால் அதை கவனிக்காமல் , சட்டை செய்யாமல் விட்டுட்டா பின்னாடி அதுவே உன்னைப் பிடித்து இழுக்கும்.
பதவி வரும்போது தான் பணிவும் வர வேண்டும்….என்னமோ இந்தக் காலத்தில் பதவி வந்ததும் எல்லாருக்கும் ‘பந்தா’ தன குறைச்சல் இல்லாமல்  வந்துடறது. ஆமா அந்தப் பொண்ணு மாதவியோட நம்பரைக் கொடு. அத்த வாங்கிண்டு போகத் தான் இங்க நேரில் வந்தேன்.

ஆமா…நேற்று உங்க ஆஃபீஸ்லேர்ந்து ஃபோன் வந்ததே… நீங்க உங்களோட விளம்பர கான்ட்ராக்டை “வானவில் “லில் இருந்து கான்சல் பண்ணப் போறதாக…?  பிறகு எதற்கு மாதவியோட தொலைபேசி நம்பர் உங்களுக்கு?

அவங்களைத் தான் இனிமேல் நான் என் கம்பெனியின் பிராண்ட் அம்பாசடராக எடுத்துக்கலாம்னு நினைக்கறேன்.  முடிஞ்சா என் மகனுக்குக் கட்டி வெச்சு எங்க வீட்டு மருமகளாக் கூட ஆக்கிக்குவேன். உனக்கென்ன?

இவன் ரத்தம் கொதித்தது…அதைப் புரிந்து கொண்டவர் முகத்தில் ஒரு மந்தஹாசம்..

அப்போ எங்க காண்ட்ராக்ட்..!?

உன் அசட்டையால் நீ அக்ரிமென்ட்டுல  கூட கையெழுத்துப் போடலைங்கறதை  ஞாபகம்  வெச்சுக்கோ…நான் அதை “பொதிகைக்கு” மாத்தி விட்டாச்சு. நீ ‘எர்டேல்லோ…..டோகோமா’ வோ ஏதாவது தனியார் கம்பெனியைப் பார்த்துக்கோ. எழுந்தார்.

அப்போ…நான் கேட்ட  ஃபோன்  நம்பர்..? என்று செருமினார்.

வேண்டா வெறுப்பாக ஒரு பேப்பரில் மாதவியின் கைபேசி எண்ணைக்  கிறுக்கியபடி எழுதி அவரிடம் நீட்டியது தான் நிமிஷத்தில் மனசுக்குள் பளிச்செனத் தோன்றியது. “அந்த முகத்தைப் பார்த்துத்  தானே….” இவ்வளவு பேச்சு….! அவளிடம்  அழகு இல்லையானா உங்களால என்ன செய்ய முடியும்? இல்லை அவளாலத் தான் என்ன செய்ய முடியும்..? இதோ இதுக்கெல்லாம் நானே  வைக்கறேன் ஆப்பு..! ரமேஷ் கருவிக் கொள்கிறான்.

ஏறி வந்த ஏணியை ஞாபகம் வெச்சுக்கணும்….எறங்கும் போது  தேவைப் படும். அந்தத் துண்டுப் காகிதத்தை தன்னுடைய கோட்டுப் பாக்கெட்டில் திணித்தபடியே ரமேஷின் முகத்தைப் பார்க்கிறார் அவர் .

அதெல்லாம் மறுபடியும் இறங்கறவங்களுக்குத் தான். என்னோட தியேட்டர் அக்ஷயபாத்திரம்…மாதிரி !..இப்போ அங்கே “மாற்றான்” ஓடிண்டு இருக்கு….காம்ப்ளிமென்ட் பாஸ் தரேன்…..வாங்கீண்டு  போங்க. பிசினஸ் பண்றது எப்படின்னு கொஞ்சமாவது புரியும்.  திமிரோடு பேசினான் ரமேஷ்.

நீ அடிபடாமல் திருந்த மாட்டே….! அவர் கொடுத்தது சாபமா..?
அடிபட்ட பாம்பு போல அவர் வெளியேறினார்.அவர் மனத்தில் “எப்பேர் பட்டவர்கள் , என்  நண்பர்…! இந்தத் தருதலையோட  அப்பாவும் அப்பாவும்…அவங்க பேரைக் கெடுக்க இப்படி ஒண்ணு .! கோடாலிக் காம்பு.!

அவர் சென்றதும் ரமேஷுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்தது. கூடாது…கூடவே கூடாது….அவளை இனி எந்தச்
சானலில் இருந்தும் யாருமே   அழைக்கக்  கூடாது. அவளுக்கு இனிமேல் நாலு சுவர் மட்டும் தான் ஆயுள் தோழன். கண்ணாடி கூட அவளைப் பிடித்து வெளியேத்   தள்ளி விட வேண்டும். அதுக்கு ஒரே வழி…? என்ன வழி..? என்ன வழி..? இதோ போறாரே…என் பையனுக்குக்  ‘கட்டி வைப்பேன்’னு சொல்லிட்டு….கட்டி வை….கட்டி வை…! தாராளமாக் கட்டி வையுங்க…. மாதவிக்கு நான் கொஞ்சம் அலங்காரம் பண்றேன்….அதுக்கப்பறமா  யாருக்கு வேணாக் கட்டி வையுங்க. யாரு வேணுமானாலும் போய்  அவளிடம் உரிமை கொண்டாடுங்க.

நினைத்தவன், உடனே இணையத்தில் பழி தீர்க்கும் வழி தேடினான்…நல்லதையும், கெட்டதையும் , கேட்டவர்கெல்லாம் அள்ளித் தரும்
“கூகுள்”…..அவனுக்கு சகாயமாக உபாய வழி சொல்லித் தந்தது. ரகசியமாக ‘திரவியத்தில்’ திராவகத்தை காண்பித்துக்  கண்ணடித்தது.
முதலில் பயந்தாலும் அவனுக்குள் விழித்த மிருகம் ‘அது தான் சரி ‘ என்று அவனை உற்சாகமூட்டியது.

அவனுக்கு ‘அது’ கிடைப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை. விசிலடித்தபடியே அரைக் கிணறு தாண்டிய நிலையில் ஒருவழியாக இப்போது பைரவியின் வீட்டு வாசலில்…ரமேஷ்.!

வீட்டின் உள்ளே,…. !

மாதவிக்கு வந்த போனில் அவள் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் அவளது முகம் உயிருள்ள ஓவியமாய் சிரித்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது. போனில் வந்த விஷயம் அவளைச் சிறகடித்துப் பறக்க வைத்தது.

ஃபோனில் ஜே.வி.ஆர் தங்க மாளிகையின் மேனஜிங் டைரக்டர் தான் பேசிக் கொண்டிருந்தார். மாதவியைத்  தான் அவர்களது  பிராண்ட் அம்பாஸடராகத் தேர்ந்தெடுத்து இருப்பதால்…சம்மதமானால் ஒரு முறை ஆபீஸுக்கு வந்து அக்ரீமென்டில்  கையொப்பம் போட்டுவிட்டு….செல்லுமாறும், அடுத்த கட்ட ஷூட்டிங் இருக்குமாதலால் அதைப் பற்றியும் இனி என்ன செய்ய வேண்டும் என்றும்  சொல்லிக் கொண்டிருந்தார்.

மாதவிக்கு தன்  காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டக் காற்று தன் பக்கமாக வீசத் தொடங்குவது  போல உணர்ந்தாள் .கண்கள் அலைபாய,
வருகிறேன்  ஸார்….வருகிறேன்  ஸார்…என்றாள் .

பைரவியின் போனில் அவளது அப்பா பேசிக் கொண்டிருந்தார். “இப்போ அந்த ரமேஷின் கார் நம்ம வீட்டுக்கு வந்துண்டு இருக்காம்..எனி டைம்…அவன் அங்க வருவான்…நீங்க ரெண்டு பேரும் எதற்கும் ஜாக்கிரதையா இருங்க..ரொம்ப நேரம் பேச வைக்காமல் சட்டுன்னு நீ அவனைப் பேசி அனுப்பு…இல்லாட்டி இப்பவே நீங்க ரெண்டு பேரும்  கிளம்பி எங்கேயாவது வெளில போய்டுங்கோ …எதற்கும் ஆதித்தனை வேணா ஃபோன் பண்ணி துணைக்கு வந்து இருக்கச் சொல்லட்டுமா..?  நாங்க சீக்கிரமா வந்துடறோம். இப்ப ஈஸியாக் கிடைத்த அப்பாயிண்ட்மென்ட்…இன்னொரு நாள் கிடைக்குமா தெரியாது…இந்த விஷயத்தில் தடங்கல் வேண்டாமே பைரவி…நீ கொஞ்சம் பார்த்துக்கோ.

அப்பா…நீங்க போயிட்டு வாங்கோ…நாங்க பார்த்துக்கறோம்..!

இருவருமே  மும்முரமாக கைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அழைப்பு மணியின் அழைப்பை அலட்சியம் செய்தனர்.

ஆட்டத்தைக் கலைக்க ஆண்டவனுக்காத் தெரியாது. நாமொன்று நினைக்க நடப்ப தொன்றாய் முடியும் !  இரு மான்கள் மீது காதல் வயப்பட்டுப் பின் சென்றவன் இப்போது தீப்பந்தம் ஏந்தி கொளுத்த வருகிறானா ?

ஒரு தவறான எண்ணம் கூட மனதில் நுழைந்து விட்டால் அதற்கான பலனை எதிர் நோக்கித் தானே ஆக வேண்டும். அரசன் கொன்ற காலம்…தெய்வம் நின்று கொன்ற காலம் எல்லாம் போய் ..இப்போது தவறான எண்ணத்துக்கே தண்டனை கிடைக்கும் காலம் இது என்பதை உணரும் முகமாக…..ரமேஷின் கைபேசி அலறியது.

தியேட்டர் மேனகேர் ஜார்ஜ் தான்….குரலில் கலவரம்..தெரிந்தது.! பட்ட காலிலே படும் ! கெட்ட  குடியே கெடும். !

ரமேஷ் சார்…. அதிர்ச்சியான சேதி !  எங்கிருந்தாலும் ஓடி வாங்கோ !   திடீர்னு மின்கசிவு காரணமா நம்ம தியேட்டர் தீப்பிடிச்சு எரிய ஆரம்பிச்சுடுச்சு…பாதிப் படம் ‘மாற்றான்” ஓடிக்கிட்டு இருக்கும் போது ..நடந்தது ! பிரச்சனை பெரிசாகும் போல இருக்கு…நீங்க சீக்கிரமா வாங்க ப்ளீஸ்.

ஓ …மை…காட்..! என்ன சொல்றே ஜார்ஜ்…!

அதான் சார்…நீங்க உடனே எங்கிருந்தாலும் கிளம்பி உடனே வாங்க…நான் ஃபயர் ஸ்டேஷனுக்கு ஃபோன்  போட்டாச்சு….வாங்க சார்…ப்ளீஸ் எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு…கையும் காலும் பதறுது.ன்னு பதற்றத்தோடு சொல்லிவிட்டு  ஃபோனை வைத்தான்.

விஷயத்தைக் கேட்ட மாத்திரத்தில் ரமேஷுக்கு உடல் பதற ஆரம்பித்தது.

கோடிக் கோடியாக பணத்தைப் போட்டு ஆரம்பித்த எழில் மிகும் தியேட்டர் “நெருப்பில் சாம்பலாவதா” .?.உடல் பதற வந்த வேலை என்னவென்று மறந்து போய்  பதறியபடி காரை ஸ்டார்ட் செய்தவன் ..போகிற போக்கில் பான்டில் உறுத்திக் கொண்டிருந்த திராவக பாட்டிலை எடுத்துத் தெருவில் ‘ஒழிஞ்சு போ’ என்றபடியே தூர வீசி எறிய… அது தார்  ரோட்டை உருக்கி  ஆவியாகிக் கொண்டிருந்தது.

நீண்ட நாட்கள் கழித்து மனது  முதல்  முறையாக  இறைவனை  நினைத்தது.  அதிகச் சேதம் ஆகாமல் இருக்க வேண்டுமே…எத்தனை பேரோட ஷேர் அதில் இருக்கு? . இந்த நேரம் பார்த்து என்னோட அத்தனை ப்ராஜெக்ட அக்ரீமெண்டும் கான்சல் ஆகி வானவில்லே மூழ்கிற நிலைமைக்கு  வந்து நின்னுகிட்டு இருக்கு. மாடு மேய்க்காமல் கெட்டது . பயிர் பார்க்காமல் கெட்டது .அதனால் இப்போது ரமேஷின் நிலை அடியற்ற மரம் போல சாய்வதை உணர்ந்தான்.

இந்தத் தியேட்டர் தானே சென்னையில் ‘மாயாஜால்’ க்குப் பிறகு மக்கள் விரும்பி வந்து போகிற சினிமா ஹால். இதோட வருமானம் போச்சுன்னா, எல்லாம் அடுக்கடுக்கா அடி வாங்குமே.? எப்படி கரண்ட்லீக் ஆகி இருக்கும். போன மாசம் தான் அதுக்கு புதிய ‘ஜெனரேட்டர் செட் ‘ வாங்கிப் போட்டேன் இப்படியாகும்னு எதிர் பார்க்கலையே…! காரை ஸ்பீட் பிரேக்கர் பாராமல் ஓட்டுகிறான் ரமேஷ். கண் கேட்ட பின்னே தானே சூரிய நமஸ்காரம்..!

இப்போது வந்த இந்த விபத்துப் பிரச்சனை  என்னை எப்படி ஆட்டி வைக்கப் போகிறதோ..? இனிமேல் ஒழுங்கா இருப்பேன்….1 மனசு உக்கி போட்டது.!

இதுக்கெல்லாம் நானே தான்  காரணம்..எத்தனையோ கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தைப் போட்டு இரவும் பகலுமா கஷ்டப் பட்டு நினைத்ததை விட பிரம்மாண்டமான அளவில் செய்து நேரத்தைக் காசாக்கி, காசை வெற்றியாக்கி வெற்றியை வானவில்லாக்கி வளைத்து வைத்து ஊஞ்சலாடும் போது …..தூக்கி எறியப் பட்ட நிலையாக…என்னோட சபலமும், இரண்டு அழகிகளின் மேல் நான் வைத்த ஆசையும் எனக்கே அழிவைக் கொண்டு வந்திருக்கே  நிஜத்தில் மாதவி என் வாழ்வில் காலடி எடுத்து வைத்த நேரம் தான் எனக்கு கெட்ட நேரமா..? இதையெல்லாம் எதையும் நம்ப மாட்டேனே..இப்போ மனசு ‘சபலம்’ போய்  ‘சகுனம்’ பார்க்க ஆரம்பிக்குதே. இனிமேல் அந்த ‘ராகு’ மாதவியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன்.

இப்போ எனது அழிவைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். மூழ்கப் போற என்னோட கப்பலை எப்படியாவது காப்பாத்தியாகணும். இந்தத் தியேட்டர் தான் மற்ற என்னோட தொழிலுக்கு ஆதாரமா இருந்தது….அச்சச்சோ…”மாற்றான்” படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்குன்னு நினைச்சு சந்தோஷத்தில் இருந்து விட்டேன்…எத்தனை  உயிர் சேதம் ஆச்சோ…என்னவோ…மனசு அதி வேகமாக அடித்துக் கொண்டது…கண்களில் ஈரம் எட்டிப் பார்த்தது. கல் இதயம் வெடித்துக் கண்ணாடி இதயமாக நொறுங்கிக்  கொண்டிருந்தது.

தப்புப் பண்ணிட்டேன்…தப்புப் பண்ணிட்டேன்…இது நான் செய்த தப்புக்கு தண்டனையா ?…..மனசு  பதறியது.இப்போ என்னால் எந்த பாதிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாதே.பொறாமை, கோபம் , எரச்சல், ஆற்றாமை , இயலாமை, ஏமாற்றம் எல்லாம் இப்போது கவலையாக மாறி தொண்டைக்குள் உருண்டது.

‘இன்சுரன்ஸ் ரினியூவல் ‘ பண்ணினேனா…தெரியலையே..? ஜார்ஜ் கிட்ட கேட்கணும்….ச்சே…..நான் ஒரு இடியட். சுத்த இடியட்…! ரொம்ப அசால்டா இருந்துட்டேன். அவசர அவசரமாக கைபேசியை எடுத்து “ஜார்ஜ்….இன்சூரன்ஸ் ரெனவல்  பண்ணியாச்சு தானே? என்று கேட்டதும்..

சார்…அது வந்து ..நான் போன வாரம் முழுசும் உங்க கிட்ட வந்து ஒரு கையெழுத்துப் போடச் சொல்லி கூப்ட்டுட்டே இருந்தேன்..நீங்க தான் டெலி பண்ணினீங்கள்…வரலை….அதனால ரெனெவல் பண்ண முடியலை சார். இன்னும் பெண்டிங்ல தான் இருக்கு. ஐ’ ம் சாரி சார்…!

ஷிட்…..! உன்ன நம்பினதுக்கு..எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்…!முட்டாளுக்கு கோபம் மூக்குக்கு மேலே என்பது போல ரமேஷ் கோபத்தில் மேனேஜரைத் திட்டுகிறான்.

கார் விரைந்து  செல்லும்போதே…..தூரத்தில் விஸ்வரூபமாக கரும்புகை எழும்பி வானத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. மை…காட்.ஐ…லாஸ்ட் எவ்வரிதிங் .! ஐ லாஸ்ட்..மை ட்ரீம்…மை  லைஃப்.! அவன் நெருங்க நெருங்க அனலில் இட்ட துரும்பு போல ஆனான்.

காரை பார்க் செய்து விட்டு இறங்கும் போது பகீரென்ற உணர்வுடன்…யாரோ இருவர் கொஞ்சம் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது இவனைத் துரத்திக் கொண்டு வந்து காதுக்குள் ஈட்டி போலப் பாய்ந்தது.

“அந்தத் தியேட்டர்  ஓனர் தாம்பா…..ஒரே நேரத்துல ரெண்டு கலைமானை விரட்டிட்டு போனா ….கடைசில  வேட்டைக்காரனுக்கு ஒரு மானும்   சிக்கலையாம்….நம்ம ரத்தினம் தான் ஃபோன்ல சொன்னாருப்பா ….ஹி ஹி ஹி ஹி ஹி….”  அந்தாளு இந்தப் பக்கம் வந்தே மாசக் கணக்கு ஆகுதாம்.
இப்போ தியேட்டரே பத்தி எரிஞ்சு அவரை வரச் சொல்லிக் கூப்பிடுது…என்று சிரிக்கிறார்.

செல்வம் சேர்ந்த போது அதை அலட்சியமாக வாரி இறைத்த ரமேஷ் …இனிமேல் ஒவ்வொரு பைசாவுக்கும் அலைய வைக்கப் போகிறது இந்த  “தீ விபத்து”  என்பதை அறியாமல் தனது எரிந்து கொண்டிருக்கும்  தியேட்டரை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடுகிறான்.

பைரவியின் ஜாதகத்தையும் ஆதித்தனின் ஜாதகத்தையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்த படியே தனது மூக்குக் கண்ணாடி மூக்கை விட்டு நழுவ,
அப்போதும் நிமிராமல் ஒரு பென்சிலால் கணக்குப் போட்டபடியே….அப்பப்போ தனது விழிகளை  உயர்த்தி ஆவலோடு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பைரவியின் பெற்றோர்களைப் பார்த்தார் ஜோசியர்.

உங்க பெண்ணா? அவரது கேள்விக்கு இருவரும் நிமிர்ந்து உட்கார்ந்தபடி ‘ஆமாம் ‘ என்று தலையசைக்கிறார்கள்.

சுத்த ஜாதங்கம்…ரெண்டுமே…அமோகமாப் பொருந்தி இருக்கு. இதோ பார்த்தேளா…..அஞ்சாம் பாவம்..பூர்வ புண்ணியம், புத்திரச் ஸ்தானம்…குரு….நன்னாருக்கு.… யார் உட்கார்ந்துண்டு இருக்கான்னு..ஏழாம் பாவம் பாருங்கோ..! களத்திர ஸ்தானம் நன்னாருக்கு….அட அட அட…..ஒன்பதாம் பாவம்…பாக்கியஸ் தானம்…..நன்னா அமைஜ்சுடுத்து …அம்சமா இருக்கு. இப்போ ராகு திசையில் புதன் புத்தி…விவாகம் கூடி வரும்.
ஜாதகம் அம்சமாப் பொருந்தி இருக்கு…கவலையே படாதேங்கோ…பெண்ணுக்கும் சரி…பிள்ளைக்கும் சரி இசை ரொம்ப கைவல்யம்…சரி தானே…?

ஆமாம்…ஆமாம்…..!

பின்ன…நான் கட்டத்தைப் பார்த்துத் தானே சொல்றேன்..அது சொல்றதே…! ம்ம்ம்…அப்போ நீங்க இந்த தையில் கூட முகூர்த்த நாள் பார்க்கலாம்.ஜாதகம் ரொம்ப நன்னாப் பொருந்தி வந்திருக்கு. இது போல அமையறது அதிசயங்காணும் .! பேஷாப் பண்ணி வையுங்கோ.

அவர் சொல்லச் சொல்ல இருவரின் காதிலும் தேனாகப் பாய ஒரு கட்டுப் பணத்தை தட்சிணையாக வைத்து விட்டு முகமெல்லாம் பல்லாக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள்.

வரும் வழியெல்லாம் காரில் பைரவியின் கல்யாணத்தை எப்படி நடத்துவது என்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

ரத்தினத்துக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும்…இன்னொரு பக்கம் பயம் இருந்தது.அதனாலேயே  வண்டியை விரைவாக ஓட்டினார் அவர்.

அம்மா…அம்மா…உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன் ..பீடிகையோடு அம்மாவிடம் பேச்சை ஆரம்பித்தான் ஆதித்தன்.

என்னடா….புதுசா இளையராஜா ட்ரூப்ல உன்னை சேர்த்துண்டு இருக்காளா? அதெல்லாம் நேக்கு சந்தோசம் தராதுடா…!

அதில்லை…..இப்போ நிஜமாவே சந்தோஷமான விஷயம் தான்…நீ எதிர் பார்க்கிறது தான் அது.

சொல்லு சொல்லு…சீக்கிரமாச் சொல்லு….கல்யாணம் தானே?  நேக்குத் தெரியும் டா…என்னைக்காவது ஒரு நாள் நீ உன் மனசை மாத்திண்டு வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதிப்பாய் என்று. யாருடா அந்த அதிர்ஷ்டக் காரி…! ஃபோட்டோ இருக்கா…காமியேன்.  இப்போ மட்டும் உன் அப்பா உயிரோட இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பார் தெரியுமா?

என்னம்மா சொல்றே நீ? உனக்குத் தெஇர்யுமா? யாரைம்மா…./குழப்பத்தில் கேட்கிறார் ஆதித்தன்.

அதாண்டா…இப்போ ரொம்ப பிரபலமா ஒரு பொண்ணு பாடிண்டு இருக்காளே….பைரவி ன்னு.  அவள் முதல் முதலா பாட வாய்ஸ்  டெஸ்டுக்கு வந்த போதிலிருந்து உன் மனசு அவ கிட்ட சரெண்டர்  ஆனா விஷயம் நேக்குத் தெரியும்னு சொல்ல வந்தேன் அப்பறம்….அவங்க பாடி ரொம்பப் பெரிய இடத்துக்குப் போனதும் நீ திரும்பி வந்துட்ட…..இதெல்லாம் உன் டயரியைப் பார்த்து புரிஞ்சுண்டேன். என்ன பண்ண..அடுத்தவா அந்தரங்கத்தை படிக்கிறது தப்பு தான். அன்னிக்கு நீ பாம்பே போயிடு வந்ததும்….உன் டயரி டபிள் மேலே இருந்தது. என்னவாயிருக்கும்னு எடுத்தேன்… தப்பு ..தப்பு…
நேக்கு மனசு கேட்கலை டா..ஆதி..!  நீயும் கல்யாணம் வேண்டாம்னு சொல்ல ஆரம்பிச்சே..நான் வேண்டாத தெய்வம் இல்லை.  என் வயிற்றில் பாலை வார்த்தே.  யாருன்னு சொல்லு உடனே கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன். உன் சந்தோசம் தான் என் சந்தோஷம். என்று சிரித்தபடி தன்னைப் பார்க்கும் அம்மாவிடம்.

அம்மா….அவளே தான் இவள்…பைரவி…! பைரவியைத் தான் இன்று அவாத்தில் போய்  சம்மதம் கேட்டேன்.. அவாத்தில் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் .சம்மதம்.

என்னது அப்படியே…? ஆனால் நீ அந்தப் பொண்ணு..யாரோ ‘வானவில் ரமேஷை’க் கல்யாணம் செய்து கொண்டு விடுவாளோ என்று பயம்மாக இருக்கிறதுன்னு எழுதி இருந்தியே…! உன் டயரியில்…?

அதையும் படிச்சுட்டியா நீ? ஆமாம்…நான் எல்லாரையும் போல அவளைத் தப்பாப் புரிஞ்சுண்டேன்மா…! ஆனால் அதெல்லாம் ஒண்ணுமே  இல்லை. இப்போ நீ வந்தால் அவத்துக்கு அழைச்சுண்டு போறேன். கிளம்பேன்.

அதுக்கென்ன…தாராளமாப் போயிடு வரலாம். நேக்கும் அவள் பாட்டுன்னு கொல்லைப் பிரியம். உன் ஆசை வீண் போகலைடா…கண்ணா..!
மகனை உச்சி முகருகிறாள் பைரவியின் வருங்கால மாமியாரான சந்தோஷத்தில். இருவரும் பைரவியின் வீட்டை நோக்கிக் கிளம்புகின்றனர்.

தங்களுக்கு வந்து தானாக விலகிப்  போன ஆபத்தை உணராத மாதவியும், பைரவியும் ஃபோனில்  பேசிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட படியே  கல கல வென்று சிரித்தபடியே கதவைத் திறந்து வெளியில் வந்து பார்க்கிறார்கள். அங்கு ரமேஷ் வந்து போனதன் அடையாளம் கூட இல்லை.
அடுத்தடுத்த மகிழ்ச்சியாக அம்மாவும் அப்பாவும் ஜாதகம் பொருந்திய சந்தோஷத்தில் வந்திறங்கவும் , அவர்கள் பின்னாலேயே ஆதித்தனும் , அவரது அம்மாவும் வந்து சந்தோஷ அதிர்ச்சி தர….அந்த வீட்டின் ஹாலே மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது சந்தோஷ அலைகளாக .

பைரவியின் கல்யாணத்தை இந்த மாசமே  சீக்கிரமா முடிச்சிடறோம்….என்ன மாப்பிள்ளை சொல்றீங்க….என்று ஆதித்தனைப் பார்த்து  அவளது அப்பா கேட்டதும்  வெட்கத்தில் குங்குமமாகக்  கன்னம்  சிவந்தாள்  பைரவி.

அடுத்த சில நிமிடத்தில் சன் டிவி  நியூஸ் தொலைக்காட்சியில்  செய்திகளில் தலைப்புச் செய்தியாக வானவில் டிவி ‘ அதிபரின் திரை அரங்கம் தீக்கரை யானது பற்றிய  சோகச் செய்தியை தனது கணீரென்ற குரலில் நிர்மலா பெரியசாமி வாசித்துக் கொண்டிருந்தார். கூடவே ஆவண  படங்களாக அந்த நிகழ்க்கிகள் காட்ச்சிகளாக ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது.

கார் டிரைவர் ரத்தினத்தின் கைபேசி அவரது நண்பர் மூலமாக தகவல் தெரிந்து கொண்டவர், அதைக் கேட்க கேட்க அவரின்  முகம் இருண்டது..

சந்தோஷ அலைகள் சட்டென அடங்கி “அடப் பாவமே’ என்று நிசப்தமானது அவர்களின்  மனங்கள் .

முற்றும்

=====

Series Navigationபுதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாகவாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *