அதிர்ஷ்டம்!!

author
2
0 minutes, 1 second Read
This entry is part 24 of 32 in the series 3 பிப்ரவரி 2013

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

அருணகிரி சந்தோஷமாக இருந்தார். இன்றைய கோல்ஃப் ஆட்டத்திலும் அவர்தான் ஜெயித்தார். இப்பொழுதெல்லாம் விளையாட்டில் ஜெயிப்பது அவருக்கு சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. அவருடைய நண்பர்களெல்லாம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். சபேசனும் வந்து வாழ்த்து சொன்னார்.

“என்ன அருணகிரி, இப்பொழுதெல்லாம் நீங்களே ஜெயிக்கிறீர்களே! எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன்” என்றார். அதைக்கேட்டு அருணகிரி புன்னகைத்தார். அதனுடைய ரகசியம் அவருக்கு மட்டும்தானே தெரியும். இங்கு வந்து விளையாடும் போது மட்டும்தான் அவர் மற்றக் கவலைகளையெல்லாம் மறக்க முடிகிறது. இங்கிருந்து கிளம்பினால் மறுபடி அவரைக் கவலைகள் சூழ்ந்து கொள்ளும்.

அருணகிரி ஒரு தொழிலதிபர். அருணா & அருணா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் தலைவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவருடைய தந்தை ஆரம்பித்த கம்பெனி, இன்று வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக நிற்கிறது. அதனுடைய வளர்ச்சிக்கு அருணகிரியும் ஒரு காரணம். படித்து முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக கம்பெனியில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கம்பெனியை இந்த உயரத்துக்கு கொண்டு வர அவரும் காரணமாக இருந்திருக்கிறார்.

வருடத்திற்கு வியாபாரம் நூறு கோடிகளைத் தாண்டுகிறது. நல்ல விசுவாசமான வேலையாட்கள், நேர்மையான பொறியாளர்கள் இவர்களின் கூட்டு முயற்சியால் மிகச் சிறந்த தரத்தைக் கொடுப்பதால் கம்பெனிக்கு நல்ல பெயர். ஆனால் சமீப காலமாக தொழில் அவ்வளவு சரியாக இல்லை. நிறைய போட்டி கம்பெனிகள் உருவாகி விட்டன. தரத்திற்கு மதிப்பு குறைந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

வேலை குறைந்ததால் வருமானமும் குறைந்தது. ஆனால் செலவுகள் குறையவில்லை. அதன் விளைவாக கடன் அதிகமாகி விட்டது. பேங்கில் O.D. லிமிட்டைத் தாண்டி விட்டது. எல்லாமாகச் சேர்த்து மொத்தம் முப்பது கோடி கடனில் இருக்கிறது கம்பெனி. அருணகிரிக்கு எப்படி நிம்மதி கிடைக்கும். அவரும் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனாலும் எதுவும் சரியாகவில்லை. கோல்ஃப் விளையாட்டில் சிறந்த வீரர். இங்கு விளையாடும் போது மட்டும்தான் அவருக்கு கொஞ்சம் சந்தோஷம் கிடைக்கிறது.

“என்ன அருணகிரி, நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டீர்களே!” என்று சபேசன் கேட்டவுடன் தன்னுணர்வு வந்து சபேசனைப் பார்த்தார்.

“அதற்கென்ன, அடுத்த முறை நீங்கள் ஜெயித்தால் போயிற்று” என்றார் அருணகிரி.

“அருணகிரி, உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும். நீங்கள் கட்டுமானத் துறையில் இருப்பதால் உங்களிடம்தான் கேட்க வேண்டும். நீங்கள்தான் சரியான ஆள்” என்று பீடிகை போட்டார் சபேசன்.

“சொல்லுங்கள் சபேசன். என்ன விஷயம்?”

“நான் ஒரு இஞ்சினியரிங் காலேஜ் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு ஒரு என்பது ஏக்கரிலிருந்து நூறு ஏக்கர் வரை நிலம் தேவை. உங்களுக்குத் தெரிந்து அதுபோல் ஏதாவது இடம் இருந்தால் சொல்லுங்கள்” என்றார் சபேசன்.

“எந்தப் பகுதியில் இடம் பார்க்கிறீர்கள்?” என்றார் அருணகிரி. அவருக்குச் சொந்தமாக நூறு ஏக்கர் இடம் மதுராந்தகம் பக்கத்தில் இருக்கிறது. ஒரு நல்ல விலை கிடைத்தால் கொடுக்கலாம் என்ற நினைப்பு வந்தது.

“சென்னைக்கு அருகில் புறநகரில் கிடைத்தால் நல்லது” என்றார் சபேசன்.

“மதுராந்தகம் பக்கத்தில் இருந்தால் பரவாயில்லையா? எனக்கு அங்கே ஒரு இடம் இருக்கிறது” என்றார் அருணகிரி ஆவலுடன்.

“ஓ! அந்த இடம் பரவாயில்லை. எப்போது போய் பார்க்கலாம் என்று சொல்லுங்கள். போய் பார்ப்போம்” என்றார் சபேசன்.

“நாளைக்கோ அல்லது மறுநாளோ, ஒரு நேரம் குறித்து விட்டு நானே உங்களுக்குப் போன் செய்கிறேன்” என்றார் அருணகிரி.

அவருடைய கவலைகள் எல்லாம் தீருவதற்கு ஒரு வழி பிறந்து விட்டதாகவே தோன்றியது. அந்த இடத்தை விற்றால் கிடைக்கும் பணத்தில் இருக்கும் கடன்களை அடைத்து விட்டு, மீதிப் பணத்தில் தொழிலை வெற்றிகரமாகத் தொடரலாம். அவருக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.

அடுத்த நாள் அவசர வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, அதற்கு மறுநாள் சபேசனைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய இடத்துக்கு போவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். சபேசனிடமும் போன் பண்ணி சொல்லி விட்டார்.

அந்த நாளும் வந்தது. சபேசனுடன் அவர் காரில் ஏறிக் கொண்டு, தன் காரை பின்னாடியே ஓட்டி வருமாறு டிரைவருக்குக் கட்டளையிட்டார்.

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தைத் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் கார் சென்று கொண்டிருந்தது. போகும் வழியில் அந்த இடம் தன்னுடைய அப்பா இருபது வருடங்களுக்கு முன் வாங்கிப் போட்டது என்றும், இன்று தனக்கு அது ஒரு மதிப்பு வாய்ந்த சொத்தாக மாறி விட்டது என்றும் அருணகிரி சொன்னார்.

அந்த இடத்தை அடைந்து மெயின் ரோட்டிலிருந்து ஒரு 150 அடி தூரம் தனியார் ரோட்டில் பயணித்த பின்பு அருணகிரியின் நூறு ஏக்கர் இடம் வந்தது. பார்த்தவுடனேயே சபேசனுக்குப் பிடித்து விட்டது. அருமையான இடம்தான். ஆனால் மெயின் ரோட்டிலிருந்து 150 அடி தூரம் உள்ளே வரவேண்டியிருக்கிறதே! அதுதான் கொஞ்சம் உறுத்தியது.

“அருணகிரி, இடம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முன்னால் உள்ள சிறிதளவு இடம்தான் இடைஞ்சலாக இருக்கிறது. அதையும் வாங்கிப் போட்டிருக்கலாமே!” என்றார் சபேசன்.

“உண்மைதான். அது ஒரு ஏக்கர் இடம் பவானி என்று ஒரு வயதான பெண்மணி வசம் உள்ளது. அவருடைய பையனும் பெண்ணும் அமெரிக்காவில் வசதியாக இருக்கிறார்கள். நானும் அந்த ஒரு ஏக்கரை எனக்குக் கொடுத்து விடச் சொல்லி பல முறை அவர்களிடம் கேட்டு விட்டேன். ஆனால் அந்த இடத்தை விற்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள்” ஏன்றார் அருணகிரி.

“மன்னிக்க வேண்டும் அருணகிரி. எனக்கு இந்த இடம் வேண்டாம்” என்று சபேசன் சொன்ன போது அதிர்ந்து விட்டார் அருணகிரி. அவருடைய கனவுக் கோட்டை எல்லாம் சரிந்து விட்டது போலிருந்தது. சபேசனைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“எனக்கு இன்னும் மூன்று மாதம் டைம் இருக்கிறது. அதற்குள் உங்களால் அந்த இடத்தை வாங்க முடிந்தால், மொத்தமாக எல்லாவற்றையும் என்னுடைய காலேஜுக்காக நான் வாங்கிக் கொள்கிறேன். இல்லையென்றால் நான் வேறு இடம் பார்க்க வேண்டியதுதான்” என்று முடிவாகச் சொல்லி விட்டார் சபேசன்.

அன்று இரவு அருணகிரிக்கு தூக்கம் வரவில்லை. மூன்று மாதம் அதாவது தொன்னூறு நாள்தான் இருக்கிறது. தன்னுடைய தலைவிதியை நிர்ணயிக்க பதிமூன்று வாரங்கள்தான் இருக்கிறது. சட்டென்று அவருக்கு ஒரு நினைப்பு தோன்றியது. பதிமூன்று! இது ஒரு மோசமான எண் என்று எல்லோரும் நம்புகிறார்களே! அய்யோ! அப்படியானால் என்னுடைய வாழ்வையும் இந்தப் பதிமூன்றாம் எண் பாதித்து விடுமா? அவருக்கு கவலை அதிகமானது.

எண் பதிமூன்று! ஆனால் இந்த எண் என்னுடைய வாழ்க்கையில் அடிக்கடி குறுக்கிட்டிருக்கிறதே! சட்டென்று கோல்ஃப் விளையாடும் இடத்தில் உள்ள பதிமூன்றாவது கிரீனும், பதிமூன்றாவது குழியும் ஏனோ ஞாபகம் வந்தது. பதிமூன்றாவது கிரீன் என்பது தண்ணீர் நிரம்பிய ஒரு சிறிய குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும். விளையாடும்போது நிறைய வீரர்கள் தடுமாறுவது இந்த இடத்தில்தான்.

கொஞ்சம் சரிவாக இருக்கும் அந்த கிரீனுக்கு பந்தை அடிக்கும்போது, காற்றின் திசையும் அதன் வேகமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். கொஞ்சம் பொறுமையாகவும் மிகவும் எச்சரிக்கையாகவும் விளையாடி அந்த கிரீனை தாண்டும் போதெல்லாம் அருணகிரியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. அப்படியென்றால் இந்த பதிமூன்று வார காலக் கெடுவும் எனக்கு வெற்றியைத் தேடித் தருமா?

அன்றிலிருந்து கோல்ஃப் விளையாடும் போதெல்லாம் பதிமூன்றாவது கிரீனை மிகவும் கூர்ந்து கவனித்து கவனமுடன் விளையாட ஆரம்பித்தார். உண்மைதான், அவருடைய வெற்றி அதில் தெரிந்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு நம்பிக்கை வந்தது. இந்த வெற்றிகளெல்லாம் அவருக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்தன.

அருணகிரிக்கு இதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு கஷ்டம் என்று வரும் போது எந்த எந்த விஷயங்கள் மீதெல்லாம் நம்பிக்கை ஏற்படுகிறது! நினைக்கும் போது விசித்திரமாக இருந்தது.

அவ்வப்போது ECR ரோட்டின் வழியாகச் செல்லும் போதெல்லாம் பவானி அம்மாளின் வீடு வந்தவுடன் காரை நிறுத்தச் சொல்லி, இறங்கி அவளைப் பார்த்துப் பேசுவார். ஆனாலும் அவருக்கு சாதகமான எந்த முடிவும் இதுவரை கிடைக்கவில்லை.

நாட்கள் ஓடின. ஆயிற்று, அறுபது நாட்கள் ஓடி விட்டது. இன்னும் முப்பதே நாள். என்ன செய்வது? யோசித்துப் பார்த்தால் வழி எதுவும் புலப்படவில்லை. ஒவ்வொரு முறை கோல்ஃப் விளையாட்டில் ஜெயிக்கும்போது கிடைக்கும் பரிசுப் பணத்தில், நண்பர்களுக்கு விருந்து கொடுத்தது போக மீதிப் பணத்தை தனியாக சேர்த்து வைத்திருந்தார். அது எவ்வளவு என்று பார்த்தபோது, இதுவரை பதிமூன்று லட்சம் ரூபாய் சேர்ந்திருந்தது. மறுபடியும் பதிமூன்று!

ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த பதிமூன்று லட்சம் ரூபாயையும் எடுத்து ஒரு சூட்கேஸில் அடுக்கினார். அதை எடுத்துக் கொண்டு பவானி அம்மாள் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்ததும் எப்போதும் போல் உபசரித்து, காபி கலந்து கொடுத்தார் பவானி அம்மாள்.

காபியைப் பருகிவிட்டு, “அம்மா, நான் கிளம்புகிறேன். இந்த சூட்கேஸை வைத்துக் கொள்ளுங்கள்” என்று அதை நீட்டினார். பவானி அம்மாளோ திகைத்தாள்.

“இது என்ன சூட்கேஸ்?” என்றாள் புரியாமல்.

“இதில் பதிமூன்று லட்சம் ரூபாய் இருக்கிறது. கோல்ஃப் விளையாட்டில் பரிசாகக் கிடைத்த பணம். உங்களிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் அருணகிரி.

“எதற்கு இந்தப் பணத்தைக் கொடுக்கிறீர்கள் அருணகிரி. நான்தான் அந்த இடம் கொடுப்பதற்கில்லை என்று சொல்லி விட்டேனே. நீங்கள் செய்வதைப் பார்த்தால் எனக்குக் கோபம்தான் வருகிறது. இதை எடுத்துப் போய் விடுங்கள். இனிமேல் இங்கு நீங்கள் வர வேண்டாம்” என்றாள் மிகவும் கறாராக.

“அம்மா, மன்னிக்க வேண்டும். அந்த இடத்துக்காக இந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை. தவறாக நினைக்காதீர்கள்” என்று மன்றாடினார் அருணகிரி.

“பின் எதற்காக இந்தப் பணம். எனக்கு கடன் கொடுக்கிறீர்களா? அப்படியென்றால் என்னை அவமானப் படுத்துகிறீர்கள்” என்றாள் இன்னும் கோபம் குறையாமல்.

“அம்மா, தயவு செய்து கோபப் படாதீர்கள். இது கடனாகவோ, அந்த இடத்துக்கு அட்வான்ஸாகவோ கொடுக்கவில்லை. விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக கிடைத்த பணம். அது என்னிடம் சும்மாதான் இருக்கிறது. அதற்குப் பதிலாக உங்களிடம் இருக்கட்டும். உங்களுக்கு இந்தப் பணம் இப்போது தேவை இல்லை என்பது எனக்கும் தெரியும். அதனால் இதை உங்களது பூஜை ரூமில் வையுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். இந்தப் பணத்தை உங்களிடம் எப்போதும் திருப்பிக் கேட்க மாட்டேன்” என்றார் அருணகிரி மிகவும் பணிவாக.

“என்ன அருணகிரி, என்னை இப்படி தர்மசங்கடப் படுத்துகிறீர்கள்” என்று சலித்துக் கொண்டாள் பவானி அம்மாள்.

“அப்போ, நான் போய் வருகிறேன்” என்று கைகூப்பி விட்டு வெளியேறினார் அருணகிரி. அவருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அதன் பிறகு பவானி அம்மாளைப் போய் அருணகிரி பார்க்கவே இல்லை. பதினெட்டு நாள் ஓடிவிட்டது. அன்று காலையில் ஆபீசுக்கு அருணகிரி கிளம்பிக் கொண்டிருந்த போது பவானி அம்மாளிடமிருந்து போன் வந்தது.

“அம்மா வணக்கம். நலமாயிருக்கிறீர்களா?” என்று குசலம் விசாரித்தார் அருணகிரி.

“நல்லா இருக்கேன் அருணகிரி. அந்த இடத்தை உங்களுக்கே எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்று அவள் சொன்னதைக் கேட்ட போது அருணகிரியால் நம்ப முடியவில்லை.

“ரொம்ப நன்றி அம்மா! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நாளைக்கே உங்களை வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி போனை வைத்தார் அருணகிரி. அவருக்கு வானத்தில் பறப்பதைப் போல் இருந்தது.

அடுத்த நாள் பத்திரப் பதிவு வேலைகளை முடித்துக் கொண்டு அன்றைய மார்க்கெட் விலையை விட முப்பது லட்சம் ரூபாய் அதிகமாகவே பவானி அம்மாளிடம் கொடுத்து இதயபூர்வமான தனது நன்றியைத் தெரிவித்தார் அருணகிரி.

பின்பு பவானி அம்மாளைப் பார்த்து, “அம்மா, உங்களது இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

பவானி அம்மாளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. இரண்டு நாட்களுக்கு முன்னால் தன்னுடைய தங்கை கனகா வந்து சொன்ன விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது. கனகா அடிக்கடி வருபவள்தான். இருவரும் மனம் விட்டுப் பேசி ஆறுதல் பெறுவார்கள். ஆனால் அன்று கனகாவின் முகத்தில் சந்தோஷமில்லை.

“என்னடி, உன் முகம் வாடி இருக்கிறது, என்ன விஷயம்?” என்றாள் பவானி அம்மாள்.

“அக்கா, ஆர்த்திக்கு கல்யாணம் நடக்க இருக்கிறதல்லவா?”

“ஆமாம், உன் பொண்ணு ஆர்த்தி கல்யாணத்துக்கு வேண்டிய எல்லாம்தான் ரெடியாகி விட்டதே! புடவை, நகை, சீர் செனத்தி எல்லாம் குறைவில்லாமல் ஏற்பாடு செய்து விட்டாயே, இனி கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டியதுதானே பாக்கி. வேறு என்ன பிரச்சினை”

“அக்கா, எல்லாம் ரெடியாகி விட்டது. நாளை மறுநாள் கல்யாணம். ஆனால் மாப்பிள்ளைக்கு கல்யாணப் பரிசாக ஸ்கோடா கார் ஒன்று கொடுப்பதாக என் கணவர் சொல்லி இருந்தார் அல்லவா?”

“ஆமாம், அதற்கென்ன, அதுதான் மாப்பிள்ளை பெயரில் கார் புக் பண்ணி பத்து லட்சம் அட்வான்சும் கொடுத்தாகி விட்டதே! மீதியைக் கொடுத்து காரை டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! அதில் என்ன பிரச்சினை?”

“அப்படித்தான் எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு வரவேண்டிய முப்பது லட்ச ரூபாய் பணம் ஒரு வாரம் கழித்துத்தான் கிடைக்கும் என்று இப்பொது சொல்லி விட்டார்களாம். திடீரென்று அந்தப் பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று தெரியவில்லை” என்று வருத்தப் பட்டாள் கனகா.

“கார் கம்பெனியில் கொஞ்சம் கால அவகாசம் கேட்டுப் பார்க்கலாமே”

“அந்தக் காருக்கு டிமாண்ட் இருப்பதால் உடனடியாக பணத்தைக் கொடுத்து டெலிவரி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது கேன்சல் பண்ணிவிட்டு மறுபடி புக் செய்யுங்கள் என்கிறார்கள். வேறொரு வாய்ப்பாக ஹையர் பர்சேஸில் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். மாப்பிள்ளை பேரில் புக் செய்த கார் அது. அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் மிகவும் அவமானமாகி விடும். அதுதான் பிரச்சினை. என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றாள்.

“என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. வேண்டுமென்றால் அமெரிக்காவில் கவுதமிடம் பேசி பணம் அனுப்பச் சொல்கிறேன்” என்று ஆறுதல் சொன்னாள் பவானி அம்மாள்.

“அக்கா, நாளை மறுநாள் கல்யாணம். அதற்குள் இந்தப் பிரச்சினை தீர வேண்டுமே”

“ஆமாம், மிகவும் தர்ம சங்கடமான நிலைமைதான். என்ன செய்வது?”

கடவுளே, இந்தப் பிரச்சினை நல்லபடியாக சரியாக வேண்டுமே! திடீரென்று பூஜை ரூமில் இருந்த அருணகிரி கொடுத்த அந்த சூட்கேஸ் ஞாபகத்துக்கு வந்தது.

“கனகா, இப்பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?”

“பதிமூன்று லட்சம் தேவைப் படுகிறது அக்கா”

“கொஞ்சம் இரு, இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு பூஜை அறையில் போய் அந்த சூட்கேஸை எடுத்து வந்து கனகாவிடம் கொடுத்தாள்.

“இதில் பதிமூன்று லட்சம் இருக்கிறது. எடுத்துட்டுப் போய் வேலையை நல்லபடியாக முடி”

“அக்கா, இது எப்படி? யார் கொடுத்தது?”

“ஒரு நல்ல மனிதர் கொடுத்து வைத்திருக்கிறார். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது போய் வேலையைப் பார்” என்றாள் பவானி அம்மாள்.

கல்யாணம் நல்லபடியாக முடிந்த கையோடு அருணகிரிக்கு போன் செய்து விட்டாள்.

“அம்மா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வில்லையே! சொல்ல விருப்பமில்லை என்றால் வேண்டாம்” என்றார் அருணகிரி பணிவுடன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் உங்கள் அதிர்ஷ்டம்தான் காரணம்” என்று சிரித்தாள் பவானி அம்மாள்.

உண்மையிலேயே அருணகிரிக்கு அதிர்ஷ்டம்தான். சபேசனுக்கு தன்னுடைய இடத்தை நல்ல விலைக்கு விற்று, கிடைத்த பணத்தில் எல்லாக் கடனையும் அடைத்தது போக, மேற்கொண்டு நூறு கோடி ரூபாய் தொழிலில் முதலீடு செய்வதற்காக கிடைத்து விட்டது.

அத்தோடு சபேசனுடைய இஞ்சினியரிங் காலேஜுக்குத் தேவையான எல்லா கட்டிடங்களையும் கட்டுவதற்கு அருணகிரிக்கே மொத்தக் காண்டிராக்டும் கிடைத்து விட்டது. அருணகிரிக்கு ரொம்பவும் சந்தோஷம்.

Series Navigationமகாத்மா காந்தியின் மரணம்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *