மலர்மன்னனுடன் சில நாட்கள்

This entry is part 3 of 31 in the series 10 பெப்ருவரி 2013

ஒரு நொடிப் பொழுதானாலும் சிலருடன் பழகும் பொழுது பல ஆண்டுகள் பழகிய உணர்வு ஏற்படுகின்றது. கடந்த ஒருமாதமாகத்தான் மடல் மூலம், தொலை பேசியின் மூலம் பழகினோம். இன்று அவர் பறந்து சென்று விட்டார். இந்த குறுகிய காலத்தில் எங்கள் நட்பு மனம்விட்டுப் பேசும் அளவில் வளர்ந்திருந்தது. அரசியல் உலகிலிருந்து ஆன்மீகம் வரை பேசினோம்.
இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தால் ஏன் பேசவில்லை என்று கேட்பார். அவர் எனக்கு எழுதிய மடல்களும் அதிகம். அவரை “சாமியாரே” என்று கூப்பிடும் அளவில் மாறினேன். என் புகைப்படம் அனுப்பச் சொன்னார். சுட்டிப் பெண் சீதா படம் அனுப்ப நினைத்திருந்தேன். skypeஎ ல் பேசலாம் என்றார். நான் எழுதுவதை நிறுத்தக் கூடாது என்று கட்டளையிட்டார். என்னால் அமைதியாக இருக்கவும் முடியாது என்று சுட்டிக் காட்டினார்.
சில நாட்களாக என் மனத்தில் ஏதோ ஓர் உணர்வு. வெளி உலகப் பணிகள் எல்லாவற்றையும் நிறுத்திவிடத் தோன்றுகின்றது. உறவு, நட்பு இவைகளிலிருந்தும் விலக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இதை அவரிடம் கூறினேன். ஆசீர்வதித்தார்.
யாருடனும் பேசுவதை நிறுத்தினேன். அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னால் அவரைக் கூப்பிட்டேன். அன்று அதிகாலையில்  சத்தியபாமாவிடம் அன்று நான் கூப்பிடுவேன் என்று சொல்லி இருக்கின்றார். நிறைய பேசினோம். என் முருகனைப் பற்றி பேசினேன். தியான வாழ்க்கையில் இருக்க விரும்புவதைக் கூறீனேன். பேசிமுடித்துவிட்டு சில மணி நேரங்களுக்குள் அவர் எனக்கு ஓர் மடல் அனுப்பினார். அதில் சில வரிகள்

I am glad. Pl give complete rest to the mind by diverting it to the spiritual realm, which will guide you.  Thank you. Resume writing after you gain strength and it will be more effective with  doubled vigour then, as you are a born crusader.

ஆன்மீகம் பேச ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்திருந்தேன். அருமை நண்பர் சீக்கிரம் போய்விட்டார்.
செய்தி அறிந்தவுடன் சத்தியபாமாவைக் கூப்பிட்டுப் பேசினேன். என் குரல் கேட்டவுடன் கத்தி அழுதாள். அவர் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றார். அவர் உடல் வீட்டில் இருக்கையிலேயே பேசிவிட்டேன்

சாமி, மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது. நீங்கள் முன்னே போய்விட்டீர்கள். அவ்வளவுதான். இந்த சீதாம்மாவுக்கு ஒரு இடம் போட்டு வையுங்கள். அங்கு வந்து அரட்டையடிக்கின்றேன். நம் நண்பர்கள் பலர் அங்கே இருக்கின்றனர்
தப்பு தப்பு. நீங்கள் சுவர்க்கத்திற்கல்லவா போவீர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Series Navigationபலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்அஞ்சலி – மலர்மன்னன்
author

சீதாலட்சுமி

Similar Posts

4 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பு சஹோதரி,

    தங்களுடைய பல வ்யாசங்களையும் கருத்துக்களையும் வாசித்து வருகிறேன். என் கருத்துக்களை உடன் பகிர்ந்ததில்லை.
    நான் எழுதுகையில் என் கலப்புமொழிநடையை பல அன்பர்கள் குறை கூறும்போதெல்லாம் என் மொழிநடையிலே தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தவர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர். மூத்தோர் சொல் அமுதம் அல்லவா. அவர் சொற்படி நீங்கள் தொடர்ந்து எழுத எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சுகிறேன்.

    ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் என நான் அன்புடன் அழைக்கும் பெருந்தகை இன்று நம்மிடம் இல்லை. வாழ்வாங்கு வாழ்ந்தவர். காஷ்மீரம் சம்பந்தமாக எனக்கு ஒரு வ்யாசம் எழுத பணித்திருந்தார். பணியை முடித்து விட்டேன். நிறை குறைகளை பல அன்பர்கள் பகிர்வார்கள். எனதன்பார்ந்த ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களின் பார்வையில் அது பட வேண்டும் என்பது என் பெரிய அவாவாக இருந்தது. அவருடைய எஜமானனாகிய கண்ணனின் விருப்பம் வேறு போலும்.

    \ என் முருகனைப் பற்றி பேசினேன்.\

    ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களுடன் தமிழ் ஹிந்து தளத்தில் நான் உரையாடிப் பகிர்ந்த முக்யமான விஷயங்களில் அதிமுக்யம் கண்ணனைப் பற்றி மற்றும் அவன் மருகன் என் கந்தனைப் பற்றி.

    உங்கள் பரிதவித்த மனதுக்கு ஆறுதல் என் மொழியில் இருப்பதை விட எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் மொழிவழி இருப்பது உசிதம்.

    விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
    வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே! (கந்தர் அலங்காரம்)

    தனித்துவழி நடக்குமென திடத்தும்ஒரு
    வலத்தும் இருபுறத்தும் அருகடுத் திரவு பகற்றுணையதாகும் (வேல் வகுப்பு – வேல் மாறல் மஹாமந்த்ரம்)

    யாம்
    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
    நிசிக்கருவறுக்கும் பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
    நிறைப்புகழுரைக்குஞ் செயல்தாராய் (திருத்தணித் திருப்புகழ்)

    வேலும் மயிலும் சேவலும் துணை

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அற்றைத் திங்கள் அன்றைய திண்ணையில் காந்திஜிக்கு
    இறுதிப் பின்னூட்டம் தந்தார், எழுதி வந்தார்.
    இற்றைத் திங்கள் இவ்வாரத் திண்ணையில் மன்னனுக்கு
    இரங்கல் மொழிகள், மலரும் இல்லையே.

    சி. ஜெயபாரதன்

  3. Avatar
    ஜெயஸ்ரீ says:

    என் அன்பு சீதாம்மா,

    ஒரு நட்பு மலர்ந்தது. அதை அழகாக விவரித்தீர்கள். அந்த மலர் தெய்வத்தின் கழுத்தில் மாலையாகச் சென்றது.
    அதையும் அழகாக எழுதி இருக்கிறீர்கள். சில சிநேகங்கள் கிடைத்த வேகத்தில் மறைந்து போகும் போது மனம்
    தனிமையில் மௌனமாகிறது.

    அவர் அந்தச் சொற்ப காலங்களில் தங்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதி இருப்பது…இனிமேல் நீங்கள் படிக்கும்
    போது அவர் இல்லாத நினைவு கூட வராதிருக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.,

    உயிர் நிலையில்லை என்பதை உணர்த்திவிட்டுச் சென்று விட்டார்.

    உங்களுக்கு மன ஆறுதல் உண்டாகட்டும். உங்களது கட்டுரையில் சோகத்திலும் ஒரு மெசேஜ் இருந்தது கண்டு வியந்தேன்.

    அவரது உன்னத ஆன்மா மீளாத உயர்நிலை பெறும் .

    அன்புடன்
    ஜெயா.

  4. Avatar
    கோவிந்த் கருப் says:

    அவர்கள் வீட்டிற்கு மறுநாள் சென்றிருந்தேன். சமூக கருத்துக்களை தீப்பிழம்பாக எழுதியவர் இக்கட்டான சூழலில் உங்களுக்கு ஆறுதலாக இருந்தது நல்விஷயமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *