தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
அவன் தள்ளாடிக்கொண்டே வருவதை பாவனா கவனித்தாள். அவள் ஒருவினாடி மூச்சு விடவும் மறந்துவிட்டாள். அவளுக்குத் துக்கம் வரவில்லை. அதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வளவு போதையிலும் ராமமூர்த்தி தெளிவாய் பேசினான்.
“ஏய், கடிதம் ஏதாவது வந்ததா?”
“உங்களுக்கு எதுவும் வரவில்லை. எனக்குத்தான் எங்க அப்பா எழுதியிருக்கிறார்.” சுருக்கமாய் சொன்னாள்.
“பணம் அனுப்பினானா?”
“இல்லை.”
“எப்போ அனுப்புவானாம்?”
“அனுப்பமாட்டார். அனுப்ப வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டேன்.”
“ஏன்? எதற்காக?”
“வரதட்சணை வேண்டும் என்பவர்கள் முன்னாடியே கேட்கணும். கொடுக்க முடிந்தவர்கள் கொடுப்பார்கள். முடியாதவர்கள் அப்போதே இந்த இடம் வேண்டாம் என்று விட்டு விடுவார்கள். அப்போ அந்த மாதிரி சீர்திருத்த வாதியாய் பேசிவிட்டு, இப்போ இந்த ரகளை எதுக்கு?”
“என்ன? நான் ரகளை செய்கிறேனா? என்னை என்னவென்று நினைத்து விட்டாய்? உன் புருஷன் நான்! உன்னை அனுபவிக்கும் உரிமை இருப்பவன். நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை உனக்கு வாரியிறைத்து செலவழிக்கணும் என்ற அவசியம் இல்லை எனக்கு. வாயை மூடிக்கொண்டு சொன்னதை செய்.”
“இவ்வளவு நாளாய் அப்படித்தான் விழுந்து கிடந்தேன். இனிமேல் சும்மா இருக்கப் போவதில்லை. ஏற்கனவே இருபத்தையாயிரம் உனக்காக விலை கொடுத்திருக்கிறேன். இப்போ எனக்கு அதிகாரம், உரிமை எல்லாம் வந்துவிட்டது. ஆனாலும் கையாலாகாதவனுக்கு இதைவிட அதிகவிலை கொடுப்பது அனாவசியம்.”
அவள் வார்த்தைகள் முழுவதுமாய் உடனே புரியவில்லை. புரிந்ததுமே அதிர்ந்து விட்டான். பாவனா இவ்வளவு பெரிய அடிகொடுப்பாள் என்று அவன் கனவிலும் ஊகித்திருக்கவில்லை. போதை எல்லாம் இறங்கிவிட்டது. வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. அதற்குப் பிறகு கோபம் இருமடங்காயிற்று.
“ஆமாம்.. படுக்கை சுகத்திற்காக அவ்வளவு தூரம் கிடந்துத் தவிக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. ஆமாமாம். உன் தேவடியாள் குணம் மறந்துவிட்டது என் தவறுதான். கல்யாணத்திற்கு முன்னாடியே பழக்கப்பட்டுப் போனவள். இப்போ இல்லாவிட்டால் சங்கடமாகத்தான் இருக்கும்.” “மேலும் வசைமாரி பொழிந்து கொண்டிருந்தான்.
பாவனாவுக்கு சுருக்கென்றது. கோபத்தில் அவன் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி விட்டாளே தவிர அவளுக்கு அந்த உத்தேசமில்லை. அவனிடம் உள்ள இந்தக் குறையைப் புரிந்து கொள்வதற்கு அவளுக்குப் பலநாட்கள் பிடித்தன. அது புரிந்ததும் அதை குணப்படுத்தக் கூடிய டாக்டர்கள் இருக்கிறார்களா என்று தேடிப்பார்க்க விரும்பினாள். அதுகூட ராமமூர்த்தியின் பொருட்டுத்தான். அந்தப் பலவீனம்தான் அவனை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது என்பது அவள் உத்தேசம்.
சோர்வடைந்து போன ராமமூர்த்தி படுத்துக் கொள்வதற்காக எழுந்தான். ஷர்ட்டை கழட்டும் போது பாக்கெட்டில் ஏதோ இருப்பது தென்பட்டது. பரமஹம்சாவின் போட்டோ நினைவுக்கு வந்தது. எடுத்துப் பார்த்தான்.
‘விபூதியை இட்டுக்கொள். நல்லது நடக்கும்’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. முதல் முறையாய் ராமமூர்த்திக்கு பரமஹம்சாவிடம் பயத்தோடு பக்தியும் ஏற்பட்டது.
அவன் விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டான். பிறகு அடித்துப் போட்டாற்போல் தூங்கிவிட்டான்.
*******
“என்னங்க? எங்கே பயணம்?” [பாவனாவால் கேட்காமல் இருக்க முடியவில்லை ஒருவாரமாய் பாஸ்கர ராமமூர்த்தி அவளுடன் பேசுவதில்லை.
“ஊருக்குப் போறீங்களா?” திரும்பவும் கேட்டாள்.
“இல்லை எமலோகத்துக்குப் போகிறேன்” என்றான் வெடுக்கென்று. அவள் கொஞ்ச நேரம் பதில் பேசவில்லை.
“எவ்வளவு நாள் கழித்து வருவீங்க?” புறப்படும்போது கேட்டாள்.
“ஏன்? யாரையாவது கூப்பிட்டு வைத்துக்கொள்ளப் போகிறாயா? இரவு பகல் பார்க்காமல் கூத்தாடிக்கொண்டிரு. ரொம்ப தவித்துப் போய்க் கொண்டிருக்கிறாய் இல்லையா?”
“நான் ஒன்றும் தவித்துப் போகவில்லை. இனி அந்தப் பேச்சை எடுக்காதீங்க. அப்படி கேட்டது தவறுதான்” என்றாள் கண்ணீருடன். அப்படிப் பேசியதற்கு ஏற்கனவே அவள் குமுறிப் போய்க் கொண்டிருந்தாள்..
“ஏன் எடுக்கக்கொடாது. இன்னும் உரக்கக் கத்துவேன். அக்கம் பக்கத்தார் எல்லோரும் கேட்கட்டும். எவனாவது ஒருத்தன் வந்து துணைக்குப் படுத்துப்பான். இல்லாவிட்டால் முன்னாடியே எவனுடனாவது தொடர்பு வைத்துக் கொண்டு விட்டாயா?”
“எவ்வளவு அனாகரீகமாய் பேசுறீங்க? நிறுத்துங்கள் உங்கள் உளறலை.” கோபத்துடன் கத்தினாள் பாவனா.
“ஆமாம். வரதட்சணை வேண்டாம் என்று சொன்னபோது நாகரீகம் இருக்கா இல்லையா என்று தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இப்போ அதெல்லாம் ஞாபகம் வ்னதுவிட்டது இல்லையா? அந்த சுதர்சனோடு ஊரெல்லாம் சுற்றினாயே? குடும்பத்தில் இருக்கும் ஒருத்தி பண்ணுகிற காரியாமா இது?” திட்டித் தீர்த்துவிட்டு போய்விட்டான்.
******
“பாவனா! உங்க அம்மா எவ்வளவு வருஷமாய் உடல்நலம் சரியில்லாம் படுத்திருந்தாள்?”
பாவானா நிமிர்ந்து தந்தையைப் பார்த்தாள். விஸ்வம் எந்த எண்ணத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டான் என்று புரியவில்லை.
“ஏறக்குறைய பதினைது வருஷம். அவ்வளவு வருஷத்தில் நான் ஒருதடவை கூட தவறான வழியில் போகவில்லை. உங்க அம்மாவை ஒரு வார்த்தைக் கூட சொன்னது இல்லை. இதையெல்லாம் நான் பெருமைக்காக சொல்லவில்லை. பாவனா! நீ விவரம் தெரிந்து எல்லாவற்றையும் பார்த்திருப்பவள். என்னிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பாய் என்று நான் நினைத்தேன்..”
“தெரியும் அப்பா. எல்லாம் தெரியும். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொன்னபோது கூட பண்ணிக்காத உத்தம புருஷர் நீங்க.’ வெளியில் சொல்லவில்லை தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
“கல்யாணமான ஒரு வருடத்திற்குள்ளேயே உன்னைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கும் என்று என்னால் ஊகித்தும் பார்க்க முடியவில்லை. பாவனா! குழந்தைகளுக்கு என்னால் எதுவும் தர முடியாமல் போனாலும், நல்ல பண்புடையவர்களாய் வளர்த்தேன் என்று பெருமைப் பட்டிருந்தேன் இவ்வளவு நாளாய். நம் ஊரில் நம் வீட்டைப் பற்றி எல்லோரும் எவ்வளவோ உயர்வாய், எடுத்துக்காட்டி பேசிக் கொள்வார்கள். இந்த விஷயம் தெரிந்தால், பின்பு நம் நிலைமை அவர்களுக்கு மத்தியில் என்னவாகும்?”
“என் கஷ்டம் அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும் அப்பா. அவரும் வசந்தியும் சேர்ந்து எத்தனை விதமாய் என்னை வார்த்தைகளால் துன்புறுத்து வார்கள் தெரியுமா?”
“ஏன்? அவர்கள் இரண்டுபேருக்கும் சம்பந்தம் இருக்கு என்றும், அதனால்தான் உன்னைச் சரியாய் கவனிப்பதில்லை என்று நீ சந்தேகப்படுகிறாயா?”
“இல்லை அப்பா. அந்த விஷயத்தில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால எந்த அண்ணன் தங்கையும் அந்த மாதிரி நடந்துகொள்வதை நான் பார்த்தது இல்லை. அதான் கொஞ்சம் பாந்தம் இல்லாமல் இருக்கிறது.”
“நான் முன்னாடியே சொன்னேன், அவனிடமும் பலவீனம் இருக்கலாம் என்று.ம், அவற்றுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்காதே என்றும். கடுகத்தனை விஷயத்தை மலையத்தனை ஆக்காதே. நீ கொஞ்சம் பொறுமையைக் கடைபிடித்தால், ஆவேசத்தில் முன்பின் யோசிக்காமல் வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே போதும். அந்த அளவுக்கு பொறுமை உன்னிடம் இருக்கும் என்றுதான் இவ்வளவு நாளாய் நம்பியிருந்தேன். என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டாய்.”
பாவனாவுக்கு புரிந்தது ஒன்றுதான். தந்தை அவள் வாதத்தைக் கேட்காமலேயே தீர்ப்பை அளித்துவிட்டார். அவரிடமிருந்து எந்த விதமான இரக்கமும், உதவியும் இனி அவளுக்கு கிடையாது. அவர் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் போவதற்குக் காரணம் என்ன? தலைமுறை இடைவெளியா? அல்லது அவர் தன் அனுபவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்க்கையைப் பார்ப்பதாலா?
பிரச்சனை போராட்டத்தை தோற்றுவிக்கும். போராட்டத்திலிருந்து நல்ல யோசனை பிறக்கும். அந்த யோசனை உள்மனப் போராட்டமாக இருந்தால் மனிதனிடம் மாற்றம் வரும். யோசனை சீரான வழியில் இருந்தால் மனிதன் உயர்ந்து விடுவான். இல்லாவிட்டால் கோழையாகி விடுவான். கோழைத்தனம் அவனை சீர்குலைந்து போவதற்கு வழி வகுக்கும்.
கணவனின் நடவடிக்கை, தந்தையின் யோசிக்கும் தோரணை பாவனாவை யோசனையில் ஆழ்த்திவிட்டன.
சிறிய தொடக்கம் அது.
(தொடரும்)
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது