டப்பா

This entry is part 10 of 26 in the series 24 பிப்ரவரி 2013

சித்ரா சிவகுமார்
ஹாங்காங்

டப்பா.

மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பா.

அதுவும் ஸ்டான்லி என்கிற பள்ளி செல்லும் சிறுவனின் டப்பா.

இது தான் கதையின் கரு.

ஒன்றரை மணி நேரம் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை, இந்த மதிய உணவு டப்பா காரணமாக நடக்கும் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லுவதே “ஸ்டான்லி கா டப்பா” – ஸ்டான்லியின் டப்பா என்ற ஹிந்தி திரைப்படம்.

கடந்த வாரம் வரை எப்போதும் விஜய் தொலைக்காட்சியையே நாங்கள் இங்கு ஹாங்காங்கில் பார்த்து வந்தோம். ஆனால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் அந்த அலைவரிசை நிறுத்தப்பட்டதால், எங்கள் தொலைத்தொடர்பு அமைப்பாளரான நௌ தொலைக்காட்சியினர், எங்களுக்கு தொடர் ஹிந்தி படங்களைத் தரும் “ஸ்டார் கோல்ட்” அலைவரிசையைத் தந்தார்கள். ஹாங்காங்கில் திரையிடப்படும் படங்களைத் தவிர வேறு படங்களைப் பற்றிய விவரங்களை அறியாத காரணத்தால், ஹிந்தி படங்களை மிகவும் அரிதாகவே பார்ப்பதுண்டு.

சென்ற ஞாயிறு மதியம் ஒளிபரப்பட்ட இந்தப் படத்தை, குழந்தைகளைப் பற்றிய இந்தப் படத்தை எதேட்சையாக பார்க்க நேர்ந்தது. படத்தின் ஆரம்பத்தில் பல பள்ளிகளுக்கு நன்றி தெரிவித்திருந்த காரணத்தால், அது நிச்சயம் பள்ளி பற்றியது என்பது உறுதியானது. கடந்த வருடம் தான் நாங்கள் சீனாவின் குவாங் சாவ் நகரில் ஒரு பள்ளியை ஆரம்பத்து இருந்ததால், பள்ளியில் குழந்தைகள் என்று ஆவலுடன் பார்க்க முனைந்தேன்.

ஒவ்வொரு ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பார்க்க முடிந்தது. அதற்கு எதிராக எப்படிக் குழந்தைகள் செயல்படுகிறார்கள் என்பதும் காட்டப்பட்டது. ஒரு இடது கை பழக்கம் கொண்ட மாணவனும் வலது கை பழக்கம் கொண்ட மாணவனும் அருகருகே அமர்ந்து எழுதும் போது ஏற்படும் சண்டையை ஒரு ஆசிரியர் மாணவர்களை வகுப்பிற்கு வெளியே அனுப்பி தண்டிப்பதும், இன்னொரு ஆசிரியர் அவர்களை சற்றே இடம் மாற்றி உட்கார வைப்பதும், எப்படி சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வது என்பதைக் காட்டியது. அதே போன்று மாணவன் செய்து வரும் கலங்கரை விளக்கச் செயல்திட்டத்தை ஒரு ஆசிரியர் பாராட்டுவதும், மற்றொரு ஆசிரியர் பாட திட்டத்தில் இல்லாததால், தூக்கி எறியச் சொல்வதும் நம் பாட திட்ட அடிப்படையைக் காட்டியது.

நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்டான்லி, தினம் மதிய உணவு கொண்டு வராமல், நண்பர்களின் உணவினை உண்கிறான். அதே பள்ளியில் ஹிந்தி மொழி ஆசிரியர் உணவு கொண்டு வராமல், மற்றவர்களின் உணவினை சிறிது சிறிதாக உண்டு வயிற்றை நிரப்பி விடுபவர். இடையில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு பல நாட்கள் விடுமுறை தந்துவிட்டபடியால், பாடங்களை நடத்தி முடிக்க பள்ளி நேரம் அதிகப்படுத்தப்பட்டதால் குழந்தைகள் அதிக மதிய உணவினை எடுத்து வர நேர்கிறது.

வகுப்பில் மாணவர்கள் கொண்டு வரும் உணவு டப்பாக்களை கண்ணுற்ற அந்த ஹிந்தி ஆசிரியர், அதை உண்ண விரும்புகிறார். முதல் நாள் உணவு நேரத்தின் போது, குழந்தைகளின் உணவை உண்ண வேக வேகமாக வரும் சமயம், இடையில் மறிப்பவர்களை சரி கட்டிவிட்டு வகுப்புக்கு வரும் போது, மாணவர்கள் உணவினை உண்டு முடித்ததால், காலி டப்பாக்களே இருக்கின்றன. ஆசிரியருக்கு ஏமாற்றமாகி, டப்பா கொண்டு வராத ஸ்டான்லியின் காரணமாகத் தான் தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று எண்ணி, அவனை திட்டுகிறார். அதை மனதிற்கொண்ட ஸ்டான்லி, மறுநாள் முதல், தான் வீட்டிற்குச் சென்று சுடச்சுட உணவு உண்ணப் போவதாகச் சொல்லிச் சென்று விடுகிறான். ஆசிரியர் மாணவர்களுடன் உணவினை உண்டு மகிழ்கிறார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஸ்டான்லி வீட்டிற்குச் செல்லாமல் பள்ளியின் வாசலருகே இருப்பதைக் கண்ட அவன் தோழன், அவனது செயலை தன் தோழர்களிடம் கூறுகிறான். நண்பர்கள் ஸ்டான்லியிடம் காரணம் கேட்பதும், ஸ்டான்லி தன் தந்தை வேலை விசயமாக டெல்லி சென்றதாகவும், தாயும் உடன் சென்றதால், மதிய உணவு செய்து தர முடியாமல் போனது என்று காரணம் கூறுகிறான். உடனே ஸ்டான்லி நண்பர்கள் உதவ எண்ணி, வகுப்பிலே உண்ணாமல், தங்கள் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி, ஸ்டான்லியுடன் உண்கின்றனர். நல்ல உணவு கிடைக்கும் வாய்ப்பு தவறியதை எண்ணி, ஆசிரியர் மாணவர்களிடம் எங்கு சென்று உண்கிறார்கள் என்று வகுப்பில் கேட்கிறார். ஒவ்வொரு முறையும் மாணவர்கள் வௌ;வேறு இடத்தைச் சொல்லி, ஸ்டான்லிக்கு உணவு தர வேண்டி, ஆசிரியருக்கு உணவு தராமல் ஏமாற்றுகிறார்கள்.

கடைசியில் ஒரு நாள் மாணவர்கள் உண்ணும் இடத்தைக் கண்டுபிடித்து ஆசிரியர், மாணவர்களிடம் சென்று கடிந்து கொள்கிறார். ஸ்டான்லியும் உடன் இருப்பதைக் கண்டு, இனிமேல் டப்பா கொண்டு வரவில்லையென்றால், பள்ளிக்கு வர வேண்டாம் என்றுச் சொல்கிறார். அதை சிரமேற்கொண்டு ஸ்டான்லி, வகுப்பிற்கு வராமல் இருக்கிறான். இரண்டு நாளில் ஆசிரியருக்கே ஏனோ வருத்தமாகிப் போனது. மாணவர்கள் மற்ற ஆசிரியர்களிடம் நடந்ததைச் சொன்னதும், அவர்கள் ஹிந்தி ஆசிரியரை கடிந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே 50 பள்ளிகள் பலவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்ற விழாவிற்கு ஸ்டான்லியின் பள்ளிக்கும் அழைப்பு வருகிறது. ஆனால் அதில் கலந்து கௌ;ளும் அளவிற்கு தகுதி வாய்ந்த மாணவர்கள் இல்லை என்று ஆசிரியர்கள் எண்ணியதால், யாரையும் அனுப்பாமல் இருக்கின்றனர். ஆனால் ஸ்டான்லியின் நண்பன் அபிஷேக் அவனுக்கு அதில் கலந்து கொள்ளும் திறமை இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டு, சுற்று அறிக்கையை கொடுத்துப் போய் பார்க்கச் சொல்கிறான்.

விழா ஒத்திகை நடக்கும் இடத்திற்கு அவன் சென்றுப் பார்க்கிறான். அங்கு நடக்கும் பயிற்சிகளை பார்த்து பார்த்து, தானாக கற்று பயற்சி செய்கிறான். எதேட்சையாக ஒரு முறை ஒரு பயிற்சியாளர் அவன் பயிற்சி செய்வதைக் கண்டு அவனை விசாரிக்கின்றார். அவனது பள்ளி பெயர் கொடுத்திராத போதும், அவனது ஆவலைக் கண்டு, அவனும் விழாவில் கலந்து கொள்ள அனுமதி அளித்து பயிற்சித் தருகிறார்.

இதற்குள் ஸ்டான்லி ஒரு நாள் பள்ளிக்கு ஒரு பெரிய டிபன் காரியரில் உணவு கொண்டு வந்து ஹிந்தி ஆசிரியருக்கு உணவு கொடுக்கிறான். அவனது செயலால் வெட்கி, ஆசிரியர் வேலை விட்டுச் செல்கிறார். ஸ்டான்லிக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்துச் செல்கிறார்.

நிகழ்ச்சி நாளன்று பள்ளி ஆசிரியர்கள் ஸ்டான்லி பங்கு கொண்ட நிகழ்ச்சிகளை ரசிக்கின்றனர். ஆசிரியர் ஒருவர் அவனை வீட்டில் விடுவதாகச் சொல்லி கேட்கிறார். ஆனால், அவன், “என் அம்மா காரில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லி உடன் செல்ல மறுக்கிறான். பின்னர் தலைமையாசிரியர் உதவியுடன் ஒரு உணவகத்திற்கு முன் இறங்கிக் கொள்கிறான். உள்ளே சென்ற போது, அவனது சித்தப்பா அவன் நேரம் கழித்து வந்ததை சுட்டிக் காட்டி கோபத்தில் அவன் கன்னத்தில் அறைகிறார். ஒரு விபத்தில் இறந்து விட்ட அவன் பெற்றோர், அவனை உலகில் தனித்து விட்டுச் சென்றதை அவர்களது சம்பாஷனை மூலமாக அறிந்து கொள்ள வைக்கிறார் இயக்குநர். சிறுவன் ஸ்டான்லி அதற்குப் பிறகு உடைகளை மாற்றிக் கொண்டு உணவக வேலையில் உதவி செய்து விட்டு, அக்ரம் என்கிற வேலையாளுடன் மீதமுள்ள உணவினை கேரியரில் வைத்து விட்டு, இரவு உணவினை உண்டு விட்டுப் படுக்கச் செல்கிறான். உறங்கப் போகும் முன் தன் தாயின் புகைப்படத்திற்கு முன் விளக்கேற்றி வணங்குவதுடன் படம் முடிகிறது.

குழந்தைத் தொழிலாளியைப் பற்றி இந்தத் திரைப்படம் எடுத்துச் சொல்வதை உணர முடிந்தது. ஹிந்தி ஆசிரியராக நடித்தவர் இயக்குநர் அறிந்து அவரை பாராட்டத் தோன்றியது.

படத்தைப் பார்த்து முடித்ததும், படத்தைப் பற்றிய மேல் விவரங்களை அறிய விக்கிப்பீடியாவில் பார்த்த போது, குழந்தைப் படங்களை எடுக்கும் இயக்குநர் அமோல் குப்தே இதையும் தன்னுடைய நண்பர்களுடன் குழந்தைகளை சனிக்கிழமைகளில் அழைத்து இந்தப் படத்தை எடுத்ததாகக் கொடுக்கப்பட்டு இருந்தது. ஸ்டான்லியாக நடத்தவன் பார்த்தோ கும்தே. ஆம்.. இயக்குநரின் மகனே ஸ்டான்லியாக நடித்தான்.

படம் பார்த்ததும் அதை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமும் உடன் எழுந்தது. படத்தைப் பார்க்க மிகவும் நன்றாக் இருந்தது. உங்களுடன் இந்தப் படம் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பியே இக்கட்டுரையை எழுதினேன். நேரம் கிடைக்கும் போது படத்தைப் பார்த்து மகிழ வேண்டுகிறேன்.

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -7குறட்டை ஞானம்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *