போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9

This entry is part 15 of 26 in the series 24 பிப்ரவரி 2013

யசோதராவின் சயன அறை வாயிலில் நிழலாடியது. “இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது” என்றாள் பணிப்பெண். ” அந்தத் தூதுவனை வரச் சொல் ” என்றாள் யசோதரா. தூதுவன் அறையின் வாயிலில் கிடையாக விழுந்து வணங்கினான். “இளவரசி யசோதரா, இளவரசர் சித்தார்த்தர், மன்னர் சுத்தோத்தனர் வாழ்க. கபிலவாஸ்துவில் என்றும் மங்களம் தழைக்கட்டும்”

“வருக தூதுவரே. உங்கள் பயணம் இனிதாயிருந்ததா?”

“ஆம் இளவரசி. தாங்களும் ராகுலனும் நலம் தானே?”

“நலமே. தாய் தந்தையர் நலம் பற்றிக் கூறுங்கள்.”

“மன்னரும் மகாராணியும் நலம் தான் இளவரசியாரே. மகாராணி தங்கள் நலம் குறித்து மிகவும் கவலையாயிருக்கிறார்”

“அவரிடம் நல்லவிதமாக என் நலம் பற்றி எடுத்துச் சொல்வீராக”

“தங்கள் ஆணைப்படியே இளவரசி. மகாராணி இந்த லிகிதத்தைத் தங்களிடம் ஒப்படைக்கக் கட்டளை இட்டார்”. யசோதரா அதை வாங்கியபடியே “பயணக் களைப்புத் தீர ஓய்வெடுத்துப் பின்னர் நான் தரும் பதில் லிகிதத்தைக் கொண்டு சேர்ப்பீராக” என்றாள். தூதுவன் வணங்கி விடை பெற்றான்.

வெண்பட்டுத் துணியின் மீது மென்மையான முங்கில் குச்சத்தை வைத்து அம்மா தானே எழுதிய அழகான எழுத்துக்களைக் காணும் போது அம்மவையே நேரில் பார்ப்பது போல இருந்தது.

“அன்பு மகள் யசோதராவுக்கு, எங்கள் இருவரின் நல்லாசிகள். பேரன் ராகுலன் எப்படி இருக்கிறான்? நீ நலமா? அண்ணன் சுத்தோதனரும் மகாராணி பஜாபதி கோதமியும் நலமா?

சித்தார்த்தன் மகத நாட்டில் உள்ள வனம் வரை சென்று விட்டதை நானும் அறிவேன். உனது தந்தை மிகவும் மனம் உடைந்து விட்டார். சித்தார்த்தன் சிறு பிள்ளை இல்லை. அவர் மனம் தானே சமநிலைப்பட்டு கண்டிப்பாகத் திரும்பி வருவார். நீ தைரியம் இழக்காதே.

உன்னைப் பற்றி நான் கேள்விப் படுபவை மனதுக்கு சந்தோஷம் தருபவையாக இல்லை. நீ தரையில் பாயில் படுத்து உறங்குவதாகவும் சாதாரண ஆடை அணிந்து அணிகலன்கள் இன்றி இருப்பதாகவும் கேள்விப் பட்டேன். சித்தார்த்தனின் மனைவியாகவும், இளவரசியாகவும் இருக்கும் உனது இந்த நிலை எனக்கோ உன் தந்தைக்கோ எப்படி ஏற்புடையாதாகும்? இதன் மூலம் நீ அண்ணன் சுத்தோதனைரையும் உன் அத்தை கோதமி மனத்தையும் புண்படுத்துகிறாய் என்பதை நினைவிற் கொள். கபிலவாஸ்து குடிமக்கள் மாமன்னரின் குடும்பத்தின் சோகத்தால் மிகவும் மனவருத்தம் அடைவார்கள்.

இன்று ராகுலன் கைக்குழந்தையாக இருக்கலாம். நாளை அவன் உன்னை கவனித்தே வளருவான். அப்போது சோகமும், தன்னைத் தானே வருத்திக் கொள்வதும் தான் அவனுக்குக் காட்சியாக வேண்டுமா?

மன்னர் ராஜாங்க விஷயங்களில் எப்போதும் கவனமாயிருப்பவர். அவருக்கே பல நேரங்களில் உன்னைப் பற்றிய வருத்தமும் கவலையும் மிகுந்து விடுகிறது. அந்தப்புரத்தில் சதா உன்னையே நினைத்திருக்கும் என்னைப் பற்றியும் யோசிப்பாயாக. யசோதரா, பனிக்காலத்தில் மாடத்திலிருந்து காணும் போது கண்ணுக்கெட்டிய வரை புகை மூட்டமாக மூடுபனி சூழ்ந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் பனிக் காலத்தில் சில நாட்களிலே மட்டும் அது கவிந்து கண்ணை மறைப்பதையும் பின் கதிரவன் உதித்து பல நாழிகை கடந்து அந்தப் பனி விலகுவதையும் நீ வியப்போடு வேடிக்கை பார்த்து வந்தாய். இப்போது உன்னைச் சூழ்ந்திருக்கும் சோதனையும் சோகமும் அதே போன்றவையே. விரைவில் யாவும் மாறி மகிழ்ச்சி பிறக்கும். உன்னைப் பழைய யசோதராவாகப் பார்த்தேன் என்று தூதுவன் சொல்லப் போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ராகுலனுக்கும் என் நல்லாசிகள். அன்பு அம்மா.”

அன்பு அம்மாவுக்கும் அப்பாவுக்கும், நானும் உங்கள் பேரன் ராகுலனும் தங்கள் பாதம் பணிகிறோம். ஆசீர்வதியுங்கள்.
தூதுவனைப் பார்த்த போது நம் மண்ணுக்கே வந்தது போல மகிழ்ச்சியாயிருந்தது. லிகிதத்தில் தங்கள் முத்து முத்தான எழுத்துக்களை வாசிக்கும் போது தங்கள் மடியிலேயே படுத்திருப்பது போல நிம்மதியாக இருந்தது.

என்னைக் குறித்து வணக்கத்துக்குரிய மாமன்னர் ஏன் மனக்கலக்கம் அடைய வேண்டும்? நான் பாயில் படுத்துறங்குவதைக் கேட்டு தாங்கள் ஏன் வருந்துகிறீர்கள்?

என் கணவர் மட்டுமல்ல இளவரசர். சிறுவயதில் விளையாட்டுத் தோழர். பின்னர் வாழ்க்கைத் துணைவர். பல இளவரசிகளை அவர் நிராகரித்த போது என்னையுமறியாமல் எதிரே சென்று நின்றேன். இரு ஆன்மாக்களின் சங்கமமாக என்றும் நீங்காத பந்தமாக அவரின் மனைவியாகும் பேறு பெற்றேன்.

ராஜவம்சத்தவரான ஷத்திரியர் வாளேந்துவதையும், நாடுகளைப் போரிட்டு வெல்வதையும், பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிர்மாணிப்பதிலும் பெருமை காண்பவர்கள். இளவரசரும் வாள் வில் என வீரத்திலும், இசை நடனம் என கலா ரசனையிலும் எல்லா விதத்திலும் பெருமை படைத்தவர் அவர் இப்போது நாடுகளை வெல்லும் போரைத் தேடாமல் ஞானத்தைத் தேடும் போராட்டத்தில் லயித்திருக்கிறார். இதிலும் அவருக்குத் துணை நிற்க நான் கடமைப் பட்டவளே. அவர் மண்ணிலும் படுத்துறங்கும் போது நான் மஞ்சத்தில் உறங்க மனம் ஒப்புமா?

ஆணின் உலகம் அவரது மனத்தின் விஸ்தாரத்தை, அதன் போக்கின் வேகத்தைக் கொண்டு பல காத தூரம் நான்கு திசைகளிலும் கூட விரியக் கூடும். ஆனால் ஒரு பெண்ணுக்கு, அவரது மனைவிக்கு அவர் மட்டுமே உலகம்.

தாங்கள் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் இங்கே கபிலவாஸ்து மாமன்னரும், அங்கே என் தந்தையும் இளவரசர் மீது கோபம் கொண்டுள்ளது எனக்குப் புரிகிறது.இளவரசர் அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதது மட்டுமல்ல அவர்கள் ஏற்க இயலாத மார்க்கத்தில் மேற்சென்று விட்டார். எனக்கு இளவரசரைப் பற்றி எண்ணும் போதெல்லாம் சாதகப் பறவையே நினைவுக்கு வருகிறது. வானிலிருந்து வரும் தூய மழை நீரையன்றி வேறெதையும் அருந்தது உயிர் துறக்கவும் அது இயல்பாய் முன்வரும். இளவரசரின் ஞானத் தேடல் என்னும் தாகம் தீரும் நேரம் நெருங்குகிறது. இத்தனை நாள் ஒரு தங்கக் கூண்டில் சிறைப்பட்ட சாதகப் பறவையாகவே அவர் தன்னுள் தவித்திருக்கிறார். அவரது விடுதலை என் மகிழ்ச்சி. அவரது ஞான தாகம் தீரும் நேரமே என் விருப்பமும்.

குளிர்காலப் பனிமூட்டமென்று இந்தக் காலகட்டத்தைப் பற்றித் தாங்கள் குறிப்பிட்டீர்கள். நானோ இவற்றை அமாவாசையை அடுத்து வரும் நாட்களென்றே கருதுவேன். முழுநிலவாக அவர் மனதில் ஞான ஒளி பரவும் நாள் வரும்.

உங்கள் நல்வாக்குப் படியே நானும் அவர் என்னைக் காண வருவார் என முழுமனதாக நம்புகிறேன். எந்த அறையில் இரவு பிரியாத நிலையில் என்னையும் ராகுலனையும் விட்டு நீங்கினாரோ அதே இடத்தில் அவராகவே எங்களை மீண்டும் சந்திப்பார். அந்தத் திருநாள் வரும் வரை நான் அங்கேயே அவருக்காகக் காத்திருப்பேன். அவர் ஞானம் வரும் வேளைக்காகத் தவமிருக்கிறார். நான் அவர் அவர் வரும் வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன் அன்பு மகள் யசோதரா

தூதுவனிடம் லிகிதத்தைக் கொடுத்து அனுப்பும் போது தனது பதில் தாய் தந்தையருக்கு மன மகிழ்ச்சியைத் தராது என்றே தோன்றியது. மகிழ்ச்சியும் துக்கமும் தாண்டிய நிலையைத் தேடி அன்புக் கணவர் சென்றிருக்கும் போது மானசீகமாய் இங்கே அதே நிலையை நானும் தேட வேண்டியவள் தானே?

“சாக்கிய வம்ச இளவரசர் சித்தார்த்தனை மகத நாடே அன்புடன் வரவேற்கிறது” என்று துவங்கினார் மகாராஜா பிம்பிசாரர். பிரதம அமைச்சரும், ராஜகுருவும், படைத்தளபதியும், ஏனைய அமைச்சரும் முக்கியஸ்தர்களும் என சபை கூடியிருந்தது.

“நான் ராஜகுமாரனாகத் தங்கள் தேசத்துக்கு வரவில்லை. ஒரு வைராகியாக, பிட்சை எடுத்து வாழும் வழிப்போக்கனாகவே வந்திருக்கிறேன்”

“அப்படியே இருக்கட்டும் சித்தார்த்தரே. தங்கள் தந்தையும் கபிலவாஸ்து மக்களும் நீங்கள் திரும்பி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.”

“மகாராஜா. இருப்பு குறித்த கேள்விகளுடன் நான் புறப்பட்டு விட்டேன். இருப்பிடம் எது என்பது தற்செயலானது”

“ராஜகுமாரரே. என்னை நீங்கள் என்னை உங்கள் பெரியப்பாவாகக் கருதி இங்கேயே என்னுடன் இருக்கலாமே? சகோதர நாட்டில் நீங்கள் வேறு ஒரு அரண்மனையில் இருக்கப் போகிறீர்கள். அவ்வளவு தானே?”

“மாமன்னரே! தங்கள் தலைநகர் ராஜகஹத்துக்கு வெளியே மலை அடிவாரத்தில் ‘அமர கலாம’ என்னும் குருவின் ஆசிரமத்தைக் கண்டேன். அவரிடம் சீடனாயிருந்து யோகம் கற்க எண்ணம்.”

பெரிய செந்தூரத் திலகமும் ருத்திராட்சக் கொட்டைகளைத் தங்க மாலையில் அணிந்திருந்த ராஜகுரு ” மன்னா! தங்கள் அனுமதியுடன் நான் சித்தார்த்தரை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்”

“கேளுங்கள் ராஜகுரு அவர்களே”

“சித்தார்த்தரே! அமர கலாம தம்மை ஷ்ரமணர் என்று கூறிக் கொள்கிறார். ஆனல் சார்வாக வழிமுறையில் அஜிதரை அவர் பின்பற்றவில்லை”

“அதாவது ஸ்வபாவம் என்னும் வழிமுறையில் துய்ப்பு என்னும் இயல்பைத் துய்ப்பின் மூலமே தாண்டுவது. அதை அவர் ஏற்கவில்லை என்பதை நான் அறிவேன் பெரியவரே”

“அமர கலாம மகாவீரரின் வழியையும் முழுதாக ஏற்கவில்லை. அதாவது பல காலமாகத் தன்னை யோகி ஏன்று கூறிக் கொள்ளும் அவர் துறவு பூண்டு, வாயின் மீது வெள்ளைத் துணியைப் போர்த்தி, கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களைக் கூடக் காக்கும் முறைக்கு வரவில்லை”

“ராஜகுரு அவர்களே! ஷ்ரமண வழிமுறை வைதீக மதம் போல குதிரைக்கு சேணம் பூட்டிய வழிமுறைகளை நிராகரிப்பதே. மகாவீரருக்குப் பின் வந்த அஞ்ஞான மார்க்கம் சஞ்சயின் என்பவர் தொடங்கிய மற்றொரு சுதந்திர சிந்தனை வழி. நான் இந்த சிந்தனைகளை ஒப்பிடும் ஒரு யோகியாகவே அமர கலாமவைக் காண்கிறேன்”

“சித்தார்த்தரே. குதிரைக்குக் கடிவாளம் பூட்டியது போல என நான்கு வேதங்கள் காட்டிய வழியில் செல்லும் நான்கு வருணத்தோரையும் அவமதிக்கும்படி பேசி விட்டீர்கள்”

“நான்கு வருண பேதம் மகாபாரத காலத்திலேயே சர்ச்சைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது தான். வேதங்கள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவ்வழியில் ஹோமத்தில் பல சாதுவான ஜந்துக்களை பலி கொடுப்பதை மகாவீரர் நிராகரித்ததே சரி”

“நீங்கள் இளையவர் சித்தார்த்தரே. பல ராஜ்ஜியங்கள் உள்ள பாரதவர்ஷத்தில் இன்னும் வேதமும் வைதீக மார்க்கமுமே வழி காட்டுகின்றன. மகாவீரர் வழியில் சென்றவர் மிகச் சிலரே.”

“வேதங்களைப் பற்றிய சர்ச்சைக்கு இந்த நட்பு முறையான சந்திப்பு சரியான தருணமல்ல. உபநிடதங்களில் கடோபநிடதத்தை எடுத்துக் கொள்வோம். கேள்வி கேட்பதும் தானே அழியாத சத்தியத்தைத் தேடி அறிவதுமே ஒருவரின் கடமைகளுள் சிறந்தது. ஷ்ரமண வழிமுறையே ஞானிகள் தம் தேடலில் புதிதாக வெளிப்படும் சுதந்திரம் பற்றியதே”

மகாராஜா குறுக்கிட்டார் “வாள், வில், இசை, ஓவியம் இவற்றில் மட்டுமே சித்தார்த்தர் வல்லவர் என நினைத்திருந்தேன். தர்மம் பற்றிய ஆழ்ந்த அறிவிலும் சிறந்து விளங்குகிறீர்கள். எங்களுடன் தாங்கள் உணவருந்தி கௌரவியுங்கள்”

“தங்கள் அன்பை மதித்து இந்த ஒரு முறை உங்கள் அரண்மனையில் உணவருந்துகிறேன். பிட்சை எடுத்து வாழ்வது ஒன்றே அகம்பாவத்தை அழித்து உடமைப் பற்றின்றி ஞான மார்க்கத்தில் நிலைக்க உதவும் மாமன்னரே”

“தங்கள் விருப்பப்படியே ராஜகுமாரரே. நீங்கள் மறுபடியும் என் அரண்மனைக்குக் கண்டிப்பாக வர வேண்டும்’

“என் முயற்சி பூரணமாகி நான் மெய் ஞானம் பெற்றால் முதலில் மகத நாட்டுக்கே வருவேன்”

————————-

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..18. நாஞ்சில்நாடன் – ‘எட்டுத் திக்கும் மதயானை’பல
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *