முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான்.
இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோகநெறிகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது அட்டாங்க யோகமாகும். இவ்வட்டாங்க யோக நெறிகள் பல திருக்குறளில் இடம்பெற்றுள்ளன.
யோகம் – விளக்கம்
யோகம் என்பற்கு ஒருங்கிணைப்பு, நற்சேர்க்கை என்பதே மிகச்சிறந்த பொருள் ஆகும். கீதையில் பகவான் கண்ணன்,
‘‘நம் அவல குணங்களை நீக்கி பலவித யோகத்தால் நற்கதி அடைவதை யோகம்”
என்று கூறுகின்றார். பதஞ்சலி முனிவர்,
“யுஜிர் யோகே, யுஜ் ஸமாதௌ என்பன வ்யுத்பத்திகள்”
என, மன ஓட்டத்தைத் தடுப்பதே ‘யோகம்’ என்று குறிப்பிடுகின்றார்.
யோக முறைகள்
யோக முறைகள் பலவாகும். அவையாவன,
- இராஜயோகம்
ஒரே இடத்தில் அமர்ந்து செய்ய்படும் தியானம். - ஹடயோகம்
உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்தல் - கர்மயோகம்
பலனை எதிர்பாராமல் கர்மங்கள், தொண்டுகள் செய்து வாழ்தல் - ஞானயோகம்
மெய்ஞான அறிவால் இறைவனை அறிந்து அதன் படி நடத்தல் - பக்தி யோகம்
இறைவன் மேலும் உயிர்களின் மேலும் அளவுகடந்த பக்தியும் அன்பும் வைத்தல் - மந்திர யோகம்
மந்திர ஜபத்தால் சக்தியை உரு கொடுத்தல் - கீதா யோகம்
இறைவனை நினைத்து உருகி பஜனையால் ஆராதனை செய்தல்
பலவித யோக முறைகளில் ஹடயோகம் என்பதே யோகாசனம் எனப்படும். ஆக யோகம் என்பதில் ஒரு சிறு பகுதியே யோகாசனம் ஆகும்.
அஷ்டாங்கயோகம்
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அஷ்டாங்க யோகங்களாவன
- இயமம்:
இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில்அன்பு, உண்மையைக் (சத்தியம்) கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபித்து வாழ்தலே இயமம் எனும் முதல்படிநிலையாகும். - நியமம்:
ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தை அடைவது நியமம் ஆகும். இது கிரியை எனப்படும். தூய்மை, நிறைவு, நோன்பு, கல்வி,அபயம் அடைதல். - ஆசனம்:
உடற்பயிற்சி நிலைகளைக் குறிக்கும். அதாவது யோகாசன முறைகளைக் குறிப்பிடுகின்றது. - பிராணயாமம்:
மூச்சு கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளைக் குறிக்கும்.மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல் என்றும் இதனைக் கொள்ளலாம். - பிரத்தியாகாரம்:
புலனடக்கத்தைக் குறிக்கும். உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல் - தாரணை:
மன ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது.மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம். - தியானம்:
இறைவனை உணரும் நிலையைக் குறிப்பிடுகின்றது.ஒன்றையே நினைதது எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல் - சமாதி:
இறைவனுக்குச் சமனான பேரின்ப நிலையை அடவைவதைக் குறிக்கும். உயிர் பிரம்மத்துடன் கலந்த நினைவற்ற இன்ப நிலை என்று இதனைக் குறிப்பிடலாம்.
இத்தகைய அஷ்டாங்க யோகத்தையே
‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
என்று திருமூலர் கூறுகிறார். யோகிகளுக்கும். தவம் செய்வோருக்கும் மட்டுமல்லாது இல்லறறத்தாருக்கும் இந்த யோகநெறிகள்மிகவும் பயன்படுபவை ஆகும். இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆகியவையேயோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப் படுகின்றன.
இயமம்
இதனை யாமா(yama) என்றும் குறிப்பர். இதற்குக் கட்டுப்பாடு என்று பொருள் கொள்ளலாம். யோக நெறியில் ஈடுபடுபவன் சுய கட்டுப்பாளாகச் சில விதிகளை கடைபிடித்தல் வேண்டும். தன்னைக் கட்டுப்படுத்தி ஆளும் ஆற்றளுடையவனால்தான் மற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். இது தன்னாளுமைப்(Personality) பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை பெற்றவர்களால்தான் புறத்தூய்மையை எளிதில் பெற இயலும்.
திருக்குறளில் இத்தகைய இயம யோக நெறி அடக்கம் உடைமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. அடக்கம் அனைத்து உயர்வுகளையும் நல்கும் தன்மையுடையது. அதனால் அவ்வடக்கத்தைப் பொருளாகக் கருதிக் காத்தல் வேண்டும். உயிருக்கு அடக்கத்தைப் போன்ற செல்வம் வேறுஎதுவும் கிடையாது. ஆமைபோன்று ஐம்பொறிகளையும் அடக்கி வாழ வேண்டும் அது மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும் என்பதனை,
‘‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (126)
என வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
அடக்கத்தில் சிறந்தவனின் தோற்றம் மலையைவிடப் உயர்ந்தது என்பதை,
‘‘நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது’’ (124)
என்று மொழிகிறார்.
பதஞ்சலி முனிவர் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், ஆசை இன்மை ஆகிய ஐந்து கட்டுப்பாடுகளை இயம நெறியில் எடுத்து மொழிகின்றார். இதனையே திருவள்ளுவரும் இன்னாசெய்யாமை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவா அறுத்தல் என்று திருக்குறளில் எடுத்துரைக்கின்றார்.
இன்னாசெய்யாமை
பிறருக்கு உடலாலோ, உள்ளத்தாலோ எந்தவிதத்திலும் துன்பம் செய்யாமையை அகிம்மை என்று கூறுவர். சொல்லாலும், செயலாலும் நாம் பிறரைத் துன்புறுத்துகின்றபோது மற்றவர் அதனைப் பொருத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இது இயமநெறயில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. யாருக்கும் எந்தக் காலத்திலும் எந்தத் தீங்கும் செய்தல் கூடாது என்பதை,
‘‘எனைத்தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை’’ (317)
என வள்ளுவர் மொழிகின்றார்.
வாய்மை
வாய்மையே நிலையானது. இதனைச் சத்தியம் பதஞ்சலி முனிவர் என்பர். வாய்மை என்றும் மாறாததும் நிலையானதும் முழுமையானதும் ஆகும். இறைவனை அறிவதற்கு வாய்மைநெறியே அடிப்படை நெறியாகும். வாய்மை உடல், உள்ளம், செயல் ஆகிய அனைத்திலும் தூய்மையாக இருப்பதைக் குறிக்கின்றது. இத்தகைய நெறியை,
‘‘மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை’’ (295)
என வள்ளுவர் மொழிகின்றார். ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வா்யமையைச் சொல்வானாயின் அவன் தவமும் தானமும் செய்வாரைவிடச் சிறந்தவன் ஆவான் என்பதே இதன் உட்பொருளாகும்.
கள்ளாமை
மனிதன் விலக்குவதற்குரிய பண்புகளில் முதன்மையானது பிறர் பொருளைத் திருடாமை ஆகும். இத்திருட்டு தனிமனிதனையும் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் தன்மை உடையது. நமக்கு எது உரிமையில்லையோ, எது மற்றவர்களின் உடமையோ அதனைத் தமதாக்கிக் கொள்வதே கள்ளாமை என்ற திருட்டாகும்.
வள்ளுவர் பிறரது பொருளை வஞ்சித்து அடைய நினைக்கக் கூடாது. பிறர் பொருளை விரும்பா உள்ளத்துடன் வாழ்தல் வேண்டும் என்கிறார். உள்ளத்தால்கூடப் பிறர் பொருளைக் கவர நினைக்கக் கூடாதென்பதை,
‘‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்’’ (282)
என வலியுறுத்துகின்றார் வள்ளுவர். இயம நெறியில் தலையாய நெறியாக இஃது தெளிவுறுத்தப்படுவது நோக்கத்தக்கது. திருடுகின்ற எண்ணம் உடையவருக்கு மனம் ஒரு நிலையில் இராது. அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருக்கும். ஒழுக்கம் குன்றும். யோகநெறி கைகூடாது. அதனால் திருடும் பண்பை விட்டொழிக்க வேண்டும் என்று யோகநெறியாளர்கள் மொழிகின்றனர்.
துறவு
இதனைப் பிரம்மச்சரியம் என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகின்றார். மனிதன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கையே பிரம்மச்சரியம் எனப்படும். மனிதனிடம் இயக்கம், வளர்ச்சி ஆற்றல்கள் மட்டும் இருக்கவில்லை. மறு உற்பத்தி ஆற்றலும் இருக்கின்றது.இதனை நெறிப்படுத்தவும், முறைப்படுத்தவும் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அது பெருங்காமமாக(ஆசை) உருவெடுக்கும். இக்காமம் உள்ளம், அறப்பண்பு, அறிவு, உடல் வளர்ச்சி ஆகியவற்றில் பல்வேறுவிதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
துறவு என்பது இல்லற வாழ்க்கையை முற்றிலும் துறத்தல் என்பது அல்ல. தாமரை இலைத் தண்ணீர் போன்று உலக வாழ்வில் இருத்தலையே இஃது குறிக்கின்றது. யோக நெறியில் ஈடுபடுபவர்கள் முற்றிலும் இல்வாழ்வைப் புறக்கணித்தல் தேவையன்று. இல்வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே யோகநெறிகளைச் செய்யலாம். அதற்கு ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். இதனை,
‘‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு’’ (343)
என்று வள்ளுவர் எடுத்தியம்புகின்றார். ஐம்பொறிகட்கும் உரியவாகிய ஐம்புலன்களையும் வெல்லுதல் வேண்டும். விரும்பிய பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுதலையும் ஒருங்கே விடுதல் வேண்டும் என்று துறவு என்ற நெறியில் இயமநெறியை வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார்.
அவா அறுத்தல்
இதனை பதஞ்சலி முனிவர் அபரீகிரகா என்று மொழிகின்றார். அடுத்தவர்களுடைய பொட்களைத் தனதாக்கிக் கொள்ளம் ஆசையை விட வேண்டும். ஒருவனை வஞ்சித்து எதனையும் கவருதல் கூடாது. ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. அது இருக்குமானால் எல்லாத்துன்பங்களும் மென்மேலும் வளர்ந்து வரும். அதனால் அவ்வாசையை அறுத்தொழிக்க வேண்டும் என்பதை,
‘‘அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்’’ (368)
என்று வள்ளுவர் மொழிகின்றார்.
நியமா
நியமம் என்பதற்கு நல்லனவற்றைக் கடைப்பிடித்தல்(observances) என்பது பொருளாகும். நாள்தோறும் மனிதன் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளை நியமம் என்பது நமக்குத் தெளிவுறுத்துகின்றது. தூய்மை, திருப்தி(உளநிறைவு,மனநிறைவு), பிராயாச்சித்தம்(கழுவாய்), தற்சோதனை, இறைவனிடம் சரணடைதல் ஆகிய ஐந்து நியமங்களை யோகா குறிப்பிடுகின்றது.
தூய்மை
உடலைப் புறம் என்றும் உள்ளத்தை அகமென்றும் நமது முன்னோர்கள் குறிப்பிடுவர். ஒரு யோகிக்கு உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். தூய்மையான உணவு, நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நமது உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றோம். ஆசனங்கள், பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சிகள்), கிரியைகள் (நற்செயல்கள்) போன்றவற்றைச் செய்து நமது உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்கலாம். யோகிககள் தூய்மையாக இருப்பதற்கான நெறியை,
‘‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்’’ (298)
என்று திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். உடம்பு தண்ணீராலும் உள்ளம் உண்மையாலும் தூய்மையாகும் என்பது வள்ளுவரின் தெளிந்த ஞானவிளக்கமாகும்.
மனதுள் எந்தவிதமான தீய எண்ணங்களையும் வரவிடாது ஒருவன் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும். அதுவே உளத்தூய்மைக்கு உகந்த நெறி என்பதை,
‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’’. (304)
என்ற குறள்வழி திருவள்ளுவர் மொழிகின்றார்.
திருப்தி
இதனை உளநிறைவு அல்லது மனநிறைவு என்பர். ஒவ்வொருவரும் நிறைவான மனநிலையுடன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு வாழ்வது யோகநெறியில் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும். நமது முன்னோர்கள், ‘‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’’ என்று கூறியிருப்பதும் நோக்கத்தக்கது. நமது தேவைக்குமேல் எதனையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்ற தெளிந்த உள்ளத்தில் தோன்றிக் கிடைப்பதே மனநிறைவு ஆகும். மனநிறைவடையாதவர்கள் யோகநெறி நிற்றல் அரிதாகும். இதனை வள்ளுவர்,
‘‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்’’(174)
என்று எடுத்துரைக்கின்றார். ஐம்புலன் ஆசைகளையும் வென்ற யோகியர்கள், பிறர் பொருளைக் கவரமாட்டார். ஏனெனில் அவர்கள் உளநிறைவடைந்தவர்கள் ஆவர். மனநிறைவு பெற்றவர்கள் எதற்கும் ஆசைப்படமாட்டார்கள் என்பது வள்ளுவர் எடுத்துரைக்கும் நியமநெறியாகும்.
பிராயச்சித்தம் (tapas) Austerity)
இதனைக் கழுவாய் என்று அகரமுதலி குறிப்பிடுகின்றது. எதனைக் கண்டும் கலங்காது பொறுத்துக் கொண்டு அதிலிருந்து மீள்வதைக் கழுவாய் என்பது தெளிவுறுத்துகின்றது. துன்பம் வந்துவிட்டது. அதனைக் கண்டு கலங்கக் கூடாது. அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற கழுவாயைத் (வழியை) தேடி அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும். இதனை வள்ளுவர் இடுக்கண் அழியாமை என்று குறிப்பிடுகின்றார். இதனை தபம் என்றும் குறிப்பிடுவர். தபம் என்பதற்கு மனவலிமை, அல்லது மன உரம்(fortitude) என்று பொருள்கொள்ளலாம்.
இப்பிராயச்சித்தம் என்பதற்கு நாம் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பரிகாரம் (விடிவு) தேடுதல் வேண்டும். அதாவது அதற்குரிய நன்மையினைச் செய்துவிடுதல் வேண்டும். துன்பத்தைக் கண்டு துவளக் கூடாது. வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர் எவரோ அவர்துன்பத்திற்குத் துன்பம் தருவர் என்பதை,
‘‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’’ (623).
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
தற்சோதனை
தற்சோதனை என்பதற்குத் தன்னையறிதல் என்றுபொருள் கூறுவர். அதாவது தன்னைத்தானே சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டு மனஉரத்தை ஏற்படுத்திக் கொள்ளுதலைக் குறிக்கும். மனிதன் அப்போதுதான் பக்குவப்படுகின்றான். அவனுக்கே யோகநெறி கைவரப்பெறுகின்றது. இதனை தவம் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். தவம் என்பது ஒரு தற்சோதனையாகும். இதனை யாராலும் செய்ய முடியாது. யோகநெறி நிற்பவர்களால்தான் செய்ய இயலும் என்பதை,
‘‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது’’(262)
என்று வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார். துன்பத்தைப் பொறுத்துக் கொள்வது ஒரு தற்சோதனையாகும். அது யோகநெறி கைவரப்பெறுவதற்கு உரிய வழியாகும். இதனை,
‘‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’’ (267)
என்று யோகநெறி நிற்பவர்கள் செய்யவேண்டிய தற்சோதனை குறித்துப் பெருநாவலர் எடுத்துரைக்கின்றார். நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத்துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும் என்பது இதன் உட்பொருளாகும்.
இறைவனிடம் சரணடைதல்(Iswara Pranidhana)
இறைவனிடம் சரணடைதல் என்பது இறைவனிடம் தன்னை ஒப்புவித்தல் அல்லது அடைக்கலப்படுத்துதல் ஆகும். இதனைச் சரணாகதித் தத்துவம் என்று குறிப்பிடுவர். தான் எனும் அகம்பாவம் இதனால் அழிந்துவிடுகின்றது. எல்லாம் இறைவனின் செயல் என்பதை உணர்ந்தால் எந்தவிதமான துன்பமும் விலகிவிடும். அனைத்து உயிர்களுக்கும் இறைவனே பற்றுக்கோடாக உள்ளான் என்பதை யோகநெறியில் இருப்பவர்கள் உணர்தல் வேண்டும். இதனை,
‘‘யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்’’ (346).
‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’’(350)
என்று வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்துகின்றார்.
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தைஅடைவான். பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். இது இறைவனைச் சரணடையும் வழியாகும். அவ்வாறு தன்னைச் சரணடைந்த யோகியின் துன்பங்களை இறைவன் சுமைதாங்கியாகச் சுமந்து அவனது துன்பத்தைப் போக்குகின்றான்.
அட்டாங்க யோகத்திற்கு இவ்விரு நெறிகளே மூலாதாரமாகத் திகழ்கின்றன. இதனைக் கடைபிடித்தால் மற்ற அட்டாங்க நெறிகள் கைவரப்பெறலாம். இவை யோக நெறியில் நிற்பவர்களுக்கு உடல் உரத்தையும், உள உரத்தையும் வழங்கி சிறந்த யோகியாக அவர்களை மாற்றும் என்பது திண்ணம். இங்ஙனம் திருக்குறளானது வாழ்வியல் அற நூலாக மட்டுமல்லாது யோகத்தை எடுத்துரைக்கின்ற யோக நூலாகவும் அமைந்திலங்குகின்றது.
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2