1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தி
இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை அச்சத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு கடமைகளை நிறைவேற்றுவது பொதுத்தளத்தின் நோக்காக ஒருபக்கம் இருக்கிறது என்றாலும் இந்நாவல் மீனாட்சிபுரத்தை புனைவுத்தளத்தின் காமாட்சிபுரமாக மாற்றுகிறது. அங்குள்ள பள்ளர்குல தலித் மக்களின் மதமாற்றம் சமூகநீதியின்பாலும், சமத்துவத்தின் நம்பிக்கையினாலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழக சாதிக்கட்டுமான புலப்பரப்பில் இடைநிலையாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகவும் தெற்குப் பகுதியில் தேவர்கள், மத்தியப்பகுதியில் கவுண்டர்கள் வடபகுதியில் வன்னியர்கள் என்கிற அமைப்பாக்கத்தினை கவனத்திற்கொள்ளலாம். பிராமணீய, வைதீக சமய அதிகாரத்திற்கு எதிராக நிகழ்ந்த பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட அரசியல் கருத்துருவாக்க அரசியல் நிகழ்தளத்தில் தமிழகத்தின் மேற்கண்ட மூன்று இடைநிலை சாதியினரின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேலாதிக்கம் அறியப்பட்ட ஒரு உண்மையாகவே இருக்கிறது. இந்த மேலாதிக்கத்தின் கீழ் விவசாயக் கூலிகளாகவும், துப்புரவு தொழில் செய்யும் சமூகமாகவும், அடித்தள தொழில்சார்களத்தில் இயங்குபவர்களாகவும் தலித்துகள் இருக்கின்றார்கள்.
தலித் சொல்லாடலே சாதீய ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களைக் குறிப்பிடுகிறது. இது சாதாரண நிலையில் மேலத்தெரு, கீழத்தெரு என வாழிடம் சார்ந்தும், ஊர் சார்ந்தும் கோயில் நுழைவுக்கான உரிமையின்மை என வழிபாடு சார்ந்தும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி என உணவு பழக்கம் சார்ந்தும் இன்னும் பல்வித குறிப்புகளாகவும் மிக எளிமையாக ஆனால் சிக்கலாள தன்மையோடு நம் கண்ணுக்கே புலப்படாவண்ணமும் தென்படுகிறது. தேவர், கவுண்டர், வன்னியர் சமூகங்களுக்கு மறு நிலையில் அடித்தளம் சார்ந்த பள்ளர், அருந்ததியர், பறையர் சமூகங்கள் என எதிர்மறைகளாகவும், சாதிய ஆதிக்க ஒடுக்குமுறை அரசியல் வலைப்பின்னலாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சாதீய ஒடுக்கு முறைக்குள்ளான தங்களது பழைய அடையாளத்தை உதறித் தள்ள முயன்றதின் விளைவுதான் பள்ளர், தேவேந்திர குல வேளாளராகவும், அருந்ததியர் ஆதித்தமிழர் என்ற புதிய அடையாள சொல்லுருவாக்கமாகவும் நிகழ்ந்துள்ளது.
2)அன்வர் பாலசிங்கத்தின் நாவல் பிரதியில் தேவர், பள்ளர் முரண் சார்ந்த கட்டமைப்பு உள்ளுக்குள் அழுத்தமாக பதிந்திருக்கிறது. இத்தோடு பள்ளர், முஸ்லிம் என்கிற மற்றொரு கலாச்சார முரணும் நாவல் முழுவதும் மோதிக் கொண்டும், பல இடங்களில் சமரசம் செய்து கொண்டும் வெளிப்படுகின்றன.
ஒற்றுமைக்குள் நிலவும் வேற்றுமையின் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றுபடுதலைப் பற்றி யோசிக்க முடியும். ஒன்றுபடுதலுக்குள் தனித்த அடையாளங்கள், பண்பாடு, நடத்தை, மொழி என அனைத்தும் அழித்தொழிக்கப்படும்போது சினம் எழுகிறது. எது எனது அடையாளம் என்று குரல் வீரியத்தோடு தெறித்து விழுகிறது. பள்ளருக்கும், முஸ்லிமுக்கும் இடையிலான இந்த அடையாள அழிப்பும், ஒற்றை அடையாள உருவாக்கமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே இந்த நாவல் களம் அமைந்துள்ளது.
நாவலின் கதையோட்டத்தில் பள்ளர், முஸ்லிம் என்ற முரண் வகைப்பட்ட எதிர்வு முன்வைக்கப்படுகிறது. பிறகு முஸ்லிம், நவமுஸ்லிம் (புதிதாய் இஸ்லாத்திற்கு வந்த தலித் முஸ்லிம்) என்பதான இருமைகளால் பழையவடிவம் சிதைக்கப்பட்டு மீண்டும் முரண் புதுவடிவில் உருவாகிறது. பரம்பராய பெருமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற முஸ்லிம் சமூகம், தலித்துகளிலிருந்து மதம்மாறி இஸ்லாத்திற்கு வந்த முஸ்லிம்களை அணுகும் சாதி அரசியல் சார்ந்த நோக்கம் நாவலில் உருப்பெறுகிறது. தலித்களின் மீது கொண்டுள்ள சாதிய விலக்கல் பார்வைக்கு சற்றும் குறையாததாக பாரம்பரிய முஸ்லிம்களின் பார்வை அமைந்துவிடுகிறது. நவீன தீண்டாமையின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டு அதன் கூரிய நகங்களால் காயப்படுத்தப்பட்டு, பிறாண்டப்பட்டு குரூரப்படுத்தப்பட்ட தலித் முஸ்லிம்களின் துயரக்கதைகளாக இந்நாவல் மாறிவிடுகிறது.
கமாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த பள்ளர் குலமக்கள் முஸ்லிம்களாக மாறி காமாட்சிபுரம் பிலால் நகரான கதைப் பின்புலம் இந்நாவலில் தொழிற்படுகிறது. பிலால் நகர் என்ற புதுப்பெயரிடுதல் இஸ்லாமிய வரலாற்றின் அடையாளக் குறியீட்டின் மறு அர்த்த உற்பத்தியாகிறது. அரபுச் சூழலில் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்தாக்கங்களையும் புதிய அறவியல் ஒழுக்கங்களையும் முன்வைத்தபோது மக்கத்து பழங்குடி அரபுகள் அவற்றை எதிர்த்தனர். அப்போது முஸ்லிமாக மாறியவர்களில் ஒருவர்தான் பிலால். இவர் அபீசீனிய மண்ணின் கறுப்பின அடிமை. நபிகள் நாயகம், கறுப்பின அடிமையை விடுதலை செய்தார். இஸ்லாத்திற்கு வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த பிலாலுக்கு நிறவெறி வேறுபாட்டை ஒழிக்கும் பொருட்டு நபிகள் நாயகத்தால் தொழுகைக்கு அழைக்கப்படும் அதான் என்னும் பாங்கினை சொல்லும் சிறந்த பணி வழங்கப்படுகிறது. இன்றும் தமிழக பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் பாங்கொலிக்கும் முஅத்தீன் எனப்படும் மோதினாரை பிலால் என அழைப்பதும் உண்டு. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்தான் தலித்களிலிருந்து முஸ்லிமாகிய மாறிய காமாட்சிபுரத்திற்கு பிலால் நகரென பெயர் சூட்டப்படுகிறது.
அன்வர் பாலசிங்கத்தின் படைப்பாக்க முறை குறித்து இரண்டுவித குறிப்புகளை இங்கு முன்வைக்கலாம். இது தன் வரலாற்றுப் புனைவாக உருவாகி இருக்கிறது. அதே தருணத்தில் உரையாடலியப் புனைவாகவும் வடிவம் பெற்றுள்ளது. தன் வரலாற்றுப் புனைவினை பெண் கதாபாத்திரம் செல்ல மகள் நூர்ஜஹான் வழியாக என் பிரியமுள்ள அத்தாவிற்கு என கடிதத்தின் கதை சொல்லும் முறையாக வெளிப்படுகிறது. நாவலின் பல பக்கங்களில் உரையாடலிய புனைவு பேச்சு, எதிர்மறைப்பேச்சு கருத்து பரிமாற்றம் என வெளிப்படுத்திக் கொள்கிறது. இருந்தபோதிலும் உரையாடலால் கதை நகர்வு என்பதைவிட சம்பவ நிகழ்வுகளில் உருவாகும் கதை நகர்வு வாசகனுக்கு இந்நாவலோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சமூகத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்திற்குள், அமைப்புக்குள், உறவுக்குள் பயன்படுத்தும் சொற்கள் எப்போதும் ஒற்றை அர்த்தம் கொண்டவையாக அமைவதில்லை. வேறுபடுந்தன்மை அவற்றில் உண்டு. தமிழ், உருது மொழி அடிப்படை, மரைக்காயர், ராவுத்தர், லெப்பை, ஒசா தொழில் அடிப்படை, ஷாபி ,ஹனபி, ஹம்பலி, மாலிகி என மார்க்க சட்டப்பள்ளிகளான மத்ஹபுகளின் சார்பு, பரேல்வி -தேவ்பந்து, என சூபிகள்ஆதரவுஎதிர்ப்புமதரஸாபள்
அன்வர் பாலசிங்கம் நாவலின் துவக்கத்தில் நூர்ஜஹான் எழுதும் கடிதத்தில் பிரியமுள்ள அத்தாவிற்கு என்றே எழுதுகிறார். பிரியமுள்ள வாப்பாவிற்கு என்று எழுதவில்லை. தமிழ் முஸ்லிம் மரபில் தமிழ்பேசும் முஸ்லிம்கள், ஷாபி மத்ஹபை பின்பற்றுபவர்கள் தென்பகுதியில் தந்தைக்கு வாப்பா என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். உருது பேசும் முஸ்லிம்களிலும், ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களும் வாப்பாவிற்கு பதிலாக அத்தா என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
அன்வர் பாலசிங்கம் பாரம்பரிய முஸ்லிம்,நவ முஸ்லிம் என்ற பிரச்சினையை வெளிப்படையாக பேசியபோதிலும் வாப்பா, அத்தா என்ற சொல்லாடல்களை நாவலின் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்துவதின் மூலம் சொல்லப்படாத சூழ்நிலை வேறுபாடுகளை நனவிலி மனத்திலிருந்து படைத்துக் காட்டிவிடுகிறார்.
3)காதர்பாயின் மகள் நூர்ஜஹான் எழுதிய அந்த கடைசிக் கடிதம், தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதியது. அக்கடிதத்தின் வாசகங்களினூடேயே அக்குடும்பங்களின் வாழ்வியல் பரப்பு துயரம் நிறைந்த பின்னணியோடு சொல்லப்படுகிறது. இஸ்லாத்திற்கு மதம்மாறி வந்த காதர்பாய் நாற்பது வயதாகிவிட்ட தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஒரு தகப்பனின் அலைக்கழிப்பை விவரணை செய்கிறது. மாப்பிள்ளை பார்க்க போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் வயசை குறைத்து சொல்லிவிட்டு வெளியே வந்து பொய்சொல்லிவிட்டோமே என அழுகிற சேதியை உமர்சாச்சா சொல்லுகிறார். தனது அத்தா ஒரு முஸ்லிமாக அடையாள மாற்றம் பெற்ற குதூகலிப்பையும் பிறகான வெறுமையையும் ஒரு சேர இணைத்துக் காட்டும்போது முன்னையெல்லாம் ஜும்ஆ வருதுன்னா அன்னைக்கு காலையிலேயே செங்கோட்டைக்கு போயி உங்க தாடியை ஒதுக்கீட்டு வருவீக, வச்சதாடியையும் தோளில போட்ட பச்சதுண்டயும் எடுக்க முடியல….. நூருக்குட்டின்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் ஒரு நாளும் தொழுகை தப்பினதுல்ல, செங்கோட்ட சவுக்கு முக்கில நீங்க தாடி தொப்பியோடு நான் பர்தாவோடும் போறத ஏளனமா பார்க்கிற நாயி எத்தன இருக்கு தெரியுமாத்தா… என விவரிக்கும் வரிகள் ஒரு காட்சி படிமமாய் முஸ்லிம் மத மாற்றத்துக்கான எதிர் அரசியலை பேசுகின்றன.
முஸ்லிம் பெண்ணாக பர்தா அணிந்து இஸ்லாமிய வாழ்வியலை மேற்கொண்டாலும் நூர்ஜஹான் கதாபாத்திரத்தின் உள்மனம் தனது பூர்வீகம் பற்றிய அடையாளங்களுக்கே திரும்புகிறது. அதில் சாத்தியமாகிற திருமண உறவுகள், குழந்தைகுட்டியென பெருகும் குடும்ப உறவுகள் குறித்த ஏக்கங்களாகவும் தொனிக்கிறது. அக்கடிதத்தின் ஒரு வாசகம் இவ்வாறு பேசுகிறது.
அஞ்சாறு போட்டோ வச்சிருக்கியேளே உங்க மஞ்சபையில அந்த போட்டோவெல்லாம் விட உங்க வெத்தல பைக்குள்ள இருக்குமே, நான் கருப்பியா இருந்தப்ப எடுத்த போட்டோ அதுதாம்த்தா எனக்கு ரொம்ப புடிக்கும்…. பிறிதொரு இடத்திலும் நூர்ஜஹான் அக்கடிதத்தில் அத்தாவை நோக்கிச் சொல்கிறாள் நீங்களும் மதம்மாறாது அங்கிட்டே இருந்திருந்தா இந்நேரத்துக்கு நானும் ஒங்களுக்கு கொஞ்சிவிளையாட ரெண்டு பேரன் பேத்திய கொடுத்து கெழவியாயிருப்பேன்.
நூர்ஜஹான் நாற்பது வயதான பிறகும் தனது திருமணம் நடைபெறாத நிரந்தர வலியிலிருந்தும், தனது அத்தா அன்றாடம் பெறுகிற அவமானங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள தற்கொலை செய்து தன்னை அழிப்பதையே ஒரு தேர்வாக முன்னெடுக்கிறாள். செங்கோட்டைக்கு போற நேரமெல்லாம் சலீம் பேக்கரியிலே வாங்கிட்டு வருவியளே அந்த பப்ஸு நேத்தோடசரி. இன்னக்கு நீங்க வயலுக்கு போயிருக்கீங்க நாளைக்கு நீங்க எங்கயும் போக மாட்டியத்தா…. ஏன்னா உங்க செல்ல மகளை அனுப்பிவைக்க வேண்டாமா… இந்த வரிகளின் ஊடாக தனக்கு நடக்கவிருக்கிற மரணத்தையும், மய்யித்தை அடக்க எடுத்துப் போவதையும் நூர்ஜஹான் எழுதிச் செல்கிறார். மத்த வீட்ல எல்லாம் ஒரு தாய் பத்து மாசம்தான் பாரம்சுமப்பா ஆனா இங்கமட்டும் நீங்கரெண்டுபேரும் என்ன நாப்பது வருசம் பாரஞ் சுமந்து இருக்கிய என தனது ஆற்றாமையையும் அத்தாவின் நெடுந்துயரையும் வெளிப்படுத்துகிறார். முதிர்கன்னிகளின் அவலம் குறித்த எழுத்துக்கள் தமிழ் பரப்பில் வெளிப்படையாகவும், உள்ளொடுங்கியும் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன என்றாலும் இந்த நாவலில் இதன் பரிமாணம் வேறுவகைப்பட்டதாக உள்ளது. தலித்தாக இருந்து முஸ்லிம் பெண்ணாக மாறிய காரணத்தால் இரட்டை ஆதிக்க ஒடுக்குமுறைதன்மை கொண்டதாக இந்த வகை துயரம் வெளிப்பட்டு உள்ளது.
மரபு வழி முஸ்லிம்கள், ஜமாஅத்துகளில் தலித்தாக இருந்து மதம்மாறிய முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறார்கள். இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்த தலித் முஸ்லிம் பெண்களின் வதைப்படுதல் தாளமுடியததாகிவிடுகிறது. பல வருடங்கள் கழிந்துவிட்டால் பாரம் பரிய முஸ்லிம் / நவமுஸ்லிம் என்ற பாகுபாடே இல்லாமல் மறைந்து விடும் என அறிவுத்தளத்தில் இயங்கும் விமர்சகர்கள் கூறுவது ஒரு பொய்யான கருது கோளாகவே மாறிப் போயிருக்கிறது. ஒரே சிறிய ஊருக்குள் இருக்கும் ரெண்டு மூணு ஜமாஅத்துகள், வெவ்வேறு பள்ளிவாசல்கள், தொழில் அடிப்படையிலான வேறுபாடுகள் நமக்கு இன்னும் எதையெதையோ உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நாவலில் முஹதீனத்தாவின் பெருங்குரல் ஓரிடத்தில் இவ்வாறாக ஒலிக்கிறது.
ஊரு உலகமெல்லாம் நோட்ட தூக்கிட்டு. பிலால் நகர்க்கு நிதி சேர்க்கோம் சேர்க்கோம்னு சொல்லியே லட்ச லட்சமா சம்பாதிச்சியளே வாப்பா.. எங்க பிள்ளைகளை கரையேத்த உங்கள்ள யாருக்குமே மனசு வரலியா ஒண்ணு ரெண்டா… அறுவது கொமருக மேல சமஞ்சு நிக்குதே யா அல்லாவே இதுக்கு வழி இல்லியா…
டீக்கடை ரஹிமின் ஆவேசப்பேச்சு பிலால்நகர் முஸ்லிம்பெண்கள் எதிர்கொள்கிற இப்பிரச்சினையை இன்னும் தீர்க்கமாக உரத்து பேசுகிறது.
ஒண்ணாரெண்டா ஐம்பது பிள்ளைகளுக்கு மேல சமஞ்சு உக்காந்து வருசம் இருவது ஆகுதுவே. மாறதுக்கு கூட்டம்போட்டு உசுப்பேத்திய நீரு இப்ப யாம்வே மூஞ்சியை உம்முன்னு வச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீரு…
காதர் மவ போயிட்டாளாமேன்னு ஊரே ரணகளபட்டு நின்றபோது செத்துப்போன நூர்ஹகானின் சித்தி பன்னீரு கதறி அழுது கோபத்தோடு பேசுகிறாள்.
பெத்துவச்ச புள்ளை காலகாலத்துல கெட்டிக்குடுக்கக துப்பில்லாம உங்களுக்கெல்லாம் தாடி தொப்பி ஒரு கேடா வெக்கமாயில்ல.. என்னவெல்லாம் நினச்சிருந்தாளோ எந்தங்கம்… அய்யய்யோ எந்த அல்லாவும் வந்து காப்பாத்திலியே என்பதாக அந்த கதறல் வந்து விழுகிறது.
இந்த பன்னீருதான் ஊரே முஸ்லிமா மாறும்போது அவுக அக்காளை மட்டும் நீ மாறாத முதலாளிக்கு சமமா நீயும் உம் புருசனும் நிக்க முடியாது, கருப்பாயி வாழ்க்கையே போயிடும்னு ஊரதிர கத்தி தீர்த்தவள்தான். அது இப்போது உண்மையாகிவிட்டது.
இந்த நாவலில் நடமாடும் போர்க்குணமிக்க பெண் கதாபாத்திரமாக பன்னீரு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
நாப்பது வயசான போதும் திருமணமாகாத குமருகளின் நிலை ஒரு புறத்தே விவரிக்கப்பட்டாலும், அப்படியே பரம்பரை ஜமாஅத்துல யாராவது பெண்ணெடுக்க தயாரா இருந்தா ரெண்டாந்தாரமாட்டோ அல்லது மூணாந்தாரமாட்டோதான் திருமணம் செய்ய கேக்குறாங்க என்பது மற்றுமொரு வேதனைக்குரிய செய்தியாக முன் வருகிறது. முஸ்லிம்களில் யாரும் இப்பெண்கள் திருமணம் செய்ய முன்வராத நிலையில் இன்னொரு சம்பவமும் நடக்கிறது. திரும்பவும் தன் சாதிசார்ந்த பண்பாட்டுக்கு திரும்பி அங்குள்ள இந்து பள்ளர் சமூக இளைஞர்களை திருமணம் செய்வதான நிலையாக இது மாறுகிறது.
தென்கரை ஹஸனத்தா தனது உரையாடலில் துட்டு இல்லாத முஸ்லிம்னா அது பரம்பரையா இருந்தாலும் பாச்சா பலிக்காது வாப்பா துட்டுவேணும்… இந்த லட்சணத்துல நம்ம ஊரு பையமாரு கேரளாக்காரன் துட்டும் நகையும் ரொம்ப குடுக்குறானுவோன்னு அங்க ஓட்டமா ஓடி ரேட்டை ஏத்திட்டதாக கவலைப்படுகிறார். அவரது கருத்துப்படி பரம்பர-நவ முஸ்லிம் வேறுபாட்டைவிட வசதியுள்ளவன் வசதி இல்லாதவன்னு பொருளாதார ஏற்ற இறக்கமே அடிப்படை காரணமாக இருக்கிறது. இதற்கான எதிர்வினையாக பழைய தலைவரு செல்லப்பா இன்னொரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார்.
அல்லாபிச்சைக்கிட்ட இல்லாத பணமா.. அவன் பதினஞ்சு வருசம் வெளிநாட்டுல வேல பாத்திட்டு ஹஜ் பண்ணிகிட்டு வந்திருக்கான். அவனும் பத்து வருசமா மாப்பிள்ள தேடி நாயா அலஞ்சு கடைசியில எங்க ஜமாஅத்துல சொல்லிகிட்டு ஒரு இந்து பையனுக்கே கட்டி வச்சிருக்கான்… மறுமதமாற்றம் குறித்த பிரச்சினைக்கான காரணமாகவும் இப்பதிவுகளை நாம் வாசித்துக் கொள்ளலாம்.
பழையதலைவரு செல்லப்பா மிகவும் உறுதியான ஆளு. ஆனா காதர்பாய் மகள் நூர்ஜஹானின் தற்கொலைச் சாவு அவரை குலுங்கி குலுங்கி அழவைத்திருக்கிறது. பதினட்டாம் படியான் பள்ளனுக்கும், பாய்க்கும் என்னவே சம்பந்தம். ஊரசுத்தி ஒருவருசத்துக்குமுன்ன சாதிக்கலவரம் கொழுந்துவிட்டு எரிஞ்சப்போ இவருதான் ஜமாஅத் தலைவரு. செங்கோட்டை இன்ஸ்பெக்டரு இவரப் பார்த்து ஏளனமாக் கேட்டாரு.
யோவ் பாய் நீரு பள்ளி வாசலுக்குத்தான் நாட்டாமை பள்ளர் சமூகத்துக்கு இங்க யாருய்யா நாட்டாம… அப்போதுதான் செல்லப்பா சொல்றாரு இங்க பள்ளரும் பாயும் ஒண்ணுதான்.
பிலால் நகர் ஜமாஅத் தலைவர் செல்லப்பா, காமாட்சிபுரமே பிலால்நகராய் மாறியபோது இந்துமத தலைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று பேசி வீரம்காட்டியவர். வாஜ்பாயியும் ஜனசங்கத்து கட்சி ஆளுகளும் ஊருக்குள் வந்தபோது உள்ளே வரக்கூடாது என குறுக்கே நின்று தடுத்தவர் என்பதான பெயரும் புகழும் உண்டு.
கருப்பசாமியா இருந்தவர் காதர்பாயாய் மாறியபோது அந்த ஊரே முஸ்லிமா ஆனது. அப்போ வந்த விமர்சனங்களில் ஒன்றுதான் சோத்துக்கும் பிரியாணிக்கும் மதமாறினார்கள் என்பது. ஜமாஅத் தலைவர் இதுபற்றி நாவலில் பேசுகிறார்.
நாங்க மதம் மாறலவே மனம் மாறியாருக்கோம் எவனாயிருந்தாலும் சோத்துக்கும் பிரியாணிக்கும் மாறினீங்களான்னு கேட்டா இல்லவே மானத்துக்கும் ரோசத்துக்கும் மாறுனோம்.. சோத்துல உப்பு போட்டு திங்கறதை உறுதிப்படுத்த தாம்வே இந்த மாற்றம்.
காதர்பாயின் பழைய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தலைவர்களின் ஒருவராக இமானுவேல் சேகரன் வந்துபோகிறார். சின்னதான வீட்டில் காதர்பாய் மகன் அக்பர் வெளியே எடுத்துப் போட்ட பழைய போட்டாக்களில் ராணுவ உடையில மிடுக்காய் இருந்த அந்த இட்லர் மீசைக்காரர அம்புட்டு சீக்கிரம் மறக்க முடியுமா என்கிறார்.
தமிழ் சமூக வரலாற்றின் யதார்த்த வாழ்வில் தேவர் சமூகம் தெய்வீக புருசனாக கருதிய முத்துராமலிங்தேவரை எதிர்த்து நின்ற தலித் மக்களுக்கான போராளி இமானுவேல் சேகரன் என்பதான யதார்த்தம் மறுபுனைவுக்குறிப்பாக நாவலில் எழுதப்படுகிறது.
காதர்பாயின் முந்தைய வாழ்க்கையின் வீரம் சார்ந்த ஒரு காட்சியாக ஊருக்கு மேற்கில் கூப்பிடு தூரத்தில் உள்ள தலையண ஆத்துக்கு மேலே ரொம்ப நாளா சிலிப்பிகிட்டு நின்ன அந்த ஒத்தக்காட்டு பண்ணியை வெறும் கவுணால் அடிச்சு தோள்லே போட்டு தூக்கிகிட்டு வந்தாம் பாருங்க என்பதாக பதிவு நிகழ்கிறது.
4)முஸ்லிமாக தலித்துகள் மாறுவதற்கான சாதீயம் சார்ந்த புறச்சூழல்களை சம்பவச் சிதறல்களாக நாவல் எழுத்து சொல்லிச் செல்வதைக் காணலாம்.
தேவர்களுக்கும் பள்ளர்குலத்துக்குமான முரணைப் பற்றி பேசும் போது புளிச்சகுளம் கடுவா தேவருக்கும் கருப்பசாமிக்கும் போட்டி நடக்கிறது. காதர் பாய் பெயருதான் கருப்பசாமி, ஒரு மூட்டை உளுந்தை தலையில் வச்சுகிட்டு கையிட்டு பிடிக்காம திருமலைக்கோயில மலையில ஏறணும் ஐம்பத்தொரு ரூபாய் பந்தயம். அப்போதுதான் கடுவாதேவரு கேட்டார். பள்ளப்பய என்னோட போட்டிபோடுறதா.. கருப்பசாமிதான் மூலையில மூட்டையோடு முதல்ல கோயில் உச்சிக்கு போனாரு. யாரு முதல்ல கோயில தொட்டாலும் அங்க இருக்க பூசாரி மணியடிச்சு சொல்லணும். ஆனா அந்த பூசாரி என்ன சொன்னார் தெரியுமா? குமாரசாமிக்கு மணி அடிச்ச இந்தகை ஒரு குடும்பனுக்காடா அடிக்கும் போடான்னு சொல்லியிருக்கான். மற்றொரு இடத்தில் காமாச்சிபுரம் கிராமத்தின் சாதீய கொடுமையைச் சொல்ல வருகையில்அந்த ஊர்க்காரங்க பக்கத்துல ஊரில் உள்ள கடைக்கு டீ குடிக்கப்போனா அங்க கெடச்ச தனி மரியாதை அவங்களை ரொம்பவே யோசிக்க வச்சிருக்கணும். என்பதாகவே இடம் பெறுகிறது.
இந்நாவலில் பங்கெடுத்துக் கொள்ளும் பலவேசக் கிழவன் ஒரு அழுத்தமான தலித் கதாபாத்திரமாக வரலாற்றின் சுவடுகளை பேசிக் கொண்டே செல்வதைக் கேட்கலாம். சுத்துப்பட்டு மேல்சாதிகளுக்கு இருந்த நெலபுலன் தோப்பு துரவுகளை வச்சிருக்கக்கூடிய பலவேசக்கிழவனிடம்தான் மாட்டு வண்டியும் உண்டு. பொட்ட புள்ளைங்கள வெளியூருக்கு கட்டிக் கொடுத்தா அந்தக் காலத்தில் மாட்டு வண்டியிலதான் கூடிட்டு போகணும் கல்யாணத்துக்கு மொதநாளே மாடு ரெண்டையும் நல்லா குளிப்பாட்டி கொம்புநீவி பளபளன்னு வச்சுக்குவானாம்,,
சோளம் வித்து அவன் பொண்டாட்டி ஒளிச்சு வச்சிருந்த அம்புட்டு ஒட்டையணாவையும் களவாண்டுட்டு அன்னக்கு மதுரைக்கு வந்த அம்பேத்காரைப் பார்க்க பத்து இளவட்டங்களோடு ஓடுற அளவுக்கு தெம்புள்ள மனுஷனாக பலவேசக்கிழவன் காட்சிப்படுத்தப்படுகிறார். எங்கிருந்தோ ஒரு அம்பேத்கார் படத்தை ஒளிச்சுவச்சு எடுத்திட்டு வந்திட்டு அத ஒவ்வொரு வீட்டிலேயேயும் கொண்டு காண்பிச்சு சந்தோசப்பட்ட பலவேசக்கிழவன்தான் முதல்முதலா முஸ்லிமா மதம் மாறுறது பற்றி ஊரைக்கூட்டி தீர்மானம் போட்டிருக்கான்.
என்னதான் சொத்து சுகம் வச்சு, மாடிவீடு கட்டி பிழைச்சாலும் பொன்னாக்குடியில பிறந்த அஞ்சுவயசுப் பயகூட அம்பது வயசு நம்மூரு கிழவனைப் பார்த்து ஏ… சுப்பா கருப்பா…ன்னு பேர் சொல்லி கூப்பிடறது நல்லாப்படல..
காடு கழனியில நாயா உழைக்கிற நாம இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செருப்பு போடாமலும், தோளில துண்டு போடாமலும், அவங்க ஏசுற ஏச்சையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போறது… காமாட்சிபுரம் அது பள்ளப்பய ஊருன்னுலா சொல்லுறானுவ
அப்போதைய பலவேசக்கிழவனின் இந்தவித குரலுக்கு ஆதரவு இல்லை. முஸ்லிம்கள் தலித்துகளை நடத்துகிற விதம் குறித்த ஒரு விமர்சனமும் இந்த உரையாடலில் வந்து விழுகிறது. செங்கோட்டைக்கு சந்தைக்கு போயிட்டு அங்க இருக்க முக்குகடயில டீ குடிக்க போனமுன்னா கடைக்கார பாய் என்ன ஒம்ம வாங்க பலவேசம் உக்காருங்கன்னா சொல்லுறான் என அந்தக்குரல் இவ்விமர்சனத்தை எழுப்புகிறது. கிழவன் கண்ட கனவு முப்பத்தஞ்சு வருசத்துக்கு பிறகுதான் நிறைவேறி இருக்கு
5)முஸ்லிம் அடையாளத்துக்குள்ளேயே மேல் / கீழ் என உருவாக்கம் பெற்றிருக்கிற படிநிலை கட்டமைப்பு பரம்பரை முஸ்லிம், நவமுஸ்லிம் என்பதான வடிவத்தினோடும் இயங்கு தன்மை கொண்டுள்ளது. காமாட்சிபுரம், பிலால் நகரான பிறகு பிலால் நகர நவமுஸ்லிம்களை பிற ஜமாஅத்து முஸ்லிம்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும், இப்பிரதி உரையாடல் செய்கிறது.
முஸ்தபா வாத்தியாரு தனது நிக்காஹ் நடந்தபோது எங்க அத்தா பேருகிட்ட ராவுத்தர்னு போட்டபோது எழுந்த பேச்சில் ஒன்றுதான், நவமுஸ்லிமெல்லாம் ராவுத்த ராயிட்டா, அப்புறம் ராவுத்தர் என்னாவது … என்பதான விமர்சனமாக வெளிப்படுகிறது. மேலும் சம காலப்பிரச்சினையாக மதம் மாறிய முஸ்லிம்கள் பிற்படுத்தவர் அரசு சார் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை எனத் தொடரும் பட்டியலில் தங்களை எதுவாக அடையாளப்படுத்த முடிகிறது என்பதான கேள்வியாகவும் இருக்கிறது.
இது மட்டுமல்ல மதம் மாறிய முஸ்லிம்களின் மனத்திலும் பரம்பரை முஸ்லிமை உயர்குடி முஸ்லிமாக கருதும் மனோ பாவங்களும் நிறைந்து உள்ளன. கவர்மண்ட் ஸ்கூலில் வேலை பார்க்கும் முஸ்தபாவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்தபோது வந்த பேச்சு இவ்வாறாக வெளிப்படுகிறது.
உனக்கு கட்டினா பரம்பரை துலுக்கச்சித்தான். இந்த ஊருல உள்ள மாறுனசிறுக்கி எவளையாவது கட்டணும்னு நினைச்சா என்ன உசிரோடு பார்க்க முடியாதென எழுந்த குரலையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.
இரண்டாவது தலித்கள் முஸ்லிம்களாய் மதம் மாறிய பிறகு இவர்களது பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் உயர்தர வகுப்பாக தங்களை கருதி அதிகாரத்தையும் கைக்கொண்ட முஸ்லிம்கள் செய்யும் சுரண்டலின் குரூரமும் அம்பலம் செய்யப்படுகிறது.
காதர் பீவியை பெண்பார்க்க ஆள் வருகிறது என்றவுடன் பீவியின் ஏளனம் கலந்த விமர்சனம் அது யாருத்தா சீம மகராசன் பரம்பரையா… இல்லை நம்ம கேஸான்னு கேட்பதை இங்கு கருத்திற்கொள்ளலாம்.
ஹஸனத்தாவின் ஏளனம் நிறைந்த குரல் பரம்பரையோ,நவமோ யாராக இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்கிற நெருக்கடியாகவே இதனை பார்க்கிறது. நாலு புள்ளயில ஒரு புள்ளை ஒரு கோனார் பையனோடு ஓடிப்போனதை ஞாபகப்படுத்திவிட்டு அவர் கூறுகிறார்.
கலிமா சொல்லி எங்க கூட்டத்தோடு வந்துடுத்தா உனக்கு சொர்க்கம் கிடைக்கும்னு சொன்னா, அந்த பையன் நக்கலாக சிரிக்கிறான். என்ன ஒண்ணு காதர் தம்பிள்ளைய கெட்டிக் கொடுக்க முன்னால இழந்து நிக்காரு…நான் கெட்டிக் கொடுத்துட்டு இழந்து நிக்கிறேன்.
முஸ்தபாவின் குரலின் துயரம் நிறைந்த வன்மம் ஊர்க்கூட்டத்தில் தீவிரமாக அனுபவத்தின் அடிப்படையில் வெளிப்படுகிறது.
படிச்சு கவர்மெண்ட்ல வேலைபார்க்கிற நவமுஸ்லிமுக்கே இந்த நிலைன்னா ஒண்ணு அவங்களுக்கெல்லாம் வழி பொறக்கணும். இல்லைன்னா நாங்க ஊரோடு தூக்குபோட்டுதான் சாவணும்.
ஐந்துவருடம் முறையா ஓதி பட்டம் வாங்கியிருக்கிற பிலால் நகரின் உசேன் ஹசரத்து மேலும் வருத்தத்தோடு பேசுகிறார்.
நானும் பள்ளிவாசலில் ஹசரத்தாதான் வேலைபார்க்கிறேன். ஆனால் என் ஊரு என்னண்ணு தெரிஞ்சா வேலை இருக்குமான்னு தெரியவில்லை சந்தேகத்தை கிளப்பிவிட்டு கூறுகிறார்.
புதுசா ஒரு பையன் கலிமா சொல்லனும்னு சொல்றான்னா.. அசரத்து நாம அங்கயெல்லாம் போசக்கூடாது அந்த பையன் எஸ் ஸி ஆக்கும், அவங்க அவங்கதான் நாம நாமதான் என்பதாக அது அமைகிறது.
நவ முஸ்லிம் படும்பாட்டை பஷீரின் வாழ்வுக் கதையொன்று விளக்கிச் சொல்கிறது.பஷீருக்கு நான்கு பிள்ளைகள். மூணு பையன்கள் ஒரு பெண்பிள்ளை.நல்ல வியாபாரம் பண்ணி மாடிவீடு வரை போட்டுவிட்ட பஷீர் செங்கோட்டைக்கு வியாபாரத்துக்கு போன இடத்தில் மகளுக்கு திருமணம் பேசி முடித்திட ஏற்பாடு செய்கிறார். பொண்ணு பார்க்க நாள் குறித்தாயிற்று. பஷீர் ஊரையே கூட்டி ரெண்டு ஆடு அறுத்து பிரியாணிபோட்டு காத்து இருக்க, வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் வாறது மாதிரி தெரியவில்லை, என்ன காரணம் என்றும் தெரியவில்லை. நாளைக்கு காலையில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க என்று ஊர்மக்களை திருப்பி அனுப்பிவிட்ட பஷீர் தான் ஆசையாய் கட்டுன வீட்டின் மாடியிலபோய் தூக்கில் தொங்கினான். அவனுக்க மகள் மும்தாஜ் இன்னும் உயிரோடுதான் இருக்கா. நாற்பத்தி மூணுவயசாச்சு. என்ன நடந்தது என்று விசாரித்த போது செங்கோட்டை கார் ஸ்டாண்டுல இருந்து வந்துகிட்டு இருந்தபோது பஷீர் குடும்பம் புதுசா இஸ்லாத்துக்கு வந்த குடும்பம்னு அறிஞ்சதால மாப்பிள்ள வீட்டார் சொல்லாம கொள்ளாம வந்த வழியே திரும்பி போயிட்டாங்க.
6)இந்நாவலின் நீண்ட வரலாறு சார்ந்த கதையோட்டமும், உரையாடல்களும் காதர்பாயின் மகள் நூரின் மரணத்திற்கும், அந்த மய்யித்தை கொண்டுசென்று அடக்குவதற்கும், இடைப்பட்ட காலவெளியில் முதற்கட்டமாக நிகழ்த்திக் கொள்கிறது. இரண்டாம் கட்டமாய் மய்யித்தை அடக்கியதற்கு பிறகு நடைபெறும் ஊர்க்கூட்டத்தின் வழியாகவும் வெளிப்பட்டுக் கொள்கிறது. ஊர்க்கூட்ட பேச்சாகவே நாவலின் பிற்பகுதி உருவெளித் தோற்றம் பெறுகிறது.
இஸ்லாத்திற்கு மாறிய, முஸ்லிம்களை முன்வைத்து எழுப்பப்பட்ட சித்திரங்களில் ஒன்று அரபு நாட்டின் பணத்திற்காகவும் வெளிநாட்டு வேலை விசாவுக்காகவும், அடிமையாகிப்போனார்கள் என்பதாக எதிர்தரப்பால் முன் வைக்கப்படுகின்றது. இதை மறுக்கிற குரல் நாவலுள் பரவிக் கிடக்கிறது. பெரிய வீட்டு மீரான் இதனை நாங்க ஊரோடு மாறணும்னு முடிவு பண்ணினப்ப மானரோசத்தோட நாங்கதான் நாற்பத்தி நாலாயிரம் ரூபாய் ஊருல பிரிச்சு கொண்டாந்து கொடுத்தோம் என்கிறார்.
இருந்தபோதிலும் இதன் மற்றொருபக்கமாக மதம்மாறிய முஸ்லிம்களை முதலீடாக்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பாரம்பரிய முஸ்லிம்களின் மூன்றாந்தர அரசியலையும் ஆளும் அதிகாரத்தின் பங்கேற்பாளர்களாக அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் தீவிரமாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதையும் காணலாம்.
பிலால் நகருக்கு பெரிய பள்ளியை கட்டிக்கொடுக்க துபாய் சேட்டுக்கிட்ட லட்சக்கணக்கில் கமிசன் வாங்கின குலாம்பாயை நோக்கிய விமர்சனத்தில் வசூல் பண்ணின பணத்தில் பாதிய செலவழிச்சிருந்தாகூட ஊர் நல்லாயிருந்திருக்கும் என்பதான பதிவைக்காணலாம்.
எங்க பள்ளிக்கு கணக்கு பதினெட்டு லட்சம்னு சொல்லியிருக்கீங்க, அத மட்டும் நிரூபிச்சிடுங்க. நாம எல்லாரும் சித்தாள் வேலை பார்த்துதானே இந்த பள்ளிய கட்டினோம் பிறகெப்படி பதினெட்டு லட்சம் வந்தது இவ்வகையான எதிர்க் குரல்களையும் இந்நாவலினூடே அடையாளம் காணலாம்.
முஸ்லிம்களின் மரபு வழி நம்பிக்கைகளில் இறந்தவர்களுக்காக நிகழ்த்தப்படும் வழிபாட்டிற்கு ஜனாஸா தொழுகை என்பது பெயர். இறந்த உடலை குளிப்பாட்டி கபன் பொதிந்து, மணப்பொருள் தடவி, சந்தூக்கில் வைத்து கூட்டமாக தூக்கி வந்து மயானத்தில் அடக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிவாசலில் வைத்து இந்த ஜனாஸா தொழுகை நடத்தப்படுவதுண்டு. காதர் பீவியின் மரணத்தைப் பொறுத்த மட்டில் புதியதொரு பிரச்சினை எழுகிறது.பள்ளிவாசல் அசரத் (இஸ்லாமிய மதகுரு) இப்பிரச்சினையைக் கிளப்புகிறார். இயல்பாகவோ, நோய்வாய்ப்பட்டோ நிகழும் இயற்கை மரணத்திற்கு மாற்றாக தற்கொலை செய்து கொண்ட நபருக்கு ஜனாசா தொழுகை கூடாது என்று இஸ்லாமிய ஷரீஅத் சொல்வதாக இவ்விவாதத்தை கிளப்புகிறார்.
தலைவரே…. இந்த மய்யித்துக்கு என்னால ஜனாஸா தொழுகை வைக்க முடியாது. ஏன்னா… அந்த பொண்ணு தற்கொலை பண்ணி செத்திருக்கு… என்பதாக இக்குரல் எழும்புகிறது.
வயசு நாப்பதை கடந்தும் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இந்தப் பொண்ணு செத்திருக்கு இன்னும் முப்பது வயச கடந்த பொண்ணுங்க அறுபதுக்கு மேல இருக்கு. அவனவன் கைக்கு மீறிய கொமருகளை வச்சுகிட்டு படுதபாடு உனக்கு தெரியுமாவே…. இதுக்கு காரணம் நீங்கதான்… எதிர்வினைக்குப் பிறகே மக்ரிபு முடிந்த்தும் மய்யித்த அடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முன்னோக்கிய பயணத்தில் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தன் வாழ்நாளில் ஐந்து நேரமும் தொழுது மார்க்க கடமைகளை நிறைவேற்றி முஸ்லிமாக வாழாத ஒருவன் எனக் குற்றம்சாட்டி ஜனாஸா தொழுகை நடத்தமாட்டோம் வேண்டுமானால் மையவாடியில் அடக்கிக் கொள்ளலாம் என்பதாக தமிழகத்திலும் சில நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
அன்வர் பாலசிங்கம் இந்நாவலின் ஊடாக அரேபிய வாழ்வின் அவலங்களையும், அகதிமை மனநிலையோடு கொத்தடிமை உழைப்பாளிகளாக அடித்தட்டு மக்கள் மாற்றப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
பழைய தலைவரு காலையில கபுஹு தொழுதுகிட்டு பள்ளிவாசல்படியில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசுவதிலும், கேட்பதிலும் அலாதி விருப்பமுடையவர். தன்னைச் சுத்தி நடப்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதில் வெளிப்படுவதுண்டு. வெளிநாட்டிலிருந்து வந்த ஹாஜிமகன் கனியிடமும் இவ்வாறுதான் சவுதி அரேபியா எப்படியிருக்குப்பா மருமகனே என்பதாக தனது கேள்வியைத் தொடங்குகிறார்.
சுபுஹு தொழுது முடிச்சு வேலை ஆரம்பிச்சா தூங்கிறதுக்கு நைட் பதினொரு மணியாகும். தொழக்கூடிய நேரம் தவிர வேலைதான். கொத்தனாரு வேலையின்னா சம்பளம் நம்ம நாட்டு பணத்துக்கு சுமார் அறுநூறு விழும், வேகாத வெயிலில ரொம்ப கொடுமையாயிருக்கும், ஒருநாளைக்கு பத்து பெப்ஸி குடிச்சாதான் அவரால வேல செய்யமுடியும். மத்தியானம் மலையாளிக் கடையில நம்மூரு பிரியாணி மாதிரி கப்சான்னு ஒரு சாப்பாடு.
முஸ்லிம்தவிர்த்த மாற்று சமயத்தவர்கள் சவுதியில் வேலை பார்க்கும்போது நெத்தியில் திருநாறோ, குங்குமமோ, வைக்க கூடாது. ரூமுக்குள் சாமி போட்டாவை வைக்கக் கூடாது என்பதான சூழல்களும் இந்நாவலில் பிரதியாக்கம் செய்யப்படுகிறது.
சவுதி முஸ்லிம்கள் குறித்த விமர்சனம் சார்ந்த பார்வையும் இப்பகுதியில் முன் வைக்கப்படுகிறது.
கருப்பு சவுதி, வெள்ள சவுதி ரெண்டு பிரிவு நிற அடிப்படையில் இருப்பதும் வெள்ளை சவுதி அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும் குலம், கோத்திரமன்று பிரிந்து கிடப்பதும் வெள்ளை சவுதிகள் கறுப்பு முஸ்லிம்களை கீழானவர்களாக பார்க்கும் மனோபாவமும் உருவாகியிருப்பதும் விவரணை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டுக்காரனையும், ஏமானியனையும் கண்டால் மட்டும்தான் சவுதிகளுக்கு பயம். ஏனென்றால் அடித்தால் சவுதிகளை திருப்பி அடிக்கும் எதிர்ப்பு மனோபாவம் உடையவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்திற்கு வந்தபிறகு வெளிநாட்டுக்குப் போன அக்கிராமத்து முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து நடக்கும் சிஐடி விசாரணை நீள்கிறது.
இதுபற்றி விவரிக்கும்போது சவுதிக்குபோன பதினெட்டு பேரில் பத்துபேரு ஒட்டகந்தான் மேய்க்கிறார்கள். மீதி பேர் ஆஸ்பத்திரியில் வேல, நவமுஸ்லிமா மாறி முஸ்லிம் பேருல அங்க போயே ஒருத்தனும் மதிக்கல எண்ணூறு ரியால் நம்ம பணத்துக்கு ஒம்பதாயிரம் வரும், சவுதிக்கு போக செலவழிச்ச பணம் இருந்திச்சின்னா ஊருக்குள்ள பத்து பதினஞ்சு கிணறு வெட்டிருக்கலாம் என்பதான வலிநிறைந்த வரிகளாக வெளிப்படுகின்றன.
நவமுஸ்லிம் கருத்தாக்கத்தின் வடிவம் குறித்து பேசும்போது பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களை ஜமாஅத்துகளில் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது போலவே சவுதியிலும் நிகழ்கிறது. ஹஜ்ஜுக்கு போனபோது கபத்துல்லாவில் டென்டுல தங்கியிருந்தபோது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனை பார்த்து சூடானி புதுசா இஸ்லாத்துக்கு வந்தவங்க என்று குறிப்பிடுவதும், ஏமன்காரன் சூடானியை புதுசு என்பதும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சவுதிக்கார முஸ்லிம் புதுமுஸ்லிம் என்பதுமாக இந்த மனோ நிலை கட்டமைப்பை அன்வர் பாலசிங்கம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
இந்நாவலின் ஊர்க்கூட்ட உரையாடல்களின் வெளிப்பட்ட பல்வேறு விதமான பிரச்சினைகளின் ஆழங்களை பல்வேறு கதாபாத்திரங்களின் அனுபவங்களினூடே படைத்துக் காட்டுகிறார் அன்வர். நாங்க மாறி முப்பத்தஞ்சு வருசம் ஆகிப்போச்சுவாப்பா எம் பிள்ளைக்கு வயசு என்னண்ணு தெரியுமாவாப்பா நாற்பத்தியொண்ணு, அம்பாசமுத்திரத்துக்கு பக்கத்தில அசரத்துக்குகிட்ட மாப்பிள்ளை இருக்கான்னு கேட்டா ரெண்டாந்தாரமா கட்டி கொடுங்கோன்னு சொன்னான். சரி அதுக்காவது யாராவது மாப்பிள்ள இருக்கான்னு கேட்டா ஏன் என்ன பார்த்தா மாப்பிள்ள மாதிரி தெரியலையான்னு நையாண்டி பேசுறான். எம்புள்ளைக்கு தெரிஞ்சா என்னாகும் வாப்பா…ஏத்தா எந்திரிக்கலியா பாங்கு சொல்லியாச்சுன்னு காலையில சுபஹுக்கு எழுப்பிவிட இனி எனக்கு யாரு இருக்கா வாப்பா….
அக்கூட்டத்திலேயே தன் மகளை இழந்து காதர்பாய் துக்கத்தோடும், ஆத்திரத்தோடும் பேசிய நிலையில் மயக்கமடைந்து விழுகிறார். மூஞ்சியில் சோடா அடிச்சபிறகு அவரது மயக்கம் கலைகிறது. காதர்பாயும் அவரது மனைவியும், பன்னீரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
7)நூர்ஜஹானின் தற்கொலைச்சாவு, அதைத் தொடர்ந்து எழுந்த அவலங்கள், உரையாடல்கள், இறந்த உடலை அடக்குவதற்கான சித்தரிப்புகள், பள்ளிவாசல் சூழல், ஊர்க்கூட்டம், அதில் கலந்துகொண்ட இஸ்லாத்துக்கு வந்த தலித்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், முப்பது வயசுதாண்டிய மகள்களுக்கு திருமணம் நடைபெறாத துயரங்கள், பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்ள விருப்பமற்றநிலை, தொடர்ந்து ஒரு குடும்பத்தில் மதம்மாறிய காதர்பாயின் மகள் நூர்ஜஹான் காதர்பாயின் மனைவி, காதர்பாய் ஆகியோர்களின் தற்கொலைச்சாவு, அதே குடும்பத்தில் மதம்மாறாமல் தன் சாதிக் கலாச்சாரத்திலேயே தன்னை தக்கவைத்துக்கொண்ட பன்னீரின் தற்கொலைச் சாவு என்பதான காட்சிகளை இந்நாவல் கட்டமைத்துள்ளது
ஊர்க்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ஓலமும் கதறலும் பொங்க அந்த செய்தி வந்தது. மொத்த ஜமாஅத்தும் காதர் பாய் வீட்டை நோக்கி ஓடியது. அங்கு காதர்பாய் நெடுஞ்சாண் கிடையாய் தன் வீட்டுவாசலில் கிடக்கிறார். அவர் அருகில் அவரது மனைவி. காதர்பாய் அழுதுகிட்டே இருந்தாரு. திடீர்னு வீட்டுக்குள்ளபோயி எதையோ ரெண்டு கிளாஸில் எடுத்துட்டுவந்தாரு. வீட்டுத் திண்ணையில் வச்சுதான் ரெண்டுபேரும் குடிச்சாங்க… மச்சான் ஒரே மடக்குல குடிச்சிட்டு அந்தக்கா மடியில படுத்திட்டாரு.
எதிர்வீட்டு அய்யம்மாதான் வந்தவர்களுக்கு விளக்கி கூறிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் யாரோ ஒருவர் சத்தம் போட்டுக் கேட்டது. ஏத்தா பன்னீரு எங்க போனான்னு . ஒரு கூட்டம் இறந்துகிடக்கும் காதர்பாயின் மனைவியின் தங்கை பன்னீரைத் தேடியது. ஊர்க்கிணற்றை நோக்கி சென்றது. ஊர்க் கிணற்றில் பாதாளகரண்டிப்போட்டு தேடியபோது
பன்னீரு உடம்பு கரண்டியில் பிணமாகவே மாட்டியது. பன்னீரின் உடம்பையும் ஊர்க்காரர்கள் தூக்கி வருகிறார்கள்.
இங்கே இரு வேறுகாட்சிகள் நாவலில் நெருக்கமாக வைக்கப்படுகின்றன. நூர்ஜஹானின் கப்ருக்கு பக்கத்திலேயே அவளுடைய காதர்பாய் அத்தாவிற்கும் அம்மாவுக்கும் குழிவெட்டினார்கள். வெளியே சங்கூதும் சத்தம் கேட்கிறது. பன்னீரின் உடலை காதர்பாய் வீட்டின் முன்புறம் வைத்து குளிப்பாட்டுகிறார்கள். பன்னீரின் உடல் மயானத்தை நோக்கி ஒரு திசையிலும் காதர்பாய், அவரது மனைவியின் உடல் மையவாடியை நோக்கியும் செல்கிறது.
8)நாவல்கதையோட்டத்தையும் தாண்டி தலையீடு செய்கிற நாவலாசிரியரின் நேரடி பிரச்சாரத்தன்மை கொண்ட வாசகங்கள் இந்நாவலின் வடிவத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையவில்லை என்பதையும் இவ்வேளையில் சொல்லியாக வேண்டும். படைப்பாளியின் குரல் ஓங்கி ஒலிப்பதை தவிர்ப்பதன் மூலம் படைப்பின் குரலை தீவிரமாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். என்றாலும் இந்நாவலை இரு வேறு கலாச்சாரங்களின் மோதலில் பலி கொடுக்கப்பட்ட முஸ்லிம்களாய் மாறிய தலித்துகளின் துயர வரலாற்றுப் புனைவு எனக் கூறலாம்.
இந்நாவல் இஸ்லாத்தில் மதம் மாறுதல் என்பது சமூகவிடுதலைச் சார்ந்தது எனும் சமத்துவ நிலைபாட்டின் மீதான எதிர்வினைகளை காத்திரமாக எழுப்புகிறது. கற்பிதங்கள் கட்டுடைத்து காட்டப்படுகின்றன.தூய அப்பழுக்கற்ற பிம்ப அரசியலின் தகர்வு நிகழ்கிறது. அனைத்து இஸ்லாமியர்களும் இந்த உண்மையை ஒத்துக் கொள்வார்கள், தங்கள் இருப்பின் அரசியல் குறித்த பிரச்சினைப்பாடுகளை மறு பரிசீலனை செய்வார்கள் என்றெல்லாம் எவரும் எளிதில் நம்பிவிடவும் முடியாது. இந்நாவலின் துயரம் சார்ந்த தற்கொலைகள் எதிர்ப்பின் அடையாளங்கள். எனவேதான் கருப்பாயி என்ற நூர்ஜஹான் எதிர்ப்பின் எழுத்தாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள்.
——————————
(நாவலின் பெயர்: கருப்பாயி என்ற நூர்ஜஹான்
ஆசிரியர்: அன்வர்பாலசிங்கம்
வெளியீடு:கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகி பதிப்பகம்,திருநெல்வேலி)
——————————
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013
- ஒட்டுப்பொறுக்கி
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
- தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
- காணிக்கை
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49
- ‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
- தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
- ஒற்றைச் சுவடு
- ஐந்து கவிதைகள்
- தீராத சாபங்கள்
- அக்னிப்பிரவேசம்-28
- எம் ஆழ்மனப் புதையல்!
- குறும்படப்போட்டி
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது
- தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
- பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்
- பொதுவில் வைப்போம்
- அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
- குரல்வளை
- முறுக்கு மீசை
- வெளுத்ததெல்லாம் பால்தான்!
- ஒரு தாயின் கீதா உபதேசம் ..!
- காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை