போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15

This entry is part 21 of 31 in the series 7 ஏப்ரல் 2013

போதி மரம்

பாகம் ஒன்று – யசோதரா

அத்தியாயம் – 15

மகாராணி பஜாபதி கோதமி, மகன் நந்தாவின் நெற்றியின் மீது ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பணிப்பெண் மென்மையான குரலில் ” ராஜகுமாரி யசோதரா அவர்களும் குழந்தை இளவரசர் ராகுலனும் தங்களைக் காண வருகிறார்கள்” என்றாள்.

சற்று நேரம் கழித்து ராணி கோதமி தனது அறைக்குள் நுழைந்த போது யசோதரா எழுந்து அவர் பாதம் தொட்டு வணங்கினாள். ராகுலனிடம் வணங்கும்படி கூற அவன் மலங்க மலங்க விழித்தான். யசோதாரா அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.

“நந்தா, மல்ல தேச விஜயம் முடித்துத் திரும்பி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைக் காண வந்தேன். நந்தா கிளம்பும் போது ராகுலனுக்கு ஒரு வயது கூட நிறைந்திருக்கவில்லை. இப்போது தனது சித்தப்பாவைக் கண்டு அவனும் சந்தோஷப்படுவான்”

“நந்தா ஜுரம் வந்து படுத்திருக்கிறான். நீ அண்ணி என்னும் முறையில் அவன் தான் உன்னைக் காண வந்திருக்க வேண்டும்.’

“அத்தை.. அவர் ராகுலன் பிறக்கும் வரை எங்கள் இருவரது மகன் என்னும் ஸ்தானத்தில் தான் இருந்தார். நன்கு ஓய்வெடுக்கட்டும். நான் தொந்தரவு செய்யாமல் முகத்தைப் பார்த்து விட்டு வருகிறேன்”

யசோதாரா உள்ளே மெதுவாக நுழைந்தாலும் நந்தா விழித்திருந்ததால் அவன் ” அண்ணி, வாருங்கள்” என்று இரு கை கூப்பி எழுந்து உட்கார்ந்தான்.

“எப்படி இருக்கிறீர்கள் தம்பி?” என்று அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். கொதித்தது. “படுங்கள் தம்பி. பிறகு வருகிறேன்”

“அண்ணன் கண்டிப்பாகத் திரும்பி வருவார் அண்ணி…. நம்மையெல்லாம் அவர் மிகவும் நேசித்தார். யசோதாரா அவன் கண்களைக் கூர்ந்து பார்த்து “முதலில் உடல் நலம் தேறட்டும் தம்பி” என்றாள்.

“ராகுலன் வந்திருக்கிறானா அண்ணீ?”

“என்னோடு தானே இருந்தான்..” என்று யசோதாரா திரும்பிப் பார்த்த போது அவன் அறையில் கதவின் அருகே நின்று எட்டிப் பார்த்தபடி ஓடிவிடலாமா என்பது போல நின்றிருந்தான்.

“உள்ளே வா. இதுதான் உன் சித்தப்பா நந்தா.” என்றாள். உடனே ராகுலன் ஓட ஒரு பணிப்பெண் அவளைப் பின் தொடர்ந்தாள்.

“பிறகு பேசுவோம் தம்பி. மல்ல நாட்டில் உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள எனக்கும் ஆவல் தான்”

“மல்ல நாட்டிலிருந்து நிறைய பரிசுகள் அனுப்பி இருக்கிறார்கள். அம்மாவின் அறையில் தான் இருக்கின்றன.”

ராணிபஜாபதியின் மிகப் பெரிய அறையில் பத்துப் பதினைந்து நீள் சதுரப் பெட்டிகள் மூங்கிலால் ஆனவை இருந்தன. “வா. திறந்து பார்” என்று ராணி கோதமி அழைத்தும் ராகுலன் தயங்கி நின்றான்.

ஒரு பணிப்பெண் திறந்த முதல் கூடையில் பட்டுத் துணியில் சுற்றப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர் ஒன்று. மரத்தால் செய்யப்பட்ட பொம்மை. ஒரு கரு நாகத்தின் பொம்மை மற்றொரு பெட்டியில் இருந்தது. ராகுலன் வியப்போடு அதைப் பார்த்தான். “நீ நாகத்தை இன்னும் பார்த்ததே இல்லை ராகுலா” என்றாள் யசோதரா.

முழு நீள அளவுள்ள ஒரு மர உருளை. அதை பணிப்பெண் கையில் எடுத்த போது ஒரு பக்கம் ஒரு மரப்பந்தின் சிவப்பு வண்ணம் பாதி பந்தின் அளவு தென்பட்டது. அவள் கையை அசைத்ததும் அது மறு பக்கம் சிவப்பு அரைப் பந்தாகத் தென்பட்டது. அப்போது மறுபக்கம் வெறும் வட்ட வடிவத் துளை மட்டுமே தென்பட்டது. ராகுலன அதைக் கையில் வாங்கி இப்படி அப்படி அசைத்து மகிழ்ந்தான். சாண் உயர யானை பொம்மை தேக்கு மரத்தால் செய்யப்பட்டு வெள்ளை தந்தங்கள் கூராய் நீட்டியிருக்கக் காண அழகாயிருந்தது. ஒரு மரத்தில் அது கட்டப்பட்டிருந்தது. அதன் கால்கள் நுணுக்கமான மரச் சங்கிலி வைத்துப் பிணைக்கப் பட்டிருந்தன.

சிறிய புல்லாங்குழல், யாழ், தபலா, உடுக்கை, புல்புல்தாரா என இசைக்கருவிகள் சிறு வடிவில் இருந்தன.

சிறிய மரச்சக்கரங்கள் பொருத்தப் பட்ட இரு அடி உயரமுள்ள மரக் குதிரை ராகுலனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அதில் ஏறி அமர ஒரு பணிப்பெண் அதைத் தள்ளிச் செல்ல அவன் குதூகலமாய்ச் சிரித்தான்.

“இதைத் தவிரப் பட்டுப் புடவைகளும் அணிகலன்களும் வந்திருக்கின்றன” என்று ராணி ஒரு மரக்கட்டிலின் அருகே சென்றார். தங்க நகைகளும் பட்டுப் புடவைகளும் கம்பளிச் சால்வைகளும் கண்களைப் பறித்தன.

“மன்னருக்கு ஒரு தங்க வாளைப் பரிசாக அனுப்பியிருக்கிறார்கள். அதன் உறை முழுவதும் தந்தத்தால் ஆனது” என்றார் மகாராணி. பணிப்பெண் ஒருத்தியைப் பார்த்து அவர் கண்ணசைக்க அவள் மற்ற பணிப் பெண்களையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

“நந்தாவுடன் இதைச் சுமந்து பணியாட்கள் மட்டும் வரவில்லை. ஒரு லிகிதமும் வந்துள்ளது. அதை அந்நாட்டு மகாமந்திரியே கொண்டு வந்திருந்தார்’

“என்ன விசேஷமான செய்தியை அவர் லிகிதத்தில் கொண்டு வந்திருந்தார்?”

“அவர்கள் நாட்டு இளவரசியான ஜனபாதகல்யாணிக்கு நந்தாவை அவர்கள் மணம் முடிக்க விரும்புகின்றனர்”

“மிகவும் நல்ல செய்தி அத்தை. சுபமான அந்த வைபவம் விரைவில் நிகழட்டும்”

.”எனது விருப்பமும் அதுவே.அவள் சிறுமிதான். பூபெய்தவில்லை. தவிர மகாராஜா ஜோதிஷ விற்பன்னர்களை ஆலோசித்த போது இன்னும் இரண்டு வருடங்களில் அல்லது அதிக பட்சம் மூன்று வருடத்துக்குள் சித்தார்த்தன் புகழின் உச்சியை எட்டி உலகம் போற்ற வலம் வருவான். கபிலவாஸ்துவுக்குத் திரும்ப வருவான்” என்றே கணித்திருக்கிறார்கள்.

“ஜோதிட சாஸ்திரம் சொல்வதே நடக்கட்டும். நம் பிரார்த்தனையும் அதுவே தான். ஆனால் ராகுலனின் தந்தை வருவதையும், நந்தா திருமணத்தையும் ஏன் சம்பந்தப் படுத்தி சிந்திக்க வேண்டும்? பூப்பெய்தும் முன்போ, பின்போ திருமணம் செய்வது உகந்த நல்ல நேரத்தைப் பொருத்து அமையலாம். பெரியவர்கள் உங்களுக்குத் தெரியாததில்லை”

“யசோதரா தற்போது மன்னருடைய கனவெல்லாம் நந்தாவின் திருமண வைபவத்தின் போது ராகுலனுக்கு இளவரசப் பட்டம் சூட்டி சித்தார்த்தனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதே’

“ராகுலனின் தந்தை வழியில் ராகுலன் செல்வதை உறுதி செய்வதே என் பணி. என் மனம் உறுதியாய்ச் சொல்லுகிறது – எந்த அறையில் எங்கள் இருவரையும் விட்டுச் சென்றாரோ அங்கேயே எங்களை ஏற்றுக் கொள்வார்”
“என் விருப்பமெல்லாம் அதுவேதான் யசோதரா. நந்தா பிறந்த பின்பும் கூட என் மகன் என்றால் முதலில் நினைவைத் தொடுவது சித்தார்த்தந்தான். அவன் இல்லாத ஒரு வாழ்க்கையாக இது இருக்கவே இருக்காது”

“தங்கள் பாசமும் தாயன்பும் தாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அத்தை. பெண்களின் உலகம் தாயன்பிலும் பதிவிரதா தர்மத்திலும் எளிதாக இருந்தாலும் பூரணமாக இருக்கும். ஆனால் மன்னரின் எதிர்பார்ப்புகள் தான் எனக்கு அச்சமளிக்கின்றன. தமது லட்சியத்தில் இருந்து என் கணவர் பிறழும் சாத்தியங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”

ராணி கோதமி பதிலேதும் கூறவில்லை.சென்ற முறை ஜோதிடம் சொன்னது போல நடந்ததால் அதுவே மறுபடியும் நடக்கும் என்று நம்புகிறார். கபிலவாஸ்துவுக்கு வரும் சித்தார்த்தன் தனது மகன், மனைவி, தம்பி, அம்மா, அப்பா என்னும் இந்த அன்பு உலகை நிராகரிப்பானா? யசோதராவின் தெளிவு திட்டவட்டமானது. என்னிடம் தெளிவில்லை. ஆனால் அவன் மீது பிடிமானமும் பந்தமும் எனக்கும் இருக்கிறது. கபிலவாஸ்து வரும் போது சித்தார்த்தன் என்ன முடிவெடுப்பான். எங்களுக்கும், குழந்தைக்கும் மன்னருக்கும் என்ன வழி காட்டுவான்?

********************

“சித்தார்த்தரே! தியானம், ஆழ்நிலைத் தியானம், குண்டலினி யோகம், சமாதி, நிர்விகல்ப சமாதி இந்த நிலைகளை என்னுடைய எளிய வழிகாட்டுதலில் இந்த ஓராண்டுக்குள் தாங்கள் செழுமைப் படுத்திக் கொண்டீர்கள். நான் மறுபடி தங்களுக்கு நினைவு படுத்துவதெல்லாம் உங்கள் தருக்க அறிவை, யோக ஆற்றலின் அகம்பாவத்தை, ஏன் உங்கள் தேடலின் தடத்தையே கூடத் தாண்டி நீங்கள் அகழ்ந்து அகழ்ந்து தோண்டி- ஆன்மாவின் ஆழத்திலிருந்து -பிறிதொன்றாக – முற்றிலும் வேறான ஒளி வீசும் ஞான விளக்காக வெளிப்பட வேண்டும். சிந்தனையின் தீவிரமும் அகம் அழிந்த ஒப்பற்ற புரிதலின் இடையே ஆன ஒரு போராட்டமாக அது நிகழும். யோக சாதனையின் மறுபக்கமான அகம். அந்த அகம் தரும் போதையைப் பற்றி மட்டுமே எச்சரிக்கை செய்வேன்”

“ஞானம் அருகில் வருவது போல இருக்கிறது புட்டரே. ஆனால் நழுவி விடுகிறது. தனது கருப்பையிலிருந்து தானே பிறந்து வருவது போல – எது என் முயற்சி சார்ந்தது – எது எனக்குள்ளே இருப்பது என்பது பற்றிய போராட்டம் நடக்கிறது. ஆனால் இடையறாது நடக்கவில்லை”

“காட்சிகளை அவதானிக்கிறீர்களா சித்தார்த்தரே? காட்சிகளிலில் காணப் படுவது மாயையாகவும் நிஜமாகவும் இரண்டுமாகவுமே இருப்பதை உணர்ந்தீர்களா? எது மாயை? எது நிஜம்?”

“எல்லாமே நிஜம் எல்லாமே மாயை என்று பொதுப்படையாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு அவதானிப்பு மேம்போக்கானதோ என்று ஐயமும் கூடவே எழுகிறது”

“ஒரு உதாரணம் சொல்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சித்தார்த்தரே. ஒரு இரவு நேரம், மழையில் ஊறிய ஒரு கயிறு ஒருவன் காலில் பட்டதும் அவன் சறுக்க, அவன் அது வளைந்து அவன் காலைச் சுற்றியது போலப் பதறி,அஞ்சி, உதறி ஓடுகிறான். பாம்பை நிஜமாகவே மிதித்தவுடன் வரும் அதே அதிர்ச்சி அனுபவம் தான் இவனுடையதும். இந்நிலையில் அது கயிறா பாம்பா?’

“கயிறு தான்”

“பாம்பை மிதித்த பதற்றத்தை அது கொடுத்ததே சித்தார்த்தரே”

“பாம்பு அங்கே ஊர்ந்திருக்கும் அச்சத்துடன் அவன் நடமாடியதும்- ஏற்கனவே மிதித்த, தனது அல்லது பிறரது அச்சம் மிகுந்த அனுபவமும் -இரண்டும் மறுபடி அவனுள் வெளிப்படுவது உண்மை. ஆனால் பாம்பு மாயை”

“மனம் எதை தரிசிக்கிறதோ, உணருகிறதோ, அனுபவிக்கிறதோ அதுதானே நிஜம் சித்தார்த்தரே”

“அதுவே இறுதியானதாக இருக்கட்டும். இதைக் காட்சிகளில் எப்படிப் பொருத்திப் பார்ப்பது புட்டரே?”

“காட்சியின் தோற்றம் ஒன்று, நிஜம், அதாவது அதன் உண்மை வடிவம் இரண்டு மற்றும் நம் மனதில் வெளிப்படும் விதம் என்னும் மூன்றாவதான பரிமாணம் இப்படி மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் பிரித்துப் பார்ப்பவனாகவும், அதை மூன்றாக விளங்கிக் கொள்ளுபவனாகவும் பரிணமிக்க வேண்டிய கட்டாயம் ஞானத்தேடலில் அடிப்படையாகும் சித்தார்த்தரே”

சித்தார்த்தன் ஸ்தம்பித்து நின்றான்.

“ஞானம் என்ற ஒன்றே ஒன்றை உணர, இரண்டை, மூன்றை உணர வேண்டும். அதாவது இரண்டாகவும், மூன்றாகவும் பரிமாணங்கள் இருக்கலாம். அவை தோற்றம் மற்றும் அனுபவத்தின் கலவைகள். இந்தத் தோற்றத்தை அதாவது தென்பட்டதும்- உள்ளார்ந்த அனுபவமும் மாயையை – நிஜத்தை இடம் மாற்றும் வித்தையைத் தாண்டிச் செல்வது ஒரு போராட்டம். அப்படி முன்னே நகரும் முனைப்பை ஒட்டி அதற்குத் துணையாக தியானமும் சமாதியும் நிகழ வேண்டும். அவை சாதனைகளாகத் தனித்து நின்றால் அகம்பாவமே எஞ்சும்”

Series Navigationபுரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்திபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – சார்லி சாப்ளின்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *