பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?

This entry is part 10 of 51 in the series 3 ஜூலை 2011

அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும்
கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக்
கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே,
அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே
இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில்
இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான்.

இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன்.

தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் சென்னை மாநகரில் மேட்டுக் குடியினர் வசிக்கும் கோபாலபுரம்
என்ற பகுதியில் சுயமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கியவர் மு. கருணாநிதி. உண்மையில்
எளிமையாக வாழ்ந்த குடும்பமே யன்றி வறுமையில் வாடிய
குடும்பம் அல்ல, கருணாநிதியுடையது. திரைப்படங்களுக்குக்
திரைக்கதை வசனம் எழுதும் தொழிலை மேற்கொண்டிருந்த அவர், அன்றைய கால கட்டத்தின் வெகு ஜன ரசனைக்கு ஏற்பக் கதை வசனம் எழுதிப் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி
வசனகர்த்தாவாக ஐம்பதுகளின் தொடக்க முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்தாம். ஏவி எம் செட்டியாரே வீடு தேடி வந்து ஒப்பந்தம் செய்து கணிசமான தொகையினை முன்பணமாகக் கொடுத்துச் செல்லும் அளவுக்கு அவர் தமது துறையில் முன்னணியில் இருந்தவர்தாம். அவருடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் இருந்தவரை யார் எந்த நேரம் சென்றாலும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக விருந்துபசாரம் செய்யப்படும் வீடாக அவரது வீடு இருந்தது. அம்மையாரின் கைப்பக்குவமும் அபாரமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் கருணாநிதியின் கோஷ்டியினர் என்றே
கருதப்பட்டு வந்த மயிலாடுதுறை எஸ். கருணானந்தம், வட ஆர்க்காடு மாவட்டச் செயலாளராக இருந்த முல்லை சத்தி,
ப. உ. சண்முகம், எனப் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தமையால் கருணாநிதியின் குணச் சித்திரத்தை
என்னால் ஓரளவேனும் சரியாகவே வரைந்துகொள்ள முடிந்தது.
நட்பின் இலக்கணம் தெரிந்து நடப்பவர் கருணாநிதி. நண்பர்கள் தாம் சமயங்களில் அவர் காலை வாரியதுண்டே தவிர
ந்ண்பர்களை அவ்ர் விட்டுக்கொடுத்ததில்லை. நான் இங்கு குறிப்பிடுவது கருணாநிதி கோஷ்டியினர் என்ற வட்டத்திற்குள்
வந்தவர்களைத்தான்.

அந்தக் காலத்தில் தி.மு.க. முன்னணியினரின் வருமானத்திற்கு ஆதாரம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுதான். கூட்டத்தில் பேச இவ்வளவு, வந்து போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என்றெல்லாம் பேசி வைத்துக்கொண்டு, முன்பணமாகவும் சிறிது பெற்றுக் கொண்டு பேச வருவார்கள். அன்றைய கிளைக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகள். ஒரு கூட்டம் நடத்தி முடிக்கவே திண்டாடித் திணறிப்
போவார்கள். கூட்டம் முடிந்ததும் பேச்சாளர் இரவுச் சாப்பாட்டுக்கும் வழிச் செலவுக்கும் கூட்டத்தில் பேசுவதற்காகப்
பேசிக்கொண்ட தொகையில் மீதிப் பணத்தையும் எதிர்பார்ப் பார்கள். பேச்சாளருக்கு யார் வீட்டிலாவது சாப்பாட்டுக்கு ஏற்பாடாகிவிடும். வழிச் செலவுக்கும் எப்படியாவது காசு தேற்றிவிடுவார்கள். ஆனால் பேசுவதற்காகக் கேட்ட
தொகையில் முன்பணம் போக மிச்சத்தைக் கொடுப்பதில்தான்
திண்டாட்டமாகிவிடும். அண்ணே, தேறலே அண்ணே என்று தயங்கித் தயங்கி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு
மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பணிந்து நிற்பார்கள்.
பேச்சாளர் எரிந்து விழுவார். அவருக்கு மாத வருமானம் மேடைப்
பேச்சில்தானே! அது பாதிக்கப்படும்போது எரிச்சல் ஏற்படுவது
இயற்கையே அல்லவா?

கருணாநிதியும் குறிப்பிட்ட தொகை பேசிக் கூட்டத்துக்கு வருபவர்தாம். அந்த நாளிலேயே சுயமாகச் சம்பாதித்த
பணத்தில் காரும் வைத்திருந்தார். காருக்குப் பெட்ரோல் செலவும்
தரச் சொல்லுவார். ஆனால் எனக்குத் தெரிந்து பெரும்பாலான கூட்டங்களில் அவர் பேசிச் செல்லும்பொழுது காருக்குப் பெட்ரோல் செலவாகவோ கூட்டத்தில் பேசியதற்கான தொகையோ அவருக்குக் கழகத் தோழர்களால் கொடுக்க முடிந்ததில்லை. ஆனால் அதற்காகக் கருணாநிதி சிறிதும் முகம் சுளித்ததில்லை. கட்சியை வளர்ப்பதில்தான் அவரது கவனம் முழுவதும் இருந்ததேயன்றி கட்சியில் இருப்பதை வருமானத்திற்கான ஒரு வழியாக அவர் கருதியதில்லை.
சொந்தக் காசிலேயே பெட்ரோலும் போட்டுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. இதனால்தான் மாநிலம் முழுவதும் கட்சியில் அவரது அபிமானிகளின் எண்ணிக்கை பெருகியது.

கருணாநிதி சூட்டிகையானவ்ர், கட்சியின் வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு உள்ளவர், நிலைமைகளை சமாளிக்கக் கூடியவர் என்றெல்லாம் கட்சியில் பெரும்பான்மையினருக்கு நம்பிக்கை இருந்தமையால்தான் அண்ணாவுக்குப் பிறகு அவர் முதல்வராக முடிந்தது.

உழைக்கும் வர்க்கத்தின் தோழர்கள் என்று உரிமை கொண்டாடும் இடதுசாரிக் க்ட்சிகளின் கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் நீண்ட நெடுங் காலம் நீடித்த போதிலும் கொல்கத்தா நகரின் சாலைகளில் மனிதனுக்கு மனிதன் வாகனமாய் அமைந்தது போன்ற கை ரிக்‌ஷா ஓடுவது கண்ணை உறுத்தும் காட்சியாக இருந்து வந்தது. 2005-ல்தான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா கை ரிக்‌ஷா ஒழிக்க்ப்படும் என்றும் கை ரிக்‌ஷா ஒட்டுபவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்தார். பலன் கை ரிக்‌ஷா இழுப்பவர்கள் வயிற்றுப் பிழைப்பை இழந்தனர். சிலர் கள்ளத்தனமாகத் தொடர்ந்து நகரின் ஒதுக்குப் புறங்களிலும் இருண்ட பகுதிகளிலும் கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஆனால் தமிழ் நாட்டில்
1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர் களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்.. இன்று கொல்கத்தாவில் கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலுக்கு மீண்டும் சட்டரீதியான அனுமதி வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இடதுசாரியின் நீண்ட கால ஆட்சி கை ரிக்‌ஷாவை மாநகரின் அவமானச் சின்னமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கருதியதேயன்றி, கை ரிக்‌ஷா இழுக்கும் தொழிலாளியின் சுய கெளரவம் குறித்தோ, அவனது வயிற்றுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதுபற்றியோ கவலைப்படவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கொல்கத்தாவில் ரிக்‌ஷா இழுப்பவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான பிஹாரிலிருந்து பிழைக்க வந்த ஏழைகள். ரிக்‌ஷா ஓட்டும் வங்காளியைப் பார்க்க இயலாது!

சீமான்களின் உபரி வருமானத்திற்கு ஒரு வழியாகவும் சபல புத்தியின் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் கடைசிப் பணம் வரை இழப்பதற்குக் காரணமாகவும் இருந்த குதிரைப் பந்தயத்தை ஒழித்ததும் கருணாநிதி எடுத்த ஒரு முக்கிய மக்கள் நலப் பணி என்று கூற வேண்டும். (உயர் நீதி மன்றத்தில் அது அடிபட்டுப் போனது வேறு விஷயம். அதை ஒழிக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் சென்றதுதான் கருத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சம்). இதற்கு திருஷ்டி பரிகாரம்போல் அவர் மது விலக்கைக் கைவிட்டிருக்க வேண்டாம். .அதிலும் தள்ளாத வயதில் ராஜாஜி வீடு தேடி வந்து கேட்டும் மது விலக்கைக் கைவிடுவதில் அவ்ர் உறுதியாக இருந்திருக்கலாகாது. இன்று பதின்ம வயதினரும் குடிப் பழக்கத்தை ஒரு நாகரிகம்போல் பயின்றுவிட்டிருப்பதைப் பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது.

பரிசுச் சீட்டுத் திட்டத்தை அண்ணா கொண்டு வந்த பொழுது ஒரு ரூபாய்தானே ஒருவர் செலவழிக்கப்போகிறார், அதனால் அவரது பொருளாதாரம் அப்படியொன்றும் பாதிக்கப்படாது என்று
எண்ணிவிட்டார். ராஜாஜி அதையும் கண்டிக்கவே செய்தார். மக்களை அரசாங்கமே சூது ஆடப் பழக்குவது தவறு என்று எச்சரித்தார்.
ராஜாஜி எச்சரித்தது போலவே கருணாநிதி காலத்தில் பரிசுச்சீட்டு
ஒரு போதைப் பழக்கம் போலப் பரவிவிட்டது. அப்போதே அந்தத் திட்டத்தை கருணாநிதி கைவிட்டிருந்தால் பாராட்டுக்குரியவ ராகியிருப்பார்.

தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பஸ் வசதி என்ற நிலை உருவாகக் காரணமும் கருணாநிதியின் முனைப்பே என்று சொல்ல வேண்டும்.

நெருக்கடி நிலைக் காலத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. இதற்காகக் காமராஜரே கருணாநிதியைப் பாராட்டியதை நேரில் கேட்டவன் நான். அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்தபோது அக்கட்டுரையைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் மறு பிரசுரம் செய்தன. பரவாயில்லை, காமராஜர் என்னைப் பாராட்டினார் என்பதற்கு மலர் ஒரு சாட்சியாக இருக்கிறான் என்று அதைப் படித்துவிட்டுக் கருணாநிதி திருப்திப் பட்டுக்கொண்டதாகப் பின்னர் சாவி சொல்லிக் கேள்வியுற்றேன்.

அரசு அலுவலர்களுக்கு இன்று பலவாறான நலன்கள் கிட்டு வதற்கு அடித்தளமிட்டவரே கருணாநிதிதான். அதனாலதான் தி.மு.க அரசு என்றாலே அரசு ஊழியர் நல அரசு என்ற பிம்பம் தோன்றிவிட்டது.

எழுத்தாளர்கள் விஷயத்தில் கருணாநிதி எவ்விதப் பாகுபாடும் பார்க்காததையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் அவர் பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்ற வேறுபாட்டையோ, மாறுபட்ட கருத்தினர் என்ற முரண் பாட்டையோ பொருட்படுத்துவதில்லை.

அவரது ஆட்சிக் காலத்தில் நூல்கள் நாட்டுடைமை என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகவே முழு வேகத்தில் நடைபெற்று பல எழுத்தாளர் குடும்பங்களுக்கு கணிசமான நிதி உதவி கிட்டுவது சாத்தியமாகி வந்தது..

தி.மு.க. ஆட்சி என்றால் கருணாநிதி சொல்வதுதான் வேதவாக்கு என்பது தெரிந்த விஷயந்தான். இருந்தாலும் கழக அரசு. தி.மு.கழக ஆட்சி என்றெல்லாந்தான் அவர் குறிப்பிடுவது வழக்கமேயன்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது வாயில் எனது ஆட்சி என்று வந்ததில்லை!

+++

Series Navigationஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?ஆன்மாவின் உடைகள்..:_
author

மலர்மன்னன்

Similar Posts

14 Comments

  1. Avatar
    களிமிகு கணபதி says:

    நல்ல குணங்கள் இல்லாமல், தியாக உணர்வுகள் இல்லாமல் யாரும் ஒரு அமைப்பில் வெற்றிபெறும் தலைவராக முடியாது. அது கொள்ளையடிக்கும் அமைப்பாக இருந்தாலும் சரி. இந்தப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துகிறது.

    காய்த்தல், உவத்தல் இல்லாத நேரிய பார்வை கொண்ட கட்டுரை. நன்றி.

  2. Avatar
    paandiyan says:

    தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பஸ் வசதி என்ற நிலை உருவாகக் காரணமும் கருணாநிதியின் முனைப்பே என்று சொல்ல வேண்டும்.

    — he is forced take TVS management but Jayaraj Nadar he never ever touch. so this area author should explain the truth

  3. Avatar
    களிமிகு கணபதி says:

    கருநாநிதியின் நல்ல குணங்களில், செயல்களில் கீழுள்ள இரண்டும் சேர்க்கத் தகுந்ததா?

    01. உழவர் சந்தைத் திட்டம்

    இட ஒதுக்கீட்டின் காரணமாகப் படித்து முன்னேற வழியில்லாத ஐயர் சாதியைச் சேர்ந்த ஒருவரை நான் அறிவேன். வயதான காலத்தில் உழவர் சந்தையில் இருந்து கைகால்கள் நடு நடுங்க பொருட்களை முதுகில் சுமந்து பல கிலோமீட்டர்கள் கடந்து வந்து தனது சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறார். எப்போதும் அவரது ஒட்டு கருநாநிதி கட்சிக்குத்தான். வேட்பாளர் பற்றித் தெரியாது.

    ஏனெனில், அவரைப் பொறுத்தவரை (மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஜி சொல்லாத படி அர்த்தம் கொண்டால் ;) ) கழகம் வேறு, கருநாநிதி வேறல்ல.

    02. தன் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைகளில் அதிகப் பணியிடங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கருநாநிதி தந்தது.

    .

  4. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ களிமிகு கணபதி, கருணாநிதியின் குறைபாடுகளும் முறைகேடுகளும் நான் உள்ளிட்ட பலராலும் பலப்பல முறைகள் கடுமையாக விமர்சிக்கப் பட்டவைதாமே!
    கருணாநிதி முதல்வராக இருக்கையில் தமது சாதியினர் நலனைக் கவனிக்கத் தம் அலுவலகத்தில் ஒரு தனி அதிகாரி யையே வைத்திருந்தார். அவரது பெயர் கூட எனக்குத் தெரியும்! ஸ்ரீ வெங்கட் சாமிநாதன்கூட இன்று மதியம் ஃபோன் செய்து தேடித்தேடிப் பாராட்டுவதற்கான தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று கேட்டார்! ஆனால் கட்டுரையைப் படிக்கும்போது கருணாநிதிக்கு எரிச்சல் வருமா, திருப்தியாக இருக்குமா தெரியாது! வஞ்சப் புகழ்ச்சி என்று சொன்னாலும் சொல்லுவார்! அவரிடம் பாராட்ட எதுவுமே இல்லையா அல்லது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அவர் மீது ஏதும் வெறுப்பா என்று கேட்டவாறு இருந்தவர்களை வேண்டுமானால் திருப்தி செய்யக் கூடும்!
    ஸ்ரீ பாண்டியன், வழித் தடங்களைத்தான் தி.மு.க. அரசு நாட்டுடைமை ஆக்கியது. தனியார் பஸ்களை அல்ல. அரசுக்குச் செலவில்லாமலேயே வருமானத்திற்கு வழி செய்த திட்டம் அது. தனித்தனி போக்குவரத்துக் கழகங்களை நிறுவி நிதி உதவி பெற்று பஸ்களை வாங்கினார்கள். இது அண்ணா வின் திட்டம். செயல்படுத்தியவர் கருணாநிதி. டி.வி.எஸ். நிர்வாகமும் சரி, வேறு எந்தத் தனியார் பஸ் நிர்வாகமும் சரி, நிர்பந்திக்கப்படவிலை. ஏனெனில் இழப்பீடு கொடுக்க வேண்டிய பெரும் சுமை அரசின் தலையில் விழும். நிர்வாகம் செய்யும் தலைவலியையும் சகித்துக் கொள்ளவேண்டும்.மிகக் குறைவான தொலைவுள்ள வழித் தடங்களைத் தனியாருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழில் இழந்துவிடாமல் தி.மு.க. அரசு பார்த்துக்கொண்டது. டி.வி எஸ். நிறுவனம் பஸ் போக்குவரத்துத் தொழிலே வேண்டாம் என்று பலவகைகளிலும் உற்பத்தி, நிதி, என diversify செய்வதிலேயே கவனமாக இருந்தது. மதுரை மாநகர் பஸ் போக்குவரத்தை அது விட்டுக் கொடுத்தது இதனால்தான். எல்லாம் தொடக்கத்தில் சரியாகவே இருந்தன. தனியார் பஸ் கட்டணத்தைவிடக் குறைவாகவும் அரசுப் போக்குவரத்து பஸ்களில் விதித்திருந்தார்கள். 1967-லேயே இது தொடங்கிவிட்டது.
    -மலர்மன்னன்

  5. Avatar
    மலர்மன்னன் says:

    கருணாநிதியைப் பற்றிய இன்னொரு முக்கியமான பதிவைச் செய்ய மறந்துவிட்டேன்.
    தமிழ்நாட்டில் இனமானம், முன்தோன்றி மூத்தகுடி, தமிழினம்
    என்றெல்லாம் உசுப்பேற்றிவிடுவது சுலபம் என்பது தெரிந்த
    விஷயம். கருணாநிதியே இந்த ஆயுதங்களையெல்லாம் கையில்
    எடுப்பவர்தாம். தென் குமரியில் சுவாமி விவேகானந்தர்
    நினைவாலயம் அமைந்தபோது, ராமநாதபுரம் ராஜாதான் விவேகானந்தர் அமெரிக்கா சென்று பெயரும் புகழும் பெற முதல் அடி எடுத்துக் கொடுத்தார். விவேகானந்தர் நாடு திரும்பியபோது அவரே சிறப்பாக வரவேற்பளித்தார். ஆகவே விவேகானந்தருக்குத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நினைவாலயத்தில் அவரை முன்னின்று ஆதரித்த தமிழ் மன்னர்
    ராமநாதபுரம் அரசரின் சிலையையும் நிறுவ வேண்டும் என்று
    ஒரு கோரிக்கை வலுப் பெற்றது. கருணாநிதிதான் அப்போது
    அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார். அவரும் தமிழினம், தமிழ் நாடு என்று செயல்பட ஆரம்பித்திருந்தால் நிலைமை
    ரசாபாசமாகியிருக்கும். நல்ல வேளையாகக் கருணாநிதி
    விவரம் புரிந்தவராக இருந்தார். குமரி முனைப் பாறையில் விவேகானந்தர் விவேகம் பெற்றதன் நினைவாகத்தான் அங்கு நினைவாலயம் நிறுவியிருக்கிறார்கள். எனவே அங்கு ராமநாதபுரம் ராஜாவின் சிலை வைப்பது பொருந்தாது.
    அவருக்கு வேறு பொருத்தமான இடத்தில் சிலை வைப்போம் என்று சொல்லி அந்தக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்தார்.
    சில ஆண்டுகளுக்குமுன் சென்னை விவேகானந்தர் இல்லத்தை
    தமிழக அரசு எடுத்துக்கொண்டு அங்கு செம்மொழி அலுவலகத்தை நடத்தப் போகிறது என்று சேதி அடிபடத் தொடங்கியது. விவேகானந்தர் தங்கிய பெருமைக் குரிய அக்
    கட்டிடம் நீண்ட காலக் குத்தகைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்
    திற்குக் கொடுக்கப்பட்டு அங்கே விவேகானந்தர் தொடர்பாக மிகவும் அருமையான கண்காட்சியை உருவாக்கியிருக் கிறார்கள். ஆகவே அந்தக் கட்டிடம் அரசால் எடுத்துக்கொள்ளப்
    படும் என்ற செய்தி பலருக்கும் வேதனை அளித்தது. அந்தச் சமயத்தில் முற்றிலும் எதிர்பாராத இடத்திலேயிருந்து எனக்கு ஒரு ஃபோன் வந்தது. பழம் பெரும் தி.மு.க.காரரான தஞ்சை
    வழக்கறிஞர் வி. எஸ். ராமலிங்கம் பேசினார்: நீங்க இதைப் பத்தி தினமணியிலே ஒரு கட்டுரை எழுதணும். நீங்க எழுதினா அப்படியொரு தீர்மானம் இருக்கும் பட்சத்திலே கலைஞர் கட்டாயம் உங்க கருத்துக்கு மதிப்புக் கொடுப்பார் என்றார். நானும் சம்மதித்து ஞாபகம் வருதே என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். குமரி முனையில் விவேகானந்தர் நினைவாலயம் அமைய அண்ணா முழு ஆதரவு தெரிவித்ததை நினைவூட்டி சென்னையில் விவேகானந்தர் இல்லம் எவ்வித இடையுறும் இன்றித் தொடர வேண்டும் என்று அதில் வலியுறுத்தியிருந்தேன். கட்டுரை மறுநாளே தினமணியில் பிரசுரமாகிவிட்டது.
    அன்றோ மறுநாளோ கருணாநிதி சட்டசபையிலேயே அறிவித்து
    விட்டார். விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளும் திட்ட்ம் எதுவுமில்லை. நாங்களும் அவரைப் போற்றுகிறவர்கள்தான். இந்தச் செய்திக்கு எதிர்வினை எப்படி
    இருக்கிறது என்று நோட்டம் விடத்தான் சில நாட்கள் மெளன
    மாக இருந்தோம் என்றார். இதற்கிடையில் அரசின் முடிவை எதிர்த்து வழக்காடப் போகிறார்கள் என்றெல்லாம் செய்தி வந்து விட்டது. சட்டசபையில் அரசுக்குத் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவித்தபோதே சாமியாராக இருப்பவர்கள் கோர்ட்டுக்கெல்லாம் போகக் கூடாது என்றும் கருணாநிதி சொன்னார்.
    நான் உடனே சமூக நலனுக்காகவும் நல்ல நோக்கங்களுக் காகவும் எத்தனை துறவியர் வழக்காடியுள்ளனர் என குமர குருபரர் தொடங்கி, விரிவாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் தினமணி அதை வெளியிடவில்லை! அது கருணாநிதியைச் சீண்டுவது போலாகிவிடும் என தினமணி கருதியிருக்கலாம். பின்னர் அக்கட்டுரை திண்ணை இணைய இதழில் வெளியாயிற்று. முதல்வர் கலைஞர் உங்க தினமணி கட்டுரையை ரொம்ப கவனமா படிச்சுக்கிட்டு இருந்தார் என்று
    பிற்பாடு எனக்குத் தகவல் வந்தது.
    -மலர்மன்னன்

  6. Avatar
    Kargil Jay says:

    // மலர்மன்னன் says:
    July 4, 2011 at 8:58 pm
    மட்டுமல்ல, காங்கிரசில் இருந்த சம்பத், கண்ணதாசன் ஆகியோர் நெக்குருகியதைக் கிண்டலும் செய்தார். காரணம், சம்பத்தும் கண்ணதாசனும் அண்ணா என்கிற மனிதரை அறிந்தவ்ர்கள். எனவே மனம் நெகிழ்ந்தனர். ஜெயகாந்தன் ஒரு மணி நேரம் அண்ணாவுடன் பழகியிருந்தாலும் போதும், அவரை துச்சமெனக் கருதிப் பேச அவருக்கு மனம் வந்திருக்காது. அண்ணாவைக் கடுமையாக விமர்சிப்பதெல்லாம் தொலைவில் இருந்தால்தான் சாத்தியம். நெருங்கிவிட்டால் அவரது அன்புக்கு அடிமையாகிவிட வேண்டியிருக்க்கும். மிகவும் ஆச்சரியமான மனிதர் அண்ணா.
    -மலர்மன்னன்//
    பழகுவதில் இனிமையாய் இருத்தல், கனி மொழி நவில்தல் நன்றே. அண்ணாவின் ஒரு மணிநேர நட்பூட்டப் பேச்சு அற்புதத் திறமையே. பிராமனராய்ப் பிறந்தவரெல்லாம் அவமானப்ப்படும்படி, குற்ற உணர்ச்சி அடையும் வகையில், பிராமணர்களில் உணர்ச்சி வசப்படுபவர்களும், அதீத அறவுணர்ச்சி கொண்டவர்களும் அவர்கள் சமூகத்துக்கே எதிராகும் வகையில் தூண்டிய கதைகளை எழுதிவிட்டு, அவர்களையே மயக்கும் பேச்சுத்திறன் சும்மாவா?

    எந்த ஜிகாதியிடமும், ஜிகாதியை தூண்டியவரிடமும் பேசிப்பாருங்கள். மிக அழகாய்ப் பேசுவார்கள். அவர்களில், மதராசக்களால் பேசப்பயிற்ருவிக்கப் படாத ஒருவரையேனும் காண்பியுங்கள்.

  7. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ கார்கில் ஜெய்யின் எதிர்வினை இடம் மாறி வந்துவிட்டது.
    இருந்தாலும் சொல்கிறேன்.

    அண்ணாவின் பழகும் பண்பைப் பற்றியே நான் மிகவும் சிலாகித்து வருகிறேன். அவரது பொதுக் கூட்டப் பேச்சைக் கேட்டு மயங்கி மனம் மாறிவிடவில்லை. அவரும் மத மாற்ற பாஷாண்டிகள் போலத் தம்மிடம் பழகியோரை எல்லாம் தமது கட்சிக்கு இழுக்க முனைந்ததில்லை. அவருக்கு எவர் மீதும் வெறுப்பு இருந்ததில்லை. முக்கியமாக அவர் பிராமண துவேஷி அல்ல. எவ்விதப் பதவியும் இன்றி அவர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த பிராமண நண்பர்கள் ஏராளம். அதேபோல் அவர் பதவியில் இருந்த காலத்தில் முந்தைய அரசால் பழி வாங்கப் பட்ட பிராமண அதிகாரிகள் பலர் அவரால் பரிகாரம் பெற்றதும் உண்டு. உங்களையெல்லாம் இங்கே ஈர்த்துக் கொண்டு வந்திருக்கிற அண்ணாவின் காந்தசக்திதான் என்னையும் இங்கே இழுத்து வந்திருக்கிறது என்று லட்சுமிபுரம் யுவர் சங்கக் கூட்டத்தில் அண்ணாவின் பேச்சாற்றலைப் பாராட்டிய டாக்டர் ஸர் ஸி பி ராமஸ்வாமி ஐயர் ஒரு பிராமணர்தான். சேஷாத்ரி என்று ஒரு பிராமண ஐ.சி.எஸ். அதிகாரி இருந்தார். அவர் அண்ணாவின் பேச்சை வானளாவப் பாராட்டுவார். அவ்வளவு ஏன், பிராமணரான சுத்தானந்த பாரதியே பொதுவாக அண்ணாவின் பண்பு நலனையும் குறிப்பாகப் பேச்சாற்றலயும் எப்போதோ பாராட்டிக் கவிதை எழுதியிருக்கிறார்! இதெல்லாம் அண்ணா ஒரு எம் எல் ஏ யாகக்கூட ஆகாதபோது! 1962 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தபோது அவர் சூழலை மறந்து ஓய்வு கொள்ள வலுக்கட்டாயமாக பெங்களூருக்கு அழைத்துச் சென்று தமது ஜெயமஹால் மாளிகையில் தங்க வைத்தவர் அண்ணாவின் நீண்ட கால நண்பர் புட்டாஸ்வாமி என்ற காஞ்சியில் வசித்த மத்வ பிராமணர்! மதரஸாக்களின் மயக்க மூட்டும் விஷப் பேச்சுகளுக்கும் அண்ணாவின் பேச்சுக்கும் துருமபன்ன ஒற்றுமையும் இல்லை. இன்னும் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
    பிராமணரை யாரோ துவேஷிக்கிறார்கள் என்பதற்காக பிராமணர்களும் அவர்களைத் திருப்பி துவேஷிக்க வேண்டுமென்பதில்லை. நான் அறிந்த அண்ணா, தி.மு.க. தோன்றியதற்குப் பிறகான அண்ணா. பிராமண இளைஞர்கள் அதிக அளவில் தி.மு.க.வில் சேர வேண்டும் என்று சாதியைக் குறிப்பிட்டே அழைத்த அண்ணா. ராஜாஜியுடன் அரசியல் உடன்பாடு ஏற்பட்டபோது இதனால் அரசியல் ரீதியாகப் பல்ன் கிடைக்கிறதோ இல்லையோ, பிராமண விரோதிகள் என்ற முத்திரை தி.மு.கவின் மீதிருந்து நீங்கும் அதுவே எனக்குப் போதும் என்று சொன்ன அண்ணா. உங்கள் மனதில் படிந்துள்ள அண்ணாவின் பிம்பம் ரசம் போன முற்கால் அண்ணா!
    -மலர்மன்னன்

  8. Avatar
    paandiyan says:

    Author inputs and Kanadashan inputs against Karunanidhi is totally contradict. Vanavasam says lot of bad character about karunanidhi and also senior leader anbalgan treated DMK as an earning source for them. Kandasan registered very strongly in this book about anbalagan entire conversation. But till date, Malarmannan article about “DMK Uruvana varalaru” is the proof for this generation otherwise karunanidhi is easily changed the history.
    Second I would assume that how Mayavathi had been won last election by adjusting all caste like that C N Annadurai might have a thought during those period otherwise neither he had not openly talk about bhramins nor offer open support to Brahmins. I would not consider the indirect speech as this has been basic qualification for DMK Leaders. They say one thing indirectly and based on the situation they oppose themselves or try to cover up. Recent example is “KOODA NATPU” speech delivered by karunanidhi.

  9. Avatar
    kargil_jay says:

    ஒருவருக்கொருவர் பழகுவது, அதைவைத்து ஒருவரை எடை போடுவது மிகவும் ஆபத்தான செயல் மட்டுமன்று. குருட்டுத்தனமான சுயநலமும் கூட. ஒருவனின் குணம் சமுதாய நோக்கில் காணப்படவேண்டும், கணக்கிடப்படவேண்டும்.

    நேரு கூடத்தான் யாரிடமும், குறிப்பாகப் பெண்களிடம் நன்றாகப் பேசக்கூடியவராய் இருப்பார். காஷ்மீரின் கதி என்ன ஆயிற்று? ராஜீவ்காந்தி நன்றாகப் பேசக் கூடியவர். அவரின் செயல்களால் ஈழதமிழர்களின் நிலையில் உண்டான என்ன?

    அண்ணாத்துரை பிராமணர்களுக்குத் தோதானவர் என்றால், ஆரிய மாயை என் எழுதினார் என்று மலர்மன்னன் விளக்கட்டும். ஆரிய மாயை பள்ளிகளில் பாடமாக இடம்பெற்று இருந்தது. (இப்போதும் இருக்கலாம்) அதனால் லட்சக் கணக்கில் மாணவர்கள் மனதில் விஷம் தூவிய அண்ணாத்துரை, எத்தனை லட்சம் பிராமணர்களுடன் பிரியமாக பழகினார் என்று மலர்மன்னன் கணக்குக் காட்டட்டும்.

  10. Avatar
    மலர்மன்னன் says:

    கண்ணதாசன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். கட்சியில் இருக்கும்போதே அவருக்கு கருணாநிதி என்றால் ஆகாது. வெளியே வந்தபின் ஒரு வன்மத்துடன் கருணாநிதியைப் பற்றி விவரித்தார். எனக்கு யார் மீதும் வன்மம் இல்லை! வன்மம் பாராட்ட அவசியமும் ஏற்படவில்லை!குல தெய்வம் மனசை சுத்தமாக வைத்திருக்க அருள்கிறாள்!
    அவரது புத்தகத்தில் அரசியல் எங்கே இருந்தது? நான் எழுதியது கட்சியை வளர்ப்பதில் கருணாநிதிக்கு இருந்த ஈடுபாட்டைத்தான் குறிப்பிட்டேன். கட்சியை வளர்க்கும்போதே கட்சியில் தமக்கு என ஒரு கோஷ்டியையும் பரவலாக உருவாக்கிக் கொண்டார்!
    அது அவருடைய சாமர்த்தியம்!அன்பழகனுக்காவது விரிவுரையாளர் உத்தியோகம் இருந்தது. நானே குறிப்பிட்டுள்ளேனே அன்றைக்கு முன்னணியினர் வருமானமே ஊர் ஊராகப் போய் பொதுக் கூட்டம் பேசி வருவதில்தானே! அண்ணாவுடன் கருணாநிதியை ஒப்பிடுவது சரியல்ல. சாதி அடிப்படையில் அண்ணா என்றுமே எவரையும் பார்த்ததில்லை. சாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தது மில்லை. அவரை பற்றி பிராமண விரோதி என்கிற அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டதால் நான் சாதியைக்குறிப்பிட்டு எழுதவேண்டியதாயிற்று. இவ்வாறு சாதி அடிப்படையில் நான் எழுத வேண்டிவந்ததைப் படித்திருந்ததால் அவரே கண்டித்திருப்பார். இங்கே எதற்கு சாதியைக் கொண்டுவருகிறாய்? சாதி பார்த்து நட்பு பாராடவில்லை, சாதிக்காக உரியவர்களுக்குப்பரிகாரம் செய்யவும் இல்லை என்றுதான் சொல்லியிருப்பார். நாங்கள் வந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரை எதிர்க்கும் இயக்கம் என்ற கருத்து வேரூன்றியிருப்பதால் வெளிப்படையாகவே அந்த வகுப்பாரைக் குறிப்பிட்டே அழைக்கீறேன். அந்த இளைஞர்கள் திரளாகக் கழகத்தில் இணைய வேண்டும் என்று தி.மு.க. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பேசியவர் அண்ணா. பிராமணர்களுடன் அவருக்கு இருந்த நட்பில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அவருக்கு அவசியமும் இருக்கவில்லை. அரசியல் பேசப் படாத நட்புகள் அவை!
    -மலர்மன்னன்

  11. Avatar
    மலர்மன்னன் says:

    என் அன்பார்ந்த ஸ்ரீ கார்கில் ஜெய்,
    ரொம்பவும் கோபமாக இருக்கிறீகள். ஒரு தனிக் கட்டுரை யையே நான் எழுத வேண்டியிருக்கும்போல் தெரிகிறது.
    ஆனால் உங்களுடைய எதிர்வினையில் உள்ள சாரமற்ற பகுதிகள் அதில் இருக்காது.
    உங்களுடைய நேரு,ராஜீவ் உதாரணங்கள் இங்கு பொருந்த மாட்டா. அதற்கு பதில் தேவையில்ல.
    மொத்தமாக ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மீது அண்ணாவுக்கு துவேஷம் இருந்ததில்லை என்றுதான் வலியுறுத்தி வருகீறேன்.
    ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மீது மட்டும் துவேஷம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், ஆரியம் தமிபீ, அனந்தசாரியாரிடம் மட்டுமில்லை, அரியநாத முதலியாரிடமும் இருக்கிறது என்று அண்ணா எழுதினார். அதனால்தான் அண்ணா அவர்கள் பிராமணர்களைத் தேடிச் சென்று நண்பர்களைப் பெற்றார் என்பதை விடவும் பல பிராமணர்கள் அவரிடம் தாமாகச் சென்று நட்புறவு பாராட்டினார்கள் என வேண்டும். கருணாநிதிக்கு வாய்த்த பிராமண நண்பர்கள் அவர் பதவிக்கு வந்தபிறகு போய்ச் சேர்ந்தவர்கள். பிராமணர்களை அவர்கள் எதிரிலேயே அவர் ஏளனாமப் பேசினாலும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு நிற்பவர்கள்!

    ஆரிய மாயை சமாசாரம் பற்றித் தனியாக ஒரு கட்டுரை எழுதிப் பதிவு செய்துவிடுகீறேன். ஏனென்றால் இது ரொம்பப் பேரை உறுத்தி வருகிறது. அண்ணாவைப் பற்றி நான் எழுதுகிற போதெல்லாம் தினமும் பத்து மின்னஞ்சல்களாவது என்னைக் கண்டித்து வருகின்றன! நீங்களும்கூடப் பாருங்கள், கோபத்தில் அண்ணாவை எனது கருணாநிதி பற்றிய கட்டுரையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள், கட்டுரையில் அண்ணா பற்றிய குறிப்பு ஏதும் இல்லாத போதிலும்!

    எத்தனை லட்சம் பிராமணர்களுடன் அண்ணா பிரியமாகப் பழகினார் என்று மலர்மன்னன் கணக்குக் கொடுக்கட்டும் என்று கேட்டால் இதென்ன நடக்கிற காரியமா? ஆனால் ஒன்று சொல்வேன். 1957 தேர்தலில் பிராமணர்கள் கணிசமாக உள்ள காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் காமராஜர் அதை நம்பியே பிராமணரான டாக்டர் ஸ்ரீ நிவாஸன் என்ற நல்ல மனிதரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியபோது எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற அண்ணாவுக்கு 90 சதவீத பிராமணர்கள் வாக்களித்தர்கள் என்று எனக்குத் தெரியும். 1957 தேர்தலின்போது ராஜாஜியின் ஆதரவு எதுவும் அண்ணாவுக்கு இருக்கவுமில்லை. முற்றிலும் சொந்த பலத்திலேயே அந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாவுக்காக நான் வேலை செய்தேன், என் கைக் காசை செலவு செய்துகொண்டு! நான் மட்டுமல்ல பலரும் அவ்வாறே எல்லாத் தொகுதிகளிலும்கூட தி.மு.க.வுக்காக வேலை செய்தார்கள்!
    1962 தேர்தலில் பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் அண்ணாவைத் தோற்கடித்தன்ர். பெரும்பாலான பிராமணர் வாக்கு அண்ணாவுக்குத்தான் விழுந்தது. அந்தத் தேர்தலின்போது அண்ணாவுக்கு ஆதரவாக காஞ்சியில் ராஜாஜி
    கூட்டங்களில் பேசினார். ஆனாலும் அண்ணா தோற்றார்!

    உங்கள் அன்பையும் உதவிகளையும் மறவாத,
    மலர்மன்னன்

  12. Avatar
    subramanianan says:

    your views on anna-sampath relationship&sampath-karunanithi confrantaion will throw more light on writings on anna

  13. Avatar
    sanjay says:

    Malarmanan has a soft corner for Annadurai, but anna was a brahmin hater however hard he tried to cover that. Like his colleagues, he too insulted only hinduism.

    His “kamba rasam” is a classic example. When he became CM, he ordered the book to be withdrwan., Why this hypocrisy?

    As long as he was with EVR, it was “kadvul illai” but the moment, he came to politics, it was “onre kulam, oruvane deivam”. why?

    It was annadurai who started the money collection thro’ hundi in meetings, which was not appreciated by EVR.

    DMK came to power in 1967 & a large part of this credit goes to rajaji. Anna who initially agreed to listen to rajaji, disowned him after coming to power.

    Many brahmins voted anna to power in 1967, that was only bcos of Rajaji’s influence.

    Anna was not sure of his party coming to power, that is the reason he stood for MP elctions & not MLA elections in 1967.

    definitely he was better than karunanithi, but as kamaraj rightly said ” ellam oru kuttaiyil oorina mattai thaan”

  14. Avatar
    Ravi says:

    Dear Mr. Malarmannan,

    Anna not only wrote Arya Mayai. He also wrote third rated book about Kamba Ramaayanam. Please write about that also.

    A RAVI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *