தளம் மாறிய மூட நம்பிக்கை!

This entry is part 15 of 51 in the series 3 ஜூலை 2011

“ஒரு முறை மட்டுமே உபயோகம் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது.

நாங்கள் விற்பதுமில்லை!
உபயோகிப்பதுமில்லை!”
அருகாமையில் இருந்த கடையில் ‘பன்னீர்’ சோடா குடித்துக் கொண்டிருந்த நான், ஒட்டப் பட்ட துண்டு பிரசுரத்தை கவனித்தேன்.
“நல்ல விஷயமில்ல? ஹ்ம்ம். ஏதோ கொஞ்சமா நல்லதும் நடக்கத் தான் செய்யுது”, மனமூலமாக நகராட்சியின் மீது மலர்களை தூவினேன்.
“எவ்ளோ?”
“நாலு ரூபா தம்பி”,
“இந்தாங்க”, சில்லறையை கொடுத்துவிட்டு வண்டியில் ஏறினேன். வீட்டை நோக்கிப் பயணம்.
நடுவில் ஏதாவது யோசிக்க வேண்டுமே என்று வேதனைகளைத் தேடியபோது, தட்டுப் பட்ட தொல்லை, பெட்ரோல்.
“இந்த வண்டி வேண்டாமடா. விலை அதிகம்; அதே சமயம், மைலேஜ் ரொம்ப கொறச்சல். பேசாம அந்த பாட்டரி மொப்பட் வாங்கிக்கிலாம்”, சில விருடங்கள் முன்பு என்னுடன் வாதாடினார், அப்பா.
“ஏன் நீ இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்க? நான் 150 cc வண்டி வாங்கி காத்த கிழிக்க நினைக்கிறேன். நீ காத்து தள்ளி விட்டா தான் நகருவேன்-ன்னு அடம் புடிக்கிற வண்டிய வாங்கலாமுன்னு சொல்றியே”, தகப்பன் சாமியென்ற நினைப்பு எனக்கு.
“வண்டி எதுக்கு வாங்கறோம்? ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகத் தானே? அப்படி இருக்கும் போது, எதுக்கு வேகம்?”, அனுபவம் அதட்டியது.
“அம்மா. அப்பா ரொம்ப போர் அப்பா. எப்படி தான் வாழ்க்கைய ஓட்டுறியோ”, கேள்விக்கு பதில் இல்லாததால் கேலியை கையில் எடுத்தேன்.
“அவன் கேக்குற வண்டியத் தான் வாங்கிக் குடுங்களேன். எதுக்கு வாக்குவாதம்?”, என் பக்கம் வீசியது அம்மாவின் பாசக் காற்று.
“நீயும் அவனுக்கு பரிஞ்சு பேசுறியே! இவன் வேகமா போய் என்ன சாதிக்க போறான்? என்னை போல வேலையா வெட்டியா?”
“அப்பா இப்படி யோசிச்சுப் பாரேன். உனக்கு திடீர்-னு மார் அடைப்பு. ஆட்டோ, பஸ் ஸ்ட்ரைக். அப்போ அந்த பாட்டரி வண்டியில ஹாஸ்பிடல் போறதுக்குள்ள நீ போய் சேந்துட்டா, அம்மா என்ன வெச்சு எப்படி சமாளிப்பாங்க? யோசிச்சு பாரு”
“அது சரி. உனக்கு வேகமா ஓடுற வண்டி வேணும்-னு என்னை சாவடிச்சது மட்டும் இல்லாம, ஆட்டோ ஓட்டுறவங்க வயித்துல அடிக்கவும் தயாராயிட்டியா?”
“நியாயத்தைச் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம். ஆனா ஒண்ணு, பாட்டரி வண்டி வந்தா கையால தொடக் கூட மாட்டேன் சொல்லிட்டேன்”
“ஏங்க அவன் கூட மல்லு கட்டிக்கிட்டு? நமக்கு காசுக்கு என்ன கொறச்சல்? வாங்கித் தான் குடுங்களேன்”, நியாயங்கள் நான்கு பக்கத்திலிருந்தும் அப்பாவின் நீதியை நாணவைத்தன.
“சரி வாங்கித் தொலைக்கிறேன். முடியாது-ன்னு சொன்னா வெளிய போய் எங்க அப்பன் ஒரு வியாதி-ன்னு சொல்லுவான். எல்லாம் என் தலை எழுத்து”,எப்போதும் வெல்வது விவகாரம் தானே? என் வாதம் அன்று வென்றது. ஆனால், இப்போது நினைக்கும் போது,
“அப்போ பெட்ரோல் விலை 38 ரூபா. இப்போ 67 ரூபா. நான் சம்பாதிக்கிற பணம் இந்த வண்டி வாய ரொப்பவே சரியா இருக்கு. விக்கவும் மனசு வர மாட்டேங்கிது. அப்பன் வங்கி குடுத்ததாச்சே! அவன் அருமை மரமண்டைக்கு செத்த அப்புறம் தான் வெளங்குது”, அந்த நினைப்புடம் நூறடி தூரப் பயணம் முடிவுக்கு வந்தது. வண்டியின் நாவிற்கும் நாலு ரூபாய் ‘பெட்ரோல்’ சோடா தாகம் தணிக்க தேவைப் பட்டது. வீட்டின் முகவாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
“உங்க பையன கண்டிக்கவே மாட்டீங்களா? திமிர் புடிச்சு அலையறான்”, என் தேவதையின் அர்ச்சனை தொடங்கியது.
“என்ன ஆச்சு?”
“உங்க பையன கடைக்கு அனுப்பினேன். சண்டை போட்டுட்டு வந்திருக்கான்”
“ஏன்?”
சம்பவத்தின் சுருள் பின் நோக்கிச் சுருண்டது.. சில மணி நேரங்கள் முன்பு..
“டேய் கடைக்கு போய் மூணு காய் வாங்கிட்டு வா. மத்யானம் புலாவ் ரைஸ் செய்யலாம்-னு இருக்கேன்”
“எதுக்கு புலாவ்? தக்காளி ரசம் வெய் போதும். என்னால இப்போ எல்லாம் வெளியே போக முடியாது. வேலை இருக்கு”
“ஆமா பெரிய வேலை. கம்பியூட்டர்-ல விளையாடுறது உனக்கு வேலை மாதிரி தெரியுதா?உங்க அப்பா எதுக்காக கம்பியூட்டர் வாங்கி வெச்சாரு? இன்டர்நெட்-ல படிக்க தானே? நீ என்ன செஞ்சிட்டு இருக்க?”
“அம்மா. சும்மா மொக்க போடாதே. எப்போ பாத்தாலும் படிச்சுக் கிட்டே இருக்க முடியுமா?”
“நீ எப்ப படிச்ச இப்போ பொழுது போக்க? சரி அதிகம் பேசாம, போய் வாங்கிட்டு வா. இல்ல உனக்கு மதியம் சோறு கெடையாது”
“சீ! எப்போ பாத்தாலும்”, கணினியை அணைத்துவிட்டு காலுறையை அணிந்தான். வெளியே வண்டியில்லை என்று தெரிந்ததும்,
“பாரு. உன் புருஷன் வண்டிய எடுத்துட்டு போயிட்டான். இவ்ளோ காலைல அவனுக்கு மட்டும் என்ன வேலை?”, வண்டிக்காக வயதிற்கு மரியாதை குறைந்தது.
“டேய். அவர மரியாத இல்லாம பேசாத-ன்னு எவ்ளோ வாட்டி சொல்லியிருக்கேன்?”, கரண்டி கண்டித்தது.
“அடப் போம்மா. இப்போ நான் எப்படி போறது?”
“இங்க இருக்குற கடைக்கு உனக்கு வண்டி வேணுமா? சைக்கிள்-ல போனா கொறஞ்சா போயிடுவ?”
“முடியாது போம்மா”, வார்த்தையால் மறுத்துவிட்டு மிதிவண்டியில் வெளியேறினான்.

“நல்லவன் தான். கொஞ்சம் வாய் ஜாஸ்தி”, மகனுக்கு மரியாதை செலுத்திவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினாள் தேவதை.
“அவன் என் கைல கெடைக்கட்டும்”, பலத்திற்கு மீறிய வார்த்தையுடன் வேண்டுமென்றே அழுத்தி மிதித்துக் உடலை வருத்திக் கொண்டான்; மிதிவண்டி ஓட்டுவது கடினம் என்று அவன் மனதை நம்ப வைக்க. அவன் மிதித்த வேகத்தில் விரைவாக கடையை அடைந்தான்.
“புலாவ்-கு என்ன காய் போடுவாங்க?” சில வாரங்கள் முன்பு, தன் வாயிலுள் வைத்த உணவைப் அலசினான்.
“காரட், பீன்ஸ், கொட மொளகா. சரி போய் பாப்போம்”
“காரட் அரை கிலோ; பீன்ஸ் அரை கிலோ; கொட மொளகா கால் கிலோ போடுங்க”
“நீயே எடு தம்பி”
“அதெல்லாம் தெரியாதுங்க. நீங்களே எடுத்து போடுங்க”
“இதுல தெரிய என்ன இருக்கு?” என்ற நினைப்புடன் குவியலிலிருந்து பொருக்கி எடுத்தார்.
“இந்தா புடி தம்பி”
“ஐயோ, பை எடுத்துட்டு வரலையே. கவர்-ல போட்டு குடுங்க”
“அங்க பாரு”, கை காட்டிய திசையில் அவன் கண்.
“எனக்கு தமிழ் தெரியாது”
“ஓ இது வேறையா. சரி, நேத்தே நகராட்சி பிளாஸ்டிக் பைய தடை செஞ்சிடுச்சு”
“இது என்ன அநியாயம்! இன்பார்ம் செய்யாம எப்படி பேன் செய்யலாம்? அட்ராஷியஸ்”
“நேத்தே பேப்பர்-ல எல்லாம் அறிவிச்சிட்டோம். ரெண்டு நாளா இந்த போஸ்டர் இங்க தான் இருக்கு”
“இன்னும் எவ்ளோ நாள் பேப்பர்-ல அறிவிக்கிறோம்; போஸ்டர் ஓட்டுறோம்-னு சொல்வீங்க? டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவுடு. க்ரோ அப் மேன்”
“என்ன?”, தலை சொரியப்பட்டது.
“ஹஹ்! ஸ்டுபிட் கன்ட்ரி மென்”
“தம்பி வீட்டுக்கு போய் பை எடுத்துட்டு வா. இல்லேன்னா ஆள விடு”
“ஹவ் டேர் யு! ஒரு கவர் கூட இல்லையா?”
“இந்த சண்ட போடுற வேலையெல்லாம் வேணாம். திட்டனும்-னா நகராட்சிய போய் திட்டு. இப்போ எடத்த காலி பண்ணு”
“இரு இரு! உன் சீட்-ஐ கிழிக்கறேன். திமிராவா பேசுற”, வெட்டிக் கோபம் கொப்பளிக்க, வெளியே வந்து மிதிவண்டியின் ஸ்டான்ட்-ஐ ஓங்கி உதைத்தான். அது எகிறி இரண்டடி தள்ளி விழுந்தது. அதை கண்டுகொள்ளாமல், மறுபடியும் மிதித்தான்.
“என்ன டா வெறும் கைய வீசிக்கிட்டு வரே? எங்க காய்?”
“காய் ஆவது மண்ணாங்கட்டியாவது. அவன் பேசின பேச்சுக்கு, இரு! FB -ல நாரடிக்கிறேன்”
சுருள் முடிந்து கருத்து கேட்கப் பட்டது. சம்சாரத்தை சமாதானம் செய்துவிட்டு, காய் வாங்கிக் கொடுத்தேன்.
“எங்க போனான்?”
“தெரியல. எங்கயாவது சுத்திகிட்டு இருப்பான்”
“FB -ல என்ன போட்டான்?”
“நான் என்னத்த கண்டேன்? நீங்களே ஒப்பன் பண்ணி பாருங்க”, கணினியை இயங்கவைத்து, அவன் பக்கத்தை சொடுக்கினேன்.
“இந்த பிளாஸ்டிக் பான்-ஐ நான் எதிர்க்கிறேன். எல்லாரும் அவசரத்துல பை எடுத்துட்டு போக முடியுமா? வை கான்ட் தே கோ பார் பயோ பிளாஸ்டிக்? ஐடியா இல்லாத பசங்க”, அவன் ஸ்டேடஸ்  என் கண்களை சுட்டது. அதற்கான கமெண்டுகளை பார்த்தேன்.
“நாகர்கோயில்-ல இயற்கைய காக்க எப்பவோ இது வந்திடுச்சு. இங்க இப்போவாவது வந்திச்சே-ன்னு சந்தோஷப் படுவியா. ஒரு தடை-னா சில பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். சுற்றுச் சூழல் பாதிச்ச வாழ்கையே கேள்விக் குறி” என்ற கமென்ட், முதலில் கண்ணில் பட்டது.
“உனக்கு சயின்ஸ் தெரியல. யு ஆர் ஏ ஸ்டுபிட். நீ எல்லாம் எனக்கு புத்தி சொல்ல வேணாம்”, என் மகன் மல்லுக்கு நின்றான்.  அடுத்த நொடி,

“டாடி! நான் உங்க கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன். டோன்ட் கெட் இன்டு மை பர்சனல்”, அவன் ப்ரைவசி பல் இளித்தது.
“பிளாஸ்டிக் உபயோகிக்கிரதால கெடுதல்-னு உன் சயின்சே சொல்லுது”
“யா! ஜஸ்ட் லைக் சிகார். ஆனா எவனும் சிகரட் புடிக்காம இருக்குறதில்லையே! சின்ன விஷயத்தை எல்லாம் பெருசு பண்ணாதீங்க. சயின்ஸ் வில் பயிண்டு ஏ வே!” பதிலை பெற்றவுடன், கருத்துப் பையில் ஒரு சேர்க்கை.
“ஆதி மனிஷன் கடவுளை மூட நம்பிக்கையில செத்தான். இந்த காலம், சயின்ஸை நம்பிச் சாகப் போகுது! ஆக மொத்தம் எல்லாம் மூடர்கள் தான்!”  பதில் பேசாமல், வாசலை தாண்டினேன். மிதிவண்டி மல்லாந்துக் கிடந்தது.
“சைக்கில் ஸ்டாண்ட் எங்க டா?”
“கடைக்கு வெளியே இருக்கு போய் எடுத்துக்கோ” என்று கத்திவிட்டு, அடுத்த ஸ்டேடஸ்-ஐ போட்டான்.
“நான் ஒரு நாய் குட்டியை காப்பாற்றினேன்”, உடனே ஒரு ‘லைக்’ நொட்டியது.
“யு ஆர் கிரேட் மச்சி!” என் மண்டையில் இரண்டாவது கருத்து.
“நானாவது எங்கப்பன் சொன்னதை இப்போ உணர்ந்தேன். இவன் தான் செஞ்சதுக்கு எப்பவும் ஒரு காரணம் வெச்சிருப்பான் போலயே! இன்டலிஜென்ஸ்!! டெக்னாலஜி..ஹ்ம்ம்!!”

கண்ணன் ராமசாமி

Series Navigationகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *