தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love

 

Cover image 

மூன்று அங்க நாடகம்

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++

1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ]

2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ]

The Devils Disciple, Presented by Neptune Theatre

பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து  தூக்கில் இடப் போன  ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது.  அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை  தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார்.  அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.

 

Fig 1 Here comes General Burgoyne

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple)சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

Fig 2 It is not a lively business

வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :

1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம்.   இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது.   இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது .  பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது.   அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது.   அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது.   அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில்  எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது.   அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர்.   அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள்  உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக்  [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார்.   தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான்.  இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து  காப்பாற்றுகிறார்.   அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

 

Fig 3 You have committed us

 

**********************

நாடக  உறுப்பினர்

1.  ரிச்செர்டு டச்சியான்   [35 வயது]  (Richard Dudgeon)

2.  கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்செர்டின் சகோதரன்   (Christy  Dudgeon)

3.  கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன்   [வயது 50]

(Rev. Anthony Anderson)

4.  ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி   [30 வயது] (Wife : Julia Anderson)

5.  ஜெனெரல் பர்காயின்  [55 வயது]  (British General Burgoyne)

6.  பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன்  [45 வயது] (Major Swindon)

7.  ஸார்ஜன்ட்   (Sergeant)

8.  வழக்கறிஞர் ஹாக்கின்ஸ்   (Lawyer Hawkins)

9.  மிஸிஸ். அன்னி டச்சியான் :  [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)

10.  சாப்பிளின் புரூட்நெல்   (Chaplin Mr Brudenell)

11.  சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி  (Uncle William Dudgeon & Wife)

12. சிற்றப்பா  டைட்டஸ்  டச்சியான் & மனைவி  (Uncle Titus Dudgeon & Wife)

13  இளம் மங்கை : எஸ்தர்  [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.

 

************************

வேதாளத்தின் மாணாக்கன்

அங்கம் -3 பாகம் -4

மூன்று அங்க நாடகம்

 

இடம்:  அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர்.  [Websterbridge, New Hamshire, U.S.A]  இராணுவ நீதிமன்றம்.

நடந்த ஆண்டு : 1777  (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)

பொழுது :  இலையுதிர் காலத்து காலை நேரம்.

 

Fig 4 Springtown is in the hands of rebels

அரங்க அமைப்பு:   வெஸ்டர்பிரிட்ஜ்  நகர் மையத்தில் கட்டப் பட்டிருக்கும் பிரிட்டீஷ் இராணுவத் தலைமை ஆணையகம்.  கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறைக்கள அரண்கள்.  இராணுவக் காவலன் ஒருவன் கைதிகள் தனிப் பேச்சறைக் கதவைத் திறந்து,  ஜூலியா உள்ளே அனுமதிக்கப் படுகிறாள்.  இரவில் சரிவரத் தூங்காது, ஜூலியா பாதி மயக்க நிலையில் மெதுவாய் நடந்து வருகிறாள்.    காவலன் ஜூலியாவிடம் பரிவோடு நடந்து கொள்கிறான்.   கைதி ரிச்செர்டைக் காலையில் காண வந்த  ஜூலியா, உண்மையைச் சொல்லி, தான் அவனைத் தப்ப வைக்கப் போவதாய்க் கூறுகிறாள்.  இராணுவ நீதிமன்றம் கூடுகிறது.  ரிச்செர்டை விசாரணைக்கு இழுத்து வருகிறார் இராணுவக் காவலர்.

இராணுவ நீதிமன்றத்தின் ஆலோசனை மாளிகை [Council Chamber] குற்ற விசாரணை செய்யத் தயார் ஆகிறது.  அறை பெரிதாகத் தெரிகிறது.  நடுவில் ஒரு மேஜை நாற்காலியும், பின்னால் பல நாற்காலிகளும் போடப் பட்டுள்ளன.   மேஜர் சுவிண்டன்  இராணுவ உடையில் முன் நாற்காலியில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருக்கிறார்.  தனியாக இருக்கும் அவரை நோக்கி ஸார்ஜென்ட் வந்து சல்யூட் செய்து ஜெனரல் பர்காயன் வருகையை அறிவிக்கிறான்.

 

ஸார்ஜென்ட்:   [மேஜர் சுவிண்டனிடம்]  இதோ ஜெனரல் வருகிறார் ஸார் !

மேஜர் சுவிண்டன் எழுந்து நின்று மரியாதை செய்கிறார்.   [ஸார்ஜென்ட் போகிறான்.  ஜெனரல் பர்காயின் இராணுவ உடையில் வருகிறார்.  உயர்ந்த இராணுவப் பட்டைகள் வாங்கிய மேலதிகாரி.  நகைச்சுவை யாகப் பேசுபவர்.  இன்று கோபமாகத் தெரிகிறார்]

ஜெனரல் பர்காயின்:  மேஜர் சுவிண்டன் !  எல்லாம் தயாரா க இருக்கிறதா ?

மேஜர் சுவிண்டன்:   ஆமாம் ஜெனரல் [இருவரும் நின்று மதிப்புடன் தலை வணங்குகிறார் வழக்கமான முறையில்]  நீதி மன்றத்தில் நான் இன்று வழக்காட உன்னுதவி கிடைப்பது பற்றி மகிழ்ச்சி.  இன்று நடக்கப் போவது ஓர் அதிசய நிகழ்ச்சி:  ஒரு கயவன், கிறித்துவப் பாதிரியாரைத் தூக்கில் போடப் போகிறோம் !

ஜெனரல் பர்காயின்:   இல்லை மேஜர் !   அவன் என்ன கேடு நமக்கு விளைவித் திருந்தால் இத்தகைய கொடுமைத் தண்டனை அவனுக்குக் கிடைக்கும் ?  இவன் இங்கிலாந்து கிறித்துவ ஆலயத்தைச் சேர்ந்தவன் என்றிருந்தால், இத்தகைய பெருந் தண்டனை பெற்றிருப்பானா ?   இப்படி நாட்டுக்கு உயிரைக் கொடுப்பவனை புனித தியாகி என்று சொல்லலாமா ?   ஒரு திறமை இல்லாதனும் இப்படி ஒன்றைச் செய்து புகழ் பெறலாம் என்று தெரியுது !   இவனை யெல்லாம் தூக்கில் போட நமக்கொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது !   சீக்கிரமாய் இப்படித் தூக்கில் போட்டால் நமக்கு உயர் பதவி அளிக்கும் !  எப்போது ஆணை நிறைவேற்றப் படும் ?

 

Fig 5 They are men of  the same English stock

மேஜர் சுவிண்டன்:  தூக்கில் போடுவது பகல் 12 மணிக்கு !  தூக்கு மேடை தயாராய் உள்ளது !   தூக்குக் கயிறு பழுது பார்க்கப் பட்டது !  கீழ்ப் பலகை இழுப்பு பன்முறை பயிற்சி செய்யப்பட்டது !  தண்டனைக்கு உங்கள் கையெழுத்து மட்டும் தேவை !   இப்போது நாம் இறுதியாகச் செய்ய வேண்டியது நீதி மன்ற விசாரணை  !

ஜெனரல் பர்காயின்:   என்ன ?  அதாவது தண்டனை முன்னால் !  நமது வழக்காடல் பின்னால் என்று சொல்கிறாயா ?    இந்த முறை எப்போது வந்தது ?  [கோபத்துடன்] ஸ்பிரிங்டவுனில் என்ன நடக்குது தெரியுமா ?

மேஜர் சுவிண்டன்:   குறிப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை.  ஊர் அமைதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஜெனரல் பர்காயின்:   [கோபமாக]  என்ன ?  அமைதியாகவா உள்ளது ?  எதை வைத்து இப்படிச் சொல்கிறாய் ?  அங்கே கலகக்காரர் பெருகி விட்டதாய் எனக்குச் சேதி வந்துள்ளது !

மேஜர் சுவிண்டன்:   எனக்குச் சேதிகள் வருவதில்லை !  பிரச்சனையே அதுதான் ஜெனரல்.   எல்லாம் உங்களுக்கு மட்டும் அனுப்பப் படுகிறது.

ஜெனரல் பர்காயின்:   [கோபமாக] அதாவது நாட்டு நிலவரம் உனக்குத் தெரியாது என்று சொல்வது ஒரு புகாரா அல்லது உனது இயலாமையா ?    ஸ்பிரிங்டவுனில் கலவரம் மிகுந்து கயவர் கைப் பற்றினார் என்று இன்னும் உனக்குத் தெரியாதா மேஜர் ?

மேஜர் சுவிண்டன்:  நேற்று முதலா ? அல்லது இன்று காலை முதலா ?

ஜெனரல் பர்காயின்:   எப்போது முதல் கைப்பற்றினால் என்ன ?  எதுவும் தான் தெரியாதே உனக்கு !   நாளை மாலைக்குள் நம்மையும் கலகக்காரர் பிடித்துச் சிறையிடுவார் என்று அஞ்சுகிறேன் நான்!  அப்படி நீ சிந்திக்க வில்லையா ?

மேஜர் சுவிண்டன்:  பிரிட்டிஷ் இராணுவப் படையாட்கள் அப்படி விட்டு விட மாட்டர்.  நம்மைச் சுற்றிப் பாதுகாப்பார்.   கவைலைப் படாதீர் ஜெனரல் !

ஜெனரல் பர்காயின்:   பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்குக் கடமை இன்னதெனத் தெரிந்திருக்க வேண்டிய தில்லை.  அவரையும் காப்பது அவருக்குக் கீழ் வேலை செய்யும் இராணுவக் காவலர்கள்தான்.

மேஜர் சுவிண்டன்:  ஜெனரல் ! உங்கள் கூர்ந்த அனுபவம் எனக்கு வர இன்னும் 20 ஆண்டுகள் நான் வளர்ச்சி அடைய வேண்டும்.  என் கடமையைச் செய்து, என்னாட்டுக்காரர் தேசப் பற்றில் நம்பிக்கை கொள்பவன் நான்.

 

Fig 6 Suppose the colonists find a leader

ஜெனரல் பர்காயின்:   என்னே பரிதாபம், என்னே பரிதாபம் மேஜர் !  உமக்குப் புரியுதா நம்மை எதுவும் தடுக்க வில்லை;  நாம் புளுகிக் கொண்டு செய்யும் கொலைகளுக்கும்,  இந்தக் காலனியில் நடக்கும் செம்மறி ஆட்டு ஆட்சிக்கும் இடையே நாம்  அமைதி நாட்ட முடியுமா ?  வெள்ளை அமெரிக்கர் யாவரும் நம்மினத்தைப் போன்ற ஆங்கிலேயர்தானே.   நாமெல்லாம் ஒரே மொழி பேசுவோர், ஒரே நாகரீகத்தில் வாழ்பவர் !   நம்மினத்தில் ஆறில் ஒருவர் வெள்ளை அமெரிக்கர் !  நமது இராணுவப் படையில் ஹெஸ்ஸைன், பிரென்ஸ்விக்கர், ஜெர்மானியர், இந்தியர்  [Hessians, Brunswickers, German Dragoons & Indians] பலர் உள்ளார் !   நம்மவர் எனப்படும் இந்த தேசத்தவர் தேசப் பற்றில் நம்பிக்கைக் கொண்டு காலம் தள்ளுகிறீர் !   ஒருவேளை இந்தக் காலனிவாதிகள் ஒரு தலைவனைக் கொண்டு வந்தால், என்ன செய்வோம் ?    ஸ்பிரிங்டவுன் கலகக்காரர் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தால், நாம் என்ன செய்வோம் சொல்வீர் !

மேஜர் சுவிண்டன்:   ஜெனரல் !  நீங்கள் சொல்வது எனக்குப் புரிய வில்லை !   பிரிட்டீஷ் வேந்தர் பிறரை ஆளப் பிறந்த பரம்பரை மன்னர் !

 

[தொடரும்]

*******************

தகவல் :

Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –

1.  Penguin Plays :  The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)

2.  http://www2.hn.psu.edu/faculty/jmanis/gbshaw/devil-disciple.pdf   [77 Pages]

(Complete English Drama of The Devil’s Disciple)

3.  http://en.wikipedia.org/wiki/The_Devil’s_Disciple  [December 14, 2013]

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Classics “The Devil’s Disciple”  – Bernard Shaw’s (120 minutes) (1987)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k)  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs  [You Tube : The Devil’s Disciple Drama]

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 1, 2013)

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

Leave a Comment

Archives