மூன்று அங்க நாடகம்
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++
1. [ http://www.youtube.com/
2. [ http://www.youtube.com/
The Devils Disciple, Presented by Neptune Theatre
பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி. பிரிட்டீஷ் காலனி அதிகாரி கைது செய்து தூக்கில் இடப் போன ஒரு சுதந்திரப் போராட்டக் காரனின் ஆள் மாறாட்ட சூழ்ச்சியை மையமாய் வைத்து, அரசியல் ஆவேசம் கொந்தளிக்க எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் போராட்ட மனிதன் நாட்டுத் துரோகியா இல்லை தியாகியா என்பதை பெர்னாட் ஷா மிக நகைச்சுவையோடு மூன்று அங்கங்களில் காட்டுகிறார். அவன் மெய்யாக வேதாளத்தின் மாணாக்கனா இல்லையா வென்று வாசகரே நாடகத்தைப் படித்தோ, பார்த்தோ முடிவு செய்து கொள்ளட்டும்.
நாடக மேதை பெர்னாட் ஷா
ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொது வுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளா ராகவும் உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra), காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.
வேதாளத்தின் மாணாக்கன் நாடகத்தைப் பற்றி :
1777 ஆண்டு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க சுதந்திரப் போர் ஆரம்பமான இரண்டாவது வருடம். இங்கிலாந்தின் கோரப் பிடியிலிருந்து அமெரிக்கக் காலனிகள் விடுதலைத் தாகமுற்றுத் தொடர்பிலிருந்து அற்றுக் கொண்டு போகப் போராடிய காலம் அது. இருபுறத்திலும் ஒருவரை ஒருவர் தாக்கிப் புரட்சி உண்டாக்கி உணர்ச்சி வெள்ளம் பெருகிப் பலர் துரோகிகளாய்க் கருதப் பட்டுத் தூக்கு மரத்தில் பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்ட போர்க் காலம் அது . பிரிட்டனின் ஆதிக்கக் குறிக்கோள் அமெரிக்காவில் பிரிட்டீஷ் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடாமல் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வது. அமெரிக்கருக்கு அந்த ஆதிக்க அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடாக்கத் தாய் நாட்டுடன் போரிடுவது. அதற்காகச் சிறையிடப்பட்டு தூக்கு மரமேறி உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனின் அதிர்ச்சி நாடகம் இது. அமெரிக்கத் தெருக்களில், ஊர்களில் எங்கும் இராப் பகலாய்ப் பிரிட்டீஷ் இராணுவக் காவலர் கண்காணித்து வரும் போர்க்காலம் அது. அப்போது இருதரப்பில் இருக்கும் கிறித்துவப் பாதிரியார்களும் ஆயுதங்கள் ஏந்தி தம் இனத்தாருக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தனர். அத்தகைய துரோகிப் பாதிரியார் ஒருவரைச் [அந்தோணி ஆண்டர்சன்] சிறை செய்ய வந்த பிரிட்டீஷ் இராணுவ அதிகாரிகள் உண்மை முகம் தெரியாமல் அப்பாவிக் கயவன் ஒருவனைக் [ரிச்செர்டு டச்சியான்] கைது செய்து, குற்றம் சாட்டித் தூக்கிலிட உத்தரவு விடுகிறார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பாத குசும்பன் ரிச்செர்டு பாதிரியாரைக் காப்பாற்றத் தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாரா கிறான். இதைத் தனது மனைவி மூலம் அறிந்த பாதிரியார் ஆயுதம் ஏந்தி, பிரிட்டீஷ் இராணுவத்திடம் நிரூபித்து “வேதாள மாணாக்கன்” ரிச்செர்டைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுகிறார். அதற்கு பாதிரியாரின் அழகிய மனைவியும் உதவி செய்கிறாள்.
[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]
**********************
நாடக உறுப்பினர்
1. ரிச்செர்டு டச்சியான் [35 வயது] (Richard Dudgeon)
2. கிரிஸ்டி டச்சியான் [வயது 22], ரிச்செர்டின் சகோதரன் (Christy Dudgeon)
3. கிறித்துவப் பாதிரியார் மேதகு அந்தோணி ஆண்டர்சன் [வயது 50]
(Rev. Anthony Anderson)
4. ஜூலியா ஆண்டர்சன் பாதிரியாரின் அழகிய மனைவி [30 வயது] (Wife : Julia Anderson)
5. ஜெனெரல் பர்காயின் [55 வயது] (British General Burgoyne)
6. பிரிட்டீஷ் மேஜர் சுவிண்டன் [45 வயது] (Major Swindon)
7. ஸார்ஜன்ட் (Sergeant)
8. வழக்கறிஞர் ஹாக்கின்ஸ் (Lawyer Hawkins)
9. மிஸிஸ். அன்னி டச்சியான் : [வயது 60] [Mrs Annie Dudgeon : Mother of Richard Dudgeon and wife of Timothy Dudgeon)
10. சாப்பிளின் புரூட்நெல் (Chaplin Mr Brudenell)
11. சிற்றப்பா வில்லியம் டச்சியான் & மனைவி (Uncle William Dudgeon & Wife)
12. சிற்றப்பா டைட்டஸ் டச்சியான் & மனைவி (Uncle Titus Dudgeon & Wife)
13 இளம் மங்கை : எஸ்தர் [17 வயது] பீட்டர் டச்சியன் மகள்.
************************
வேதாளத்தின் மாணாக்கன்
அங்கம் -3 பாகம் -6
மூன்று அங்க நாடகம்
இடம்: அமெரிக்காவில் வெப்ஸ்டர்பிரிட்ஜ் ஊர்ச் சுற்றுப்புறம் , நியூ ஹாம்ஷயர். [Websterbridge, New Hamshire, U.S.A] இராணுவ நீதிமன்றம்.
நடந்த ஆண்டு : 1777 (கலவரம் நிறைந்த அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலம்)
பொழுது : இலையுதிர் காலத்து காலை நேரம்.
அரங்க அமைப்பு: வெஸ்டர்பிரிட்ஜ் நகர் மையத்தில் கட்டப் பட்டிருக்கும் பிரிட்டீஷ் இராணுவத் தலைமை ஆணையகம். கைதிகள் அடைக்கப் பட்டுள்ள சிறைக்கள அரண்கள். இராணுவக் காவலன் ஒருவன் கைதிகள் தனிப் பேச்சறைக் கதவைத் திறந்து, ஜூலியா உள்ளே அனுமதிக்கப் படுகிறாள். இரவில் சரிவரத் தூங்காது, ஜூலியா பாதி மயக்க நிலையில் மெதுவாய் நடந்து வருகிறாள். காவலன் ஜூலியாவிடம் பரிவோடு நடந்து கொள்கிறான். கைதி ரிச்செர்டைக் காலையில் காண வந்த ஜூலியா, உண்மையைச் சொல்லி, தான் அவனைத் தப்ப வைக்கப் போவதாய்க் கூறுகிறாள். இராணுவ நீதிமன்றம் கூடுகிறது. ரிச்செர்டை விசாரணைக்கு இழுத்து வருகிறார் இராணுவக் காவலர். கூடவே ஜூலியாவும் வருகிறாள்.
இராணுவ நீதிமன்றத்தின் ஆலோசனை மாளிகை [Council Chamber] குற்ற விசாரணை செய்யத் தயார் ஆகிறது. அறை பெரிதாகத் தெரிகிறது. நடுவில் ஒரு மேஜை நாற்காலியும், பின்னால் பல நாற்காலிகளும் போடப் பட்டுள்ளன. மேஜர் சுவிண்டன் இராணுவ உடையில் முன் நாற்காலியில் அமர்ந்து ஏதோ எழுதி கொண்டிருக்கிறார். தனியாக இருக்கும் அவரை நோக்கி ஸார்ஜென்ட் வந்து சல்யூட் செய்து ஜெனரல் பர்காயன் வருகையை அறிவிக்கிறான். பிறகு பல இராணுவ அதிகாரிகள் வந்து அமர்கிறார். ரிச்செர்டு அழைத்துவரப் படுகிறான். கூடவே ஜூலியாவும் வருகிறாள். நீதி மன்ற வழக்காடல் தொடங்குகிறது.
[முன்வாரத் தொடர்ச்சி]
ஜெனரல் பர்காயின்: மிஸ்டர் ஆண்டர்சன் ! நீவீர் ஓர் ஆன்மீகவாதி ! ஆலயப் பாதிரியார் ! ஒருவேளை அரசியல் சம்பந்தப் பட்டோ, அல்லது இராணுவக் கட்டளைக்குட் பட்டோ, நாங்கள் உம்மை தூக்கில் போட வேண்டிய ஓர் இக்கட்டான நிலை வந்துவிட்டால், அது எமது எந்தத் தனிப்பட்ட வெறுப்பையும் உன் மீது காட்டாது !
ரிச்செர்டு: ஓ அப்படியா ! எனக்குத் தூக்குத் தண்டனை அளிப்பது அரசியல் பிரச்சனையால் இருக்கலாம், இராணுவ அதிகாரத்தால் இருக்கலாம் ! ஆனால் தனிப்பட்ட வெறுப்பினால் அல்ல என்றால் பிறகு எதற்கு இந்த தனிப்பட்ட நீதிமன்ற விசாரணை செய்ய வேண்டும் ?
ஜூலியா: எதற்காக இவரைச் சிறை செய்தீர் என்பதற்கு என்ன பதில் சொல்வீர் ?
ரிச்செர்டு: நீ பேசக் கூடாது என்று வாக்குறுதி வாங்கி இருந்தேன், மறந்து விட்டாயா ?
ஜென்ரல் பர்காயின்: மேடம் ! உன் மனதில் உள்ளதைக் கேள் ! நீ யாருக்கும் அஞ்ச வேண்டாம் ! உன் கணவனைக் காரணமோடுதான் கைது செய்துள்ளோம் ! [பரிவுடன்] ஸார்ஜென்ட் ! மிஸ்டர் ஆண்டர்சனுக்கு ஒரு நாற்காலி போடு ! அவர் ஒரு கண்ணியவான் ! [ஸார்ஜென்ட் நாற்காலி ஒன்றைப் போட கைதி அதில் அமர்கிறான்] மேஜர் சுவிண்டன் ! நீங்கள் இனிமேல் தொடங்கலாம் உமது வினாக்களை !
மேஜர் சுவிண்டன்: மிஸ்டர். ஆண்டர்சன் ! நீவீர் மேன்மை தங்கிய பிரிட்டீஷ் வேந்தர் மூன்றாம் ஜார்ஜ் அவர்களின் குடியரசுப் பிரஜையாய் இருப்பதால், அவருக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்பதை நான் முன்னதாக அறிவிக்கிறேன்.
ரிச்செர்டு: [வெகுண்டு எழுந்து] எனக்குத் தெரியும் ஸார் ! மேன்மை தங்கிய வேந்தர் மூன்றாம் ஜார்ஜ் என்னைத் தூக்கிலிடப் பணித்ததற்குக் காரணம் கோமான் நார்த் என்பவர் எம்மைக் கொள்ளை அடிக்கிறார் என்று நான் கூறியதற்குத்தான் !
மேஜர் சுவிண்டன்: அது துரோகப் பேச்சு தெரியுமா ?
ரிச்செர்டு: நானதை விரும்பிச் சொன்னதுதான் மேஜர் !
ஜென்ரல் பர்காயின்: [அழுத்தமாக] மிஸ்டர் ஆண்டர்சன் ! இப்போது நீவீர் மன்னரைப் பற்றி அவதூராய்ச் சொன்னது சற்று ஆபாசமாகத் தெரிய வில்லையா ? தேயிலைக்கும், புகையிலைக்கும் பிரிட்டன் சுங்க வரி போட்டதைக் கொள்ளை அடிப்பு என்று நீ இகழ்வது ஒரு தகாத செயல் ! அரசாங்க ஆட்சியைப் பொருத்தவரை அது நியாயமானதுதானே ! வரி போடுவது கொடுங்கோன்மை இல்லை [Taxation, No Tranny] என்று டாக்டர் ஜான்சன் சொன்னது நினைவில்லையா ?
ரிச்செர்டு: [வெறுப்புடன்] வரிப்பணத்துக்கு நான் வழக்காட வில்லை ! அந்த வரிப்பணத்தை எங்களிடமிருந்து கறக்கும் பன்றித் தலையன் ஜார்ஜ் மன்னர் பற்றித்தான் நான் …. !
மேஜர் சுவிண்டன் : [கோபத்துடன்] நாவை அடக்கு ! மேன்மை தங்கிய மன்னரைப் பன்றி என்று இகழ்ந்ததற்கு நீ மன்னிப்புக் கேள் மரியாதையாய் !
ஸார்ஜெண்ட்: [அருகில் வந்து] வாயை மூடு ! அவமதிப்புப் பேச்சை நிறுத்து ! இது நீதி மன்றம் ! மீன்கடைப் பேரம் இல்லை இங்கு !
ரிச்செர்டு: மன்னிப்பா ? அதைக் கேட்டால் தண்டனை நீங்கிவிடுமா ?
ஜென்ரல் பர்காயின்: ஆஹா ! அப்படி ஒரு வெறும் கண்ணோட்டம் ! அதுவும் உமது கண்ணோட்டம் ! என் அரசாகப் பதவி அங்கே போக விடுவ தில்லை என்னை. தனிப்பட்ட முறையில் சரி ! ஆனால் இது நீதி மன்றம் ! நாகரீக மாந்தர் நிலவும் இடம் ! மெய்யாக நீ தூக்கு மேடைக்குப் போகத் துணிந்து விட்டால் நாங்கள் ஏன் உன்னை விசாரிக்க வேண்டும் வீணாய் ? நீ தூக்குக் கயிறை இழுத்துக் கழுத்தில் கட்டிக் கொள்கிறாய் ! அது உன் உரிமை ! ஆனால் அதை வேடிக்கை பார்க்காமல் நாங்கள் தடுத்து நிறுத்த முனைவோம் !
மேஜர் சுவிண்டன்: இப்போது நாம் சாட்சியை விளிப்போமா ஜெனரல் ?
ரிச்செர்டு: சாட்சிக்கு இங்கென்ன தேவை, முடிவை எப்போதோ தீர்மானம் செய்த பிறகு ? ஒப்புக்கு ஒரு சாட்சியா ? நான் பேசியதை இந்த நகர மாந்தர் கேட்டிருந்தால், நடப்பே மாறிப் போயிருக்கும் ! தெருவெல்லாம் அடை பட்டுப் போயிருக்கும் ! தீப்பந்தம் ஏந்தித் திரள் திரளாய் நகர மக்கள் ஆயுதங்களுடன் ஊர்வலம் வந்து நாட்டில் குழப்பம் உண்டாகி யிருக்கும் ! கடைசி மனிதன் உள்ளவரை உமக்கு எதிர்ப்பிருக்கும் ! ஆனால் அதற்குள் நீங்கள் வந்து எம்மைப் பிடித்து விட்டீர் ! எல்லாம் தாமத மாகி விட்டது !
மேஜர் சுவிண்டன்: [எழுந்து முன்வந்து அழுத்தமாக] இது துரோகச் செயல் ! இந்த நகர மாந்தர் என்றும் மறக்காதபடி உமக்கும் அவர்க்கும் ஒன்றாய் ஒரு பாடத்தை கற்றுத் தருவோம் ! இன்னும் வேறு ஏதேனும் கூற நீ விரும்புகிறாயா ?
ரிச்செர்டு: என்னை ஒரு மனிதனாய் நடத்த உமக்கு அருகதை இருந்தால் என்னை ஓர்ப் போர்க் குற்றவாளியாகத் தீர்மானித்து இராணுவப் படை சுட்டுத் தள்ளட்டும், நாயைப் போல் கழுத்தை நெரித்துக் கொல்லாமல் !
[தொடரும்]
*******************
தகவல் :
Based on The Play : The Devil’s Disciple By : George Bernard Shaw, –
1. Penguin Plays : The Devil’s Disciple in Three Plays for Puritans (1958)
2. http://www2.hn.psu.edu/
(Complete English Drama of The Devil’s Disciple)
3. http://en.wikipedia.org/
(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(d) The Wicked Wit of Oscar Wilde (1997)
(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)
(h) BBC DVD Classics “The Devil’s Disciple” – Bernard Shaw’s (120 minutes) (1987)
(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)
(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)
(k) The Complete Plays of Bernard Shaw, Odhams Press Ltd, London
(l) http://www.youtube.com/
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 13, 2013)
http://jayabarathan.wordpress.
- நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…24 கிருஷ்ணன் நம்பி – ‘காலை முதல்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24
- நீங்காத நினைவுகள் – 7
- தூக்கு
- செங்குருவி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14
- மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)
- மருத்துவக் கட்டுரை துரித உணவும் ஒவ்வாமையும்
- ஒரு நாள், இன்னொரு நாள்
- மூன்று சைன விண்வெளி விமானிகள் பூமியைச் சுற்றிவரும் சைன அண்டவெளிச் சிமிழுக்குள் நுழைந்தார்.
- அந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘நிலைக் கண்ணாடி நிமிடங்கள்‘ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா உரை
- புகழ் பெற்ற ஏழைகள் – 11
- தாகூரின் கீதப் பாமாலை – 69 பிரிவில் புரியும் ஐக்கியம் .. !
- யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா
- ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !
- அக்னிப்பிரவேசம்-38
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6
- நவீன அடிமைகள்
- மாய க்குகை
- தண்ணி மந்திரம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்