மனதாலும் வாழலாம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 29 in the series 23 ஜூன் 2013

ராஜாஜி ராஜகோபாலன்

நித்யா நிச்சயம் காத்திருப்பாள். வாசல் கதவுகளோடு தன்னையும் சேர்த்துப் பிணைத்தபடி காத்திருப்பாள்; நினைவுகள் மட்டும் இவனோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும்.

தேவன் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ அவனுடைய மனோவேகத்தோடு போட்டிபோட முயல்வதுபோல் ஒடிக்கொண்டிருந்தது. ரோட்டில் மட்டுமல்லாமல் நடைபாதைகளிலும் தெருவோர வியாபாரிகளின் முதுகுகளிலும்கூட ஏறி ஓடுவதுபோலிருந்தது.

இந்த இருவரையும் இருபது ஆண்டுகள் பிரித்துவைத்த அதே விதிதான் இனியும் இவர்கள் பிரிந்திருப்பது நியாயமல்ல; மீண்டும் சந்தித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதென்பதைத் தீர்மானித்திருக்கவேண்டும்.

தேவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். நித்யா இப்போது எப்படி இருப்பாள்? என்னைக் காணும்போதெல்லாம் கண்கள் முழுவதும் கவிதை கசிய நிற்பாளே! வாசலில் வைத்தே என்னை அணைத்து வரவேற்பதிலுள்ள வேகம், என் விரல்களில் வீணை வாசிப்பதற்கு அவள் கொள்ளும் ஆவல், அவற்றில் ஒன்றை விடுக்கெனக் கடித்துவிடுவதிலுள்ள சிறுபிள்ளைத்தனம், எப்போது என் தோழில் வாகாய்ச் சாய்ந்துகொள்ளலாம் என்பதில் காட்டும் சாதுரியம்! சேலையை அவள் சுற்றிக்கொண்டாளா அல்லது சேலை அவளைச் சுற்றிக்கொண்டதா என ஐயுறுமளவுக்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அதனோடு ஐக்கியமாகிவிடும் இளமை துள்ளும் உடம்பு. மார்பை மறைக்கும் சேலையை விநாடிக்கொருமுறை மேலே இழுத்துவிட்டு ஒன்றும் நடவாததுபோல் அவள் நடிப்பதை நினைத்தபோது அவனின் மனதுக்குள் அதுவரை மலர்ந்துகொண்டிருந்த சிரிப்பு குபுக்கென வெடித்தது. அவன் சிரித்ததைக் கேட்ட ஆட்டோ டிரைவர் மேலிருந்த கண்ணாடியில் அவனை நோட்டம் விட்டபோதுதான் எவ்வளவுக்கு நித்யாவின் நினைவோடு தான் ஒன்றிப்போய்விட்டானென்று அவனுக்குள் ஒருவகைப் பெருமிதம் எழுந்தது. ஓ, அந்த நினைவுகள் எவ்வளவு இனிமையானவை!

இல்லை தேவா, இன்றைக்கு நீ இப்படியெல்லாம் நித்யாவைப் பற்றி எண்ணவும் உருகவும் உனக்கு உரிமையில்லை. அவனுள்ளே இன்னொரு மனம் எழுந்து அவனோடு வாதாட ஆரம்பித்தது. நித்யா என்றோ இன்னொருவனின் மனைவியானாள்.. கூடவே ஒரு பிள்ளைக்கும் தாயாக இருக்கிறாள். உன் எண்ணங்கள் நியாயமற்றவை. நீ இப்போதும் அவளை மனதில் வைத்துப் பூஜிக்கிறவனாயிருந்தால் எப்போதோ விட்டுப்போய் ஒரேயடியாக அறுந்துபோன உறவின் அடிப்படையில் எண்ணாதே. அன்று அவளோடு கழித்த நாட்களை மனதில் வைத்து இன்று அவளை அணுகுவது கொஞ்சமும் நியாயமற்றது. திருமணமான ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்பத்தையோ சூறாவழியையோ உண்டாக்க முனையாதே!

இதுவும் தேவன் மனதில் நியாயமெனப் பட்டது. ஆனால் இந்தப் பாழும் மனம் கேட்கிறதா? அது அந்தக் கடைசி நாள்வரை இருவரும் ஒரு உறுப்பாக வாழ்ந்த வாழ்க்கையையே நினைத்து அவர்களிருவரும் பேசியவற்றையும் பரிமாறியவற்றையுமே மீண்டும் மீண்டும் அலுக்காமல் உருப்போட்டுக்கொண்டிருந்தது.

“தேவா, நாளைக்கு உன்னை நான் காணாதுபோய்விட்டால் கோபித்துக்கொள்வாயா, கலங்குவாயா?” இதுவே அவள் கடைசியாகக் கேட்ட கேள்வி. அவளை மேற்கொண்டு பேசவிடாமல் அவளின் இதழ்களில் விரலை வைத்துத் தடுத்ததும் அவளை அணைத்து ஆறுதல் சொன்னதும் தேவனின் நினைவில் மோதியது.

நாளைக்கு என்ன நடக்குமென்பதை அறிந்துவைத்திருந்தபோதும் அதை என்னிடமிருந்து மறைத்துக்கொண்டாளே!

அந்தக் கடைசிச் சந்திப்பு. “கட்டாயம் வந்துவிடு, தேவா. வழக்கம்போல் தாமதிக்காதே.” அவள் திரும்பத் திரும்பச் சொன்னது நாள் முழுதும் மழைக்காலத்துக் கடல் அலைகளாய் அவன் மனதில் வந்து மோதிக்கொண்டிருந்தது.

நித்யா வாடைக்கு எடுத்திருந்தது கொழும்பு மேற்குக் கடற்கரையோரமாகவுள்ள ஒரு வீட்டில் ஒரு தனி அறை. தேவன் அந்த வீட்டை அணுகியபோது வானம் லிப்ஸ்டிக் போடப் பழகிய சிறுபெண்ணின் முகம்போலாகிவிட்டது. வாசல் மணியை அழுத்தினவுடனேயே அவள் கதவடியில் காத்திருப்பாளென அவன் எதிர்பார்க்கவில்லை.

வீட்டின் பின்புறம் அவளுக்குக் கொடுக்கப்பட்ட அறை இருந்தது. சிறிய ஆனால் அவளுக்கு அளவான, அடக்கமான, அறைபோன்ற அறை. மெல்லிய சந்தன நிறம் பூசிய சுவர்கள் எப்போதும் தியானத்தில் இருந்தன. வீட்டுச் சொந்தக்காரி இரண்டு பரம்பரைகள் பயமின்றிக் கொழும்பில் வாழும் புனிதா ஆன்டி. அவளின் கடுமையான இன்டர்வியூவெல்லாம் சித்தி செய்தபிறகுதான் நித்யா இந்தத் தனி அறையை வாடைக்கு எடுத்து வாழும் வாய்ப்பைப் பெற்றாள்.

ஆரம்பத்தில் தேவனைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த புனிதா ஆன்டி பின்னர் காலப்போக்கில் “தேவா இன்று வரலையா?” என்று நித்யாவைக் கேட்குமளவுக்கு அவன்மீது அன்பையும் அக்கறையை வளர்த்துக்கொண்டாள்.

வாசல் படிகளில் ஏறியபோது அவன் வருவதைத் தெரு முகப்பிலேயே கண்டவள்போல் நித்யா குதித்தபடி ஓடிவந்து அவனின் இரு கைகளையும் இறுகப் பிடித்துக்கொண்டாள். முகம் முழுவதும் அவளின் நமுட்டுச் சிரிப்பு இழையோடிற்று.

அன்பே நித்யா, இந்தக் கழுத்தை வருடும் காற்று, காதோடு பேசும் கடலலைகள் எல்லாமே உன்னை என்றும் குதூகலப்படுத்தும் காரணம் உன்னைச் சூழ்ந்த இயற்கைக்கு உன் கண்ணசைவால் நீ செய்யும் கவிதாஞ்சலியால்தான் இருக்கவேண்டும்!

நித்யா வழக்கம்போலவே அவனது தோளில் தன் கைகளிரண்டையும் கோர்த்துப் பதித்தபடி காதருகில் கிசுகிசுத்தாள், “இன்றைய பொழுது முழுவதும் நம் இருவருக்கும்தான் சொந்தம்.” அவளுடைய கண்கள் மிகுதியான கதையைச் சொல்ல முனைவதுபோல் நளினம் காட்டின. கன்னங்கள் சிவந்து ஒருமுறையாவது என்னைக் கிள்ளுவாயா எனக் கெஞ்சின. வீட்டில் நிலவிய அமைதியும் அவள் சொல்வதை மௌனமாய் ஆமோதித்ததுபோலிருந்தது.

அந்த மாலையும் அதை விழுங்கிய முன் இரவும் இன்னும் நீளக்கூடாதா என எண்ணி அவன் அதிசயித்துக்கொண்டிருந்தபோது இரவு பத்து மணியாகிவிட்டது. அவள் செய்து கொடுத்த அவனுக்கு மிகப் பிடித்த வெந்தயக் குழம்பையும் பிட்டையும் தயிரோடு குழைத்து உள்ளங்கையில் ஒவ்வொன்றாக உருட்டி அவன் கையில் வைத்தபோது அவளையே ஒவ்வொரு உருண்டையாக ஆக்கி விழுங்கிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தான் தேவன். இரவு உணவு முடிந்த பின்னரும் அவர்களின் அற்புதமான கணங்கள் தொடர்ந்தன.

“தேவா, இவ்வளவு காலமும் நம்மிருவர் விருப்பங்களையும் மதித்து நடந்து வந்தோம். நமக்கிடையே எந்த ஒழிவு மறைவும் வைத்திருக்கவில்லையல்லவா?”

“அதிலென்ன சந்தேகம் உனக்கு இப்போது வந்தது, நித்யா?”

“நான் எதையேனும் முக்கியமானதைச் சொல்லத் தவறியிருந்தால் அதைப் பெரிதும் பொருட்படுத்தாதே, தேவா.”

“எப்படியும் ஒரு நாள் அதை எனக்குச் சொல்லிவிடுவாய்தானே. இந்தச் சின்ன விஷயத்தைத் தெரியாமலா நான் இருக்கிறேன்?” இப்படிச் சொன்ன கையோடு தேவன் அவளின் கேசத்தை மிருதுவாய் வருடி அந்த உணர்விலே கண்மூடி அவள் மடிமீது சாய்ந்தான்.

“இந்த வார்த்தைகளே போதும், தேவா. உன்னை நான் விரும்பியதற்குக் காரணங்களை அடுக்கத் துவங்கினேன். அவற்றைக் கணக்கிட இந்த ஜன்மம் போதாதுபோலிருக்கிறதே!” இதைக் கேட்டுக் கலகலவெனச் சிரித்த தேவன், இன்னொரு ஜன்மம் பிறக்கவேண்டியதுதானே.” என்றான். “இன்னொரு ஜன்மம் என்ன இன்னும் எத்தனையோ ஜன்மங்கள் பிறக்கவும் தயார். நீதான் என்னவன் என்ற ஏற்பாடு இருக்குமென்றால்.” என்று கூறிய நித்யா அவனின் கன்னத்தோடு தன் கன்னம்சேரக் குழைந்தாள். இருவர் கண்களிலும் நீர் கோக்கும் வரைக்கும் சிரித்தார்கள், இறுக அணைத்துக்கொண்டார்கள், ஒன்றாய் உறங்கப் போனார்கள்.

பொழுது ஒருவாறு விடிந்தது. தேவன் ஏதோ அரவம் கேட்டு விழித்தபோது இருளை விழுங்கிய களிப்பில் சூரியன் வீட்டின் இடுக்குகளூடாக எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டான். குளித்து முழுகிய நித்யா சேலைத் தொங்கலை இழுத்து இடுப்பில் இறுகச் சொருவியபடி நீர் சொட்டும் கூந்தல் சோளியை நனைக்க தேனீர் தயாரிப்பதையே ஒரு மௌன நடனமாக அபிநயித்துக்கொண்டிருந்தாள். அவளின் வயிற்று மேட்டில் வியர்வை முத்துகள் வழுக்கிவிழும் அழகை ரசித்துக்கொண்டிருந்த தேவன் பின்னால் சென்று அவளின் காதோடு கிசுகிசுத்தான், “நித்யா, ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தபோது நீ பிறந்திருந்தால் அதற்கு உன் பெயரை வைத்திருப்பார்கள், தெரியுமா?” என்றான். “அதென்ன, திடீரெனக் கவிதையெல்லாம் வருகிறதே” எனத் தலையைத் திருப்பாமலே கேட்டாள் நித்யா. “நீ குளித்தபோது பூசிக்கொண்டதும் குளித்தபிறகு சுற்றிக்கொண்டதும் என் கவிதையைத்தான் தெரியுமா?” எனக் கேட்டான். “உன் கவிதையை அல்ல, தேவா, உன்னை!” என்று கூறிய நித்யா மெல்லத் திரும்பி அவனின் கன்னத்தில் முத்தமொன்றை இறுகப் பதித்தாள்.

தேவன் அன்று அதிகாலை நித்யாவின் வீட்டிலிருந்து புறப்பட்டபோது வழக்கம்போல் வாசல்வரை வந்து வழியனுப்பிய நித்யா ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தவள்போல் திடீரென அவனை அள்ளி அணைத்து அவனின் இதழ்களில் ஆழ்ந்த முத்திரையைப் பதித்தாள். ஒரு நிமிட நேரம் அசைவற்று நின்ற தேவன் அந்த அணைப்பிலிருந்து விலக வழியற்றவன்போல் கரைந்துபோனான்.

வழியெல்லாம் அந்த அணைப்பும் முத்தமும் தன்னோடு இறுக ஒட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்த தேவன் அன்று மாலை இவளை மீண்டும் காணப்போகும்போது இன்னும் என்ன செய்வாளோ என்ற திகைப்பில் மூழ்கிப்போனான்.

தேவன் அன்று மாலை வேலை முடிந்ததும் நித்யாவின் நினைவால் கால்கள் இழுத்துச் செல்லும் வழியெல்லாம் அவசரமாகப் பறந்தான். அவன் புனிதா ஆன்டியின் வீட்டை அணுகியபோது வானம் அந்தகாரம் சூழ்ந்து கடலையே விழுங்கிவிட்டால்தான் உண்டு என்பதுபோல் கருமை போர்த்தியிருந்தது.

வாசலில் இவனுக்காகவே காத்திருந்ததுபோல் நித்யாவுக்குப் பதிலாகப் புனிதா ஆன்டி! இவனைக் கண்டதும் அவளின் முகத்தில் படர்ந்திருந்த கலவரம் அவனை அதிரவைத்தது. இன்று காலைதானே இங்கிருந்து போனேன், அதற்கிடையில் அப்படி என்ன நடந்திருக்கும்?

“தேவா, உள்ளே வாங்கோ.” எனக்கூறி அழைத்துச் சென்ற ஆன்டி, “தேவா, நான் எப்படிச் சொல்வதென்று தெரியாமலிருக்கிறேன்.” என்று தயங்கியபடியே ஆரம்பித்தாள். தேவனால் எதையும் உடனே ஊகிக்கமுடியவில்லை. ஆனால் எதிர்பாராத எதுவோ நடந்திருக்கின்றது என்பது மட்டும் புனிதா ஆன்டியின் முகத்தில் ஒட்டியிருந்த கலவரத்திலிருந்து விளங்கிக்கொண்டான்.

“தேவா, மனதைத் திடப்படுத்திக்கொள், இன்று காலை நித்யாவின் அப்பாவும் அண்ணாவும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்போன்ற ஒருவருடன் வந்து நித்யாவைக் கையோடு கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். நானும் அவர்கள் செய்த களேபரத்தைப் பார்த்து வாய் திறக்கமுடியாமல் அரண்டுபோனேன்.” இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போன தேவன் சில விநாடிகள் சொல்வதறியாது மலைத்துப்போய் நின்றான்.

இப்படி ஒன்று நடக்குமென்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நித்யாவும் எதிர்பார்த்திருக்கமாட்டாளென்றே அவனும் எண்ணினான். அவள் வீட்டில் தங்கள் உறவுக்கெதிராகக் கடும் எதிர்ப்பு இருந்ததை நித்யா மூலம் தேவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் அவர்கள் இப்படித் திடீரென வந்து இன்னொருவன் முன்னால் அவளை ‘வா, இனி இங்கிருந்தது போதும்’ என்று இடும் ஒரு கட்டளை இடிபோல்லலவா அவள்மீது இறங்கியிருக்கும். பாவம் தனியானாய் அன்போ இரக்கமோ சிறிதும் இல்லாத அந்த மனிதர்களின் போக்கினால் கலங்கிப்போயிருப்பாள். ஆன்டி நடந்ததை விபரித்ததும் தேவனின் நெஞ்சு பதறியது. “ஆன்டி, திவ்யா அழுதுகொண்டு போயிருப்பாளே!’ என்று பெரும் ஆற்றாமையால் கேட்டான்.

“நானும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருமுறையாவது அழுவாளா என்று. எவ்வளவு திடமாகத் தன் மனதை வைத்திருந்தாளென்பது அவளின் இறுகிய மௌனத்திலேயே தெரிந்தது. வந்தவர்களையே மாறி மாறி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாளேயொழிய ஒரு சொல் பேசவில்லை.”

புனிதா ஆன்டி சொல்வதை ஒரு சொல் பிசகாமல் கேட்டுக்கொண்டிருந்த தேவனுக்கு ஒருபுறம் அழுகையும் மறுபுறம் ஆச்சரியமுமாயிருந்தது.

“தேவா, உங்கள் இருவரையும் பிரிக்கவேண்டுமென்பதுதான் அந்த வக்கிர மனமுள்ள மனிதர்களின் நோக்கம். அதை அவர்கள் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் காட்டினார்கள். நித்யா ஒருவித மறுப்பும் சொல்லாமல் அவர்களுடன் காரில் ஏறிப்போனதை நினைக்கத்தான் எனக்கும் மனதைப் பிசைகிறது. இவர்கள் இந்த எண்ணத்தோடு வருவார்கள் என்பதை அவள் முதலே அறிந்தமாதிரியும் இருந்தது.”

“அப்படி இருக்காது, ஆன்டி. இருந்திருந்தால் எனக்கு நேற்று இரவு ஒன்றும் விடாமல் சொல்லியிருப்பாள். உங்களிடமாவது நித்யா அப்படி ஏதேனும் சொன்னாளா, ஆன்டி?

“வாசல் படியில் இறங்கமுன் என்னிடம் வந்தாள். ‘இவர்கள் தங்களுடைய நாடகத்தை நடத்தட்டும் நான் என்னுடையதை நடத்துவேன்.’ என்று அவள் ஒருபோதும் காட்டாத உறுதியுடன் சொன்னபோது நான் பிரமித்துப்போனேன். பிறகு, தேவனிடம் சொல்லுங்கள், ‘ஒரே கூரைக்குக் கீழே வாழ்ந்தால் மட்டுமா உறவு? எங்கே வாழ நேர்ந்தாலும் நான் தேவனோடுதான் வாழ்கிறேன் என்ற உணர்வோடு ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பேன். எங்களுக்குள் என்றுமே பிரிவில்லை.’ ஆன்டி தன் மனவேதனையையும் சேர்த்து உச்சரித்த ஒவ்வொரு சொல்லும் தேவனின் இதயச் சுவர்களில் மோதி அதிர்ந்தன.

தேவனுக்கு ஆறுதல் சொல்லத்தெரியாத ஆன்டி அந்த மாலை முழுவதும் அவனுடனேயே இருந்து தனது சொந்தக் கதைகளைக்கூறி அவனின் கலக்கத்தை மாற்ற முயன்றுகொண்டிருந்தாள்.

ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த தேவனுக்கு நடந்ததெல்லாம் நேற்றுத்தான் நடந்தைவைபோல் ஒன்றன்பின் ஒன்றாக நினைவு அலைகளாய்க் கரையேறின. நித்யா நாட்டை விட்டுப் போனதும் சூனியமாய்ப்போன தனது வாழ்வைத் தொலைக்க கனடாவில் குடியேறினதும் நித்யா எந்த நாட்டில் வாழ்கிறாள் என்பதை அறியவதையே அன்றாடக் கடமையாகக் கொண்டு தேசப்படத்திலுள்ள அத்தனை நாடுகளிலும் அவளைத் தேடிக்கொண்டிருந்ததும் இறுதியில், நியூஸீலந்தில் வாழ்கிறாள் என அறிந்து அந்த நாட்டையே முற்றுகையிட நினைத்ததும் சில மாதங்களுக்கு முன் அவளுடன் தொலைபேசி கரைந்துபோகும் அளவுக்கு பேசியதும் பழகிய மண்ணிலேயே மீண்டும் எமது அன்பைப் பகிர்ந்துகொள்வோம் என்ற அவள் விருப்பத்துக்கு இணங்கி மீண்டும் கொழும்புக்கு வந்ததும் இதோ அவளை நேரில் காணவேண்டி ஒரு அங்குல தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் பயணம் செய்வதும் – ஒவ்வொரு நினைவும் தேவனை ஆட்டோவின் இருக்கையில் நுனிவரை தள்ளிக்கொண்டிருந்தது.

“என்னிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் போனதற்கு உன்மீது நான் கோபிக்கப்போவதில்லை, நித்யா.” அவன் தன்னை மறந்து இதைப் பலக்கச் சொன்னான் போலும். ஆட்டோ டிரைவர் நிமிர்ந்து கண்ணாடியில் அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தான். தேவன் ஆட்டோவிலிருந்து இறங்கிக் காசைக் கொடுக்கும்போது, “எல்லாம் சரிய்யா வரும் தொரை, மிச்சம் கரைச்சல் படாதீங்க, தொரை” என்றான். இவனென்ன எல்லாம் அறிந்தவன்போல் ஆரூடம் சொல்கிறான் என எண்ணியபோது தேவனுக்கு ஒருபுறம் சிரிப்பும் மறுபுறம் நடுக்கம் கலந்த நம்பிக்கையும் எழுந்தது.

கையில் நித்யாவுக்குக் கொடுக்கவென ஒரு மலர்க்கொத்தும் அவளின் மகனுக்கு சாக்லெட்டுகள் நிறைந்த பையுமாக அவள் தங்கியிருந்த வீட்டு வாசலை அணுகியபோது திறந்து கிடந்த கேட்டிற்கு அப்பால் – நித்யா!

வாசல் கதவோடு கண்களில் ஆவல் முட்டி வழிய நின்றவளைக் கண்டதும், “நித்யா” என்ற அழைப்பு ஓங்கார சுருதியாய் அவனிடமிருந்து எழுந்தது. தாய்மையால் பெற்ற அழகையும் முதிர்ச்சியையும் பூசி மெழுகியதுபோன்ற அவள் முகத்தில் அன்று அவனை அடிமைப் படுத்திய அதே நமுட்டுச் சிரிப்பு தேவனை வாசலில் அசையவொட்டாமல் நிறுத்தியது.

“வா தேவா!” என்று வாயும் மனமும் நிறைய அவள் அழைத்துக் கையை நீட்டியபோது அதைப் பற்றிக்கொண்டு தேவன் படியேறினான். இருவர் கைகளூடாகவும் உயிர்த்த சிலிர்ப்புகள் கண்களில் குபுக்கென நீரைத் தேக்கின. காலை வெயிலில் இளம் காற்றில் படபடக்கும் சேலை நுனி அவளுக்குச் சாமரை வீசியது. அவளின் நெற்றியில் முகிழ்த்திருந்த வியர்வை முத்துகள் ஒவ்வொன்றிலும் தன் முகம் தெரிந்ததைக் கண்டு அதிசயித்தான். தேவன் தன் விரல்களால் மிக அக்கறையுடன் அவற்றைத் துடைத்து, “நெடு நேரம் காத்திருந்தாயா, நித்யா, ஸாரி!” என்று கூறி அவளின் தயவுக்குக் காத்திருந்தவன்போல் நின்றான். அவள் பதிலுக்குத் தன் ஆள்காட்டி விரலால் அவன் வாயில் கையை வைத்து, “இல்லை தேவா, உன்னைக் காண இத்தனை ஆண்டுக் காலம் காத்திருந்தேனே, இந்தச் சில நிமிடங்களை மட்டுமா பொறுத்திருக்க முடியாது?” என்றாள்.

அவளுடைய இந்தப் பதிலிலால் இருபது ஆண்டுகள் இருபது விநாடிகளாகக் கரைந்துபோனதுபோன்ற உணர்வில் தன்னை மறந்த தேவன் நித்தியாவை நோக்கித் தன் கையை நீட்டவும் அவள் இன்னும் அருகில் வந்து அதனை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“அன்பே நித்யா, நீ திடீரென்று புறப்பட்டுப்போன அன்று புனிதா ஆன்டி எல்லாம் சொன்னாள். அப்போது ஏற்பட்ட மனக்கலக்கத்திலிருந்து இன்னும் நான் மீழவில்லை.”

“நீ நிச்சயம் கலங்குவாய் என அறிந்துதான் உன் மன ஆறுதலுக்கும் ஒரு செய்தியை சொல்லிவிட்டு வந்தேனே, தேவா.’

“நீ ஆன்டி மூலம் எனக்குச் சொன்ன செய்தியின் ஒவ்வொரு சொல்லும் என் மன ஆழத்தில் இன்றும் பத்திரமாகவே இருக்கிறது. அதைச் சொன்னபோது ஆன்டியே எவ்வளவு தூரம் ஆடிப்போனாளென்றால் என் நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஆனால் உன் அப்பாவும் அண்ணாவும் உன்னை வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்றபோது ஒரு துளி கண்ணீரும் சிந்தாமல் அவர்களுடன் போனாயாமே. இது எப்படி உன்னால் முடிந்தது என்பதுதான் எனக்கு இன்றுவரை விளங்காத புதிராக இருக்கிறது, நித்யா.” என அவன் ஆச்சரியம் தொனிக்கக் கூறியபோதும் அவன் கண்கள் மட்டும் எந்நேரத்திலும் குளமாகலாம் என்பதுபோல் தாழ்ந்தன.

நித்யாவின் நெஞ்சு சீராய் ஏறி இறங்கியது. அதுவரை மென்மையாய்த் தவழ்ந்து வந்த அவளின் சிரிப்பு இப்போது ஆயிரம் சிறு மணிகள் காலடியில் விழுந்து உருண்டதுபோல் சிலிர்த்து எட்டாத அர்த்தங்களை அவனுக்கு உணர்த்தியது. “அன்று நான் ஒரு துளி கண்ணீரும் சிந்தவில்லையேயென்று மனம் நொந்துபோனாயா, தேவா? ஆனால் உன்னை நினைத்து எனக்குள்ளேயே நான் எண்ணற்ற நாட்கள் அழுததை நீ அறிவாயா? எனக்குத் தங்களால் நிச்சயிக்கப்பட்டவரை அடுத்த நாள் அழைத்துவருவதாகவும் கொழும்பில் திருமணம் பதிவாகியதும் அவரோடு நான் நியூஸீலண்டுக்குப் பயணமாகவேண்டுமென்றும் அப்பா முதல் நாளே வந்து கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார். என்னை அதிகாரத்தால் அடிபணியவைத்துத் தமது விருப்பத்துக்குத் திருமணம் செய்து வைக்கலாமென்றுதான் அப்பாவும் அண்ணாவும் எனக்கு முன்பின் தெரியாத ஒருவரையும் கூட்டிக்கொண்டு அடுத்த நாள் வந்தார்கள். வீட்டில் அப்பாவுக்குப் பயந்து பயந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டேன். ஒரு நாளாவது “மகளே” என்று அழைத்து என்மீது அன்பு காட்டாத அப்பாவின் அதிகாரத்துக்கு அடங்கி நான் கோழையாகவே வளர்ந்தேன். எல்லாம் உன்னை நான் அறிந்துகொண்ட வரைக்கும்தான். அப்பா தனது முடிவுக்கு இசையாத என்னைப் பலவந்தமாகவாவது இழுத்துப்போகவேண்டுமென்ற தீர்மானத்தோடு எல்லா ஆயத்தங்களையும் முதலே செய்துவிட்டுத்தான் வந்தார். ஆனால் எனது திருமணம் அப்பாவின் அதிகாரத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக இருக்கக்கூடாது என்பதில் நான் தீர்க்கமாயிருந்தேன். ஆண்கள் பெண்ணுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளைப் பற்றித்தான் எல்லாரும் அலட்டிக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கிற உரிமை இருக்கவேண்டும் என்பதைப் பற்றி ஒருவரும் கவலைப்படுவதில்லை.

“என்னுடைய வாழ்வை நானே தீர்மானிப்பேன், அது உன்னோடு மட்டுமே என்ற வைராக்கியத்தோடுதான் அன்று இரவு உன்னை நான் வீட்டுக்கு வரச்சொன்னேன். அந்த இரவுதான் உனக்கும் எனக்கும் உள்ள உறவை உறுதிசெய்தது. இந்த உறவு என்னோடு உயிராகவும் தசையாகவும் இருக்கும்வரை இவர்களின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை. இவர்கள் தங்கள் அன்புக்குப் பதிலாக அதிகாரத்தை நிலை நாட்ட முயன்றார்கள். நானோ உனது அன்புக்கே அடைக்கலமானேன். இறுதியில் இவர்களின் எண்ணம் மட்டுமல்ல என் எண்ணமும் நிறைவேறியது. இதனால் அமைதியாகவே அவர்களுடன் சென்றேன். அன்றிலிருந்து உன்னை நான் மீண்டும் காண்பேன் என்ற நம்பிக்கையுடன்தான் என் நாட்களை எண்ணிகொண்டிருந்தேன், தேவா!”

“நாம் கடைசியாகச் சந்தித்த அந்த நாள் இருக்கிறதே, அதை நினைத்தபடிதான் நானும் இன்றுவரை உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்.” என குரல் தளதளக்கக் கூறினான் தேவன்.

“அந்த நினைவுகளில்தான் நானும் ஒவ்வொரு கணமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், தேவா.” நித்யாவின் முகத்திலும் சொல்லிலும் தோன்றிய உறுதியைத் தேவன் அவதானிக்கத் தவறவில்லை. பதிலுக்கு அவளையே நோக்கினான். அவனிடமிருந்த ஆவல் இன்னும் பன்மடங்கானது. தன் மனதிலுள்ளவற்றையெல்லாம் இப்போதே சொல்லிவிடவேண்டுமென்ற உந்துதலில் அவன் எதை முதல் சொல்வது எனத் தடுமாறியவன்போல் நின்றான். ஒரு சில விநாடிகள் மௌனத்தின் பின், “என் மனதில் இந்த நிமிடம் எழுகின்ற ஏக்கத்தைச் சொல்லவேண்டும்போலிருக்கிறது, நித்யா. அன்று உன்னோடு தொலைபேசியில் பேசிய நாளிலிருந்து உன் அணைப்புக்காக ஏங்கிகொண்டிருக்கிறேன்.” என்று அவளின் கண்களினூடே கூறியபடி அவளின் அணைப்பை வரவேற்பதுபோல் தன் கைகளை அவளை நோக்கி நீட்டினான்.

அடுத்த கணம் இருவரும் இறுகிய அணைப்பில் கட்டுண்டனர்; ஒரு ஜோடி இதயத் துடிப்புகளின் தாள லயத்தில் இருவரின் எண்ணங்களும் நர்த்தனமாடத் தொடங்கின. இருபது ஆண்டுக்காலமாய் உறைந்துபோய்க்கிடந்த பனி கால மாற்றத்தால் உருகிச் சிற்றாறாய்க் குன்றுகளிலிருந்து சிறுபிள்ளைபோல் குதித்து ஓடத் தொடங்கியதுபோல் இரு உடல்களின் ஆலிங்கனத்தில் மனங்கள் மட்டும் எப்படியோ தப்பிச் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. இந்த மனம்தான் எத்தனை விநோதமானது! இருவரின் பரஸ்பர அணைப்பில் சொற்கள் தொலைத்துபோவதுபற்றித் துயரப்படாமல், நேரம் ஓடுவதைக் கண்டு அவசரப்படாமல் தமக்குள் தனியான ஒர் உலகத்தைச் சிருஷ்டிப்பதிலேயே அக்கறைகொண்டிருக்கும். இது வெறும் உடல்களின் சங்கமிப்பாயிருக்கலாம் ஆனால் இருவரின் அணைப்பில் உண்டாகும் ஆனந்தமே உணர்வுகளின் ஆரம்ப வடிகாலாகிறதல்லவா? உடல் வேறு உள்ளம் வேறு என்று சிலர் சொல்வார்கள். உடல்களின் அணைப்பில் கிடைக்கும் ஆனத்தம் உள்ளத்துக்கும் ஆறுதலைத் தருகிறதே என்பதை ஏன் இவர்கள் எண்ணாமற் போனார்கள்?

எவ்வளவு நேரமாய் அந்த அணைப்பிலில் உலகை மறந்திருந்தோம் என அறியாத தேவன் திடீரென எதையோ நினைத்துக்கொண்டவன்போல் அதிலிருந்து விடுபட்டான். “நித்யா, இது எப்படி நியாயமாகும்” என அவளைக் கேள்வியால் இந்த உலகுக்கு மீளவைத்தான். அதற்கு அவள், “எதைச் சொல்கிறாய், தேவா?” எனச் சிரிப்புக்கிடையே கேட்டாள். “நீ இப்போது இன்னொருவரின் மனைவி!” தேவனின் சொற்கள் திடுக்கிட்டு விழித்தவனின் வாக்குமூலம்போல் எழுந்தன. ஆனால் அவன் எதிர்பார்த்த திகைப்பு அவளிடம் தோன்றவில்லை என்பதைக் கண்டபோது கண்கள் விரிய அவளை நோக்கினான்.

“நீ சொல்வது உண்மைதான், தேவா, ஆனால் நான் அப்பாவால் விலைக்கு வாங்கப்பட்டவருக்குக் கட்டாயமாக வாழ்க்கைப்பட்டவள். எத்தனை பெண்கள் வெளி உலகுக்கு மனைவியாகவும் உள்ளே மனக்குமுறலோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? நானும் அப்படி ஒருத்தியாகத்தான் ஆரம்பத்தில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆனால் உன்னுடைய நினைவில் மட்டுமல்ல நீ தொட்ட இடங்களிலும் நீ கண்ணுக்குப் புலப்படாமல் ஊர்ந்து எனக்கு ஆறுதல் தந்துகொண்டிருந்தாய். அந்த இனிமையான கணங்களோடுதான் நான் நேற்றுவரை காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன்.. நீ என்னைத் தேடிக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தியை அறிந்தபோதுதான் இந்த வாழ்வுக்குப் புதிய அர்த்தம் இருக்கிறதுபோலவும் நீ என்னருகில் நிற்பதுபோலவும் உணர ஆரம்பித்தேன்.

“அப்போ உன்னை ஒன்று கேட்பேன் நித்யா.”

“சொல்லு தேவா.”

“இனி என்னோடு வந்துவிடலாம், நித்யா!”

அருகில் வந்த நித்யா தன் முகத்தைத் தேவனின் முகத்துக்கு நேராய் உயர்த்தி தனது ஒவ்வொரு சொல்லுக்கும் இசை வடிவம் கொடுத்தாள், “நான் அந்தக் கடைசிச் சந்திப்பிலிருந்தே உன்னோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், தேவா.”

தலையைக் குனிந்து அவளை ஏறிட்டுப் பார்த்த தேவன், “நாம் மனதளவில் ஒன்றாய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடும்பமாய் வாழலாம் வாவென்று கேட்கிறேன், நித்யா?” அவன் கை நீட்டி இரப்பதுபோல் கேட்டான்.

தேவனின் இந்தக் கேள்வியை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவள்போல் நிதானமான பதில் அவளிடமிருந்து வந்தது. “அதில் அர்த்தமே இல்லை தேவா. நான் இன்னொரு உலகத்தில் வாழ்ந்தாலும் அதனோடு ஐக்கியமாகிவிடவில்லை. மணவாழ்வுக்கு மனம்தானே முக்கியம்? மனதாலும் வாழ்ந்து மணவாழ்வைச் சிறப்பிக்கமுடியாதா?. முடியுமென்று காட்டுவோம். ஆகவே என்னை நான் இப்போது வாழும் இந்த உலகத்திலிருந்தும் கடமையிலிருந்தும் பிரிக்க முனையாதே, தேவா.”

“உன் நினைவாகவே நான் தனியனாக இத்தனை காலமும் வாழ்ந்தேனே! உன்னை மீண்டும் காண்பேன், கூடி வாழ்வேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒவ்வொரு விநாடியையும் கழித்தேன், நித்யா. அந்த நேரமும் வந்தது, நீ மட்டும் ஏனோ என்னோடு வாழ மறுக்கிறாயே!”

“இல்லை, தேவா. இந்தக் கணத்திலிருந்துதான் எமது வாழ்வில் புது அர்த்தத்தை உணரப்போகிறோம். திரும்பவும் சொல்கிறேன், நான் ஒவ்வொரு விநாடியும் உன்னோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் வேண்டும் போதெல்லாம் உன் குரல் என் வீட்டில் ஒலிக்கிறது. உன் ஸ்பரிசத்தை நான் விரும்பியபோதெல்லாம் உணர்கிறேன். இந்த வாழ்வை என்னிடமிருந்து பறிக்க முனையாதே, தேவா. இந்த இருபது வருடங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம். என்னை எண்ணி நீ மணமாகாமலே இருக்கிறாய். நான் மணமாகியும் மனதால் உன்னோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னை நீ இனியும் பலமுறை காணவிரும்பினால், இதுபோலவே என் கைகளை நீ பிடிக்கவும் என்னை அணைக்கவும் விரும்பினால் இப்படியே என்னை இருக்கவிடு. நீ தொட்ட இந்தக் கைகள், சாய்ந்த என் நெஞ்சு, அணைத்தபடி துயின்ற இந்த உடம்பு எல்லாமே உன்னுடையவைதான். இவற்றை நீ எப்போதும் எடுத்துக்கொள்ளலாம். வா, தேவா, இதோ நீ தேடியவள், உன் உயிரோடு இணைந்தவள் உன் முன்னால்தான் இருக்கிறாள். எத்தனைமுறை வேண்டுமானாலும் என்னை இறுக அணைத்துக்கொள், உன் அன்பால் என்னைத் திக்குமுக்காடச் செய். எல்லாவற்றுக்கும் நான் சம்மதமே. திருமணமான பெண் இப்படி எண்ணக்கூடாது என்று சொல்வார்கள் சிலர். எவரும் எந்த நியாயத்தையும் சொல்லட்டும், சமயத்தையும் சம்பிரதாயத்தையும் சாட்சிக்களைக்கட்டும், சட்டப் புத்தகங்களைத் தாராளமாகப் புரட்டட்டும், புராணக் கதைகளை அவிழ்த்து விடட்டும். நான் விரும்பியவனை விட்டு என்னைப் பிரிக்கவேண்டுமென எனது குடும்பமே சதி செய்து முகமறியாதவனுடன் என்னை வலுக்கட்டாயமாக வாழவைத்தது. ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்குத் தெரியாமல் போனது. உன்னுடைய அறிவுக்கு எட்டாமல் அவர்கள் இழுத்துச்சென்றது இந்த உடம்பை மட்டுமே. எனது உள்ளத்தையல்ல, தேவா. பெண்ணின் மனதைப் புரிந்துகொள்ள விடாப்பிடியாக மறுக்கும் இந்தச் சமூகத்தின் சட்டங்களை நான் மதிக்கப்போவதில்லை!”

தான் இதுவரை அறிந்திராத புதிர்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக்கொண்டிருந்த நித்யாவின் முகத்தில் சாந்தமும் அழகும் படிப்படியாகப் பொலியத் தொடங்கியதை தேவன் அவதானித்தான்.

நீ என்னையும் மகனையும் சந்திக்க வந்தாயே, இந்த அனுபவமே மிச்சமாயுள்ள என் ஆயுள் முழுவதும் நாளும் பொழுதும் நினைந்து, மகிழ்ந்து வாழப் போதும், தேவா! மகன் அங்கே மேலே இருக்கிறான்.” என்று கூறிய நித்யா மாடியை நோக்கிக் கூப்பிட்டாள்.

“ராகுல்…!”

“வாறனம்மா!” மாடியிலிருந்து ஒரு டீன் ஏஜரின் குரல் கணீரென ஒலித்தது.

அது முன்னர் எங்கேயோ கேட்ட குரல் போலவும் அக் குரலுக்குரியவனுடன் பலகாலம் பழக்கம் கொண்டவன்போலவும் தேவன் திடீரென உணர்ந்தான்.

மாடிப்படிகளில் இறங்கிவந்துகொண்டிருந்த பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் தேவனை மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்கினான்.

“அம்மா, நீங்கள் சொன்ன தேவன்.. ஆ… தேவன் அங்கிள்?”

“ஓமோம், நான் சொன்ன தேவன். உன்னைப் பார்க்க வந்திருக்கிறார். என்னையும்தான்.”

ராகுல் தன் இளமைச் சிரிப்பால் தேவனை வசீகரித்தான்.

“கிளாட் டூ மீட் யூ, அங்கிள்” என்று முகமெல்லாம் மலரக் கையை நீட்டினான்.

தேவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. ராகுலின் நீட்டிய கரங்களைத் தாண்டி தன்னிரு கரங்களையும் அகல விரித்து அவனைத் தழுவிக்கொண்டான். ராகுல் இதை எதிர்பார்க்கவில்லை. திடீரெனக் கிடைத்த அணைப்பின் சுகத்தில் கட்டுண்டு கிடந்தான். தேவன் தன் கரங்களை எடுத்து ராகுலை விடுவித்தபோது அவனின் கண்கள் நீரில் மிதந்தன.

ராகுல்! நான் சின்ன வயதில் இருந்ததுபோலவே அரும்பும் மீசையும் கண்களில் கனவுமாக… தேவனின் இதயத் துடிப்பு அவனுடைய காதுகளிலேயே மோதி அதிர்ந்தது.

ஒரு சில அடி தூரத்தில் நின்றிருந்த நித்யாவின் அருகில் போய் மென்மையான குரலில்,

“உண்மையாகவா நித்யா? இவன்…?” ஆனந்தமும் ஆச்சரியமும் குபீரிட்டதால் முகம் சிவந்துபோன் தேவனின் நாக்கில் சொற்கள் தடுமாறின. மனம் படபடக்க, நினைத்ததைச் சொல்லத் தைரியம் இழந்தவனாய் நாக்குழற நின்றான்.

தேவன் மனதிலிருந்தது எதுவென அறிந்துகொண்டவள்போல் நித்யா குறுக்கிட்டாள், “ஆம் தேவா, ராகுல் உனது மகன்தான்!” அதே நமுட்டுச் சிரிப்பும் ஆயிரம் அர்த்தங்களும்!

———–

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம்கற்றுக்குட்டிக் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *