பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்

This entry is part 17 of 29 in the series 23 ஜூன் 2013

முனைவர் மு.பழனியப்பன்,

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை,

திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. திருக்குறளின் இரு அடிகளை விரிக்கலாம். ஒரு அடியை விரிக்கலாம். ஒரு சொல்லை விரிக்கலாம். இப்படி விரிந்து கொண்டே போகின்றபோது திருக்குறளுக்கு தரப்பெறுகின்ற பொருள் கடல்போல் விரிந்து படிப்பவர் முன் நிற்கின்றது.

திருக்குறள் கருத்துக்களை உளவியல் அடிப்படையில் விரித்துக் காண முனைவர் அர. வெங்கடாசலம் முயன்றுள்ளார். அவரின் திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை என்ற நூல் இத்தகு முயற்சியில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. உளவியல் அடிப்படையில் அமைந்த விரிவுரை என்ற அடிப்படையை அர. வெங்கடாசலம் அவர்கள் இந்நூலில் சுட்டியிருந்தாலும் வள்ளுவ ஆன்மீகம் என்ற தனிப்பாதையை அவர் இந்நூலுக்குள் கொண்டு வந்துச் சேர்த்திருக்கிறார்.

~~திருவள்ளுவர் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் காலம் என்று கூறுகிறார். எதைப் பற்றிய பயிற்சி? மனிதனின் ஆன்மாவைப் கடவுளர் உலகு புகுவதற்குப் பக்குவப்படுத்தும் பயிற்சி. மனிதனின் உயிர் அல்லது ஆன்மா கடவுளர் உலகினை அடைந்து பேரானந்தத்தை அடைய வேண்டுமெனில் அது அதற்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். திருக்குறள் முழுவதும் கூறப்படும் அறவழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால் ஒருவனுடைய ஆன்மா அவ்வாறான செம்மையை எய்தும். இவ்வுலகமும் பொருள்களும் அப்பயிற்சிக்கான களங்களும் பொருள்களுமாகும். || (ப.134) என்று வள்ளுவ ஆன்மீகத்தைத் தெளிவுபடுத்துகிறார் அர. வெங்கடாசலம்.

மனிதன் பயிற்சிக் காலத்தில் வாழ்கிறான். அவன் பயிற்சிக்காலத்தில் பயிலவேண்டிய நூல், பாத்திட்டம் திருக்குறளாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மனித ஆன்மா தற்போது உள்ள நிலையைவிட மேன்மையான நிலையை அடையும் என்பதே இந்நூல் தரும் உண்மையாகும். அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் ~~விண்ணுலக வாழ்க்கைக்குத் தகுதிபெற மண்ணுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் களம்! திருக்குறளில் வரும் 1330 குறட்பாக்களும் பயிற்சிக்கான சிலபஸ். இதுதான் திருக்குறளின் பொருள்.|| (ப. 136) என்பது இந்நூலாசிரியரின் வாய்மொழி.

திருக்குறளை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஆசிரியர் எண்ணுகிறார். ~~திருக்குறள் வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கும் ஓர் அற்புதமான நூல். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகக் கல்வியைத் தரும் நூல். தமிழ் இளைஞர்களுக்கு மிகச் சிறுவயதிலேயே திருக்குறளோ நெருங்கிய உறவை ஏற்படுத்திவிட்டால் அவ்வுறவு அவர்களை அறவழியில் நடத்தும்||( ப. 149)

இவ்வகையில் திருக்குறள் காட்டும் ஆன்மீக வாழ்வினை திருக்குறளில் இடம்பெறும் ஐநூறு திருக்குறள்களுக்குமேல் எடுத்துக்காட்டி இவர் திருக்குறளைச் செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின் வழியில் இந்தச் சமுகம் திருக்குறளை எண்ணினால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற எல்லையில் படிப்போர் அனைவரும் வள்ளுவக்குடியினராக ஆகிவிடுவோம். தமிழ் மொழி அழியும் தருவாயில் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறும்போது மனம் வருந்துகிறது. ஆனால் சாதியும் மதமும் இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று கணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றபோது உள்ளம் இப்போதே மகிழ்கிறது. அப்படி ஒரு சாதி, சமய மற்ற சமத்துவ சமுதாயத்தைக் கொண்டு வருவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் திருக்குறளைத் தவிர நிலையான நியாயமான நூல் தமிழர்க்கு இல்லை என்பதை ஏற்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

பேராசிரியர் அர. வெங்கடாசலம் ஏறக்குறைய பாதியளவில் திருக்குறள்களை எடுத்துக் கொண்டு உரை கண்டுள்ளார். மீதப்பாதியை விடுத்ததற்கான காரணம் படிக்கும் வாசகரை அவ்வழியல் தூண்டி அவரை எழுதச் செய்ய, நினைக்க செய்ய வேண்டிய கடப்பாடாக இருக்கலாம்.

குறிப்பாக திருக்குறளின் முதல் குறளை விடுத்துள்ளார். கடவுள் வாழ்த்துப் பகுதியில் பல குறள்களை விடுத்துள்ளார். இந்த விடுதல்கள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அவரின் தேர்ந்தெடுத்தல் முறையில் அவருக்கான விடுதலை இருக்கிறது என்று அமைதி கொண்டாலும், வள்ளுவ ஆன்மீகத்தில் மதக்குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றிற்கு இடமில்லை என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் கடவுள் வாழ்த்தில் பல பகுதிகளை விட்டதற்கான காரணம் புலப்படுகிறது.

பல அதிகாரங்களை அப்படியே பத்துக் குறள்களுக்கும் விளக்கம் தந்து முழுமைப் பத்தியுள்ளார். இப்பத்துக் குறள்களும் விடமுடியாத அளவிற்கு பெருமைக்கு உரியன என்பது இதன்வழி தெரியவருகின்றது. ஒழுக்கமுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, கண்ணோட்டம், வினைத்தூய்மை, வினை செயல்வகை, தெரிந்துவினையாடல், வெருவந்த செய்யாமை போன்ற பல அதிகாரங்கள் இவ்வகையில் முழுமையான இவரின் உரை வீச்சுக் களமாகியுள்ளன. இவ்வதிகாரங்களே இன்றைய நிலையில் அதிகம் வேண்டத்தகுவன என்பது இங்குப் பெறத்தக்கக் குறிப்பாகும்.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு (351)

என்ற குறளுக்கு ~~ஈகோவிற்குத் தீனி போடும் ஐம்புலன்களின் நுகர்பொருளை அவற்றின் பயன்பாடென்ன என்ற அடிப்படையில் அவை நம் ஏவல்களென்பதை மறந்து அவற்றையே பற்றுக் கோடாக நம் எஜமானர்களாக உண்மைப் பொருள்களாகக் கொண்டு இயங்கும் போக்கு இப்பிறப்பே இழிவான பிறப்பு என்று கருதுமளவுக்கு மீளமுடியாத துன்பங்களுக்கு இடம் கொடுத்து விடுகின்றது|| என்று உளவியல் சார்;ந்த உரையை வெங்கடாசலம் தருகின்றார்.

அங்காங்கே ஈகோ, சூப்பர் ஈகோ ஆகியன முளைவிட்டு உரையில் கிளம்புகின்றன. இருப்பினும் ஆன்மீகத் தேடல் என்பது இந்நூல் முழுவதும் உலவுகின்றது.

குடிசெயல்வகை என்ற அதிகாரத்தில்

~~குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும் (1023)

என்ற குறள் இடம்பெற்றுள்ளது. இதற்குப் பொருள் அளிக்கிறார் வெங்கடாசலம். ~~ என் குடும்பத்திற்கு ஆவன செய்வேன் என்று முனைந்து முயல்பவனுக்குக் கடவுள் தானே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்து உதவி செய்வான் என்று பொருள் கூறப்படுகிறது. ஆனால் நான் ஊழ் அதிகாரத்தில் கடவுள் தலையிடுவதில்லை. ஆனால் வேண்டியதைச் செய்து வைத்து உள்ளார் என எடுத்துக் கொள்ளவேண்டும். கண்ணோட்டம், ஒப்புரவு, நடுவுநிலைமை, அருளுடைமை ஆகிய பண்புகளை மனித இனத்திற்கு வழங்கி உள்ளார். அவை செயல்படுவதன் மூலம் குடும்பத்தைக் காத்தே தீர்வேன் என்று சூளுரைக்கும் ஒருவனுக்கு உதவி வந்து சேரும். அக்குடும்பத்தில் இருப்பவர் யாரேனும் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்வர். அது கடவுளின் உதவி என்றே கொள்ள வேண்டும்.

இவர் தரும் இவ்வுரையில் முன் உரையெழுதியவர்கள் உரையை இவர் கற்றுள்ளார் என்பது தெரியவருகிறது. சில இடங்களில் மற்ற உரையாளர்களின் உரையை மறுத்துள்ளார். அதற்கும் சான்றுகள் உள்ளன. (வெள்ளத்து அனைய மலர்நீட்டம் குறளுக்குத் தரப்பட்ட உரை) சில இடங்களில் மரபு உரைக்கு உறுதியளித்தல் என்ற பாங்கும் செயல்படுகிறது. அதற்கு மேற்குறள் சான்று.

மனம் அமைதி கொள்ளும் வகையில் பல உரைப்பகுதிகள் அமைந்துள்ளன.

~~ அதிகமான பொறுமையினாலோ அல்லது ஆணவத்தினாலோ ஒருவர் நமக்கு அளவு கடந்து தீங்கு செய்துவிட்டபோதிலும் நாம் அந்தத் தீங்கு நம்மைக் கீழ்மைப்படுத்திவிட்டதாக எடுத்துக் கொள்ளாமல் அவருடைய தவறு என்று எடுத்துக்கொள்வதின் மூலம் பொறுமை காத்து அவரை வென்றுவிடலாம். நம்முடைய தகுதி என்பது மற்றவர்களுடைய கூற்றால் நிர்ணயிக்கப்படுவதன்று. நம்முடைய செயல்களாலும் அடைவுகளாலும் நிர்ணயிக்கப்படுவது என்பதில் உறுதியாக நின்று பிறறால் அவமானப் படுத்தப்படும்போது நாம் அதை மனதளவில் ஏற்கமறுத்தால் நம்மால் பொறுமை காக்கமுடியும்.நம்முடைய பொறுமையினால் எதிராளி தம் நோக்கத்தைக் கைவிட்டுச் சில வேளைகளில் நம்மிடம் மன்னிப்புகூடக் கேட்கலாம் என்ற இந்த உரை ஆழமான பொறுமைக்கான உரையாக அமைகின்றது. இப்பகுதி மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவிடல் என்ற குறளுக்கு வரையப் பெற்ற உரையாகும். மனம் சார்ந்த இந்த உரை மின்னல் படிப்பவர்க்குப் புத்தொளி தருவது.

இதுபோன்ற பற்பல மின்னல் கீற்றுக்கள் இவ்வுரையில் உண்டு. திருக்குறள் சார்ந்து இயங்குபவர்கள், திருக்குறளைப் பரப்பும் நண்பர்கள், தோழர்கள் இந்நூலைப் படித்து இன்னும் பயன் பெறலாம். முடிந்தால் பேராசிரியர் அர. வெங்கடாசலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவரிடம் பழகலாம். கலந்துரையாடலாம். அவரை நம் ஊருக்குப் பேச அழைக்கலாம் . தொண்டுகள் செய்யக் காத்திருக்கும் அவரை நாம் இனம் காணுவோம். பயன்படுத்துவோம். வள்ளுவக்குடியில் செயலாற்றுவோம். (தொடர்பிற்கு – பேராசிரியர் அர. வெங்கடாசலம்> ஏ. 19. வாஸ்வானி பெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்சன், பெங்களுரூ. 560048

Series Navigationப.மதியழகன் கவிதைகள்கவிதைகள்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Venkatachalam says:

    நண்பர் முனைவர் மு.பழனியப்பன் அவர்களுடைய நேரத்திற்கும் உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் என்பால் கொண்டுள்ள அன்புக்கும் நன்றி. என்னுடைய தொலைபேசி எண் தருவது நலம் பயக்கும் என்று கருதி அதனை இங்கு தந்துள்ளேன்.
    09886406695

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *