கவிகங்கையின் ஞானஅனுபவம்

This entry is part 8 of 25 in the series 7 ஜூலை 2013

 

 

தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர்

 

கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத்  திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம் வெளிப்படும். சான்றோர் கவிதைகளைக்  கவிஞர் ஆராய்ந்தால் என்ன வெளிப்படும்? கவிதைகளில் சொற்கள் இருக்கும். பொருள், அணி, யாப்பு இருக்கும். இவற்றைத் தாண்டி, கவிதைகளில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் போன்ற பல அறியப்படாதன புதைந்திருக்கலாம். இவற்றை எல்லாம் வெளிப்படுத்தி நிற்கும் எழுத்திற்கு என்ன பெயர் தரலாம்?

இப்படி அடுக்கிய கேள்விகளுக்கு பதில் ஒன்றுதான். அருட்கவி கு. செ. இராமசாமி என்பதுதான் அந்த பதில். இவர்தான் கட்டுரையைக் கவிதையாக எழுதுபவர். இவர் படைக்கும் கட்டுரைகளில்; திறனாய்வாளர்களால் கண்டுணரப்படாத கவித்துவம் வெளிப்பட்டு நிற்கின்றது. தன்னுடைய எழுத்தில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் எல்லாவற்றையும் உருவேற்றித் தருகின்ற உன்னதமான சொற்சாகசக்காரர்;.  இவரின் ஆக்கங்களுக்கு “அருள்மணக்கும் எழுத்துகள்” என்று பெயர் தரலாம். எழுதும் இவருள்ளும் அருள் மணக்கும். படிக்கும் நம் உள்ளத்திலும் அருள் மணக்கும். மொத்தத்தில் உலகத்திற்கே அருள்மணக்கும் எழுத்துக்களை வற்றாத ஜீவகங்கையாக சிவகங்கையில் இருந்து எழுதிவரும் கவிகங்கை இவர்.

சொல்ல வந்ததை எளிமையாக, வெற்றுச்சொல் கலவாமல் கூர்மையுடன் தரும் தனிவகை எழுத்து இவருடையது. அவ்வப்போது பல இதழ்களில் எழுதிய நாற்பத்தோரு கட்டுரைகள் “நல்லதமிழ் ஞானத்தமிழ்” என்று நூல்வடிவில் வருவது உலகை அருள்மணக்க வைப்பதற்கான முயற்சியாகும்.

இந்நூலில் உள்ள இவரின் ஞானத்தமிழ்க் கட்டுரைகளில் இராமாயணம், பாகவதம், பாரதம், கந்தபுராணம், திவ்யபிரபந்தம், திருவாசகம், தேவாரம் போன்றனவும், பட்டினத்தார், அருணகிரியார், குமரகுருபரர் போன்றோரின் பாடல்களும், தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் தோன்றுகின்றன. இவைதவிர சோதிட ஆராய்ச்சிக் குறிப்புகள், அறிவியல் சிந்தனைகள், அறவியல் சிந்தனைகள், பக்திமார்க்கம், மந்திர உச்சாடனம், வரலாற்றுச் சிந்தனைகள் போன்ற பற்பல செய்திகளின் கருவூலமாக இக்கட்டுரைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.  சிந்தனையும், சிரிப்புமாக நகரும் கட்டுரைகள் படிப்போர்க்குப் புதுவகை இன்பம் தருவன.

சிவச்சின்னங்களை முதல் மூன்றுகட்டுரைகள் விளக்குகின்றன. திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாட்சரம் என்ற மூன்றின் நீள, அகலங்களை விளக்கும் இவைகள் ஞானத்தமிழ் நூலுக்கு நுழைவாயிலாக அமைகின்றன. ”குருமுகமாய்க் கிடைத்த மந்திரத்தை ஒருமுகமாய் இருந்து உருவேற்றுதல் ஜபயோகம். வரையறையின்றி உருவேற்றினால் அது தவம். வரையறை செய்து கொண்டு உருவேற்றினால் அது ஜபம்” என்ற இவரின் விளக்கத்தால் எளியோருக்கு ஜபயோகம், தவம், ஜபம் புரிந்துபோகின்றன. தொடரும் விநாயகர், முருகன் குறித்த கட்டுரைகள் சிவகுடும்பத்தில் நம்மையும் ஒன்றுசேர்ப்பன. சிவோகம் சாமியார் பற்றிய  கட்டுரை ஞானிகளின் இயல்பை உணர்த்துகின்றது. இந்தக் கட்டுரையைப் படிக்கையில் ஞானிகள் உலக இயல்புக்கு மாறானவர்கள் என்ற கருத்து விளங்குகிறது. ஞானிகள் உலக உயிர்களைக் காப்பதில் கவனம் செலுத்துபவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

திருவரங்கத்துப்பெருமாள் அழகை ஆராதிக்கும் கட்டுரை”உறங்காவில்லிதாசர்”. ”சாதி மதங்களைப் பாரோம்” என்ற அடிப்பொருளில் இந்நூல் செல்லுகின்றது என்பதற்கு இந்தக் கட்டுரையும் ”சாதிக்கு அப்பாற்பட்ட சமுதாயம்” என்ற கட்டுரையும் நல்ல சான்றுகள்.  சம்பந்தரின் முதல்பதிகமான ”வேயுறு தோளிபங்கன்” என்ற தொடக்கமுடைய பாடலைப் பாடி எந்தச் செயலைச் செய்தாலும் வெற்றிமுகம்தான் என்று படிப்பவரின் இன்னலைத் தீர்க்கிறார் இந்நூலாசிரியர். இப்பதிகத்தின் அடுத்த பாடல் உரையாளர்களுக்கு சவால்விடும் பாடல். ஒன்பதொடு ஒன்றொடு ஏழு என்ற இந்தப் பாடல்தொடருக்கு உண்மைப் பொருளைக் காட்டியிருக்கும் இவரின் அருட்கொடை ஞானத்தமிழுக்கு வளம் சேர்ப்பதாகும்.

நினைந்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும் ஆனந்தத் தேன்சொரியும் பரம்பொருளின் திருவடிகளை மாணிக்கவாசகர் கண்ட முறைப்படி ”ஆனந்தத்தேன்” என்ற கட்டுரை எடுத்துரைக்கின்றது. கச்சிஏகம்பனை, கள்ளக் கம்பனாகக் கண்ட  சுந்தரத்தமிழ் அருட்கவியாரால் இனம் கண்டுகொள்ளப் பெற்றுள்ளது.

தற்பெருமை கொள்ளாதவன் அனுமன் என்று விஸ்வரூப  அனுமனின் புகழ்பாடுகிறது மற்றொரு கட்டுரை. எழுத்தாளர் பாலகுமாரனுக்குப் பதில் தருவதாக ஜோதிடம் பற்றிய மற்றொரு கட்டுரை. ஒன்றுக்கு ஒன்பது பொருளைத் தருவன ”இட்டுக் கெட்டவன்” என்ற கட்டுரையும் ”பித்தன் மேல் விழுந்த பிரம்படி” என்ற கட்டுரையும். சப்த மாதர்கள் பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் உள்ள அரிய பொக்கிஷம். சப்த மாதர்களின் சிறப்பையும் வழிபாட்டையும் சக்தி உபாசகராக இருந்து இவர் அறிவிக்கிறார்;. இக்கட்டுரையைப் படிப்பவரின் உடல் முறுக்கேறுகிறது என்றால் எழுதியவரின் கரங்களில் எத்தனை சக்தி இருந்து செயல் பெற்றிருக்க வேண்டும்.

பட்டினத்தாரின் புகழைப் பேசும் கட்டுரை ”சிறைமீட்ட செந்தமிழ்” ‘‘வைத்தியநாதர், வயிரவர்” இவர்கள் மேல் பாடப்பெற்றுள்ள பதிகங்கள் இந்நூலின் சக்தியை அதிகரிக்கின்றன. நுழைவாயிலில் முக்கண்ணன் புகழ்பாடிய ஆசிரியர் நூல்நிறைவில் முக்கண்ணுடைய தேங்காயைப் பற்றிய செய்திகளை விரித்துரைக்கிறார். தெய்வ ஆராதனையில் தேங்காய் நிறைவில் வரும். இத்தொகுப்பையும் அதுவே நிறைவிக்கின்றது.

துவண்டு கிடக்கும் மனிதனை, பக்தனை ”நான் இருக்கிறேன் எழு, நம்பிக்கை தரும் என் எழுத்து இருக்கிறது” என்று சொல்லும் இனிய பதங்களால் ஆன கட்டுரைகளால் நூல் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

நாள்தோறும் எழுதுவதே தொழில் என்று அதிகாலையில் எழுந்து எழுதிவருபவர், தன்னை நாடி வருபவர்களைத் தன் மனத்தாலும், சொல்லாலும், தமிழாலும், சோதிட நுட்பத்தாலும் தாங்கி, சமுதாயப் பெருவெளியில் அவர்கள் நலமோடு, வளமோடு வாழ நம்பிக்கை விதைகளை அவர்களுக்குள் நடுநிசி வரை நட்டுவருபவர் அருட்கவி கு. செ. இராமசாமி;.

பிறந்தது மாணிக்கவாசக மண்ணில். கற்றது காரைக்குடி மண்ணில். நடத்தியது நடந்தது மன்னை, புதுகை, கங்கை மண்ணில். புரந்தது சிவகங்கை மன்னர் வள்ளன்மை. என்றும் இருப்பது பழகியோர் நெஞ்சில்.

உண்பது உள்ளங்கை அன்னம். உடுப்பது துவராடை. படுப்பது வீட்டின் வெளியில். ஆங்கிலமும், தமிழும், சம்ஸ்கிருதமும் இவருள் துள்ளிவிளையாடும். எழுபது வயதிலும் மேற்சொன்ன அத்தனையும் இவரை இளமையாக என்றும் வைத்திருக்கின்றன. இதனால் இவர் தமிழும் இளமையாய் இருக்கிறது. இனிமையாய் இருக்கிறது.

இவரின் இளமையை, இனிமையை நிலைநிறுத்த நாம் கரம் சேர்ப்போம். இவரின் அடுக்கிய நூல்களை வாங்கி வாசிப்போம். நண்பர்களுக்கு வாங்கித்தருவோம். நூலகங்களுக்குப் பரிசளிப்போம். உதவுவோம் உயர்வோம்.

கு.செ. இராமசாமி அவர்களின் நூலினை வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 9994642529

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *