டௌரி தராத கௌரி …கல்யாணம்.! – 12

This entry is part 11 of 30 in the series 28 ஜூலை 2013
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை

என்ன….கௌரி…அப்படியே ஷாக்காயிட்டே….இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..?

ஒ…இது…..அந்தக் கடிதம்…பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட…..கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது….ம்ம்ம்….என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப  தாங்க்ஸ்…அத இப்படி கொடு…என்று கையை நீட்டுகிறாள்.

இந்தா…என்றவன் கடிதத்தை அவளிடம்  கொடுத்துவிட்டு, இப்போ சொன்னியே ஒரு காரணமில்லாமல் எந்த ஒரு காரியமும் ஒருத்தரோட வாழ்க்கையில நடக்கறதே இல்லைன்னு…..அதுக்கும் இதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா கௌரி..?

இதுக்கும்….எதுக்கும் என்று கேட்டுக் கொண்டே அந்தக் கடிதத்தை மடித்து தனது பர்ஸுக்குள் வைத்துக் கொள்கிறாள்.

அடிக்கடி உன்னோட டெல்லி ட்ரிப், ஏதோ சாக்கு சொல்லிண்டு  அங்கயே ரெண்டு நாள் டேரா போட்டது, அந்த ஐ வாஷ் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…ஏன்…இவ்ளோ பொய்….? அதான் உங்க ஆபீஸ் ஜீவா சொல்லிட்டாரே உங்களுக்கு அந்த டெல்லி ப்ராஜெக்ட் கிடைக்கவே இல்லையாம்….நீ டெல்லி போறதே உன்னோட பர்சனல் விஷயமாத் தான்னு….அத்தோட இந்த லெட்டர் வேற …..இதையெல்லாம் வெச்சுப் பார்த்தால் என் அம்மா….. சொல்றதெல்லாம்,சந்தேகப்படறதெல்லாம் சரிதான்னு தோணறது.இப்பக் கூடப் பாரேன் நீ அந்த பிரசாத் பத்தியோ இந்த லெட்டர் பத்தியோ இது நாள் வரை என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை…என்னமோ நீ மட்டும் தான் ரொம்ப ரொம்ப நல்லவள் மாதிரியும் நான் உன்னை ஏமாத்தினா மாதிரியும் இப்பப் பேசறே….சம் வாட்…..ஐ டோன்ட் லைக் திஸ்….!

கார்த்திக்கின் ஒவ்வொரு வார்த்தையும் கௌரியின் இதயத்தைச் சாட்டையால் அடித்தது போலிருந்தது.

அப்போ..நீ என்னை சந்தேகப்படக்கூட ஆரம்பிட்ச்சுட்டே..அப்டித்தானே..ஸ்ஸ்ஸ்..இதே வார்த்தையை என்னைப் பார்த்து யார் பேசி இருந்தாலும்…ஏன்..அந்த ஜீவா பேசி இருந்தால் கூட நான் சுத்தமா கேர் பண்ணியிருக்க மாட்டேன்…இல்லைன்னா ஒரு அரை விட்டுட்டு போயிருவேன் ..கேவலம் ஒரு பொறம்போக்கு….அவனோட பேச்சைக் கணக்குல வெச்சுண்டு ..நீ….உன் மனசுல இத்தனை கேள்விகளை சுமக்கறே …..எஸ்…ஐ ஜஸ்ட் கான்ட் டாலரேட் திஸ்…!  உன்னோட இது மாதிரியான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை.உனக்கு எப்படித் தோண்றதோ அப்படியெல்லாம்  நினைச்சுக்கோ.ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்…!

ஆனால் சில தவறுகள் இதயத்தில் கல்வெட்டு மாதிரி பதிஞ்சுடும். அதைச் சுமந்துண்டு வாழறதே ரொம்பக் கஷ்டம்..! அதை அழிக்கவோ, மறைக்கவோ, திருத்தவோ முடியாது.அது இதயத்தில் தழும்பாக் கூட மாறாது….அப்படியே ரணமாவே  இருக்கும்..நீ அதைப் புரிஞ்சுக்கோ கார்த்தி, இப்பவும் சொல்றேன்….நீ பண்ணின காரியத்தை சரிபண்ண  என் மேல் தவறான பழியை சுமத்துறியே இது உனக்கே சரியா இருக்கா?  அதைத் தான் என்னால ஜீரணிச்சுக்க முடியலை……!

ஒருவேளை நானே உன்னை வெறுத்து ஒதுங்கினால் மட்டுமே உன்னால் லாவண்யாவுக்கு  உண்மையாக இருக்க முடியும்ங்கற ஏதோ ஒரு குற்ற உணர்வில் கூட என்னைப் பார்த்து நீ இப்படி சொல்றியா?  உனக்கு நினைவு இருக்கலாம்.அன்னிக்கு…என் அம்மாவுக்கு ஒரு துணை வேணும்னு நான் சொன்னதைக் கூட மனசார  ஆதரிச்சவன் நீ..! உன்னால எப்டிடா…இப்படியெல்லாம்….பேச முடியறது?

அதான் சொல்றேன்…..உன் அம்மாவுக்கே…. இன்னொரு துணை தேடத் துணிந்தவளாச்சே  நீ…..!உனக்கு அந்த பிரசாத் மட்டும்…..எப்படிப்…..

கார்த்தி வார்த்தையை முடிக்கவில்லை….கௌரி வெகுண்டாள்.

ஷட் அப்..அண்ட் மைண்ட் யுவர் டங் ..! இனி….. ஒரு….. வார்த்தை என்கிட்ட பேசாதே நீ…! எவரிதிங் பினிஷ்ட்… கெட் லாஸ்ட்…!

ஐயோ பாவம் லாவண்யா….ஐ பிட்டி ஆன் ஹெர் …என்னைப் பொருத்தவரையில் நீயும்….அந்த கிரீஷும் …ஒண்ணு தான். யூ டூ சீட்..! உன்கிட்ட இனிமேல் எனக்கென்ன பேச்சு.

அதுக்காக நீ….நாளைக்கு சன் நியூஸில்  “பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  பெண் அதிகாரி காதல் தோல்வியால் எட்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை ” ன்னு  ஹெட்லைன்ஸ் எதிர்பார்க்காதே. குட் பை…என்றவள் விருட்டென்று எழுந்து மணலைத் தட்டிவிட்டு அவனை விட்டு விடு விடென்று எட்டி நடக்க ஆரம்பித்தாள் .

“கண்களை மூடினாள் …..
இறைவனிடம் வேண்டினாள் ….

இறைவா…எனக்கொரு…
எனக்கொரு வரம் தா….
அழுதிடும் சின்னப் பிள்ளை
நான்….உந்தன் கையில்
ஏந்திக் கொள்வாய்…!”

சற்று முன்பு ரசித்து முகர்ந்து பார்த்த பஜ்ஜியின் மணம்…..இப்போது அவளை ஒன்றுமே செய்யவில்லை…அங்கிருந்து வந்த பாடல் மட்டும்  அவளது இதயத்தில் பட்ட அடியின்  வலியால்  அவளையும் மீறி கண்களை நிறைத்தது.

இன்னும் விரைப்பாக நிமிர்ந்து நடக்கிறாள் கௌரி…..”நான் அழ மாட்டேன்…” வைராக்கியமாகச் தனக்குள் சொல்லிக் கொண்டாள் .கண்களில் ஒரு வெறுமை..ஒரு முறைப்பு…தூரத்தை வெறித்து பார்த்து கொண்டு நடந்தவளை …..எதிரில் ஓட்டமும் நடையுமாக நேருக்கு நேர்….சடார் என்று கௌரியின் மேல் மோதித் தடுமாறி நிற்கிறாள் இளம்பெண் ஒருத்தி.

நிமிட சுதாரிப்பில், தன்னை மோதிய பெண்ணின் தோளை  இறுக்கிப் பிடித்தவள்  தன் அலுவலக கேன்டீனில் பணி புரியும் பெண் வசந்தி தான் என்றறிந்து வியப்பில்…. வசந்தி….ஏன்…இத்தனை வேகம்..? என்னாச்சு? என்று தடுமாறிய கேள்வியோடு அவளின் கண்களைப் பார்க்கிறாள் கௌரி.

விரக்தி யோடு பார்த்த வசந்தி…..மேடம்…என்னை விட்ருங்க….நான் சாகணும் ….அதான் தற்கொலை பண்ணிக்க கடலுக்குப் போறேன்…” என்று சொல்லி அவளது பிடியிலிருந்து திமிறுகிறாள்.

வசந்தியின் குரலில் இருந்த தீர்மானத்தை உடைக்கத் தெரியாத கௌரி, வசந்தி…என்னோட வா..ரெண்டு பேரும் சேர்ந்தே சாகலாம்…!

திகைப்போடு கௌரியைப் பார்த்தவள் எங்கிருந்தோ குதித்த ஆர்வத்தோடு மேடம்…..நீங்க….என்றவள் அடுத்த நொடி கௌரியின் கால்களை இறுக்கிப் பற்றியபடியே குலுங்கிக் கொண்டிருந்தாள்.

0   0   0     0     0     0     0    0

எதிர்பாராமல் கௌரி எழுந்து சென்றதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் தானும் எழுந்து மணலைத் தட்டிவிட்டு நிமிரும்போது தனக்கு எதிரில் லாவண்யாவும் , கல்யாணியும் கோபத்தோடு முறைத்துக் கொண்டு இடுப்பில் கைவைத்தபடி  நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்தவன்..

நீங்க ரெண்டு பேரும்… எப்படி இங்கே? என்று கேட்கவும்…!

ஹங்…….நீங்க சொன்னா மாதிரியே கோவிலுக்குத் தான் வந்தோம்….ஆனால்…அந்த கௌரியோட ஃபைல்ல கையெழுத்துப் போடத்தான் என்கிட்ட வேலை ஜாஸ்த்தி இருக்குன்னு பொய் சொன்னியா…? அதைத் தான் கண்ணால பார்த்தேனே.. இன்னும் இது மாதிரி என்னவெல்லாம் நடக்கப் போறது?….லாவண்யா கார்த்தியைப் பார்த்து கோபமாகக் கேட்கிறாள்.

என்னடா கார்த்திக்…இது….இவ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு…இப்பத் தான் உங்க ரெண்டு பேரையம் சேர்த்து தூரத்துலேர்ந்து  நாங்க பார்த்தோம்…நாங்க வரதைப் பார்த்ததும் அவள் எழுந்து வேக வேகமா ஓடிட்டா..இது உனக்கே நன்னாருக்கா .? கல்யாணியும் சேர்ந்து கொண்டு தன் பங்குக்குக் கேட்கிறாள்.

ம்மா…நான் சொல்றதைக் கொஞ்சம் காத்து கொடுத்துக் கேளுங்கோளேன்…கெஞ்சலான குரலில் கார்த்திக் கேட்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் லாவண்யா கண்ணீரோடு அவனைப் பார்கிறாள்.பிறகு அது பொது இடம் என்பதையும் மறந்து அத்தையைப் பார்த்துக் கத்துகிறாள்.

அத்தை….நான் நிஜமாவே தோசைக் கல்லுலேர்ந்து  எண்ணெய்ச் சட்டிக்கு விழுந்துட்டேனாக்கும்.இவன் மட்டும் என்ன…? இவனும் ஃபிராட் தான்…. இவனும் சீட் தான்…உங்க பிள்ளை செஞ்சா மட்டும் அது குத்தமில்லையா? இவர் இப்படி இருக்கும்போது இவனை யார் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது….நான் வந்து கார்த்திக் கால்ல விழுந்து அவன் காலைப் பிடிச்சுண்டு அழுதேனா?

ஒரு உண்மையை மறைச்சு எங்களை ஏமாத்தி…நான் பீச்சுக்கு கூப்பிட்ட போது வேலை நிறைய இருக்குன்னு சொல்லிட்டு அந்த கௌரியை கூப்ட்டு கூத்தடிக்க மட்டும் நேரம் இருந்ததா..?

இந்த விஷயம் மட்டும் எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? பொய்யும்…பித்தலாட்டமும்….ஐ கான்ட்…ஐ டோன்ட்….என்று ஆவேசத்தோடு சொன்னவள் அத்தை…வாங்க நாம இங்கேர்ந்து போகலாம்….என்னைக் கொண்டு போய் என் வீட்டில் விடுங்கோ. எனக்கு இந்தக் கல்யாணமும் வேண்டாம்…எந்த வேஷமும் வேண்டாம் என்றவள் சட்டென்று தன்  கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து கல்யாணியின் கையில் திணித்து விட்டு விடு விடுவென்று நடக்க ஆரம்பிக்கிறாள்..

அதே வேகத்தில் தனது கைபேசியை எடுத்து தன் அம்மாவுக்கும் அழைத்து விஷயத்தைச் சொல்லி ” அப்பா…அம்மா…நீங்க ரெண்டு பேரும் நாளைக்கே கிளம்பி வந்து என்னை இங்கேர்ந்து அழைச்சிட்டு போவீங்க தானே…என்று கேவிக் கேவி அழுது கொண்டே சொல்லி முடித்த லாவண்யாவை..அதுக்குள்ளே .என்ன காரியம் பண்றே….? என்று கையை இருக்கப் பிடித்த கார்த்திக்கை……ஓங்கி கன்னத்தில் அறைந்தவள் என் கையை விடுடா…..என்று வெடுக்கென்று பின்னுக்கு இழுக்கிறாள்  லாவண்யா.

கல்யாணி அதைக் கண்டதும் திக்பிரமை பிடித்தவளாக அப்படியே நிற்கிறாள்.

அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் ஏதோ டி வி சீரியல் எடுக்கிறார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்த பின்பு அங்கு கேமரா வெளிச்சம் இல்லாததை ஊர்ஜிதம் செய்து கொண்டு இது ரியல் ப்ளே …என்று வேடிக்கை பார்க்க கூட்டம் போடுவதை உணர்ந்த கார்த்திக் செய்வதறியாது அவமானத்தில் கூனிக் குறுகி “நான் போறேன்…நீங்க எப்படி வந்தேளோ அப்படியே வீட்டுக்கு வந்து சேருங்கோ” என்று சொல்லிவிட்டு விடுவிடென்று திரும்பிப் பார்க்காமல் அவனது பைக்கை நோக்கி நடக்கிறான்.

அவனது மனம் லாவண்யாவை பளார் பளார் என்று அடிக்க வேண்டும் போல
துடித்தது.

அதற்குள் அங்கிருந்த போலீஸ்……”இந்தாப்பா…பொம்பள கிட்ட என்ன தகறாறு…நானும் அப்பாலேர்ந்து நோட் பண்ணிக்கிட்டே வாரேன் …ராங்கா போறியா நீ….மவனே…..உன்னை உள்ளுக்குளே வெச்சு முட்டிக்கி முட்டி தட்டி….என்று லத்தியை தட்டியபடியே….அவனை வழிமறித்து கேள்வி கேட்கிறார்.

இதைக் கண்ட கல்யாணி அப்படியே அங்கு  தலை சுத்தி மயக்கம் போட்டு விழுகிறாள்..

(தொடரும்)

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 17உயில்
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *