தாயின் அரவணைப்பு

This entry is part 1 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

-தாரமங்கலம் வளவன்

செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது.

இன்று வார விடுமுறை. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து திரும்ப வில்லை.

முதலில் பிரமையாகத்தான் இருக்கும் என்று அந்த சத்தத்தை உதறித் தள்ள நினைத்தாள் செல்வி. ஆனால் குழந்தையின் அழுகுரல் போன்ற அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டே வந்தது. சில சமயம் வீல் என்று உச்ச குரலில் அலறுவது போல் கேட்டது.

எங்கிருந்து வருகிறது இந்த அழுகுரல்… உற்றுக் கேட்டாள்.

தான் தங்கியிருக்கும் பெண்கள் விடுதியை ஒட்டியுள்ள காலி இடத்திலிருந்து தான் சத்தம் வருகிறது என்று தெரிந்து கொண்டாள். அறை ஐன்னலில் இருந்து எட்டிப் பார்த்தாள். இருட்டிக் கொண்டு வந்ததால் ஒன்றும் சரியாக தெரியவில்லை.

தோழியிடம் இன்னொரு சாவி இருப்பது ஞாபகம் வர, அறையை பூட்டி விட்டு கீழே இறங்கினாள். பணி முடிந்து மற்ற பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

முள் கம்பி வேலிக்கு உள்ளிருந்து தான் சத்தம் வருகிறது என்று தெரிய வேலியை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள் செல்வி.

வேலிக்கு உள்ளே போன பிறகு, புதருக்குள் இருந்து தான் குழந்தையின் அழுகுரல் சத்தம் வருகிறது என்று தெரிய வர, புதரை விலக்கி பார்த்தாள் செல்வி.

பச்சிளம் குழந்தை…. பிறந்து மூன்று நாள் தான் ஆகியிருக்கும்…. மறுபடியும் துடி துடித்து கத்தியது.…

கையிலிருந்த மொபைல் வெளிச்சத்தில் பார்த்தாள்…..

ஐயோ… என்ன பயங்கரம்….. கண்களை நம்ப முடியவில்லை…

ஒரு பெரிய எலி-காட்டு எலி –அந்த குழந்தையின் கால் கட்டை விரலை கடித்து தின்று கொண்டிருந்தது. ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது.

செல்வி எலியை விரட்ட, எலி ஓடி விட்டது…

குழந்தையின் துடிப்பு மட்டும் நிற்க வில்லை. கையிலிருந்த கர்சீபில் ரத்தத்தை துடைக்க, இது என்ன கொடூரம்…. எலி கட்டை விரலை பாதி தின்று விட்டிருந்தது.

செல்வி குழந்தையை தூக்கி கொண்டு விடுதி அறைக்கு வந்தாள். எல்லா பெண்களும் அதிர்ந்து போன முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரத்தத்தை துடைத்தாள். ரத்தம் நிற்பது போல் தோன்றியது. துணியை வைத்துக் கட்டினாள்.

அதற்குள் அறை தோழி வர, பயந்து போனவளிடம் விபரம் சொல்ல, அவள் கேட்டாள்…

“ இப்ப என்ன பண்ணப் போற ?…”

“ பயப் படாதே…. குழந்தைகள் ஆசிரமம் ஒன்னு இருக்கு… அவங்களுக்கு போன் பண்ணப்போறேன்… வந்து குழந்தையை வாங்கிக்க சொல்லி….”

செல்வி போன் பண்ணி முடித்து விட்டு சொன்னாள்…,

“ குழந்தையை வந்து வாங்கிக்கிறதா சொன்னாங்க… ஓசூர் ரோடு பஸ் ஸ்டாப்புக்கிட்ட வந்து நிக்கறதாச் சொல்லியிருக்கேன்… நீயும் வர்ரியா கூட..”

தோழி மறுத்துவிட, செல்வி கிளம்பினாள், கையில் குழந்தையுடன்…

ரத்தினம் கூலி வேலைக்கு வேலூரிலிருந்து பெங்களூருக்கு வந்து ஐந்து வருஷம் ஆயிற்று. பெங்களூருக்கு வரும் போதே ரத்தினத்தின் புருஷன் குப்பன் சீக்காளிதான். சதா இருமல் தான். வேலைக்கு போனது கிடையாது.

கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகிறது. மூன்று பெண் குழந்கைகள் வரிசையாக. குப்பன் வீட்டுக்கு செய்த ஒரே காரியம் இது தான்.

வேலூரில் இருக்கும் போது சின்ன வயது முதலே ருக்கு மணி, ரத்தினத்திற்கு சிநேகிதி. அவளுக்கும் ரத்தினத்திற்கும் ஒரே சமயத்தில் தான் கல்யாணம் ஆனது. கல்யாணம் ஆகி நான்கு வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளை கொடுத்துவிட்டு, ருக்கு மணியின் புருஷன் ஒரு விபத்தில் இறந்து போனான்.

புருஷன் போன பிறகு ருக்கு மணி, இரண்டு பெண் குழந்தைகளை கட்டிட வேலை செய்து நல்ல படி காப்பாற்றிக் கொண்டு தான் வந்தாள், ரங்கன் குறுக்கிடும் வரை. ரங்கனுக்கு, ருக்கு மணியை விட வயது குறைவு தான். ரங்கனுக்கு எலெக்ட்ரீஷியன் வேலை. வீட்டிற்க்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். வயிற்றில் ரங்கனின் குழந்தை உருவானது தெரிந்தவுடன் ருக்குமணி பயந்து போய் ரங்கனிடம் சொன்னாள். அவன் இன்னும் பயந்து போய், உடனே டாக்டரை போய்ப் பார், கலைத்து விடு என்று சொன்னான்.

டாக்டரை போய் பார்க்கும் போது டாக்டர், காலம் கடந்து விட்டதாகச் சொன்னார். அதற்கு பிறகு ரங்கன் ருக்குமணியிடம் பேசுவதையும், வருவதையும் நிறுத்தி விட்டான்.

அந்த சமயம் பார்த்து, ரத்தினம் வேலூருக்கு வந்தாள். ருக்கு மணி அவளிடம் தன் கதையைச் சொல்லி அழுதாள். ரத்தினம் சொன்னாள்.

“ ரெண்டு பொண்ணுங்களையும் உன்னோட அம்மா கிட்ட வுட்டுட்டு, என்னோட பெங்களூருக்கு வா, நா பிரசவம் பாத்துக்கிறேன்…”

ருக்கு மணி பெங்களூர் வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. தன் குடிசையில் தங்க வைத்து, தர்மாஸ்பத்திரியில் காண்பித்து பிரசவம் நடந்தது. பெண் குழந்தை மறுபடியும். கையிலிருந்த கம்மல் முதலில் போனது அடகுக் கடைக்கு.

ருக்கு மணி கெஞ்சினாள் ரத்தினத்தை,

“ நான் இந்த குழந்தையை எடுத்துக் கிட்டு வேலூருக்கு போகமுடியாது. அக்கம் பக்கம் காறித் துப்புவாங்க… நீ வைச்சி வளத்துக்கோ…..”.

இதை எதிர்பார்க்காத ரத்தினம்,

“ என்னோட நெலம உனக்கு தெரியாதா…. என்னால முடியாது..”
என்றாள்.
பிறகு,
“ பெல்காம்காரி ஒருத்தி என் கூட வேல செய்யறா…. அவளுக்கு குழந்தை கிடையாது. அவ கிட்ட பேசி பாக்கறேன்…”

ருக்கு மணி மௌனமாக இருக்க, பெல்காம்காரியிடம் ரத்தினம் பேசினாள். அதற்கு பெல்காம்காரி,

“ எனக்கு குழந்தை வேணும்தான்….. வளக்கிறேன்…..ஆனா பெல்காம் போகப் போறன். அங்க போய் தான் வளக்கணும்… ஐயாயிரம் பணம் கொடு…”.

மூக்குத்தியை வித்து ஐயாயிரம் கொடுத்தாள் ரத்தினம்.

குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் போக, ருக்கு மணியை வேலூர் பஸ்ஸில் ஏற்றி விட ஓசூர் ரோடுக்கு கூட்டி வந்தாள் ரத்தினம்… அதற்குள் மணி ஏழாகி விட்டது.

வேலூர் பஸ்க்காக காத்திருந்தார்கள் இருவரும்….

எதிரே ஒரு இளம் பெண் கையில் குழந்தையுடன் வருவதை ரத்தினமும், ருக்கு மணியும் பார்த்தார்கள். அது செல்வி ..

இரண்டுபேரும்- ரத்தினமும், ருக்கு மணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ருக்கு மணிக்கு வயிறு பிசைவது போல் தோன்றியது.

அந்த பெண் – செல்வி, அந்த அரை வெளிச்சத்திலும் பரபரப்பாக இருந்தது போல பட்டது.

செல்வியின் கையிலிருந்த மொபைல் அடிக்க, கையில் குழந்தையுடன் மொபைலை எடுக்க சிரமப்பட,

“ ஒரு நிமிஷம் இந்த குழந்தையை பிடிங்க… ஒரு அர்ஜண்ட் போன்….”.

ருக்கு மணி கையை நீட்டி, குழந்தையை வாங்கிக் கொண்டாள்….

இருட்டில் குழந்தையின் முகத்தைச் சரியாக பார்க்க முடியவில்லை.

செல்வி ஆசிரம வேனுக்கு போனில் வழி சொல்லிக் கொண்டிருக்க,

கையில் குழந்தையை வாங்கிக் கொண்ட ருக்கு மணிக்கு காலையில் தன்னை விட்டு போன தன் குழந்தையின் ஞாபகம் வர, துக்கம் நெஞ்சை அடைத்தது.

குழந்தையின் கட்டை விரலில் கட்டியிருந்த துணியை பார்த்து விட்டு பதறிப்போய் என்ன வென்று கேட்க, செல்வி எல்லாவற்றையும் விளக்கினாள்.

பெல்காம்காரி, தன் குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடி இருப்பாளோ என்று சந்தேகம் வர, ரத்தினமும், ருக்கு மணியும் குழந்தையை தூக்கிக் கொண்டு டீக்கடை வெளிச்சத்திற்கு வந்து குழந்தையை உற்றுப் பார்த்தார்கள்.

அது ருக்கு மணியின் குழந்தைதான்.

“ ஐயோ சாமி… நான் செஞ்ச தப்புக்கு இந்த குழந்தை இப்படி சித்தரவதை படணுமா….” என்று ருக்கு மணி சொல்லி உச்சி மோந்து, கட்டிபிடித்து, முத்தமிட்டு, பால் கொடுக்க ஆரம்பிக்க, ஆசிரம வேன் வந்து சேர்ந்தது.

செல்வி ஸ்ம்பித்து நிற்க, ரத்தினம் சொன்னாள் செல்வியிடம்,

“ அந்த வேனை போகச் சொல்லிடுமா…”

தாயின் அரவணைப்பில் குழந்தை தன் வலியை மறந்து தூங்க ஆரம்பித்தது.

கையிலிருந்த பணம் எல்லாவற்றையும் ரத்தினம், ருக்கு மணியிடம் எடுத்து கொடுக்க, செல்வியும் அதே மாதரி செய்ய, வேலூர் பஸ் வந்தது.

தாயும், குழந்தையும் பஸ்சில் ஏற, செல்வி நேரம் ஆகிறதே என்று விடுதியை நோக்கி வேகமாய் நடந்தாள், மனதில் திருப்தியுடன்.

வேலூர் பஸ் புறப்பட்டது.

ரத்தினம், ஓசூர் ரோடை விட்டு இறங்கி குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பெல்காம்காரி தன்னுடைய மூக்குத்தி வித்த ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டாளே என்று தோன்றாமல் மனம் நிம்மதியாக இருந்தது. புருஷனையும் குழந்தைகளையும் கொஞ்ச நாளாக சரியாக கவனிக்க முடியவில்லையே என்பது நினைவுக்கு வர நடையை எட்டிப் போட்டாள்.

Series Navigationஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘
author

தாரமங்கலம் வளவன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *