தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

அயோத்தியின் பெருமை

வளவ.துரையன்

Spread the love

ayodhya_21719

 

சிலப்பதிகாரத்தின்  கதைத்தலைவன்  கோவலன்  புகார்  நகரை  விட்டுப்  பிரிந்து  செல்கிறான்.  அதனால்  அந்நகர  மக்கள் வருந்துகின்றனர்.  இதற்கு  உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான்  அயோத்தியை  விட்டுப் பிரியும்  போது  மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார்.

           “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல

                        பெரும் பெயர்  மூதூர்  பெரும் பேதுற்றதும்”

என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும்.

பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை பிரமனிடம் கொடுத்தார்.  சரயூ நதிக்கரையில் அப்பாகமே மனுச்சக்கரவர்த்தியின் மூலம் அயோத்தியாக    நிறுவப்பட்டது.

            இட்சுவாகு வம்ச அரசர்கள் பிரமனை நோக்கித் தவமிருந்து பள்ளிகொண்ட பெருமாளைப் பெற்று  முதல்  முதல் அயோத்தியில் வைத்துதான் வழிபட்டனர்.  பிற்காலத்தில் அந்தப் பெருமாள்தாம் வீடணன்  மூலமாக திருவரங்கத்தில் பள்ளிகொண்டு அருள் பாலிக்கிறார். எனவே திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள  பெருமாள்  பூவுலகிற்கு வந்து முதல் முதலாக பூஜைகளையும்  வழிபாடுகளையும் ஏற்றுக் கொண்டது இந்தத்  திருஅயோத்தியில்தான்.  மேலும் திருமாலே விபவ அவதாரமாக இராமபிரானாக அவதரித்த பெருமையும் பெற்றது அயோத்தி ஆகும்.

            பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரப்பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,  நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்கள்  திரு அயோத்தியை மங்களாசாசனம் செய்துள்ளனர்.  ஆழ்வார்களால் பாடப்பட்ட மூர்த்திகள் இப்போது இல்லை.  எனினும் அயோத்தியே ஆழ்வர்களால் பாடப் பெற்றதால்  இங்குள்ள எல்லாக் கோவில்களுமே  மங்களாசாசனம் செய்யப் பெற்றதென்பர்.

            முக்தி தரும் 7  ஸ்தலங்களில்  அயோத்தியும் ஒன்றாகக் கருதப் படுகின்றது. அனுமான் கடி எனப்படும்  பெரிய ஆஞ்சநேயர் கோயில்,   சரசு நதிக்கரையில்  உள்ள அம்மா மந்திர், இராம பிரானுக்குப் பட்டாபிஷேகம் நடந்த இடம்,இராமர் தன் அவதாரம் முடித்து சரயுவில் இறங்கிய  குப்தகாட் என்ற இடம் ஆகியவை காணவேண்டிய முக்கியமான  இடங்களாகும்.

           ‘இளமையான எருமைகள் விடுவிக்கப்பட்டு கிளம்பி விட்டன .  ஆயர் குழல் ஒலிக்கத் தொடங்கி விட்ட து   காளைகளின் கழுத்து மணி ஓசை  கிளம்பி விட்டது. வண்டுகள் இசை பாடப் பறக்கின்றன. இலங்கையர் கோன் குலத்தை அழித்தவனே;  விஸ்வாமித்திரனின் யாகம் காத்து, அயோத்திக்கு அதிபதியானவனே எழுந்தருள்வாயே ‘ எனும் பொருளில்,

          

 

 

மேட்டிள  மேதிகள்  தளைவிடும்  ஆயர்

                        வேய்ங்குழல்  ஓசையும்  விடைமணிக்   குரலும்

            ஈட்டிய  இசைதிசை  பறந்தன;  வயலுள்

                        இரிந்தன  சுரும்பினம்;  இலங்கையர்  குலத்தை

           வாட்டிய  வரிசிலை  வானவர்  ஏறே;

                        மாமுனி  வேள்வியைக்  காத்து, அவபிரதம்

            ஆட்டிய  அடுதிறல்   அயோத்தியெம்  அரசே;

                        அரங்கத்தம்    மாபள்ளி எழுந்தருள் வாயே

என்று  திருப்பள்ளியெழுச்சியில்  குறிப்பிடுகிறார்.

            நம்மாழ்வார்   “நற்பால்  அயோத்தி” என்று பாடுவார்.  “அங்கண் மதில் புடைசூழ்  அயோத்தி”  என்று குலசேகரப் பெருமாளும்

           “சீர் அயோத்தி” என்று பெருமை சேர்த்து  பெரியாழ்வாரும்  மங்களாசாசனம் செய்துள்ளனர்.

            திருஅயோத்தி  எனும்  திவ்யதேசத்தின் பெருமை சொல்லச் சொல்ல மாளாதது என்பது உண்மை ஆகும்.

 

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

One Comment for “அயோத்தியின் பெருமை”

  • க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் வளவ.துரையன் அவர்களுக்கு வணக்கம்.

    திருவயோத்தி பற்றி புராணாந்தரங்களிலிருந்து ஆழ்வாராதிகள் மற்றும் இளங்கோவடிகள் வரையான குறிப்புகளை தொட்டுச் சென்றுள்ளீர்கள். தாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விரிவாக எழுதலாமே.

    பின்னும் திண்ணை தளத்தில் ஆழ்வார்கள் பெயரை திருவயோத்தி சம்பந்தமாக வாசித்தமையும் கூட மனதிற்கு இனிமையே நல்குகிறது.

    ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.


Leave a Comment

Archives