தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 ஜூன் 2020

நாவற் பழம்

அமீதாம்மாள்

Spread the love

1960களில்

நாவற்பழம் விற்கும்

பாட்டியின் நங்கூரக் குரலால்

தெருக்கோடி அதிரும்

 

‘நவ்வாப்பழோம்……’

 

உழக்கரிசிக்கு உழக்குப் பழம்

பள்ளிக் கூடத்திலும்

ஒரு தாத்தா

நாவற் களிகளை

கூறு கட்டி விற்பார்

 

செங்காயை

உள்ளங்கைகளில் உருட்டி

கனிந்துவிட்ட தென்று

களித்த காலங்கள் அவை

 

ஒரு நாள் விளையாட்டாய்

விதைத்து வைத்தேன்

ஒரு நாவல் விதையை

இரண்டே மாதத்தில்

இரண்டடி வளர்ந்தது

புதிதாய்ப் பிறக்கும்

பொன்தளிர் கண்டுதான்

என் பொழுதுகள் புலர்ந்தன

இருபது ஆண்டுகளில்

இருபதடி வளர்ந்தது

நானாமூனா என்ற என் வீடு

நவ்வாமர வீடானது

 

ஒரு நாள்

அழுதுகொண்டே

உதித்தது சூரியன்

அன்றுதான்

அன்பைக் கொட்டி

வளர்த்த மரம்

வெட்டி வீழ்த்தப்பட்டது

 

அப்பா சொன்னார்

‘கக்கூஸ் கட்ட

இடம் தேவை’

 

அன்று சாய்ந்தது

மரம் மட்டுமல்ல

என்  மனமும்தான்

 

2000ல்

சென்னையில் வாசம்

கருவிழிகளைக் குவித்ததுபோல்

பழக்கடைகளில்

நாவற் கனிகள்

அடிக்கடி வாங்குவேன்

 

ருசிப்பதற்காக அல்ல

என் இறந்த காலங்களை

சுகிப்பதற்காக

 

2010ல்

சிங்கப்பூரில் வாசம்

சிராங்கூன் சாலையில்

சிண்டாவுக்கு அருகே

புல்வெளி யெல்லாம்

நசுக்கப்பட்ட நாவற் கறைகள்

அன்னாந்து பார்த்தேன்

அட !

ஆல்போல் ஒரு நாவல் மரம்

உடையாத பழங்களை

ஊதி ஊதிச் சேர்த்தேன்

 

ருசிப்பதற்காக அல்ல

என் இறந்த காலங்களை

சுகிப்பதற்காக

அமீதாம்மாள்

Series Navigationமுக்கோணக் கிளிகள் [2]திட்டமிட்டு ஒரு கொலை

5 Comments for “நாவற் பழம்”

 • Ravi says:

  அருமை நன்றி !

 • Dr.G.Johnson says:

  அருமையான நினைவு கூறும் நாவற் பழ ருசிமிகு இனிய கவிதை வரிகள்! …டாக்டர் ஜி. ஜான்சன்.

 • நவநீத கிருஷ்ணன் says:

  அந்தப் பொன்னான காலங்களை நினைவு கூரும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்தில் தோட்டத்தில் இருந்த புளிப்பு மாங்காயும் அருநெல்லிக்காயும் என்றும் சுவையானவை தான். இன்று அந்த எண்ணங்களில் சப்புக்கொட்டவேண்டியதுதான். இன்றைய உலகில் வேறு வழியில்லை. இக்கவிதை அனுபவித்து எழுதப்பட்ட கவிதை. ஆழ்ந்து சிந்திக்க வைத்த கவிதை

 • ameethaammaal says:

  நன்றி திரு நவநீத கிருட்டிணன்
  இதுபோல் எத்தனையோ நினைவுகள்
  எல்லாருமே அனுபவித்த நினைவுகதள்
  படிக்கும்போது அந்தக் காலத்திற்கு நம்மை அழைத்துச்
  செல்லும் கவிதையே வெற்றிபெற்ற கவிதை
  ஏதோ முயற்சித்திருக்கிறேன்
  தங்களின் பின்னூட்டம் எனக்கு முன்னோட்டமாக
  இருக்கிறது என்பதை மட்டும் தெரிவித்துக்க கொள்கிறேன்

 • Dr N.Baskaran says:

  அமீதாம்மாளின் நாவற்பழம் இனிக்கிறது..!
  வெட்டப்பட்டது மரம்..,சாய்ந்தது இவரின் மனம்..முளைத்தது ஒரு கவிதை ..!அழகு !!
  கருவிழிகளைக் குவித்தது போல் /பழக்கடையில் /நாவற்பழங்கள்!!
  அபூர்வமான உவமை. வாழ்த்துக்கள்.கருவிழிக்கு நாவற்பழதைச் சொல்வதைவிட, நாவற்பழத்துக்கு கருவிழியை ஒப்பிடும்போது இதயம் சிலிர்க்கிறது ! வாழ்க கவிஞர்..வாழ்த்துகளுடன்..முனைவர் ந.பாஸ்கரன்,கடலூர்.


Leave a Comment

Archives