நட்பு

This entry is part 3 of 22 in the series 15 செப்டம்பர் 2013

a1a2

                                                 டாக்டர் ஜி. ஜான்சன்

டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம்.

வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன்.

அவரின் கையில் ஒரு பை இருந்தது.அவர் என் பெயரைச் சொல்லி அது நானா என்று கேட்டார் . நான் ஆம் என்றேன்.

” டாக்டர், நான் குன்றக்குடி மடத்திலிருந்து வருகிறேன். இதை அடிகளார் உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னார். ” இவ்வாறு தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் அந்தப் பையை என்னிடம் தந்தார். நான் நன்றி கூறியபடி அதைப் பெற்றுக்கொண்டேன்.

வீட்டினுள் நுழைந்து அதை என் மனைவியிடம் தந்து விவரத்தைக் கூறினேன்.

இருவரும் அதைத் திறந்து பார்த்தோம். அதனுள் பேண்ட் துணியும் சட்டைத் துணியும் இருந்தன. அத்துடன் ஒரு கிறிஸ்துமஸ் கார்டும் அதில் கவிதையில் வாழ்த்தும் இருந்தது! எனக்கு பெரும் வியப்பு!

அடிகளார் எவ்வளவு பெரிய மனிதர்! என்னை அவர் நேரில் கூட பார்த்து பேசியதில்லை. அப்படி இருந்தும் என்னை எவ்வாறு நினைவு கூர்ந்து அப்படி ஒரு பரிசை ஆள் மூலம் அனுப்பி வைத்தார் என்று எண்ணினேன். அவரின் பெருந்தன்மையும், பரந்த மனப்போக்கையும் எண்ணி ம்கிழ்ந்தேன்.

அவர் ஒரு புகழ்மிக்க இந்து மடாலயத் தலைவர். நாடு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களால் பெரிதும் போற்றப்படும் தமிழ் அறிஞர்! கிறிஸ்து பிறந்த பண்டிகை கொண்டாடும் எனக்கு அப்படி வாழ்த்து சொல்ல வேண்டும் என்று அவர் எண்ணியதின் அன்பு மனம் என்னை நெகிழச் செய்தது.

அப்போதே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அவரின் குரல் கணீரென்று ஒலித்தது. நான் வணக்கம் கூறி நன்றியைத் தெரிவித்தேன். அவருக்கும் மகிழ்ச்சிதான். நேரம் கிடைத்தால் சந்திப்போமே என்றார். நான் ஞாயிறு காலை வரலாமா என்று கேட்டேன். அவர் அப்படியே மதிய உணவையும் முடித்துக் கொண்டு போகலாம் என்றார்.

ஆவலோடு காத்திருந்த அந்த ஞாயிறு காலையும் வந்தது.

மனைவியும் நானும் காரில் குன்றக்குடிக்கு சுமார் பத்து மணியளவில் புறப்பட்டோம். திருப்பத்தூரிலிருந்து அது பக்கம்தான்.,பிள்ளையார்பட்டி வழியாக சென்றடைந்தோம்.

நாங்கள் வந்துள்ளதை உதவியாளர் மூலம் தெரிவித்தோம். வரவேற்பு அறையில் எங்களை அமரச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் அடிகளார் வந்து விடுவார் என்றார்.

அது ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாத சாதாரண அறைதான்.

அடிகளார் திடீர் என்று உள் கதவின் வழியாக அறைக்குள் நுழைந்தார். அப்போதுதான் அவரை நேரில் காண்கிறேன். அதற்குமுன் நாளிதழ்களில் புகைப் படங்களில் பார்த்ததுதான்.

பழுத்த உடலுடன், கம்பீரமாக காட்சி தந்தார். காவி வேட்டியும், தலையில் காவி நிறத் தலைப்பாகையும் தரித்து, நீண்ட நரைத்த தாடியில் .அவர் எனக்கு ஏனோ திருவள்ளுவரை நினைவூட்டினார்! அவரின் கண்களில் கூட புன்னகை தவழ்வது போன்றிருந்தது.  அது அருள் நிறைந்த புன்னகை!

நாங்கள் எழுந்து நின்று மரியாதை செய்தோம். அவர் வணக்கம் கூறி யவண்ணம் எங்களை அமரச் சொன்னார்.

அவருடைய குரல் கணீர் என்று ஒலித்தது. அப்போது அவரிடம் நான் பேசியது தமிழுடன் பேசுவது போன்றதோர் உணர்வு உண்டானது! அது ஏன் என்று தெரியவில்லை. அவரின் அழுத்தமான அழகான தமிழ் உச்சரிப்பு அப்படி இருந்தது!

” திருப்பத்தூரில் சேவை நோக்கத்துடன் கிறிஸ்துவ இறைத் தூதர்களால் உருவாக்கப்பட்ட சுவீடிஷ மிஷன் மருத்துவமனை இன்று புதுப்புது கருவிகளுடன் சிறப்பாக இயங்குவது குறித்து மகிழ்ச்சி. அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி அறியாமையில் மூழ்கியுள்ள நமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் டாக்டர். ” இவ்வாறு அவர் உரையாடலை ஆரம்பித்தார்.

” அதே அறிவியலைப் பயன்படுத்தி இந்த குன்றக்குடியை ஒரு மாதிரிக் கிராமமாக உருவாக்கியுள்ள ஐயாவின் முயற்சியை தமிழக அரசும், இந்திய அரசும் பாராட்டியுள்ளதை நானறிவேன். தங்களை நேரில் பார்க்கும் இந்த அபூர்வமான வாய்ப்பைப் பெற நான் பெரும் பாக்கியம் பெற்றதாகக் கருதுகிறேன். ” பதில் தந்தேன்.

அவர் புன்னகைப் பூத்த்தவண்ணம் என்னையே ஊடுருவும் வண்ணம் உற்று நோக்கினார்.நான் எதைப் பற்றி அவரிடம் பயனுள்ள வகையில் பேசலாம் என்று எண்ணியபோது தமிழ்ச்சமயம் பற்றி பேச முடிவு செய்தேன்.

:          ” ..அய்யா நான் உலகைப் படைத்தது ஒரு கடவுள்தான் என்பதை நம்புகிறேன்,. அதனால் இயற்கையின் அழகில் கடவுளைக் காண்கிறேன். ஒவ்வொரு மதமும் போதிக்கும் கடவுளும் இறுதியில் அந்த ஒரு கடவுளாகத்தானே இருக்க முடியும்? அப்படி இருக்கும்போது மதங்களுக்குள் ஏன் இத்தனை வேற்றுமைகள்? ”   என் நீண்ட நாள் சந்தேகத்தை தகுந்த ஒருவரிடம் கேட்டதில் திருப்தியுற்றேன்.

” மதம் மக்களுக்கு அபின்! ஆன்மா அற்ற உலகின் ஆன்மா என்று சொல்லவில்லையா கார்ல் மார்க்ஸ்! பிரபஞ்சத்தில் நிலவும் புதிர்களை முற்றாக ஆராய்ந்து தீர்க்க முடியாது! காரணம் கடவுள் புதிர்களில் வாழ்கிறார்! நீங்கள் எதையோ கேட்க வந்து தயங்குவது எனக்கு நன்றாகவே தெரிகிறது. தயங்காமல் கேளுங்கள் டாக்டர். ” என்னை உற்சாகமூட்டினார் அடிகளார்.

” அய்யா! தமிழகத்துத் துறவிகளில் தாங்கள் தனித் தன்மையுடன் தமிழ்ச் சமைய நெறி பற்றி போதித்து அதன் மூலமாக சமநிலைச் சமுதாயம் உருவாக்க முயல்வதை நான் அறிவேன்.அது பற்றி அறிய விரும்புகிறேன். ” பணிவுடன் அவரிடம் கேட்டேன்.

” டாக்டர் அவர்களே. தாங்கள் தமிழ்ச் சமய நெறி குறித்து அறிய விரும்புவது பாராட்டுதற்குரியது .தாங்கள் இயற்கையின் அழகில் இறைவனைக் காண்கிறேன் என்றீர்களே. அதுதான் தமிழ்ச் சமயம்! ” என்று கூறியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

நான் புரியாமல் விழித்தேன்.

அவர் தொடர்ந்தார், ” தமிழ்ச் சமயம் இயற்கையோடிசைந்தது. அது இல்லற வாழ்க்கைதான் உயர்ந்தது என்றோ, துறவற வாழ்க்கைதான் உயர்ந்தது என்றோ பறைசாற்றுவதில்லை. எந்த வாழ்க்கையாயினும் நெறிமுறைகளில் சிறந்து வாழ்வாராயின் இன்புறுவார் என்பதே தமிழ்ச் சமயக் கொள்கை . ”

அப்போது இல்லறம், துறவறம் கூறும் வள்ளுவரே என்னிடம் நேரில் பேசுவது போன்ற உணர்வு உண்டானது.

அவர் தொடர்ந்து பேசியதைக் கவனமாகக் கேட்டபோது குறிப்புகளும் எடுத்துக்கொண்டேன். பின்னாளில் அவரைப் பற்றி எழுதும் போது அது உதவும் என்றும் நம்பினேன்.

” உயிர் அறிவுப் பொருள். ஆயினும் உயிர் முற்றாக அறிந்த அறிவுப் பொருளுமன்று. உயிர் ஒரு அறிவுப் பொருள் , ஆயினும் அறியாமையில் இணைந்து இருக்கிறது. உயிர் அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவைப் பெறுவதற்கே பேரறிவாக்கிய கடவுளை நாடுகிறது. எனவே உலகுயிர்கள் அனைத்தையும் தழுவி நின்று மெல்ல அவற்றின் அறியாமையிலிருந்து நீக்கி அறிவில் பூத்துக் குலுங்கச் செய்தலும் அறிவில் இன்புற்றமரச் செய்தலும் இறைவனின் குறிக்கோள். இதுவே தமிழ்ச் சமயத்தின் சாரம். ”

புரிகிறதா என்று கேட்பதுபோல் என்னைப் பார்த்தார்.

நான் ஓரளவு புரிந்தது என்று கூறுவது போல் தலை அசைத்தேன்.

இது போன்று சமயம், சமுதாயம், தொண்டூழியம் போன்றவை பற்றி முதல் சந்திப்பிலேயே நிறைய பேசினோம்.

மதிய உணவு தயார் என்று உதவியாளர் வந்து தெரிவிக்கும் வரை நிறைய பேசினோம்.

சுவையான சைவ உணவு. மடத்தில் தயாரிக்கப்பட்டது. சாம்பார், ரசம் , அப்பளம் , தயிர், வடை போன்றவை பரிமாறப்பட்டது. பேசிக்கொண்டே உணவு உண்டோம். அதன் பிறகு அடிகளாரே ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை வெட்டி எங்களுக்குத் தந்தார்.

அவர்து விருந்தோம்பலும் உபசரிப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது!

மீண்டும் அறைக்கு வந்தபோது அடிகாளாரின் கையில் ஒரு நூல் வைத்திருந்தார். அதை என்னிடம் தந்துவிட்டு என்னிடம் கூறியது என் வியப்பை மேலும் அதிகமாக்கியது.

” டாக்டர். இதை திருமுருக கிருபானந்த வாரியார் எனக்குத் தந்தது. இதை இப்போது உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். இதைப் படித்துப் பாருங்கள். ” என்றார். நான் நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டேன்.

அதன் அட்டையில் இராமனும் சீதையும் அமர்ந்திருந்தனர். அவர்களிப் பார்த்து அனுமன் வணங்கிக் கொண்டிருந்தான். இராமனின் கழுத்தில் மாலையும் இடது கையில் வில்லும் இருந்தது.

நூலின் தலைப்பு, ” கம்பன் கவிநயம் “. எழுதியவர் கிருபானந்தவாரி என்றிருந்தது.

அட்டையைப் புரட்டினேன்.

” முருகா.

உளம் வசமானால்

உலகம் வசமாகும் .

கிருபானந்தவாரி

6. 10 . 90 . ” என்று பச்சை நிற  மையினால் எழுதி கையெழுத்திட்டிருந்தார் வாரியார்.

” இதை நிச்சயமாகப் ப்டித்து முடிப்பேன்  அய்யா . ” என்று உறுதி கூறினேன். அவர் புன்னகைத்து கைகூப்பி விடை தந்தார். இனிமையான நினைவுகளுடன் நாங்கள் திரும்பினோம்.

மறு வாரமே குன்றக்குடியின் அருகிலுள்ள நேமம் என்ற கிராமத்தில் அடிகளார் அமைத்துள்ள ” பழ முதிர்ச் சோலை ” பார்க்க அழைத்திருந்தார். உண்மையில் அது ஒரு மறக்க முடியாத அனுபவமே.

கரிசல் நிலமாகக் கிடந்த பல ஏக்கர் நிலப்பரப்பைப் பண் செய்து, ஆழ் கிணறுகள் தோண்டி, நீர் பாய்ச்சி செம் மண்ணில் மாமரங்களையும் , பலா, கொய்யா , விளாம்பழ , எலுமிச்சை என பலவகையான பழ மரங்களை வளர்த்து பெயருக்கேற்ப அந்த நிலப் பரப்பை பசுமை பூத்துக் குலுங்கும் ஒரு பழ முதிர்ச் சோலையாகவே மாற்றியிருந்தார். அங்கு குளிர் தென்றல் கூட நறுமணத்துடன் தவழ்ந்து !

தோட்ட முழுதும் சுற்றிப் பார்த்தோம். ஆண்களும் பெண்களுமாக ஏராளமான கிராம மக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர் .

இதன் மூலமாக பல குடும்பங்கள் நல்வாழ்வு   பெரும் வாய்ப்பு உண்டானது. இது அடிகாளாரின் ” மாதிரிக் கிராமத் திட்டத்த்தின் ” ஒரு பிரிவு.

குன்றக்குடியில்  முசுக் கட்டை இலைச் செடிகள் ( Mulberry )

பயிரிட்டு பட்டு நூல் தயாரிப்பது குடிசைத் தொழிலாக பல வீடுகளில் அறிமுகம் செய்திருந்தார். இதன் மூலமாக மேலும் பல குடும்பங்கள் பயனடைந்தன.

நிறைவான மனத்துடன் கூடைகளில் நிறைய பழங்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம்.

இந்த இரு சந்திப்புகளுக்குப் பின்பு அடிகளாருக்கும் எனக்கும் நல்ல நட்பு மலர்ந்தது. அடிக்கடி தொலைபேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டோம்.

பல இலவச தோழுநோய், மருத்துவ, கண் சிகிச்சை முகாம்கள் நாங்கள் இருவரும் இணைந்து நடத்தினோம்.அடிகளார் வருகை புரிகிறார் என்றால் கிராம மக்கள் நிறைய பேர்கள் கூடி வந்து பயன் பெற்றனர். நாங்கள் இணைந்து ஒரு கிராம சுகாதார நிலையம் அமைத்தோம்.

அடிகளாரின் இன்னொரு சிறப்பு அவரின் இலக்கியப் பணி. அவர் சிறந்த சொற்பொழிவாளர். அதிலும் பட்டிமன்றம் என்றால் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார். தமிழகத்தின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சிரமம் பாராது காரில் பறந்து செல்வார். நடுவராக அவர் கூறும் தீர்ப்பு கேட்போரைக் கிறங்கச் செய்துவிடும்! அவ்வளவு சொல் வளமும், கருத்து ஆழமும் கொண்ட தீர்ப்பாக அது அமைந்துவிடும்.

நான் திருப்பத்தூர் ஸ்வீடிஷ மிஷன் மருத்துவமனை வளாகத்தில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்து அடிகளாரைத் தலைமை தாங்க அழைத்திருந்தேன்.

ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் பேராசிரியர் திரு நமச்சிவாயம் அவர்களையும் , நாகப்பா மருததாப்பா உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி மரகதம் அவர்களையும் பேச்சாளர்களாகவும் அழைத்திருந்தேன். நானும் ஒரு அணித் தலைவராகப் பேசினேன் . போது மக்கள் ஏராளமாக வந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு பொதுத் தொண்டு, இலக்கியப் பணி என்று நாங்கள் சந்தித்துக் கொண்ட போது மருத்துவம் பற்றியும் பொதுவாகப் பேசிக்கொள்வோம். அவருக்கு உடல் ரீதியான குறைபாடு உண்டானாலும் என்னிடம் கேட்பார்.

ஒரு நாள் இரவில்  என்னை அழைத்தார். இடது கையை இடித்துக் கொண்டதாகவும், அது வீங்கி வலிக்கிறது என்றார். நான் உடன் புறப்பட்டு போய் அவரைப் பார்த்தேன

அப்போதுதான் நான் அவருடைய படுக்கை அறையைப் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் அது அமைந்திருந்தது. மெத்தை இல்லாத வெறும் மரக் கட்டிலில்தான் படுப்பார் என்பதை அன்று தெரிந்து கொண்டேன்.

நான் அவருடைய கையை பார்த்துவிட்டு மருந்துகளும் வலி குறைக்கும் களிம்பும் தந்துவிட்டு சிரித்து நேரம் அவருடன் பேசிவிட்டு திரும்பினேன்.

சில நாட்கள் கழித்து இடது தோள் பட்டையும் கையும் வலிக்குது என்றார். நான் அது இருதய தொடர்பு உள்ள வலியாகக்கூட இருக்கலாம் என்று கூறி திருப்பத்தூர் வரச் சொன்னேன். அங்கு அவருக்கு இரத்தம், ஈ.சீ.ஜீ. பிரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என்றேன். சற்று தயக்கத்துடன் சம்மதித்தார்.

நான் மருத்துவமனையில் உள்ள பிரமுகர்கள் தங்கும் தனிக் கட்டிடத்தை அவருக்காக தயார் செய்தேன். அதில் படுக்கை, கூடம், குளியல் சமையல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன.

குறிப்பிட்ட நாளின் முதல் நாள் இரவு அவர் அவசரமாக சென்னை செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டார். அங்காவது ஏதாவது மருத்துவமனை சென்று பார்க்கவும் என்று கூறினேன். மீண்டும் தயக்கத்துடன் சரி என்றார்.

சென்னையிலிருந்து திரும்பி வந்தபின் வருமாறு மீண்டும் அழைத்தேன். நாட்குறிப்பைப் பார்த்துவிட்டு வரிசையாக பட்டிமன்றங்கள் உள்ளதே என்று தயங்கினார்.

அதன்பின்பு அதுபோன்ற வலி இல்லை என்று பரிசோதனை செய்துகொள்வதைத் தள்ளிப் போட்டார்.

ஆனால் அந்த வலி அதன்பின் இல்லை என்றுதான் கூறினார்.

1994 ஆம் ஆண்டில் நான் மலேசியாவில் குடியேறினேன்.

1995 ஆண்டில் என்னுடைய இனிய நண்பர் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மரணமுற்ற செய்து கேட்டு அதிர்ந்து போனேன்! அவரின் மரணத்தை ஏற்க மனம் மறுத்தது!

அடிகளார் அவர்களை புரட்சித் துறவி, சிந்தனையாளர், நூலாசிரியர், சொற்பொழிவாளர் , நிறுவனர் என்று புகழாரம் சூட்டிப் போற்றலாம்.

வள்ளுவ நெறி, தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கை, கார்ல் மார்க்சின் பொருளாதாரச் சிந்தனை ஆகியவற்றின் கலவையாகத் திகழ்ந்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை பக்கம் பக்கமாக எழுதலாம். அவர் பெற்ற சிறப்புகளில் சில –

* 1966 – தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது.

* 1989 – அவர் எழுதிய ” ஆலயங்கள் சமுதாய மையங்கள் ” என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது .

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் ( D. Litt ) பட்டம் வழங்கியது.

* 1991 – இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக் குழு தேசிய விருது வழங்கியது.

* 1993 – மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ” தமிழ்ப் பேரவைச் செம்மல் ” விருது வழங்கியது.

( முடிந்தது )

பின் குறிப்பு : இந்த எழுத்தோவியத்தை நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த எனது இனிய நண்பர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

Series Navigationஉணவு நச்சூட்டம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

33 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    ஓர் உன்னத தமிழ்ச் சமய, இலக்கிய ஞானியோடு நீங்கள் இணைந்து பொதுப்பணி செய்தது தமிழகத்தின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது. 1991 இல் அவர் அமெரிக்க அறக்கொடைத் தமிழ் அரங்குக்கு [FETNA] டொலிடோ வந்த போது அவரது இலக்கியச் சொற்பொழிவைக் கேட்கும் அரிய வாய்ப்புக் கிடைத்தது எனக்கு.

    திண்ணையில் அந்த அரிய வரலாற்று நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுகள் நண்பரே.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    subrabharathimanian says:

    திரு. ஜான்சன்

    நானும் சில கூட்டங்களில் அடிகளார் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.உணர்ச்சி மயமாக இருக்கும்.

    இளைய அடிகளாரை அடுத்த முறை இங்கு வரும் போது சந்தியுங்கள். அதே அனுபவம், அதே பார்வை.

    அன்புடன்,
    சுப்ரபாரதிமணியன்

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜான்சன்

    அருமையான வ்யாசம். ஆயினும் இன்னும் விஸ்தாரமாக அருள்திரு குன்றக்குடி அடிகளார் பற்றி நீங்கள் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. உங்களுடைய மருத்துவம் சம்பந்தமான வ்யாசங்கள் வாசித்திருக்கிறேன். உங்கள் புகைப்படம் இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

    \ \ .அய்யா நான் உலகைப் படைத்தது ஒரு கடவுள்தான் என்பதை நம்புகிறேன்,. அதனால் இயற்கையின் அழகில் கடவுளைக் காண்கிறேன். ஒவ்வொரு மதமும் போதிக்கும் கடவுளும் இறுதியில் அந்த ஒரு கடவுளாகத்தானே இருக்க முடியும்? \

    இது. இந்த விஷயம் தான் ஹிந்து மதத்தின் பல கிளைகளான சைவம், வைஷ்ணவம், சீக்கியம், பௌத்தம், ஜைனம் – இவற்றைச் சார்ந்த சான்றோர் எனக்குப் போதித்தது.

    எனக்கு ஹிந்துஸ்தானி உப சாஸ்த்ரீய சங்கீத சிக்ஷை அளித்த முஸல்மாணிய உஸ்தாதுகள் பலரும் இஸ்லாம் படி ஒழுகுபவர்கள். ஆயினும் கபீர், ரஹீம், ரஸ்கான், சூர்தாஸ், மீரா கீர்த்தனங்கள் கற்றுத் தருவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. கூடவே ஸூஃபியானா கலாம் எனும் இஸ்லாமியக் கீர்த்தனைகள். அவற்றை கற்றுத் தரும்போது அவர்களின் பாவம் (bhavam) என்னால் மறக்கவொண்ணாதது. ஆனால் என் பல முஸல்மாணிய நண்பர்கள் அல்லாவைத் தொழாதவர்கள் மீளா நரகம் புகுவர் என்றும் சொல்வர். அதை நான் புறந்த்ள்ளூவேன்.

    எனக்கு அறிமுகமான எந்த க்றைஸ்தவரும் தாங்கள் மேலே சொன்னபடிக்கு ஒரு கருத்து பகிர்ந்ததில்லை. பைபிளில் சொல்லப்படும் கடவுள் மட்டும் தான் கடவுள். அந்தக் கடவுளை நம்பாதவர் மீளா நரகம் புகுவர் என்றே எமக்குச் சொல்லியுள்ளனர். இவர்களைப் புறந்தள்ளிப்போவேன். ஒரே ஒரு விதிவிலக்கு வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களது மணிப்ரவாள கீர்த்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த நண்பர். கீர்த்தனைகளைப் பகிர்வதில் மட்டும் அவர் குறியாக இருந்தார். க்றைஸ்தவம் பற்றி எங்களிடையே சம்பாஷணம் இருந்ததில்லை.

    சிறுவயதிலிருந்து நான் கேட்டு வளர்ந்த விஷயம் தான் தங்கள் புரிதல் என்று அறியும் போது சந்தோஷமாக இருக்கிறது. அது மட்டுமா

    எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானை தன் ஹ்ருதயாகாசத்தில் எப்போதும் கொண்ட ….எங்கள் அன்பிற்கும் வணக்கத்திற்குமுறிய பெருந்தகை திருமுருக க்ருபானந்தவாரியார் ஸ்வாமிகள் அவர்களது அம்ருத வசனம்

    முருகா.

    உளம் வசமானால்

    உலகம் வசமாகும் .

    கிருபானந்தவாரி

    ஸ்ரீமதி பவளசங்கரி அம்மணி சொன்ன வண்ணம் நான் அவலை நினைத்து உரலை இடித்து விட்டேன் என்று தான் தோன்றுகிறது.

    ஹ்ருதய பூர்வமாகச் சொல்கிறேன். தங்களைப் புண்படுத்தி விட்டேனோ என வருந்துகிறேன். எங்கள் முருகன் என் நாவிலும் என் மனதிலும் இனியவையே பேசப் பணிக்குமாறு இறைஞ்சுகிறேன்.

    பரஸ்பரம் பகிர நல்ல விஷயங்கள் நிறையவே இருக்கின்றன ஐயன்மீர்.

  4. Avatar
    புனைப்பெயரில் says:

    ஓர் உன்னத தமிழ்ச் சமய, இலக்கிய ஞானியோடு –> இதைத் தான் ஹிண்டன் அஜண்டா என்பது.. இவருக்கு இந்து சமய ஞானி என்று சொல்ல முடியவில்லை. திருமண் முழுதும் பூசி அவர் சிவாச்சாரியார் போல் தோற்றம் தருவார். இந்து மத துறவி என்றே அவர் இருந்தார். எப்படியோ, திரு.சுகி சிவம் அவர்கள் இவருடன் இருந்தவர். அவரிடம் பேட்டி எடுத்தால் நிறைய அறியலாம்.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    நான் ஒரே ஒரு முறை அடிகளாரின் உரையைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவ்வுரை அவர் சார்ந்திருந்த சைவ சித்தாந்த மதத்தைப்பற்றியது. அம்மதம் நான் சார்ந்திருக்கும் மதத்தின் கொள்கைக்கு மாறானது என்றதால் எனக்குப்பற்றில்லை. அவ்வுரை நடந்தது தமிழகத்துக்கு வெளியே. மற்றபடி தமிழகத்தில் இருந்த காலை அவரைக்கேட்டதில்லை. மருத்துவர் ஜாண்சனின் அடிகளாரைப்பற்றிய கணிப்பு சரிதான் என்று அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதிலிருந்து தெரியும்.

    அடிகளார் போன்றோரே இன்று இந்து மதத்துக்குத் தேவை. மத நல்லிணக்கத்தை வளர்போர் அவர்கள் இன்று அருகிவிட்டது அடிகளாரின் வாழ்க்கைச்சிறப்பை நமக்கு பெரிதாகக்காட்டுகிறது. நிழருமை வெய்யிலிலே.

    But Dr Johnson, this is the most interesting part of your essay:

    //உயிர் அறிவுப் பொருள். ஆயினும் உயிர் முற்றாக அறிந்த அறிவுப் பொருளுமன்று. உயிர் ஒரு அறிவுப் பொருள் , ஆயினும் அறியாமையில் இணைந்து இருக்கிறது. உயிர் அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவைப் பெறுவதற்கே பேரறிவாக்கிய கடவுளை நாடுகிறது. எனவே உலகுயிர்கள் அனைத்தையும் தழுவி நின்று மெல்ல அவற்றின் அறியாமையிலிருந்து நீக்கி அறிவில் பூத்துக் குலுங்கச் செய்தலும் அறிவில் இன்புற்றமரச் செய்தலும் இறைவனின் குறிக்கோள். இதுவே தமிழ்ச் சமயத்தின் சாரம். ”//

    It is a pity that you have just passed it over in this essay. Could have added a bit more on his philosophy of religion.

  6. Avatar
    ஷாலி says:

    தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.

    அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான “சொல்லின் செல்வர்” இரா.பி.சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் அருள்திரு விபுலானந்த அடிகள் ஆவார்.

    பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான். 1945 – 48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.

    1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.

    அப்போது தெய்வசிகாமணி “அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.

    1949ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, “குன்றக்குடி அடிகளார்” என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார்.

    பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதினார்.

    அவர் தோற்றுவித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் “மக்கள் சிந்தனை”யும், “அறிக அறிவியல்” இதழும் குறிப்பிடத்தக்கன.

    தமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம்.

    வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் “குன்றக்குடி கிராமத்திட்டம்”.

    திருக்குறளின் ஆழத்தையும் அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டமைவன.
    http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=262&Itemid=348

    அன்பிற்கினிய நண்பர் டாக்டர்.ஜான்சன் அவர்களே! தமிழ் மொழியிலும் ஆன்மீகத்திலும் ஆன்று அமிழ்ந்து அடங்கிய சான்றோனாகிய, அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளாரோடு நட்புக் கொண்டிருந்தது, தங்கள் மேல் வைத்திருந்த மதிப்பை மேலும் உயர்த்தி விட்டது. சைவத் திரு மடத்தின் தலைவரோடு கிறித்துவ மருத்துவர் கொண்டிருந்த நட்பில் சமயப் பொறை இல்லை. அன்பும் அருளுமே இருவரிடையே சூழ்ந்திருந்தது.
    இன்று அந்த இன்பச் சூழ்நிலை மாறி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. இன்று முகமறிய சில்வண்டுகளின் சிறுமைகளுக்கும் நீங்கள் முகம் கொடுக்கவேண்டியுள்ளது, காலத்தின் கோலம்.
    “சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராகி பொறுப்பது கடனே!” தங்களின் மருத்துவ மக்கள் சேவையும்,தமிழ்ப் பணியும் என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

  7. Avatar
    N Sivakumar, New Delhi says:

    வணக்கம் டாக்டர்! புகைப்படத்தை பார்த்த உடனே உள்ளம் சிலிர்த்து விட்டது, தங்களையும் இப்போதுதான் காண்கிறேன். தங்கள் மருத்துவ அனுபவங்களை ஆவலோடு படிக்கும் எனக்கு நான் பெரிதும் மதித்து போற்றும் மாபெரும் தமிழ்முனிவருடனான தங்களின் அனுபவம் என் உள்ளத்தையும், உடலையும் ஒரு சேர சிலிர்க்க வைக்கின்றது. நான் சிறியவன் அவரை பார்க்கும் பேறு கிட்டவில்லை, ஆனால் அவருடைய தமிழ், தத்துவ புத்தகங்களை படித்து இருக்கின்றேன். பெரும் பேறு பெற்றவர் தாங்கள்… நன்றி!!!

  8. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் ஜான்சன் அவர்கள் கவனத்திற்கு

    க்றைஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பலர் பிற மதங்களைக் காழ்ப்புடன் அணுகுகின்றனர் என்று பலரும் கருத்துக்கொண்டுள்ளது பெரிதல்ல. உலகில் சமாதான தூதர் என்று அறியப்படும் மதிப்பிற்குறிய தலாய் லாமா இவ்வாறு கருத்துக்கொண்டுள்ளார். அவர் செக் குடியரசில் பேசிய விஷயத்தை அன்பர் ப்ரகாஷ் சங்கரன் காந்தி-இன்று தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

    http://www.gandhitoday.in/2013/09/blog-post_16.html

    \ “சில கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தவர்கள் பிற மதங்களை மிகவும் காழ்ப்புடன் அனுகுகின்றனர். அது மிகத் தவறு.\

    இந்தக் கருத்து மாற்றப்பட வேண்டும் என நினைக்கும் இந்த சமூஹத்தைச் சார்ந்த அன்பர்களின் செயல்பாடுகள் அதை பறைசாற்றும் . எனக்கு இந்த தேசத்தின் பாரம்பர்யத்தை மதிக்கும்…..அவ்வாறு பரிச்சயம் தெரிவித்த ஒரு முஸல்மாணிய அன்பரைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் வ்யாசம் பகிர்ந்துள்ளேன்.

  9. Avatar
    IIM Ganapathi Raman says:

    அடிகளாரின் சிறப்பைப்பற்றி சொன்ன போது நிழருமை வெயிலிலே என்றேன். அதைச் சிறிது விளக்குவாம்.

    இன்றைய தமிழகம், இன்றைய பாரதம் மட்டுமல்ல, அன்றைய தமிழகமும் அன்றைய பாரதமும். சாதிப்பெருச்சாளிகளையும் காமுகர்களையும் துறவிகள் வடிவத்தில் வேதனையுடன் பார்த்தது. பார்க்கின்றது.

    பிறமதங்களிலும் இப்புல்லுருவிகள் இருந்தாலும், அடிகளார் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் (தமிழ்ச்சமயம் அவர் வாக்கின் படி) சார்ந்தபடியாலே நாமும் அச்சமயத்தைப்பற்றியே பேசவேண்டியதாகிறது.

    புற்றீசல் போல பெருக்கடுத்த வருகிறார்கள் . சாதியை வளர்க்கவே மடங்களை நிறுவி புனிதர் என்று அச்சாதிமக்களால் மட்டுமே அழைக்கப்பட்டு ஜோடிக்கப்படுகிறார்கள். தம் சாதியினருக்கு மட்டுமே அங்கு வேலையும் கொடுக்கிறார்கள். இந்துமதத்தை வளர்க்கிறேன் எனற பெயரில் சாதிகள் வளர்க்கப்படுகின்றன.

    மதுரை திருஞான சம்பந்த மடத்தின் பீடத்துக்கு வாரிசு ஒருவரை வைத்தபோது, ஏன் அவரை வைத்தீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு, இராஜசேகரின் சாதிச்சான்றிதழை நிருபர்களிடம் தூக்கிக்காட்டினார் ஒருவர். இல்லையா?

    இப்படிப்பட்ட நாட்டிலே, இப்படிப்பட்ட இருட்டிலே, ஒரு துறவி என்றாலே முகத்தைச்சுழிக்கும் காலை வந்த போது அடிகளார் வந்தார்கள் காலை கதிரவனாக. துறவி, துறவரம் என்றாலே ஒரு புதிய உணர்வும் மதிப்பும் மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது. உண்மை. இந்துமதத்துக்கு ஒரு புத்துயிர் பாய்ச்சப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

    துறவி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்பவரை அவரின் மதத்தவர் மட்டுமன்றி, பிறமத்ததவரும் மதிப்பும் மரியாதையுடன் கூட பார்க்கவேண்டும். பேச வேண்டும். தமிழகத்தில் அச்சாதனையைச்செய்து மறைந்தவர் அடிகளார் எனபதே நான் எழுதிய உவமையின் சாராம்சமாகும்.

  10. Avatar
    அமீதாம்மாள் says:

    நட்புக்கு மிக முக்கியம் ஒத்த மனம் அது உங்களுக்கும் அடிகளாருக்கும் அமைந்திருந்தது. இதுபோன்ற பெரிய மனிதர்களின் நட்பு யாருக்கும் எளிதாகக் கிடைப்பதில்லையே
    அப்படியே கிடைத்தாலும் உங்களைப் போல் அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் எத்தனை பேர்

  11. Avatar
    N Sivakumar, New Delhi says:

    ஷாலி அவர்களுக்கு மிக்க நன்றி! படித்த தகவல்தான், இருப்பினும் குருமகா சன்னிதானத்தின் பூர்வாசிரமத்தை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தது மிக பொருத்தமாகவும், நன்றாகவும் இருக்கின்றது!!

  12. Avatar
    ஸ்ரீவிஜி says:

    டாக்டர் ஜான்சன் அவர்களே, நீங்கள் உங்களின் `உடல் உயிர் ஆத்மா’ என்கிற நாவலில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களிடம் சென்று ஆத்மா பற்றிய ஆய்வினை மேற்கொண்ட அத்தியாயத்தை வாசிக்க நேர்ந்தபோது, கதைக்கு வலுசேர்க்க கற்பனையாக நுழைக்கப்பட்ட சங்கதி அது என்றல்லவா நினைத்திருந்தேன்.! சுவாரஸ்யம் ததும்பும் அந்நாவலில் வந்த இச்சம்பவங்கள் மட்டுமல்ல அங்கே சொல்லப்பட்ட அனைத்தும் உண்மைதான் என்று இப்போது தோன்றுவதால், நான் விரும்பி வாசித்த `உடல் உயிர் ஆத்மா’ என்கிற உங்களின் முதல் நாவலை மீண்டும் ஒருமுறை மீள்வாசிப்பு செய்வேன் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
    மலேசியாவில் ஒரு எழுத்தாளராக, சிறந்த சிறுகதை விமர்சகராக, மருத்துவ ஆலோசகராக இருந்த உங்களை ஒரு குறுகிய வட்டத்து எழுத்தாளர் கூட்டம் கூட அங்கீகரிங்காத பட்சத்தில் – அறியப்படவில்லை என்பதைவிட வாசகர்களிடம் முறையாகப்போய் சேர்வதற்கு தகுந்த விளம்பரம் கிடைக்காத அல்லது கொடுக்காத காரணத்தால் – இன்று உலகமுழுக்க உங்களின் எழுத்து வாசிக்கப்பட்டு, சர்ச்சைகளும் பாராட்டுகளும் குவிகின்றதைப் பார்க்கின்றபோது பேருவகை அடைகின்றேன். இச்சிறப்பிற்கு திண்ணைக்கே நன்றி சொல்லவேண்டும். ஸ்ரீவிஜி

  13. Avatar
    Ram says:

    புதுக்கோட்டைமாவட்டதில் உள்ள ராமச்சந்திரபுரம் (கடியாபட்டி) பள்ளியில் படித்தவர் என்று என் தந்தையார்( அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ) கூறகேட்டிருக்கிறேன் அடிகளாரின் சகோதரன் கோபாலக்ருஷ்ணன் என்பவர் அப்பள்ளியில் தமிழ் ஆசிரியரா பணி புரிந்தவர். எப்பொழுது கூப்பிட்டாலும் எங்கள் பள்ளிக்கு வந்து உரை ஆற்றுவார் திருக்குறளில் அப்படிஒரு தேர்ச்சி மடை திறந்தால் போன்று பேச்சு நேரத்தை சரியாக கணக்கிட்டு சொல்லவேண்டிய பொருளை சரியாக கூறி முடிப்பார். காரைக்குடி கம்பன் விழாவிலும் பேசகேட்டிருக்கிரன்

  14. Avatar
    suvanappiriyan says:

    நான் மதிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரைப் பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி! இவரைப் போன்றவர்களால் இந்து மதம் மேலும் செழிப்புறும். ஆனால் தற்போதய நம் இந்திய சூழல் ஒன்றும் சொல்வதற்கில்லை. வருத்தமே மேலோங்கிறது. எல்லாம் இறைவன்தான் எனது நாட்டை காப்பர்ற வேண்டும்.

  15. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் திரு சி. ஜெயபாரதன் அவர்களே, அடிகளார் ஓர் அபூர்வ நண்பர். அவருடன் பழகிய நாட்கள் மிகவும் இனிமையானவை, பயன்மிக்கவை . அவரின் எதிர்ப்பாராத மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பாகும்! தங்களின் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

  16. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் சுப்ரபாரதிமணியன் அவர்களே, தாங்கள் கூறியவாறே இளைய அடிகளார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களையும் பார்த்து அந்த அனுபவத்தையும் நிச்சயமாக திண்ணையில் எழுதுவேன். நன்றி. …டாக்டர் ஜி. ஜான்சன்.

  17. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் திரு கிருஷ்ணசாமி அவர்க்ளுக்கு வணக்கம். நான் உடன் பதில் தராததால் உங்கள் மேல் கோபம் என்றுகூட நீங்கள் நினைத்திருக்கலாம். அப்படியில்லை. வேலை பளுதான் காரணம் அப்படி என்ன வேலை? திண்ணைக்கு என்னுடைய அடுத்த படைப்பைத் தயாரிக்கும் வேலைதான். நான் வாரந்தோறும் இரண்டு பெரும் படைப்புகள் அனுப்புகிறேன். ஒன்று மருத்துவக் கட்டுரை. மற்றொன்று சுவையான மறக்க முடியாத அனுபவங்கள். இதனால் பின்னூட்டங்கள் எழுதுவது தாமதமாகிறது. கோபம் ஏதுமில்லை.

    அடிகளார் பற்றிய எனது கட்டுரையைப் படித்துவிட்டு பாராட்டியுள்ளதற்கு முதற்கண் நன்றி. அவர் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லியிருக்கலாமே என்ற தங்ளின் அங்கலாய்ப்பு எனக்குப் புரிகிறது. உண்மைதான் . அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம். இதில் எங்கள் நட்பை மட்டுமே முன்வைத்துள்ளேன். அவர் கூறும் தமிழ்ச் சமயம் பற்றி பின்பு சமயங்கள் பற்றி எழுதும்போது கூறுவேன்.
    உலகின் சமயங்களும் கடவுள்களும் மனிதர்களை ஒன்று சேர்ப்பதை விடுத்து பிரிவினைகளுக்கும், பிரச்னைகளுக்கும் , போராட்டங்களுக்குமே வழி வகுக்கின்றன. எந்த மதத்தினரும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை வீட்டுக்குக் கொடுக்காதக் காலம் இது. இது பற்றிய சர்ச்சைக்கு முடிவே இருக்காது.

    நான் கடவுளை இயற்கையின் அழகில் காண்கிறேன் . இதை விளக்க அதிக தூரம் போகத் தேவை இல்லை. ஒரு சாதாரண மலர் போதும். மண்ணில் விளையும் ஒரு செடியில் எப்படி அந்த வண்ணமும், மென்மையும் , மணமும் கொண்ட மலரைத் தர முடிகிறது/? இதுவே இயற்கையின் அழகு!

    தாங்கள் கூறியதுபோல் நிறைய பேச வேண்டிய நல்ல செய்திகள் நிறையவே உள்ளன நண்பரே. நேரம் கிட்டும்போது பேசுவோம்…நன்றி . வணக்கம்…. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  18. Avatar
    Dr.G.Johnson says:

    தங்களின் கருத்துக்கு நன்றி திரு புனைப்பெயரில் அவர்களே. அடிகளார் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தினர் அனைவருக்கும் சொந்தமான தமிழ் அறிஞர் என்பதால் அவரைத் தமிழ்ச் சமய இலக்கிய ஞானி என்று சிறப்புடன் அழைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து…டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      ஓ.கே. எனக்கு இந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் என பிற மதங்களின் அடையாளம் துறந்து திருக்குறளை ஹோலி புத்தமாக கொண்டு, ஆனால் அதில் சொல்லப்படுபவைகளைப் பின்பற்ற முயலும் வாழ்க்கையை வாழும் சமுகமாக தமிழர்கள் இருந்திருக்க வேண்டும், இருக்க வேண்டும் என்ற நினைப்பு உண்டு. மனிதனின் ஆளுமைக்கான சில எதேச்சிகார கட்டமைப்புகளின் கண்டுபிடிப்பே மதமும், கடவுள்களும் என்பது என் நினைப்பு. தத்துவங்கள் யார் சொன்னாலும் அது நமது நிலையின் படி நல்லது கெட்டதாக தோணும். மத்தபடி, கோவில்கள், சர்ச், மசூதிகள் எல்லாமே கடவுள் இடமல்ல… மனித கூட்ட ஆளும் வர்க்கத்தின் போதை மையங்களே… மற்றபடி, உங்கள் எழுத்துக்கள் நன்குள்ளன.

  19. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு IIM கணபதி ராமன் அவர்களே.வணக்கம். தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. அடிகளார் தீவிர சிந்தனையாளர். அவருடையப் பார்வையில் பகுத்தறிவும், அறிவியலும் , பொருளாதாரமும் மிளிரக் காணலாம். அவரைப்பற்றி முழுமையாக எழுத இந்தத் தளம் போதாது. அதனால்தான் எங்களுக்கான நெருக்கமான நட்பை மட்டும் கோடிட்டுக் காட்டினேன்…நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்..

  20. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ஷாலி அவர்களுக்கு வணக்கம். அடிகளாரின் இள வயது தமிழ் வளர்ச்சியையும், ஆன்மீகத்த்தில் அவர் அடைந்த முன்னேற்றத்தையும் சுவைபட எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அடிகளாரின் சமுதாயப் பணிகள் ஏராளம். அவற்றை நீண்ட பட்டியல் இடலாம். மதத்தால் வேறுபட்டிருந்தாலும், எண்ணங்களாலும், உள்ளங்களாலும், மொழியாலும், இனத்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றுபட்டவர்கள் மட்டுமல்ல , நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள் என்பதைச் சொல்வதே இக் கட்டுரையின் நோக்கம். ஒருவரையோருவர் புரிந்து கொள்வதின் மூலமே மதங்களின் நல்லிணக்கம் உண்டாகும்….நன்றி… அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  21. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள அமீதாம்பாள் அவர்களே, நட்புக்கு மிகவும் இன்றியமையாதது ஒத்த மனம் என்பது உண்மையே. ஒத்த மனம் மதங்களுக்கும் அப்பாற்பட்ட சக்தி மிக்கது! நன்றி….. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  22. Avatar
    Dr.G.Johnson says:

    புது டில்லி திரு N. சிவகுமார் அவகளுக்கு வணக்கம். எனது ” நட்பு ” வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி…நல்லவர்களின் வாழ்க்கையை எத்தனைத் தடவைகள் படித்தாலும் உற்சாகமே மேலிடும்……………….டாக்டர் ஜி. ஜான்சன்.

  23. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு ஸ்ரீவிஜி, எனது முதல் நாவலான ” உடல் உயிர் ஆத்மா ” வை இன்னும் அப்படியே நினைவில் வைத்து அதில் நான் ஆத்மா பற்றிய விளக்கம் கேட்க அடிகாளாரிடம் சென்றதை அப்படியே இப்போது எடுத்துக் கூறியுள்ளது , நீங்கள் அந்த நாவலை முழுதுமாக உள்வாங்கியுள்ளீர்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. தங்களின் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்.

    உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். நான் புகழ் தேடி அலையும் படைப்பாளன் அல்லவென்பது. எனது அனுபவங்களை இவ்வாறு உலகளாவிய நிலையில் எடுத்துக் கூற உதவும் திண்ணைக்கு நானும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நல்ல பின்னூட்டத்திற்கு நன்றி விஜயா ……………….டாக்டர் ஜி. ஜான்சன்.

  24. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ராம் அவர்களே, அடைகளாரின் திருக்குறள் உரையையும் கம்பன் விழா சிறப்புரையையும் நினைவு கூறியமைக்கு நன்றி…..டாக்டர் ஜி. ஜான்சன்.

  25. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. சுவனப்பிரியன் அவர்களுக்கு வணக்கம். அடிகளாரின் தனித்துவம் அவர்களின் தமிழ் மொழிப் பற்றாகும். அதன்மூலம் அவர்கள் அனைத்து தமிழ் மக்களையும் கவர்ந்து தன்பால் ஈர்த்துக்கொண்டார். அதனால்தான் உலகத் தமிழர்கள் அனைவருமே அடிகளாரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்….நன்றி…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  26. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் திரு புனைப்பெயரில் அவர்களே. தங்களின் வாழ்க்கைத் தத்துவம் கண்டு வியந்தேன்! காரணம் நானும் இத்தகைய கொள்கை கொண்டவன்தான்! அதனால்தான் நான் பவள சங்கரிக்கு எழுதிய போது நாம் மதங்களை சற்று நேரம் மறந்து பேசுவோம் என்ற முன்னுரை தந்தேன்.

    தமிழர்களாகப் பிறந்தவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மொழியாலும், இனத்தாலும் தமிழர்கள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்பதே எனது அவாவாகும். இது இயலாத காரியமன்று!

    இந்த கால கட்டத்தில் நமது வீடுகளில் தமிழ் பேசாமல் ஆங்கிலம் பேசும் மோகம் வளர்ந்து வருகிறது. ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பு, பெருமை என்ற நினைப்பு நம்மிடையே பெருகி வருகிறது. இன்று வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களிடம் கூட ஆங்கிலத்தில் பேசும் நிலையில் உள்ளோம்! இந்த நிலை நீடித்தால் எதிர் காலத்தில் நம் பிள்ளைகளுக்கு தங்களின் இனத்தின் அடையாளம் தெரியாமல் போய்விடும் ஆபத்து உள்ளது!

    நாம் மதங்களின் மேல் கொண்டுள்ள ” வெறியை ” நம் தமிழ் மீது கொள்ளாமல் போனது பரிதாபமே!

    நான் இந்த குற்றச்சாட்டை அனைத்து மதத்தினர்மேலும் சாட்டுகிறேன். மதத்துக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழுக்குத் தருகின்றனரா? தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை ஊட்டுகின்றனரா?

    தமிழ் இனத்தின் பெருமையையும், நீண்ட வரலாற்றையும் , மொழியின் தொன்மையையும் சிறப்பையும் கூறும் நமது சங்க இலக்கியங்களை எல்லா தமிழர்களும் அறிந்து கொள்ளும் காலம் வருமா? அவை புலவர்களால் சங்கத் தமிழில் எழுதப்பட்டவை என்பதால் புரிந்து கொள்வது சிரமம் என்று வாதிடுவோர் இருக்கலாம்.

    ஆனால் ஈரடி வெண்பாவில் வாழ்க்கையின் தத்துவமே சொல்லப்பட்டுள்ளதே வள்ளுவரின் குறள்! அதையாவது தமிழர்கள் படித்து உணர முயல்கின்றனரா? அது பற்றி பிள்ளைகள் அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் உள்ளதா? ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் திருக்குறள் தமிழ் மறையாகப் போற்றப்படும் நாள் வருமா? அப்படி வந்தால் அதுவே தமிழரின் பொற்காலம்! நன்றி……….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  27. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் மரு. திரு. ஜான்சன்,

    நல்லதோர் நட்பின் இலக்கணம்..
    //” டாக்டர். இதை திருமுருக கிருபானந்த வாரியார் எனக்குத் தந்தது. இதை இப்போது உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். இதைப் படித்துப் பாருங்கள். ” என்றார். நான் நன்றியுடன் அதைப் பெற்றுக் கொண்டேன்.//
    அற்புதமான நினைவுப்பரிசு! தங்களுடைய எண்ணத்தையும், செயல்களையும் ஒருசேர அருமையாக வெளிப்படுத்தியுள்ள ஒரு இடுகை. நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  28. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்துமத ஞானயோகி விவேகானந்தர் புத்தர், ஏசுநாதர் இருவரே தான் மதிக்கும் உன்னத உலகப் பணி மேதைகள் என்று ஓரித்தில் கூறுகிறார்.

    சுதந்திரப் பிதா மகாத்மா காந்திக்கு அகிம்சா வழிமுறையைக் கற்றுக் கொடுத்தவர் ஏசுநாதர் என்று தெரிகிறது.

    அதுபோல் கிறித்துவ மதத்தைப் பேணும் டாக்டர் ஜி. ஜான்சன் அவர்கள் இந்துமத ஞானி குன்றக்குடி அடிகளார் மீது ஓர் உயர்ந்த மதிப்பு கொண்டுள்ளது போற்றப்பட வேண்டியது.

    இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன ? மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு. இந்தக் கட்டுரை திண்ணை உலகத் தமிழ் வலையில் வந்த நல்லதோர் உன்னதப் பகிர்வு.

    தூரப் பார்வை இல்லாத கிட்டப் பார்வைக் கண்ணுடையார்க்கு இவை தெரியாமல் போனதில் வியப்பில்லை.

    பாராட்டுகள் டாக்டர் ஜி. ஜான்சன்.

    சி. ஜெயபாரதன்

  29. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி. அடிகளார் அன்று எனக்குத் தந்த அந்த அபூர்வ அன்பளிப்பை இன்றுவரை ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறேன். இந்தக் கட்டுரை எழுதும்போதுகூட அது என் அருகில் இருந்தது. உன்னதமான நட்பை மதம் என்ற முட்டுக்கட்டையால் தடை செய்ய முடியாது.

    ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்

    புன்கண்நீர் பூசல் தரும். ” குறள் 71.

    நன்றி…. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  30. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் திரு சி. ஜெயபாரதன் அவர்களே , மத நல்லிணக்கத்தை நமது பள்ளிகளில் இளம் வயதிலேயே ஒரு பாடமாக நாம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் புதியதோர் தமிழ்ச் சமுதாயம் எதிர்காலத்தில் மலரும். இல்லையேல் அது வெறும் பகல் கனவேயாகும். இந்தப் புனிதப் பணியில் படைப்பபளர்கள் அனைவருமே கவனம் செலுத்தலாம். நல்ல மேற்கோள் காட்டியுள்ள தங்களுக்கு நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *