கவிதைகள்

Spread the love

ஜெம்சித் ஸமான்

 

கடலும், தீவுகளும்——

அலைகள் இல்லாத
ஒரு கடலை உருவாக்கினேன்
ஆழ் கடலில் மட்டும்தான்
அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது
இந்தக் கடலைப் பற்றி
நீங்கள் தெரிந்து கொள்ளும் போது
நான்கு பக்கங்களும்
மலைகளால் சூழப்பட்ட
அழகான தீவை
நான் உருவாக்கிக் கொண்டிருப்பேன்

எனக்குள் ஓடும் நதி

எனக்குள்
ஒரு நதி ஓடுகின்றது
அந்த நதியை நான் விரும்புகிறேன்
என் கண்ணீர் தீர்ந்து
நதி வறறி
இறுதி இரங்கலோடு
மீன்கள் எனக்குள் துடிக்கும் போது
நான் மீண்டும் அழுவேன்
எப்போதும் வற்றாத என் நதியை
நீங்கள் என்றாலும்
கடந்து செல்லுங்கள்
அதுவரை என் அறையின் கதவுகளை
அடைத்துக் கொள்கிறேன்
நீங்கள் ஓசை எழாமல்
கால்களில் ஈரம் படாமல்
என் இதயத்தின் மீது
நடந்து செல்லலாம்
தயவு செய்து என் நதியில் ஓடும்
மீன்களை உங்கள் கண்களுக்குள்
நிரப்பிச் செல்ல முடியுமா
இந்த மீன்களின் உயிர்
என் கண்ணீரில்தான் இருக்கிறது
கண்ணீரை இந்த மீன்களுக்காக
விரும்பி ஏத்றுக் கொண்டிருக்கிறேன்
இல்லை என்றால்
எனக்குள் ஓடும் இந்த நதி
எப்போதோ வற்றியிருக்கும்

-ஜெம்சித் ஸமான்

கறுப்பு நிற ஆப்பிள் கனிகள்

ஆப்பிள் கனி ஒன்றை
புசித்து கொண்டிருந்தேன்
நறுக்கிய துண்டுகள்
ஒவ்வொன்றிலும்
அவமானத்தால் கூனி குறுகி
நின்று கொண்டிருந்தார்கள்
ஆதாமும் ஏவாளும்

அவர்களது கைகளில் இருக்கும்
கறுப்பு நிற ஆப்பிள் கனிகளை
எப்படிப் புசிப்பதென்று
இருவருக்கும்
தெரிந்திருக்கவில்லை

தனித்திருத்தலை
மறக்கும் விளையாட்டு-

பீதியூட்டும் வெய்யில் இன்று
வெக்கை புழுக்கம் தணியாசச் சூடு
வெறிச்சோடிய தெருவில்
நண்பர்களையும் காணவில்லை
நீண்ட நேரமாய் வீட்டில்தான்
அமர்ந்திருக்கிறேன்

தனித்திருத்தல் என்பது
பெரும் சுமையான ஒன்று

அதனால்தான் தனிமையை நீக்கி
என்னை நானே மகிழ்வூட்டிக் கொள்ள
ஒரு விளையாட்டை பழகிக் கொண்டேன்
என்ன என்று கேட்கின்றீர்களா?

விதி முறைகளை சொல்லித் தருகிறேன்
பின்பு நீங்களும் இந்த விளையாட்டை
விளையாடிப் பார்க்கலாம்

முதலில் நீங்கள் தனித்திருத்தலை
உணரும் சந்தர்பம்
வாய்க்க வேண்டும்

உங்களை நீங்களே
வெறுக்க தொடங்க வேண்டும்
பின்பு விளையாட தொடங்க வேண்டும்

எப்படி என்றால்

நீங்கள் தனித்திருக்கும் தருணத்தில்
கண் எதிரே எது தெரிகிறதோ
அதை எல்லாம் ரசிக்க வேண்டும்

உதாரணமாக
மரங்கள்
பூக்கள்
பறவைகள்

பின்பு மரங்களோடு அசைய வேண்டும்
சருகோடு புரள வேண்டும்
பறவையோடு பறக்க வேண்டும்
பூக்களோடு மலர வேண்டும்
ஆறுகளோடு தளும்ப வேண்டும்

இவை எல்லாவற்றையும் கற்பனையில்
நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்றால்
நீங்கள் முதலில்
உங்களை மறக்க வேண்டும்

இந்த விளையாட்டின் விதி முறையில்
இப்போது நான் கூறப்போவது
மிகவும் முக்கியமான ஒன்று

நீங்கள் எதற்காகவும்
வருந்தவே கூடாது

உதாரணமாக நேற்று நீங்கள்
ஒரு பூவை ரசித்திருக்கலாம்
இன்று நீங்கள் அதை ரசிக்க வரும் போது
அது உதிர்ந்திருக்கலாம்
இந்த சந்தர்ப்பத்தில்
நேற்றைய பூவைப் பற்றிய சலனம்
உங்களுக்கு சிறிதும் இருக்க கூடாது

அந்த தருணம்
ஒரு சுவரை என்றாலும்
நீங்கள் ரசித்துத்தான்
ஆக வேண்டும்

இன்றைய என் விளையாட்டில்
ஒரு வண்ணத்து பூச்சியை பார்தேன்
பூ மரங்கள் இல்லாத
என் வீட்டு வாசலில்
நீண்ட நேரமாய் பறப்பதும்
பின் காணாமல் போவதும் என்று
இறுதியில் துணி உலர்த்தும்
கொடிக் கயிற்றில் மொய்த்து கொண்ட போது
நிச்சயமாக தனிமையை உணர்ந்திருக்கும்

ஏனென்றால்
வண்ணத்து பூச்சிக்கு
இந்த விளையாட்டைப் பற்றி தெரியாது

-ஜெம்சித் ஸமான்

Series Navigationஇதயம் துடிக்கும்வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்