புண்ணிய விதைகள் – சிறுகதை

This entry is part 25 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய
ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும்
தன் கடமையில் இருந்து தவறாமல் வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து,
நெற்றியில் திலகம் இட்டு, வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து பெருக்கி
கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் மங்கலம். பால் தீயும் நாற்றம் வரவே கோலத்தை
பாதியிலே நிறுத்தி அடுப்படிச் சென்று பாலை இறக்கி வைத்துவிட்டு
மறுபடியும் விட்ட
இடத்திலிருந்து கோலத்தை முடித்தவள் தன் கணவன் இன்னும் கட்டிலிருந்து
எழாதததைக் கண்டு…

‘என்னங்க எழுந்திருங்க… ரிடையர்ட் ஆனாலும் ஆனிங்க… இப்படியா
கும்பகர்ணன் மாதிரி தூங்கறது.’ கணவன் சிவராமனை அர்ச்சனை செய்தபடியே
அடுப்படி சென்று காபி கலந்து படுக்கறை சென்று அவரிடம் நீட்டினாள்
மங்களம்.

‘என்ன மங்களம்.. மணி ஆறுதானே ஆகுது… அதுக்குள்ள எழுப்பிட்ட… நல்ல கனா
வந்தது கலைச்சிட்டியே…’ போர்வையை விலக்கி படுக்கையில் இருந்து எழுந்து
அமர்ந்தபடி சிவராமன் கேட்க…

‘என்ன கனா.. இன்ட்ரெஸ்டிங்கா இருந்தா சொல்லுங்களேன் கேட்கலாம்‘ காபி
டபாராவை கையில் ஆற்றிபடி அவர் கூறப்போவதை கேட்கும் ஆவலில் அருகில்
அமர்ந்தாள் மங்களம்.

‘அது வந்து… அத விடு… உனக்கு எதுக்கு… போதும் காபிய ஆத்தியது..
சூடா குடிச்சாத்தான் சுறுசுறுப்பு வரும்’

‘எந்த பொம்பணாட்டியாவது கனாவில வந்தாளா.’

‘அப்படியெல்லாம் இல்ல…’ பல்லெல்லம் தெரிய வழிந்தார் அவர்.

‘போதும் வழியுது துடைச்சிக்குங்க.. பிள்ளை இல்லாத வீட்ல கிழவன்
துள்ளிக்குதிச்சானாம் அது மாதிரிதான் இருக்கு… காபி குடிச்சிட்டு
வாக்கிங் போற வழியப்பாருங்க.. சுகர் பிரஷராவது குறையும்’ முகத்தில்
சுழிப்பை காண்பித்து தன் வேலையைக் கவனிக்க அறையைவிட்டு அகன்றாள் மங்களம்.

கும்பகோணத்தில் அக்ரஹார தெருவில் இருந்த அந்த தனி மாடி வீட்டில் அவர்கள்
இருவரைத்தவிர யாரும் இல்லை, மகன் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்
ஆகிவிட… மகளுக்காவது உள்ளூரிலே மாப்பிள்ளைப் பார்த்து அருகில் இருக்க
வைக்கலாமென்று திருமணம் முடித்து வைக்க… திருமணமான சிறிது நாளிலே
கணவனின் வெலை மாற்றல் காரணாமாக அவளும் குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று
விட… இப்பொழுது இருவரும் தனிவீட்டில் ஒருவர் முகத்தைப் பார்த்து
காலத்தை கழித்துக்கொண்டிருந்தனர்.

ஆறு மாதத்திற்கு முன்னர் தான் சிவராமன் குடவாசல் ஒன்றிய அரசாங்க
அலுவலகத்தில் சீனியர் செக்க்ஷன் ஆபிஸ்ராக இருந்து ரிட்டையர்ட் ஆனார்.
தற்சமயம் பொழுது போகாமல் காலையில் வாக்கிங் செல்வதும்… பின்னர் மனைவி
மங்களம் கொடுக்கும் ஓட்ஸ் கஞ்சியோ, கேப்பங் கூழையோ அல்லது டிபன் என்ற
பெயரில் கொடுக்கும் டார்ச்சரை சகித்துக்கொண்டு தினசரியை விரிப்பவர், வரி
விளம்பரத்தை கூட ஒருவரி விடாமல் படித்து முடிக்க மதிய உணவு நேரம்
நெருங்கி விடும்… மறுபடியும் மங்களத்தின் மதிய பத்திய உணவு உண்டு
குட்டித் தூக்கம் போட்டு மாலையில் மறுபடியும் வாக்கிங், டிவி சீரியல்
என்று தின வாழ்க்கைச்சக்கரம் சுழன்றுகொண்டிருந்தது அவருக்கு.

‘நான் வர்றதுக்குள்ள ஹீட்டர் போட்டு வை… இன்னிக்கு தாலுக்கா ஆபிஸ்
வரைக்கும் போயிட்டு வரணும் ஒரு வேளை இருக்கு..’

‘பழைய பிரெண்ட யாரையாவது பாக்கப்போறிங்களா…’ எதுக்கு என்று கேட்டால்
அதற்கு சுள்ளென்று கத்துவார் என்பதால் சூசகமாக கேட்பதை அவள் வாடிக்கையாக
கொண்டிருந்தாள்.

‘நம்ம அடுத்த தெரு ஏகாம்பரம் இருக்கானே.. அதான் புதுப்பணக்காரன்..
மீன்சுருட்டில சல்லீசா நிலம் கெடைக்குதுன்னு வாங்கப் போறானாம்… தாலுகா
ஆபிஸ்ல வேல செஞ்சதால எனக்கு டாக்குமென்ட்ஸ் பத்தி தெரியுமின்னு அந்த
நிலத்தைப் பத்தி விசாரிச்சு.. ஏதாவது வில்லங்கம் இருக்கான்னு செக் பண்ணக்
கூப்பிட்டான்’ பெருமை பொங்கச் சொன்னார் சிவராமன்.

‘ஓ… சரிசரி… சொல்ல மறந்திட்டேன்..  நேத்திக்கு பொண்ணு போன் பண்ணி
இருந்தா… இன்னிக்கு அவளும் பேத்தியும் தஞ்சாவூர்ல இருந்து
வர்றாங்கன்னு..’ உற்சாகமாய் மங்களம் சொல்ல…

‘எப்ப வர்றாங்களாம்… ‘

‘சாய்ந்திரத்துக்குள்ள வரேன்னு சொல்லியிருக்கா… அதுக்குள்ள வந்திருவிங்க இல்ல.’
‘அவ்வளவு நேரமெல்லாம் ஆகாது… மதியத்துக்குள்ள வந்திடுவேன்…’

‘வரும் போது பேத்திக்கு பழம், மிக்ஸ்ர், சுவீட் வாங்கிட்டு வந்துடுங்க…
என்ன… மறந்திடப்போறிங்க..’

‘நல்ல காலம் ஞாபகப்படுத்தின… கண்டிப்பா வாங்கி வந்திடறேன்…’ சொன்னவர்
வாக்கிங் செல்ல வெளியே கிளம்பினார்.

கும்பகோணம் தாலுகா ஆபிஸ்…. காலை 10 மணி வாக்கிலே கூட்டம் அலைமோதியது..
கட்சிக்கொடி கட்டிய டாடா சுமோக்களுடன் கரை வேட்டிகள் கூட்டம் கூட்டமாய்
ஆங்காங்கே தென்பட்டனர். ஒவ்வொரு செக்க்ஷன் எதிரிலும் நெற்றியில்
விபூதியும் குங்கமும் சந்தனமும் கை அக்குளில் கைப்பையும் வைத்தப்படி
புரோக்கர்கள் சுறுசுறுப்பாக செல்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டோ அல்லது
தான் சுறுசுறுப்பாக இருப்பதாக பார்ப்பவர்களுக்கு பாவ்லா செய்துகொண்டோ
இருந்தனர்.
‘சே… அரசாங்க நடவடிக்கை எல்லாம் கணணி மயமாகியும் இன்னும் இந்த
புரோக்கர்கள் தொல்ல தாங்க  முடியல..’  நண்பரிடம் அலுத்துக்கொண்டபடி
சொன்னார் சிவராமன்.

‘சார்… நீங்க வேலை செய்யும் போதும் இப்படித்தானா..’  நண்பர் ஏகாம்பரம் கேட்க…

‘ஆமா சார்… இவுங்க பண்ற தொல்லையால தான் ஒழுங்கா  நேர்மையா வேலை
செய்யறவணும் லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுடறாங்க… ‘

‘இதெல்லாம் ஒழிக்க முடியாதா…’ அப்பாவியாக அவர் கேட்டார்.

‘எப்படிச் சார் முடியும்… இருப்பிடச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ்,
வருமானச் சான்றிதழ் வாங்க வந்தாலே… எல்லாம் டாக்குமெண்ட்டும் கரேக்ட்டா
இருந்தாலும் ஒவ்வொரு டேபிளும் மாறி மாறி சரிபார்த்து சான்றிதழ் கொடுக்கவே
குறைஞ்சது மூணு நாளு ஆகும்… ஆனா இந்த புரோக்கருங்க பணத்தக்காட்டி…
ஒரே நாளுள முடிச்சி தரேன்னு சொல்லிட்டு உள்ள இருக்கிற ஆபிஸருக்கு லஞ்சத்த
கொடுத்து வாங்கிகொடுத்திடறாங்க… என்ன பண்றது… பொது மக்களும் தங்களோட
வேலை சீக்கிரம் முடிஞ்சா போதுமின்னு கேக்கறத கொடுத்திடறாங்க… பொது
மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் சார்…  நேரம் முன்னபின்ன  நேரம்
ஆனாலும் நேர்மையா வாங்கனுமின்னு நெனச்சி.. லஞ்சம் கொடுக்கறத நிறுத்தினா
ஓரளவு வாய்ப்பு இருக்கு’ தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் சிவராமன்.

‘சரி வாங்க… உள்ளே போகலாம்.’

அப்பொழுதுதான் அவரை வாசலில் கவனித்தார்… எங்கேயோ பார்த்த முகமாய்
இருக்கவே.. சற்று கூர்ந்து கண்களை சுருக்கி அவரை கவனிக்க.. அது தன்னுடன்
தஞ்சாவூரில் வேலை செய்த தனக்கு மேலதிரியாக இருந்த ராமகிருஷ்ணன் எனத்
தோன்றியது…  அவரா இது… தான்னோடு வேலை செய்த போது ப்ரமோஷம் பெற்று
மாற்றலாகி ஒரத்தநாடு சென்றவர்… ஏன் இப்படி வெளியில் அமர்ந்து
வெள்ளைத்தாளில் எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்…  அவரைச் சுற்றி
நாலைந்து பேர்கள் வேறு நின்றுகொண்டிருந்தனர்… ஒருவேளை அவரும்… சே..
சே.. ஏதோ ஏதோ எண்ணம் தோன்ற.. அப்படி இருக்க வாய்ப்யு இருக்காது…
இருந்தாலும் இந்த காலத்தில் எதுவும் நடக்கும்.. பணத்தாசை யாரைத்தான்
விட்டது.

ராமகிருஷ்ணணுக்கு இரண்டு மகன்கள் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு….
இரண்டு பேரும் நல்ல நிலையில் இருப்பதாகச் சொல்வாரே.. அவருக்கா இந்த கதி..
ஒருவேளை அவர்கள் அவரை கவனியாமல் விட்டு விட்டார்களா.. பென்ஷன் பணம் வருமே
அதைக் கொண்டு நிம்மதியாக பொழுதைக் கழிக்காமல் இப்படி புரோக்கராக மாறி
ஆபிஸ் வாசலில் ஒவ்வொருவருக்கும் எழதிக் கொடுத்து பணம் வாங்குகிறாரே…
என்ன கொடுமை இது.. மனதிற்குள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டவராய்…

‘சார்.. கொஞ்சம் இருங்க… அங்கே இருக்கிறாரே அவர் என்னோட வேலை செஞ்ச
நண்பர் அவர பார்த்திட்டு வரேன்… ‘ என அவர் இருக்கும் இடத்திற்குச்
சென்றார் சிவராமன்.

‘இதுல வில்லங்கம் எதுவும் இல்ல…  நிலம் வாங்கும் போது டோர் நம்பர்
சரியா இருக்கான்னு பார்த்து வாங்கி இருக்கணும்… ஆனா ரெஜிஸ்டர்
பண்ணிட்டிங்க.. இப்ப பட்டா வாங்கும் போது.. ரெஜிஸ்டர் பண்ண டோர் நம்பர்
இல்லாம பழைய டோர் நம்பர் இருக்கு.. ரெண்டுக்கும் வித்தியாசம்
இருக்குதில்ல… இந்த ரெஜிஸ்டரேஷன் சட்டப்படி செல்லாது’ ராமகிருஷ்ணன்
எவரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.

‘ஆமாங்க அய்யா… இப்ப என்ன பண்றது‘

‘இது; உங்க தவறுன்னு சொல்ல முடியாது… நிலத்தோட பேரெண்ட் டாகுமென்ட்ட
சரியா பார்த்து டைப் பண்ணி இருக்கணும்.. பெரிசா ப்ராப்ளம் எதுவும்
வராது.. நல்ல வக்கீலாப் பார்த்து… மறுபடியும் தப்பில்லாம பத்திரம்
எழுதி… ரெஜிஸ்டர் பண்ணிடுங்க… ‘
‘மற்றப்படி வில்லங்கம் எதுவும் வராது இல்லையா..’ வந்தவர் பரிதாபமாய்
அவரிடம் கேட்க..

‘அதெல்லாம் ஒண்ணும் வராது.. திரும்பவும் ஒரு தடவ தப்பில்லாம டைப் பண்ணி
ரெஜிஸ்டேரேஷன் பண்ணிடுங்க.. ‘

‘சரிங்க… ‘

‘ஆ.. சொல்ல மறந்திட்டேன்.. மறுபடியும்  நீங்கதான் ரெஜிஸ்டேரேஷன் பணம்
கட்டணும்.. அவ்வளவுதான்.. சரியா..’

‘ரொம்ப நன்றிங்க.’ என்று தன் பாக்கெட்டில் கைவிட்டு அவர் பணத்தை
எடுத்துக் கொடுக்க..’ வாங்கிய ராமகிருஷ்ணன் அதனை தன் சட்டைப் பையில்
பத்திரப்படுத்திக் கொண்டார்.

‘இது என் விசிட்டிங் கார்டு… இதுல என்னோட அட்ரஸ் இருக்கு… வேற ஏதாவது
தேவை இருந்தா அங்க வாங்க முடிச்சிக்கொடுக்கறேன்….’

‘நன்றி சார்…’ அவர் கைகூப்பி விடைபெற…. எனக்கு அவரின் செய்கை
ஆச்சிரித்தைத் தந்தது.

‘சார்…’ சிவராமன் அவரை நட்புடன் பார்க்க… கண்ணாடியை கழற்றிய ராமகிருஷ்ணன்.

‘உங்களுக்கு என்ன செய்யனும்… சொல்லுங்க…’

‘சார்… என்னத் தெரியலயா.  நான்தான் சிவராமன்… தஞ்சாவூர்ல ஒண்ணா வேலை
செஞ்சோமே….’

‘ஒ… சிவராமனா… வயசாயிடுச்சி…. அதான் சட்டுனு ஞாபகம் வரல… எப்படி
இருக்கீங்க…’
‘நல்லா இருகேன் சார்… என்ன சார் இது… நீங்க போய் இப்படி..’ அதற்குள்
அருகில்  நின்றிருந்த மற்றொருவர்…

‘சார்.. இந்த பெட்டிஷன் எங்க சார் கொடுக்கணும்…’ ராமகிருஷ்ணணிடம் ஒரு
காகிதத்தைக் காட்டி கேட்க..

‘நேரா போயி.. லெப்ட்ல திரும்பினா… அக்கவுண்ட்ஸ் ஆபிஸ் இருக்கும்..
அதுக்கு பக்கத்துல ஒரு சின்ன அறையில் ஒரு ஆபிஸர் இருப்பார் அவர் கிட்ட
கொடுங்க…’

‘சரி சார்…’

‘எதுக்கு சார்.. நீங்க இந்த வேலையைச் செய்றீங்க..’ விட்ட இடத்திலிருந்து
சிவராமன் மறுபடியும் கேட்க…

‘சிவராமன்… இது பெரிய கதை.. இன்னும் கொஞ்ச நேரத்தில லஞ்ச் டைம்
வந்திடும்… அப்புறம் ஆபிஸர்ஸ் எல்லாம் லஞ்சுக்கு போயிடுவாங்க..
அப்புறம் அவுங்கள பிடிக்க முடியாது… சாயந்திரமா தெப்பக்குளத்துக்கு
வாங்களேன் சாவகாசமா இதப்பத்திப் பேசலாம்…’ அடுத்தவரை கவனிக்க தலையை
திருப்பினார் ராமகிருஷ்ணன்.
அவரின் நிலை புரிந்தும் புரியாமலும் குழப்பத்துடன்… ‘சரி சார்…
சாயந்திரம் பார்க்கலாம்’ அவரிடம் விடைபெற்றவர் வந்த வேலையை கவனிக்க
நண்பருடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார் சிவராமன். வந்த வேலை
முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்ப.. பேத்தி வருவதாக மங்களம் சொன்னது
ஞாபகத்துக்கு வரவே… செல்லும்வழியில் கடைத்தெருவுக்குச் சென்று ஸ்வீட்,
சாக்லெட், பப்பாளி, சப்போட்டா, மாம்பழம் என வகைவகையாய் வாங்கிக் கொண்டு
வீட்டிற்கு கிளம்பினார்.
திரும்பிய வழி நெடுகிலும் ராமகிருஷ்ணனின் செயல் ஆச்சிரியத்தையும் அவரின்
மேல் பரிதாபத்தையும் உண்டு பண்ணியது. ‘தென்னையைப் பெத்தா தண்ணீரு…
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’ என்ற பாடல் வரி இடையிடையே மனத்திற்குள்
அசரீரியாய் ஒலித்தவண்ணம் இருந்தது.

வந்த அசதியில் சாப்பிட்டு உறங்க… மணி ஐந்தாகியது… செல்போன்
சிணுங்கியது… மகள் தான் தஞ்சாவூரிலிருந்து போன் செய்தாள்..

‘என்னம்மா கீதா… பஸ் ஸ்டாண்ட் வந்திட்டியா… நான் வரவா…’

‘இல்லப்பா.. இன்னும் கெளம்பல… அவருக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை… இன்னும்
ஒரு மணி நேரத்தில கெளம்பிடுவேன்.. எட்டு மணி வாக்கில வீட்டு
வந்திடறேம்பா… அம்மாகிட்ட சொல்லிடுங்க…’

‘சரி… பத்திரமா வாம்மா’ போனை ஆப் செய்து… மனைவியை அழைத்து…

‘மங்களம்.. மங்களம்… கீதா போன் பண்ணி இருந்தா… வர எட்டு
மணியாகுமாம்.. நீ  நைட் டிபனுக்கு ஏற்பாடு பண்ணு… நான் தெப்பக்குளம்
வரைக்கும் போயிட்டு… அப்படியே வரும் போது பஸ்டாண்டில இருந்து கீதாவை
அழைச்சிட்டு வந்திடறேன்..’

‘சரிங்க… ‘

தெப்பக்குளம் நெருங்க நெருங்க எனக்கு ஆவல் பொங்கியது. சொன்ன மாதிரியே
ராமகிருஷ்ணன் படித்துறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

‘வணக்கம் சார்….’

‘வாங்க… இப்படி உக்காருங்க… உங்களுக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..’
‘காலையில உங்கல பாத்ததும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்… அதான்.. ‘
‘புரியுது… என்னாடா இது… நல்ல வேலையில இருந்தவருக்கு இப்படி ஒரு
நிலைமையான்னு தோணியிருக்கும் இல்லையா..’ ஆம் என்றும் இல்லை என்றும்
சொல்லத் தோணாமல் அவர் முகத்தையே கூர்ந்து நோக்கினேன்.
‘சார்… தஞ்சாவூர்ல இருந்து ஒரத்தநாடு மாற்றாகிப் போய் அங்கேயே
ரிட்டையர்டு ஆகிற வரைக்கும் இருந்தேன்.. இப்ப பசங்க ரெண்டு பேரும்
சென்னையில வேலை செய்றாங்க… அவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்
ஆயிடுச்சி… மருமகள்களும் அங்கேயே வேலை செய்யறாங்க.. பூர்வீக வீடு
கும்பகோணத்தில இருந்தால… இப்ப நானும் என் மனைவியும் தனியா
இருக்கோம்…’

‘ஏன் சார்.. நீங்க சென்னையில் உங்க பசங்க கூடவே இருக்கலாம் இல்லையா..
நீங்க போயி இந்த வேலையை செய்திட்டு இருக்கீங்க… ‘

‘ஆரம்பத்துல சென்னையில தான் கொஞ்ச காலம் இருந்தேன்… அங்க போனதுக்கு
அப்புறம்தான் இந்த மனமாற்றம் வந்திச்சி… ‘

‘எப்படி சார்… ஏதாவது பிள்ளைங்ககூட சண்டையா….’

‘சண்டை எல்லாம் இல்லப்பா… இப்பவெல்லாம் கிராமபுரத்தில இருந்து படிச்ச
பசங்க எல்லாம் சென்னையிலே வேலை கிடைச்சி… வேலைக்குப் போற பெண்ணையே
கல்யாணம் பண்ணிடறாங்க..  நாமதான் ரிடையர்டு ஆயிட்டோமே.. அவங்களுக்கும்
ஒத்தாசையா அங்க போயி பேரன் பேத்தியை கொஞ்சிட்டு இருக்கலாமின்னுதான் அங்க
போனோம்… அங்க போனப்பறம் தான் தெரிஞ்சது… அது எவ்வளவு தவறுன்னு..’

‘ஏன்.. அவுங்க உங்கள கவனிக்கலையா…’

‘அவுங்காளாலே அவுங்களயே கவனிக்க முடியாத அவசர உலகமா அது இருக்கு…
காலையில ஆபிஸ் போறதும்… நடுநிசி வரைக்கும் ஆபிஸ்ல இருந்திட்டு
வர்றதும்… ரெண்டு பேரும் பாத்து பேச கூட முடியாதபடி சென்னையில வேலைக்கு
ஓடிட்டு இருக்காங்க..’

‘இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை.. நீங்க பேரன் பேத்தியை கவனிச்கிட்டு
நிம்மதியா இருக்கலாம் இல்லையா..’

‘அங்க தான் பிரச்சினையே வந்தது… மருமகளுக்கு நாங்க குழைந்தைய அதிகமால்
கொஞ்சி செல்லம் கொடுத்திடறோமா.. எங்களுக்கு மாடர்னா வளர்க்கத்
தெரியாதாம்… அதனால கிரஷ்ன்னு குழந்தைங்க காப்பகத்துல விட்டுட்டு
போயிடறாங்க… அப்புறம் நாங்க அங்க இருந்து என்ன பிரயோஜனம்… அதான்
கெளம்பி வந்திட்டுடோம்…’
‘உங்க பசங்க ஒன்னும் சொல்லலையா…’

‘அவுங்க என்ன சொல்வாங்க… எல்லாம் பொண்டாட்டி பேச்சி கேட்டுட்டு அவ
சம்பாதிக்கிற பணத்துக்கு ஆளாப் பறக்கிறாங்க… என்ன செய்ய… அதான்
பூர்வீக வீட்டோட செட்டில் ஆயிட்டோம்…’

‘அது சரி சார்… பென்ஷன் பணம் வாங்கிட்டு வீட்டோட அக்கடான்னு இருக்கு
வேண்டியது தானே… எதுக்கு உங்களுக்கு இந்த வயசில இந்த வேலை.’

‘அப்படித்தான் கொஞ்ச நாள் இருந்தேன்… யோசிச்சுப் பார்த்தா… உடம்பில
தெம்பு இருக்கிற வரைக்கும் மத்தவங்களுக்கு ஏதாவது உதவி செய்யனும்மின்னு
தோணுச்சி… முப்பத்தாறு வருட அரசாங்க உத்தியோகத்தில எனக்கு தெரிஞ்ச
அரசாங்க விதிமுறைகளை மத்தவங்களுக்கு சொல்லனுமின்னு எண்ணம் வந்து…
வாரத்தில மூணு நாள் தாலுகா ஆபிஸ்ல கிராமப்புற ஜனங்களுக்கு என்னாலான
உதவியை செய்திட்டு இருக்கேன்… மத்த ரெண்டு நாள் வீட்டிலே உக்காந்து
இதையே செய்திட்டு இருக்கேன்..’

‘அதுக்கு பணமும் வாங்கறத கண்ணால பாத்தேன்.. அப்ப எப்படி இத உதவின்னு
சொல்ல முடியும்’ ஏதோ அவரை மடக்குவதா நினைத்தபடி சிவராமன் கேட்க..
‘ஆமாம்பா.. ஆரம்பத்தில சும்மா சமூகத் தொண்டுண்ணு நெனச்சித்தான்
செய்திட்டு இருந்தேன்… ஆனா அவுங்களாவே வற்புறுத்தி பணம் கொடுத்ததால..
வாங்க ஆரம்பிச்சேன்.. அந்தப் பணத்தை எதையும் நான் வச்சிக்கறதி இல்ல..
அனாதை ஆசிரமத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் அனுப்பி வச்சிடுவேன்..
அதுவுமில்லாம… பொழுதுக்கு பொழுதும் போன மாதிரி இருக்கு… ஊருக்கும்
சமூக சேவையும் செஞ்ச மாதிரி இருக்கு..’

‘சாரி சார்.. நான் உங்கள் தப்பா நெனச்சிட்டேன்…’

‘இன்பேக்ட்… எல்லாரும் ஆரம்பத்துல என்ன அப்படித்தான் நெனச்சாங்க…
இப்ப புரிஞ்சிக்கிட்டு எனக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தராங்க..  சரிப்பா..
இருட்டற நேரம் வந்திடுச்சி… அப்புறமா பிரீயா இருந்தா வீட்டு பக்கம் வா’
கையில் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டுச் சென்றவரை கண்கொட்டாமல்
பார்த்தேன். அவரைப் பார்க்க பெருமையாய் இருந்தது… பொழுது போகவில்லை
என்று வீட்டில் சோம்பித் திரியும் தன்னை நினைத்துப் வெட்கப்பட்டவராய்.

அவரிடம் பேசியதில் நேரம் ஆனதே தெரியாமல்… வீட்டிற்கு போன் செய்ய…
மகள் வந்த செய்தியை மனைவி சொல்லக்கேட்டு வீட்டிற்கு நடையை
துரிதப்படுத்தினார்.
‘ஐ.. தாத்தா வந்திட்டார்…’ வாசலில் அவரைப் பார்த்த பேத்தி துள்ளிக்
குதித்து ஒடி வர… அவளை அப்படியே தூக்கி முத்தம் கொடுக்க… கையெல்லாம்
பிசுபிசு என்று இருந்தது…

‘என்னம்மா கையில..’

‘பழம் சாப்பிட்டிருந்தேன் தாத்தா‘ கையால் மீண்டும் முகத்தில் பூசினாள்..

‘போய் கைகழுவிட்டு வாம்மா… சட்டையெல்லாம் கரை ஆகுதில்ல…’
‘ஹூகும்… மாத்தேன்.. கையில பழத்தோட விதை இருக்கு..

‘எதுக்கு.. தூர போட்டுடு… இல்லனா அதையும் சேர்த்து முழுங்கிடப் போற..’
‘மாத்தேன் தாத்தா.. இத எங்க வீட்டு தோட்டத்தில போட்டு வளர்க்கப் போறேன்..
அது வளர்ந்து பெரிசாச்சுன்னா நெறையா சப்போட்டா, மாம்பழம் காய்க்கும்
இல்லையா தாத்தா… அப்புறம் தினமும் பறிச்சி சாப்பிடுவேன்..
அதுக்குத்தான் வச்சிருக்கேன்..’

பேத்தி சொல்வதிலும் உண்மையிருக்கிறது… ராமகிருஷ்ணன் போன்றவர்கள்
விதைக்கும் புண்ணிய விதைகள் என்ற நற்செயல் வருங்கால சந்ததியினர் கொய்து
சுவைக்கும் நல்மரங்களாக வளரும் என்பதில் ஐயமில்லை, பேத்தியை தூக்கியபடி
சிவராமன் உள்ளே செல்ல அவர் நினைத்ததை அமோதிக்கும் விதமாக கும்பேஸ்வரர்
கோயிலிலிருந்து இரவு நேர பூஜையின் மணி ஒலிக்க ஆரம்பித்தது.

(முற்றும்)

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1காலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
author

ரிஷ்வன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *