நீங்காத நினைவுகள் – 21

This entry is part 7 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா

           தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை என்று தோன்றுகிறது. அட, வாய்விட்டுச் சிரிக்க வைக்காவிட்டாலும்,  சில ஓர் இளநகையையேனும் தோற்றுவிக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. கீழ் வரும் ஜோக்குகளையோ, நகைச்சுவையான விஷயங்களையோ அன்பர்களில் சிலர் ஏற்கெனவே படித்திருந்திருக்கலாம். இருப்பினும், சிரிக்க வைப்பவையாதலால் மறுபடியும் படிப்பது வீணன்று.

அவை  –

1.    பாட்டி:          பெரியவங்கன்ற மரியாதையே இல்லே இந்தக் காலத்துப் பசங்களுக்கு!

பேரன்:          அப்பா! பாட்டி உங்களை என்னவோ சொல்றாங்க.

 

2    “மாப்பிள்ளை கையில ஒரு குழந்தையைக் குடுக்கறாங்ளே, அந்தப் பொண்ணு யாரு?”

“அவரு கைவிட்ட காதலியாம்.  கல்யாணப் பரிசு தர்றாங்க.”

 

3    “எம் மகனுக்குத் தமிழ் உச்சரிப்பே சரியா வரல்லீங்க.”

“இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க.  டி.வியில சான்ஸ் கிடைக்கும்.”

 

4    “எங்க மாதர் சங்கத்துல மிசஸ் மாலினிக்கு நகையரசின்னு பட்டம் குடுத்திருக்கோம்.”

“நிறைய ஜோக்ஸ் சொல்லுவாங்களா?”

“மண்ணாங்கட்டி!  எங்க எல்லாரையும் விட அவங்கதான் நிறைய நகை வெச்சிருக்காங்க.”

 

5.      “காடுகளையெல்லாம் இப்படி அநியாயமா அழிக்கிறதை இந்த அரசியல்வாதிங்க பாத்துக்கிட்டு சும்மா இருக்காங்களே!”

“எல்லாம்  காரணமாத்தான். நாளைக்கு ஜனங்களுக்குத் தங்களைப் பிடிக்கல்லையின்னா காட்டுக்குத் துரத்த முடியாதில்லே?”

 

6    “வேலை தேடிகிட்டு இருந்தானே, உங்க மகன்? கிடைச்சுதா?”

”கிடைக்க மாட்டேங்குது.. அதனால இப்ப வேலை பாக்குற பெண்டாட்டியைத் தேடிக்கிட்டு இருக்கான்.”

 

7       “மனைவி –     “உங்க சின்ன வீட்டு விவகாரத்தை நிறுத்துங்க!”

கணவன்   –     ’நாம் இருவர், நமக்கு இருவர்’னு கவர்ன்மெண்ட்டே சொல்லுதே!

மனைவி   –       அடாடா! எனக்கு இது தோணாம போச்சே!

 

8       பல்லாண்டுகளுக்கு முன்னர், திரைப்பட இயக்குநர், நடிகர் விசு அவர்களை எழுத்தாளர் உஷா சுப்ரமண்யம் பேடி கண்டபோது, அவர் தடாலடியான – பெண்களூக்கு எதிரான – சற்றும் நியாயமற்ற சில கருத்துகளை வெளியிட்டார். (இப்போது நிறைய மாறி யுள்ளார் என்று தோன்றுகிறது. பல ஊர்களுக்குப் போய் சன் தொலைக்காட்சி, ஜெயா  தொலைக்காட்சி ஆகியவற்றின் சார்பில் ஆண்களையும் பெண்களையும் சந்தித்து உரையாடியதன் பின் விளைந்த மாற்றமாக இருக்கலாமோ என்னமோ!)

அந்தப் பழைய பேட்டியின் போது, பிரபல விஞ்ஞானி நாயுடம்மா இறந்த சோகத்தைத் தாங்க முடியாததால் அவர் மனைவி தற்கொலை செய்துகொண்டதைப் பெரிதும் பாராட்டி விசு கருத்துச் சொன்னதைப் பலரும் பாராட்டவில்லை. மனைவிக்குக் கணவன் மீது எவ்வளவு அன்பு இருந்திருந்தால் அவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டிருந்திருப்பார் என்கிற ரீதியில் அந்தப் பெண்மணியை அவர் புக்ழந்தார். முற்போக்கான கருத்துகள் கொண்ட உஷா சுப்ரமண்யத்துக்கும் அது பிடிக்கவில்லை.

இந்தப் பேட்டி முடிந்த பின் சுமங்கலி இதழில் ஒரு ஜோக்கு வெளியாயிற்று. அது கீழே வருகிறது:

அவர்:     “நம்ம ராமசாமியுடைய மனைவி தீக்குளிச்சு இறந்துட்டாங்களாம்!”

இவர்:  “அய்யய்யோ! எதுக்காக?”

அவர்:     “விசுவுடைய மதிப்பைப் பெறணும்கிறதுக்காகத்தான் அப்படிச் செய்யிறதா லெட்டர் எழுதி வெச்சிருக்காக்களாம். ‘கணவன் இறந்ததைத் தாங்க முடியாம  தற்கொலை பண்ணிண்ட திருமதி நாயுடம்மாவை நான் மதிக்கிறேன்னு விசு சொன்னாரில்லையா? தனக்கு முன்னாடி தன் கணவர் இற்கத் சோகத்தைத் முடியாதுங்கிறதால, அவர் இருக்கும் போதே தீக்குளிச்சுட்டா,  நம்ம விசு அப்ப அவங்களை இன்னும் அதிகமா மதிப்பரில்லையா! அதுக்குத்தான்!”

இந்த ஜோக்கை சுமங்கலியில் வெளியிட்ட அன்றைய ஆசிரியர் திரு சாரதி அவர்கள் அதை எழுதிய ஜோக் எழுத்தாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்வருமாறு பேசினார்: ‘நீங்க எழுதின ஜோக் அடுத்த சுமங்கலி இதழ்ல வருது. உஷா சுப்ரமண்யத்தை ஃபோன்ல கூப்பிட்டு அதைப் படிச்சுக் காட்டினேன்.  அவங்க தாங்க முடியாம சிரிச்சாங்க!” என்றார்.

 

9       பெண்கள் வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதையும் விசு எதிர்த்துப் பேட்டியில் கருத்துக் கூறி, கீழ்வரும் ஜோக் வெளிவரக் காரணர் ஆனார்:

“இனிமே என்னால ஆஃபீசுக்குப் போய்ச் சம்பாதிக்க முடியாது,அதனால துண்டு விழுற தொகையை நீங்களே சமாளிச்சுக்குங்கன்னு சொல்லிட்டாடா என் மனைவி.”

“அடப் பாவமே!  ஏன் அப்படி?”

“விசுவோட ஐடியாஸும் என்னோட ஐடியாஸும் ஒரே மாதிரி இருக்குன்னு தெரியாத்தனமாச் சொல்லித் தொலைச்சுட்டேன்.  அதனோட விளைவு.”

 

10        “இந்த எழுத்தாளர் அடிக்கடி ‘துணுக்குற்றார், துணுக்குற்றார்’னு எழுதறாரு. மாத்திக்கச் சொல்லுங்க.”

“கஷ்டம்.  ஏன்னா, கதை எழுத வர்றதுக்கு முந்தி அவர் துணுக்கு எழுத்தாளரா இருந்தாரு.”

 

11           “நம்ம ராமு எழுதியே நிறைய சம்பாதிக்கிறாண்டா.”

“அட! பரவாயில்லியே? எந்தப் பத்திரிகையில எழுதறான்?”

“நீ வேற! அவனோட அப்பாவுக்கு வாரா வாரம் லெட்டர் எழுதுவான். உடனே பணம் அனுப்புவாரு. அதைச் சொல்றேன்.”

 

12 “இதுக்கு முந்தி உன்கிட்ட வேற ஒரு பொண்ணு ஸ்டெனோவா இருந்தாங்களே? அவங்க என்ன ஆனாங்க?”

“அவளை நான் கல்யாணம் கட்டிட்டேன். இப்ப அவ எனக்கு டிக்டேட் பண்ணிக்கிட்டு இருக்கா.”

 

13 “என்னடா, உனக்கு சுழல் நாற்காலி வாங்கிக் குடுத்திருக்காங்க?”

“அடிக்கடி நான் வெளியே சுத்தப் போயிடறேனாம். வீட்டில இருந்தபடியே சுத்திக்கன்னு சொல்லி இதை வாங்கிக் குடுத்துட்டாங்க.”

 

14 “வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு மருமக எனக்கு வந்துட்டான்னு அவ எதிர்லயே சொன்னது தப்பாப் போச்சு”

”ஏன்?”

“விளக்கு ஏத்துறதைத் தவிர வேற எந்த வேலையும் செய்ய மாட்டேன்கறா.”

 

15     “நேத்திக்கு பாரதியார் விழாவில நீங்க பேசினப்ப கொஞ்சம் சலசலப்பு ஆயிடிச்சு.”

“ஏன்?”

“பேச்சுக்கு நடுவில ‘செந்தமிழ் நாடெனும் போதையிலே’ன்னு

பாடிட்டீங்க.”

 

16      “உங்க சம்சாரம்  ஏன் கவுன் அணிய ஆரம்பிச்சுட்டாங்க?”

“பன்னண்டு முழப் புடவையைத் துவைக்க நிறையத் தண்ணி

வேணுமில்ல? அதான்.”

 

17     “பாவம்டா அந்த ஜலதரங்க வித்துவான். தண்ணிக் கஷ்டத்துனால ஆறு மாசமா அவருக்கு சான்ஸே இல்லே.”

 

18    “குழந்தைங்க இருக்கிற பெற்றோர் விவாகரத்துப் பண்ணிக்கிறாங்களே, அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“அது விவாக ரத்து இல்லேடா, விவேக ரத்து!”

 

19    “அந்த மைதானத்துல என்ன எக்கச் சக்கமான பாட்டிங்க கும்பல்?”

“பட்டிமன்றத்துக்கு அனைவரும் வருகன்றதுக்குப் பதிலா, ‘பாட்டி மன்றத்துக்கு அனைவரும் வருக’ன்னு அச்சாயிடிச்சாம். அதான்!”

 

20      “பரீட்சையில நல்லாப் பாத்து எழுதுடா.”

“பாத்தெல்லாம் எழுதக் கூடாது, பாட்டி. ஜெயில்ல போட்டுடுவாங்க.”

 

21    “வேலை வெட்டி இல்லேன்றே? வரதட்சிணையோட ஸ்கூட்டர் வேற கேக்குறியே?”

“வேலை தேடி அலையறதுக்குத்தான்.”

 

22      “உங்க புது  ஸ்டெனோ எப்படி?”

“கே.பி. சுந்தராம்பாள் மாதிரி.”

“ஏன்? வயசானவங்களா?”

“அதில்லே. டிக்டேஷனுக்கு இடையில அடிக்கடி, ‘என்ன, என்ன, என்ன’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க.”

 

23       “அதோ போறாரே, அவருதான் மனைவியை வசியப்படுத்துவது எப்படின்ற புத்தகத்தை எழுதினவரு.”

“அப்படியா?”

“ஆமா. இப்ப மனைவி டிவோர்ஸ் பண்ணிட்டதால, விவாகரத்து ஏன் ஏற்படுகிறதுன்னு ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்காரு.”

 

24    “எழுத்தாளர் எசக்கிமுத்து படுத்த படுக்கையா யிருக்காராம்.  ஆனா சாகிறத்துக்கு ரொம்ப பயப்படறராம்.”

“ஏன்?”

”மேல் உலகத்துல, அவர் காப்பி அடிச்ச நிறைய எழுத்தாளர்களுடைய ஆவிகள்ளாம் அவரைப் பிடிபிடின்னு பிடிச்சுக்குமே! அதான்!”

 

25    “நம்ம டைரக்டருக்கும் அவர் மனைவிக்கும் இன்னைக்குக் காலையிலே என்ன சண்டை?”

“அந்தம்மா கால் தடுக்கிக் கீழே விழுந்திருக்காங்க. அவரு ஏதோ ஞாபகத்துல ‘ஆக்‌ஷன் ரீடேக்’ ன்னுருக்காரு.”

 

26  “நம்ம தலைவருக்கு இதய நோய்னு சொல்லிட்டாராமே டாக்டர்? அதெப்படி இருக்க முடியும்?”

`     “ஏங்க?”

”அவருக்குத்தான் இதயமே கிடையாதே!”

 

27    “என்னடி இது? எல்லா நகைகளையும் வெள்ளியில் செய்து போட்டிருக்குறே?”

“உஷ்! எல்லாம் தங்கம்தாண்டி. திருடனுக்குப் பயந்து வெள்ளி முலாம் பூசி மாட்டிக்கிட்டிருக்கேன்.”

 

 

28      “என் புத்தகத்தைப் பத்தின விளம்பரத்துல ஏற்பட்ட அச்சுப்பிழையால அதனோட விற்பனையே பாதிக்கப்பட்டிருக்கு.. அறுசுவை நூல்ங்கிறதுக்குப் பதிலா, ‘அறுவை நூல்”னு அச்சாயிடிச்சு.”

 

29  “போலிச் சாமியார்களால இப்ப புதுசா ஒரு பட்டிமன்றத் தலைப்புக் கிடைச்சிருக்கு.”

“என்னன்னு?”

“இளம் பெண்களை அதிகக் கொடுமைக்கு உள்ளாக்குவது மாமியாரா, இல்லே சாமியாரா அப்படின்னு!”

 

30              அரசியல்வாதி: “நாங்க பதவிக்கு வந்தா, டாக்டர் பட்டமென்ன, செவாலெயே பட்டம், நோபல் ப்ரைஸ் இதெல்லாமும் தருவோம்.”

 

31                     “நம்ம பாகவதர் வில்லாதிவில்லன் சினிமா பாத்துட்டு நேரே கச்சேரி பண்ண வந்திருக்கார்.”

“எப்படிக்கண்டுபிடிச்சே?”

“நகுமோமுன்னு பாடுறதுக்குப் பதிலா, ‘நகுமாமு’ன்னு பாடுறாரே, அதை வெச்சுத்தான்!.”

 

32         காவல் துறை அலுவலர்: “செயற்கையா மூணாவது கை வெச்சுக்க முடியுமா, டாக்டர்?”

“எதுக்கு?”

“வாங்கிவாங்கி ரெண்டு கையும் வலிக்குது.”

 

33           “அப்பா! இங்கே இருந்த ஏணி எங்கே?”

“எதுக்குடா?”

“பரண் மேல விழுந்துட்ட என் பந்தை எடுக்கணும், அதுக்குத்தான்.”

“அட, கடவுளே. யாராச்சும் இரவல் கேக்கப்போறாங்களேன்னு அதைப் பரண்லே போட்டு வெச்சிருக்கேன்.”

 

34         “பாட்டிக்கு ஞாபக மறதி அதிகமாயிடிச்சுன்னு நீங்க சொல்றது சரிதாம்ப்பா.”

“என்னடா செஞ்சாங்க பாட்டி?”

“கீழே இறைஞ்சு கிடந்த என் புத்தகங்களையெல்லாம் எடுத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டு, சாம்பார்ப் பாத்திரத்தை என் புத்தக அலமாரியிலெ வெச்சிருக்குறாங்க.”

 

35         “என்னடா இது! குழாயடியிலெ ஏழெட்டுச் சவுரிங்க கெடக்குது!”

”நேத்து இங்கே குழாயடிச் சண்டை நடந்திச்சுடா.”

 

36          “மொட்டை மாடியில வடாம், வத்தல், அப்பளம் இதையெல்லாம் காயப் போடுறதைத் தடை பண்ணணும்.”

“ஏண்டி?”

“அவங்கல்லாம் மழை பெய்யக்கூடாதுன்னு வேண்டிக்கிறதாலதான் சரியா மழை பெய்ய மாட்டேங்குது.”

 

37          “எங்க மாமியார் ரொம்ப ஆசாரம். அதனால ‘மடி’ப்பாக்கத்துலதான் வீடு கட்டணும்கறார்.”

 

38         “நம்ம ரிப்போர்ட்டர் வெங்கட் தூள் கிள்ப்பிட்டாண்டா.”

“என்னடா செஞ்சான்?”

“நடிகை பாலாமணி தனக்கு 22 வயசுன்னு சொல்லியிருந்தாங்க. அவங்க மகன் தனக்கு 18 வயசுன்னு சொல்லியிருக்கான். உடனே நம்ம வெங்கட், ‘நாலாம் வயசில் குழந்தை பெற்ற பாலாமணி’ன்னு தலைப்புப் போட்டு எழுதிட்டான்!”

 

39         “ஏழு மணிக்குச் சாப்பிட உக்காந்த அந்த ஆளு இன்னும் எழுந்திருக்கல்லே. மணி எட்டாகப் போகுது இன்னும் அரை மணி கழிச்சுத்தான் எழுந்திருப்பானாம்.”

“ஏனாம்?”

“கேட்டா, அழைப்பித்ழ்ல நீங்க்தானே டின்னர் ஏழிலிருந்து எட்டரை மனி வரைன்னு போட்டிருக்கீங்கன்னு கேக்கறான்.”

 

40         அவன்:  உனக்குப் பாடவருமா?

அவள்;   வராது.

அவன்:   அப்ப, பாடாவதின்னு சொல்லு.

 

41            “நம்ம ரங்கன் ஏன் கோவமா இருக்கான்?”

“பொண்ணுக்கு மூக்கு ரொம்பச் சப்பைங்கிறதுனால வரதட்சிணையில் இருபதாயிரம் ஏத்தி வாங்கினானாம். இபப அவன் மாமனார் அந்தப் பொண்ணுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மூக்கைச் சரிபண்ணிட்டு, அந்த இருபதாயிரத்தையும் திருப்பிக் கேக்கறாராம். அதான்.”

 

42         “ஆபாச எதிர்ப்புச் சிறப்பிதழுக்கான தலையங்கம் ரெடியாயிடிச்சா?”

“ஆயிடிச்சு சார்.”

“அதை நிரூபிக்கணுமில்லே? அதனால அந்தக் கட்டுரையோட வெளியிடுறதுக்கு மத்த பத்திரிகைகள்ள வந்த ஆபாச்ப்படங்கள், சினிமா ஸ்டில்ஸ் இதையெல்லாம் கலெக்ட் பண்ணுங்க.”

“சரிங்க.”

43         “நம்ம ராமசாமி தன்னோட அம்மாவயும் அப்பவையும் முதியோர் இல்லத்துல விட்டு வெச்சிருக்கான்!”

“அட, ராஸ்கல்!”

“கேட்டா, நான் குழந்தையா இருந்தப்ப என்னை அவங்க

குழந்தைங் காப்பகத்துலதானே விட்டு வெச்சிருந்தாங்க அப்படின்னு

கேக்கறான்.”

44                    “வரதட்சிணை 50,000 குடுத்துடுங்க. முப்பது சவரன் நகை போட்டுடுங்க. வெள்ளிக் குடம், வெள்ளி கூஜா, தம்ப்ளர்கள், ரெண்டு கோத்ரெஜ் அலமாரிங்க, கட்டில், மெத்தை, குடித்தனம் நடத்துறதுக்கான பாத்திரம் பண்டங்கள்…. மைனர் சங்கிலி நாலு பவுனாச்சும் இருக்கணும்…ரிஸ்ட் வாட்ச் – அதுக்குத் தங்கத்துல ஸ்ட்ராப்… ஒண்ணு சொல்ல விட்டுப் போயிடிச்சு…. மாப்பிள்ளையும் பொண்ணும் அப்பப்ப வெளியில போக வர ஒரு புல்லட்டும் வாங்கிக்குடுத்துடுங்க…”

“புல்லட் கைவசம் ரெடியா இருக்குங்க. நெத்தியில

சுடட்டுமா, நெஞ்சில சுடட்டுமா? உங்க வசதி எப்படி?”

45                      கணவன்:  அடிக்கிற கைதாண்டி அணைக்கும்!

மனைவி:  அப்ப, நானும் உங்களை அடிக்கலாம்னு சொல்லுங்க!

*********

 

பின்னர் எப்போதாகிலும் மேலும் சில ஜோக்குகளை நினைவு கூர எண்ணம்.

 

Series Navigationஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டுகாரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    29 “போலிச் சாமியார்களால இப்ப புதுசா ஒரு பட்டிமன்றத் தலைப்புக் கிடைச்சிருக்கு.”

    “என்னன்னு?”

    “இளம் பெண்களை அதிகக் கொடுமைக்கு உள்ளாக்குவது மாமியாரா, இல்லே சாமியாரா அப்படின்னு!”

    நகைச்சுவைத் தொகுப்பு முதல் தரம் கிரிஜா.

    பாராட்டுகள்.
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *