ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 15 of 24 in the series 24 நவம்பர் 2013

 

ஷைன்சன்

 

இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை இத்திரைப்படங்களின் மூலம் காண்கிறோம்.

 

இரண்டு திரைப்படங்களிலும் வரும் குடும்பங்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவையே. எனவே சமூகப்படிநிலையின் தாக்கத்தைப் பற்றி நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. கலாச்சாரத் தாக்கமே இரண்டு திரைப்படங்களையும் வேறுபடுத்துகிறது.

 

ஜூனோ திரைப்படத்தில் உடலுறவில் ஈடுபடும் பிளீக்கருக்கும், ஜூனோவுக்குமான உறவு நட்பு என்ற அளவில் தான் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை உடல் உறவு என்பது அவர்கள் வயதுக்கேற்ற ஒரு கண்டுணர்தலே. பிளீக்கரைப் பொறுத்த வரையில் ஜூனோவிடம் நட்பையும் கடந்த ஒரு ஈடுபாடு இருந்தும் அவன் அதைப் பற்றி அழுத்தமாகப் பேசுவதில்லை. ஜூனோ அவர்களிருவருக்குமான உறவை நட்பு என்றே புரிந்து கொள்கிறாள்.

 

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் கார்த்திக்கும், ஸ்வேதாவும் பின்னர் காதலர்களாகின்றனர். ஆரம்பத்திலிருந்தே கார்த்திக் நட்பு என்ற நினைப்புடன் பழகவில்லை. காதல் என்னும் நோக்கத்தை நிறைவேற்றவே அவளுக்கு நண்பனாகின்றான். ஓரளவு சிரமத்துக்குப் பின் அவள் மனத்தைக் கவர்கிறான். காலங்காலமாக எல்லாக் காதலர்களும் ஊர்சுற்றுவதைப் போல் அவர்களும் ஊர் சுற்றுகிறார்கள். வயதுக்கேற்ற இயல்பாக உடலுறவும் கொள்கிறார்கள்.

 

இதுவரைக்கும் நடைபெற்ற நிகழ்வுகள் ஏறத்தாழ ஒன்று தான். இரு நபர்கள் சமூக நிர்ப்பந்தங்கள் இல்லாமல் தங்கள் சுய விருப்பத்தின் படி உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் வாழும் சமூகம் மற்றும் அவர்களின் குடும்பம் ஆற்றும் எதிர்வினைகளே வேறுபடுகின்றன.

 

பதிவயதினளான ஜூனோ கருவைக் கலைப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். அம்மருத்துவமனைக்கு வெளியில் கருக்கலைப்பு தவறு என்று சொல்லி, உயிர்சார்பு பிரசாரம் செய்யும் தனது தோழியை சந்திக்கிறாள். எள்ளலுடன் அவளைக் கடந்து போகும் ஜூனோ, சில சூழ்நிலைகளால் மனம் மாறி கருக்கலைப்பு செய்யும் முடிவைக் கைவிடுகிறாள். அது அவள் சொந்தமாக எடுத்த முடிவு.

 

ஸ்வேதாவும் கருவைக் கலைக்க மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால் திருமணமாகாதவள் என்பதால் மருத்துவர் கருக்கலைப்பு செய்ய மறுத்து விடுகிறார். (இந்த இடத்தில் இந்தியாவின் கருக்கலைப்பு சட்டத்தைப் பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்வது அவசியம். அந்தப் பெண் இந்திய சட்டப்படி முடிவெடுக்கக் கூடிய வயதை அடைந்தவள். சட்டப்படி அவளுக்குக் கருக்கலைப்பு உரிமை உண்டா? இந்தியக் கருக்கலைப்பு சட்டம், 1971 இதைப்பற்றி மெளனிக்கிறது. 18 வயதைக் கடக்காத பெண்ணுக்கும், மனநலம் குன்றிய பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய பெற்றோர் அல்லது பொறுப்பானவரின் அனுமதி வேண்டும். மணமடைந்த பெண் தேவையில்லாத கருவை தனது சம்மதத்தின் பெயரிலேயே கலைத்துக் கொள்ளலாம் என சட்ட விளக்கம் சொல்கிறது. ஆனால் மணமடையாத 18 வயதைக் கடந்த பெண்? இணையத்தில் இருக்கும் தகவல்களின் படி 18 வயதுக்கு மேலான பெண் தனது சொந்த விருப்பத்தின்படி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதனைப் பற்றி சட்ட அறிவுடைய வாசகர் எனக்கு விளக்கினால் மகிழ்வேன்.) வேறு சில வழிவகைகள் மூலமாகக் கருக்கலைப்புக்கு முயல்கிறாள். அதற்குள் வீட்டில் அவள் கருவுற்றிருப்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

 

ஜூனோ திரைப்படத்தில் தான் கருவுற்றிருப்பதை ஜூனோவே பெற்றோரிடம் வெளிப்படுத்துகிறாள். முதலில் இதை எதிர்பாராமல் அதிர்ச்சியடையும் பெற்றோர், அவளை ஏற்றுக் கொள்கின்றனர். ஏதோ உலகில் செய்யக்கூடாத ஒரு தீங்கினைச் செய்தவளாக அவளைப் பார்ப்பதில்லை. தொடர்ந்து அவள் குழந்தையை தத்துக் கொடுப்பதற்காக குழந்தையில்லாத ஒரு தம்பதியிடம் பேசச் செல்லும்போது அவள் தந்தையும் உடன் செல்கிறார். மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது தாயும் உடன் செல்கிறாள். அவளைச் சுற்றியிருப்பவர்கள் அவளை விசித்திரமாகப் பார்க்கிறார்களேயொழிய அவளை ஒரு பாவியைப் போலக் காண்பதில்லை.

 

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் ஸ்வேதா கருவுற்றிருப்பதை அவள் வாந்தியெடுப்பதன் மூலமாகக் கண்டுபிடிக்கும் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். ஏனென்றால் திருமணத்திற்கு முன் கருவுறுவது தமிழ் சமூகத்தில் பெரும் சமூகக் குற்றமாகும். அவர்களது குடும்பம் சமூக ரீதியாகப் பெரும் அவமானத்தைச் சந்திக்கும். எனவே அவளுடைய கர்ப்பத்துக்குக் காரணியானவனைக் கண்டறிந்து அவனுடைய பெற்றோரிடம் பேசி விரைவில் திருமணம் முடிக்க முயலுகின்றனர். தொடர்ந்து தமிழ் சமூகத்தில் திருமண உறவுகள் உருவாகவும், உருவாகாமல் சிதைந்து போகவும் காரணியாக இருக்கும் சாதி கதைக்குள் வருகிறது. தமிழ் சமூகத்தில் திருமண உறவுகளை அங்கீகரிக்க வேண்டிய பெற்றோரும் பெரியோரும் கதைக்குள் நுழைகிறார்கள். அதன்பின் அனைத்தும் தாறுமாறுதான். ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் நிலைமை சிக்கலாகி விட்டது. காதலர்களுக்குள் பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் கருவைக் கலைக்கக் கூடிய காலகட்டமும் கடந்து போகிறது. காதலர்களின் குடும்பங்களிடையேயும் பகை எழுகிறது. திருமணம் சாத்தியமற்றுப் போகிறது. பிறக்கும் முன்பே பெற்றோர்களால் மறுக்கப்பட்ட ஒரு குழந்தை உலகில் நுழைகிறது. அந்தக் குழந்தை அநாதைகள் காப்பகத்தில் விடப்படுகிறது. தனது தாய் ஒழுக்கங்கெட்டவள் என்னும் பட்டத்தைச் சில காலம் சுமந்து திரிந்ததைப் போல அநாதை என்னும் பட்டத்தைச் சுமந்து சில காலம் அக்குழந்தை இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கும். இத்திரைப்படத்தைத் துன்பியல் திரைப்படமாகக் கருத முடியவில்லை. கார்த்திக்கும், ஸ்வேதாவும் பிற நபர்களைச் சந்திக்கிறார்கள். பாதிக்கப்பட்டதென்னவோ அக்குழந்தை மட்டுமே.

 

ஜூனோ திரைப்படத்திலும் அச்சமூகத்திற்கே உரித்தான சிக்கல்களும் எழாமல் இல்லை. தத்தெடுக்க முடிவு செய்திருக்கும் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. கணவன் தான் இன்னும் தந்தையாகத் தயாராகவில்லை என்கிறான். ஒரு இசைக்கலைஞனாவது என்ற கனவுடன் இருக்கும் அவனுக்கு குழந்தையைத் தத்தெடுப்பது இடைஞ்சலாகத் தோன்றுகிறது. இருவரும் பிரிகிறார்கள். இதனால் ஆரம்பத்தில் ஜூனோவுக்குக் கோபம் ஏற்பட்டாலும் அவள் தாயாவதற்குத் தயாராகிவிட்ட அவன் மனைவி வனீசாவிடம் குழந்தையை ஒப்படைக்கிறாள். இடையில் சிக்கல்களுக்குள்ளான பிளீக்கருக்கும், ஜூனோவுக்குமான உறவு சீர்படுகிறது. அவர்களிருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இன்பியலாகவே படத்தின் முடிவு இருக்கிறது.

 

ஜூனோ திரைப்படத்தைப் போலவே அமெரிக்காவில் அனைத்துச் சூழ்நிலையிலும் நடக்கும் என்றோ, ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தைப் போன்றே அனைத்துத் தமிழ்க்குடும்பங்களின் எதிர்வினையும் இருக்கும் என்றோ நாம் சொல்ல முடியாது. (அமெரிக்காவின் பழமைவாதக் குடும்பங்களைப் பற்றிய திரைப்படம் சோபியா கபோலாவின் The virgin suicides)  ஆனாலும் இவ்விரண்டு திரைப்படங்களும் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தைக் குறைந்தபட்சம் எழுபது சதவீதமாவது பிரதிபலிக்கின்றன. இதனைப் பொறுத்தே இரண்டு கலாச்சார வேறுபாடுகளைப் பற்றியும் விவாதங்கள் எழ முடியும்.

 

ஜூனோவுக்கு அவள் உடல் மீது சகல உரிமையும் இருக்கிறது. அவள் உடலும், உடல்சார்ந்த ஆசைகளும் சமூகத்தின் விவாதப் பொருளாக்கப்படுவதில்லை. ஆனால் ஸ்வேதாவுக்கு அவளுடல் மீது உரிமையில்லை. அவளது கரு அவளுடைய ஒழுக்க மீறலாக, சமூகக் குற்றமாகக் கருதப்படுகிறது. தங்கள் உடல் மீதே உரிமையற்றுப் பெண்கள் வாழும் சமூகத்தில் அவர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புவது எப்படி?

 

மிகச் சுருக்கமாகச் சொல்லப்போனால் இரண்டு கலாச்சாரங்களுக்குமிடையிலான நுண்ணிய வேற்றுமையை இத்திரைப்படங்கள் காட்டியுள்ளன. மேற்கத்திய கலாச்சாரம் தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுப்பது. ஆனால் பாரம்பரிய இந்திய கலாச்சாரம் சமூகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது. இவ்வேறுபாடே இத்திரைப்படங்களின் நிகழ்வுகளுக்குப் பின்புலமாக இருக்கின்றன.

 

Series Navigationமரணம்நீங்காத நினைவுகள் – 24
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *